இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள்

 

கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு
திருச்சபைக்குள்ள உறவு

பற்றிய விதித்தொகுப்பு

 

உட்புகுமுன்

இன்றைய உலகில் சமய சந்திப்புகள், சமய உரையாடல்கள் சமய நல்லிணக்கம் தேவை என்பதை எல்லாரும் ஏற்கின்றனர். இது சமூக ஒருமைப்பாட்டிற்கு மட்டுமல்ல, உலக அமைதிக்கும்கூட அடிப்படை நிபந்தனை என்பதிலும்யாருக்கும் ஐயமில்லை. இத்தகைய பல்சமய விழிப்புணர்விற்குத் திருச்சபையில் வித்திட்ட 2 ஆம் வத்திக்கான் சங்கம். பொதுச்சங்கம் விடுத்த புரட்சிகரமான அறிக்கைகளுள் சிறந்த ஒன்று கிறிஸ்தவமல்லாச் சமயங்களுடன் திருச்சபை கொண்டுள்ள உறவு பற்றிய இந்த அறிக்கை.

2ஆம் வத்திக்கான் சங்கம் மக்களுக்கு அளித்த ஆவியின் தூண்டுதல்களுள் மையாமனது திருச்சபை தன்னைப் பற்றியும், தன் பணி பற்றியும் பெற்ற புத்துணர்வு. இதன் விளைவாகத் திருச்சபை பிற கிறிஸ்தவச் சபைகளோடு மட்டுமல்ல, பிற சமயத்துவரோடும், ஏன் கடவுள் நம்பிக்கையில்லாதவரோடும்கூட, திறந்த மனத்தோடு உரையாடத் தொடங்கியது.

இத்தகைய சமய உறவு அணுகுமுறை திரு;சசபையின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை எனலாம். உறவு உரையாடலுக்கும், உரையாடல் புரிதலுக்கும், பகிர்வுக்கும் இட்டுச் சென்று மீட்புப் பணியின் நிறைவை நோக்கிப் பயணம் செய்யும்ஒரு மக்கள் இயக்கமாகச் செயல்பட திருச்சபை முனைந்துள்ளது.

இம்மாபெரும் மாற்றத்திற்கு உந்துசக்தியாக அருளப்பட்ட அறிக்கையை ஆழ்ந்து அறிய உதவியாக அதன் வரலாறு, அறிக்கை நமக்கு விடுக்கும் அழைப்பு, சவால்கள் பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.

அறிக்கையின் வரலாறு

தாம் கூட்டிய பொதுச் சங்கத்திலிருந்து யூத மக்களைப் பற்றிய ஓர் அறிக்கை வெளிவர வேண்டுமென்று விரும்பினார் திருத்தந்தை 23 ஆம் யோவான். அதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு கர்தினால் பெயா அவர்களைக் கேட்டுக் கொண்டார். கிறிஸ்தவ ஒன்றிப்புப் பற்றிய விதித் தொகுப்பில் நான்காம் இயலாக இந்த அறிக்கையும், ஐந்தாம் இயலாகச் சமயச் சுதந்திரம் பற்றிய அறிக்கையும் முதலில் இடம்பெற்றிருந்தன. இவ்விரு அறிக்கைகளுக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கும்நேரழத் தொடர்பில்லை. யூத மக்களுக்குக் கிறிஸ்தவர்கள் தலைமுறை தலைமுறையாக இழைத்து வந்துள்ள தீமைகளைப் பற்றியும், அவற்றிற்குக் கழுவாய் தேடுவது பற்றியும் பல்வேறு கருத்துகள் பரிமாறப் பெற்றன. இவை யாவும் ஆற அமர ஆராய வேண்டியன என்று எண்ணி, கிறிஸ்தவ ஒன்றிப்புப் பற்றிய முதல் மூன்று இயல்களை மட்டும் சங்கத்தின் இரண்டாம்அ மர்வில் விவாதத்திற்குக் கொணர்ந்தனர்.

இரண்டாம் அமர்வுக்கும் மூன்றாம் அமர்வுக்கும் இடைப்பட்ட காலத்தில் யூத மக்களோடு உறவு, கிறிஸ்தவமல்லாப் பிற சமயங்களோடு உறவு ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்ட விவாதத்தொகுப்பு ஒன்று தயாரிக்கப்பட்டது. மூன்றாம் அமர்வில் நிகழ்ந்த விவாதத்தின் பலனாக, வருங்காலம் நோக்கி இருகரம் விரித்தேடும் வகையில் உருவானது இவ்வறிக்கை. இவ்வறிக்கையால் நற்செய்தி அறிவிப்புப்பணி தடைபடும் என்று நினைதத சில ஆயர்களின் கருத்துக்கு மாறாக, இவ்வறிக்கையைச் சரிவரப் புரிந்து கொண்டவர்களுக்கு இப்பணியின் தாகம் மிகுமேயன்றித் தணியாது என்பது புலப்பட்டது.

1965ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் இறுதி வாக்கெடுப்பில் இந்த அறிக்கையில் யூத மக்களைப் பற்றியப் பகுதி 1821 ஏற்பு வாக்குகளும் 245 மறுப்பு வாக்குகளும் பெற்று நிறைவேறியது. அகில சகோதரத்துவம் பற்றிய மற்ற பகுதி 2064 ஏற்பு வாக்குகளும் 58 மறுப்பு வாக்குகளும் பெற்று இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் முக்கிய ஒறிக்கைகளில் ஒன்றாக வெளிவந்தது. ஆயர்கள் முதலில் ஒன்று நினைக்க, பின் அவர்களே எதிர்பாராத முறையில்அவர்களைப் படிப்படியாக வழிநடத்தி அவர்கள் வழியாக இவ்வறிக்கையை வியத்தகு முறையில் நமக்கு வகுத்தளித்தது தூய ஆவியின் வெளிப்பாடே என உணர்கிறோம்.

சங்கத்தின் மையமான செய்திகளில் ஊன்றியுள்ள அறிக்கை

எதிர்பாராத முறையில் இவ்வறிக்கை உருவாகியிருந்தாலும், இதற்கு முன்னும் பின்னரும்வெளியிடப்பட்ட கோட்பாட்டு விளக்கங்கள், விதித் தொகுப்புகள், அறிக்கைகள் முதலியவற்றில் விரவிக் காணக்கிடக்கும் உண்மைகள் இவ்வவறிக்கைக்கு ஊற்றும் பின்னணியுமாக அமைந்துள்ளன. அவற்றின் ஒளியிலேயே இவ்வறிக்கைக்குப் பொருள்கொள்ளல் தேவையாகிற: திருச்சபை பற்றிய கோட்பாட்டு விளக்கம், எண் 16,17,27; இவைவெளிப்பாடு பற்றிய கோட்பாட்டு விளக்கம், எண் 14,16,17; இ;ன்றைய உலகில் திருச்சபை பற்றிய அருள்பணிக் கொள்கை விளக்கம், எண் 2,4,7,21-24,26,28,36,38.

எனவே இவ்வறிக்கை சங்கததின் மையமான செய்திகளோடும் போதனையோடும் மிகவும் தொடர்புடையதாகவும், பிற ஏடுகளிலே பொதிந்து இருப்பதாகவும் காண்கிறோம்.

கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருச்சபைக்குள்ள உறவு 381

அறிக்கையால் விளைந்தது என்ன?

சங்கம் வித்திட்ட உரையாடல், உறவுச் செடியாய் வளர்ந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. உரையாடல் எதிர்பார்த்த விதத்தில் வேகமாய் வளர்ச்சியடையவில்லை; எனினும் பலன்கள் பல விளைந்துள்ளன. ஒருசில சிறப்பு விளைவுகளைக் குறித்துக் காட்டலாம்.

சங்கம் முடிந்ததிலிருந்து இன்றுவரை 35 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்த உரையாடலின் விளைவாக, பிற சமயங்களை அதிகம் அறிந்து கொள்ளவும், மதிக்கவும் அச்சமஙக்ளபை; பின்பற்றுபவர்களோடு ஒத்துழைக்கவும் திருச்சபை கற்றுக் கொண்டுள்ளது.

சமய உரையாடலால் மூன்று முக்கிய பயன்களைக் காண்கிறோம்:

1. பிற சமயங்கள் பற்றிக் கிறிங்தவர்களிடையே நிலவிவந்த தவறான கருத்துகள் மறைந்து நல்லெண்ணமும் நல்லுறவும் உருவாகி வருகின்றன. இருதரப்பிலும் ஒருவரையொருவர் அறியவும், ஏற்றுக் கொள்ளவும் வேண்டிய திறந்த மனப்பான்மை வளர்ந்து வருகிறது. ஒரு சில இடங்களில் சமயப் பூசல்கள் இருப்பினும், கிறிஸ்தவர் மத்தியில் 2ஆம் வத்திக்கான் சங்கம் அளித்து புது நோக்கு பரவி வருகிறது.

2. நற்செய்தி அறிவிப்புப் பணிக்கும் சமய உரையாடல் பணிக்கும் உள்ள தொடர்பும் உறவும் தெளிவாகி வருகிறது. இதனால் நற்செய்தி அறிவிப்புப் பணி பற்றிய இறையியல் கண்ணோட்டத்தில் ஆழம் கண்டுள்ளோம்.

3. சமய உரையாடல் முயற்சிகளும் ஈடுபாடும் இந்தியத் திருச்சபையில் பண்பாட்டுமயமாக்கல் இயக்கத்திற்கு வேகமளித்துள்ளன.

இஃதோடு இதுவரை நிகழ்ந்துள்ள சமய உரையாடல் அனுபவங்கள் நமது கிறிஸ்தவ நம்பிக்கையை ஆழப்படுத்தியுள்ளது என்பதற்கும் சாட்சியங்கள் உண்டு. மேலும், இன்றைய கிறிஸ்தவச் சாட்சியத்திற்குப் பிற சமய உரையாடல் இன்றியமையாதது என்பதும் வெளிப்படுகிறது. ஏனெனில் இன்று பிற சமயத்தவரோடு உறவின்றி நாம் தனித்த தீவுகளாகச் சாட்சிய வாழ்வு நடத்தமுடியாது. எனவேதான் உரையாடல் அனுபவம் பெற்றவர் கூறுகின்றனர்: ''இன்று சமய நம்பிக்கை கொண்டுள்ளோர் பிற சமய உறவு கொண்டவராகத் தான் வாழ வேண்டும்'' ஏனெனில் இறைநம்பிக்கை வாழ்வு என்பது ஓர் உறவு வாழ்வு, அழைப்பிற்குக் கூறும் பதில்மொழி.

இன்றைய அனுபவங்கள் கூறுவது

இன்றைய உலகில் பல்சமயச் சூழல் ஒரு நாட்டிலோ, ஒரு பகுதியிலோ மட்டும் நிலவும் ஒன்றல்ல் அது அகில உலகச் சூழல் ஆகிவிட்டது. இப்புதிய சூழலில் சமய உரையாடல் பலவிதங்களில் நிகழ்கின்றது.

குறிப்பாக நான்கு முக்கிய வழிகளில் அது நிகழ்கிறது:

1. அன்றாட வாழ்க்கை உரையாடல்

2. கடவுள் அனுபவப் பகிர்வுக் கூட்டங்கள்

3. பொதுவழிபாடுகள், கொண்டாட்டங்கள்

4. சமூக ஈடுபாட்டுக் கூட்டுச் செயல்பாடுகள்

இம்முறையில் அன்றாட வாழ்க்கை உரையாடலும், கூட்டுச் செயல்பாடுகளும் இன்று அதிகத் தேவையானவை என உணர்கிறோம். ஏனெனில் கிறிஸ்தவச் சமூகத்தினர் மட்டும் தனித்துப் புதிய சமுதாயம் அமைக்க இயலாது. நல்மனத்தோர் அனைவரோடும்இணைந்துதான் இன்றையச் சமுதாய மாற்றத்திற்குக் கூட்டுச் செயல்பாட்டின் மூலமாக வழிவகுக்க முடியும். சிறப்பாக, சமூக நீதிக்காகப் பாடுபடுவோர் அடிமட்டக் குழுக்களில் இதை எண்பித்து வருகின்றனர்.

இதன் வழியாக நாம் கற்றுக்கொள்வது: சமய உரையாடலுக்கு மையமானது சமய கொள்கைகளோ கோட்பாடுகளோ அல்ல் மாறாக இன்றைய வாழ்வின் பொதுப் பிரச்சினைகளும் அக்கறையுமே. இவையே பல்சமயங்களைக் கூட்டுச் செலய்பாட்டிற்கு அழைக்கின்றன. எனவே சமய உறவாடலின் மைய நோக்கு மானிட நேயமும் மானிட மேம்பாடும் என்பதும் தெளிவாகியுள்ளது.

சமய உரையாடல் இன்றைய காலத்தின் கட்டாயம்

1. கிறிஸ்து நிகழ்வின் சில அம்சங்களைப் பிற சமயத்தவர்கள் கிறிஸ்தவர்களை விடவும் அதிக ஆழமாக அனுபவித்திருக்கிறார்கள். எனவே நமக்கு வெளிப்படுத்தப்பட்ட நிகரற்ற கிறிஸ்து நிகழ்வை இன்னும் ஆழமாக உய்த்துணர சமய உரையாடல் உதவுகிறது. ஏனெனில் உண்மையென்பது நமது உடமை மட்டுமன்று; பிறரும் உண்மையின் கூறுகளைக் கொண்டுள்ளனர்.

2. நாம் முழு மனிதர்களாகவும், கடவுளுடைய உண்மையான மக்களாகவும் விளங்கவேண்டுமெனில் எல்லா மனிதரோடும் உறவாடுவது அவசியமாகிறது. ஆகவே பிற சமயத்தவரோடு உரையாடுவது நம் மானிட அழைத்தலாகவும் விளங்குகிறது.

3. எல்லாச் சமயங்களுமே கூடி வந்து உரையாடி நல்லிணக்கத்தை வளர்க்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே சமயத்தில் நாம் எதிர்கொள்ளும் இன்னொரு எதார்த்தம் உலகில் பல இடங்களிலும் நிகழும் பல இடங்களிலும் நிகழும் சமய பூசல்கள், சமயச் சண்டைகள், பிணக்குகள் போன்றன. சமயவாதிகளும் அரசியல்வாதிகளும் தங்களுடைய ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள மக்களின் சமய உணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

குறிப்பாக இன்று சமய அடிப்படைவாதம் பரவியுள்ளது. இதைப் பயன்படுத்தி லாபம் தேடிச் சமயங்கள் வியாபாரக் கூடங்களாகவும், மக்களை ஒடுக்கும் வன்முறைச் சக்திகளாகவும் மாற்றப்படுகின்றன.

இதனால் சமயச் சந்திப்புகள் சாதிக்கவேண்டிய ஒற்றுமையையும் அமைதியையும் இழந்து வாழ்கிறோம். ஆக்க சக்தியாக இருக்கவேண்டிய சமயங்கள் அழிவுச் சக்திகளாகவும் இருக்கின்றன என்பதைத் தெளிவாக உணர்கிறோம். இந்நிலையில் போலிச் சமயவாதிகளை இனங்கண்டு உண்மைச் சமயத்தின் விழுமியங்களைத் தேர்ந்துதெளிய அழைக்கப்படுகிறோம்.

குறிப்பாகச் சமய நம்பிக்கைகள் ஆழமாக வேர் ஊன்றியுள்ள கிழக்கு ஆசிய நாடுகளிலும், பல சமயங்கள் தோன்றி வளர்ந்துள்ள இந்திய நாட்டிலும் சமய உரையாடல் மக்கள் நல்வாழ்விற்கும் நிறைவாழ்விற்கும் டிப்படை நிபந்தனை என்பதை உணர்கிறோம். எனவே வத்திக்கான் சங்கம் தொடங்கிவைத்த பல்சமய உறவு நோக்கையும், செயல்பாடுகளையும் வலுப்படுத்துவது இந்தியத் திருச்சபையில் ஒவ்வொருவரின் கடமையாகிறது. இது வெளிச் சூழல் சுமத்தும் கட்டாயம் மட்டுமல்ல, நம் கிறிஸ்தவ நம்பிக்கை அளிக்கும் உள்ளார்ந்த உந்துதலும்கூட.

காலத்தின் அறிகுறிகள் வழியாகப் பேசும் கடவுள், பல்சமய உரையாடல்கள் வழியாக வெளிப்படுத்தும் ஒளியினை நாம் கண்டுகொள்ளும் பேறு பெற்றுள்ளோம். இதற்குச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக நமக்கு முன் செல்கிறது. தொடர்ந்து வழிநடப்போம். நிறைஉண்மையினை நோக்கிய வண்ணம் செல்லும் பல்சமயக் கூட்டுத் திருயாத்திரை இந்த அறிக்கையின் மையக்கருத்துகளையெல்லாம் நமக்கு உண்மையென விளங்கச் செய்யும்.

பணி.சேவியர் இருதயராசு சே.ச.
சென்னை தியான ஆசிரமம்
சென்னை
10 அக்டோபர்,1996

கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருச்சபைக்குள்ள உறவு

பற்றி
இறை அடியாருக்கு அடியார் ஆயர் பவுல்
திருச்சங்கத் தந்தையரோடு இணைந்து
நினைவில் என்றும் நிலைக்குமாறு அருளிய
அறிக்கை


முன்னுரை

1. நம் காலத்தில்ழூ மக்களின் நாளுக்குநாள் அதிகமாக நெருங்கி ஒன்றுபட்டு வருகிறது; பல்வேறு மக்களிடையே உள்ள பிணைப்புகளும் மிகுதியாக வருகின்றன. இந்நிலையில் திருச்சபை கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு தனக்கள்ள உறவைப்ப்றறி அதிக கவனத்துடன் ஆய்ந்துவருகிறது. தனி மனிதரிடையே மட்டுமன்றி, எல்லா மக்கள் குழுவினரிடையேயும் ஒற்றுமையையும் அன்பையும் வளர்ப்பது திருச்சபையின் பொறுப்பு. இப்பொறுப்பைச் செயல்படுத்தும்போது திருச்சபை மக்களுக்குப் பொதுவாய் இருப்பவை மற்றும் அவர்களின் தோழமையை வளர்ப்பவை ஆகியவை பற்றி இந்த ஏட்டில் முக்கியமாக ஆய்கிறது.

மக்கள் அனைவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்களே; மண்ணில் வாழ்வாற்கென்றே மனுக்குலம் முழுவதையும் கடவுள் படைத்தார்1 என்பதால் மனிதர் அனைவருக்கும் பிறப்பிடம் ஒன்றே. அவர்களது இறுதிக் கதியும் கடவுள் ஒருவரே. தேர்ந்து கொள்ளப்பட்ட யாவரும் இறைமாட்சியால் ஒளிரவிருக்கும் திருநகரத்தில் ஒன்றுசேர்க்கப்பட்டு எல்லா மக்கள்குழுவினரும் அங்கு இறைவொளியில் நடக்கும் காலம்வரை2 கடவுளின் பாதுகாப்பும், அவர் புரியும் நன்மைகளின் வெளிச் சான்றும், நிறைவாழ்வு வழங்க அவர் வகுத்தத் திட்டங்களும் எல்லா மனிதரையும் சென்றடைகின்றன.3

முற்காலத்தில் மட்டுமன்றி இக்காலத்திலும் மனித நிலைபற்றிய புரியாப் புதிர்கள் மனித உள்ளங்களைக் கலக்கி வருகின்றன. இவற்றிற்கான விடையை மனிதர்கள் பல்வேறு சமயங்களிலிருந்து எதிர்பார்க்கின்றனர். இப்புதிர்களாவன: மனிதர் என்றால் யார்? மனித வாழ்வின் நோக்கமும் பொருளும் என்ன? நன்மை என்றால் என்ன? பாவம் என்பது என்ன? துன்பத்தின் பிறப்பிடம் யாது? அதன் நோக்கம் என்ன? உண்மையான மகிழ்ச்சியை அடையும் வழி என்ன? இறப்பு, அதன்பின் தீர்ப்பு, இறப்புக்குப்பின் வினைப்பயனளித்தல் ஆகியவற்றின் உண்மை என்ன? நம் வாழ்வையும் நாம் எங்கிருந்து வருகிறோம், எங்குச் செல்கிறோம் என்பதையும் பற்றிய சொற்கடந்த இறுதிப் பேருண்மை யாது?

கிறிஸ்தவமல்லாப் பல்வேறு சமயங்கள்

2. பண்டைக் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை இயற்கையின் போக்கிலும், மனித வாழ்வின் நிகழ்ச்சிகளிலும் மறைந்திருக்கும் ஓர் ஆற்றலைப் பல்வேறு மக்கள் உணர்ந்துள்ளனர். ஏன், சில நேரங்களில் ஒப்புயவர்வற்றதொரு கடவுளைத் தந்தையாகவும் மக்கள் கண்டு ஏற்று வந்துள்ளனர். மேற்கூறிய உணர்வும் ஏற்பும் அவர்களது வாழ்வை ஆழ்ந்த சமய உணர்வில் தோய்ந்திருக்கச் செய்கின்றன. முன்னேறிய பண்பாடுகளோடு பிணைந்த சமயங்கள் இதே வினாக்களுக்கு அதிக நுட்பம் வாய்ந்த கருத்துக்களாலும்அதிக வளர்ச்சியுற்ற சொல் முறையாலும் விடையளிக்க கடும் முயற்சி எடுத்துள்ளன. இவ்வாறு இந்த சமயத்திலே மக்கள் கடவுளின் மறைபொருளை ஆய்கின்றனர்; அதனை அவர்கள் வற்றா வளமுடைய புராணங்களாலும் ஆழ்ந்த மெய்யியல் ஆராய்ச்சிகளாலும் எடுத்துரைக்கின்றனர்; தவவாழ்க்கை, ஆழந்த தியானம், அன்போடும் நம்பிக்கையோடும் கடவுளை நாடுதல் போன்ற வழிகளைப் பயன்படுத்தி மனித நிலைசார்ந்த துயரங்களிலிருந்து விடுதலை தேடுகின்றனர். புத்த சமயம் தன் பற்பல வடிவங்களிலே மாற்றங்களுக்கு ஊட்பட்ட இந்த உலகத்தின் அடிப்படையான நிறைவற்ற நிலையைச் சுட்டிக் காட்டுகிறது. மேலும் மக்கள் பக்தியும் நம்பிக்கையும் கொண்ட உளத்தோடு முழுமையான விடுதலை பெறுவதற்கோ, தங்களது சொந்த முயற்சியால் அல்லது மேலிருந்து வரும் உதவியால் முழுமையான உள்ளொளியைப் பெறுவதற்கோ சாதகமான வழியைப் புத்த சமயம் கற்பிக்கிறது. இதே முறையில் உலகம் முழுவதும் காணப்படும் பிற சமயங்களும் வெவ்வேறு படிப்பினைகள், வாழ்க்கை நெறிகள், திருச்சடங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வழிகளை வழங்கி மனித இதயத்தின் அமைதியின்மையைப் போக்கிட பல்வேறு விதங்களில் முயல்கின்றன.

இச்சமயங்களிலே காணக்கிடக்கின்ற உண்மையானதும் தூயதுமான எதையுமே கத்தோலிக்கத் திருச்சபை வெறுத்து ஒதுக்வில்லை. தன்னுடைய கொள்கைகளிலிருந்தும் போதனைகளிலிருந்தும் பலவற்றில் மாறுபடினும் எல்லா மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையின் ஒளிச்சுடரை மீண்டும் மீண்டும் பிரதிபலிக்கின்ற செயல்முறைப் பாணிகள், வாழ்க்கை முறைகள், நெறிகள், கோட்பாடுகள் ஆகிவற்றைக் கத்தோலிக்கத் திருச்சபை உண்மையாகவே மதித்துப் போற்றுகின்றது. உண்மையிலே ''வழியும் உண்மையும் வாழ்வும் நானே'' (யோவா 14:6) ஆன கிறிஸ்துவைத்தான் அது அறிவிக்கின்றது, இடையறாது அறிவிக்கவும் வேண்டும். ஏனெனில் அவரிடத்தில்தான் மக்கள் சமயவாழ்வின் முழுமையைக் காண்கின்றனர். அவரிடத்தில்தான் கடவுள் யாவற்றையும் தம்மோடு மீண்டும் ஒப்புரவாக்கினார்.4

எனவே, கத்தோலிக்கத் திருச்சபை தன் மக்களுக்கு அறிவுறுத்துவது என்னவென்றால்; கிறிஸ்தவர்கள் தம் நம்பிக்கைக்கும் வாழ்விற்கும் சான்று பகருங்கால், கிறிஸ்தவமல்லாச் சமயங்களைப் பின்பற்றுபவர்களோடும் முன்மதியுடனும் அன்புடனும் உரையாடல் நிகழ்த்தவேண்டும். அவ்வாறே அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும். மேலும் கிறிஸ்தவமல்லாச் சமயங்களைப் பின்பற்றுபவர்களிடத்தில் காணப்படுகின்ற அருள்நெறி மற்றும் அறநெறி சார்ந்த நலன்களையும் சமூக-பண்பாட்டு விழுமியங்களையும் ஏற்றுக்கொண்டு அவற்றைப் பேணி வளர்ச்சியுறச் செய்ய வேண்டும்.

இஸ்லாமிய சமயம்

3. வாழ்பவரும், தாமாக இருப்பவரும், இரக்கமும் வல்லமையும் மிக்கவரும், விண்ணையும் மண்ணையும் படைத்தவரும்,5 மக்களிடத்தில் பேசியவருமான ஒரே கடவுளைத் தொழுகின்ற இஸ்லாமிய மக்களுக்குத் திருச்சபை சிறந்த மதிப்: அளிக்கிறது. இஸ்லாமிய சமயம் தன்னைத்தானே ஆபிரகாமுடன் விருப்போடு இணைத்துக் கொள்கிறது. அவர் கடவுளுக்கு அடிபணிந்ததுபோல இஸ்லாமியர்களும் கடவுளது மறைவான திட்டங்களுக்கு முழு உள்ளத்தோடு அடிபணிந்திட முயற்சி எடுக்கிறார்கள். இயேசுவை அவர்கள் கடவுளாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்கூட, அவரை ஓர் இறைவாக்கினராக ஏற்று வணக்கம் செலுத்துகிறார்கள். அவருடைய கன்னித்தாயாகிய மரியாவையும் பெருமைப்படுத்துகிறார்கள். சிலவேளைகளிலே அவர்கள் பக்தியோடு அவரிடம் வேண்டவும் செய்கிறார்கள். இன்னும், உயிர்ப்பிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கடவுள் அவர்களுக்குரிய பயனை அளிக்கும் தீர்ப்பு நாளை இஸ்லாமியர் எதிர்நோக்கியிருக்கிறார்கள். எனவே, அவர்கள் ஒழுக்க வாழ்வை மதிப்பதோடு சிறப்பாக இறைவேண்டல், ஈகை, நொப்பு ஆகியவற்றின் வழியாகக் கடவுளை வழிபடுகிறார்கள்.

காலப்போக்கிலே கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பற்பல கருத்து வேறுபாடுகளும் பகைமைகளும் ஏற்பட்டது உண்மையே. இருப்பினும், கடந்தவற்றை மறந்து, இருதிறத்தாரும் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வதற்காக நேர்மையுடன் ஈடுபடவும், எல்லா மனிதருடையவும் நன்மைக்காகச் சமூக நீதி, ஒழுக்க நலன்கள், அமைதி, சுதந்திரம் ஆகியவற்றைப் பேணிக் காத்து மேம்படுத்துவதில் ஒத்துழைக்கவும் திருச்சங்கம் எல்லாருக்கும் வேண்டுகோள் விடுக்கிறது.

யூத சமயம்

4. திருச்சபையின் மறைபொருளை இத்திருச்சங்கம் ஆயும்போது, புது உடன்படிக்கையைச் சார்ந்த மக்களையும் ஆபிரகாமின் வழிவந்தோரையும் ஞான முறையில் இணைக்கும் பிணைப்பை அது நினைவுக்குக் கொண்டுவருகிறது.

கடவுளின் நிறைவாழ்வுத் திட்டப்படி, தனது நம்பிக்கை, தேர்வு ஆகியவற்றின் தொடக்கம் ஏற்கெனவே குலமுதுவர், மோசே, இறைவாக்கினர் என்போரிடத்தில் காணப்படுகிறது என்பதைக் கிறிஸ்துவின் திருச்சபை ஒப்புக்கொள்கிறது. கிறிஸ்தவர்கள் யாவரும் நம்பிக்கையின்படி ஆபிரகாமின் மக்களாவர்6 என்றும், இவர்கள் அதே குலமுதுவரின் அழைத்தலிலே உள்ளிணைந்திருக்கிறார்கள் எனவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களினம் தான் அடிமையாயிருந்த நாட்டிலிருந்து விடுதலையடைந்த நிகழ்ச்சியில் திருச்சபையின் மீட்பு அறிவுக்கெட்டா விதத்தில் முன்காட்டப்பட்டிருக்கிறதென்றும் திருச்சபை அறிக்கையிடுகின்றது. எனவே, சொற்கடந்த தமது இரக்கத்தினால் கடவுள் பழைய உடன்படிக்கையை எந்த மக்களோடு செய்யத் திருவுளம் கொண்டாரோ, அந்த மக்களிடமிருந்துதான் பழைய ஏற்பாட்டு இறைவெளிப்பாட்டைத் தான் பெறுகிறது என்பதைத் திருச்சபை மறக்கமுடியாது; அதுபோலவே, பிற இனத்தார் என்ற காட்டு ஒலிவ மரக்கிளைகள் நல்ல ஒலிவ மரத்தில் ஒட்டப்பட்டுள்ளன என்பதையும் இம்மரத்தின் வேரிலிருந்துதான் அவை தமது உ ணவை எடுத்துக்கொள்கின்றன என்பதையும்,7 திருச்சபை மறக்க முடியாது. உண்மையில் நமக்கு அமைதி அருளும் கிறிஸ்து தமது சிலுவையின் வழியாக யூதருக்கும் பிற இனத்தாருக்கும் இடையே மீண்டும் உறவை ஏற்டுத்தியபோது தம்முள் இவ்விரு இனத்தாரையும் ஒன்றாக்கினார்8 எனத் திருச்சபை நம்புகிறது.

திருத்தூதர் பவுல் தன் இனத்தாரைப் பற்றிக் கூறுகின்ற கீழ்வரும் வார்த்தைகளைத் திருச்சபை என்றுமே கண்முன் கொண்டுள்ளது. ''அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக் கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. குலமுதலுவர்களின் வழி வந்தவர்கள் அவர்கள்; மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார்'' (உரோ 9:4-5): இந்தக் கிறிஸ்துவே கன்னிமரியாவின் மகன். திருச்சபையின் அடித்தளமும் அதன் தூண்டுகளுமான திருத்தூதர்களும் கிறிஸ்துவின் நற்செய்தியை உலகுக்கு அறிவித்த எண்ணிறந்த முதல் சீடர்களும் யூத மக்களிடமிருந்துதான் தோன்றினார்கள் என்பதையும்திருச்சபை நினைவுர்கிறது.

விவிலியத்தின் சான்றுப்படி, எருசலேம் தன்னைக் கடவுள் தேடி வந்த காலத்தை அறிந்துகொள்ளவில்லை.9 மேலும் யூதருள் பலர் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை; பலர் அது பரவுவதைத் தடுக்கவும் செய்தனர்.10 இருப்பினும் திருத்தூதரின் கூற்றுப்படி தம் முன்னோரை முன்னிட்டு யூதர்கள் இன்னும் கடவுளின் பேரன்பிற்கு உரியவர்களாய் இருக்கிறார்ள்.11 ஏனெனில் தாம் அவர்களுக்குக் கொடுத்த அருள் கொடைகளையும் அவர்களுக்கு விடுத்த அழைப்பையும் கடவுள் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை. ஒருநாள் மக்கள் யாவரும் ஒரே குரலாய் ஆண்டவரைக் கூவி அழைத்து, ''ஒருமனப்பட்டு அவருக்குப் பணிபுரிவார்கள்'' (செப் 3:9); கடவுள் ஒருவருக்கே தெரிந்த அந்த நாளைத்தான் இறைவாக்கினரோடும், மேற்கூறிய திருத்தூதரோடும் சேர்ந்து திருச்சபை எதிர்பார்த்திருக்கிறது.12

கிறிஸ்தவருக்கும் யூதருக்கும் பொதுவான அருள்வாழ்வு சார்ந்த மரபுச் செல்வம் நிறைய இருக்கிறது. எனவே, சிறப்பாக விலியம் மற்றும் இறையியல் ஆராய்ச்சி, சகோதர உரையாடல்கள், ஆகியவற்றின் வழியாக இவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து மதிப்பதை இத்திருச்சங்கம் ஆதரித்துப் பரிந்துரைக்க விரும்புகிறது.

யூத மக்களின் ஆட்சியாளர்கள் தங்களைப் பின்பற்றியவரோடு சேர்ந்து கிறிஸ்துவைக் கொல்லத் தூண்டினர்,13 என்பது உண்மைதான் எனினும், கிறிஸ்துவினுடைய துன்பங்களின்போது செய்யப்பட்டவைக்காக அன்று வாழ்ந்த யூதர்கள் யாவரையும் வேறுபாடின்றியோ, இன்றுள்ள யூதர்களையோ நாம் குற்றம் சாட்டக்கூடாது. திருச்சபை கடவுளின் புதிய மக்கள் குலமாயுள்ளதெனினும் யூதர்கள் ;கடவுளால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்றோ சபிக்கப்பட்டவர்கள் என்றோ விவிலியம் உரைப்பதாக நாம் கூறக்கூடாது. எனவே மறைக்கல்வியிலோ, இறைவார்த்தையின் போதனையிலோ நற்செய்தியில் காணும் உண்மைக்கும் கிறிஸ்துவின் உளத்திற்கும் பொருந்தாத யாதொன்றையும் யாரும் கற்றுக்கொடுக்கா வண்ணம் அனைவரும் கவனமாயிருத்தல் வேண்டும்.

இது மட்டுமல்ல, எந்த ஒரு மனிதருக்கும் எதிராக இழைக்கப்படுகின்ற எவ்வித அடக்குமுறையையும் கண்டிக்கிற திருச்சபை, யூதர்களோடு தான் கொண்டுள்ள பொது மரபுச் செல்வத்தைக் கருத்தில் கொண்டு, யூதர்கள் மட்டில் காண்பிக்கப்பட்ட வெறுப்புக்காகவும் அடக்குமுறைக்காகவும் செமித்தியர் இனத்தாருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்துத் தீங்குகளுக்காகவும் - இவை எக்காலத்தில் நிகழ்ந்தவையாயினும் சரி, யாரால் செய்யப்படடவையாயினும் சரி - மிகவும் வருந்துகிறது. எவ்வித அரசியல் நோக்கங்களுக்காகவுமின்றி, நற்செய்தியின் பரிவு நிறை அன்பை முன்னிட்டே திருச்சபை இவ்வாறு வருந்துகிறது.

இது மட்டுமன்று, யாவரும் நிறைவாழ்வு பெற வேண்டும் என்பதற்காகவே மக்கள் அனைவரின் பாவங்களின் பொருட்டுக் கிறிஸ்து தமது அளவில்லா அன்பால் தாமாகவெ தம்மைத் துன்பங்களுக்கும் சாவுக்கும் உட்படுத்தினார். இதைத் திருச்சபை எப்போதும் படிப்பித்து வந்துள்ளது; இப்பொழுதும் பழப்பித்து வருகிறது. எனவே கிறிஸ்துவின் சிலுவை யாவரையும் அரவணைக்கும் அன்பின் அடையாளமாகவும், அருள் வழங்கும் ஊற்றாகவும் உ;ளளது என்பதை எடுத்துரைக்கவேண்டியது போதிக்கும் திருச்சபையின் கடமையாகும்.

அனைத்து மக்களையும் அரவணைக்கும் சகோதரத்துவம்

5. யாவரும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். அவர்களில் சிலரை நம் உடன்பிறப்புகளாக நாம் நடத்த மறந்தோம் என்றால் கடவுளை அனைத்து மக்களின் தந்தையென அழைத்து நாம் மன்றாட இயலாது. ''அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை'' (யோவா 4:8) என விவிலியம் கூறுமளவிற்குத் தந்தையான கடவுளோடு மனிதர் கொண்டுள்ள உறவும் அவர்களின் உடன்பிறப்புகளாக மற்ற மனிதரோடு அவர்க்குள்ள உறவும் நெருங்கிப் பிணைந்துள்ளன.

எனவே, மனிதருடைய மாண்பையும் அதன்வழி பிறக்கின்ற உரிமைகளையும் பொறுத்தமட்டில் ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதரையோ, ஓர் இனத்திலிருந்து இன்னோர் இனத்தையோ அநீதியாகப் பிரித்துப் பேசும் எந்தக் கொள்கையும் செயல்முறையும் அடிப்படையற்றவை.

இக்காரணத்தை முன்னிட்டு, இனம், நிறம், வாழ்க்கை நிலை, சமயம் ஆகியவற்றின் அடிப்படையில் எம்மனிதரையும் பிரித்து வேறுபடுத்துவதும், அவர்களைத் துன்புறுத்துவதும் கிறிஸ்துவின் உளத்திற்கு முரணானவை னத் திருச்சபை கண்டிக்கிறது. ஆகவே, திருத்தூதர்களாக தூய பேதுரு, பவுல் ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிக் கிறிஸ்தவர் ''பிற இனத்தினர் நடுவில் நன்னடத்தை உடையவராய் இருக்க'' (1 பேது 2:12) வேண்டும் எனவும், உண்மையிலேயே விண்ணகத் தந்தையின் மக்களாகத் தாங்கள் இருக்கும்படி,14 இயலுமானால், தங்களால் முடிந்தவரை எல்லாரோடும் அமைதியுடன் வாழ வேண்டும் எனவும்15 இத்திருச்சங்கம் பெருவிருப்புடன் வேண்டுகிறது.

இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள யாவும், அவை ஒவ்வொன்றும் திருச்சங்கத் தந்தையரின் இசைவைப் பெற்றுள்ளன. நாமும் கிறிஸ்து நமக்களித்துள்ள திருத்தூது அதிகாரத்தால் வணக்கத்திற்குரிய தந்தையருடன் இணைந்து, தூய ஆவியில் அவைகளை ஏற்றுக்கொள்கிறோம், தீர்மானிக்கிறோம், நிலைநாட்டுகிறோம். சங்கம் நிலைநாட்டிய இவையாவையும் கடவுளின் மாட்சிமைக்காகச் செயல்படுத்துமாறு ஆணையிடுகிறோம்.

.

தூய பேதுரு பேராலயம் பவுல்.
உரோமை கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்
அக்டோபர் 28,1965.  

கீழே தந்தையரின் கையொப்பங்கள் தொடர்கின்றன.