திருச்சபைச் சட்டத் தொகுப்பு

 

நூல் - 4

பகுதி 1

தலைப்பு 1

திருமுழுக்கு

தி.ச. 849 அருளடையாளங்களின் நுழைவு வாயிலாகிய திருமுழுக்கு மீட்பிற்கு இன்றியமையாதது; இதை உண்மையாகவோ, குறைந்த அளவு விருப்பத்தின் மூலமாகவோ பெறவேண்டும். இதனால் மனிதர் பாவங்களிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்; இறைவனின் பிள்ளைகளாக மீண்டும் பிறக்கின்றனர்; அழியா முத்திரையால் கிறிஸ்துவின் சாயலைப் பெற்றுத் திருச்சபையில் ஓருடலாக இணைக்கப்படுகின்றனர். இத்திருமுழுக்கு உரிய வார்த்தைகளின் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி உண்மையான தண்ணீரில் கழுவப்படுவதால் மட்டுமே செல்லத்தக்க விதத்தில் அளிக்கப்படுகிறது.

இயல் 1

திருமுழுக்குக் கொண்டாட்டம்

தி.ச. 850 திருமுழுக்கு அவசரத் தேவை நீங்கலாக, அங்கீகரிக்கப்பட்ட திருவழிபாட்டு நூல்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குமுறைக்கேற்ப அளிக்கப்படவேண்டும். ஓர் அவசரத் தேவையில் அருளடையாளத்தின் செல்லத்தக்க நிலைக்குத் தேவையானவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும்;

தி.ச. 851. திருமுழுக்குக் கொண்டாட்டத்தை தக்க விதத்தில் தயாரிக்கவேண்டும். எனவே,

1. திருமுழுக்கு பெற விரும்பும் வயது வந்தோரைக் கிறிஸ்தவப் புகுமுகநிலையில் சேர்க்கவேண்டும். அவர் ஆயர் பேரவையால் தழுவி அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவப் புகுமுகச் சடங்குமுறைக்கும் மற்றும் அதே பேரவை வெளியிட்டுள்ள சிறப்பு விதிமுறைகளுக்கும் ஏற்ப, இயன்றவரை, பல்வேறு படிநிலைகள் வழியாக அருளடையாளப்புகுமுக நிலைக்கு இட்டுச் செல்லப் படவேண்டும்.

2. திருமுழுக்குப் பெறவேண்டிய குழந்தையின் பெற்றோருக்கும், அவ்வாறே ஞானப் பெற்றோரின் பணியை மேற்கொள்ள வேண்டியவர்களுக்கும் இந்த அருளடையாளத்தின் பொருள், அத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடமைகள் பற்றித் தக்க முறையில் பயிற்றுவிக்கவேண்டும். பங்குக்குரு, தாமாகவோ மற்றவர்கள் வழியாகவோ, மேய்ப்புப்பணி சார்ந்த அறிவுரைகளாலும் பொது இறைவேண்டலாலும் பெற்றோர்கள் தக்க முறையில் தயாரிக்கப்படும்படி கவனித்துக் கொள்ளவேண்டும். இந்நோக்கத்திற்காகப் பலகுடும்பங்களை ஒன்று சேர்க்கவேண்டும்; எங்கு இயலுமோ அங்கு அக்குடும்பங்களைச் சந்திக்கவேண்டும்.

தி.ச. 852 வயதுவந்தோர் திருமுழுக்குப்பற்றிய திருச்சபைச் சட்ட விதியமைப்புகள் குழந்தைப் பருவத்தைக் கடந்து, அறிவுப் பயன்பாட்டை அடைந்துள்ள அனைவருக்கும் பொருந்தும்.

2) திருமுழுக்கைப் பொறுத்தவரை தற்பொறுப்பு ஏற்க இயலாத ஒருவர் ஒரு குழந்தையாகக் கருதப்படுவார்.

தி.ச. 853. திருமுழுக்கு அளிக்கப் பயன்படுத்த வேண்டிய தண்ணீரை, ஓர் அவசரத் தேவைக்குத் தவிர, திருவழிபாட்டு நூல்களின் விதியமைப்புகளுக்கேற்ப ஆசீர்வதிக்க வேண்டும்.

தி.ச. 854 ஆயர் பேரவையின் விதியமைப்புகளைக் கடைபிடித்து, திருமுழுக்கை முழுக்கு முறையிலோ ஊற்றுதல் முறையிலோ அளிக்கவேண்டும்.

தி.ச. 855.. கிறிஸ்தவ மனநிலைக்குப் புறம்பான ஒருபெயரைச் சூட்டாதவாறு பெற்றோர், ஞானப்பெற்றோர் மற்றும் பங்குக்குரு கவனித்துக் கொள்ள வேண்டும்.

தி.ச. 856. திருமுழுக்கு எந்தவொரு நாளிலும் கொண்டாடலாம் என்றாலும், சாதாரணமாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில், அல்லது இயன்றவரை, பாஸ்காத் திருவிழிப்பின்போது கொண்டாடுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது.

தி.ச. 857. ஓர் அவசரத் தேவைக்குத் தவிர, திருமுழுக்கிற்குரிய இடம் ஓர் ஆலயம் அல்லது செபக்கூடமாகும்.

2) நியாயமான ஒரு காரணம் வேறுவிதமாகத் தூண்டினாலன்றி, வழக்கமாக, வயதுவந்த ஒருவர் அவரின் சொந்தப்பங்கு ஆலயத்திலும், ஒரு குழந்தை அதன் பெற்றோர்க்குரிய பங்கு ஆலயத்திலும் திமுழுக்குப் பெறவேண்டும்.

தி.ச. 858. ஒவ்வொரு பங்கு ஆலயமும் ஒரு திருமுழுக்குத் தொட்டியைக் கொண்டிருக்கவேண்டும். இக்காரியத்தில் மற்ற ஆலயங்கள் ஏற்கெனவே முயன்று பெற்றிருக்கும் அதே உரிமையைக் கருத்தில் கொள்ளவேண்டும்

2) தலத்திருச்சபை ஆளுநர், தலப் பங்குக்குருவைக் கேட்டறிந்தபின், விசுவாசிகளின் வசதிக்காகப் பங்கின் எல்லைக்குள் மற்றோர் ஆலயம் அல்லது செபக்கூடத்திலும் ஒரு திருமுழுக்குத் தொட்டி வைக்கப்படும்படி அனுமதிக்கலாம் அல்லது கட்டளையிடலாம்.

தி.ச. 859. திருமுழுக்குப் பெறவேண்டியவர், தூரம் அல்லது மற்றச் சூழ்நிலைகளின் காரணமாக, பங்கு ஆலயத்திற்கோ, அல்லது தி.ச. 858, 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள செபக்கூடத்திற்கோ மிகவும் சிரமமின்றிச் செல்லவோ கொண்டுவரப்படவோ முடியாதெனில், மிக அருகில் உள்ள மற்றோர் ஆலயம் அல்லது செபக்கூடம் அல்லது மற்றொரு பொருத்தமான இடத்தில்கூடத் திருமுழுக்கு அளிக்கலாம், அளிக்கவும் வேண்டும்.

தி.ச. 860. திருமுழுக்கு, ஓர் அவசரத் தேவைக்குத் தவிர, தலத்திருச்சபை ஆளுநர் கனமான காரணத்திற்காக அனுமதித்திருந்தாலன்றி, தனியார் வீடுகளில் அளிக்கக்கூடாது.

2) மறைமாவட்ட ஆயர் வேறுவிதமாக விதித்திருந்தாலன்றி, ஓர் அவசரத் தேவை அல்லது மேய்ப்புப் பணி சார்ந்த வேறு சில தவிர்க்க முடியாத காரணம் நீங்கலாக, திருமுழுக்கை மருத்துவமனைகளில் கொண்டாடக்கூடாது.

 

 

இயல் 2

திருமுழுக்குப் பணியாளர்

தி.ச. 861. திருமுழுக்கின் சாதாரணப் பணியாளர் ஆயர், குரு மற்றும் திருத்தொண்டர் ஆவர். இக்காரியத்தில் தி.ச. 530, 1ல் குறிப்பிடப்பட்டுள்ள விதியமைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

2) சாதாரணப் பணியாளர் உடனில்லை அல்லது அவர் செயல்பட இயலவில்லை என்றால், வேதியர் அல்லது தலத்திருச்சபை ஆளுநரால் இப்பணிக்கென நியமிக்கப்பட்டுள்ள மற்றொருவர் சட்டமுறைப்படி திருமுழுக்கு அளிக்கலாம். உண்மையில் ஓர் அவசரத்தேவை எழும்போது எவரும் சரியான எண்ணத்துடன் திருமுழுக்கு அளிக்கலாம். ஆன்ம மேய்ப்பர்கள், சிறப்பாகப் பங்குக்குருக்கள், திருமுழுக்கு அளிக்கும் சரியான முறைபற்றிக் கிறிஸ்தவ விசுவாசிகளைப் பயிற்றுவிக்க அக்கறை செலுத்தவேண்டும்.

தி.ச. 862. ஓர் அவசரத் தேவைக்குத் தவிர, உரிய அனுமதியின்றி, மற்றொருவரின் எல்லைக்குள் தமது ஆளுகைக்கு உட்பட்டவர்களுக்குக்கூட திருமுழுக்கு அளிப்பதற்கு எவருக்கும் அனுமதியில்லை.

தி.ச. 863. குறைந்த அளவு பதினான்கு வயது நிரம்பிய, வயது வந்நவர்களின் திருமுழுக்கு மறைமாவட்ட ஆயரிடம் தெரிவிக்கப்படவேண்டும், பொருத்தமென்று அவர் கருதினால் அவரே திருமுழுக்கு அளிக்கலாம்.

இயல் 3

திருமுழுக்குப் பெறவேண்டியவர்கள்

தி.ச. 864. இன்னும் திருமுழுக்குப் பெறாதவர்கள் மட்டுமே திருமுழுக்குப் பெறத் தகுதியுடையவர்.

தி.ச. 865. வயதுவந்தவர் திருமுழுக்குப் பெறவேண்டுமென்றால், திருமுழுக்குப் பெறுவதற்கான விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கவேண்டும்; விசுவாச உண்மைகளிலும் கிறிஸ்தவ கடமைகளிலும் போதுமான அளவு பயிற்றுவிக்கப்பட்டிருக்கவேண்டும்; கிறிஸ்தவ புகுமுகநிலை வழியாகக் கிறிஸ்தவ வாழ்வைச் சோதித்து அறியவேண்டும்; மேலும் தம்முடைய பாவங்களுக்காக வருந்த அவரை அறிவுறுத்த வேண்டும்.

2) இறக்கும் ஆபத்திலுள்ள வயதுவந்தவர் விசுவாசத்தின் முக்கிய உண்மைகளைப் பற்றி ஓரளவு அறிவு பெற்று, திருமுழுக்குப் பெறுவதற்கான விருப்பத்தை ஏதாவது ஒரு விதத்திpல் வெளிப்படுத்தி, கிறிஸ்தவ சமயக் கட்டளைகளைக் கடைப்பிடிக்கப் போவதாக வாக்குறுதி அளித்தருந்தால், அவருக்குத் திருமுழுக்கு அளிக்கலாம்.

தி.ச. 866. கனமான காரணம் தடுத்தாலன்றி, வயதுவந்த ஒருவர் திருமுழுக்குப் பெறும்போது, திருமுழுக்கிற்குப் பின் உடனே அவருக்கு உறுதிப்பூசுதல அளிக்கவேண்டும். அவர் நற்கருணைக் கொண்டாட்டத்தில் பங்கேற்றுத் திருவிருந்தும் உட்கொள்ளவேண்டும்.

தி.ச. 867. குழந்தைகளுக்கு முதல்சில வாரங்களுக்குள் திருமுழுக்கு அளிக்கப்படுவதைக் கவனித்துக்கொள்ளப் பெற்றோர் கடமைப்பட்டுள்ளனர்; பிறப்பிற்குப்பின், கூடிய விரைவில், ஏன், அதற்கு முன்பே கூட, குழந்தைக்கு அருளடையாளத்தைக் கேட்கவும் அதற்காகத் தக்கமுறையில் தயாரிக்கவும் பெற்றோர் பங்குக்குருவை அணுகவேண்டும்.

2) குழந்தை இறக்கும் ஆபத்தில் இருந்தால், எவ்வித கால தாமதமுமின்றி, அதற்குத் திருமுழுக்கு அளிக்கவேண்டும்.

தி.ச. 868. குழந்தைக்குச் சட்ட முறைப்படி திருமுழுக்கு அளிக்கத் தேவையானவை:

1) பெற்றோர், குறைந்த அளவு அவர்களில் ஒருவர் அல்லது சட்ட முறைப்படி அவர்கள் இடத்தில் இருப்பவர் ஒப்புதல் அளிக்கவேண்டும்.

2) குழந்தை கத்தோலிக்கச் சமயத்தில் வளர்க்கப்படும் என்பதற்குப் போதுமான நம்பிக்கை இருக்கவேண்டும்; அத்தகைய நம்பிக்கை முற்றிலுமாக இல்லையெனில், தனிச்சட்டத்தின் விதியமைப்புகளுக்கு ஏற்பத் திருமுழுக்கைத் தள்ளி வைக்கவேண்டும்; அதற்கான காரணத்தைப் பெற்றோருக்குத் தெரிவிக்கவேண்டும்.

3) கத்தோலிக்கப் பெற்றோரின் குழந்தைக்கு, உண்மையிலே கத்தோலிக்கரல்லாத பெற்றோரின் குழந்தைக்குக்கூட, இறக்கும் ஆபத்தில், பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராகக்கூட, சட்டமுறைப்படி திருமுழுக்கு அளிக்கலாம்.

தி.ச. 869. ஒருவர் திருமுழுக்கு பெற்றுள்ளளாரா அல்லது திருமுழுக்கு செல்லத்தக்க விதத்தில் அளிக்கப்பட்டதா என்ற ஐயம் எழுந்து, கவனமான ஆய்வுக்குப்பின் ஐயம் நீடித்தால், அவருக்கு நிபந்தனைகளுக்குட்பட்டுத் திருமுழுக்கு அளிக்கவேண்டும்.

2) திருமுழுக்கு அளிக்க பயன்படுத்திய பொருள் மற்றும் வாய்ப்பாட்டை ஆய்வுசெய்து, மேலும் திருமுழுக்குப் பெற்ற வயது வந்த ஆள் மற்றும் திருமுழுக்குப் பணியாளரின் எண்ணத்தைக் கருத்திற்கொண்டு, திருமுழுக்கின் செல்லத்தக்கநிலை பற்றி ஐயப்படுவதற்குக் கனமான காரணம் இருந்தாலன்றி, கத்தோலிக்கமல்லாத ஒரு திருச்சபைச் சமூகத்தில் திருமுழுக்குப் பெற்றவர்களுக்கு நிபந்தனைகளுக்குட்பட்டுத் திருமுழுக்கு அளிக்கக்கூடாது.

3) 1 மற்றும் 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள காரியங்களில், திருமுழுக்கு அளித்தமை அல்லது அதன் செல்லத்தக்கநிலைபற்றி ஐயம் நீடித்தால், திருமுழுக்கு அளிக்கப்பெற வேண்டியவா வயது வந்தவரெனில், அவருக்குத் திருமுழுக்கு அருளடையாளத்தின் கோட்பாட்டை விளக்கும் வரை திருமுழுக்கு அளிக்கக்கூடாது. மேலும், முந்திய திருமுழுக்கின் செல்லத்தக்கநிலை பற்றி ஐயப்படுவதற்கான காரணங்களை அந்த ஆளுக்கும், ஒரு குழந்தையாக இருந்தால், அதன் பெற்றோர்களுக்கும் விளக்கவேண்டும்.

தி.ச. 870. கைவிடப்பட்ட அல்லது கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு, கவனமான ஆய்வின் மூலம் அது திருமுழுக்குப் பெற்றமை நிலைநாட்டப்பட்டாலன்றி, திருமுழுக்கு அளிக்கவேண்டும்.

தி.ச. 871. சிதைவுற்ற கருக்கள் உயிரோடிருப்பின், இயன்றவரை திருமுழுக்கு அளிக்கவேண்டும்.

இயல் 4

ஞானப்பெற்றோர்.

தி.ச. 872. திருமுழுக்கு அளிக்க வேண்டியவருக்கு, இயன்றவரை, ஒரு ஞானப்பெற்றோரைக் கொடுக்கவேண்டும். இவர் வயது வந்தவரின் திருமுழுக்கில் கிறிஸ்தவப் புகுமுக நிலையில் அவருக்குத் துணைபுரிவார், குழந்தையை அதன் பெற்றோருடன் திருமுழுக்கிற்குக் கையளிப்பார், திருமுழுக்குப் பெற்றவர் திருமுழுக்கிற்கேற்பக் கிறிஸ்தவ வாழ்வு நடத்தவும், திருமுழுக்கில் ஊன்றியுள்ள கடமைகளை உண்மையுடன் நிறைவேற்றவும் உதவி செய்வார்.

தி.ச. 873. ஞானப்பெற்றோர் ஒருவர் மட்டும், ஆண் அல்லது பெண் இருக்கலாம், அல்லது ஒவ்வொரு பாலினத்திலும் ஒருவர் இருக்கலாம்.

தி.ச. 874. 1) ஞானப்பெற்றோர் பணியை மேற்கொள்வதற்கு ஒருவர்:

1) திருமுழுக்குப் பெறவேண்டியவா அல்லது அவரின் பெற்றோர் அல்லது அவர்களின் இடத்தில் இருப்பவர், அல்லது, அவர்கள் இல்லாதிருப்பின், பங்குக்குரு அல்லது பணியாளரால் நியமிக்கப்பட்டிருக்கவேண்டும், இப்பணிக்குத் தகுதியுடையவராகவும் அதை நிறைவேற்றும் எண்ணம் கொண்டவராகவும் இருக்கவேண்டும்.

2) மறைமாவட்ட ஆயர் வேறொரு வயதை நிர்ணயித்திருந்தாலோ அல்லது பங்குக்குருவுக்கோ அல்லது பணியாளருக்கோ நியாயமான ஒரு காரணத்திற்காக விதிவிலக்கு அளிக்கவேண்டுமென்று தோன்றினாலோ அன்றி பதினாறு வயது நிரம்பியவராக இருக்கவேண்டும்.

3) கத்தோலிக்கராகவும், உறுதிப்பூசுதல் பெற்று ஏற்கெனவே புனிதமிகு நற்கருணை அருளடையாளத்தைப் பெற்றவராகவும், விசுவாசத்திற்கும் தாம் மேற்கொள்ளவிருக்கும் பணிக்கும் ஏற்ற வாழ்வு நடத்துபவராகவும் இருக்கவேண்டும்.

4) சட்டமுறைப்படி விதிக்கப்பட்ட அல்லது அறிக்கையிடப்பட்ட எவ்விதத் திருச்சபைத் தண்டனைக்கும் உட்பட்டவராக இருக்கக்கூடாது.

5) திருமுழுக்குப் பெறவேண்டியவரின் தந்தையாகவோ தாயாகவோ இருக்கக்கூடாது.

2) கத்தோலிக்கமல்லாத ஒரு திருச்சபைச் சமூகத்தில் திருமுழுக்குப் பெற்ற ஒருவர், ஒரு கத்தோலிக்க ஞனப் பெற்றோருடன் சேர்ந்து மட்டுமே, அதுவும் ஒரு சாட்சியாக மட்டுமே அனுமதிக்கப்படலாம்.

இயல் 5

அளிக்கப்பட்ட திருமுழுக்கின் சான்றும் பதிவும்.

தி.ச.875. திருமுழுக்கு அளிப்பவர், ஞானப்பெற்றோர் ஒருவர் இருந்தாலன்றி, திருமுழுக்கு அளித்ததை எண்பிக்கக்கூடிய குறைந்த அளவு ஒரு சாட்சியாவது இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

தி.ச.876. திருமுழுக்கு அளித்ததை எண்பிக்க, வேறு எவருக்கும் பாதிப்பு இல்லையெனில், ஐயத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சாட்சியின் அறிக்கை அல்லது வயதுவந்த ஒருவர் திருமுழுக்குப் பெற்றிருந்தால், அவரின் சத்திய வாக்குமூலம் போதுமானது.

தி.ச.877. திருமுழுக்கைக் கொண்டாடிய இடத்தின் பங்குக்குரு, திருமுழுக்குப் பெற்றவர்களின் பெயர்கள், பணியாளர், பெற்றோர், ஞானப்பெற்றோர், சாட்சிகள் இருப்பின் அவர்கள், திருமுழுக்கு அளித்த இடம், நாள் ஆகியவற்றை, பிறந்தநாள் மற்றும் இடத்தைக் குறிப்பிட்டுத் திருமுழுக்குப் பதிவேட்டில் கவனத்துடனும் காலதாமதமின்றியும் பதிவு செய்யவேண்டும்.

2) திருமணமாத ஒரு தாயின் குழந்தையாக இருந்தால், தாயின் பெயரை, அவரின் தாய்மை வெளிப்படையாகத் தெரிந்திருந்தால் அல்லது அவர் தாமாகவோ, எழுத்து மூலமாகவோ இரண்டு சாட்சிகளின் முன்னிலையிலோ அதைக் கேட்டுக் கொண்டால், பதிவு செய்யவேண்டும், அவ்வாறே தந்தையின் பெயரை, அவரது தந்தைமை ஏதாவதொரு பொது ஆவணத்தின் மூலம் அல்லது பங்குக்குரு மற்றும் இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் அவரின் சொந்த அறிக்கை மூலம் எண்பிக்கப்பட்டிருந்தால், பதிவு செய்யவேண்டும், மற்ற சூழ்நிலைகளில், திருமுழுக்குப் பெற்றவரின் பெயரை, தந்தை அல்லது பெற்றோரின் பெயரைப் பற்றிய எவ்விதக் குறிப்புமின்றிப் பதிவு செய்யவேண்டும்.

3) தத்தெடுக்கப்பட்ட ஒரு குழந்தையாக இருந்தால், தத்தெடுக்கும் பெற்றோரின் பெயர்களைப் பதிவு செய்யவேண்டும், மேலும், இயல்பான பெற்றோரின் பெயர்களை, குறைந்த அளவு அப்பகுதிக் குடியுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டால், ஆயர் பேரவையின் விதியமைப்புகளைக் கருத்திற்கொண்டு, 1 மற்றும் 2 ன் விதிமுறைக்கேற்ப, பதிவு செய்யவேண்டும்.

தி.ச.878. பங்குக்குருவோ அவரது முன்னிலையிலோ திருமுழுக்கு அளிக்கப்படவில்லையென்றால், திருமுழுக்குப் பணியாளர்- அவர் யாராக இருந்தாலும்- திருமுழுக்கு அளிக்கப்பட்ட பங்கின் பங்குக்குருவுக்கு அளிக்கப்பட்ட திருமுழுக்கைப் பற்றித் தெரிவிக்கவேண்டும். அவர் தி.ச. 877, 1 ன் விதிமுறைக்கேற்பத் திருமுழுக்கைப் பதிவு செய்யவேண்டும்.