ஆண்டின் பொதுக்காலம்
2ஆம் வாரம்

வாழவைக்கும் இறைவன் வாழவைப்பார்.

ஒளிப்படம் 01:
ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் வாரத்தில் ஞாயிறு திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் இறை அன்பின் சொந்தங்கள் அனைவருக்கும் என் கனிவான வாழ்த்தைக்கூறி மகிழ்கிறேன். இன்றைய வழிபாட்டில் நாம் வாசிக்கும் இறைமொழிகள் மூலமாகத் திரு அவை> இறைவன் தன் இலக்குமக்களாயிருப்பவர்களுக்கு சிறப்பான நல்ல முன்னேற்பாடுகளைச் செய்து அவரில் நம்பிக்கைகொண்டு பற்றுறுதியுடன் இருப்பவர்கள் வாழ்வடைய தாழ்நிலை அகன்று> நம்பிக்கையிலும்> எதிர்நோக்கிலும்> இறை அன்பிலும்> பிறர் அன்பிலும் சிறந்து விளங்குவதன் பலனைப் பட்டுணர்ந்து வாழச்செய்கிறார்.

 

ஒளிப்படம் 02:
வாழ்வில் தாழ்நிலையில் இருப்பவர்களும்> ஒடுக்கப்பட்டவர்களும் இத்தகைய அன்புள்ளம் கொண்ட இறைவனின் பரிவுள்ளத்தாலும்> மீட்புச்செயலாலும் வாழவைக்கப்படுகின்றனர். இந்த மேலான உண்மைகளை உணர்வுகளாக்கி அதன்வழி செயல்படத்தூண்டும் இன்றைய திருப்பலி வழிபாட்டில் பொருளுள்ள விதமாகப் பங்குகொண்டு இறையருள் பெறுவோம்.

ஒளிப்படம் 03:
"மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்". இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து  முதல் வாசகம் அதிகாரம் 62 : இறைத்திருமொழிகள் 1 முதல் 5 வரை

ஒளிப்படம் 04:
பதிலுரைப்பாடல் பல்லவி - அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்

ஒளிப்படம் 05:
தூய ஆவியார் தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் கொடைகளைப் பகிர்ந்தளிக்கிறார். திருத்தூதர் தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து 2 ஆம் வாசகம் அதிகாரம் 12: இறைத்திருமொழிகள் 4 முதல் 11 வரை.

ஒளிப்படம் 06:
வாழ்த்தொலி : - நம் ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும்பொருட்டே>  நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார்.

ஒளிப்படம் 07:
கானாவில் இயேசு செய்த முதல் அரும் அடையாளத்தில் தம் மாட்சியை வெளிப்படுத்தினார்.  தூய யோவான் நற்செய்தி  அதிகாரம் 2: இறைத்திருமொழிகள் 1 முதல் 12 வரை.

ஒளிப்படம் 08:
இறைமகன் இயேசுவில் அன்புள்ளம் கொண்டுள்ள இறை அன்பின் சொந்தங்கள் அனைவருக்கும் என் மகிழ்வான வாழ்த்தைக் கூறி மகழ்கிறேன். இறை நம்பிக்கை ஆண்டில் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு> அவருடைய அருட் கொடைகளை பற்றுறுதியுடன்  எதிர்நோக்கி> அவரில் முழு அன்பையும் வைத்தவர்களாயிருக்கும் மக்கள் நன்மையையே நிறைவாக இறைவனிடமிருந்து பெறுபவர்களாக இருப்பர். காரணம் - ஆண்டவர் தாமே அவர்களைத் தூக்கிவிடுவார்.ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் உயரம் தாண்டும் வீராங்கனை நேர்மையான முயற்சிகளோடு இந்த உயரத்தைத் தன்னால் தாண்டமுடியும் என்னும் ஆழமான நம்பிக்கை கொண்டால்தான் தன் இலக்கைத் தாண்ட  முயல்கையில் ஆண்டவர் அவர் விருப்பை நிறைவேற்றச் செய்வார். அவர்களைத் தன் கரத்தில் கொண்டுள்ளார் அவரைத் தூக்கிவிடுவார்.

ஒளிப்படம் 09:
ஆண்டவரின் மாண்புறு செயல்களில் நாங்கள் பங்கேற்பு செய்துள்ளோம் என உணர்பவர்கள் அவரது வியத்தகு செயல்களை மகிழ்வுடன் நன்றிப்பெருக்கோடு "எங்கள் இறைவனாகிய ஆண்டவர் எங்கள் பொருட்டு வியத்தகு செயல்களைச் செய்துள்ளார் எனத் தங்கள் இறைப்ப பட்டறிவை அறிக்கையிடுங்கள்" எனத் திருப்பாடலாசிரியர் நமக்குச் சொல்லித்தருகிறார்.

ஒளிப்படம் 10:
நமது கண்களைச் சற்றே உயர்த்தி நம்மைச்; சுற்றியிருப்பவற்றையும் அவைகளின் செயல்பாடுகளையும் கொஞ்சம் கூர்ந்து நோக்குவோமெனில்> படைப்பின் மேன்மையையும்> அவற்றின் சிறப்புக்கூறுகளையும் கூரைமீதிருந்து அறிவிக்குமளவு அவை மாண்புள்ளவையாயிருப்பதைக் கண்டுணரலாம்.

ஒளிப்படம் 11:
இயேசுவின் பணித் தொடக்க காலத்தில் தனது இலக்கு மக்களுக்கு காலங்காலமாக நடந்துவந்த தீமையான நடைமுறை ஒன்றைத் தோலுரித்து மாற்று வழிகாண்பித்து மாண்புற்றதைக் காண்கிறோம். அது நடைபெற்ற இடம் கானாவூர். அங்கு திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவும் அவரது தாயும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்;. அந்தத் திருமண வீட்டாருக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அக்குறையை இயேசுவின் தாய் மரியா அறிந்து தன் மகனிடம் பரிந்துரைத்தார்.  

ஒளிப்படம் 12:
தன் பணிநாட்கள் தொடங்காத நிலையில்> தன் தாய் மரியாவின் பரிந்துரையாலும்> தன் இலக்குமக்களுக்குச் செய்ய வேண்டிய சிறப்புப்பணித் தேவையை முன்னிட்டும் தன் முதல் அருள்வழங்கும் பணியைத் தொடங்கினார். தண்ணீரால் நிரப்பப்பட்ட ஆறு  கற்சாடிகள் நல்ல கொடிமுந்திரிச் சாறுகளாயின. (அதாவது நல்ல திராட்சை இரசங்களாயின).

ஒளிப்படம் 13:
விருந்துகளில் முதலிடம் பெற முடியாத வலிமையற்றோர்> ஏழ்மை நிலையிலிருந்தோர் சிறப்பான உணவு பெற முடியாதவர்கள் என்ற மரபு> அதுநாள்வரை நடைமுறையாக இருந்தது. அத்தகையவர்கள் மகிழக்கூடிய வகையில் திருமகன் இயேசு நிகழ்த்திய இந்த அரும் அடையாளம் இயேசுவின் மாட்சியை வெளிப்படுத்தியது.

ஒளிப்படம் 14:
ஆண்டவர் தன் மக்களுக்கு பல விதக் கொடைகளைக் குறையில்லாது வழங்கியிருக்கிறார். அவை: 1) ஞானம்> 2) மெய்யுணர்வு> 3) அறிவுத்திறன்> 4) நுண்மதி> 5) ஆற்றல்> 6) இறைப்பற்று 7) இறையச்சம் அத்துடன் கலாத்தியர் 5:22>23 இல்  நாம்காண்பதன்படி 1)அன்பு> 2) மகிழ்ச்சி> 3) அமைதி> 4) பொறுமை> 5) பரிவு> 6) நன்னயம்> 7) நம்பிக்கை>  8)கனிவு> 9) தன்னடக்கம்> ஆகிய ஆவியின் கனிகளையும் நாம் பெற்றுள்ளோம்.

ஒளிப்படம் 15:
இவ்வாறு ஆவியின் கொடைகளையும் கனிகளையும் நாம் நிறைவாகப் பெற்றிருப்பது நம் நம் தனிப்பட்ட நலனுக்காக மட்டுமன்று அவற்றைப் பொதுநலனுக்காகப் பயன்படுத்தவேண்டும்.தூய பவுல் இவ்வாறு 1 கொரிந்தியர் 12: 8 இல் கூறி  எல்லா மாந்தரும் ஒவ்வொருவிதமான கொடைகளையும் கனிகளைளும் பெற்றுள்ளனர்.இவ்வாறு பெறுபவர்கள்  மிகுதியாயிருப்பவற்றைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும்போது தான் மாந்தரிடையே சம நிலை ஏற்படும் என்கிறார்.

ஒளிப்படம் 16:
மேலும் திருத்தூதர் பவுல் 1 கொரிந்தியர் 12: 12 இல் கூறிய படி அனைவருமே இயேசுவின் மறையுடலின் உறுப்புகள். ஒவ்வொரு உறுப்பும் வேறு வேறு விதமான பணிக்குப் பொறுப்பாயிருக்கிறது.எல்லா உறுப்பும் தன் தன் பணியைச் செவ்வனே செய்யும்போதுதான் உடல் முழுவதும் சீராக இயங்கும். உடல் முழுவதும் கண்ணாயிருந்தால் நடப்பது எப்படி?  உண்பது எப்படி? முழு உடல் நலனுக்காக பற்பல பணித்திறனுள்ள உடலுறுப்புகள் ஒவ்வொன்றும் உடலுக்குத் தேவையானவை. அதுபோலவே பற்பல திறமைகளும் ஆற்றல்களும் உள்ள மானிடர்கள் மானுட ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்குத் தேவையானவர்கள்.

 

ஒளிப்படம் 17:
ஏழைகளும் பாமரர்களும் உண்ணவேண்டியதை வசதியும் ஆற்றலும் உள்ளவர்கள் உண்டுவிட்டதால் உணவிழந்து நின்ற ஏழையர் உணவுபெறச் செய்தார் இயேசு. அது முதலில் உணவுண்ட ஆற்றல் படைத்தவர்கள் உண்ட உணவை விடவும் மிகச் சிறப்பு வாய்ந்த உணவாக இருந்தது என அறியவருகிறோம். புதிதாக வந்த உணவைச் சுவைத்துப் பார்த்த பந்தி மேற்பார்வையாளன் மணமகனை அழைத்து " நல்ல உணவை ஏன் இதுவரை பரிமாறாமல் வைத்திருந்தீர்" எனக் கேட்டர். இந்த கானாவூர் திருமண நிகழ்வில் இயேசு ஏழைகளின் சார்பாக இருப்பவர் என்றும்> ஒடுக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்டவற்றை சிறப்பான வகையில் வழங்க வல்லவராகச் செயல்படுகிறார்> என்றும் அவர் வழி வாழ்வோரை அவ்வண்ணமே செயல்பட அறிவுறுத்துகிறதையும் அறிகிறோம்.

ஒளிப்படம் 18:
இன்றைய நாளில் திருப்பலியில் நாம் கேட்ட இறைமொழிகள் வழியாக சில உறுதிமொழிகளை ஏற்று அவற்றை நம் வாழ்வாக்க முயல்வோம். அவை: -
1. இன்றுமுதல் இயன்ற வரையில் நல்ல செயல்கள் செய்தல்
2. நம் ஆற்றல்களை முழுமையாக நமக்காகப் பயன்படுத்துவதுடன் சிறப்பாகப்  பிறருக்காகவும்  பயன்படுத்துதல்
3. இறை ஆவி நம் உள்ளத்தில் தரும் தூண்டுதலை உணர்ந்து நிறைவேற்றுதல்
4. தாய் கன்னிமரியா அறிவுறுத்தியபடி இயேசு சொன்னதைச் செய்தல் ஆகியவற்றைச் செய்வோம்.

ஒளிப்படம் 19:
இந்த மேன்மையான நல்ல தீர்மானங்களை வாழ்வாக்க முயல்தலே மேன்மையான பலி வாழ்வாகும் என்பதனை நன்கு உணர்ந்து இன்று இத்திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்போம். ஆமென்

- பணி.லியோ ஜெயசீலன்
நாகலாபுரம் பங்கு
தூத்துக்குடி மறைமாவட்டம்


 

text