image

 

ஆண்டவருடைய பாடுகளின் வெள்ளி

சிலுவைப் பாதைகள் (2)

1. மிகப் பழமையான மரபுப் படி , திரு அவை இன்றும் நாளையும் ஒப்புரவு, 'நோயில்பூசுதல் ஆகிய அருளடையாளங்களைத் தவிர மற்ற அருளடையாளங்களை 'எச் சூழலிலும் கொண்டாடுவதில்லை.

2. இந்நாளில் ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டத்தின் போது மட்டும்தான் நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்கப்படும். இக்கொண்டாட்டத்தில் பங்குபெற இயலாது நோயாளிகளுக்கு இந்நாளின் எந்நேரத்திலும் நற்கருணை வழங்கலாம்.

3. சிலுவை, திரிகள், பீடத் துகில் ஆகிய அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் முழுவதும் வெறுமையாக இருக்கும்.

ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டம்

4. இன்று பிற்பகலில் குறிப்பாக மூன்று மணி அளவில் பாடுகளின் வழிபாடு நடைபெறும். மக்களின் அருள் பணி நலன் கருதித் தேவைக்கு ஏற்ப, இதற்குப் பிந்திய நேரத்தையும் தேர்ந்துகொள்ளலாம். ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டம் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்: இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து.

5. திருப்பலிக்கு உரிய சிவப்பு நிற உடைகள் அணிந்து அருள் பணியாளரும் திருத்தொண்டர் இருந்தால், அவரும் அமைதியுடன் பீடத்தின் முன் வந்து, பீடத்துக்கு வணக்கம் செலுத்தி, முகம் குப்புற விழுவார்கள் அல்லது பொருத்தமானால் முழங்கால் பணிந்து சிறிது நேரம் அமைதியாக மன்றாடுவார்கள்; மற்ற அனைவரும் முழங்காலில் இருப்பர்.

6. பின் அருள்பணியாளர் பணியாளர்களுடன் தமது இருக்கைக்குச் செல்கின்றார். அங்கு அருள் பணியாளர் மக்களை நோக்கி நின்று, தம் கைகளை விரித்துக் கீழுள்ள மன்றாட்டுகளுள் ஒன்றை மன்றாடு வோமாக எனும் அழைப்புச் சொல்லைத் தவிர்த்துவிட்டுச் சொல்கின்றார்:

மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகன் கிறிஸ்து தமது இரத்தத்தைச் சிந்தி, உம் அடியார்களுக்காகப் பாஸ்கா மறைநிகழ்வை ஏற்படுத்தினார்; உமது இரக்கத்தை நினைவுகூர்ந்து நிலையான பாதுகாப்பால் அவர்களைப் புனிதப்படுத்துவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஆமென்.

அல்லது

இறைவா, பழைய பாவத்தின் விளைவாக எல்லாத் தலைமுறைக்கும் தொடர்ந்த சாவை எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய கிறிஸ்துவின் பாடுகளால் அழித்தீர்; இவ்வுலக மனிதரின் சாயலை இயற்கையின் நியதியால் பெற்றுள்ளது போல நாங்கள் அவருக்கு ஏற்றவர்களாய் இருப்பதால் விண்ணகத்தின் சாயலை உமது அருளின் புனிதத்தால் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக. எங்கள்.

பதில்: ஆமென்.


முதல் பகுதி
இறைவாக்கு வழிபாடு


7. பின்னர் அனைவரும் அமர்ந்திருக்க, எசாயா இறைவாக்கினரின் நூலிலிருந்து (52:13-53:12) முதல் வாசகமும் அதற்கு உரிய திருப்பாடலும் வாசிக்கப்படும்.

8. எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து (4:14-15; 5:7-9) இரண்டாம் வாசகம் தொடரும். பிறகு நற்செய்திக்கு முன் வசனம் பாடப்படும்.

9. பிறகு முந்திய ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது போல், யோவான் எழுதியபடி ஆண்டவருடைய பாடுகளின் வரலாறு (18:1-19:42) வாசிக்கப்படும்.

புனித வெள்ளி வாசகங்கள்as

தியானப்பாடல் : திருப்பாடல் 31: 2,6 12-13, 15-16, 17, 25

பல்லவி: தந்தையே உம் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்

ஆண்டவரே உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன் 
ஒருநாளும் வெட்கம் அடைய விடாதேயும்
உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்.
உமது கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்
வாக்கு பிறழாத இறைவனாகிய ஆண்டரே
நீர் என்னை மீட்டருளினிர்

என் பகைவர் அனைவரின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்
என்னை அடுத்திருப்போரின் பேரழிவுக்கு ஆளானேன்
என் அன்பர்களுக்கு பேரச்சம் வருவித்தேன்
என்னைத் தெருவில் பார்ப்போர் என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர்
இறந்தோர் போல் நான் நினைவிலிருந்து அகற்றப்பட்டேன்
உடைந்து போன மட்கலம் போலானேன்

ஆண்டவரே நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்
நீரே என் கடவுள் என்று சொன்னேன்
என் வாழ்வின் ஒவ்வொறு கட்டமும் உமது கையில் உள்ளது
என் எதிரிகளின் கையினின்றும் என்னைத்
துன்புறுத்துவோரின் கையினின்றும்
என்னை விடுவித்தருளும்

உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்
உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்
ஆண்டவக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே
நீங்கள் அனைவரும் உள்ளத்தில்
வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள்

 

நற்செய்திக்கு முன் வசனம்: பிலிப் 2:8-9

கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு,
அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி
எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

 

10. ஆண்டவருடைய பாடுகளின் வாசகத்துக்குப் பிறகு அருள்பணியாளர் சுருக்கமாக மறையுரை ஆற்றுகின்றார். அதன் இறுதியில் சிறிது நேரம் அமைதியாக மன்றாட அருள்பணியாளர் மக்களை அழைக்கலாம்.

பொது மன்றாட்டு

11. இறைவாக்கு வழிபாடு பொது மன்றாட்டுடன் முடிவடையும். அது நடைபெறும் முறையாவது : திருத்தொண்டர் அல்லது - அவர் இல்லை எனில் - ஒரு பொது நிலைப் பணியாளர் வாசக மேடையில் நின்றுகொண்டு, பின்வரும் மன்றாட்டின் கருததை அறிவிக்கின்றார். அனைவரும் சிறிது நேரம் அமைதியாக மன்றாடுகின்றனர். பின் அருள் பணியாளர் தம் இருக்கையில் அல்லது தேவையானால் பீடத்துக்கு அருகில் நின்றுகொண்டு, தம் கைகளை விரித்து மன்றாட்டைச் சொல்கின்றார்.

இம்மன்றாட்டின் முழு நேரமும் அல்லது ஒரு பகுதியின்போது மக்கள் முழங்காலில் இருக்கலாம் அல்லது நிற்கலாம்.

12. அருள் பணியாளரின் மன்றாட்டுக்குமுன், மரபுப்படி, இறைமக்களுக்கு? திருத்தொண்டா: முழங்காலிடுவோம் - "எழுந்திருங்கள் எனும் அழைப்பு விடுக்கலாம்: எல்லாரும் முழங்காலிடும்போது சிறிது நேரம் அமைதியாக மன்றாடுகின்றனர்.

13. அருள்பணியாளரின் மன்றாட்டைத் தொடங்கத் தேவையான மற்றக் கருத்துகளை் ஆயர் பேரவைகள் வழங்கலாம்.

1. புனிதத் திரு அவைக்காக

மன்றாட்டு எளிமையான இராகத்தில் பாடப்படுகின்றது; அல்லது அழைப்புகள் "முழங்காலிடுவோம்" - "எழுந்திருங்கள்" எனச் சொல்லும்பொழுது அவை ஆடம்பரமாகப் பாடப்படும்,

அன்பு மிக்க சகோதர சகோதரிகளே, இறைவனின் புனிதத்
திரு அவைக்காக மன் றாடுவோம்:

நம் இறைவனும் ஆண்டவருமானவர்
உலகெங்கும் திரு அவைக்கு அமைதியும் ஒற்றுமையும் பாதுகாப்பும்
அளித்துக் காக்க வேண்டும் எனவும், நாம் கலக்கம் இன்றி, அ மை தியான
வாழ்வு நடத்தி எல்லாம் வல்ல இறைத் தந்தையை மாட்சிப்படுத்த
நமக்கு அருள்புரிய வேண்டும் என வும் மன் றா டுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
கிறிஸ்துவில் உமது மாட்சியை மக்கள் இனங்களுக்கெல்லாம் வெளிப்படுத்தினீர்;
உம்முடைய இரக்கத்தின் செயல்களை நீர் பாதுகாப்பதால்
உலகெங்கும் பரவியிருக்கும் திரு அவை,
உறுதியான நம்பிக்கையுடன் உமது பெயரை
அறிக்கையிடுவதில் நிலைத்திருக்கச் செய்வீராக. எங் கள்.

பதில்: ஆமென்.


II. திருத்தந்தைக்காக

நம் புனிதத் திருத்தந்தை பெயர்) .... க்காக மன்றாடுவோம்: தலைமை ஆயர்
நிலைக்கு அவரைத் தேர்ந்தெடுத்த நம் இறைவனும் ஆண்டவருமானவர்
எவ்வகைத் தீங்கும் இன்றி அவரைப் பேணிக்காப்பாராக. அதனால் அவர்
இறைவனின் புனித மக்களை வழிநடத்தித் தம்முடைய புனிதத் திரு அவையை
வளம் பெறச் செய்ய வேண்டும் எ ன மன் றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
உமது திட்டப்படியே அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளன;
அதனால் உமது அதிகாரத்தால் ஆளப்படும்
கிறிஸ்தவ மக்களாகிய எங்கள் வேண்டலைப் பரிவிரக்கத்துடன் கண்ணோக்கியருளும்:
திருத்தந்தையின் தலைமையின்கீழ் நாங்கள் நம்பிக்கையில் வளரும்படி
அவரைப் பரிவுடன் காத்தருள்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

III. திருநிலைப் பணியாளர்கள், நம்பிக்கையாளருள் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் ஆகிய அனைவருக்காக

நம் ஆயர்(பெயர்)*... க்காகவும், திரு அவையில் உள்ள எல்லா ஆயர்கள்,
* உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை எண் 149-இல் குறிப்பிட்டுள்ளவாறு இணையுதவி ஆயா அல்லது துணை ஆயரின் பெயர்களையும் இங்குச் சொல்லலாம்
அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், நம்பிக்கையாளர் ஆகிய
அனைவருக்காகவும் மன்றாடுவோமாக:

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய ஆவியாரால் திரு அவை முழுவதும் அர்ச்சிக்கப்பெற்று, ஆளப்படுகின்றது; உம்முடைய திருநிலைப் பணியாளர்கள் அனைவருக்காகவும் நாங்கள் செய்யும் வேண்டலைக் கேட்டருளும்: அதனால் எல்லா நிலையினரும் உமது அருள்கொடையால் உமக்கு உண்மையுடன் ஊழியம் புரிவார்களாக. எங்கள்.

பதில்: ஆமென்.

IV. கிறிஸ்தவப் புகுமுக நிலையினருக்காக

கிறிஸ்தவப் புகுமுகநிலையினருக்காகவும் மன்றாடுவோம்: அதனால்
நம் இறைவனும் ஆண்டவருமானவர் தமது இரக்கத்தைப் பொழிந்து
அவர்களுடைய இதயங்களின் செவிகளைத் திறந்து விடுவாராக;
இவ்வாறு அவர்கள், புதுப் பிறப்பு அளிக்கும் திருமுழுக்கினால், தங்கள்
பாவங்களுக்கெல்லாம் மன்னிப்பு அடைந்து, நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவோடு ஒன்றிணைய வேண்டும் என மன்றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
புதிய மக்களைச் சேர்த்துத் திரு அவை என்றும் வளம் பெறச் செய்கின்றீர்;
கிறிஸ்தவப் புகுமுகநிலையினரிடம் நம்பிக்கையும் அறிவும் வளரச் செய்தருளும்:
அதனால் அவர்கள் திருமுழுக்குத் தண்ணீரால் புதுப் பிறப்பு அடைந்து,
தேர்ந்துகொள்ளப்பட்ட உம்முடைய மக்களின்
திருக்கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்களாக. எங்கள்.

பதில்: ஆமென்.

V கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக

கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டுள்ள நம் சகோதரர் சகோதரிகள்
அனைவருக்காகவும் மன்றாடுவோம்: நம் இறைவனும் ஆண்டவருமானவர்
அவர்களை உண்மையின் பாதையில் வழிநடத்தித் தமது ஒரே திரு அவையில்
கூட்டிச் சேர்த்துக் காத்தருள வேண்டும் என மன்றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
சிதறுண்டவர்களை ஒன்றுசேர்ப்பவரும்
ஒருங்கிணைந்தவற்றைப் பேணிக் காப்பவரும் நீரே;
உம் திருமகனின் மந்தையைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்:
இவ்வாறு ஒரே திருமுழுக்கினால் தூய்மைப்படுத்திய அவர்களை
நம்பிக்கையின் முழுமையால் இணைத்து,
அன்பின் பிணைப்பால் ஒன்றுசேர்ப்பீராக. எங்கள். பதில்: ஆமென்.

VI. யூத மக்களுக்காக

யூத மக்களுக்காகவும் மன்றாடுவோம்: முற்காலத்தில் அவர்களோடு
பேசிய நம் இறைவனாகிய ஆண்டவர், த ம து பெயரின் மீதுள்ள
அன்பிலும் தமது உடன்படிக்கைமீதுள்ள நம்பிக்கையிலும் அவர்களை
வளர்ச்சி அடையச் செய்தருள வேண்டும் என மன்றாடுவோம்"

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
ஆபிரகாமுக்கும் அவர்தம் வழிமரபினருக்கும்
நீர் உம் வாக்குறுதிகளை வழங்கியுள்ளீர்;
அதனால் முதன்முதலாக நீர் தேர்ந்து கொண்ட இம்மக்கள்
உமது மீட்பின் நிறைவைப் பெற்றுக்கொள்ள
உமது திரு அவையின் வேண்டலுக்குக் கனிவாய்ச் செவிசாய்ப்பீராக. எங்கள்,

பதில்: ஆமென்.

VII. கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளாதவர்களுக்காக

கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளாதவர்களுக்காகவும் மன்றாடுவோம்:
தூய ஆவியாரின் ஒளியைப் பெற்று,
அவர்களும் மீட்புப் பாதைக்கு வந்துசேர வேண்டும் என மன்றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத மக்கள்
உம் திருமுன் நேர்மையான இதயத்தோடு நடந்து,
உண்மையைக் கண்டடைவார்களாக.
நாங்களும் ஒருவர் மற்றவர் மீது எப்போதும் அன்பு கொள்வதாலும்
உமது வாழ்வின் மறையுண்மையை
மேன்மேலும் புரிந்து கொள்வதில் ஆவல் கொள்வதாலும்
உமது அன்பை இவ்வுலகில் மிகத் தெளிவாகக் காட்டும்
சாட்சிகளாய் விளங்கச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

VIII. கடவுளை நம்பாதவர்களுக்காக

கடவுளைக் கண்டறிய முடியாது என்பவர்களுக்காகவும் மன்றாடுவோம்.
அவர்கள் நேர்மையான இதயத்தோடு நன்னெறியில் வாழ்ந்து,
கடவுளைக் கண்டடையுமாறு மன் றா டு வோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
மனிதர் அனைவரும் எப்போதும் உம்மையே விரும்பித் தேடவும்,
உம்மைக் கண்டடைவதால் அமைதி பெறவுமே நீர் அவர்களைப் படைத்தீர்;
அதனால் இவ்வுலகில் ஏற்படும் எல்லாவிதத்
தீங்கு விளைவிக்கும் இடையூறுகளுக்கு நடுவிலும்
அவர்கள் அனைவரும் உமது பரிவிரக்கத்தின் அறிகுறிகளையும்,
உம்மை நம்புவோர் ஆற்றும் நற்செயல்களின் சான்றுகளையும் கண்டுணர்வார்களாக;
இவ்வாறு உம்மையே தங்களின் ஒரே மெய்யான கடவுள் எனவும்
மக்களின் தந்தை எனவும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளச் செய்வீராக.

எங்கள். பதில்: ஆமென்.

IX. நாடுகளை ஆள்வோருக்காக

நாடுகளை ஆளும் அனைவருக்காகவும் மன்றாடுவோம்: நம் இறைவனும்
ஆண்டவருமானவர் தமது திருவுளப்படி உண்மையான அமைதியும்
உரி மை வாழ்வும் அவர்கள் பெறும்பொருட்டு, அவர்களுடைய மனங்களையும்
இதயங்களையும் வழிநடத்த வேண்டும் என மன் றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
மனிதரின் இதயங்களும் அவர்களின் உரிமைகளும் உம் கையில் உள்ளன;
உலகெங்கும் மக்களின் வளமான வாழ்வும் அமைதியின் உறுதிப்பாடும்
சமய உரிமையும் உமது கொடையால் நிலைபெறுமாறு
எங்களை ஆள்வோரைக் கனிவுடன் கண்ணோக்குவீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

X. துன்புறுவோருக்காக

அன்பு மிக்க சகோதர சகோதரிகளே,

துன்புறும் அனைவருக்காகவும் எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளிடம் மன்றாடுவோம்:
தவறுகள் அனைத்திலிருந்தும் உலகைத் தூய்மைப்படுத்தவும் பிணிகள் நீங்கி,
பஞ்சம் ஒழியவும், சிறைகள் திறக்கப்பட்டுத் தளைகள் தகர்க்கப்படவும்,
வழிப்போக்கர் பாதுகாப்புப் பெறவும், ப ய ணம் செய்வோர் நலமாக வீடு திரும்பவும்,
நோயுற்றோர் நலம் பெறவும், இறக்கின்றவர்கள்
மீட்புப் பெறவும் வேண்டும் எ ன மன் றாடுவோமாக.

அமைதியான மன்றாட்டு. பின்பு அருள்பணியாளர் சொல்கின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
துயருறுவோருக்கு ஆறுதலும், வருந்துவோருக்குத் திடனும் நீரே;
எத்தகைய துன்ப வேளையிலும் உம்மை நோக்கிக் கூவி அழைப்போரின் வேண்டல்கள்
உம் திருமுன் வருவனவாக: அதனால் தங்கள் தேவைகளில்
நீர் இரக்கத்துடன் துணைபுரிவதைக் கண்டு அவர்கள் எல்லாரும் மகிழ்வார்களாக. எங்கள்.

பதில்: ஆமென்.

இரண்டாம் பகுதி திருச்சிலுவை ஆராதனை

14. பொது மன்றாட்டு முடிந்தபின், திருச்சிலுவைச் சிறப்பு ஆராதனை நடைபெறும். திருச்சிலுவையைக் காட்ட இரு வகைகள் தரப்பட்டுள்ளன. இவற்றுள் பொருத்தமான ஒன்றை, மக்களின் அருள் பணி நலனுக்கு ஏற்றவாறு தேர்ந்து கொள்ளலாம்.

திருச்சிலுவையை உயர்த்திக் காட்டுதல்

முதல் வகை

15. பணியாளர்களோடு அல்லது தகுதியான மற்றொரு பணியாளரோடு திருத்தொண்டர் திருப்பொருள் அறைக்குச் செல்கின்றார். அங்கிருந்து எரியும் திரிகள் ஏந்திய இரு பணியாளர்களோடு அவர் ஊதா நிறத் துகிலால் மூடப்பட்ட சிலுவையை ஏந்தி, கோவில் வழியாகத் திருப்பீட முற்றத்தின் நடுப்பகுதிக்குப் பவனியாக வருகின்றார்.

பீடத்தின் முன் மக்களை நோக்கி நிற்கும் அருள்பணியாளர் சிலுவையைப் பெற்றுக்கொள்கின்றார். அதன் உச்சியிலிருந்து துகிலைச் சிறிது அகற்றி, அதை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, "திருச்சிலுவை மரம் இதோ எனும் பாடலைத் தொடங்குகின்றார். பின்வரும் சொற்களைத் திருத்தொண்டர் அல்லது தேவையானால் பாடகர் குழு அவருடன் பாடுகின்றார்கள். மக்கள் எல்லாரும், "வருவீர் ஆராதிப்போம் எனப் பதிலுரைக்கின்றார்கள். பாடல் முடிந்ததும் அருள்பணியாளர் சிலுவையைச் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு நிற்க, அனைவரும் முழங்காலிட்டுப் பணிந்து, சிறிது நேரம் அமைதியாக வணங்குகின்றார்கள்.

திருச்சிலுவை மரம் இதோ! இதிலேதான் தொங்கியது உலகத்தின் மீட்பு.

பதில்: வருவீர் ஆராதிப்போம்.

பின் அருள்பணியாளர் சிலுவையின் வலக் கையில் உள்ள துகிலை அகற்றி, மீண்டும் " -யாத்திப் பிடித்துக்கொண்டு, "திருச்சிலுவை மரம் இதோ" எனப் பாடுகின்றார். மற்ற அனைத்தும் முன்பு போல நடைபெறும்.

இறுதியாக, அருள்பணியாளர் சிலுவையின் துகிலை முற்றிலும் அகற்றிவிட்டு, சிலுவையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, "திருச்சிலுவை மரம் இதோ" என மூன்றாம் (முறை பாடுகின்றார். மற்றவை முன்பு போல நடைபெறும்.

மற்றொரு வகை

16. பணியாளர்களோடு அல்லது தகுதியான பணியாளர் ஒருவரோடு அருள்பணியாளரோ திருத்தொண்டரோ கோவிலின் தலைவாயிலுக்குச் செல்கின்றார். அங்கே மூடப்படாத சிலுவையைப் பெற்றுக்கொள்கின்றார். பணியாளர்கள் எரியும் திரிகளைப் பிடித்துக் கொள்கின்றனர். அங்கிருந்து பவனி கோவில் வழியாகப் பீடத்துக்கு வருகின்றது. வாயில் அருகே, கோவிலின் நடுவில், திருப்பீட முற்றத்துக்குமுன் ஆகிய மூன்று இடங் களில் சிலுவை தாங்குவோர் நின்று சிலுவையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, "திருச்சிலுவை மரம் இதோ" எனப் பாட, இதற்குப் பதிலுரையாக எல்லாரும், "வருவீர் ஆராதிப்போம்" எனப் பாடுகின்றனர். முன்பு கூறியபடி ஒவ்வொரு பதிலுரைக்குப் பின்னும் எல்லாரும் முழங்காலிட்டுப் பணிந்து, சிறிது நேரம் அமைதியாக வணங்குகின்றனர்.

திருச்சிலுவை ஆராதனை

17. பின்பு, எரியும் திரிகள் தாங்கிய இரு பணியாளர்களோடு கூடிவர, அருள்பணியாளர் அல்லது திருத்தொண்டர் சிலுவையைத் திருப்பீட முற்றத்தின் வாயிலுக்கு அல்லது வேறு வசதியான இடத்துக்குக் கொண்டு செல்கின்றார். அதை அங்கே கிடத்துகின்றார் அல்லது பணியாளர்கள் பிடித்துக்கொள்ளக் கொடுக்கின்றார். சிலுவையின் இரு புறமும் திரிகள் வைக்கப்படும்.

18. சூழ்நிலைக்கு ஏற்றவாறு திருப்பலி உடையையும் காலணிகளையும் கழற்றிவிட்டு, தலைமை ஏற்கும் அருள்பணியாளர் மட்டும் சிலுவைக்கு ஆராதனை செலுத்த முதலில் வருகின்றார். பின் திருப்பணியாளர், பொதுநிலைப் பணியாளர்கள், நம்பிக்கையாளர் ஆகியோர் பவனியாக வந்து சிலுவைக்கு ஆராதனை செலுத்திச் செல்கின்றனர். முழங்காலிட்டுப் பணிநதோ, இடத்துக்கு ஏற்ப வேறு வகையிலோ - எ.கா.: சிலுவையை முத்தி செய்தல்.

19. ஒரே ஒரு சிலுவைதான் ஆராதனைக்கு வைக்கப்படும். பெருங்கூட்டத்தின் காரணமாக ஒவ்வொருவரும் தனித்தனியே ஆராதனை செலுத்த முடியாதெனில், திருப்பணியாளர்களும் நம்பிக்கையாளர்களுள் ஒரு சிலரும் ஆராதனை செய்தபின் அருள்பணியாளர் சிலுவையை எடுத்துப் பீடத்தின் முன்பாக நடுவில் நின்றுகொண்டு, சில வார்த்தைகள் சொல்ல அனைவரையும் ஆராதனை செய்ய அழைக்கின்றார். அவர் சிலுவையைச் சிறிது நேரம் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்க, எல்லாரும் அமைதியாக ஆராதனை செலுத்துகின்றன''

20. திருச்சிலுவை ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, "ஆண்டவரே! யாம்", எனும் பல்லவி, முறைப்பாடுகள், "நம்பிக்கை தரும் சிலுவையே" எனும் பாடல் அல்லது வேறு பொருத்தமான பாடல்கள் பாடப்படும். அப்போது ஆராதனை செலுத்தி முடித்தவர்கள் எல்லாரும் அமர்ந்திருப்பர்.


திருச்சிலுவை வழிபாட்டின்போது பாடல்கள்

1, 2: முன்மொழி
ஆண்டவரே, யாம் உமது திருச்சிலுவையினை வணங்குகின்றோம்; உமது புனித உயிர்ப்பையும் புகழ்கின்றோம், மாட்சிப்படுத்துகின்றோம்; ஏனெனில் ஆண்டவரே, இம்மரத்தின் வழியாக இவ்வுலகம் அனைத்துக்கும் மகிழ்ச்சி வந்ததே!

காண். திபா 66:2
கடவுள் நம்மீது இரங்குவாராக! நமக்கு ஆசி வழங்குவாராக!
அவரது முகம் நம்மீது ஒளி வீசுவதாக நம்மீது இரங்குவதாக

1, 2: முன்மொழி மீண்டும் பாடப்படும்: ஆண்டவரே, யாம்.

முறைப்பாடுகள்

பாடகர் குழுவின் ஒரு பகுதியினர் பாடவேண்டியதை 1 எனவும், மற்றொரு பகுதியினர் பாடவேண்டியதை 2 எனவும், இரு பகுதியினரும் சேர்ந்து பாடவேண்டியதை 1, 2 எனவும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. சில வாக்கியங்கள் இரு பாடகர்களாலும் பாடப்படலாம்.

1,2: என் மக்கள் இனமே, நான் உனக்கு என்ன செய்தேன், சொல்;
எதிலே உனக்குத் துயர் தந்தேன்?
எனக்குப் பதில் நீ கூறிடுவாய்.

1: எகிப்து நாட்டிலிருந்து உன்னை மீட்டுக்கொண்டு வந்தேனே;
அதனாலோ உன் மீட்பருக்குச் சிலுவை மரத்தை நீ தயாரித்தாய்.

1: Hagios 0 Theos (ஹாகியோஸ் ஒ தேயோஸ்).

2: தூயவரான இறைவா.

1: Hagios 0 Ischyros (ஹாகியோஸ் ஒ இஸ்க்கிரோஸ்).

2: தூயவரான வல்லவரே.

1: Hagios Athanatos, eleison himals (ஹாகியோஸ் அத்தானத்தோஸ், எலய்ஸோன் ஹிமாஸ்).

2: சாவைக் கடந்த தூயவரே, எங்கள் மீது இரங்குவீர்.

1,2: நாற்பது ஆண்டுகள் நான் உன்னைப் பாலைநிலத்தில் வழிநடத்தி
உனக்கு மன்னா உணவூட்டி வளமிகு நாட்டினுள் கொண்டுவந்தேனே:
அதனாலோ உன் மீட்பருக்குச் சிலுவை மரத்தை நீ தயாரித்தாய்.

1: Hagios 0 Theos (ஹாகியோஸ் ஓ தேயோஸ்).

2: தூயவரான இறைவா.

1: Hagios 0 Ischyros (ஹாகியோஸ் ஒ இஸ்க்கிரோஸ்).

2: தூயவரான வல்லவரே.

1: Hagios Athanatos, eleison himas (ஹாகியோஸ் அத்தானத்தோஸ், எலய்ஸோன் ஹிமாஸ்).

2: சாவைக் கடந்த தூயவரே, எங்கள் மீது இரங்குவீர்.
இதற்குமேல் நான் உனக்கு என்ன செய்திருக்க வேண்டும்?
எதனைச் செய்யத் தவறிவிட்டேன்?
நான் தேர்ந்தெடுத்த அழகுமிகு திராட்சைச் செடியாக நட்டேனே:
எனக்கு நீ மிகக் கசப்பாய்த் திகழ்ந்தாயே;
தாகம் தீர்க்க நீ எனக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தாயே;
உன்றன் மீட்பர் விலாவினை நீ ஈட்டிகொண்டு துளைத்தாயே!

1: Higios 0 Theos (ஹாகியோஸ் ஒ தேயோஸ்).

2: தூயவரான இறைவா.

1: Hagios 0 Ischyros (ஹாகியோஸ் ஒ இஸ்க்கிரோஸ்).

2: தூயவரான வல்லவரே.

1: Hagios Athanatos, eleison himas (ஹாகியோஸ் அத்தானத்தோஸ், எலய்ஸோன் ஹிமாஸ்).

2: சாவைக் கடந்த தூயவரே, எங்கள் மீது இரங்குவீர்.

பாடகர்கள்
உன்னை முன்னிட்டு நான் எகிப்தை அதன் தலைச்சன் பிள்ளைகளோடு சாட்டையால் அடித்தேனே;
நீயோ என்னைச் சாட்டையால் வதைக்கக் கையளித்தாய்.

1,2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே, நான் உனக்கு என்ன செய்தேன், சொல்;
எதிலே உனக்குத் துயர் தந்தேன்? எனக்குப் பதில் நீ கூறிடுவாய்.

பாடகர்கள்
பாரவோனைச் செங்கடலில் ஆழ்த்தி, எகிப்தினின்று உன்னை விடுவித்தேன்;
நீயோ என்னைத் தலைமைக் குருக்களிடத்தில் கையளித்தாய்!

1, 2: மீண்டும் பாடுவர்:

என் மக்கள் இனமே.

பாடகர்கள்:
நானே உனக்கு முன்பாகக் கடலைத் திறந்தேன்;
நீயோ எனது விலாவை ஓர் ஈட்டியினால் திறந்தாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடகர்கள்
மேகத் தூணில் உனக்குமுன் நான் சென்றேனே;
நீயோ பிலாத்தின் முற்றத்துக்கு என்னை இழுத்துச் சென்றாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடகர்கள்
பாலைநிலத்தில் மன்னாவால் நான் உன்னை உண்பித்தேனே;
நீயோ என் கன்னத்தில் அறைந்து என்னைச் சாட்டையால் அடித்தாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடகர்கள்
உன் தாகத்தைத் தணிக்க, நலம் தரும் நீரைப் பாறையினின்று உனக்குத் தந்தேனே;
நீயோ கசப்பும் புளிப்பும் கலந்த பானத்தை எனக்குத் தந்தாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடகர்கள்
கானான் அரசரை உனக்காக நான் அடித்து நொறுக்கினேனே;
நீயோ நாணல் தடி கொண்டு எனது தலையில் அடித்தாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடகர்கள்
அரசர்க்கு உரிய செங்கோலை உனக்கு நான் தந்தேனே;
நீயோ என் தலைக்கு முள்முடியைத் தந்தாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.

பாடகர்கள்
உன்னை மிகுந்த ஆற்றலோடு சிறந்த நிலைக்கு உயர்த்தினேனே;
நீயோ என்னைச் சிலுவையெனும் தூக்குமரத்தில் தொங்க வைத்தாயே!

1, 2: மீண்டும் பாடுவர்:
என் மக்கள் இனமே.


பாடல்

ஆணிகொண்ட உம் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன்
பாவத்தாலுமைக் கொன்றேனே ஆயனே என்னை மன்னியும்

வலது கரத்தின் காயமே அழகு நிறைந்த இரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது கரத்தின் காயமே கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

வலது பாத காயமே பலம் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது பாதக் காயமே திடம் மிகத் தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

திருவிலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

 


பாடல்

தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி

1. அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்
அனுதபித்து என் பிழையை அகற்றுமய்யா
பாவமதை நீக்கி என்னைப் பனி போலாக்கும்
தோஷமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும்

2. என் குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்
தீவினையை மறவாதென் மனது என்றும் - உம்
புனிதத்தைப் போக்கி நான் பாவியானேன் - நீர்
தீமையென்று கருதுவதைத் துணிந்து செய்தேன்

3. பாவத்தில் ஜென்மித்தேன் நீயறிவாய்
தோஷத்தில் பெற்றெடுத்தாள் என் தாயே - உம்
தீர்ப்பு தனில் குற்றமோ குறையோ இல்லை - உம்
முடிவுகளின் நீதியையும் எதிர்ப்பாரில்லை

4. உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகின்றீர் - என்
ஆத்துமத்தின் அந்தரத்தில் அறிவையூட்டும்
என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்
பனிவெண்மைக் குயர்வாகப் புனிதமாவேன்

5. வல்லவராம் பிதாவை நாம் வாழ்த்திடுவோம்
சுதனேசு கிறிஸ்துவுக்கும் தோத்திரமே - நம்
உள்ளத்தில் குடி கொள்ளும் ஆவிக்கும்
என்றென்றும் புகழ் ஒலிக்க ஆமென்

 


பாடல்

எல்: நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?
இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ!

பாடகர்கள்
மாட்சிமிக்க போரின் வெற்றி விருதை நாவே பாடுவாய்;
உலக மீட்பர் பலியாகி வென்ற வகையைக் கூறியே,
சிலுவை அடையாளத்தைப் புகழ்ந்து, வெற்றி முழக்கம் செய்திடுவாய்.

எல்: நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?

பாடகர்கள்
தீமையான கனியைத் தின்று சாவிலே விழுந்த நம்
முதல் பெற்றோரின் குற்றத் தீங்கைக் கண்டு நொந்த இறைவனார்
மரத்தால் வந்த தீங்கை நீக்க மரத்தை அன்றே குறித்தனர்.

எல்: இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ!

பாடகர்கள்
வஞ்சகன் செய் சூழ்ச்சி அனைத்தையும் சூழ்ச்சியால் மேற்கொள்ளவும்
பகைவன் செய்த கேட்டினின்று நன்மை விளையச் செய்யவும்
வேண்டுமென்று நமது மீட்பின் ஒழுங்கில் குறித்து இருந்தது.

எல்: நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?

பாடகர்கள்
எனவே புனிதக் கால நிறைவில் இறைத்தந்தை மைந்தனை
விண்ணில் நின்று அனுப்பலானார்; அன்னை கன்னி வயிற்றினில்,
உடல் எடுத்துப் பிறந்தாரே மண்ணகத்தைப் படைத்தவர்.

எல்: இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ

பாடகர்கள்
இடுக்கமான தீவனத் தொட்டியிலே கிடந்து குழந்தை அழுகின்றார்;
அவரது உடலைத் துகிலில் பொதிந்து சுற்றிவைத்துக் கன்னித்தாய்,
அவர்தம் கையும் காலும் கச்சையாலே பிணைக்கின்றார்.

எல்: நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?

பாடகர்கள்
முப்பதாண்டு முடிந்த பின்னர் உடலின் வாழ்வு நிறைவுற
மீட்பர் தாமாய் உளம் கனிந்து பாடுபடத் தம்மையளித்தார்;
சிலுவை மரத்தில் பலியாகிடவே செம்மறி உயர்த்தப்படலானார்.

எல்: இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ!

பாடகர்கள்
கசந்த காடி அருந்திச் சோர்ந்து, முட்கள், ஈட்டி, ஆணிகள்
மென்மை உடலைத் துளைத்ததாலே செந்நீர் பெருகிப் பாயவே,
விண்ணும் மண்ணும், கடலும் உலகும் அதனால் தூய்மை ஆயின.

எல்: நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?

பாடகர்கள்
வளர்ந்த மரமே, உன் கிளை தாழ்த்தி, விறைத்த உடலைத் தளர்த்துவாய்;
இயற்கை உனக்கு ஈந்த வைரம் இளகி, மென்மையாகி நீ
உயர்ந்த வானின் அரசர் உடலின் வருத்தம் தணித்துத் தாங்குவாய்.

எல்: இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ!

பாடகர்கள்
மரமே, நீயே உலகின் விலையைத் தாங்கத் தகுதியாயினை
செம்மறியின் குருதி உன்மேல் பாய்ந்து தோய்ந்ததாதலால்
புயலில் தவிக்கும் உலகிற்கெல்லாம் புகலிடம் நீ, படகும் நீ!

எல்: நம்பிக்கை தரும் சிலுவையே, நீ மரத்துள் சிறந்த மரமாவாய்;
உன்னைப் போன்று தழை, பூ, கனியை எந்தக் காவும் தந்திடுமோ?


இறுதி அடி யை ஒருபோதும் விடலாகாது:

தூய மூவொரு கடவுளுக்கு முடிவில்லா மாட்சியே!
தந்தையும் மகனும் தூய ஆவியாரும் சரிசமப் புகழ் பெறுகவே;
அவர்தம் அன்பின் அருளாலே நம்மைக் காத்து மீட்கின்றார். ஆமென்.

குறிப்பிட்ட இடம் அல்லது சிறப்பான மரபுகள் இவற்றுக்கு ஏற்ப, அருள்பணி நலனுக்குப் பொருத்தமானதாக இருந்தால் உரோமைப் படிக்கீதத்தில் காணப்படுவதுபோன்ற ""மைந்தனார் சிலுவை" (Stabat Mater) என்னும் பாடலோ புனித கன்னி மரியாவின் இரக்கத்தை நினைவுபடுத்தும் வேறு பொருத்தமான பாடலோ பாடப்படலாம்.

21. ஆராதனை முடிவுற்றபின் திருத்தொண்டர் அல்லது பணியாளர் ஒருவர் திருச் சிலுவையைப் பீடத்தில் வைக்கும் பொருட்டு எடுத்துச் செல்கின்றார். பீடத்தைச் சுற்றியோ பீடத்தின் மேலோ திருச்சிலுவை அருகிலோ எரியும் திரிகள் வைக்கப்படுகின்றன.


மூன்றாம் பகுதி திருவிருந்து

23. பீடத்தின் மீது ஒரு துகில் விரிக்கப்படுகின்றது. திருமேனித் துகிலும் திருப்பலி நூலும் வைக்கப்படுகின்றன. பின் திருத்தொண்டர் அல்லது - அவர் இல்லை எனில் - அருள்பணியாளர் தாமே தோள் துகில் அணிந்து, தூயமைமிகு நற்கருணையை அது வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து பீடத்துக்குக் குறுகிய வழியாகக் கொண்டு வருகின்றார். அப்பொழுது அனைவரும் அமைதியாக நின்றுகொண்டிருப்பர். இரு பணியாளர்கள் எரியும் திரிகளை நற்கருணையோடு கொண்டுவந்து விளக்குத் தண்டுகளைப் பீடத்தின் அருகிலோ அதன்மீதோ வைக்கின்றனர்.

திருத்தொண்டர் இருந்தால், அவர் தூய்மைமிகு நற்கருணையைப் பீடத்தின்மீது வைத்து, நற்கருணைக் கலத்தைத் திறக்கின்றார். அருள்பணியாளர் பீடத்துக்கு வந்து தாழ்ந்து பணிந்து வணங்குகின்றார்.

23. பின் அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து, தெளிவான குரலில் சொல்கின்றார்:

மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு,
இறைப் படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:

அருள் பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார். அனைவரும் தொடர்கின்றனர்:

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.

24. அருள்பணியாளர் மட்டும் தம் கைகளை விரித்துத் தொடர்கின்றார்:

ஆண்டவரே! தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எ
ங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள் உம்மை மன்றாடுகின்றோம்.
உமது இரக்கத்தின் உதவியால்,
நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று,
யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக.
நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும்
எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார்.
மக்கள் ஆர்ப்பரித்து மன்றாட்டை நிறைவு செய்கின்றனர்.

ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.

35. பின் அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து அமைந்த குரலில் சொல்கின்றார்:

ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே,
நான் உட்கொள்ளும் உம் திரு உடலும் திரு இரத்தமும்
என்னை நீதித் தீர்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல்,
உமது பரிவிரக்கத்தால் என் மனதுக்கும் உடலுக்கும்
பாதுகாப்பாகவும் நலம் அளிக்கும் அருமருந்தாகவும் இருப்பனவாக.

36. முழங்காலிட்டு வணங்கிய பின், அவர் திரு அப்பம் ஒன்றைக் கையில் எடுக்க
நற்கருணைக் கலத்தின் மீது சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு, மக்களை நோக் தெளிவான குரலில் சொல்கின்றார்:

இதோ, இறைவனின் செம்மறி,
இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்.
செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்.

மக்களோடு சேர்ந்து ஒரு முறை சொல்கின்றார்:

ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்;
ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும்; என் ஆன்மா நலம் அடையும்.

27. அருள்பணியாளர் பலிப்பீடத்தின் பக்கம் திரும்பி நின்றுகொண்டு, அமைந்த குரலில் சொல்கின்றார்:

கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காப்பதாக.

28. பின் அவர் மக்களுக்கு நற்கருணை வழங்குவார். அப்பொழுது திபா 21 அல்லது பொருத்தமான வேறொரு பாடல் பாடப்படலாம்.

29. நற்கருணை வழங்கிய பின், திருத்தொண்டர் அல்லது வேறொரு பொருத்தமான திருப்பணியாளர் நற்கருணைக் கலத்தைக் கோவிலுக்கு வெளியே தகுதியான இடத்துக்குக் கொண்டு போய் வைப்பார் அல்லது - வேறு வழி இல்லை எனில் - அது நற்கருணைப் பேழையில் வைக்கப்படுகின்றது.

30. பின் அருள்பணியாளர் "மன்றாடுவோமாக" எனச் சொல்கின்றார். தேவைக்கு ஏற்பச் சிறிது நேரம் அமைதியாக மன்றாடியபின், அவர் திருவிருந்துக்குப்பின் மன்றாட்டைச் சொல்கின்றார்:

மன்றாடுவோமாக.

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய கிறிஸ்துவின் பாடுகளினாலும் புனித இறப்பினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டருளினீர்; உமது இரக்கத்தால் நீர் ஆற்றிய இம்மீட்புச் செயல் எங்களில் நிலைத்திருக்கச் செய்தருளும்: இவ்வாறு இம்மறைபொருளில் பங்கேற்பதன் வழியாக முடிவில்லா இறைப்பற்றுடன் வாழ்வோமாக. எங்கள்.

பதில்: ஆமென்.


31. பிரியாவிடை கூறத் திருத்தொண்டர், அல்லது - அவர் இல்லை எனில் - அருள் பணியாளரே "இறை ஆசிக்காகத் தலை வணங்குவோமாக" என அழைப்பு விடுக்கின்றார்.

பின் அருள்பணியாளர் மக்களை நோக்கி நின்றவாறு, அவர்கள்மீது தம் கைகளை விரித்து, பின்வரும் மன்றாட்டைச் சொல்கின்றார்:

ஆண்டவரே,
தங்களது உயிர்ப்பின் நம்பிக்கையில்
உம் திருமகனின் சாவை நினைவுகூர்ந்துள்ள உம் மக்கள் மீது
உமது ஆசி நிறைவாய் இறங்கிட உம்மை வேண்டுகின்றோம்:
அவர்களுக்கு மன்னிப்பு கிடைப்பதாக; அவர்கள் ஆறுதல் அடைவார்களாக;
புனித நம்பிக்கை வளர்வதாக;
நிலையான மீட்பு உறுதி பெறுவதாக. எங்கள்.

பதில்: ஆமென்.


32. எல்லாரும் சிலுவைக்கு முழங்காலிட்டு ஆராதனை செலுத்தியபின் அமைதியாகக் கலைந்து செல்கின்றனர்.

33. கொண்டாட்டத்துக்குப் பிறகு பீடம் வெறுமையாக்கப்படுகின்றது; ஆனால் இரண்டு அல்லது நான்கு மெழுகுதிரித் தண்டுகளோடு பீடத்தின்மேல் சிலுவை இருக்கும்.

34. இச்சிறப்புத் திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மாலைத் திருப்புகழைச் சொல்வதில்லை.

======================

======================

சிலுவைப் பாதை 1

சிலுவைப் பாதை 2

 

தந்தை, மகன், தூய ஆவியார் பெயராலே – ஆமென்
மனத்துயர் செபம்

இயேசுவுடன் பயணம் - சிலுவைப் பாதை

ஆண்டவர் அழைக்கிறார். அவனியை மாற்ற...


முன்னுரை :
இயேசுவின் திருப்பாடுகளின் பாதையில் பங்கெடுக்க வந்துள்ள இறைச் சமூகமே! இயேசுவைப் பாடுகளுக்கும், சாவுக்கும் உட்படுத்த எத்தணித்துக் கொண்டிருந்த யூத குருக்களின் தலைமைக் குருவாகிய கைப்பாஸ் சொன்ன நியாயம் என்ன தெரியுமா? 'மக்களுக்காக ஒருவன் மட்டுமே இறப்பது நலம்' (அருள் 18:14) ஆம். கிறிஸ்துவின் மரணம் ஒரு தனி நபருக்காகவோ, ஒரு தனி இனத்துக்காகவோ, ஒரு தனி நாட்டுக்காகவோ நிகழ்ந்த மரணம் அல்ல. மாறாக அது மக்கள் அனைவருக்காக, மனித சமூகத்துக்காக நிகழ்ந்த மரணம். உலகின் பாவங்களைப் போக்க வந்த இறைவனின் செம்மறியான இயேசுவின் பாடுகளில், மரணத்தில், பலியில் மனித சமூகத்திற்கே பங்குண்டு. அந்தச் சமூகத்தில் நீங்களும் நானும் அடக்கம். நாம் அனைவரும் தனி நபர்கள்தான் என்ற போதிலும் கிராமம், ஊர், நகரம், மாவட்டம், மாநிலம், நாடு, உலகம் என பல நிலைகளில் சமூகத்தின் அங்கத்தினர்களே. இந்தச் சமூகத்தின் அங்கத்தினர்களாய் இருக்கும் நமக்கு உரிமைகள் உண்டு. கடமைகளும் உண்டு. 'செசாருக்குரியதை செசாருக்குச் செலுத்த வேண்டிய அவசியம்' அனைவருக்கும் உண்டு. அந்தக் கடமைகளைச் செய்யத் தவறுகிறபோது சமூகம் நலிவுறுகிறது. நலிவுற்ற சமூகத்தில் இயேசுவின் பாடுகள் மறுபிரசன்னம் ஆகிறது. அவற்றில் உங்களுக்கும் எனக்கும் பங்குண்டு. இந்தச் சிலுவைப் பாதையின் போது சமூகக் கண்ணோட்டம் நம்மை வழிநடத்தட்டும். ஒரு சமூகமாக இயேசுவின் பாடுகளைத் தியானிப்போம். பின் செல்வோம்.

பழிகளை சுமத்திப் பரிகசித்தார் - உயிர் பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

முதல் நிலை : இயேசு சாவுக்குத் தீர்ப்பிடப்படுகின்றார்

மௌனத்தால் மாற்றங்கள் நிகழ்வதில்லை
இறை வார்த்தை : மத் 5:6 நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறு பெற்றோர்

சிந்தனை : நீதிமானாகிய இயேசு குற்றவாளியாக்கப் படுகிறார். நிரபராதியான இயேசு தண்டிக்கப்படுகிறார். கை கழுவுகிறது அதிகார வர்க்கம். மௌனம் சாதிக்கிறது மக்கள் மந்தை தவறான தேர்வு நடந்து முடிகிறது. பரபாஸ் விடுவிக்கப்படுகிறான். இயேசு தண்டிக்கப்படுகிறார். 'நாடு கெட்டுவிட்டது. அரசியல் மோசமாகி விட்டது' என்று அரசியல் வாதிகள் மீதும் சமுதாயத்தின் மீதும் பழிபோட்டுவிட்டு வாளாவிருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? நாட்டில் நிலவும் அவல நிலைக்கு நாமும் ஒரு வகையில் காரணம் தான். அரசியல்வாதிகள் தாமாக முளைப்பதில்லை. அவர்களைத் தேர்வு செய்வது நாம்தானே? தவறான ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு நாம் செலுத்தத் தவறிய வாக்கு காரணம். தவறான பொருளாதார சமூக கொள்கைகளுக்கு நாம் எழுப்பத் தவறிய எதிர்ப்பு காரணம். நல்லவர்கள் தலைமைப் பொறுப்பை எட்ட முடியாததற்கு நாம் அளிக்கத் தவறிய ஆதரவு காரணம். தீயவர்கள் தங்கள் தீமையில் தொடர்வதற்கு நாம் கொடுக்கத் தவறிய குரல் காரணம். அரசியல் ஒரு சாக்கடை என அறிவு ஜீவிகள் அர்த்தம் கூறிவிட்டு அக்கறையே இல்லாமல் இருப்பதால்தான், அது ஒரு சாக்கடையாகவே இருக்கிறது. சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யவும் துணிவில்லை சாக்கடையில் விழுகின்ற பாமர வாக்காளர்களுக்கு விழிப்ணர்வு தரவும் மனமில்லை . இப்படி இருந்துவிட்டு சலித்துக் கொள்வதில் என்ன பயன்? சமூகத்தில் எது நடந்தாலும் அது நம்மை பாதிக்காதது போல மௌனம் சாதித்து விட்டு பின் சமூகத்தைக் குறை கூறுவது எவ்வகையில் நியாயம்? நடக்கும் தவறுகளைக் கண்டு மௌனம் சாதிப்பதும் ஒரு வகையில் அவற்றை ஆமோதிப்பது போலத்தான்.

பிலாத்தின் தீர்ப்புக்கு எதிராக மக்கள் கிளர்ந்திருந்தால், மதகுருக்களுக்கு எதிராக யூதர்கள் திரண்டிருந்தால் “இயேசு தான் வேண்டும் பரபாஸ் வேண்டாம்' எனக் குரல் கொடுத்திருந்தால் ஒரு வேளை இயேசுவின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கும். நீங்களும் நானும் நன்மைக்கு ஆதரவாக, தீமைக்கு எதிராக குரல் கொடுக்கத் துணிந்தால், அரசியலும் சமூகமும் மாறக்கூடும்.

நினைவில் கொள்வோம்:- மௌனத்தால் மாற்றங்கள் நிகழ்வதில்லை

செபம் : இறைவா! மௌனத்தால் மாற்றங்கள் நிகழ்வதில்லை என்பதைப் புரிந்துக் கொண்டு, எனது சமூகக் கடமைகளைச் சரியான நேரத்தில் சரியான விதத்தில் செய்ய அருள்தாரும். ஆமென்.

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

===================

தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை மாளாத் துயரால் துடிக்க வைத்தார்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்


இரண்டாம் நிலை : இயேசுவின் தோழ் மேல் சிலுவை சுமத்தப்படுகிறது

பிறருக்கு இரங்குவோம். பிறர் சுமைகளை இறக்குவோம்
இறை வார்த்தை : மத் 5: 7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்... இரக்கம் பெறுவர் "

சிந்தனை : கள்வர்களும் கயவர்களும் சுமக்க வேண்டிய சிலுவை, இயேசுவின் தோள்கள் மீது சுமத்தப்படுகிறது. சுமக்க வேண்டிய தோள்களா அவை! பல்லக்கில் சுமக்கப்பட வேண்டியவர் ஆயிற்றே அவர்! ஆயினும் காரணமின்றி அவர் மீது சிலுவை சுமத்தப்படுகிறது. அவரும் சுமக்கிறார். இன்றைக்கும் காரணமே இல்லாமல் சிலுவை சுமப்பவர்கள் உண்டு. தோள்களில் சுமக்கப்பட வேண்டிய குழந்தைகளின் தோள் மீது சுமைகள் ஏற்றப்படுகின்றன. புத்தகச் சுமைகளுக்குப் பதிலாக கூலிச்சுமைகளை சுமக்க நேரிடுகிறது. படிக்க வேண்டிய வயதில் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு செல்லும் குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்ததுண்டா? அறிவொளி பெற்று தீபமாக சுடர்விட வேண்டிய குழந்தைகள் தீப்பெட்டித் தொழிற்சாலையில் தீய்ந்து போகின்றனரே! கவனித்ததுண்டா?

இவற்றைப் பார்க்கும் நாம் இவர்களுக்காய் என்ன செய்திருக்கிறோம்? நாம் என்ன செய்ய முடியும்? இவையெல்லாம் பெரிய சமூக சேவகர்கள் கவனிக்க வேண்டியவை, செய்யவேண்டியவை என நினைக்கலாம். குறைந்த பட்சம் நம் வீட்டில் நிகழ்வதையாவது பார்த்திருக்கிறோமா? வீட்டுவேலை செய்யும் அந்தப் பெண்ணின் மகனோ, மகளோ படிக்கிறார்களா, படிக்க வைக்கப்படுகிறார்களா என்பதை அறிவோமா? சில நேரங்களில் அத்தகு குழந்தைகளை நாமே வீட்டு வேலைக்கும் அமர்த்துகிறோமே! கொடுமையல்லவா அது? "இதில் என்ன தவறு? படிக்க முடியாத அவர்களின் பசியைப் போக்க வேலை கொடுக்கிறோம். பலன் எங்களுக்கு மட்டுமன்று அவர்களுக்கும் தான் எனப் பட்டென்று பதில் தருகிறது உள்ளம். வறுமை என்னும் வலைக்குள் சிக்கியிருக்கும் அவர்களது நிலையைப் பயன்படுத்தி அவர்கள் உழைப்பை விலை பேசுவதற்கு வசதியாக இந்த வாதம் இருக்கலாம், ஆனால் இளமையில் கல்' என்ற முதுமொழி இந்தக் குழுந்தைகளுக்கு மறுக்கப்படுவதற்கு நாமும் ஒரு காரணம். படிக்க விரும்பியும், வறுமையால் முடியாதவர்களை நாம் இனம் கண்டு உதவும் வரை இந்த குற்றத்தில் நமக்கும் பங்குண்டு.

நினைவில் கொள்வோம்:- சுமைகளைச் சுமத்துபவர் மட்டுமல்ல, அவற்றை இறக்கத் தவறுபவர்களும் குற்றவாளிகளே. சுமைகளைச் சுமப்பவர்களுக்காய் இரங்குவோம். இரங்குவதோடு, அவர்கள் சுமையை இறக்கவும் முயல்வோம்.

செபம் : இறைவா! சுமைகளைச் சுமத்துபவர்கள் மட்டுமல் அவற்றை இறக்கத் தவறுபவர்களும் குற்றவாளிகளே என்பதைப் புரிந்து, கொண்டு பிறரது சுமைகளை இறக்கும் இரக்க குணத்தைத் தாரும் ஆமென்.

அருள் நிறைந்த மரியே வாழ்க....


எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

======================

விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும் எழுந்தீர் துயர்களின் நினைவோடு
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக

வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

மூன்றாம் நிலை : உலகையே தாங்குகின்ற உன்னதக் கடவுள் தன் சிலுவையை தாங்க முடியாமல் தரையில் விழுகிறார்.
வித்திட்டோர் மட்டுமல்ல உரமூட்டுபவரும் விஷமிகளே "

இறை வார்த்தை : 2 திமோ 2:19 “ஆண்டவரை அறிவோர் அநீதியை விட்டுவிட வேண்டும்”

சிந்தனை : சிலுவையின் பாரம் பரமனையே தடுமாற வைத்து விட்டது. வீழ்ந்து கிடப்பது இயேசுவா? இல்லையில்லை. விழத்தாட்டியவர்களின் மனிதம்தான் வீழ்ந்து கிடக்கிறது. கிடக்கிறது. இன்றைக்கு சமுதாயத்தில் ஒரு சிலர் வீழ்ந்தவர்களாய் வாழத்தானே செய்கிறார்கள். இன் அடிப்படையில் தாழ்ந்தவர்கள் எனத் தரம் பிரிக்கப்பட்டு தாக்குதலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கத்தான் படுகிறார்கள். சுயமரியாதை, மனித கவுரவம் என்பது அவர்களுக்கு மறுக்கப் படத்தான் செய்கிறது. அப்போதெல்லாம் வீழ்ந்து கிடப்பது தனி மனிதன் அல்ல! மனிதம் என்பதை எப்போது உணரப்போகிறோம்? இவையெல்லாம் காலகாலமாக நிலவிவருபவை. நம் கலாச்சாரத்தோடு ஒட்டிப் பிறந்தவை. இவற்றைக் களைய நம்மால் முடியாது எனக் கூறி தப்பித்துக் கொள்வது நேர்மையின்மை. இனத்தின் பெயரால், சாதியின் பெயரால், குலத்தின் பெயரால் எற்படுத்தப்பட்டுள்ள பாகுபாட்டிற்கு நாம் நேரடி பொறுப்பாளர்களாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவை தொடர்வதற்கு நாமும் ஒரு வகையில் பொறுப்பாளிகள்தான். இந்தக் கொடுமைகளுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களில் நாம் நம்மையே இணைத்துக்கொள்ள தயங்குகிறோம். தவறுகிறோம். நம் தனிப்பட்ட வாழ்வில் கூட நமக்கோ என் பிள்ளைகளுக்கோ வரன் தேடும் போது சமூக, சாதிய, பொருளாதார வரையரைகளை நாம் வகுத்துக் கொள்வதில்லையா? பணி செய்யும் இடத்தில், பங்குத்தளத்தில், பழகும் சுற்றத்தில், அவர்களைச் சமமாய்க் கருதி, நட்புடன் பழகுவதற்குப் பதிலாக, அவர்களிடமிருந்து ஒதுங்கியே வாழ்வதில்லையா? அப்போதெல்லாம் சமூகப் பாகுபாட்டை நாமே ஊக்குவிக்கிறோம் என்பது தான் பொருள். மனிதச் சமுதாயம் மனுவுருவாகிய இறைவனையே கீழே தள்ளி வேடிக்கைப் பார்த்தது. அவரது சாயல்களான மனிதர்களில் ஒரு சிலரை கீழே தள்ளி வேடிக்கைப் பார்ப்பதில் என்ன விந்தை இருக்கிறது?

நினைவில் கொள்வோம்:- சமூக ஏற்றத்தாழ்வு என்ற விஷச்செடிக்கு வித்திட்டவர்கள் மட்டுமல்ல, உரமூட்டி வளர்ப்பவர்கள் விஷமிகள்தான்.

செபம் : இறைவா! சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கின்ற மனத்துணிவும் அதனால் வீழ்ந்து கிடப்போரை தூக்கிவிடும் நல்ல உள்ளத்தையும் தந்தருளும். ஆமென்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாவதாக .....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

=============

தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத் தாங்கிய அன்னை துயருற்றாள்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக

வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்


நான்காம் நிலை: கல்வாரிப் பாதையில் தாயின் சந்திப்பு நிகழ்கிறது.

நம்ப முடியாத சில நிஜங்கள்

இறை வார்த்தை : 1 தெச 5:3 தளர்ந்தோர்க்கு ஊக்கமூட்டுங்கள் வலுவற்றோருக்கு உதவுங்கள்'

சிந்தனை : ஆசையாய் வளர்த்த மகனை அன்புத் தாய் சந்திக்கிறார்கள். ஆனந்தம் அல்ல, ஆதங்கத்தோடு எப்படி அழைத்துச் செல்லப்பட வேண்டியவரை இப்படி இழுத்துச் செல்கிறார்கள் என அன்னையின் உள்ளம் குமுறி நம்ப முடியாத சூழலில் அந்தச் சந்திப்பு நடக்கிறது. வாழ்க்கைப் பாதையில் நம்பமுடியாத சில சந்திப்பு நிகழத்தான் செய்கின்றன. வாழ்க்கையின் முற்பகுதியில் நாம் சந்தித்த சிலரை வாழ்க்கையின் பிற்பகுதியில் சந்திக்க முடிகிறது. எட்ட உயரத்தில் இருப்பார்கள் என்று எண்ணியவர்களை, நெருங்க முடியாதப் பள்ளத்தில் பார்க்க நேரிடுகிறது. எல்லாத் தகுதிகளும் இருந்த போதிலும் தகுதியற்ற நிலையில் சிலர் இருப்பதைக் காண முடிகிறது. நம்ப முடிவதில்லை . ஆனால் அதுதான் நிஜம். பள்ளிப்பருவத்தில் பிரகாசித்த ஒரு சிலர் போதிய வசதியின்மை , போதிய செல்வாக்கின்மை, போதிய அறிமுகமின்மை போன்ற காரணங்களால் சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் இருந்து விடுகிறார்கள். முளையிலேயே தெரிந்த சில விளையும் பயிர்கள் வளரவே முடியாமல் நசுக்கப்படுகின்றன. சிலர் கிள்ளி எறியப்படுகின்றனர். கல்விக் கூடங்களிலும், பணியிடங்களிலும் இட ஒதுக்கீட்டு முறை இவர்களுக்கு உரிய இடத்தை அபகரித்து விடுகிறது. தகுதி படைத்த இவர்களுக்கு இடம் மறுக்கப்படுகிறது. விளைவு கனவுகள் கலைந்தவர்களாக வாழ்க்கையின் விளிம்பில் விழிபிதுங்கியிருக்கிறார்கள். இட ஒதுக்கீடு பின் தங்கியவர்களுக்கு இன்றியமையாததுதான். மறுப்பதற்கில்லை . ஆனால் இன ரீதியாக மட்டுமே முற்படுத்தப் பட்டவர்களாகவும், மற்றெல்லாவிதத்திலும் பின்தங்கியிருப்போரின் கதி என்ன? மதம் மாறிய ஒரே காரணத்துக்காக ஒதுக்கீடும் உரிமையும் மறுக்கப்படும் சிறுபான்மையினரின் நிலை என்ன? அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத சில அணுகுமுறையால் நிகழும் இந்த விபரீதத்திற்கு நாம் என்ன செய்ய முடியும் என்ற கூற்றில் உண்மை இருக்கலாம். ஆனால் நம்முடைய அறிமுகம், நம்முடைய பரிந்துரை, தம்முடைய பொருளுதவி, எல்லோரையும் இல்லையென்றாலும் ஒரு பலரையாவது கரை சேர்த்திருக்கும். செய்தோமா? இல்லையே!

நினைவில் கொள்வோம்:- னவில் கொள்வோம்:- சோகமான சந்திப்புக்களுக்கு காரணமானவர்கள் மட்டுமல்ல, கண்டும் காணாது போகிறவர்களும் பொறுப்பாளிகள் தான்.

செபம் : இறைவா! தகுதி படைத்தோருக்குச் சரியான தடம் அமைத்துத் தந்து அவர்களை உயர்த்தி விடும் தாராள மனம் தாரும். ஆமென்.

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

=============================

மறுத்திட முடியா நிலையாலே - சீமோன் வருத்தினார் தம்மை உம்மோடு
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

ஐந்தாம் நிலை: இயேசுவின் சிலுவையைச் சுமக்க சீமோன் வற்புறுத்தப்படுகிறார்
காரணங்கள் கூறி கருணையை மறுக்கலாமா?

இறை வார்த்தை : 1 தெச 5:15 'எல்லாருக்கும் எப்போதும் நன்மை செய்யவே நாடுங்கள்”

சிந்தனை : சீமோனின் மனதில் அடுத்தடுத்து கேள்விகள். இவர் நீதிமானா குற்றவாளியா? குற்றவாளியானால் அவரது தண்டனையில் நான் ஏன் பங்கேற்க வேண்டும்? ஒரு வேளை நல்லவராய் இருப்பாரோ! எது எப்படியோ? நாம் செய்யப்போவது உதவி உதவி செய்வது நல்லது தானே! அவர் நல்லவரா, தீயவரா என்ற கவலை எனக்கெதற்கு என்று எண்ணியிருக்கக் கூடும். மனப்போராட்டம் முடிகிறது. மனமுவந்து உதவுகிறான் சீமோன். வாழ்க்கையின் வழியோரங்களில் நமக்கும் இந்த நிலை ஏற்படத்தான் செய்கிறது. அது சாலையோர பிச்சைக்காரனாய் இருக்கட்டும். அல்லது சான்றுகளோடு வரும் தொண்டு நிறுவனங்களாக இருக்கட்டும். நம்மிடம் உதவி கேட்டு வரும் அவர்களைப் பற்றி அடுத்தடுத்து கேள்விகள் எழுந்துவிடும். ஒரு விவாத மேடையே அரங்கேறி விடும். உண்மையிலேயே இவர் ஏழையா? ஊனமுற்றவரா தேவையோடு இருப்பவரா அல்லது ஏமாற்றுகிறாரா? இவருக்கு அல்லது இந்த நிறுவனத்துக்குச் செய்யும் உதவி உண்மையிலேயே போய் சேரவேண்டியவர்களைச் சென்று சேருமா? அல்லது இவர்களே விழுங்க விடுவார்களா? இது போன்ற பல கேள்விகள் நமக்குள் எழும். இவற்றில் சில நியாயமானவையும் கூட. ஆனால் குதர்க்கமான சில பேர் கேள்விகள் எழுப்புவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். சிறு உதவி கூட, செய்ய மனமோ அல்லது நல்லெண்ணமோ இல்லாத இவர்கள் தங்க சுயநலத்தை மூடிமறைக்க இத்தகைய கேள்விகளைப் பயன்படுத்தி கொள்கின்றனர். நாம் செய்யும் உதவி சரியான இடத்திற்கு போய் சேரவில்லையென்றாலும் நாம் ஏமாற்றப்பட்டிருந்தாலும் கூட நம்மைப் பொறுத்தமட்டில் நாம் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டோம் என்பது ஒரு நற்செயல்தானே! தவறு செய்பவர்கள் தங்கள் தவற்றுக்குக் கணக்குக் கொடுக்கட்டும். ஆனால் ஒரு வேளை அவசரத் தேவையோடு ஒருவர் நம்மை அணுகி, நாம் குதர்க்கமான கேள்விகள் எழுப்பி, அவருக்கு உதவ மறுத்து, அதனால் தீராத பேரிழப்பு ஏற்பட்டால் அவர் துயருக்கு நாம் காரணமாக மாட்டோமா?

நினைவில் கொள்வோம்:- உதவி செய்யாமல் இருப்பதற்கு காரணம் தேடுவதைக் காட்டிலும் உதவி செய்வதற்கு காரணம் தேடுவதே கருணையின் அடையாளம்
செபம் : இறைவா! உதவி செய்யாமல் இருப்பதற்குக் காரணம் தேடுவதை நிறுத்திவிட்டு, உதவி செய்வதற்குக் காரணம் தேடவும், உதவி தேவைப்படுவோரைத் தேடவும் கருணை உள்ளம் தாரும். ஆமென்.
அருள் நிறைந்த மரியே வாழ்க....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

===========================

 

நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின் விலையாய் மாதின் சிறு துணியில்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

ஆறாம் நிலை: இயேசுவின் திருமுகத்தை வெரோனிக்காள் துடைக்கிறார்.
நல்லெண்ணம் மட்டுமல்ல துணிவும் தேவை

இறை வார்த்தை : தீத்து 2:7 "நற்செயல்களைச் செய்வதில் முன்மாதிரியாய் இருங்கள்'

சிந்தனை : பொலிவிழந்த அந்த முகத்தைப் பார்த்த பின்னும் அவரால் சும்மா இருக்க முடியவில்லை . யூத சமுதாயத்தில் இரண்டாம் தரத்தவராய் கருதப்பட்ட பெண்களில் தானும் ஒருத்தி என்றாலும், தடுக்கும் வீரர்களையும் குறுக்கே நின்ற கூட்டத்தையும் பொருட்படுத்தாது முன்னே சென்று இயேசுவின் முகத்தை வெரோணிக்காள் துடைக்கிறார். தடைகளைத் தாண்டும் துணிவு அவரிடம் இருந்தது. பொலிவிழந்த முகங்களையும் கறைபடிந்த முகங்களையும் நாமும் பார்க்கத்தான் செய்கின்றோம். இயற்கையாகவே நமக்குள் இருக்கும் மனிதம், இரக்கம், அன்பு, தயாளகுணம் அந்த முகங்களின் கறைகளைத் துடைக்க நம்மைத் தூண்டுகிறது. தன் நெற்றிப் பொட்டையும் கூந்தலின் பூவையும் இழந்த விதவைப் பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க மனம் சம்மதிக்கிறது. ஆனால் பெற்றோரும் சமூகமும் எப்படி அணுகுவார்கள் என்ற நினைவு வந்ததும் நல்லெண்ணம் பட்டுப்போகிறது. வரதட்சணையே வாங்காமல் ஒரு பெண்ணை மணமுடிக்க ஆண்மை அழைக்கிறது. ஆனால் பெற்றோர்களின் நச்சரிப்பு நம்மை தலையாட்டிப் பொம்மைகாளக மாற்றி விடுகிறது. மணமேடையே ஏறாத பல முதிர்கன்னிகளின் வாழ்க்கைக்கு அர்த்தம் தர மனமே இல்லாதவர்கள் அல்ல ஆண்கள். ஆனால் தடைகளை மீறத் தயக்கம் காட்டுகிறார்கள். சமதர்மச் சமுதாயம் அமைக்கும் உயரிய சிந்தனை கொண்டு கலப்புத் திருமணம் செய்யத் தயாராய் இருப்போர் இன்றைக்கும் உண்டு. ஆனால் சமூக வேலிகளை உடைத்தெறிய திராணியில்லாமல் போகிறது. பல பெண்களின் முகங்கள் பொலிவிழந்திருப்பதற்குக் காரணம் ஆண்களில் நல்லவர்கள் இல்லை என்பதல்ல, ஆனால் நல்லெண்ணம் கொண்ட அவர்களுக்குத் துணிவில்லை என்பதுதான். கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்த வெரோணிக்காளின் வீரம் இவர்களுக்கு இருக்குமானால் பலருடைய முகங்கள் பொலிவு பெறும்.

நினைவில் கொள்வோம்:- சாதனைகள் செய்ய நல்லெண்ணம் மட்டும் போதாது. எண்ணியதைச் செய்யும் துணிவும் வேண்டும்.

செபம் : இறைவா! பொலிவிழந்த வாழ்க்கைக்கு ஒளியேற்றத் துடிக்கும் நல்லெண்ணத்தோடு, அதைச் செய்யத் தேவையான துணிவையும் தந்தருளும். ஆமென்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாவதாக .....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

=======================

ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால் - அந்தோ சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

ஏழாம் நிலை : இயேசு இரண்டாம் முறையாக கீழே விழுகிறார்.
தண்டனை பெறுவோர் மட்டுமே குற்றவாளிகள் அல்ல !

இறை வார்த்தை : கலாத்தியர் 6: 1 “கனிந்த உள்ளத்தோடு அவரைத் திருத்துங்கள்”

சிந்தனை : வீழ்ந்து கிடக்கும் அவரைத் தூக்கிவிட யாரும் முன்வரவில்லை . மாறாக கீழே கிடக்கும் அவரைத் துச்சமாய் மிதித்து ஈனமாய் பார்த்து ஏளனமாய் பேசி எள்ளி நகையாடினார்கள். ஒன்றை மறந்து விட்டார்கள். வீழ்ந்து கிடந்தவர் குற்றவாளியல்ல. அவரை வீழ்த்திய சிலுவையும் அவருக்கு உரியது அன்று. அது அவர் மீது சுமத்தப்பட்டது.
இன்றைய சமூகச் சூழலில் தள்ளாடி விழுபவர்களும் தடுமாறி வீழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இவர்கள் வீழ்ச்சிக்கு யார் காரணம்? அல்லது எது காரணம்? விபச்சார விடுதியில் தன் உடலுக்கு விலை பேசும் பல பெண்கள் அதை விரும்பிச் செய்வதில்லை. வறுமை அவர்களை விரட்டியதால் வீழ்ந்துக் கிடக்கிறார்கள். பிறக்கும்போதே திருடராய் யாரும் பிறப்பதில்லை . தன் வயிற்றுப் பசியையும் தன்னைச் சார்ந்தோர் பசியையும் தீர்க்க நியாயமான முறையில் முயன்று தோற்றுப் போனவர்களில் பலரே திருடர்கள் ஆகின்றனர். வயிற்றுப் பசிக்காய் திருடிய சிறுவர்கள் பின்பு வாடிக்கையாய் திருடி அதனையே வாழ்க்கையாக மாற்றிக் கொள்கின்றனர். இவர்கள் வேலை தேடிய போது இடமில்லை என்று விரட்டிய சமூகம், இப்போது சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இவர்களுக்கு தஞ்சம் அளிக்கிறது. குற்றங்களை யாரும் நியாயப்படுத்த முடியாது. ஆனால் குற்றவாளிகள் பிறப்பதில்லை . அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அவர்களை உருவாக்கியதில் சமூகமாகிய நமக்கும் பங்குண்டு. தண்டிக்கப்படவேண்டியவர்கள் அவர்கள் மட்டுமல்ல. நாமும் தான். நாம் அவர்கள் நிலையில் இருந்திருந்தால் ஒருவேளை அவர்களைவிட மோசமான குற்றங்களைச் செய்திருக்கக் கூடும். அவர்கள் விழுந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெறுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. அவர்களும் மனிதர்களே! அவர்களுக்குத் தேவை அனுசரணை. ஆதரவு. அவர்களைச் சந்திக்க முயன்றோமா? அவர்களின் அவல நிலைக்கு காரணம் அறிய முயற்சித்தோமா? ஆதரவான வார்த்தைகளால் தூக்கிவிட முயன்றோமா?

நினைவில் கொள்வோம்:- உள்ளே இருப்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல. வெளியில் இருக்கும் நாமெல்லாம் நிரபராதிகளும் அல்ல.

செபம் : இறைவா! வாழ்க்கையின் சிக்கல்களால் சறுக்கி விழுந்து விட்ட சிலரைப் பார்க்கும் போது, சிறுமைப்படுத்தாமல் ஆதரவாய் நடந்து - கொள்ள அருள்தாரும். ஆமென்.

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

========================

விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

எட்டாம் நிலை: எருசலேம் மகளிர் இயேசுவைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள். கதறி அழுகிறார்கள்.
இருளைப் பழிப்பதைவிட ஒளியை ஏற்றுவதே மேல்

இறை வார்த்தை : உரோமையர் 12:21 நன்மையால் தீமையை வெல்லுங்கள்

சிந்தனை : இயேசுவுக்கு நிகழ்ந்தவற்றைப் பார்த்து. அழுகிறார்கள். புலம்புகிறார்கள். புலம்புவதால் என்ன பயன்? தீமையை எதிர்க்காமல் உதிர்க்கும் கண்ணீரால் பயனேதும் இல்லை
'சமூகம் கெட்டுவிட்டது. நியாயாம் செத்துவிட்டது. நேர்மை தொலைந்து விட்டது எனப் புலம்புகிறோம். கனம் நிறைந்த வார்த்தைகளை உதிர்க்கிறோம். நாம் உதிர்க்கும் வார்த்தைகள் உள்ளத்தைச் வாழ்க்கையின் சூழல்களில் நாமும் பலவற்றைக் காண்கின்றோம். "சமுகம் கெட்டுவிட்டது. நியாயம் செத்துவிட்டது. நேர்மை தொலைந்து விட்டது" என்று புலம்புகிறோம். கனம் நிறைந்த வார்த்தைகளை சுடுவதில்லை . எனவே தான் உதட்டளவில் நின்று விடுகிறது. மாற வேண்டியவையும் மாற்றப்பட வேண்டியவையும் இவ்வுலகில் நிறையவே உள்ளன. களைய வேண்டியவையும் கழுவப்பட வேண்டியவையும் சமூகத்தில் நிறையவே உள்ளன. கயமையைக் கண்டு முகம் கசிவதில் மட்டும் என்ன பயன்? அவற்றைக் களைவதற்கு என்ன செய்தோம்? என் ஒருவனால் என்ன செய்ய முடியும்? ஒரு கை அசைந்தால் ஓசை வராது என்றெல்லாம் கூறி தப்பிக்கப் பார்க்கிறோம். ஒரு கை அசைந்தால் ஓசை வராது, உண்மைதான். ஆனால் ஒரு கையுமே அசையவில்லையென்றாலும் ஓசை வராது. வரவே வராது. எல்லோரும் ஒதுங்கி விட்டால் தீமை ஒதுங்காது. வீதியில் இறங்கி வீறுடன் எதிர்க்க முடியாமல் போகலாம். ஆனால் குறைந்த பட்சம் நாம் பணி செய்யும் இடங்களிலாவது, நாம் சந்திக்கும் சூழல்களிலாவது கண்ணெதிரே நடக்கும் தவறுகளையாவது தட்டிக் கேட்க துணிவு வேண்டாமா? அதையெல்லாம் விட கொடுமை. இவையெல்லாம் காலத்தின் கட்டாயம் என நாமே தவறு செய்து விட்டு சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். காரியம் ஆவதற்குக் கையூட்டு கொடுப்பதும் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க பொய் சாட்சி சொல்வதும் வேண்டாம் வம்பு என்று ஒதுங்கிப் போவதும் புத்திசாலித்தனமாய் கருதப்படுகிறது இப்படியெல்லாம் இருந்து விட்டு சமூகம் கெட்டுவிட்டது என்று பழிபோடுவது முதலைக் கண்ணீர் வடிப்பதற்குச் சமம். இதைத்தான் எருசலேம் மகளிர் செய்தனர். அதைத் தான் நாமும் செய்கிறோம்.

நினைவில் கொள்வோம்:- இருளைப் பழிப்பதை விட ஒளியை ஏற்றுவதே மேல்.

செபம் : இறைவா! இருளைப் பழிப்பதை விட ஒளியை ஏற்றுவதே மேல், என்பதைப் புரிந்துக் கொண்டு, என்னையும், நான் இருக்கும் இடத்தையுமாவது, இருளற்ற ஒளி படர்ந்த இடமாக மாற்ற துணை புரியும் ஆமென்.

அருள் நிறைந்த மரியே வாழ்க....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

========================

மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால் ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

ஒன்பதாம நிலை: இயேசு மூன்றாம் முறையாக கீழே விழுகின்றார்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்

இறை வார்த்தை : எபி 12:12 'தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்'

சிந்தனை : விழுகின்ற ஒருவனைத் தடுத்துத் தாங்குவது மனித குணம். அந்த மனித குணமே மக்கிப் போனவர்களாய், மனம் இறுகிப் போனவர்களாய் நிற்கின்றனர் வீரர்களும் மக்களும். வாழ்வின் சில உண்மைகளைப் பார்க்கும்போது நம் இதயமும் இறுகிப்போய்விட்டதோ, நம் மனிதமும் மக்கிப் போய்விட்டதோ என்ற ஐயம் எழுகிறது. விழுபவர்கள் பலர் உண்டு. போதையில் விழுபவர்கள், காமத்தில் விழுபவர்கள், மமதையில் விழுபவர்கள்... இப்படி எத்தனையோ பேர். இவர்கள் விழுவதில் சுகம் காண்பவர்கள், இவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை . அனால் தாங்கள் விழுவதை உணரக் கூட முடியாமல் விழுபவர்கள் உண்டு. களைப்பால் விழுபவர்கள், சோர்வால் விழுபவர்கள், நோயால் விழுபவர்கள் அனைத்திலும் கொடுமையாக பசியால் விழுபவர்கள் உண்டு. அதுவும் நம் நாட்டில் நிறையப் பேர் உண்டு. தனியொருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் எனப் பாடிய புலவன் வாழ்ந்த மண்ணில் தனி ஒருவர் அல்ல... பல கோடி பேர் பட்டினியால், பட்டினிச்சாவால் மடிந்து போகின்றனர். அரசின் தானியக் கிடங்குகளில் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுகின்றனவே தவிர இவர்கள் பசியைப் போக்க அளிக்கப்படுவதில்லை . அரசின் அலட்சியப் போக்கு ஒரு புறம் இருக்கட்டும். நாம் மட்டும் என்ன, இத்தகையோர் மீது அக்கறை கொண்டோமா? பரிவு காட்டினோமா? அன்றாடம் அன்னதானம் நடத்தி அன்பை வெளிப்படுத்த வேண்டாம். ஆனால் என்றைக்காவது ஒருநாள், ஒரே ஒரு நாளாவது பசித்தோரை உண்பிக்க முடியாதா அல்லது கூடாதா? கோலாகலமாய் கேக் வெட்டி கொண்டாடப்படும் பிறந்த நாளன்று மெழுகு திரிகளை ஊதி அணைக்கும் அதே வேகத்தில் ஒரு ஏழையின் வீட்டில் உலை கொதிக்க நெருப்பேற்ற முடியாதா? லட்சங்கள் செலவழித்து நிகழ்த்தப்படும் திருமணப் பந்தியில் பரிமாறப்படும் பலவகைப் பண்டங்களில் கொஞ்சமாவது பசித்தோரைப் போசிக்க பயன்படக்கூடாதா? எச்சிலை மிச்சத்தை உண்ணும் அந்தப் பரம் ஏழைகளை ஒரு நாளாவது மரியாதையாய் அமர்த்தி உணவு தரமுடியாதா? முடியும். ஆனால் இவற்றைப் பற்றி சிந்திக்கவே நாம் துணிவதில்லை. என்றைக்கும் இல்லையென்றாலும், என்றைக்காவது, எல்லோரையும் இல்லையென்றாலும், குறைந்தது ஒருவரையாவது பசியின் தடுமாற்றத்திலிருந்து தூக்கி விடுவோம்.

நினைவில் கொள்வோம்:- உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.

செபம் : இறைவா! விழுபவர்கள் எல்லோரையும் தூக்கிவிட : முடியவில்லையென்றாலும், பசிக் கொடுமையால் விழுபவர்களையாவது ஒரு சில நேரங்களிலாவது உண்பித்து தூக்கி விடும் அருள்தாரும். நீ . ஆமென்.

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

========================

உடைகள் களைந்திட உமைத் தந்தீர் - இரத்த மடைகள் திறந்திட மெய் நொந்தீர்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

பத்தாம் நிலை: இயேசுவின் ஆடைகளைக் களைகிறார்கள்.
தலைக்குனிவு தனி நபருக்கல்ல! மனித குலத்திற்கே

இறை வார்த்தை : யாக்கோபு 2: 13 'இரக்கம் காட்டாதோர்க்கு இரக்கமற்ற தீர்ப்பு கிடைக்கும்"

சிந்தனை : அக்கிரமம் அணை கடக்கிறது. அத்து மீறல் எல்லை தாண்டுகிறது. குற்றவாளிகளுக்குக் கூட கொடுக்கக் கூடாத ஒரு அவமானத்தை இறைமகனுக்குத் தருகிறார்கள். நிலைமைகள் ஒன்றும் மாறிவிடவில்லை. இன்றும் அத்து மீறல்கள் அன்றாடம் நடக்கத்தான் செய்கின்றன. அரசியல் உலகில் நடக்கும் அத்துமீறல்கள் பளிச்சென்று தெரிகிறது. சமூகத்தில் சாதியக் கொடுமை தலைவிரித்தாடுகிறது. மனநலக் காப்பகங்கள் மிருகச்சாலைகளைவிட மோசமாய் நடத்தப்படுகின்றன. மனித மாண்பு மடிந்து போகிறது. சுயகவுரவம் என்ற ஆடை களையப்பட்டு மனிதம் நிர்வாணமாக்கப் படுகிறது. சமுதாயத்தின் ஒரு தளத்தில் மட்டுமே இவை நடப்பதாய் நாம் ஏமாந்து போகக்கூடாது. இளைய தலைமுறையும் இந்த துர்க்குணங்களை உள்வாங்கிக்கொண்டது. கல்லூரி வளாகத்திலும், அதைச் சுற்றிய சாலைகளிலும் ரேகிங் என்ற பெயரிலும் ஈவ்டீஸிங் என்ற பெயரிலும் நடக்கும் கொடுமைகள் நாம் அறிந்தவையே. நெருப்பில் துடிக்கும் விட்டில் பூச்சிகளாய் எத்தனை இளம் மாணவ மாணவிகள்! சிலர் உள்ளத்தால் செத்துப்போகிறார்கள். சிலர் உடல் அளவிலும் செத்துப்போகிறார்கள். விளையாட்டாய் தொடங்கி, விபரீதமாய் தொடர்ந்து, விபத்துகளாய் முடிகிறது இந்தக் கொடுமை. சில நேரங்களில் தற்கொலையாய் தடம் மாறவும் செய்கிறது. வெட்கப்பட வேண்டியது யார்? ஏளனம் செய்யப்படுபவர்களா? இல்லையில்லை ஏளனம் செய்பவர்கள். வெதும்பிப் போக வேண்டியது யார்? இழிவாக நடத்தப்படுபவர்களா? இல்லையில்லை இழிவாக நடத்துபவர்கள். இத்தகு கொடுமைகள் பற்றி கேள்வியுறும்போது உறைந்து போகிற இதயம் பின்பு உறங்கிப் போகிறது. சில நிகழ்வுகளின் அதிர்வுகள் உள்ளவரை மனித உரிமை பற்றி பேசப்படுகிறது. பிறகு வசதியாய் மறக்கப்படுகிறது. மறக்கப்படக் கூடிய ஒன்றல்ல மனித மாண்பு. மறுக்கப்படக்கூடியதும் அல்ல. மனித உரிமையும் மனித மாண்பும் மறுக்கப்படுகின்ற போதெல்லாம் உரத்த குரல் கொடுப்போம். நாம் வாழும் இடங்களில் அதை மதித்துக் காப்போம். ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளும் அதே நேரத்தில் மனித பண்புகளையும் வளர்த்துக் கொள்வோம்.

நினைவில் கொள்வோம்:- மனித மாண்பு மறுக்கப்படுகிறபோது இழிவுபடுவது சில மனிதர்கள் அல்ல. மனிதம் என்கின்ற மாண்பு.

செபம் : இறைவா! உம் சாயலாக நீர் படைத்த மனிதன் மாண்புக்குரியவன் என்பதை உணர்ந்து, எல்லோரையும் எல்லா நேரத்திலும், எல்லாச் சூழலிலும் மாண்புடன் நடத்தும் அருள்தாரும். ஆமென்.
விண்ணுலகில் இருக்கின்ற ....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

========================

பொங்கிய உதிரம் வடிந்திடவே - உம்மைத் தொங்கிடச் செய்தார் சிலுவையிலே
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

பதினொன்றாம் நிலை: இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள்.
மனிதன் பிறந்தது சுதந்திரமாய், இருப்பதோ கட்டுண்டவனாய்

இறை வார்த்தை : எபி 12:12 "தளர்ந்து போன கைகளைத் திடப்படுத்துங்கள்' (எபி 12:12)

சிந்தனை : சிகரம் ஏற்றப்பட வேண்டியவர், சிலுவை ஏற்றப்படுகிறார். மேடைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டியவர் மரணத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். உலகம் மதிக்கும் பணபலம், அதிகார பலம் இல்லாததால் இயேசுவை எந்த எதிர்ப்பும் இன்றி சிலுவையில் அறைகிறார்கள். இன்றைக்கும் சிலுவைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் அப்பாவிகள் பலர் அநியாயமாய் தொங்குகின்றனர். வறுமையின் காரணமாய் என்றோ வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அந்தக் கடனுக்கான வட்டியைச் செலுத்தவே, தங்கள் உழைப்பையும் வியர்வையையும் இரத்தத்தையும் நிரந்தரமாக தந்து கொண்டிருக்கும் கொத்தடிமைகள், பணபலத்தால் சிலுவையில் அறையப்படுகிறார்கள். அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் அந்தமான உத்தரவுகளுக்குப் பணிய மறுப்பதாலும், அவற்றை எதிர்ப்பதாலும் தண்ணியில்லா காட்டுக்கு மாற்றப்பட்டும், எந்த இடத்திலும் நிலையாக குடிபெயர முடியாதவாறு அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டும், பழிவாங்கப்பட்டும் ஊழியர்கள் அதிகார பலத்தால் சிலுவையில் அறையப்படுகிறார்கள். சிறுபான்மையோராய் இருப்பதால் பெரும்பான்மையோரின் வற்புறுத்தலுக்கும் வன்முறைக்கும் ஆளாக நேரிடுகிறது. பெருங்குடி மக்கள் வாழும் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் சொல்லொண்ணா துயரத்திற்கும் அவமானத்திற்கும் ஆளாக வேண்டியுள்ளது. இவர்கள் ஆள்பலத்தால் சிலுவையில் அறையப்படுகிறார்கள். இப்படி பணபலம், அதிகாரபலம், ஆள்பலம் என்ற மூன்று ஆணிகளால் அப்பாவிகள் சிலுவையில் அறையப்படும் கொடுமை சமுதாயத்தில் நிகழ்கிறபோது அதை வேடிக்கைப் பார்க்கும் சாமானியர்களாய் இருப்பது கோழைத்தனம். இவற்றை எதிர்க்கத் தவறுவதும் ஒத்துழைப்பதற்குச் சமம்தான். மேலும் இவை ஏதோ சமுதாயம் என்ற பெரிய வட்டத்தில் மட்டுமே நடக்கும் கொடுமையல்ல. குடும்பம் என்ற சிறிய வட்டத்திற்குள்ளும் நிகழத்தான் செய்கிறது. சம்பாதிக்கிறோம் என்பதால் பணபலமும், ஆண் அல்லது பெரியோர் என்பதால் அதிகார ஸ்ரீ பலமும், மாப்பிள்ளை வீட்டார், கூட்டுக்குடும்பம் என்பதால் ஆள்பலமும் பெற்று குடும்பத்திலேயே மற்றவர்களை
மதிக்காது சிலுவையில் அறைகிறோம். சமூகத்திலும் சரி, குடும்பத்திலும் சரி, சமநிலை தராது, சிலரைக் கட்டுப்படுத்தி வைப்பதில் என்ன வீரம் இருக்கிறது? கட்டி - வைத்து அடிப்பது வீரனுக்கு அழகல்லவே!

நினைவில் கொள்வோம்:- மனிதன் பிறந்தது சுதந்திரமாக; இருப்பதோ கட்டுண்டவனாக.

செபம் : இறைவா! பிறரின் சுதந்திரத்தை மதிக்காது, அவர்களை அறைந்து, கட்டுப்படுத்தும் கயமையைக் களைந்து, அனைவரின் உரிமையையும் மதித்துப் பேணும் நல்ல மனதைத் தாரும். ஆமென்.

அருள் நிறைந்த மரியே வாழ்க....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

========================

இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

பன்னிரெண்டாம் நிலை: இயேசு சிலுவையில் உயிர் துறக்கிறார்.
திருச்சபையின்வித்து வேதசாட்சிகளின் இரத்தம்

இறை வார்த்தை : மத் 5:11 என் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்”

சிந்தனை : கடந்த காலத்தின் நிகழ்வுகள் அவர் கண்முன்னே வருகின்றன. சிலுவைச் சாவுக்கான காரணத்தை அந்த நிகழ்வுகளில் அவரால் காண முடியவில்லை . காரணமின்றி தன்னைக் கொன்றவர்களைக் கண்ணோக்குகிறார். கோபம் வரவில்லை. கருணை பெருக்கெடுக்கிறது. தந்தையே! இவர்களை மன்னியும் என மன்றாடி மடிகிறார். இன்றைய நாட்களில் காரணமின்றிக் கொல்லப்படும் கிறிஸ்துக்களின் எண்ணிக்கையும் தாக்கப்படும் கிறிஸ்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இயேசு ஒரு சாதாரண யூதனாகவோ, ஒரு பரிசேயனாகவோ அல்லது ஒரு சதுசேயனாகவோ இருந்திருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார். அவர் சாவுக்குக் கையளிக்கப்பட்டதன் காரணம் அவர் கிறிஸ்துவாக இருந்ததுதான் இன்றைக்கும் கிறிஸ்துவின் சாயல்களாக இருப்பதனால், கிறிஸ்தவனாக, கிறிஸ்தவளாக இருக்கிற ஒரே காரணத்தினால் தாக்கப்படுகிறோம். கொல்லப்படுகிறோம். நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட குருக்களாகட்டும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியராகட்டும், உயிரோடு எரிக்கப்பட்ட போதகராகட்டும் அவரது பச்சிளம் குழந்தைகளாகட்டும், இன்னும் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வரும் எண்ணிறந்த கிறிஸ்தவர்கள் ஆகட்டும், இவர்கள் செய்த குற்றம் என்ன? பள்ளிகள் நடத்தி பாடம் பயிற்றுவித்ததா? மருத்துவமனை நடத்தி ஆரோக்கியம் காத்ததா? சமமாய்ப் பழகி விழிப்புணர்வு ஊட்டியதா? அல்லது தொழுநோயாளருடன் தோழமையாய் இருந்ததா? எது குற்றம்? எதுவுமே குற்றமில்லை. ஒன்றைத் தவிர. கிறிஸ்துவை ஏற்று வணங்கி போதித்து வந்ததுதான் குற்றம். சமுதாயத் தீமைகளைச் சாதாரணர்களாய் பார்த்து திருச்சபையின் வித்து வேதசாட்சிகளின் இரத்தம் பேசாமல் இருந்தால் நாம் சுதேசிகள். அவற்றைக் களைய இயேசுவின் பெயரால் முற்பட்டால் நாம் விதேசிகள், தாக்குதலுக்கு உரியவர்கள். உடலையும், உணர்வையும், அறிவையும் சீர்படுத்தி ஆன்மாவையும் - ஈடேற்ற முயல்வதற்கு கட்டாய மதமாற்றம் என்ற சாயம் பூசி சாபமிடுகின்றனர். மாற்றங்கள் நிகழ்வது அவர்களுக்கு ஆபத்தானது. கடைநிலையில் இருப்போர் முன்னேறிவிட்டால் தாங்கள் முன்னிலை வகிப்பது தொடர முடியாது என்ற பயம். எனவே தாக்குகின்றனர். இவர்கள் மீது நாம் கோபம் கொள்ளமாட்டோம். 'தந்தையே இவர்களை மன்னியும், ஏனெனில் செய்வதறியாது செய்கிறார்கள்' என இயேசுவோடு ஜெபிப்போம். கிறிஸ்து பாடுபட்டார், கிறிஸ்தவம் பிறந்தது. நாமும் பாடுபடுவோம், கிறிஸ்தவம் தழைக்கும்.

நினைவில் கொள்வோம்:- திருச்சபையின் வித்து வேதசாட்சிகளின் இரத்தம்.

செபம் : இறைவா! உடலைக் கொல்ல முயல்பவர்களுக்கு அஞ்சாமல் ஆன்மாவைக் கொல்ல முயல்வோருக்கு மட்டுமே அஞ்சவும், இறுதிவரை கிறிஸ்துவுக்காகவே வாழ்ந்து மரிக்கவும் அருள்தாரும். ஆமென்.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாவதாக .....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

========================

துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை உயிரற்ற உடலினை மடி சுமந்து
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

பதிமுன்றாம் நிலை: இயேசுவின் மரித்த உடலை அன்னை மரியாளின் மடியில் கிடத்துகிறார்கள்.
தறிக்கப்படாத கிளைகள் தணலில் இடப்படும்

இறை வார்த்தை : மத் 7:20 “கனிகளைக் கொண்டே மரத்தை அறிவர்.

சிந்தனை : பச்சிளம் பாலகனாய் அவள் பாருக்குக் கொடுத்த பரமனை, பாதகமாய் நடத்தி, பாடுகளுக்கு உட்படுத்தி, படுகொலை செய்து அவள் மடியில் கிடத்துகிறார்கள். வாலிபத்தில் தன் வாழ்க்கையைத் துறந்த ஒரு மகனாக இயேசுவைத் தன் மடியில் தாங்குகிறாள் மரியாள். இயேசுவோ வாலிபத்தில் தன் வாழ்க்கையை தியாகம் செய்தவர். எனவே மரியாள் கலங்கினாலும் தலை குனியவில்லை இன்றோ வாலிபத்தில் தங்கள் வாழ்வைத் தொலைக்கின்றனர், பல வாலிபர்கள் தங்கள் பெற்றோருக்குத் தீராத கவலையையும் தாங்கமுடியாத பழியையும் சுமத்துகின்றனர். வாழ வேண்டிய இவர்களின் வாழ்க்கை பறிபோனது எப்படி? எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அந்தக் குழந்தை தாயின் மடியைக் கடந்து தானாக நடந்து விரைவாய் வளர்ந்து சமுதாய அரங்குக்குள் நுழையும் போதுதான் அதன் குணம் மெருகேறுகிறது. அல்லது உருக்குலைகிறது. உல்லாசம் என்ற பெயரில், நண்பர்கள் சுற்றத்தில், கற்றிராத பழக்கங்கள் அவர்களைத் தொற்றுகிறது. போதை மற்றும் மயக்கப் பொருட்கள் அவர்கள் மதியையும் மனதையும் உடலையும் மெல்ல மெல்ல. மங்கச் செய்கிறது. வெள்ளித் திரையில் வேடம் போடுபவர்களுக்கு இவர்கள் விசிறிகள் ஆகின்றனர். ரசிகர் மன்றங்கள் அமைத்து அதில் பொழுதைக் கழித்து பொன்னான நேரத்தை விரயம் செய்கின்றனர். மயக்க வார்த்தைகள் பேசும் அரசியல்வாதிகளின் மந்திரச் சொற்களில் தங்களையே இழந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள். மொழி, இனம், மதம் என்ற பற்றுக்குரிய விஷயங்களை இவர்கள் மனதில் சில விஷமிகள் வெறியாய் ஊட்ட வன்முறைக்கும் தீவிரவாதத்திற்கும் இவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். இறுதியில் காலத்தைத் தொலைத்து காயங்கள் பட்டு தழும்புகளோடும் வடுக்களோடும் வாழ்க்கையைத் துறந்து நிற்கின்றனர். சமுதாயத்தில் விரவிக்கிடக்கும் விஷமம் இவர்களது விரயமான வாழ்வுக்கு காரணம் என்றாலும் வீட்டில் தரப்படாத கவ 'மம், தயாரிப்பும், வளர்ப்பும் நிச்சயம் மூல காரணமாகும். மரியாளின் வளர்ப்பால் இயேசு மீட்பரானார். நமது வளர்ப்பு உருவாக்குவது மீட்பர்களையா? மூர்க்கர்களையா? வளரும் பருவத்தில் திருத்தப்படாத குழந்தைகள் வளர்ந்த பின்னர் திருந்த முடியாத நிலையை அடைந்த விடுவர். அவர்கள் அழிவைக் கண்டு கண்ணீர் விட முடியுமே தவிர அதனைத் தவிர்க்க முடியாது.

நினைவில் கொள்வோம்:- தறிக்கப்படாத கிளைகள் தணலில் இடப்படும்.

செபம் : இறைவா! தறிக்கப்படாத கிளைகள் தணலில் இடப்படும் என்பதை உணர்ந்து, எங்களிலும் எங்கள் பிள்ளைகளிலும் தறிக்கப்பட வேண்டிய குணங்களைத் தறிக்கவும், நன்முறையில் வளர்க்கவும் அருள்தாரும். ஆமென்.

விண்ணுலகில் இருக்கின்ற ....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

========================

ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர் அடங்கிய கல்லறை உமதன்று
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

பதிநான்காம் நிலை: இயேசுவின் உடலை அடக்கம் செய்கிறார்கள்
பாதுகாப்பில் அல்ல பகிர்வதில்தான் இன்பம்

இறை வார்த்தை : மத் 5:9 'அமைதி ஏற்படுத்துவோர் ... கடவுளின் மக்கள் எனப்படுவர்'

சிந்தனை : கடவுளுக்குக் கல்லறையா? கற்பனை கூட செய்ய முடியவில்லை. ஆனால் அது அனுமதிக்கப்படுகிறது. பாவம் தவிர மற்றெல்லாவற்றிலும் நம்மைப் போல் ஒருவரான இயேசு தெய்வமே சந்தித்த கல்லறையை நாமும் ஒருநாள் சந்தித்தே தீரவேண்டும். கல்லறை என்ற சொல்லே, அதைப்பற்றிய சிந்தனையே நம்மை கதிகலங்கச் செய்கிறது. ஆனால் கல்லறைக்குச் செல்லும் நாளை யாராலும் தவிர்க்க முடியாது. மருத்துவத்தால் மனிதன் மரணத்தைத் - தள்ளிப்போட முயன்றாலும் மரணத்தின் பிடி மனித குலத்தின் மீது இறுகிக்கொண்டே இருக்கிறது. வாயில் நுழையா பெயர்கள் சூட்டப்படும் உயிர்க்கொல்லி நோய்கள் புதிது புதிதாய் தோன்றி பரவி பீதியூட்டுகின்றன. இயற்கைச் சீற்றங்களுக்கு இறையாகிப்போகும் மனிதரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. பாதுகாவின் சிகரமாய் கருதப்படும் வல்லரசின் விண்ணை முட்டும் கட்டிடங்கள் கூட விநாடியில் தரைமட்டமானதையும் அதில் பல உயிர்கள் பலியானதையும் சரித்திரம் பதிவாக்கிவிட்டது. இத்தகு சூழலில் பாதுகாப்புக்கென நாடுகள் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்கின்றன. பாதுகாப்புக்காகச் செலவிடப்படும் பணம் மக்கள் நலனுக்காய் செலவிடப்பட்டால் உலகின் முகமே மாறிவிடும். வறுமையும், பசியும், பிணியும் அறவே ஒழித்துக்கட்டப்பட்டுவிடும். ஆனால் முடிவதில்லை . காரணம் அன்புக்குப் பதில் அச்சம் அனைவரையும் ஆட்கொண்டுவிட்டது. வல்லரசுகள் ஆவதில் கவனம் செலுத்தும் நாடுகள் நல்லரசுகள் ஆவதில் கவனம் செலுத்துவதில்லை உலகளவில் இவை நிகழ்ந்தாலும் தனிமனித வாழ்விலும் இவற்றின் தாக்கம் தென்படத்தான் செய்கிறது. வல்லரசாக எத்தனிக்கும் நாடுகள் போலவே செல்வந்தன் ஆகவேண்டும், பலசாலி ஆக வேண்டும், வல்லவனாக வேண்டும் என மனிதன் நினைக்கிறானேயன்றி நல்லவனாக இருப்பதில் அர்த்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டான். அச்சத்தால் உந்தப்பட்டு தன் வாழ்வின் பாதுகாப்புக்காக பணம் சேர்க்கும் மனிதன் அன்பால் உந்தப்பட்டு பகிரத் தொடங்கினால் தானும் வாழ்வான். பிறரையும் வாழவைப்பான். வாழ்ந்தவர்களைக் காட்டிலும் வாழவைத்தவர்களே இன்றும் நிலைப்புகழ் பெற்றுள்ளனர்.

நினைவில் கொள்வோம்:- வாழ்வின் அர்த்தம் பாதுகாப்பில் அல்ல பகிர்வதில்தான் அடங்கியுள்ளது.

செபம் : இறைவா! வாழ்க்கையின் அர்த்தம் பாதுகாப்பில் அல்ல பகிர்வதில்தான் என்பதைப் புரிந்து கொண்டு, பகிர்ந்து வாழவும் பிறரை வாழவைக்கவும் அருள்தாரும். ஆமென்.

 

அருள் நிறைந்த மரியே வாழ்க....

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாவதாக .....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிறும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

பொருத்தருளும் கர்த்தாவே …
உமது ஜனத்தின் பாவங்களைப் பொருத்தருளும்
என்றென்றைகும் எங்கள் மேல் கோபமாய் இராதேயும் சுவாமி
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.

பரிசுத்த திருத் தந்தையின் கருக்துக்களுக்காக ஜெபிப்போம்... விண்ணுலகில்... அருள் நிறை... தந்தைக்கும்...

======================

சிலுவைப் பாதை2

தந்தை, மகன், தூய ஆவியார் பெயராலே – ஆமென்
மனத்துயர் செபம்

இயேசுவுடன் பயணம் - சிலுவைப் பாதை

சிலுவைப் பாதை முன்னுரை

மனிதத்தை புனிதமாக்க புனிதரான இறைவன், மனிதராக மண்ணில் வந்து மனிதராக மனிதருக்காக வாழ்ந்து தன்னையே அர்பணித்தார். அவருடைய அன்பிலும் சகோதரத்துவததிலும் பிரியமான புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் இறைமக்களே, அன்பு உள்ளங்களே, நன்பர்களே!

நம் இறைவன் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் உண்மையைச் சொன்னார், நன்மைகளைச் செய்தார். ஆனால் உலகம் அவரை வெறுத்தது. உண்மையைச் சொல்லும் எவரும் இன்றும் வெறுக்கப்படுகிறார்கள். அதனால் இயேசுவை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். அப்படி அவர் என்னதான் செய்தார்? ஆலயத்தை விற்பனைக் கூடமாக்குவதும், விளையாட்டு தலமாக்குவதும், பொழுதுபோக்கும் இடமாக ஆக்குவதும் தவறு என்று சுட்டிக்காட்டினார். பாவி என்று சொல்லி, கல்லெறிந்து, கொல்ல வந்தவர்களைக் கண்டித்தார். நோயாளிகளை குணமாக்கினார். இறந்தவர்களை உயிர்பித்தார். ஏழைகளை அன்பு செய்தார். நீங்கள் என் நண்பர்கள் என்றார். அனைவரும் சமம் என்றார். அனைவருக்கும் சம உரிமை கொடுத்தார். ஆனால் அந்த சமுதாயமோ அவரை கொடூரமான முறையில் கொன்று தீர்த்தது.

சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வந்த இயேசுவுக்கு சந்தர்பவாதிகள் ஏற்படுத்திக் கொடுத்த பயணம்தான் இந்த சிலுவைப் பயணம். நம் அன்பு இயேசு நமக்காக நம் ஒவ்வொருவரின் பாவங்களுக்காக சிலுவையைச் சுமந்து கொண்டு, கற்களும் முற்களும், கரடுமுரடுமான பாதைகளின் நடுவில் பயணித்து இறுதியில் கல்வாரியில், சிலுவையில் உயிர் துறந்தார்.

அந்த உன்னதரின் கல்வாரி பயணத்தில் பங்கெடுக்க வந்துள்ள நாம், அவரின் துயரமான பாடுகளை தியானித்து, மனம் வருந்தி, கண்ணீர் சிந்தி, புனிதமான வாழ்வு வாழ வரம் வேண்டுவோம்.
வாருங்கள் சிலுவைப் பாதையில் பயணிப்போம்.

=====================

பழிகளை சுமத்திப் பரிகசித்தார் - உயிர் பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

முதல் நிலை : இயேசு சாவுக்குத் தீர்ப்பிடப்படுகின்றார்

நற்செய்தி: மத்தேயு 27: 22-23
“பிலாத்து அவர்களிடம், "அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். அனைவரும், "சிலுவையில் அறையும்" என்று பதிலளித்தனர். அதற்கு அவன், "இவன் செய்த குற்றம் என்ன?" என்று கேட்டான். அவர்களோ, "சிலுவையில் அறையும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள்.

நீதிக்கே தண்டனை வழங்கப்படுகிறது.

விளக்கம்:

குற்றமற்ற இயேசு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார். கொடியவர்களால் தூண்டிவிடப்பட்ட மக்கள் கூட்டம் அவனை சிலுவையில் அறையும், அவனைச் சிலுவையில் அறையும் என்று உரக்க கத்துகிறார்கள். உண்மையிலேயே இயேசுவிடம் குற்றம் எதுவும் காணவில்லை என்பதாலோ அல்லது தன் மனைவிக்கு தோன்றிய மோசமான கனவினாலோ, பிலாத்து, எனக்கும் இக்கொடூர கொலைக்கும் பங்கில்லை என மொழிந்து கை கழுவிவிட்டு இயேசுவை யூதர்களிடம் கையளிக்கின்றான். சென்ற இடமெல்லாம் நன்மைகள் செய்ய வந்த நம் நல்ல இயேசுவுக்கு யூதர்கள் மரண தண்டனை கொடுத்து நீதிக்கே தண்டனை வழங்கினார்கள். இன்றும் இச் செயல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

சிந்தனை:
இத் தீர்ப்பு நம்மை சிந்திக்க அழைக்கிறது. அன்று இயேசு தீர்ப்பிடப்பட்டபோது நாம் அங்கே இருந்திருந்தால் என்ன செய்திருப்போம். அவர் நல்வர் என்று அஞ்சாமல் சொல்லியிருப்போமா? இல்லை அந்த மக்களைப் போல நாமும் இணைந்து கோசம் போட்டு இருப்போம் இல்லையா? இன்றும் அதைத்தானே நாமும் செய்து கொண்டிருக்கிறோம், செய்கிறோம். எத்தனை முறை எந்தெந்த நேரங்களில் மற்றவர்களை, குறிப்பாக, தீங்கிழைக்காதவர்களைத் தீர்ப்பிட்டிருக்கிறோம். நம் பதவிக்கோ, அதிகாரத்திற்கோ, ஆபத்து வந்துவிடும் என்று பயந்து, குற்றமற்றவர்களையும், நீதிக்காக குரல் கொடுப்பவர்களையும், பாதுகாப்பதிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறோம். இது தவறில்லையா? எண்ணிப்பார்ப்போம். தவறுகளைத் திருத்திக் கொள்ள முனைவோம்.

செபம்:
அன்பு இயேசுவே, நாங்கள் சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், போன்றவற்றில், பிறரை அநியாயமாக தீர்ப்பிடாமலும், அநீதிக்கு அடிபணிந்துவிடாமலும், என்றும் உண்மைக்கும், நீதிக்கும் குரல் கொடுக்கின்ற இறைமக்களாக வாழ்ந்து, நீதிக்கும் உண்மைக்கும் சான்று பகர்கின்ற மக்களாக வாழ ஆற்றலையும், வல்லமையையும், தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

===================

தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை மாளாத் துயரால் துடிக்க வைத்தார்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்


இரண்டாம் நிலை : இயேசுவின் தோழ் மேல் சிலுவை சுமத்தப்படுகிறது

பிறருக்கு இரங்குவோம். பிறர் சுமைகளை இறக்குவோம்

இறைவார்த்தை: ஏசாயா: 53: 5,6
அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். ஆவர் தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம். நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம். ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர் மேல் சுமத்தினார்.

சிந்தனை:
முள்முடியின் முட்களால் ஒளியிழந்த விழிகள் தளர்ந்து போயிருந்த எலும்புகள் ஆறாய் பெருகியிருந்த இரத்தம் கசையடிகளால் புண்ணாகி இருந்த உடல்கள் இந்நிலையில் எட்டு பேர் சுமக்க கூடிய கரடுமுரடான மரத்தினால் ஆன சிலுவையை தூக்கி இயேசுவின் தோள் மேல் வைத்தனர். உடம்பெல்லாம் இரணமாகி நெருப்பிலிடப்பட்ட புழுபோல் உடலும் உள்ளமும் துடித்தது இயேசுவுக்கு அவரது தலை முதல் உள்ளங்கால் வரை வேதனையில் நடுங்கியது.“சுமை சுமந்து சோர்ந்திருப்போரே எல்லாரும் என்னிடம் வாருங்கள்” என நம்மை அரவணைத்த நம் இயேசுவுக்கு நாம் தரும் பரிசு சிலுவை சுமையா?”

மரங்கள் சுவாசிக்க காற்றை தரும். சிலுவை நாம் வாழ மீட்பை தரும். நம்மை பற்றிய நமது தவிப்பு என்ன? “என் சுமை எப்போது தீரும் என் சுமை எப்போது சுகமாக மாறும்” நம் தவிப்புகளுக்கு நடுவே நமக்காக இதோ இயேசுவின் மேல் ஒரு சுமை. நம் பாவச்சுமை தாங்க முடியா சுமை அதை சுமத்தியவர்கள் நாம் தானே! இயேசு நம்மை பார்த்து கேட்கிறார்: என் பாரச் சிலுவையை குறைக்கமாட்டாயா? என் உடலின் வேதனையை குறைக்கமாட்டாயா? இதோ கரடுமுரடான சிலுவைமரம் இயேசுவின் மேனியை தீண்டுகிறது; சுமைகளால் வலி என்னவோ இயேசுவுக்கு தான் ஆனால் கண்ணீர் வந்ததோ சிலுவை மரத்திற்கு மரத்திற்கு இருக்கும் உணர்ச்சிகள் கூட மானிடா உன்னிடம் இல்லையே? இருந்தால் உன் கண்ணீரால் இயேசுவின் பாதத்தை கழுவு.

சிலுவை சுமை
அளவுக்கு மீறிய பண ஆசையால் தன் கணவனின் தோள் மேல் பணம் என்ற சிலுவையை சுமத்தும் மனைவியர் எத்தனை பேர்? மதுவுக்கு அடிமையாகி மது அருந்தும் ஒவ்வொரு முறையும் தன் மனைவியின் தோள் மேல் கவலை என்ற சிலுவையை சுமத்தும் கணவர்கள் எத்தனை பேர்? திருமணங்களின் போது வரதட்சணை என்ற சிலுவையை பெண் வீட்டார் மீது சுமத்தும் மணமகன் வீட்டார் எத்தனை பேர்? கல்வியில் நான் சொல்லும் துறையை தான் நீ படிக்க வேண்டும் என கட்டாயம் என்ற சிலுவையை தன் குழந்தைகள் மீது சுமத்தும் பெற்றோர் எத்தனை பேர்? தீய பழக்கங்களில் ஈடுபட்டு தங்கள் வாழ்வை அழிப்பதோடு அவமானம் என்ற சிலுவையை தன் பெற்றோர் மேல் சுமத்தும் இளையோர் எத்தனை பேர்? முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்த்து விடுவதால் தன் பெற்றோர் தோள் மேல் மனவருத்தம் என்ற சிலுவையை சுமத்தும் பிள்ளைகள் எத்தனை பேர்? உறவினர்களை மன்னிக்க மறக்க ஒவ்வொரு முறையும் பகைமை என்ற சிலுவையை அவர்கள் மேல் சுமத்தும் உறவுகள் எத்தனை? அதிக வேலை பளுவினால் உடல் சோர்வு என்ற சிலுவையை தொழிலாளர்கள் மேல் சுமத்தும் முதலாளிகள் எத்தனை பேர்? இச்சிலுவை சுமைகளுள் ஏதேனும் ஒரு சிலுவையை ஆவது நீங்கள் பிறர் மீது சுமத்தியிருப்பீர்கள் அல்லவா?

இவ்வாறாக!
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் தோள் மீது ஒரு சிலுவை கண்டிப்பாக சுமத்தப்பட்டிருக்கும் நாம் சிலுவையை நாள்தோறும் சுமந்து கொண்டுதான் இருக்கிறோம். இந்த சிலுவை சுமை எங்கிருந்து என் தோள் மேல் வந்தது என யோசிக்கிறீர்களா? “எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்”

நாம் பிறர் மீது சுமத்திய சிலுவையே நம்மை பின் தொடர்கிறது. இந்த சிலுவை சுமையை எவ்வாறு இறக்கி வைப்பது? நூம் மற்றவர் மீது சுமைகளை திணிக்காமல் இருந்தாலே போதும். மனித தவறினால் நாம் சிலுவையை சுமக்கும் நேரங்களில் அதை இறக்கி வைப்பதற்கான தீர்வு இயேசுகிறிஸ்துவிடமே உள்ளது என்பதை உணர்வோம் அவர் வழி நடப்போம் அப்போது சிலுவை நமக்கு பாரமாக இருக்காது. ஏனெனில் இறைவன் நாம் இன்னலுறும் நேரங்களில் நம்மை நடத்தி செல்வதில்லை மாறாக தன் கரங்களில் தாங்கி செல்கின்றார். அந்த இறை அன்பை பெற முயற்சிப்போம் அந்த முயற்சியில் வெற்றி பெறுவோம். சுமைகளை சுமத்துவது எளிது அதை சுமப்பது தான் கடினம். நீ சுமக்கும் சுமைகளை விட நீ பிறர் மீது சுமத்திய சுமைகளே அதிகம். அதற்காக மனம் வருந்து உன் சுமைகளை சுமக்க நீ பலன் பெறுவாய் அதை இறைவன் அருள்வார்.

ஜெபம்:
எங்களுக்காக பாரமான சிலுவையை உம் தோள் மேல் தாங்கிய இயேசுவே நாங்கள் எங்கள் சொல்லாலும் செயல்களாலும் பிறர் மீது சிலுவையை சுமத்தாமல் உம் துணையுடன் எங்கள் வாழ்வின் சுமைகளை தாங்கிய வண்ணம் சாத்தானை வென்று புனித வாழ்வுக்கு கடந்து வர அருள் தாரும் இயேசுவே. -ஆமென்

அருள் நிறைந்த மரியே வாழ்க....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

======================

விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும் எழுந்தீர் துயர்களின் நினைவோடு
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக

வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

மூன்றாம் நிலை : உலகையே தாங்குகின்ற உன்னதக் கடவுள் தன் சிலுவையை தாங்க முடியாமல் தரையில் விழுகிறார்.

இறைவார்த்தை: ஏசாயா 53:5-6
அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார், நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார், நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார், அவர் தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழி தவறி அலைந்தோம். நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம். ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர் மேல் சுமத்தினார்.

இயேசு……
அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிநேன், கலங்காதே நான் உன் கடவுள். நான் உனக்கு வலிமை அளிப்பேன் உதவி செய்வேன். என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன். உனக்காக நான் சிந்திய இரத்தம் வீணாகலாமா! நான் விழுந்தேன் மீண்டும் உனக்காக எழுந்தேன். என் இரக்கத்தைப் பெற்று என் கரத்தைப் பிடித்து புது வலிமை பெற்று என்னைப் பின்பற்றி வா பின் தொடர்வாயா வலிமை பெறு துணிவு கொள்.

சிந்தனை:
பாவம் பாரம் சிலுவையின் பாரம் தாங்காமல் கரடுமுரடான பாதையில் தட்டுத்தடுமாறி வேதனையால் துடிதுடித்து கீழே விழுகிறார் இறைமகனுக்கே ஏன் இந்த பரிதாப நிலை. நம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்கள், கவலைகள், சிக்கல்கள், பணம், பதவி, அந்தஸ்து நான் பெரியவன் நீ பெரியவன் என போட்டி, பொறாமை, மதுவுக்கும், போதைக்கும் தீய பழக்கத்திற்கும் அடிமை டிவி சீரியல் பிறரை பற்றி புரணி பேச்சு தேவையற்ற வாக்குவாதம் கணினி, இணையதளம், சினிமா மோகம் படிக்கும் வயதில் காதல் வன்முறை செயல்கள் என்று ஒவ்வொருவரும் பாவத்திலே உலகின் தீமையிலே மூழ்கிக் கிடக்கிறோம். அடிமைப்பட்டு கிடைக்கிறோம். நம்முடைய தீச்செயலின் காரணமாக இறை மகனின் பரிதாப கோலத்தை பாருங்கள். நாம் இப்படியே விழுந்து கிடக்கவா அவர் இந்த பாரச் சிலுவையை சுமந்தார். இதிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும் என்று என்றாவது ஒருநாள் சிந்தித்து பார்த்து இருப்போமா? ஓ! மனிதா! நாம் வாழ்வது ஒருமுறை தான் நாம் அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று சிந்தித்துப் பார். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நாட்களை தள்ளிப் போடாதே. இனி ஒரு காலம் வரும் என்று எதிர்பார்க்காதே. இதுவே தகுந்த நேரம். மீட்பின் நாள். இரக்கத்தின் காலம்.

செபம்:
மீட்பின் இயேசுவே எங்கள் மேல் கொண்ட அன்பின் காரணமாக எங்களை மீட்க வேண்டும் என்ற ஒரே ஏக்கத்தால் பாரச் சிலுவையோடு எழுந்ததற்காக தாழ்பணிந்து உம்மை ஆராதிக்கிறோம். வாழ்க்கையே போராட்டமாகி வாழ்க்கைப் பயணம் முழுவதும் விழுந்து விழுந்து வாழ்வா சாவா என்று சோர்ந்து போய் இருக்கும் பாவிகளாகிய வலுவற்ற நாங்கள் உமது பாதமே கதி என்று கிடக்கிறோம். “நான் தரும் அருள் போதும்” என்று வார்த்தையால் புத்துணர்வு பெற்று உமது வல்லமையில் நிரப்பி புது மனதர்களா புது வாழ்வு வாழ மானிட சமுதாயம் மாண்ப பெற இறையாட்சி மலர உமது சித்தமே நிறைவேற்ற எங்களை முழுவதும் உம்மிடம் ஒப்பு கொடுக்கிறோம் எங்களை ஆசீர்வதித்து வழிநடத்தும் - ஆமென்!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாவதாக .....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

=============

தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத் தாங்கிய அன்னை துயருற்றாள்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக

வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்


நான்காம் நிலை: கல்வாரிப் பாதையில் தாயின் சந்திப்பு நிகழ்கிறது.

இறை வார்த்தை:
ஏசாயா 4:4 என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன், மதிப்பு மிக்கவன். நான் உன் மேல் அன்பு கூர்கிறேன்
சிந்தனை: இதோ ஓர் இலட்சியத் தாய். பணியில் தன்னை பலி கொடுக்கும் தன் மகனின் தியாக வேள்வில் பங்கேற்கும் இலட்சியத்தாய். கருவில் சுமந்து பிறப்பில் காத்து, ஏழைகளின் இறைவனை இனம் காட்டி, கற்றுக்கொடுத்து, ஏழ்மையில் வளர்த்து புடம் போட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை வாழ்வுக்காக “ சென்று வா ….. மகனே …. வென்று வா” என்று வழியனுப்பி சிலுவைப் பயணத்தில் தொடர்ந்து வந்து தன் மகனின் இலட்சியப் பயணத்தில் துணை நிற்கிறாள்

அன்னை மரியாள்.
உலகம் முழுவதையும் இறைவன் சுமக்கிறார். அந்த இறைவனையும் அன்போடு சுமப்பவர் அன்னை மரியா. உலகிற்கு வேண்டுமானால் இயேசு இறைவனாக இருக்கலாம். ஆனால் தாய் மரியாவிற்கு அன்பு பிள்ளை தானே? தாய்க்கு மனம் வலிக்கிறது. “பார்வையிலே அருள் உண்டு. பார்ப்திலே ஒரு சுகம் உண்டு” என்று சொல்வார்கள். ஆனால் இந்த தாய்க்கு பார்க்கப் பார்க்க பதைக்கிறது மனம். “இதோ கன்னி கருவுற்று ஒரு மகனை பெறுவீர்” அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். அவர் தான் மெசியா” நினைத்துப் பார்க்கவே முடியவில்லையே?” இதற்காகவா நான் உன்னைப் பெற்றெடுத்தேன். இந்த கோலத்தில் பார்க்கவா நான் உன்னை சீராட்டி வளர்த்தேன். அன்னை மரியா புலம்புகிறார்.ஆறுதல் சொல்ல வேண்டிய தாய் ஆதரவின்றி தவிக்கிறார். ஆனாலும் “இதோ ஆண்டவரின் அடிமை” உமது விருப்பப்படியே ஆகட்டும்” என்று கூறிய அந்த வார்த்தைகளையே பற்றி கொண்டு இயேசுவைப் பின் தொடர்கிறார்.
நமது பார்வைகள் தான் எத்தனை எத்தனை? பார்வையிலேயே எரித்து விடுபவர்கள் சிலர். பார்த்து பார்த்து வயிற்றெரிச்சல் படுபவர்கள் சிலர். இச்சையான பார்வைகளிலேயே கற்பை இழக்கச் செய்பவர்கள் இன்னும் சிலர், பொறாமைப் பார்வையிலேயே பொசுக்கி விடுபவர்கள் வேறு சிலர். இன்னும் வக்கிரப்பார்வை, வசீகரப்பார்வை, கொடூரப்பார்வை, கொலைவெறிப்பார்வை என்று பார்வைகள் தான் எத்தனை எத்தனை? இயேசுவின் பார்வை பேதுருவை மாற்றியது. (லூக்கா: 22:6)இயேசுவின் பார்வை இளைஞனை சிந்திக்க (மாற் 10:21) இயேசுவின் பார்வை எத்தனையோ யூத மகளிரை ஆறுதலடையச் செய்தது. இயேசுவின் பார்வை அந்த கடைசி நேரத்தில் கூட நல்ல கள்வனை ஆனந்தமாய் பரலோகம் அழைத்துச் சென்றது. இதோ இங்கே ஆறுதல் தரும் அன்னையின் பார்வை இயேசுவையே தொடர்ந்து நடக்கச் செய்கிறது. நமக்கும் அந்தப் பார்வை வேண்டாமா?

ஜெபம்
அன்னையின் பார்வையிலே ஆறுதலடைந்த இயேசுவே, ஆறுதலின் அன்னையை நாங்களும் பின்பற்றி வாழ வரம் தாரும். ஆறுதலுக்காக ஏங்கித் தவிக்கும் மனங்களுக்கு தாராள உள்ளத்தோடு உதவி செய்ய நல்ல மனத்தை எங்களுக்கு தருவீராக, உமது ஆறுதலான பார்வையை எங்கள் மீது திருப்பியருளும். உமது கனிவான முகம் எங்களின் மனத்தை திடப்படுத்துவதாக. வேதனையைத் தணிப்பதாக. எங்களின் துயர்களை துடைப்பதாக, துன்பங்களை நீக்குவதாக. ஆமென்.

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

=============================

மறுத்திட முடியா நிலையாலே - சீமோன் வருத்தினார் தம்மை உம்மோடு
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

ஐந்தாம் நிலை: இயேசுவின் சிலுவையைச் சுமக்க சீமோன் வற்புறுத்தப்படுகிறார்

இறைவார்த்தை :

உரோமையர் 16: 2
இறைக்களுக்கு ஏற்றவாறு ஆண்டவரின் பெயரால் அவரை வரவேற்று அவருக்குத் தேவையான உதவி செய்யுங்கள். ஏனெனில், அவரும் பலருக்கு உதவி செய்திருக்கிறார் எனக்கும் உதவி செய்திருக்கிறார்.

திருப்பாடு:
முதியோருக்கும் முடியாதோருக்குமே தெரியும் ஊன்றுகோலில் அருமை. நம் வலிமை குறைந்து நம்மை நாமே தாங்க இயலாதபோது, நாம் நாடுவது ஊன்றுகோலின் உதவியை. சிலருக்கு ஊன்றுகோலானது குறுகிய காலத்தேவையாக இருக்கக்கூடும். சிலருக்கு ஊன்றுகோலானது ஆயுட்காலத் தேவையான ஒன்றாக இருக்கக்கூடும். நம்மைச் சுமையாய் சுமக்கவும் நாம் சாயும்போது தாங்கவும் நமது வலியை சரியாய் காட்டவும் நம் பாதையின் தடைகளை உணர்த்தவும் மொத்தத்தில் நம் நலனுக்காக மட்டுமே நம்மோடு கூட இருந்து உதவுவது ஊன்றுகோல். வாழ்க்கையில் நமக்கு மர ஊன்றுகோல்களை விட மனித ஊன்றுகோல்களின் தேவையே அதிகம். நலிந்தவனுக்கு ஒரு மர ஊன்றுகோல் போதும். ஆனால் நலமானவனுக்கோ பல மனித ஊன்றுகோல்கள் தேவை. மர ஊன்றுகோல்களின் உதவியை நாம் மறுத்தாலும் மனித ஊன்றுகோல்களின் உதவியை நாம் நாடவேண்டியதிருக்கிறது. அன்று இயேசுவுக்கும் சீமோன் எனும் ஊன்றுகோல் தேவைப்பட்டது சிலுவை சுமக்க. தள்ளாடிய இயேசுவுக்குத் தன்னையே தாரை வார்த்தது சீமோனாகிய மனித ஊன்றுகோல். கௌரவம் பார்க்காமல் கனிந்த உள்ளத்தால் உதவ முன்வந்தது சீமோனாகிய மனித ஊன்றுகோல். தன்மானம் பார்க்காமல் தன் அயலாரின் மானம் காக்கத் துடித்தது சீமோனாகிய மனித ஊன்றுகோல். வலியோராய் இருந்தும் நலிந்தோர் மட்டில் அக்கைறையற்ற அற்ற அத்தனை யூதர்களுக்கும் இந்த சீமோனின் செயல் ஒரு சாட்டையடி. உடனிருந்தோர் எல்லாரும் ஒதுங்கிப்போன பின்னும், ஒதுங்கிப்போன சீமோன் உடனிருந்து உதவுவது நமக்குப் பாடமாயிருக்கிறது.

சிந்தனை:
இந்நாள் வரை உன்னுடைய நலமான வாழ்வுக்கும் வளமான வாழ்வுக்கும் பல மனித ஊன்றுகோல்களை நீ பயன்வடுத்தியிருக்கிறாய். அந்த மனித ஊன்றுகோல்களுக்குச் சரியான மதிப்பளித்திருக்கிறாயா? நன்றியோடு நினைத்துப் பார்கிறாயா? உனக்கு உதவிய ஊன்றுகோலை உடைத்தெறிய நினையாதே! ஏனெனில் பிறருக்கு அது தேவையாக இருக்கலாம். எல்லா நேரங்களிலும் பிறரை ஊன்றுகோலாக்கி உதவி பெற நினைக்கும் நீ பிறருக்கு ஊன்றுகோலாக மாறி உதவி புரிய நினைப்பது எப்போது? வளமையில் இருப்போர் வரியோருக்கும் கரம் நீட்டும்போது சீமானாகின்றனர். திறம்படைத்தோர் திறனற்றவர்களுக்குக் கரம் நீட்டும் போது சீமோனாகின்றனர். இனியாவது தேவையிலிருப்போருக்குத் தேடிச் சென்று உதவும் ஊன்றுகோலாக மாறப்போகிறாயா? அல்லது பிறரை ஊன்றுகோலாக்கி உல்லாச வாழ்வு வாழப் போகிறாயா? சிந்தித்துப்பார்.

செபம்:
நலிந்தவனுக்கு ஊன்றுகோலாகிய இறைவா! தேவையிலிருப்போருக்கு அருகில் இருந்து உதவும் ஊன்றுகோலாய் வாழ எனக்கு உதவும். வழிப்போக்கன் சீமோன் இயேசுவின் துயர் போக்க முன்வந்தது போல் நானும் பறர் துயர் களைய எனக்கு வரம் தாரும் சுவாமி – ஆமென்

அருள் நிறைந்த மரியே வாழ்க....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

===========================

 

நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின் விலையாய் மாதின் சிறு துணியில்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

ஆறாம் நிலை: இயேசுவின் திருமுகத்தை வெரோனிக்காள் துடைக்கிறார்.

இறைவார்த்தை :
ஏசாயா 53:3 அவர் இகழப்பட்டார் மனிதரால் புறக்கணிக்கப்பட்டார் வேதனையுற்ற மனிதராய் இருந்தார் நோயுற்று நலிந்தார் காண்போர் முகத்தை மூடிக் கொள்ளும் நிலையில் அவர் இருந்தார் அவர் இழிவுப்படுத்தப்பட்டார் நாம் அவரை மதிக்கவில்லை.

திருப்பாடல் 27: 8-9 “புறப்படு, அவரது முகத்தை நாடு என்றது என் உள்ளம், ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன். உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும் நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கி விடாதிரும். என் மீட்பராகிய கடவுளே என்னைத் தள்ளி விடாதிரும் என்னைக் கைவிடாதிரும்

திருப்பாடு:
கருணையின் கவிதையாயிருந்த இயேசுவின் முகம் கயவர்களின்கோரத் தாக்குதலால் களையிழந்து நிற்கிறது தலையில் பதித்த முள்முடியால் இரத்தம் முகத்தில் கோடு வரைந்து காட்டுகிறது கண்டவர்களின் கண்கள் உடைந்து கண்ணீர் ஊற்றெடுத்தது ஆனால் துணிச்சல் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தது பாடுகளின் பாதையில் பரமனை விட்டகலுகின்றனர் நண்பர்கள் மற்றும் சீடர்கள் மக்கள் என்ன நினைப்பார்களோ என பயந்து போகிறார்கள் இரத்தமும் வியர்வையும் ஆறாய் பெருக்கெடுத்தோடும் முகம் துடைக்க தானாய் தரியமாய் ஓடி வருகிறாள் ஒரு பெண் மனதில் துணிவோடும் கையில் துணியோடும் கட்டுக் காவல்களை மீறி இயேசுவின் முகத்தை துடைக்கிறார் வெரோணிக்காள் அவள் தந்த ஆறுதல் சொல்லற்கரியது எந்த ஒரு வார்த்தையின் மூலமும் வெளிப்படுத்த முடியாத ஆறுதலை வெரோணிக்காள் தன் செயல் மூலம் வெளிப்படுத்துகிறாள் அவளின் அன்பு செயலுக்கும் கருணை இதயத்திற்கும் சன்மானமாக அந்த துணியிலே தன் முகத்தை பதித்தார் இயேசு .

சிந்தனை:
உலகில் யார் முகத்தில் துயர் தெரிந்தாலும் அதைத் துடைக்க முற்படுபவர்கள் தெய்வீகக் குணம் பெற்றவர்கள். பெண்களுக்கான சம அந்தஸ்து மறுக்கப்பட்ட காலத்திலும் அதை முறியடித்த வெரோணிக்காளின் வீரம் நம்மால் என்றுமே மறக்க இயலாது. பெண் என்பவள் அன்பானவள் தான் அதையும் தாண்டி அவளுக்குள் துணிச்சலும், வாழ்வையே மாற்றும் சக்தியும் உண்டு என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். பெண்ணே உன் வீரம் நன்மை செய்வதற்காய், விடுதலை பெறுவதற்காய், வாழ்வை கொடுப்பதற்காய், மீண்டும் மீண்டும் பிறக்கட்டும். ஒரு தொழு நோயாளி விரல்கள் முடங்கி உதடுகள் வீங்கி, உடலே உருமாறி, சமுதாயத்தால் தூக்கி எறியப்பட்டோருக்கும் அடைக்கலமும் அன்பும் பொழிந்த அன்னை தெரசா பூவுலகத் தேவதை மட்டுமல்ல அவள் தனியே புறப்பட்ட ஒரு புரட்சிப்புயல். வெரோணிக்காவைப் போல படைப்பில் ஆண் - பெண் என்கிற வேறுபாடு இருக்கிறதே தவிர ஏற்றத் தாழ்வு இல்லை பெண் விடுதலை என்கிற நாகரிகமும் அலங்காரமும் மட்டுமே பெண்மைக்கு அழகு சேர்க்காது பெண்ணினம் தலை நிமிர்ந்து நின்றிட சுயமரியாதையோடு பெண்கள் முன் வர வேண்டும் கடைத் திண்ணைகளில் இருந்து விமர்சிக்கும் கயவர்களுக்கு உங்கள் சாதனைகளாலே சவுக்கடி கொடுங்கள். பெண் பிள்ளை தானே என்று ஏளனமாய் நினைப்பவர்களை உங்கள் கடின உழைப்பின் மூலம் உயரே வந்து வியக்க வையுங்கள். நீங்கள் யாருக்கும் இளைத்தவர்கள் அல்ல என்பதை வார்த்தைகளால் அல்ல: உங்கள் அறிவுக் கூர்மையால் புரிய வையுங்கள் தேர்வுகளில் முதலிடம் சாதனைகளில் விருதுகள், நிர்வாகத்தில் திறமை என்று பெண்கள் முன்னணியில் இருக்கும் போது பெண்களே நீங்கள் சமூகக் கட்டுகளை உடைத்து விட்டு வெரோணிக்காவைப் போல வெளிப்பட்டு விட்டீர்கள் என்பதை உலகம் புரிந்து கொள்ளும். இருட்டுக்குள் ஒழியும் குழி முயலாய் இல்லாமல் வெளிச்சத்தில் வலம் வரும் வேங்கையாய் புறப்படுங்கள்.

இயேசுவின் முகத்தைப் போலவே நம்மைச் சுற்றியுள்ள சமூகம் உருக்குலைந்து உருமாறி நிற்கிறது. அன்பு, இரக்கம், மன்னிப்பு என்கிற துணிகளோடு சமூக அழுக்கைத் துடைக்க வாரீர் மானிடரே...

ஜெபம்
ஆண் பெண் சம்துவத்தை விரும்பும் இயேசுவே பெண்ணினம் சமூகக் கட்டுகளால் உருக்குலைந்து போய் விடாமல் தங்கள் நிலைகளில் துணிச்சலுடன் தனித்தன்மையை கைக்கொண்டு முன்னேறிட வெரோணிக்காவிடம் இருந்த உறுதியையும், துணிச்சலையும் தாரும். - ஆமென்

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாவதாக .....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

=======================

ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால் - அந்தோ சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

ஏழாம் நிலை : இயேசு இரண்டாம் முறையாக கீழே விழுகிறார்.

இறை வார்த்தை : (ஏசாயா 53: 7.8)
அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்;டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும், உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்; அவருக்கு நேர்ந்ததைப் பற்றி அக்கறை கொண்டவர் யார்?

திருப்பாடு:
கால்கள் தளர்ச்சியுற்று கைகளிலோ நடுக்கம் தோன்ற களைத்துப் போன உடல். முன்தினம்; கெத்சமனித் தோட்டத்தில் கைது செய்யப்பட்டது முதல் அவர் ஒன்றுமே உண்ணவுமில்லை குடிக்கவுமில்லை. அடிமேல் அடிவேறு கரடுமுரடான பாதையில், உடலெங்கும் இருக்கும் காயங்கள் தரும் வேதனைகளால், வேறு வழி தெரியாமல் மீண்டும் சிலுவையோடு முகங்குப்புற கீழே விழுகின்றார். பயணம் என்றால் பாடுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் இயேசுக்கோ பாடுகளே பயணமாயிற்று. கைதூக்கி விடுவார்கள் என்று நினைத்த அவருக்கு கசையடியே கிடைத்தது. மலைகளில் அமர்ந்;து மலைத்திடும் போதனை செய்தவர் தாபோர் மலையில் உருமாறி தெய்வீகத் தன்மை கொண்டவர் கல்வாரி மலையிலே மண்ணோடு மண்ணாக விழுந்து கிடக்கின்றார் கால் வலிக்கின்றது முட்கள் குத்துகிறது பாரம் அதிகம், தூரம் தொலைவு என எந்த சோதனைகளோடும் சமரசம் செய்துக் கொள்ளாமல், தன் நண்பர்களுக்காய், அதாவது நம் ஒவ்வொருவருக்காய் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு பயணம் தொடர்கின்றார். நம் நண்பன் இயேசு.

சிந்தனை:
வாழ்க்கைப் பயணத்தில் அடிக்கடி விழுவது, இயல்பானது தான். நுடை பயில விரும்பும் பிஞ்சுக் குழந்தை தத்தித் தத்தி தரையில் விழுவதும், தள்ளாடி எழுவதும் வளர்ச்சியின் வடிவங்கள் தான். துரையில் விழுந்து எழுகின்ற குழந்தை தான், எளிதில் எழுந்து நடக்கக் கற்றக் கொள்ளுகிறது. வாழ்வில வீழ்ச்;சியே இருக்கக் கூடாது என்று மனது விண்ணப்பம் போடலாம் ஆனால் யதார்த்தம் அதற்கு தன் ஒப்பதலைக் தருவதில்லை. உலக வரலாற்றில் பலமுறை விழுந்தவர்கள் தான் பலசாலிகளாக எழுந்திருக்கிறார்கள் அடுத்தடுத்து சிக்கல்களும் சிரமங்களும் வந்;தாலும் தொல்லைகள் தொடர்கதையாக தொடர்ந்தாலும் முயற்சியை மூலதனமாக கொண்டு உழைக்கிறவர்கள் முன்னுக்கு வருகிறார்கள் எதற்கெடுத்தாலும் சாய்வுகள்;, சரிவுகள், சங்கடங்கள் என்றே சங்கீதம் வாசிக்கும் மன்தர்களே! நீங்கள் வாழ்க்கையில் எங்கே விழுந்து கிடக்குகிறீர்கள்? மூட பழக்க வழக்கங்கள், பில்லி சூன்ய பித்தலாட்ங்கள், சோதிடம் பார்ப்பது, குறி கேட்பது, சாத்திரங்களும் சகுணமும் பார்ப்பது போன்ற சாக்கடையில் விழுந்து கிடக்கின்றாயா? சுக மனிதரிடம் அன்புடன் பழகாமல், உன் அயலானை மறு கிறிஸ்துவாக பாவிக்காமல் ஏற்றத்தாழ்வுடன் சாதி என்னும் குழியில் விழுந்து கிடக்கின்றாயா? நோய் வந்ததற்கும், தொழிலில் நட்டம் ஏற்பட்டதற்கும், தேர்வில் தோற்றுப் போனதற்கும், கணவன் மனைவிக்; கிடையே சண்டை வந்ததற்கும் காரணம், பில்லி சூனியமும், செய்வினையும் காரணம் என்று நம்புகின்ற பலபேர் பெயருக்கு பின்னால் நீண்ட வரிசையில் பல்கலைக்கழகப் பட்டங்களை சுமக்கிறவர்கள். பலருக்கு சோதிடர்களே ஞான ஆலோசகர்களாக இருக்கிறார்கள். இறைவனின் கொடையான பகுத்தறிவை பயன்படுத்தி தெளிவு பெறுவோம். மூடத்தனத்தில் விழுந்தவர்களே, அறிவுத்துணையுடன் எழுவீர்.

பிரியமானவர்களே! நாம் விழுந்து கிடக்கும் இடம், நாம் மட்டுமே அறிந்;தது. அறிந்ததோடு நின்று விடாமல், அறிவு தெளிவோடு எழ முயல்வோம். விழுகிற வேகத்தை விட எழுகிற வேகம் இரட்டிப்பாக இருக்க வேண்டும். விழுந்த இடத்திலிருந்து எப்படி எழ வேண்டுமென யோசிப்பவனே எதிர் காலத்துக்கு சொந்தக்காரன்.

ஜெபம்;:
எங்கள் வாழ்க்கைப் போரட்டங்களில்;, பல்வேறு சூழ்நிலைகளால் வீழ்ந்து கிடக்கிறோம். பாவ பழக்க வழக்கங்களால் பாழ்பட்டு கிடக்கிறோம் சாதிய சிந்தனையால் புதை குழியில் கிடக்கிறோம்.எங்களுக்கு எழுந்து நடக்கிற ஆற்றலைத் தாரும் - ஆமென்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

========================

விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

எட்டாம் நிலை: எருசலேம் மகளிர் இயேசுவைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள். கதறி அழுகிறார்கள்.

இறைவார்த்தை:
எசாயா 66:13 தாய் தன் பிள்ளையைத் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.
லூக்கா 23:28 – எனக்காக அழவேண்டாம் மாறாக உங்களுக்காகவும், உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்

திருப்பாடு:
“உருகிக் கொண்டிருக்கும் மெழுகும் அடுத்தவருக்கு ஒளிகொடுத்துக் கொண்டிருக்கிறது” பெண்களுக்கு இயேசுவின் மேல் இருந்த பாசம், அவரது துயரம் கண்டு அவர்கள் சிந்திய கண்ணீர் அவர்களது அன்பின் வெளிப்பாடுதான்.
தன்னுடைய துன்பத்தால் ஆறுதல் பெறவேண்டிய ஆண்டவர் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுகின்றார்

சிந்தனை:
பாவம் இந்தப் பெண்கள். அடுத்தவரின் துன்பம் கண்டு இரக்கப்பட்டே பழக்கப் பட்டவர்கள். இயேசுவின் வேதனை கண்டு இரங்கினர். கண்ணீர் கோழைகளில் ஆயுதம் என்பர் ஆனால் இது இரக்கத்தின் வெளிப்பாடு. இன்று நம்மோடிருப்பவர்கள் துன்பப்படுவது கண்டு நீலிக் கண்ணீர் வடிக்கின்றோமா. அல்லது மனிதாபிமானத்தோடு அவர்களுக்கு ஆறுதல் அளிக்கின்றோமா? அடுத்தவர் துன்பப்பட நாமே காரணமாக அமைந்திருந்க்கிறோமா? அன்பு செய்யவேண்டிய நாம் நம்முடன் இருப்பவரை அறிவில் குறைந்தவராக, ஆற்றல் அற்றவராக, அவமானத்தின் சின்னமாக நினைத்து அவமதிக்கின்றோமா? நம்மிடம் படிக்கும் ஏழை மாணவரின் கண்ணீரைக் கண்டும் கண்மூடித்தனமாக இருக்கின்றோமா? பெண்கள்
‘கருவறையில் இருந்து கல்லறை வரை’ எல்லா நிலைகளிலும் ஆண் வர்க்கத்தால் அடக்கி வைக்கப்படுகிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் பெண்ணினம் ஆணிணத்தைவிட தாழ்ந்தது என்ற ஒரு தவறான கருத்து, அல்லது மாயை மக்கள் மத்தியில் இருக்கிறது. சிந்திப்போமா?

இயேசு:
என் அன்பு மகளே! இன்று உன் நிலை என்ன? பெண்களே நீங்கள் வாழும் சமுதாயத் தீமைகளைக் கண்டு அழுங்கள். அதிகார வர்க்கத்தின் அடக்கு முறைக்கும் வன்முறைகளுக்கும் நீங்களும் உங்கள் தலைமுறையினரும் பலியாகப்போவதை நினைத்து அழுங்கள். அழுகின்ற நீங்கள் அதே நிலையில் இருந்து விடாதீர்கள்! துடையுங்கள் உங்கள் கண்களை! ஆறுதல் அடையுங்கள். அனைத்து தீய சக்திகளையும் எதிர்த்துப் போராட நான் தரும் வலிமையினைப் பெற்று என் பின்னே வாருங்கள். பெண்களே நீங்கள் அழ வேண்டியவர்கள் அல்லர். சமூக அக்கிரமங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போராட வேண்டியவர்கள். செல்லுங்கள் பெண் இயக்கங்களாக ஒன்று சேர்ந்து போராடுங்கள். ஒரு அவலமாக அபாயகரமான சூழலில் யார் யாருக்கு ஆறுதல் சொல்வது? குடும்ப பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்வதா? அல்லது குழந்தைகள் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதா? சோகக் கண்ணீரை வெற்றிக் கண்ணீராக, ஆனந்தக் கண்ணீராக மாற்ற நம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்.

செபம்:
துன்புறுவோரின் துயர் துடைக்கும் இயேசுவே! எருசலேம் நகரப் பெண்களுக்கு நீர் கூறிய ஆறுதல் மொழிகள் உண்மையாகவே எங்கள் இதயங்களைத் தொடுகின்றன. எங்கள் வாழ்வில் நாங்கள் கூறும் ஆறுதல் மொழிகளும் எங்கள் உடன் வாழும் மனிதர்களுக்கு முழுமையான ஆறுதலைத் தர அருள்தாரும் - ஆமென்.

அருள் நிறைந்த மரியே வாழ்க....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

========================

மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால் ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

ஒன்பதாம நிலை: இயேசு மூன்றாம் முறையாக கீழே விழுகின்றார்.

இறை வார்த்தை:
திருப்பாடல் 20:1,2 நெருக்கடி வேளையில் உமக்கு ஆண்டவர் பதிலளிப்பாராக. யாக்கோபின் கடவுளது பெயர் உம்மைப் பாதுகாப்பதாக. தூயகத்திலிருந்து அவர் உமக்கு உதவி அனுப்புவாராக. சீயோனிலிருந்து அவர் உமக்குத் துணை செய்வாராக.

மத்தேயு 16:24 "என்னை பின்பற்ற விரும்பும் எவனும்தன் நலம் துறந்து தன் சிலுவையை தூக்கிக் கொண்டு என்னை தொடட்டும் ஏனைன்றால் தன் உயிரை காத்துக கொள்பவன்; எவனும் அதை இழக்க விடுவான் மாறாக என்பொருட்டு தன்னையே அழித்துக் கொள்பவன் வாழ்வடைவான்."

திருப்பாடு:
மனிதா நாளை என்ன நடக்கும் என்பதை மறந்து, பிறர் படும் துன்பங்களை மறந்து, நான் தான் பெரியவன் என்ற மனம் போனபடி வாழ்கின்றாயே அப்போதெல்லாம் நான் இச்சிலுவையின் பாரத்தால் கீழே விழுகின்றேன். உன்னை நம்பி வாழும் உன் குடும்பத்தில் மனைவி மக்களை மறந்து குடி போதையில் குடும்பத்தில் குழப்பம் விளைவிக்கின்றாயே அப்போதெல்லாம் நான் இச்சிலுவையின் பாரத்தால் கீழே விழுகின்றேன். வீதியிலே உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி உயிர் போய் கொண்டிருக்கும் நண்பனை பார்த்து விட்டு கண்மூடித்தனமாய் போய் கொண்டிருக்கிறாயே அப்போதெல்லாம் நான் இச்சிலுவையின் பாரத்தால் கீழே விழுகின்றேன்.

சிந்தனை:
கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தாலொழிய பலன் தராது. துன்பங்களை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் போது விடுதலை கிடக்கிறது. சிலுவைத் துன்பம் அன்பின் பரிமாற்றமே. இதற்காகவே ஆண்;டவர் எத்தனை முறை குப்புற விழுந்தாலும் தம் பிதாவின் சித்தம் நிறைவேறவும் நாம் செய்த பாவ துரோகங்களுக்காகவும் இச்சிலுவை சாவை ஏற்றுக் கொள்கிறார். இந்த துன்ப பயணத்தில் 3 முறையும் முழங்கால்கள் மடிய முகம் குப்புற விழுகின்றார். மனிதரின் பாவங்களைப் போக்கித் தூயோராக்கத் தம்மையே பலியாகக் கொடுக்க வேண்டும் என்ற இறைவனின் திருச்சித்தத்தை நிறைவேற்ற விழுந்தவர் மீண்டும் கல்வாரிப் பயணத்தைத் தொடர்கிறார். எத்தனை துயரங்கள் எத்தனை முறை வந்தாலென்ன, சகோதரனே! சகோதரியே! கீழே விழுந்தாலும் எழுந்து நில். கடவுள் நம்பிக்கைக் குரியர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார். 'சோதனை வரும்போது அதைத் தாங்கிக் கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார். அதிலிருந்து விடுபட வழிசெய்வார்' என்ற இறைவாக்கை நம்புவோம்.

ஜெபம்:
இறைவா நீர் உமது தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றவும், மக்களின் பாவ துரோகங்களுக்காகவும் உம்மையே அர்ப்பணித்து சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டீர். மூன்றாம் முறை விழுந்தபோதும் உடன் எழுந்து உமது பயணத்தை தொடர்ந்தீர். நாங்கள் எத்னை முறை பாவத்தில் விழுந்தாலும் உடனே அதிலிருந்து எழுந்து உமது அருளுதவியால் மீண்டும் நாங்கள் உமது வழியைப் பின் பற்றி நடக்க உமது வல்லமையைத் தந்தருளும். எங்களது வலுவின்மையில் உமது வல்லமை நிறைவாய் வெளிப்பட அருள் புரியவேண்டுமென்று வேண்டுமென்று உம்மை மான்றாடுகிறோம் - ஆமென்

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாவதாக .....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

========================

உடைகள் களைந்திட உமைத் தந்தீர் - இரத்த மடைகள் திறந்திட மெய் நொந்தீர்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

பத்தாம் நிலை: இயேசுவின் ஆடைகளைக் களைகிறார்கள்.

இறை வார்த்தை:
ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும் போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல், உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள், குளிர் காய்ந்து கொள்ளுங்கள், பசியாற்றிக் கொள்ளுங்கள்,” என்பாரென்றால் அதனால் பயன் என்ன? (யாக் 2;15இ16)

திருப்பாடுகள்:
நேரம் நெருங்கி விட்டது, சோர்ந்து தளர்ந்து தவழ்ந்து கூனிக் குறுகி நிற்கிறார். ஆவர் இருப்பதைல்லாம், நமக்காக இழந்தாh!;. நாடி நரம்புகள் வலுவிழந்து விட்டன. ஒரு மனிதனை எவ்வளவு கொடுமை செய்து சித்ரவதை செய்ய முடியுமோ அதை விட பலமடங்கு செய்தாகி விட்டது. கண்கள் பஞ்சடைநத்து போயின பலருக்கு பார்வை iகாடுத்த இயேசுவின் பார்வை காயங்களால் பஞ்சடைந்து போயின. நிமிர்ந்து நிற்க முடியாமல் தள்ளாடுகிறார். இன்னும் அவரை வதைக்க எதுவும் மிஞ்சவில்லை! எலும்புகள் நொறுங்கி போயின! இரத்த நாளங்கள் ஆறாகப்பெருக்கெடுக்கின்றன! வீரர்கள் உடலோடு ஒட்யிருக்கும் ஆடையை இழுக்கின்றார்கள் வென்னிற ஆடை செந்நிறமாய் மாறிப்போனது! சதையோ அதோடு ஒட்டி உலர்ந்து போனது கழற்ற முடியவில்லை. செம்மறி ஆட்டின் தோலை உரித்தெடுப்பது போல் உரிக்கிறார்கள். சதையோடு ஆடை கிழிந்து வருகிறது. இயேசு அவமானப்பட்டது போததென்று அவரது ஆடையை பறித்து அலங்கோலப்படுத்துகிறார்கள்! அவரது ஆடையை சீட்டு போட்டு எடுத்துக் கொண்டார்கள் எனும் வேதவாக்கு நிறைவேறுமா! என்ன துரோகம் செய்தார்? நற்செய்தி போதித்து நாடெங்கும் நன்மையே செய்த தேவன் என்ன துரோகம் செய்தார்?.

இயேசு:
அன்பர்களே, என் ஆடைகளையா, அவர்கள் கைப்பற்றினார்கள்? இல்லை, என் அடிப்படை உரிமைகளையே அவகரித்துக் கொண்டார்கள். என்னையும் மனிதனாகப் பார்க்காமல், நிர்வணமாக்கி, அசிங்கப் படுத்துகிறார்கள், நண்பர்களே, எங்கெல்லாம் மனித மாண்புக்கு எதிரான நிகழ்வுகள் நடந்தேருகின்றனவோ, எங்கெல்லாம் சாதி, மதம், பணம், பதவி, என்ற பெயரால் மனிதம் கூறுபோடப்பட்டு, நசுக்கப்படுகினடறதோ, அங்கெல்லாம் நான் ஆடையிழந்து அவமானப்படுகிறேன்.

சிந்தனை:
இயேசு உடுத்தியிந்;த செந்நிற ஆடையைக் களைகிறார்கள் ஏழைகளிடம் வட்டி வாங்கதே வட்;டி வரவில்லை என்ற காரணத்திற்காக அவனது மேலாடையை நீ அடகாக வாங்கதே என்கிறார் (விப 22:26) இன்று உலகில் கந்து வட்டிக்காக மனிதர்கள் உயிர் விடுவதைப் பார்க்கிறோம், இயேசுவின் உடைகளை உரிக்கிறேன் என்று அவரது சதையையும் கிழித்தார்கள். ஆபாச உடை அணிந்து சிலர் பிறர் உள்ளங்களை கிழித்து பாவத்துக்கு உள்ளாக்கும் இழிநிலையைப் பார்க்கிறோம். ஆடைகளைக் கொண்டு மனிதனை எடைபோடும் மனநிலை வளர்ந்து விட்டது. எண்சாண் உடலை மறைக்கத்தான் உடை, வீண் அலங்காரத்திற்கு அல்ல, என்பதை நினைவில் கொள்வோம். உண்மை நிலைமையை மறைக்கும் வேடங்கள். நான் என்ற அகந்தை, மமதை இது போன்ற ஆடைகளை, நாம் களைவோம், நாம் நாமாக வாழ முயற்சி செய்வோம்.

ஜெபம்:
‘உங்கள் அங்கியை எடுத்துக் கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையைக் கொடுத்து விடு. இரண்டு ஆடை இருந்தால் ஒன்றை இல்லாதவனுக்கு கொடு’ என்ற இயேசு, உடைகளை அல்ல உள்ளங்களை கிழிக்க நம்மை அழைக்கிறார். இயேசுவே உம் உடைகளை கிழித்த நாங்கள், எம் உள்ளங்களை கிழித்து பார்த்து, நேரிய வாழ்க்கை வாழ வரமருளும். ஆமென்;

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

========================

பொங்கிய உதிரம் வடிந்திடவே - உம்மைத் தொங்கிடச் செய்தார் சிலுவையிலே
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

பதினொன்றாம் நிலை: இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள்.

இறை வார்த்தை:
மாற்கு:- 14:48,49 கள்வனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும், தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக் கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னை பிடிக்கவில்லையே! ஆனால் மஙைநூலில் எழுதப்பட்டுள்ளவை நிறைவேற வேண்டும் என்றார்.

மத்தேயு:- 27:39,40 கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே உன்னையே விடுவித்துக்கொள். நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைப் பழித்துரைத்தார்கள்.
தி.பா – 22:16 தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது.

லூக்கா:-23:37,38 நீ யூதரின்; அரசன் ஆனால் உன்னையே காப்பாற்றிக்கொள் என்று எள்ளி நகையாடினர். இவன் யூதரின் அரசன் என்று எழுதியிருந்த பலகையை அவர் தலைக்கு மேல் வைத்தனர்.

சிந்தனை
இயேசுவை சிலுவையில் பிணைக்க 3 ஆணிகளை அடிக்கும் ஓசை கல்குவாரியில் எதிரொலிக்கிறது. அவருடைய நரம்புகள் தெரித்து சதை கிழிந்து மிகவும் வேதனையோடு வெயிலில் போடப்பட்ட வெள்ளைப் புழுவாக துடிக்கிறார் இயேசு. மூவுலகையும் முக்காலத்தையும் படைத்தவர் மூன்று ஆணிகட்குள் அடக்கப்பட்டுள்ளாh.; அது ஆணிக்கும் மரத்திற்கும் கூட உயிர் இருந்தது எனலாம்.உலகைப் படைத்தவருக்கே இந்த நிலை என்றால் பாவிகளாகிய நமக்கு என்ன தண்டனையோ. நாம் ஒரு நிமிடம் கண்மூடி சிந்திப்போம். சிலுவையில் அறைந்தாலும் அவர் அவர்களுக்காக தன் தந்தையிடம் வேண்டினார். தந்தையே இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும் என்று மன்றாடினார். மன்னிக்கும் மனப்பான்மை இன்று நம்மிடையே எத்தனை பேருக்கு உள்ளது. எதற்கு எடுத்தாலும் கோபமும், எரிச்சலும், பழிக்குப்பழி வாங்கும் மனப்பான்மையும் நம் வாழ்வில் ஒன்றாக கலந்துவிட்டது. நமது வாழ்வில் கோபமும் எரிச்சலும் பழிக்குப்பழி வாங்கும் மனப்பான்மையும் அறவே ஒழித்து பிறரை மன்னித்து சமாதானத்தோடு வாழவும் நமது வாழ்வில் ஏற்படும் வியாதி கவலை, துன்பம் அனைத்தையும் அவரது பாடுகளின் காயங்களை நமது திருந்திய உள்ளம் எனும் மருந்தால் ஆற்றுப்படுத்த ஆண்டவர் நம்மை அழைக்கிறார்.

இயேசு
என்னைப் பார்ப்போர் எல்லோரும் என்னை ஏளனம் செய்கின்றனர். உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்கின்றனர். நான் தரையில் கொட்டப்;பட்ட நீர் போலானேன். என் எலும்புகள் எல்லாம் நொருங்கி சதைகள் கிழிந்து போயின. பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது. என் கைகளையும் கால்களையும் இரும்பு ஆணிகளால் என்னை துளைத்தார்கள். என்னை காறி உமிழ்ந்தார்கள் கசையால் அடித்தார்கள். நான் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றவே பொறுமையுடன் சகித்துக் கொண்டேன். பார்வையற்றோரை பார்வை பெறவும் , நோயால் பீடிக்கப்பட்டோரை தொட்டுக் குணமாக்கவும். வன்முறை, பொய் உரைக்கும் நாவு, இரக்கமின்மை இவற்றை கலைந்து. அன்பு, அமைதி, சமாதானம் இவைகளை பின்பற்றி இறைவழி தொடர உங்களுக்காக இந்த சிலுவையில் அறைப்படுகிறேன்.

ஜெபம்
எங்கள் அன்பான இயேசுவே நீர் இவ்வுலகின் அமைதியின் பிறப்பிடமாய் ஆறுதலின் ஊற்றாய் எங்களோடு இருந்தீர். ஆனால் நாங்கள் உம்மை அறியாதவர்களாய் உம்மையே சிலுவையில் அறையத் துணிந்து விட்டோம்.
உலக மாயைகளை நம்பி உண்மையான வாழ்வை தொலைத்துக் கொண்டு வாழும் இந்த பூமி. இது சினிமாவையும், அரசியலையும் நம்பி வாழும் நயவஞ்சகர்கள் கூடி உள்ள இந்த இடம் நாங்கள் உலகப் பொருட்களின் மேல் அதிகமான ஆசை வைக்காமலும் மன்னியுங்கள் மன்னிக்கப்படுவீர்கள் என்று சொன்னவரை எங்கள் வாழ்வில் பிறரை மன்னிக்கவும் சமாதானத்தோடும் அன்போடு வாழவும் இறைவன் ஒருவரே என்று என்னி சிலுவை நாயகனின் பாதம் பணிய வரம் தாரும்.

அருள் நிறைந்த மரியே வாழ்க....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

========================

இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

பன்னிரெண்டாம் நிலை: இயேசு சிலுவையில் உயிர் துறக்கிறார்.

இறை வார்த்தை: மத்தேயு 27:45-50
நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்று மணியளவில் இயேசு, "ஏலி, ஏலி லெமா சபக்தானி?" அதாவது, "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று உரத்த குரலில் கத்தினார். அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, "இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்" என்றனர். உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். மற்றவர்களோ, "பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்" என்றார்கள். இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.

திருப்பாடுகள்:
காலம் காலமாய் வளர்த்து வந்த சட்டத்திட்டங்களான பகட்டு கிறிஸ்துவம், இதோ உயர்த்தியிருக்கும் “மனிதனைப்” பாருங்கள். மனிதனின் மதம், சட்டம், ஒழுங்கு, ஆச்சாரம் எதுவும், அன்பில்லாத, அடிப்படையற்ற ஆன்மிகத்தை உலுக்கி எடுத்து அதன்பின் ஆழமான , ஆத்மீகத்தை செயலாக்கித் தந்தவன் உயர்த்தப் பெற்றுள்ளான்.

தெய்வீகம், அன்;பு, அர்ப்பணம் எனும் மூன்று ஆணிகளில் இதுவரை இருந்து வந்த அமைப்பு முறைமைகளின் அந்நியாய சட்டதிட்டங்கள், இதோ குத்தி கிழபட்டு தொங்கவிடப்பட்டுள்ளன.
அல்லேலூயா அல்லேலூயா, இயேசு உன்னைத் தொடுகிறார் உன்னை சுகப்படுத்துகிறார் என்பது ஒன்றே கிறிஸ்துவம் என்றாகிப் போன கிறிஸ்தவத்தின் மூகமூடிகள், கிழித்தெறியப்பட்டு எல்லாவற்றிலும் வெறுமையான உண்மைக் கிறிஸ்துவம் இதோ தொங்கிக் கொண்டுள்ளது.

இதோ, இயேசு- கிறிஸ்துவாக உயர்த்தப் பெற்றிருக்கின்றார். பரிசேய, சதுசேய, லேவிய, பொது நிலையான ஓநாய்களிடையே அனுப்பபட்ட ஆடு இதோ உயர்த்தப்பட்டுள்ளது.
இதோ மனு உரு எடுத்த தெய்வீகம், உண்மை கிறிஸ்துவ ஆன்மிகத்தில் தாகம் கொண்ட இயேசு இதோ தாகத்தோடு தொங்குகிறார்.
ஆயிரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரங்கள், அடிப்படையற்ற அல்லேலூயா ஆர்ப்பரிப்புகளோடு ஆண்டவரே, ஆண்டவரே என்று கதறும் போதகரல்ல இவர். தந்தையும நானும் ஒன்;றே என்ற அன்பின் பிணைப்பைக் காட்டும் இயேசு கிறிஸ்துவை காணுங்கள். மேளனத்தால், பணிவால், பண்பால், செயலால், தான் சார்ந்த சபைக்காப்பாளர்களால் கொல்லப்படும் கிறிஸ்து-“என் மகனே என் மகனே ஏன் என்னை கை நெகிழ்கிறாய்” என்று கதறி உன்னுள் உயிர்விடுகிறார் இயேசு.

சிந்தனை
இதோ இயேசு பெறும் கடைசி அடையாளம் . இன்றைய கிறிஸ்துவம் இவ்வுலகில் அடைய வேண்டிய உச்சகட்ட இறுதியான –தோல்வி நிலை.
இந்த இயேசு கிறிஸ்து வாழ்ந்தபோது எதில்தான் வெற்றி பெற்றார்? தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு தன்னோடு உண்டு உறங்கச் செய்து தாம் தயாரித்த தம் சீடர்கள், தான் வாழ்ந்த காலத்தில் தன்னைப் போல் வாழச் செய்ததில் வெற்றிக் கண்டாரா? தன்னால் புதுமையாக சுகம் பெற்றவனிடம் யாருக்கும் சொல்லாதே என்று சொல்லி அனுப்பினாரே, அதில் தான் வெற்றி பெற்றாரே? கள்வர் குகையாகவும், வியாபாரத் தலமுமாய் மாறி;ப்போன ஆலயத்துள் இருந்தோரை சவுக்கால் விரட்டியடித்தாரே அதில் தான் வெற்றி பெற்றாரா?

அன்று தொடங்கி இன்றுவரை கிறிஸ்துவம் இவ்வுலகில் காண்பது தோல்வியைத்தான். தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு உயிரைத் தந்த இராயப்பரில் வளர்நத்து .அம்பினால் குத்தப்பட்டு மரித்த செபஸ்தியார் கிறிஸ்துவன் என்பதற்காக தான் அடைந்த காயங்களின் மேல் தடவப்பட்ட உப்பினால் ஏற்பட்ட எரிச்சலாலும் இரத்த பெருக்காலும், உயிர் தந்த புனித வின்சென்ட், தம் தாய் மண்ணில் தலை கொல்லப்பட்டு உயிர் தந்த அருளானந்தர் இன்னும் கணக்கிலடங்கா கிறிஸ்துவர்களின், உலகத்தின் தோல்வியாம் உயிரை இழப்பதில் தான் வளர்வது கிறிஸ்துவமாம். இதுதான் இன்றும் இயேசு விடுக்கும் கேள்விகள் வியாபாரத் தலமாகிப் போன ஆலயங்கள் இன்றில்லையா? சுயலாபத்துக்காக சுரண்டும் கூட்டம் இல்லையா? பாவத்திற்காக (இயேசுவின்) தன் இரத்ததால் கழுவிய பின்பும் நாம் பாவத்தை செய்யவில்லையா? புதவி ஆசை இருந்ததில்லையா? உனக்கு தீங்கு செய்தவற்களை மன்னித்திருக்கிறியா?
நீயும் நானும் அழைக்கப்படுகின்றோம், கிறிஸ்துவ சமுதாய கட்டமைப்புகளைப் புதுப்பிக்க. கிறிஸ்துவம் கால் முறித்து ஊனமாக்கப்படவில்லை. மாறாக குத்தித் திறக்கப்பட்டு உதிரமும் நீருமாக வழிந்தோடுகிறது என்ற எண்ணத்தில் வாழ்வோமா?

மன்னிப்பாயா:
இறைவா என்னை மன்னிப்பாயா…..ஊதாரி மனிதனாய் ஊர் ஊராய் அலைந்தேன், தந்தை வீடு திரும்பி தனை என்னை ஏற்று மன்னிப்பாயா, குடிவெறியால் என் குடும்பத்தை தொலைத்தேன் மன்னிப்பாயா, தரம்கெட்ட மகளினை தேடி அழைந்தேன் மன்னிப்பாயா, தகாத வார்த்தையால் தவறு இழைத்தேன் மன்னிப்பாயா, புறம்கூறி பிறர்க்கு எதிராக இழுத்திட செய்தேன் மன்னிப்பாயா, பொறாமை கொண்டு பிறருக்கு வஞ்சகம் செய்தேன் மன்னிப்பாயா, வரவுக்கு மறீய வீண்செலவுகளை செய்தேன் மன்னிப்பாயா, வாழ துடித்த என் கருவையையும் கொன்றேன் மன்னிப்பாயா, ஞாயிறு திருப்பலி சென்றிட மறந்தேன் மன்னிப்பாயா, ஞாயிறு மறைக்கல்வி கற்பதை வெறுத்தேன் மன்னிப்பாயா, என் தீய பழக்கத்தால் படிப்பையும் தொலைத்தேன் மன்னிப்பாயா, வார்த்தையில் மாறாத தெய்வத்தை மறந்தேன் மன்னிப்பாயா, நீரே என் கடவுள் நீரே என் ஆண்டவரே எனை முழுவதும் உமக்கே ஒப்படைக்கின்றேன் மன்னிப்பாயா……

செபம்:
எங்களுக்காக மரித்த இயேசுவே, நண்பர்கள் என்று எங்களை அழைத்து, நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு இந்த உலகிலே இல்லை, என்று சொன்ன நீர் உம் இறப்பின் வழி அந்த வார்த்தையை வாழ்வாக்கி காட்டியிருக்கின்றீர். நன்றி கூறி உம் மாதிரிகையை நாங்களும் பின்பற்றி, பிறருக்காக என்னையே, உங்களது வாழ்வையே கையளித்து வாழ உறுதி கொள்கிறேன். எங்களுக்கு உதவி செய்ய விரைந்து வாரும் அன்புத் தந்தையே – ஆமென்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாவதாக .....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

========================

துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை உயிரற்ற உடலினை மடி சுமந்து
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

பதிமுன்றாம் நிலை: இயேசுவின் மரித்த உடலை அன்னை மரியாளின் மடியில் கிடத்துகிறார்கள்.

இறைவார்த்தை:(லூக்கா 2:34,35)
சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி , “இதோ, இக்குழந்தை இஸ்ரேயல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்.
எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்;. இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.

திருப்பாடு:
பூமியின் மடியில் பூஞ்சோலை கண் விழிக்கும்; செடியின் மடியில் மலர் துயிலும்; வானத்தின் மடியில் நிலவு தவழும்; தாயின் மடியில் சேய் கண்ணயரும்; இது இயற்கையின் நியதி- ஆனால் இங்கே பாலை நிலத்தில் கருகிய மலராய், செடியில் முள்ளாய், உயிரற்ற உடலாய் தாயின் மடியில் இயேசு! பெற்றோர்களின்;; ஈமச்சடங்கிற்கும் பிள்ளைகள் போவார்கள். அய்யகோ! ஆனால் இங்கே, தன் மகனின் ஈமச்சடங்கை நடத்துகிறாள் தாய் மரியாள் முப்பத்து மூன்று ஆண்டுகட்கு முன்பு பெத்லகேம்; நகரின் மாட்டைத் தொழுவில் குழந்தை இயேசுவை மடியில் தாங்கிய அன்னை மரியா. இப்போது அதே இயேசுவைத் தன் மடியில் உயிரற்;ற உடலாய் சுமக்கிறார். துயரங்களை சுமக்கும் வியாகுல அன்னையாய் மரியாளின் உள்ளம் பதைபதைக்கிறது. உடம்பெல்லாம் நடுங்குகிறது. “ உமது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்ற சிமியோனின் வார்த்தைகளை அன்று கேட்ட மரியாள், இன்று உள்ளம் உடைத்தவராய் மரித்த இயேசுவின் உடலை மடியில் தாங்கிப் பிடிக்கிறாள். பிறப்பின் போதும் இறப்பின் போதும். பெற்ற தாயின் மடியில் தவழும் வாய்ப்பு இயேசுவிற்கு கிடைத்திருக்கிறது. மகனை மடியில் தாங்கி இன்றும் வாய்விட்டு அழுகிறாள். மகன் இறந்து விட்டாரே என்று அல்ல.தன் மகனின் சாவு இன்னும் புரிந்துக் கொள்ளப்பட்டவில்லையே, என்று கதறி அழுகிறார். யாரும் மனம் மாறாமல், இதயங்களில் ஈரமில்லாமல், இரக்கமில்லாமல், அன்பு இல்லாமல் இருப்பதை கண்டு அழுகிறாளா???

சிந்தனை:
மரணத்தைத் தழுவி தன் மடியில் தலை சாய்த்திருக்கும் மகனை எண்ணி மட்டும் மரியாள் வியாகுலம் கொள்ளவில்லை. தாய்மார்களே, பிள்ளைகளைப் பெற்றதோடு உங்கள் கடமை முடிந்ததாக எண்ணி விடாதீர்கள். பொறுப்புள்ள பெற்றோராய் நீங்கள் இல்லாததால் தானே உங்கள் பிள்ளைகள் பொறுப்பிழந்து, ஊதாரிப் பிள்ளையாய் காட்சியளிக்கின்றனர்.
உணவூட்டுவதோடு உங்கள் கடமை முடிந்து போவதில்லை. அறிவூட்டி, அறநெறியூட்டி வாழ்க்கைப் பாடத்தை போதியுங்கள். பெற்றோர்களே நீங்கள் உங்கள் பிள்ளைகளைக் கவனமாக வளர்க்காவிட்டால் கண்டிப்பாக நீங்கள் கணக்குக் கொடுத்தாக வேண்டும். கெட்ட நடத்தை, தீயப்பேச்சு, தீயப்பார்வை, போதைப்பழக்கம், புகைப்பழக்கம்,சோம்பேறித்தனம் இவற்றை றம் குழந்தைகள் பெற்றோரிடமிருந்தே கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளை மருத்துவராக வேண்டும்,வழக்கறிஞராக்க வேண்டும், பொறியாளராக்க வேண்டும் என்று கவனம் கொள்கிறோம். இவர்களை எப்போது மனிதர்களாக்கப் போகிறோம். பெற்றோர்களே, பிள்ளை வளர்ப்பதில் தவறு செய்து இருக்கிறோம் என்பதை உணர்கிறீர்களா? வுhழ்வை மாற்ற , தீர்மானம் எடுக்க தயாரா?? மரியன்னையைப் போல ஒவ்வொரு அன்னையும் மாறிவிட்டால், இந்த உலகில் இயேசுக்களுக்கு பஞ்சமிருக்காது.அன்னை மரியாள் பெற்றெடுத்த இயேசு, இந்த பூமிக்கு விடுதலையைக் கொண்டு வந்தார். தாய்மார்களே, உங்கள் குழந்தைகள். இந்த பூமிக்கு எதைக் கொண்டு வருவார்கள்???

தாய்மார்களே, எப்போது இனி; மறு இயேசுக்களை பிரசவிக்க போகிறீர்கள்???

செபம்:
இயேசுவின் பாடுகளில் பங்கேற்ற அன்னை மரியே… உம்மை போன்று சமூக அக்கறையும், அர்ப்பனை உணர்வும் கொண்டு எங்கள் சமுதாயத்தில் இனி இயேசு நாதர்களை உருவாக்கும் மனநிலைகளை எங்களுக்கு உமது மகன் வழியாகப் பெற்று தந்தருளும்.-ஆமென்

விண்ணுலகில் இருக்கின்ற ....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

========================

ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர் அடங்கிய கல்லறை உமதன்று
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக


வழிநடத்துனர்: திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றோம்.
மக்கள்: அதேனென்றால் உமது பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

பதிநான்காம் நிலை: இயேசுவின் உடலை அடக்கம் செய்கிறார்கள்

இறைவார்த்தை : மத்தேயு 27:57-66
மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான். யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார். அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர். மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள். அவர்கள், "ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது "மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன்" என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது. ஆகையால் மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, "இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்" என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும்" என்றனர். அதற்குப் பிலாத்து அவர்களிடம், "உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள்" என்றார். அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

சிந்தனை:
வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல், தங்களுக்காகவே இறந்து உயிர் பெற்றெழுந்தவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்.
பிறப்பதற்கு மாட்டுக் கொட்டகை, வாழ்வதற்து வீடின்றி, வீதிகளிலும, மலைகளும், பாழ்வெளிகளுந்தான். சாவதற்கு விண்ணிற்கும் மண்ணிற்கும் நடுவில் யாருக்கும் சொந்தமில்லா இடம். அடக்கம் செய்வதற்கு மாற்றானின் கல்லறை. "நரிகளுக்கு பதுங்கு குழிகள், வானத்துப் பறவைகளுக்கு கூடுகள் உண்டு, ஆனால் மனுமகனுக்கோ தலைசாய்க்கக் கூட இடமில்லை என்று இயேசு சொன்னது உண்மையாகிறது. இவ்வாறு தனக்கென வாழாமல் எளிமைக் கோலம் கொண்டு பிறருக்கென வாழ்ந்து தன்னையே தாழ்த்திக் கொண்டதால்தான் கடவுளும் இயேசு கிறிஸ்துவை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே கிறிஸ்து இறந்தார், பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்.
அவர் இறந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். எனவே நமது பழைய பாவ இயல்புகளையெல்லாம் கல்லறையிலே புதைத்துவிட்டு, புதிய மனிதராய் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுவோம். ஏனெனில் கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின் அவரோடு நாம் வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இயேசுவின் கல்லறையின் அருகே நின்றுகொண்டு, அவருக்காக ஒப்பாரி வைத்து புலம்பி அழாமல், நமக்காகவும் நம் பிள்ளைகளுக்காகவும் அவரிடம் வேண்டுவோம். மனம் மாறுவோம். கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மட்டுமே பெருமைப்படுவோம்.கிறிஸ்தேசுவில் புதுவாழ்வு காண்போம்.

செபம்:
எங்களுக்காக கல்லறையில் நல் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவே, விதைத்தவர் உறங்கலாம், ஆனால் விதைகள் உறங்குவதில்லை என்ற கூற்றுக்கேற்ப, நீர் கல்லறையில் உறங்கவில்லை. மாறாக நீர் கல்லறையில் இருந்து உயிர் பெற்றெழுந்தீர். கல்லறைகளிலே உறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் ஒவ்வொருவரையும் நீர் தாமே உயிர்ப்பித்தருளும். சுயநலன்கள், வேண்டாவெறுப்புகள், சண்டை சச்சரவுகள், அடக்குமுறைகள் போன்ற கல்லறைகளினின்று எங்களை விடுவித்தருளும். தீய எண்ணங்கள், பிரிவினைச் சக்திகள், போலி மதிப்பீடுகள், நுகர்வு கலாச்சாரம், வன்கொடுமை, தாழ்வு மனப்பான்மை, போன்ற தீய சக்திகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றும். வாழ்வுதரவே வந்தேன், என்ற உம் வார்த்தைக்கு ஏற்ப நாங்கள் நிறைவாழ்வு காணச் செய்தருளும். பிறரையும் மகிழ்வாக வாழ்ந்திடச் செய்ய எங்களுக்கு நல்ல மனதினைத் தந்தருளும். எங்கள் பாவ இயல்புகளைக் களைந்து, உம்மில் புதுவாழ்வு பெறவும், உமக்கு சாட்சியாக வாழும் வரத்தையும் தந்தருளும். –ஆமென்.

அருள் நிறைந்த மரியே வாழ்க....

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாவதாக .....

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிறும்
மரித்த விசுவாசிகளின் ஆத்மாகள் நித்திய சமாதானத்தில் இளைப்பரக் கடவது – ஆமென்.

முடிவுரை:
ஆண்டு ஆண்டு தவக்காலம், எத்தனை சிலுவைப்பாதைகளை எத்தனை முறை தியானித்தாலும், மீண்டும் மீண்டும் அப்படியே வாழ்ந்துவிட்டுப் போவதற்காகவா இந்த தவக்காலம்? நேற்று போலவே இன்றும், இன்று போலவே நாளையும் என்றால் நாம் நம் ஆன்மீக வாழ்வில் புதுவாழ்வு காண்பது எப்போது? தவக்காலத்தில் ஒவ்வொறு வெள்ளிக்கிழமையும் சிலுவைப்பாதை தியானித்து, அல்லது இந்த 40 நாட்களும் சிலுவைப் பாதை செபிப்பது நல்ல முயற்சிதானெற்றாலும் இது கடமையை நிறைவேற்றுகின்ற சடங்காக போனது என்றால் எந்த வித பலனும் இல்லை. இந்த சிலுவைப் பாதை ஏற்படுத்திய அதிர்வுகளை, தாக்கங்களை இன்னும் அதிகமாக உள்வாங்கி, அதை நிறைவேற்ற தாகம் கொண்டால் மட்டுமே, நாம் முழுப் பயனையும் பெற முடியும்.

வழியும், வாழ்வும், உயிரும் நானே என்றுரைத்தார் நம் ஆண்டவர் இயேசு. அந்த வாழ்வின் பாதைகளைத் தெளிவுறக் கற்றுக் கொடுக்க, நீரே உம்மைத் தாழ்த்தி, மனித அவதாரம் ஏற்று இவ்வுலகில் மனிட மகனாய் எங்களிடையே வந்தீர். ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்றீர். உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் இருங்கள் என்றீர். நற்செயல்கள் என்கிற உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க என்றீர். தட்டுங்கள் திறக்கப்படும் என்றீர். நீர் சமாதானத்தின் தூதுவராக இவ்வுலகிற்கு வந்தீர்.

இன்று நாம் தியானித்தவை நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையாய் நமக்குப் பலன் தர வேண்டுவோம். இன்றே ஏற்புடைய காலம், இதுவே நமக்கு சரியான தருணம் என எண்ணி புதிய பயணத்தைத் தொடர்வோம். திருமுழுக்கின் வழியாக நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவியின் அருளால், நம்பிக்கையுடன், தளரா மனத்துடன் சான்று பகர, அனைவரையும் அன்புடன் ஏற்று புதிய மனிதராய் வாழ்ந்து இயேசுக்கு சாட்சிகளாய் வாழ முயற்சிப்போம். அன்னை கன்னிமரியாள் நமக்காக பரிந்து பேச மன்றாடுவோம். –ஆமென்.

====================

பொருத்தருளும் கர்த்தாவே …
உமது ஜனத்தின் பாவங்களைப் பொருத்தருளும்
என்றென்றைகும் எங்கள் மேல் கோபமாய் இராதேயும் சுவாமி
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்.

பரிசுத்த திருத் தந்தையின் கருக்துக்களுக்காக ஜெபிப்போம்... விண்ணுலகில்... அருள் நிறை... தந்தைக்கும்...

======================

 

 

 

 

image