குருத்து ஞாயிறு - இயேசுவின் திருப்பாடுகள்

நற்செய்தி வாசகம் - முதல் ஆண்டு (2014, 2017, 2020, 2023)

மத்தேயு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 26:14 - 27:66

வாசிப்பவர் : பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து,

யூதாஸ்: இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?"

வாசிப்பவர் : என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து,

சீடர்கள்: "நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?"

வாசிப்பவர் : என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம்,

இயேசு: "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், "எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன்" எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்; "

வாசிப்பவர் : என்றார். இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர்,

இயேசு: "உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்"

வாசிப்பவர் : என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய்,

சீடர்கள்: "ஆண்டவரே, அது நானோ?"

வாசிப்பவர் : என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர்,

இயேசு: "என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான். மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்"

வாசிப்பவர் : என்றார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும்

யூதாஸ்: "ரபி, நானோ?"

வாசிப்பவர் : என அவரிடம் கேட்க இயேசு,

இயேசு: "நீயே சொல்லிவிட்டாய்"

வாசிப்பவர் : என்றார். அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து,

இயேசு: "இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்"

வாசிப்பவர் : என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து,

இயேசு: "இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்"

வாசிப்பவர் : என்றார். அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள். அதன்பின்பு இயேசு அவர்களிடம்,

இயேசு: "இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில் "ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது. நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்"

வாசிப்பவர் : என்றார். அதற்குப் பேதுரு அவரிடம்,

பேதுரு: "எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன்"

வாசிப்பவர் : என்றார். இயேசு அவரிடம்,

இயேசு: "இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்"

வாசிப்பவர் : என்றார். பேதுரு அவரிடம்,

பேதுரு: "நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்"

வாசிப்பவர் : என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள். பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர்,

இயேசு: "நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்"

வாசிப்பவர் : என்று அவர்களிடம் கூறி, பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர்,

இயேசு: "எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்"

வாசிப்பவர் : என்று அவர்களிடம் கூறினார். பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து,

இயேசு: "என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்"

வாசிப்பவர் : என்று கூறி இறைவனிடம் வேண்டினார். அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம்,

இயேசு: "ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்"

வாசிப்பவர் : என்றார். மீண்டும் சென்று,

இயேசு: "என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்"

வாசிப்பவர் : என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். பிறகு சீடர்களிடம் வந்து,

இயேசு: "இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான்"

வாசிப்பவர் : என்று கூறினார். இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்நது. அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், "நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள் ; என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் நேராக இயேசுவிடம் சென்று,

யூதாஸ்: "ரபி வாழ்க"

வாசிப்பவர் : எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். இயேசு அவனிடம்,

இயேசு: "தோழா, எதற்காக வந்தாய்?"

வாசிப்பவர் : என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர். உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குரவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். அப்பொழுது இயேசு அவரிடம்,

இயேசு: "உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர். நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே. அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்?"

வாசிப்பவர் : என்றார். அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து,

இயேசு: "கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன"

வாசிப்பவர் : என்றார்.அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள். இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள். பேதுரு தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார். தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர். பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். அவர்கள்,

இருவர்: "இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்"

வாசிப்பவர் : என்று கூறினார்கள். அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம்,

தலைமைக்குரு: "இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா?"

வாசிப்பவர் : என்று கேட்டார். ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம்,

தலைமைக்குரு: "நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்"

வாசிப்பவர் : என்றார். அதற்கு இயேசு,

இயேசு: "நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்"

வாசிப்பவர் : என்றார். உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு,

தலைமைக்குரு: "இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

வாசிப்பவர் : என்று கேட்டார். அதற்கு அவர்கள்,

மக்கள்: "இவன் சாக வேண்டியவன்"

வாசிப்பவர் : எனப் பதிலளித்தார்கள். பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து,

மக்கள்: "இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல்"

வாசிப்பவர் : என்று கேட்டனர். பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து,

பணிப்பெண்: "நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே"

வாசிப்பவர் : என்றார். அவரோ,

பேதுரு: "நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை"

வாசிப்பவர் : என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார். அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண்; அவரைக் கண்டு,

பணிப்பெண்: "இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்"

வாசிப்பவர் : என்று அங்கிருந்தோரிடம் சொன்னார். ஆனால் பேதுரு,

பேதுரு: "இம்மனிதனை எனக்குத் தெரியாது"

வாசிப்பவர் : என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து,

சிலர்: "உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது"

வாசிப்பவர் : என்று கூறினார்கள். அப்பொழுது அவர்,

பேதுரு: "இந்த மனிதனை எனக்குத் தெரியாது"

வாசிப்பவர் : என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது, "சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார். பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர். அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து,

யூதாஸ்: "பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்"

வாசிப்பவர் : என்றான். அதற்கு அவர்கள்,

குருக்கள்,மூப்பர்: "அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள்"

வாசிப்பவர் : என்றார்கள். தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து,

தலைமைக் குருக்கள்: "இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல"

வாசிப்பவர் : என்று சொல்லி, கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். இதனால்தான் அந்நிலம் "இரத்த நிலம்" என இன்றுவரை அழைக்கப்படுகிறது. "இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்" என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது. இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி,

பிலாத்து: "நீ யூதரின் அரசனா?"

வாசிப்பவர் : என்று கேட்டான். அதற்கு இயேசு,

இயேசு: "அவ்வாறு நீர் சொல்கிறீர்"

வாசிப்பவர் : என்று கூறினார். மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீதும் குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. பின்பு பிலாத்து அவரிடம்,

பிலாத்து: "உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?"

வாசிப்பவர் : என்றான். அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான். மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக்காக, விழாவின் போது ஆளுநன் விடுதலை செய்வது வழக்கம். அந்நாளில் பரபா என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான். மக்கள் ஒன்றுகூடி வந்திருந்தபோது பிலாத்து அவர்களிடம்,

பிலாத்து: "நான் யாரை விடுதலை செய்யவேண்டும் என விரும்புகிறீர்கள்? பரபாவையா? அல்லது மெசியா என்னும் இயேசுவையா?"

வாசிப்பவர் : என்று கேட்டான். ஏனெனில் அவர்கள் பொறாமையால்தான் இயேசுவைத் தன்னிடம் ஒப்புவித்திருந்தார்கள் என்பது அவனுக்குத் தெரியும். பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி,

பிலாத்துவின் மனைவி: "அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்"

வாசிப்பவர் : என்று கூறினார். ஆனால் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டி விட்டார்கள். ஆளுநன் அவர்களைப் பார்த்து,

பிலாத்து: "இவ்விருவரில் யாரை விடுதலை செய்யவேண்டும்? உங்கள் விருப்பம் என்ன?"

வாசிப்பவர் : எனக் கேட்டான். அதற்கு அவர்கள்

மக்கள்: "பரபாவை" என்றார்கள். பிலாத்து அவர்களிடம்,

பிலாத்து: "அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?"

வாசிப்பவர் : என்று கேட்டான். அனைவரும்,

மக்கள்: "சிலுவையில் அறையும்"

வாசிப்பவர் : என்று பதிலளித்தனர். அதற்கு அவன்,

பிலாத்து: "இவன் செய்த குற்றம் என்ன?" என்று கேட்டான். அவர்களோ,

மக்கள்: "சிலுவையில் அறையும்"

வாசிப்பவர் : என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து,

பிலாத்து: "இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்"

வாசிப்பவர் : என்று கூறித் தன் கைகளைக் கழுவினான். அதற்கு மக்கள் அனைவரும்,

மக்கள்: "இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்"

வாசிப்பவர் : என்று பதில் கூறினர். அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான். ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு,

படைவீரர்: "யூதரின் அரசரே, வாழ்க!"

வாசிப்பவர் : என்று சொல்லி ஏளனம் செய்தனர்; அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்; அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர். அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். "மண்டையோட்டு இடம்" என்று பொருள்படும் "கொல்கொதா "வுக்கு வந்தார்கள்; இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை. அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்; பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்; அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் "இவன் யூதரின் அரசனாகிய இயேசு" என்று எழுதப்பட்டிருந்தது. அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள். அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து,

மக்கள்: "கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள். நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா"

வாசிப்பவர் : என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர். அவர்கள்,

மறைநூல் அறிஞர், முப்பர்கள்: "பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். "நான் இறைமகன்" என்றானே!"

வாசிப்பவர் : என்று கூறினார்கள். அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள். நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்று மணியளவில் இயேசு,

இயேசு: "ஏலி, ஏலி லெமா சபக்தானி?" அதாவது, "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?"

வாசிப்பவர் : என்று உரத்த குரலில் கத்தினார். அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு,

சிலர்: "இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்"

வாசிப்பவர் : என்றனர். உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். மற்றவர்களோ,

மற்றவர்கள்: "பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்"

வாசிப்பவர் : என்றார்கள். இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.

(அனைவரும் சிறிது நேரம் முழந்தாள் படியிட்டு ஜெபிப்போம்)

வாசிப்பவர் : அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள். நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி,

காவலர்கள்: "இவர் உண்மையாகவே இறைமகன்"

வாசிப்பவர் : என்றார்கள். கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள். மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான். யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார். அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர். மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள். அவர்கள்,

தலைமைக்குரு, பரிசேயர்: "ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது "மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன்" என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது. ஆகையால் மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, "இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்" என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும்"

வாசிப்பவர் : என்றனர். அதற்குப் பிலாத்து அவர்களிடம்,

பிலாத்து: "உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள்"

வாசிப்பவர் : என்றார். அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

கிறிஸ்துவே உமக்குப் புகழ். 

---------------------------------

நற்செய்தி வாசகம் - இரண்டாம் ஆண்டு (2015, 2018, 2021, 2024)

தூய மாற்கு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பாடுகள்” 14:1 - 15:47

விரிவுரையாளர் : பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன. தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடிக் கொண்டிருந்தனர்; ஆயினும், "விழாவின்போது வேண்டாம்; ஒரு வேளை மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்" என்று நினைத்தனர். இயேசு, பெத்தானியாவில் தொழு நோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார். ஆனால் அங்கிருந்த சிலர் கோபமடைந்து,

யூதர் : "இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே,

விரிவுரையாளர் : என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அப்பெண் மீதும் சீறி எழுந்தனர். இயேசு அவர்களிடம்,

இயேசு : "அவரை விடுங்கள். ஏன் அவருக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே. ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யமுடியும். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை. இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார். உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவர் செய்ததும் எடுத்துக் கூறப்படும்; இவரும் நினைவு கூறப்படுவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்"

விரிவுரையாளர் : என்று கூறினார். பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான். அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர்,

சீடர் ஒருவர் : "நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?"

விரிவுரையாளர் : என்று கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்;

இயேசு : "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், "நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?" என்று போதகர் கேட்கச் சொன்னார்" எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்."

விரிவுரையாளர் : சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார். அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தபொழுது இயேசு,

இயேசு : "என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்"

விரிவுரையாளர் : என்றார். அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக,

சீடர் : "நானோ?நானோ?"

விரிவுரையாளர் : என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர்,

இயேசு : "அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன். மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்"

விரிவுரையாளர் : என்றார். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து,

இயேசு : "இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்"

விரிவுரையாளர் : என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம்,

இயேசு : "இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்"

விரிவுரையாளர் : என்றார். அவர்கள் புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள். இயேசு அவர்களிடம்,

இயேசு : "நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், "ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன்"

விரிவுரையாளர் : என்றார். பேதுரு அவரிடம்,

பேதுரு : "எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன்"

விரிவுரையாளர் : என்றார். இயேசு அவரிடம்,

இயேசு : "இன்றிரவில் சேவல் இருமுறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன்"

விரிவுரையாளர் : என்றார். அவரோ,

பேதுரு : "நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்"

விரிவுரையாளர் : என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே அவர்கள் அனைவரும் சொன்னார்கள். பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம்,

இயேசு : "நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்"

விரிவுரையாளர் : என்று கூறி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர்,

இயேசு : "எனது உள்ளம் சாவுவருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள்"

விரிவுரையாளர் : என்று அவர்களிடம் கூறினார். சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார்.

இயேசு : "அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்"

விரிவுரையாளர் : என்று கூறினார். அதன்பின்பு அவர் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம்,

இயேசு : "சீமோனே, உறங்கிக் கொண்டா இருக்கிறாய்? ஒரு மணிநேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வம் உடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்"

விரிவுரையாளர் : என்றார். அவர் மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் மூன்றாம் முறை வந்து அவர்களை நோக்கி,

இயேசு : "இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? போதும், நேரம் வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படப் போகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான்"

விரிவுரையாளர் : என்று கூறினார். இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன்,

யூதாஸ் : "நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள்"

விரிவுரையாளர் : என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி,

யூதாஸ் : "ரபி"

விரிவுரையாளர் : எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர். அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். இயேசு அவர்களைப் பார்த்து,

இயேசு : "கள்வனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக் கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே! ஆனால் மறைநூலில் எழுதப்பட்டுள்ளவை நிறைவேற வேண்டும்"

விரிவுரையாளர் : என்றார். அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர். இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள். ஆனால் அவர் துணியை விட்டு விட்டு ஆடையன்றித் தப்பி ஓடினார். அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம் கூட்டிச் சென்றார்கள். எல்லாத் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒன்று கூடினார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம் வரை வந்து காவலரோடு உட்கார்ந்து நெருப்பின் அருகே அவர் குளிர்காய்ந்து கொண்டிருந்தார். தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகச் சான்று தேடினார்கள். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை. பலர் அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன. சிலர் எழுந்து,

சிலர் : "மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்து விட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம்"

விரிவுரையாளர் : என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர். அப்படியும் அவர்களுடைய சான்று ஒத்துவரவில்லை. அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின் நடுவே நின்று,

தலைமைக் குரு : "இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி ஒன்றும் கூற மாட்டாயா?"

விரிவுரையாளர் : என்று இயேசுவைக் கேட்டார். ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர் கூறவில்லை. மீண்டும் தலைமைக் குரு,

தலைமைக் குரு : "போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ?"

விரிவுரையாளர் : என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு,

இயேசு : "நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் "

விரிவுரையாளர் : என்றார். தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக்கொண்டு,

தலைமைக் குரு : "இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது?"

விரிவுரையாளர் : என்று கேட்க, அவர்கள் அனைவரும்,

எல்லாரும் : "இவன் சாக வேண்டியவன்"

விரிவுரையாளர் : என்று தீர்மானித்தார்கள். பின்பு சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி, "இறைவாக்கினனே, யார் எனச் சொல்" என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர். அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக் குருவின் பணிப் பெண் ஒருவர் வந்து, பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கக் கண்டு அவரைக் கூர்ந்து நோக்கி,

பணிப் பெண் : "நீயும் இந்த நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்தானே"

விரிவுரையாளர் : என்றார். அவரோ,

பேதுரு : "நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, புரியவுமில்லை"

விரிவுரையாளர் : என்று மறுதலித்து, வெளி முற்றத்திற்குச் சென்றார். (அப்பொழுது சேவல் கூவிற்று ). அந்தப் பணிப்பெண் அவரைக் கண்டு சூழ இருந்தவர்களிடம்,

பணிப் பெண் : "இவனும் அவர்களைச் சேர்ந்தவன்தான்"

விரிவுரையாளர் : என்று மீண்டும் கூறத் தொடங்கினார். அவர் மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் சூழ இருந்தவர்களும்,

எல்லாரும் : "உண்மையாகவே நீ அவர்களைச் சேர்ந்தவனே. ஏனெனில் நீ ஒரு கலிலேயன்"

விரிவுரையாளர் : என்று மீண்டும் பேதுருவிடம் கூறினார்கள். அவரோ,

பேதுரு : "நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனிதனை எனக்குத் தெரியாது"

விரிவுரையாளர் : என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, "சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவு கூர்ந்து மனம் உடைந்து அழுதார்.

பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று பிலாத்திடம் ஒப்புவித்தனர். பிலாத்து அவரை நோக்கி,

பிலாத்து : "நீ யூதரின் அரசனா?"

விரிவுரையாளர் : என்று கேட்க அவர்,

இயேசு : "அவ்வாறு நீர் சொல்கிறீர்"

விரிவுரையாளர் : என்று பதில் கூறினார். தலைமைக் குருக்கள் அவர்மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள். மீண்டும் பிலாத்து,

பிலாத்து : "நீ பதில் ஒன்றும் சொல்ல மாட்டாயா? உன் மீது இத்தனை குற்றங்களைச் சுமத்துகிறார்களே!"

விரிவுரையாளர் : என்று அவரிடம் கேட்டான். இயேசுவோ எப்பதிலும் கூறவில்லை. ஆகவே பிலாத்து வியப்புற்றான். விழாவின்போது மக்கள் கேட்டுக் கொள்ளும் ஒரு கைதியை அவர்களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு. பரபா என்னும் கைதி ஒருவன் இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன். மக்கள் கூட்டம் வந்து, வழக்கமாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது. அதற்குப் பிலாத்து,

பிலாத்து : "யூதரின் அரசரை உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா?"

விரிவுரையாளர் : என்று கேட்டான். ஏனெனில் தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந்திருந்தான். ஆனால் தலைமைக் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள். பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து,

பிலாத்து : "அப்படியானால் நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும்?"

விரிவுரையாளர் : என்று கேட்டான். அவர்கள்,

எல்லாரும் : "அவனைச் சிலுவையில் அறையும்"

விரிவுரையாளர் : என்று மீண்டும் கத்தினார்கள். அதற்குப் பிலாத்து,

பிலாத்து : "இவன் செய்த குற்றம் என்ன?"

விரிவுரையாளர் : என்று கேட்க, அவர்கள்,

எல்லாரும் : "அவனைச் சிலுவையில் அறையும்"

விரிவுரையாளர் : என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். ஆகவே பிலாத்து கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பரபாவை விடுதலை செய்து, இயேசுவைக் கசையால் அடித்து, சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான். பிறகு படைவீரர் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்திற்கு இழுத்துக்கொண்டு போய்ப் படைப்பிரிவினர் அனைவரையும் கூட்டினர்; அவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தினர்; ஒரு முள் முடி பின்னி அவருக்குச் சூட்டி,

வீரர் : "யூதரின் அரசே வாழ்க!"

விரிவுரையாளர் : என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்; மேலும் கோலால் அவர் தலையில் அடித்து. அவர்மீது துப்பி, முழந்தாள்படியிட்டு அவரை வணங்கினர். 0 அவரை ஏளனம் செய்த பின் செந்நிற ஆடையைக் கழற்றி விட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக வெளியே கூட்டிச் சென்றனர். அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் "மண்டைஓட்டு இடம்" எனப்பொருள்படும் "கொல்கொதா" வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்; அங்கே அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை. பிறகு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; குலுக்கல் முறையில் யாருக்கு எது என்று பார்த்து அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி. அவரது மரண தண்டனைக்கான காரணத்தை அறிவிக்க "யூதரின் அரசன்" என்று அவர்கள் எழுதிவைத்தார்கள்; அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக, இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள். அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து,

சிலர் : "ஆகா, திருக்கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள்"

விரிவுரையாளர் : என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்து, "பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவர்கள்,

தலைமைக் குரு : "இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம்"

விரிவுரையாளர் : என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள். நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது. பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு,

இயேசு : "எலோயி, எலோயி, லெமா சபக்தானி?"

விரிவுரையாளர் : என்று உரக்கக் கத்தினார். "என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்பது அதற்குப் பொருள். சூழ நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக்கேட்டு,

சிலர் : "இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான்"

விரிவுரையாளர் : என்றனர். அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே,

ஒருவர் : "பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்"

விரிவுரையாளர் : என்றார். இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.

(அனைவரும் முழந்தாளிட்டு சிறிது நேரம் செபிக்கவும்)

விரிவுரையாளர் : அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு,

நூற்றுவத் தலைவர் : "இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்"

விரிவுரையாளர் : என்றார். பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர். இயேசு கலிலேயாவில் இருந்த போது அவர்கள் அவரைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்தவர்கள், அவருடன் எருசலேமுக்கு வந்திருந்த வேறுபல பெண்களும் அங்கே இருந்தார்கள். இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து,

பிலாத்து : "அவன் இதற்குள் இறந்து விட்டானா?"

விரிவுரையாளர் : என்று கேட்டான். நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான். யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார். அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

கிறிஸ்துவே உமக்குப் புகழ்.

------------------------------------------

நற்செய்தி வாசகம் - மூன்றாம் ஆண்டு (2016, 2019, 2022, 2025)

நற்செய்தி: லூக்கா 22:14 - 23:56

தூய லூக்கா எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் திருப்பாடுகள்:

விரிஉரையாளர்: நேரம் ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார். அப்போது இயேசு அவர்களை நோக்கி,

இயேசு : "நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் இருந்தேன். ஏனெனில் இறையாட்சியில் இது நிறைவேறும்வரை இதை நான் உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்"

விரிஉரையாளர்: என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களிடம்,

இயேசு: "இதைப் பெற்று உங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில், இது முதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்"

விரிஉரையாளர்: என்றார். பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து,

இயேசு: "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்"

விரிஉரையாளர்: என்றார். அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து,

இயேசு: "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ, என்னோடு பந்தியில் அமர்ந்திருக்கிறான். மானிடமகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே போகிறார், ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு"

விரிஉரையாளர்: என்றார். அப்பொழுது அவர்கள்,

சீடர்கள்: "நம்மில் இச்செயலைச் செய்யப் போகிறவர் யார்"

விரிஉரையாளர்: என்று தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள். மேலும் தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களிடம்,

இயேசு: "பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும். யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன். நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே. என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன். ஆகவே என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள். "சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து"

விரிஉரையாளர்: என்றார். அதற்கு பேதுரு,

பேதுரு: "ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும் நான் ஆயத்தமாய் உள்ளேன்"

விரிஉரையாளர்: என்றார். இயேசு அவரிடம்,

இயேசு: "பேதுருவே, இன்றிரவு, 'என்னைத் தெரியாது' என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன்"

விரிஉரையாளர்: என்றார். இயேசு சீடர்களிடம்,

இயேசு: "நான் உங்களைப் பணப்பையோ வேறுபையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். அவர்கள்,

சீடர்கள்: "ஒரு குறையும் இருந்ததில்லை"

விரிஉரையாளர்: என்றார்கள். அவர் அவர்களிடம்,

இயேசு: "ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; "கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்" என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம் நிறைவேறி வருகின்றன"

விரிஉரையாளர்: என்றார். அவர்கள்

சீடர்கள்: "ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன"

விரிஉரையாளர்: என்றார்கள். இயேசு அவர்களிடம்,

இயேசு: "போதும்"

விரிஉரையாளர்: என்றார். இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம்,

இயேசு: "சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள், "

விரிஉரையாளர்: என்றார். பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார்;

இயேசு: "தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்"

விரிஉரையாளர்: என்று கூறினார். ( அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார். அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது. ). அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களிடம்,

இயேசு: "என்ன, உறங்கிக் கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்"

விரிஉரையாளர்: என்றார். இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான். இயேசு அவனிடம்,

இயேசு: "யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?"

விரிஉரையாளர்: என்றார். அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து,

சீடர்: "ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?"

விரிஉரையாளர்: என்று கேட்டார்கள். அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார். இயேசு அவர்களைப் பார்த்து,

இயேசு: "விடுங்கள், போதும்"

விரிஉரையாளர்: என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார். அவர் தம்மிடம் வந்த தலைமைக் குருக்களையும் கோவில் காவல் தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து,

இயேசு: "ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாள்களோடும், தடிகளோடும் வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனால் இது உங்களுடைய நேரம்; இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது"

விரிஉரையாளர்: என்றார். பின்னர் அவர்கள் இயேசுவைக் கைதுசெய்து இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டு போனார்கள்; பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார். அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து,

பணிப்பெண்: "இவனும் அவனோடு இருந்தவன்"

விரிஉரையாளர்: என்றார். அவரோ,

பேதுரு: "அம்மா, அவரை எனக்குத் தெரியாது"

விரிஉரையாளர்: என்று மறுதலித்தார். சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர்,

ஒருவர்: "நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்"

விரிஉரையாளர்: என்றார். பேதுரு,

பேதுரு: "இல்லையப்பா"

விரிஉரையாளர்: என்றார். ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப்பின்பு மற்றொருவர்,

ஒருவர்: "உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான்"

விரிஉரையாளர்: என்று வலியுறுத்திக் கூறினார். பேதுருவோ,

பேதுரு: "நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது"

விரிஉரையாளர்: என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று. ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்; "இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார். இயேசுவைப் பிடித்துவைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள். அவரது முகத்தை மூடி,

படைவீரர்: "உன்னை அடித்தவர் யார்? இறைவாக்கினனே, சொல்"

விரிஉரையாளர்: என்று கேட்டார்கள். இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள். பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடிவந்தார்கள்; இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். அவர்கள்,

மூப்பர், தலைமைகுருக்கள்: "நீ மெசியா தானா? எங்களிடம் சொல்"

விரிஉரையாளர்: என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம்,

இயேசு: "நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்; நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள். இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்"

விரிஉரையாளர்: என்றார். அதற்கு அவர்கள் அனைவரும்,

மூப்பர், தலைமைக்குருக்கள்: "அப்படியானால் நீ இறைமகனா?"

விரிஉரையாளர்: என்று கேட்டனர். அவரோ,

இயேசு: "நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள்"

விரிஉரையாளர்: என்று அவர்களுக்குச் சொன்னார். அதற்கு அவர்கள்,

மூப்பர், தலைமைகுருக்கள்: "இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே"

விரிஉரையாளர்: என்றார்கள். திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர்.

மக்கள்: "இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம்"

விரிஉரையாளர்: என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள். பிலாத்து அவரை நோக்கி,

பிலாத்து: "நீ யூதரின் அரசனா?"

விரிஉரையாளர்: என்று கேட்க, அவர்,

இயேசு: "அவ்வாறு நீர் சொல்கிறீர்"

விரிஉரையாளர்: என்று பதில் கூறினார். பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து,

பிலாத்து: "இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை"

விரிஉரையாளர்: என்று கூறினான். ஆனால் அவர்கள்,

மக்கள்: "இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான்"

விரிஉரையாளர்: என்று வலியுறுத்திக் கூறினார்கள். இதைக் கேட்ட பிலாத்து,

பிலாத்து: "இவன் கலிலேயனா?"

விரிஉரையாளர்: என்று கேட்டான்; அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான். இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான். அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை. அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள். ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான். அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர். பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக வரவழைத்தான். அவர்களை நோக்கி,

பிலாத்து: "மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை. ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்"

விரிஉரையாளர்: என்றான். (விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.) திரண்டிருந்த மக்கள் அனைவரும்,

மக்கள்: "இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும்"

விரிஉரையாளர்: என்று கத்தினர். பரபா நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டு கொலை செய்தத்காக சிறையிலிடப்பட்டவன். பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப் பேசினான். ஆனால் அவர்கள்,

மக்கள்: "அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்"

விரிஉரையாளர்: என்று கத்தினார்கள். மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி,

பிலாத்து : "இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்"

விரிஉரையாளர்: என்றான். அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது. அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான். கலகத்தில் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான். அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச் செய்தார்கள். பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி,

இயேசு: "எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள். ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது "மலடிகள் பேறுபெற்றோர்" என்றும் "பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர்" என்றும் சொல்வார்கள். அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, "எங்கள் மேல் விழுங்கள்" எனவும் குன்றுகளைப் பார்த்து, "எங்களை மூடிக்கொள்ளுங்கள்" எனவும் சொல்வார்கள். பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!"

விரிஉரையாளர்: என்றார். வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள். மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்போது (இயேசு,

இயேசு: "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை"

விரிஉரையாளர்: என்று சொன்னார்.) அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள். மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள்,

ஆட்சியாளர்கள்: "பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும்"

விரிஉரையாளர்: என்று கேலிசெய்தார்கள். படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து,

படைவீரர்: "நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்"

விரிஉரையாளர்: என்று எள்ளி நகையாடினர். "இவன் யூதரின் அரசன்" என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது. சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன்,

குற்றவாழி: "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று"

விரிஉரையாளர்: என்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு,

குற்றவாளி: "கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!"

விரிஉரையாளர்: என்று பதிலுரைத்தான். பின்பு அவன்,

குற்றவாளி: "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்"

விரிஉரையாளர்: என்றான். அதற்கு இயேசு அவனிடம்,

இயேசு: "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்"

விரிஉரையாளர்: என்றார். ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.

இயேசு: "தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "

விரிஉரையாளர்: என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.

(அனைவரும் முழந்தாள் படியிட்டு சிறிதுநேரம் மெளனமாக செபிப்போம்)

விரிஉரையாளர்: இதைக் கண்ட நூற்றுவர் தலைவர்,

நூற்றுவர் தலைவர்: "இவர் உண்மையாகவே நேர்மையாளர்"

விரிஉரையாளர்: என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். அவருக்கு அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்த பெண்களும் தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர். தலைமைச் சங்கத்தாரின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத அவர் யூதேயாவிலுள்ள அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர்; இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை. அன்று ஆயத்த நாள்; ஓய்வுநாளின் தொடக்கம். கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு, திரும்பிப் போய் நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

இது கிறிஸ்துவின் நற்செய்தி

கிறிஸ்துவே உமக்குப் புகழ்.

-------------------------