புனித யூதா ததேயுஸ் நவநாள்

 

புனித யூதா ததேயுஸ் வாழ்க்கை வரலாறு:

புனித யூதா ததேயுஸ் இறைமகன் இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரர். திருக்குடும்பத்தின் நெருங்கிய உறவினர். சிறுவயதில் இருந்தே இயேசுவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். திருமணம் முடிந்து மனைவி மக்களுடன் இனிய இல்லற வாழ்வு நடத்தியவர். அண்ணல் இயேசுவின் அழைத்தலை ஏற்று அனைத்தையும் துறந்து அவரைப் பின் சென்றவர்.

பரிசுத்த ஆவியைப் பெற்றபின அஞ்சாநெஞ்சத்துடன் யூதேயா, சமாரியா, மெசபெத்தோமியா, பாரசீகம் ஆகிய நாடுகளில் திருமறையை பரப்பியவர். இறைமக்கள் தப்பறைகளைத் தவிர்கவும் உண்மையான விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும் திருமுகம் ஒன்று எழுதியவர் நம் புனிதர். இறையருளாலும், புனிதரின் அயராத உழைப்பாலும் விசுவாசம் வளர்ந்தது; ஆன்மீகப் பணி பெருகியது. புதுமைகள் பல நிகழ்ந்தன. இதைக் கண்ணுற்ற வேத விரோதிகளின் மனதில் பொறாமைத் தீ வளர்ந்தது. எனவே அவர்கள் சதித்திட்டம் தீடடி அவரது உயிருக்கு உலை வைத்தனர். உண்மைக்கு சாட்சியாக உயிரை ஈந்தார். புனித யூதாவுக்கம் இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசுக்கும் உள்ள பெயர் ஒற்றுமையால் புனித யூதாவின் பக்தி நாளடைவில் மங்கத்தொடங்கியது. மறைந்து கிடந்த மாணிக்கத்தின் பக்தி குறைவை நிறைவு செய்ய நமதாண்டவர் புனித பிரிஜித் அம்மாளுக்கு காட்சியளித்து "மக்கள் தங்களுடைய தேவைகளில் எல்லாம் புனித யூதா ததேயுசை மன்றாடட்டும்; அவர் தம் பெயருக்கிணங்க உதவி புரிவார்" என்று திருவாய் மலர்ந்தருளினார். கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கையிழந்தவர்களின் நம்பிக்கையாகவும், இயலதவற்றறை இயற்றுபவராகவும் திருச்சபை இவரை மகிமைப்படுத்திற்று. மக்களும் இதை நன்குணர்ந்தனர். மீண்டும் இவரத பக்தி முயற்சி மக்கள் மத்தியில் சிறக்கத் தொடங்கியது.

இத்தகைய வல்லமை வாய்ந்த புனிதரின் திருவிழாவை தாய் திருச்சபை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 28ம் தேதி கொண்டாடுகிறது. யார் யார் தங்களின் தேவைகளில் உண்மையான, உறுதியான விசுவாசத்தோடும் ஆழ்ந்த நம்பிக்கையுடனும் புனித யூதா ததேயுசை நம்பி வேண்டி வந்தால் அவர் நிச்சயம் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசி உதவி செய்வார்.

புனித யூதா ததேயுஸ் நவநாள்

ஆரம்ப கீதம் (நிற்கவும்)

1. கைவிடப்பட்டவர்களின் பாதுகாவரான புனித யூதா ததேயுஸ் அப்போஸ்தலரே, உம்மை நாடிவரும் எங்களுக்காக இறைமகன் இயேசுவை மன்றாடும்.

2. இயலாதவற்றை இயற்றுபவரான புனித யூதா ததேயுஸ் அப்போஸ்தலரே! உம்மை நாடிவரும் எங்களுக்காக இறைமகன் இயேசுவை மன்றாடும்.

3. நம்பிக்கை இழந்தவர்களின் நம்பிக்கையான புனித யூதா ததேயுஸ் அப்போஸ்தலரே, உம்மை நாடிவரும் எங்களுக்காக இறைமகன் இயேசுவை மன்றாடும்.

விசுவாசிகளின் மன்றாட்டு:

குரு: சகோதரரே புனித யூதா ததேயுஸின் வல்லமையுள்ள பரிந்து பேசுதலில் நம்பிக்கை வைத்து, அவர் வழியாக இறைவனை மன்றாடுவோம்.

குரு: பிறப்பிலும் வாழ்விலும், இறப்பிலும் இயேசுவோடு நெருங்கிய உறவுகொண்டு விளங்கிய புனித யூதா ததேயுசைப் போல் நாங்களும் இயேசுவோடு இணைந்து வாழும்படியாக

எல்: புனித யூதா ததேயுஸ் வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்

குரு: ஆன்ம தாகத்தால் அயராது உழைத்து கிறிஸ்துவையே அறியாதோர் அவரை அறிய விசுவாச ஒளியை ஏற்றிய புனித யூதா ததேயுஸைப் போல நாங்களும் ஆன்மீக மீட்பில் அக்கறை உள்ளவர்களாகவும் விசுவாச வாழ்க்கையில் கிறிஸ்துவை அறிய செய்கிறவர்களாகவும் விளங்கும் படியாக

எல்: புனித யூதா ததேயுஸ் வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்

குரு: இறைமகனின் விண்ணேற்றத்திற்குப் பின் அவரது ஆணைப்படியே ஏதெஸ்ஸா நாட்டிற்குச் சென்று, தொழுநோயால் அவதியுற்ற அந் நாட்டரசனுக்கு அற்புத சுகம் அளித்த புனித யூதா ததேயுசை ஆன்ம சரீர வியாதிகள் அனைத்திலிருந்தும் பாதுகாக்கப்படும் படியாக

எல்: புனித யூதா ததேயுஸ் வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்

குரு: நம்பிக்கை இழந்தவர்களின் நம்பிக்கையான புனித யூதா ததேயுசின் மன்றாட்டினால் திருமைற செழிப்புற்று ஓங்கவும் எங்கள் குடும்பங்களில் நீடிய சமாதானமும், நற்சுகமும் நிலவி, தேவ ஆசீர் பெருகும்படியாக

எல்: புனித யூதா ததேயுஸ் வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்

குரு: விசுவாசத்திற்காக உயிர் துறந்த புனித யூதா ததேயுசைப் போல குருக்களும் இறைமக்களும் விசுவாசத்தில் ஆழ்ந்த பற்றும் ஆர்வமு; கொண்ட வாழ்கை நடத்தி முடிவில்லா மோட்சம் சேரத் தகுதி பெறும்படியாக

எல்: புனித யூதா ததேயுஸ் வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்

குரு: இந்த நவநாள் செய்வோர் அனைவரும் விரும்பி கேட்பவையெல்லாம் விரைவில் பெற்று மகிழும்படியாக

எல்: புனித யூதா ததேயுஸ் வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்

குரு: செபிப்போமாக:

எல்: எல்லா வல்லமையும் இரக்கமுமுள்ள மீட்பரான ஆண்டவரே உமது அளவில்லாத அன்புக்குரியவரும் அமது அவதாரத்தில் நெருங்கிய உறவினரும், அப்போஸ்தலருமான புனித யூதா ததேயுஸ் வழியாக நாங்கள் கேட்கும் மன்றாட்டுக்களை எல்லாம் தயவாய் தந்தருளும்படி எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்

 

நன்றியறிதல் :

குரு : அப்போஸ்தலரும் வேத சாட்சியுமான புனித யூதா ததேயுசின் மன்றாட்டால் திருச்சபையில் நீர் செய்துள்ள எல்லா நன்மை உபகாரங்களுக்காகவும்.

எல் : ஆண்டவரே நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

குரு : கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலரான புனிதரின் மன்றாட்டினால் பாவிகள் மனந்திரும்பவும், கடும் பிணியாளர்கள் நலம் பெறவும், நீர் செய்த எல்லா உதவிகளுக்காக.

எல் : ஆண்டவரே நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

குரு : இங்கே உம் திருமுன் குழுமியிருக்கும் நாங்கள் ஒவ்வொருவரும் உமது அப்போஸ்தலரின் பரிந்துரையால் பெற்றுக் கொண்ட எண்ணற்ற நன்மைகளுக்காக.

எல் : ஆண்டவரே நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

குரு : புனித யூதா ததேயுசின் மன்றாட்டினால் வேத விசுவாசம் வளர்ச்சி அடைந்து, திருச்சபை பாதுகாக்கப்பட்டு, திருமறையைச் செழிப்புறச் செய்வதற்காகவும், எமது குடும்பங்களில் சமாதானமும் சந்தோஷஷமும் நிலவி, தேவாசீர் பெருகச் செய்ததற்காகவும்.

எல் : ஆண்டவரே நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

குரு : நாம் அடைந்த தனிப்பட்ட நன்மைகளுக்காக மௌனமாய் நன்றி கூறுவோம்.

சிறப்பு நவநாள் ஜெபம்

குரு : புனித யூதா ததேயுசின் - வல்லமையுள்ள மன்றாட்டில் நம்பிக்கை வைத்து அவர் புகழை பாடுவோமாக அவைகளை அவருக்கு அளித்த இறைவனுக்கு! நன்றி கூறுவோமாக நமது தேவைகளையும் தப்பாமல் அடைந்து தரக் கெஞ்சி மன்றாடுவோமாக.

எல் : மாட்சிமைமிக்க அப்போஸ்தலரும் வேதசாட்சியுமான புனித யூதா ததேயுசே எங்கள் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய உறவினரே புண்ணியங்கள் மின்னித்துலங்கும் தூயவரே புதுமை வரங்களில் சிறந்தவரே தம்மை தேடிவந்தவர்களை தப்பாமல் ஆதரிக்கும் தயாள உள்ளங் கொண்டவரே உம்மை நாங்கள் வாழ்த்துகிறோம். இந்த அற்புத வரங்களை உமக்களித்த அன்பு தேவனுக்கு ஆராதனை செலுத்துகிறோம் இதயபூர்வமான நன்றி நவில்கிறோம்.
எங்களுக்குத் தேவையான ஆன்ம சரீர நலன்களையெல்லாம் அடைந்து தந்தருள உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் சிறப்பாக இப்போது எங்களுக்கு மிகவும் அவசியமாக இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.

குரு : (நம் தேவைகளை எடுத்துக் கூறுவோம்)

எல் : நேசிக்கப்படத்தக்கவரும் உள்ளப் பண்பாடு உடையவரும் இறைப் புகழை பாடுபவருமான பெயர்பெற்று இயங்கும் தயாள இருதய ததேயுவே உமது வல்லமையில் எங்கள் நம்பிக்கை வீண் போகவிடாதேயும்.
யூதாசின் பெயர் ஒற்றுமையால்; உமக்கு நேர்ந்த பக்திக் குறையைக் பரிகரித்து வகையின்றி வாடுவோருக்கு வல்லமையுடன் உதவி புரியும் அரிய வரத்தை இறைவன் உமக்கு அளித்திருக்கிறார் என்பதை நினைவு கூர்ந்தருளும்.
இப்பெரிய வரத்திற்காக நாங்களும் உம்முடன் சேர்ந்து இறைவனின் புகழைப் பாடத் துணைபுரியும் அவருக்கு நன்றி செலுத்த தயை செய்யும். நீர் எங்களுக்கு செய்கின்ற இப்பேருதவிக்காக எங்கள் வாழ்நாளெல்லாம் நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்போம் உமது வல்லமையுள்ள மன்றாட்டை மக்களிடையில் அறியச் செய்வோம். பலர் அறியாப் புனிதரே சிறப்பு இயல்புகள் பல படைத்தவரே பலன் தரும் உமது பக்தி பாரெங்கும் பரவ எங்களால் ஆன பிரயாசையெல்லாம் எடுப்போம் என்றும் உறுதியாய் வாக்களிக்கிறோம்.

புனிதரின் புகழ் மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்,
கிறிஸ்துவே இரக்கமாயிரும்,
ஆண்டவரே இரக்கமாயிரும்,
கிறிஸ்துவே எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.
பரலோக பிதாவாகிய சர்வேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்,
உலக மீட்பரான சுதன் சர்வேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்,
பரிசுத்த ஆவி சர்வேசுரா, எங்கள்மேல் இரக்கமாயிரும்,
பரிசுத்த திரியேக சர்வேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்,
பரிசுத்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
புனித யூதா ததேயுசே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
திருக்குடும்பத்தின் நெருங்கிய உறவினரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
மாட்சிமை மிக்க அப்போஸ்தலரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
தெய்வீக ஆசிரியரின் உத்தம மாணக்கரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
தேவ பராமரிப்புகள் அமைந்த யாத்திரிகரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
வேத விசுவாசத்தின் சாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
தரித்திரத்தை நேசித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
தாழ்ச்சிக்கும் பொறுமைக்கும் மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,

தேவ அன்பின் தீபமே, புனிதத்தின் விண்மீனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
இறையருளின் பேழையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
பேய்களை நடுநடுங்கச் செய்கிறவரே,
திருச்சபையின் தூணே,
துன்புறுவோரின் ஆறுதலே,
பாவிகளுக்காக பரிந்து பேசுபவரே,
திக்கற்றவர்களின் சகாயமே,
திகைக்கின்றவர்களின் பிரகாசமே,
நம்பிக்கையிழந்தவர்களின் ஊன்றுகோலே, வியத்தகு அற்புதங்களைச் செய்கிறவரே,
தேவவரங்களை வழங்குவதில் மிகவும் பேறுபெற்றவரே,; கொள்ளும்,
உம்மை மன்றாடுவோர்க்கு தப்பாமல் உதவி புரிபவரே, உம்மிடம் நம்பிக்கை வைப்பவர்களுக்குத் தவறாமல் உதவி செய்கிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
அவசரமுள்ளவர்களுக்கு தாமாகவே வந்துதவும் பேருபகாரியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
இக்கட்டான வேளைகளில் உடன் உதவிபுரிய வல்லமை வாய்ந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
திக்கற்றவர்களுக்காகப் பரிந்து பேசுவதில் பேர் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
உம்மை வணங்குவோர்க்கு அன்புள்ள மெய்க்காப்பாளரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
எங்கள் சிறப்பு பாதுகாவலரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
உலகின் பாவங்களைப் போக்கியருளும் ஆண்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,
உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் ஆண்டவரே,
உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனின் செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே,

குரு : செபிப்போமாக

எல் : எல்லா வல்லமையும் இரக்கமும் உள்ள மீட்பரான ஆண்டவரே உமது அளவில்லாத அன்புக்குரியவரும் உமது மனித அவதாரத்தில் நெருங்கிய உறவினரும் - அப்போஸ்தலருமான புனித யூதா ததேயுஸ் வழியாக நாங்கள் கேட்கும் மன்றாட்டுக்களையெல்லாம் தயவாய்த் தந்தருளும்படி உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.

நோயாளிகளை ஆசீர்வதித்தல்

குரு : செபிப்போமாக

எல் : ஆண்டவரே உடல் நோயால் வருந்தும் உமது ஊழியரைப் பாரும் நீர் உண்டாக்கிய ஆன்மாக்களுக்கு ஆறுதல் தாரும் நாங்கள் துன்பங்களினால் தூய்மை அடைந்து உமது இரக்கத்தினால் விரைவில் குணமடையும்படி அருள் புரிவீராக எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.

குரு : (வலக்கரத்தை நீட்டி) ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உங்களைப் பாதுகாக்க உங்கள் நடுவிலும், உங்களைக் காப்பாற்ற உங்களுக்குள்ளும், உங்களுக்குக் காவலாயிருக்க உங்களுக்கு பின்னும், உங்களை வழிநடத்த உங்களுக்கு முன்னும் உங்களை ஆசீர்வதிக்க உங்கள் மேலும் இருப்பாராக.

எல் : ஆமென்.
எல் : ததேயுவின் கீதம்
குரு : (தீர்த்தம் தெளித்தல்)
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல் : உம்மோடும் இருப்பாராக
குரு : எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல் : ஆமென்.
குரு : சென்று வாருங்கள் திருப்பலி முடிந்தது.

புவியில் புதுமை புரிபவர்

புவியில் புதுமை புரிபவரே
புனித யூதா ததேயுசே
புவியோர் எம்மைப் புரந்திடுவோர்
புதிய வாழ்வும் தந்திடுவீர்.

திருமறை போற்றும் போதகரே
திக்கற்றோரின் காவலரே
இறைவன் இயேசுவின் சாயலையே
நெஞ்சில் தரித்துக் கொண்டவரே.

இயேசுவின் அரசை வளர்த்திடவே
எழுந்த பெரும் அப்போஸ்தலரே
யேசுவின் நெருங்கிய உறவினரே
எம்குறை தீர்த்தருள் புரிவீரே.

 

புனிதராம் யூதாவே

(மெட்டு : அலைகடல் ஒளிர்மீனே -செல்வ ஆண்டவர் தாயாரே
நிலைபெயராக் கன்னி - மோட்ஷ நெறிக்கதவே வாழி)

புனிதராம் யூதாவே - உம்மை புகழ்ந்து கொண்டாடுமெமை
இனிது காத்தாண்டிட - வேந்தன் இயேசுவை வேண்டிடுவீர்!

துன்பமாம் கடல் நடுவே - வருத்தித் துடித்துத் துயர்படுவோர்
இன்பவான் துறைசேரத் - துணையாய் இலக்குமப் போஸ்தலரே

தற்பரன் உமக்களித்த - அரிய தனிப்பெரும் சலுகையினால்
பற்பல அற்புதங்கள் - புரியும் பண்பினை என் சொல்வோம்

திருமறை செழித்திடவே - உயிரைத் தியாகஞ்செய்த உடலின்
குருதியெல்லாம் சொரிந்த - வீரக் குலமணியே வாழி!

நம்பிவந் தோர்களை நீர் - எந்த நாளும் கைவிட்டதில்லை
செம்மையாய் ஆதரித்து - அன்பாய்த் தீர்த்திடுவீர் தொல்லை

யேசுவின் நற்செய்தி - கூறி சோர்வின்றி பணியாற்றி
மசுறாவின் சுடர் போல் - விளங்கும் மாதவனே வாழி!

தேவ வரங்கள் பொழிபவர்

தேவ வரங்கள் பொழியும் புனித ததேயுசே
தேவையில் வந்து உதவும் அன்புத் தீபமே
பரமன் இயேசு வழியில் எம்மை நடத்திட
இறைவன் தந்த சொந்தம் என்று நினைக்கிறோம்
உண்மை நெறியும் உயர்ந்த மனதும் வேண்டுமே
நிறைந்த வாழ்வும் வழியும் என்னில் வேண்டுமே
கல்லும் முள்ளும் எரிந்து போகவேண்டுமே
கருணை வெள்ளம் என்னில் கசிய வேண்டுமே
துன்பம் போக்கும் துயரம் நீக்கும் தூயனே
இன்பம் பெருகி இருளில் ஒளிரும் நேயன
கன்றி வந்த கண்கள் உம்மை பாருமே!
கருணை இறைவன் பாதம் எம்மை சேருமே.