சனவரி 4

முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-10

பிள்ளைகளே, எவரும் உங்களை நெறிதவறச்செய்ய விடாதீர்கள். கிறிஸ்து நேர்மையாளராய் இருப்பதுபோல், நேர்மையாய்ச் செயல்படுபவர் நேர்மையாளராய் இருக்கின்றார். பாவம் செய்து வருகிறவர் அலகையைச் சார்ந்தவர்; ஏனெனில் தொடக்கத்திலிருந்தே அலகை பாவம் செய்து வருகிறது. ஆகவே அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் தோன்றினார். கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை; ஏனெனில் கடவுளின் இயல்பு அவரிடம் இருக்கிறது. கடவுளிடமிருந்து பிறந்தவராயிருப்பதால் அவரால் பாவம் செய்ய இயலாது. நேர்மையாய்ச் செயல்படாதவரும், தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதவரும் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல. இதனால் கடவுளின் பிள்ளைகள் யாரென்றும் அலகையின் பிள்ளைகள் யாரென்றும் புலப்படும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 98: 1. 7-8. 9
பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.
அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. -பல்லவி

7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!
8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். -பல்லவி

9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்;
பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்



யோவான் 1:35-42

பொதுக்காலம், வாரம் 2 ஞாயிறு

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42

அக்காலத்தில் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் பெத்தானியாவில் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, �இதோ! கடவுளின் செம்மறி!'' என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, �என்ன தேடுகிறீர்கள்?'' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், �ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?'' என்று கேட்டார்கள். `ரபி' என்னும் எபிரேயச் சொல்லுக்குப் `போதகர்' என்பது பொருள். அவர் அவர்களிடம், �வந்து பாருங்கள்'' என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, �மெசியாவைக் கண்டோம்'' என்றார். `மெசியா' என்றால் `அருள்பொழிவு பெற்றவர்' என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, �நீ யோவானின் மகன் சீமோன். இனி `கேபா' எனப்படுவாய்'' என்றார். `கேபா' என்றால் `பாறை' என்பது பொருள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

வந்து பாருங்கள்! வியந்து போவீர்கள்!
04.01.2023 – யோவான் 1: 35 - 42

புதிதாக வேலைக்கு ஒரு நிறுவனத்திற்கு செல்லும் முன், ஏற்கெனவே அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளரிடம் நிறுவனம் எப்படி இருக்கும் என்று விசாரித்தால் ‘வந்து பாருங்கள்’ என்பது அவர்களின் பதிலாக இருக்கும். புதிதாக கல்லூரியில் பயிலும் முன், அந்த கல்லூரியில் படிக்கும் மாணக்கரிடம் கல்லூரி எப்படி இருக்கும்? என்று கேட்டால், ‘வந்து பாருங்கள்’ என்பது அவர்களின் பதிலுரையாக இருக்கும். புதிதாக ஒரு அரசியல் கட்சியில் இடம் பெயர வேண்டுமென்று விரும்பி அந்த கட்சியில் ஏற்கெனவே இருக்கும் நபரிடம் கட்சி அனுபவம் பற்றி கேட்டால் அவர்கள் கூறக்கூடிய பதில் ‘வந்து பாருங்கள்’ என்பதே. இன்றைய நற்செய்தி வாசகத்திலும் சீடர்கள் இயேசுவின் வாழ்க்கை பயணத்தில் இணைந்து பயணிக்க ஆவல் கொள்கின்றார்கள். இயேசுவின் அனுபவ வார்த்தை ‘வந்து பாருங்கள்’ என்பதே. வந்து பார்க்கின்ற போது தான் வியந்து போகின்றார்கள். பொதுவாக இதனை அழைத்தல் அல்லது அருள்பணியாளருக்கான அழைப்புப் பகுதி என்று நமது பார்வையைக் குறுக்கிக் கொள்ளக் கூடாது.

இறைவன் நம் எல்லோரையும் அழைக்கின்றார். இறைவன் யாரென்று அறியாமல் நாம் தூங்கும்போது, நம் பிறழ்வுபட்ட வாழ்க்கை முறைகளில் நாம் சிக்கித் தவிக்கும் போது, மற்றவர்களின் பின்னால் நாம் சென்று கொண்டிருக்கும் போது, நம் வேலைகளில், படிப்பில், பயணத்தில், இதைச் செய்! இங்கே வா! இதுதான் நான்! என்று அவர் நம் உள்ளுணர்வில், உறவு நிலையில் அழைத்துக் கொண்டேயிருக்கின்றார். ஆனால் நாம் தான் அவரை பார்க்க தயாராகவில்லை. அதனால் தான் இன்று ஆலயங்கள் வெற்றிடமாக இருக்கிறது. நாம் இறைவனை பார்க்க தயாரா? வியந்து போக புறப்படுவோம்.

அருட்பணி. பிரதாப்

=======================

 

தியானப் பாடல் சிந்தனை: திருப்பாடல் 98: 1. 7-8. 9

”ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்”

ஆண்டவர் முன்னிலையில் நாம் மகிழ்ந்து பாட இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது. நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? நமது மகிழ்ச்சிக்கு எது காரணம்? ஆண்டவர் வர இருக்கின்றார் என்கிற செய்திக்காக நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். எதற்காக ஆண்டவர் வர இருக்கின்றார்? இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு மெசியாவின் வருகை. அடிமைப்பட்டுக்கிடந்த இஸ்ரயேலுக்கு விடுதலையை வழங்கவும், அநீதியால் மலிந்து போயிருந்த உலகத்தை, நீதியோடு ஆட்சி செய்யவும் இஸ்ரயேல் மக்கள் மெசியாவை எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் காலம் வருகிறது, எனவே, அனைவரும் இதனை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் என்று ஆசிரியர் நமக்கு அழைப்புவிடுக்கிறார்.

இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்த்திருந்த மெசியாவை தாங்கள் பார்த்ததாக யோவானின் சீடர்கள் சான்று பகர்வதை இன்றைய நற்செய்தியும் நமக்கு எடுத்துக்கூறுகிறது. இது இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை வீண்போகவில்லை என்பதையும், கடவுள் தன்னுடைய வார்த்தைக்கு உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்பதையும், இது மகிழ வேண்டிய நேரம் என்பதையும் நமக்கு அறிவிக்கக்கூடிய செய்தியாக இருக்கிறது. இந்த மெசியாவின் வருகை, கிறிஸ்து பிறப்போடு நிறைவுபெற்றுவிடவில்லை. அவர் மீண்டும் வருவார், நமக்கு நீதி வழங்குவார் என்கிற, நமது விசுவாசத்தின் மறைபொருளையும் இந்த திருப்பாடல் உணர்த்துவதாக இருக்கிறது. இந்த மெசியா நம்மோடு இருக்கிறார். நம்மில் ஒருவராக இருக்கிறார். அதுவும் நமக்கு மகிச்சியைத்தருவதாக இருக்க வேண்டும்.

கிறிஸ்து பிறப்பு விழாவோடு நமது கொண்டாட்டங்களும், மகிழ்ச்சியும் முடிந்து விடக்கூடாது. நாம் கிறிஸ்துவை வாழச்செய்ய வேண்டும். அவரது வாழ்வியல் மதிப்பீடுகள் நம் வழியாக தொடர்ந்து இந்த மண்ணில் நடக்கிறபோது, இயேசு நம்மில் ஒருவராக இருப்பதை, நாமும், நம் வழியாக மற்றவர்களையும் உணரச்செய்ய முடியும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

இயேசு யார்?

இயேசு யார்? என்பதை திருமுழுக்கு யோவானின் சாட்சியம் வெளிப்படுத்துகிறது. ”இயேசுதான் உலகின் மீட்பர். இவர் வழியாகவே மானிடம் வாழ்வு பெறுகிறது” என்பதை உறுதிபடக் கூறுகிறார் யோவான். இயேசு இறைவனின் ஒரே திருமகன் எனும் உண்மைக்கான சான்று இது. இயேசுவின் ஆளுமையில் பல பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. ஒவ்வொரு சீடரும் இயேசுபைக் கண்டு அனுபவிக்கும் அனுபவத்தில் இயேசுவின் சில பரிமாணங்கள் அழுத்தம் பெறுகின்றன. இயேசு இறைமகன், மீட்பர். பாவம் போக்கும் பரிகார ஆட்டுக் குட்டி, போதகர் மெசியா, பழைய ஆகமங்களின் நிறைவு, நசரேத்து தச்சன், இஸ்ராயேலின் பேரரசர். இத்தகைய பல பரிமாணங்களில் வெளிப்பட்டாலும், நாம் பின்செல்லும் இயேசுதான் நமக்கு எல்லாம் என்பது உண்மையன்றோ!

பணி. மைக்கிள் மரியதாஸ் cmf.

-------------------------------------------------------------

திருப்பாடல் 98: 1, 7- 9

"மாந்தர் அனைவரும்
நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்"

தொடர்ந்து மூன்றாவது நாளாக திருப்பாடல் 98ஐயே நமது பதிலுரைப் பாடலாக நாம் செபிக்கிறோம். இன்று திருப்பாடலின் கடைசி மூன்று வாக்குகளான 7, 8, 9 ஆகியன நம் பதிலாக அமைந்திருக்கின்றன.

இந்த வாக்குகளில் "கடலும் அதில் நிறைந்தவையும், உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக. ஆறுகளே, கைகொட்டுங்கள். மலைகளே, ஒன்றுகூடுங்கள். ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள். ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார். பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார். மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்" என்று பாடி செபிக்கின்றோம்.

இந்த வரிகள் நமக்கு இரண்டு செய்திகளைத் தருகின்றன:

1. இயற்கையோடு இணைந்த இறைபுகழ்ச்சி: ஆம், இயேசுவின் பிறப்பு மாந்தர் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது என்று நேற்று பாடினோம். இன்று கடல், ஆறுகள், மலைகள் ... என இயற்கையையும் இறைவனை வாழ்த்த அழைக்கின்றோம். இறைவனின் மீட்புத் திட்டத்தில் இயற்கைக்கும் பங்கிருக்கிறது. நமது இறைபுகழ்ச்சியில் இயற்கையை இணைத்துக்கொள்ளும் நாம், நமது வாழ்வியலிலும் அதற்குப் பங்கு கொடுப்போம்.

2. இறைவன் வழங்கும் நீதி: "நீதி" என்னும் சொல் இரண்டு முறையும், "நேர்மை" என்னும் சொல் ஒருமுறையும் இந்தக் கடைசி வசனத்தில் வருகின்றன. இறைவனின் ஆட்சியில் நீதியும், நேர்மையும் செழித்தோங்கும் என்னும் செய்தியைத் திருப்பாடல் 85லும் காண்கிறோம். இயேசுவின் பிறப்பால் நீதியும், நேர்மையும் இவ்வுலகில் வளரட்டும். நாமும் நீதி, நேர்மையுள்ளவர்களாய் வாழ்வோமாக.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகன் இயேசுவின் பிறப்பிலே இயற்கையும் மகிழ்கிறது, நாங்களும் மகிழ்கிறோம். அவ்வாறே, நாங்கள் நீதி, நேர்மை உள்ளவர்களாய் வாழவும், உழைக்கவும் அருள்தாரும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா


யோவா 1: 35-42

தேடுதலும் தங்குதலும் !

இயேசு தம்மைப் பின் தொடர்ந்த இரு சீடர்களிடம் "என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக "ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று கேட்டனர். தேடுதலுக்கும், தங்குதலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிச் சிந்திக்க இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. சென்னையில் வேலை செய்யவிரும்பும் ஓர் இளைஞன் தனது சொந்த ஊரில் இருந்துகொண்டே வேலை தேடினால், கிடைப்பது அரிதுதான். ஆனால், அதே இளைஞன் சென்னை சென்று, அங்கேயே தங்கி, வேலை தேடும் படலத்தில் ஈடுபட்டால், ஏதாவது ஒரு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இறைவனைத் தேடுபவர்கள் இமயமலை போன்ற இடங்களுக்குச் சென்று தங்கி, இறையனுபவத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். பலரும் சாலக்குடி போன்ற தியான இல்லங்களுக்கோ, வேளாங்கன்னி போன்ற திருத்தலங்களுக்கோ சென்று தங்கியிருந்து இறையனுபவம் பெறுவதை நாம் அறிவோம். தங்கியிருத்தலில் நேரம் செலவழிப்பது முகாமையான ஒன்று. "நேரமில்லை", "பிசியாக இருக்கிறோம்" என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால், இறைவனைச் சந்திக்க முடியாது. இறைவனுக்காக நேரம் செலவழிக்க, அவரோடு தங்கியிருக்க முன்வருவோம்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உலக இன்பங்களைவிட உம்மைத் தேடவும், உம்மோடு தங்கியிருந்து நேரம் செலவழிக்கவும் எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.