முதல் வாசகம்

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 3b-10, 19

அந்நாள்களில் கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தான். அப்பொழுது ஆண்டவர், "சாமுவேல்" என்று அழைத்தார். அதற்கு அவன், "இதோ! அடியேன்" என்று சொல்லி, ஏலியிடம் ஓடி, "இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டான். அதற்கு அவர், "நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்" என்றார். அவனும் சென்று படுத்துக்கொண்டான். ஆண்டவர் மீண்டும் "சாமுவேல்" என்று அழைக்க, அவன் எழுந்து ஏலியிடம் சென்று, "இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?'' என்று கேட்டான். அவரோ, "நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக் கொள்'' என்றார். சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. மூன்றாம் முறையாக ஆண்டவர், "சாமுவேல்" என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று, "இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்து கொண்டார். பின்பு ஏலி சாமுவேலை நோக்கி, "சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ, "ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்" என்று பதில் சொல்" என்றார். சாமுவேலும் தன் இடத்திற்குச் சென்று படுத்துக்கொண்டான். அப்போது ஆண்டவர் வந்து நின்று, "சாமுவேல், சாமுவேல்" என்று முன்புபோல் அழைத்தார். அதற்குச் சாமுவேல், "பேசும், உம் அடியான் கேட்கிறேன்" என்று மறுமொழி கூறினான். சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர் அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 40: 2,3. 6-7. 7-8. 9

பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.

2 அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக் கொணர்ந்தார்;
சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கி எடுத்தார்; கற்பாறையின் மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.
3 புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். -பல்லவி

6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை;
ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 7 எனவே, `இதோ வருகின்றேன்.' -பல்லவி

7 என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;
8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;
உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். -பல்லவி

9 என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்;
நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 13-15,17-20

சகோதரர் சகோதரிகளே, உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர். ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார். உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார். எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர். உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 1: 41.17b
அல்லேலூயா, அல்லேலூயா! மெசியாவை, அதாவது அருள்பொழிவு பெற்றவரைக் கண்டோம். அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. அல்லேலூயா.

யோவான் 1:35-42

பொதுக்காலம், வாரம் 2 ஞாயிறு

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42

யோவான் தம் சீடர் இருவருடன் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, ``இதோ! கடவுளின் செம்மறி'' என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டு, ``என்ன தேடுகிறீர்கள்?'' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், ``ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?'' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ``வந்து பாருங்கள்'' என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, ``மெசியாவைக் கண்டோம்'' என்றார். `மெசியா' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, ``நீ யோவானின் மகன் சீமோன். இனி `கேபா' எனப்படுவாய்'' என்றார். `கேபா' என்றால் `பாறை' என்பது பொருள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

---------------------------------------------------------------------------------

வந்து பாருங்கள் வியந்துபோவீர்கள்

திருவிழா காலங்களில் துணிக்கடை மற்றும் வியாபாரக் கடைகளிலிருந்து வரும் விளம்பரம் வந்து பாருங்கள் வியந்துபோவீர்கள். நாம் நினைத்த விலைக்கேற்றவாறு இருக்கும். புதிதாக கல்லூhயில் படிக்க தீர்மானித்துக்கொண்டிருக்கும்போது, கல்லூரியிலிருந்து வரக்கூடிய அழைப்பு விளம்பரம் வந்துபாருங்கள் வியந்து போவீர்கள். அந்த அளவிற்கு நாம் நினைப்பதைவிட அதிகமான அடிப்படை வசதிகள். புதிதாக பேருந்து நடைமுறைக்கு வருகிறதென்றால், விளம்பரத்தில் வரும் தகவல்; வந்து பாருங்கள் வியந்து போவீர்கள். இவையெல்லாம் மக்களை கவர்ந்து இழுக்க உருவானவை.

ஆனால் இன்று இயேசு அழைக்கும் வந்துபாருங்கள் என்ற விளம்பர அழைப்பானது, நாம் எதிர்பார்ப்பதுபோன்று இராது. ஏனென்றால் மேலே நாம் பார்த்த விளம்பரங்கள் அனைத்துமே வந்து மற்ற பொருட்களை (அ) நமக்கான வசதி வாய்ப்புகளை பார்த்தோம். ஆனால் இயேசுவின் அழைப்பு, வந்து நம்மை உற்றுநோக்கி பார்க்கக்கூடிய அழைப்பாக அமைந்தது. அவர்கள் தங்களையே உற்றுநோக்கியதால்தான் மெசியாவாகிய இயேசுவை பார்க்க முடிந்தது. முதல்வாசகத்தில் கூட சாமுவேல் முதல் இரண்டுமுறை விளம்பர பார்வைத்தான் பார்த்தார். மூன்றாவது முறையாக அவரை உற்றுநோக்கியதால்தான் கடவுளின் அழைப்பை உணர முடிந்தது.

இன்று நம்மையும் இந்த பலிக்கு வந்து பாருங்கள் என்று அழைத்திருக்கின்றார். நாம் விளம்பர அழைப்பாக பார்க்கின்றோமா (அ) நம்மை பார்க்க வாய்ப்பாக நினைக்கின்றோமா? சிந்திப்போம்.
- அருட்பணி. பிரதாப்

=======================

 

திருமுழுக்கு யோவானின் எடுத்துக்காட்டான வாழ்வு

திருமுழுக்கு யோவானின் பெருந்தன்மை இன்றைய நற்செய்தியிலே வெளிப்படுகிறது. இதுவரை மக்கள் மத்தியில் அவர் பெற்றிருந்த செல்வாக்கு, இறைவாக்கினர் என்று மக்கள் மதித்த பாங்கு, அதிகாரவர்க்கத்தினருக்கு அவர் விடுத்த சவால், இவையனைத்தையும், ஒரு நொடியில் இழப்பதற்கு திருமுழுக்கு யோவான் தயாராகிறார். தன்னை மெசியா என்று மக்கள் நினைத்திருந்தாலும், அந்த நினைப்பை தனது சுயநலத்திற்காக அவர் என்றுமே பயன்படுத்த முயலவில்லை.

தன்னுடைய சீடர்கள் தன்னிலிருந்து, இயேசுவுக்கு நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தின் வெளிப்பாடுதான், இன்றைய நற்செய்தி. அவர்களின் தேடல் நிறைவிற்கு வரப்போகிறது என்பதை திருமுழுக்கு யோவான வெளிப்படுத்துகிறார். அவர்களின் தேடல் அவரில் அல்ல, மாறாக, இயேசுவில்தான் நிறைவு பெறப்போகிறது என்பதை அவர் தன்னுடைய சீடர்களுக்குக்கற்றுத்தருகிறார். அதற்காக அவர் வருந்தியது இல்லை. தனது புகழ் முடிந்துவிட்டதே என்று, வருத்தப்படவும் இல்லை. இயேசுவை இந்த உலகத்திற்கு முழுமையாக அடையாளம் காட்டுகிறார்.

நமது வாழ்வில் நம்மை அடையாளப்படுத்துவதற்கு அதிக முயற்சி எடுக்கிறோம். எப்படியாவது நம் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று அதிக அக்கறையும், சிரத்தையும் எடுக்கிறோம். எந்த அளவுக்கு என்றால், அடுத்தவர்களுக்கு குழிவெட்டி, அவர்களை விழச்செய்து, நாம் குளிர் காய நினைக்கிறோம். அதைத்தவிர்த்து, திருமுழுக்கு யோவானின் வாழ்வைப்பின்பற்றுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

 

மெசியாவைக் கண்டீர்களா?

இயேசுவோடு தங்கியிருந்து அவரது அன்பையும், ஆற்றல்மிகு வாக்குகளையும் சுவைக்கும் அனுபவம் பெற்ற அந்திரேயா தமது சகோதரர் சீமோனிடம் வந்து சொன்ன நற்செய்தி "மெசியாவைக் கண்டோம்" என்பது. வாழ்வு மாற்றம் நிகழ்த்தும் தியானக்கூட்டங்களில் கலந்துகொண்டு பயன்பெற்ற பலரும் திரும்பி வந்து, அண்டை அயலாரை அழைத்து, "நீங்களும் அந்த தியானத்தில் கலந்துகொள்ளுங்கள்" என்று ஊக்கமூட்டும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. இவை மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி அறிவிப்பு அனுபவங்கள். ஆனால், பெரும்பான்மை கத்தோலிக்கர் "மெசியாவைக் கண்டோம்" என்று பிறரிடம் ஆர்வத்துடன் சொல்ல இயலுவதில்லை, காரணம் இந்த "மெசியா அனுபவம்" அவர்களுக்குக் கிடைப்பதில்லை. தியானங்கள், திருப்பயணங்கள், குணமளிக்கும் நிகழ்வுகள், நற்செய்திக் கூட்டங்கள், அறப்பணி சேவைகள்... இப்படி ஏதாவது ஒரு வகையில் நம்மவர்கள் அனைவரும் "மெசியா அனுபவம்" பெறவேண்டும். அதற்கான வாய்ப்புகளை பங்குத் தந்தையர், அன்பியப் பொறுப்பாளர்கள், பக்த சபையினர் ஏற்படுத்தித் தரவேண்டும். "இயேசு அனுபவம்" இல்லாத கிறித்தவ வாழ்வு சாறற்ற சக்கைவாழ்வு என்பதை உணர்வோம். எல்லாரும் இறையனுபவத்தைத் தேடிப்பெற ஊக்குவிப்போம்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களுக்கு ஆழ்ந்த இறையனுவத்தைத் தரவும், அந்த அனுபவத்தைப் பெற்றபின், பிறரை அந்த அனுபவத்துக்குள் அழைத்துவரவும் தேவையான ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

-"ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?"-

இயேசுவின் அன்புக்குரியவரே!

'தங்கியிருத்தல்' உண்மையிலே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இன்றைய காலகட்டங்களில் ஆ.டு.யு களை கடத்தி தங்களோடு தங்க வைப்பது இந்த அனுபவம்தானே. ஒருவனோடு தங்கி, உண்டு, உறங்கி சில நாட்கள் இருந்தால் அது அவனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதல்லவா!.

இத்தகைய பெரும் மாற்றத்தை, புரட்சியை இயேசுவோடு தங்கியிருப்பதும் செய்யவல்லது. இயேசுவோடு தங்கிய யாவரும் இந்த அனுபவம் பெற்றனர். எம்மாவு "எங்களோடு தங்கும்"(லூக்24'29) என்ற அழைப்பு மாபெரும் மாற்றத்தை அச்சீடர்களில் ஏற்படுத்தியது. "சக்கேயு,இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" (லூக் 19'5) என்ற இயேசுவின் வார்த்தை சக்கேயுவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதும் நமக்கு தெறியும்.

இவ்வாறு தங்க ஆசைப்பட்டு "ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" எனக் கேட்டு அவரோடு தங்கியவருள் ஒருவர் அந்திரேயா. அவர் பெற்ற அனுபவம் "மெசியாவைக் கண்டோம்" என்பது. பெற்ற பெரு மகிழ்ச்சியை பேதுருவோடும் பகிர்ந்துகொள்கிறார். தானும் பேரானந்தம் அடைகிறார். பலரையும் இயேசுவில் மகிழச் செய்கிறார்.

இதேபோல் நாம் மகிழ, பிறரை மகிழ்விக்க, இயேசு தங்குமிடத்தை அறிந்து அவரோடு தங்குவோம். அல்லது நாம் தங்கும் நம் வீட்டை இயேசு தங்கும் வீடாக்குவோம். வாழ்த்துக்கள். ஆசீர்

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்