முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 11-21

அன்பிற்குரியவர்களே, நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்த செய்தி இதுவே; நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். காயினைப்போல் நீங்கள் இராதீர்கள்; அவன் தீயோனைச் சார்ந்தவன்; ஏனெனில் தன் சகோதரரைக் கொலை செய்தான். எதற்காக அவரைக் கொலை செய்தான்? ஏனெனில் அவன் செயல்கள் தீயனவாக இருந்தன. அவன் சகோதரருடைய செயல்கள் நேர்மையானவையாக இருந்தன. சகோதரர் சகோதரிகளே, உலகம் உங்களை வெறுக்கிறதென்றால் நீங்கள் வியப்படைய வேண்டாம். நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோமென அறிந்துள்ளோம்; அன்பு கொண்டிராதோர் சாவிலேயே நிலைத்திருக்கின்றனர். தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள். எந்தக் கொலையாளியிடமும் நிலைவாழ்வு இராது என்பது உங்களுக்குத் தெரியுமே. கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்துகொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லை என்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்? பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம். இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என அறிந்துகொள்வோம்; நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும். ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்; அனைத்தையும் அறிபவர். அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 100: 1-2. 3. 4. 5
பல்லவி: அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள். -பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்!
நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள். -பல்லவி

4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ச்சிப்பாடலோடு
அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள். -பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா.

யோவான் 1:29-34


நற்செய்தி வாசகம்

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 43-51

அக்காலத்தில் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, �என்னைப் பின்தொடர்ந்து வா'' எனக் கூறினார். பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள். பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, �இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்'' என்றார். அதற்கு நத்தனியேல், நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?'' என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், �வந்து பாரும்!'' என்று கூறினார். நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, �இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்'' என்று அவரைக் குறித்து கூறினார். நத்தனியேல், �என்னை உமக்கு எப்படித் தெரியும்?'' என்று அவரிடம் கேட்டார். இயேசு, �பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்'' என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, �ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்'' என்றார். அதற்கு இயேசு, �உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்'' என்றார். மேலும் �வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று அவரிடம் கூறினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.கூறிவருகிறேன். "

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

--------------------------------------------------

அழகை அல்ல, அகத்தை பார்ப்போமா!
05.01.2023 – யோவான் 1: 43 - 51

அம்பானி 1000 கோடிக்கு நலத்திட்டம் வழங்கினார் என்றால் இந்த உலகமே போற்றும். ஆனால் சாதாரண ஏழை அந்தோணி 1000 ரூபாய்க்கு உதவி செய்தார் என்றால் போற்றப்பட மாட்டார். மோடி கடற்கரைப் பகுதியை சுத்தம் செய்தார் என்றால் அனைத்து செய்தி சேனலிலும் தலைப்புச் செய்தியாக வெளிவரும். ஆனால் ஒரு ஊரில் உள்ள வின்சென்ட் தே பவுல் சபை அல்லது வளர்ச்சி குழுவில் உள்ள பாமர மக்கள் சுத்தம் செய்தால் மறைக்கப்படுவார்கள். ஏனென்றால் மனிதன் அகத்தை பார்ப்பதில்லை, மாறாக அழகைத்தான் பார்க்கின்றான். அதனால் தான் நத்தனியேல் கேட்கின்றார். நாசரேத்திலிருந்து நல்லது ஏதும் வர முடியுமோ? ஏனென்றால் நாசரேத்து ஒரு ஒதுக்கப்பட்ட பகுதி. இந்த பெயர் ‘நெஸ்தர்’ – முளை என்ற பதத்தில் இருந்து தோன்றியதாக சிசோியாவின் யுசேபியுஸ் என்ற (கிபி275-339) கிறிஸ்தவ ஆயர் தெரிவித்த கருத்தானது 20 ஆம் நூற்றாண்டு வரை நிலவி வந்தாலும் ‘நசரா’ உண்மை என்ற பதத்தில் இருந்து வந்ததாக வாதிடுகின்ற விவிலிய பேராசியர்களும் இருக்கின்றார்.

நத்தனியேல் அழகை வைத்து தீர்மானித்தார். ஆனால் இயேசு நத்தனியேலின் அகத்தைப் பார்த்தார். எனவே, போற்றப்படுகின்றார். நாம் நம்மோடு இருப்பவர்களை எந்த அடிப்படையில் பார்வையிடுகிறோம். அழகா? அகமா? சிந்திப்போம்.

அருட்பணி. பிரதாப்


தியானப் பாடல் சிந்தனை: திருப்பாடல் 100: 1ஆ-2, 3, 4, 5

”அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்”

இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களும் கடவுளை ஆர்ப்பரித்து வாழ்த்த வேண்டும் என்று இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. கடவுளை வாழ்த்துவதற்கு என்ன காரணங்களை ஆசிரியர் கூறுகிறார்? மூன்று பண்புகளை நாம் கடவுளை வாழ்த்துவதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. அதுதான் ஐந்தாம் இறைவார்த்தையில் நாம் பார்க்கிறோம்: ”ஆண்டவர் நல்லவர், என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு, அவர் தலைமுறைதோறும் நம்பத்தக்கவர்”. இந்த மூன்று பண்புகளை இன்றைய நாளில் நாம் சிந்திப்போம்.

கடவுள் நன்மைகளைச் செய்யக்கூடியவராக இருக்கிறார். மக்கள் எவ்வளவுதான் நன்றியுணர்வு இல்லாமல் வாழ்ந்தாலும், கடவுள் அதனை ஒரு பொருட்டாக நினைத்து, மக்களுக்கு தீமை செய்ய முற்படுவதில்லை. நன்மை செய்வது ஒன்றையே அவர் இலக்காக வைத்திருக்கிறார். 2. கடவுளின் அன்பு எந்நாளும் மக்களுக்கு இருக்கிறது. கடவுளின் அன்புக்கு மக்கள் தகுதியற்ற நிலையில் இருந்தாலும், கடவுள் மக்களை தொடர்ந்து அன்பு செய்கிறவராக இருக்கிறார். அவரது அன்பு தாயன்பிற்கு ஒப்பிடப்பட்டு சொல்லப்படுகிறது. ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளை எல்லா நிலைகளிலும் அன்பு செய்கிறார். தாயின் அன்பு எதிர்பார்ப்பு இல்லாத அன்பு. அதைவிட பல மடங்கு உயர்ந்தது கடவுளின் அன்பு. அந்த அன்பின் காரணமாகத்தான் தன்னுடைய ஒரே மகனை இந்த உலகத்திற்கு கையளிப்பதற்கு கடவுள் திருவுளம் கொண்டார். 3. கடவுள் நம்பத்தகுந்தவர் என்கிற வார்த்தை, கடவுளின் வாக்குறுதியைக் குறிப்பிட்டுச் சொல்வதாக இருக்கிறது. கடவுள் ஒருபோதும் வார்த்தை தவறாதவர். அவர் கொடுத்த வாக்குறுதிகளை நினைவிற்கொண்டு, அதனை சரியான காலத்தில் திட்டமிட்டுச் செயல்படுத்துகிறவர்.

கடவுளின் பண்புகளை திருப்பாடல் ஆசிரியர் விளக்குகிற தருணத்தில், கடவுளின் சாயலால் படைக்கப்பட்டிருக்கிற, நம்மிடத்தில் இந்த பண்புகள் மிளிர்கிறதா? என்று யோசித்துப் பார்ப்போம். அந்த பண்புகளை நமது வாழ்வில் வாழ்ந்து காட்ட, இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------

இயேசுவின் சீடர்கள் பலர். ஒவ்வோருவரும் இயேசுவின் அறிமுகம் பெற்ற விதமும், இயேசுவின் அனுபவம் இவர்களில் வளர்ந்த விதமும் வித்தியாசமானது. இது அவரவர் வாழ்வின் பின்னனியில் நிகழ்த தேடலின் பலனே! ஒவ்வொருவரும் எதை அல்லது யாரைத் தேடினார்களோ அதனை இயேசுவின் கண்டு ிநறைவடைய மயன்றனர். சீடத்துவம் என்பது இயேசுவின் அழப்படும் ஆன்மீகப் பயளம். இயேசுவைப் பின் சென்று, கண்டு கேட்டு அனுபவித்து தங்கி இயேசுவில் கலந்து விடுவதே இந்த பயணத்தின் பல படிகள். நத்தனியேல், பேதுரு இவர்களின் அனுபவமும் வாழ்வும் இதற்கான அத்தாட்சிகளே!

பணி. மைக்கிள் மரியதாஸ் cmf.

-------------------------

திருப்பாடல் 100: 1 - 5

"அனைத்துலகோரே, ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்"

நாம் இன்னும் கிறிஸ்துபிறப்புக் காலத்தின் மகிழ்விலேயே இருக்கிறோம் என்பதை நினைவூட்டுகிறது இன்றைய திருப்பாடல். "அனைத்துலகோரையும் ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்த" அழைக்கிறது இன்றைய பல்லவி.

நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா. அவர் இம்மானுவேல், "கடவுள் நம்மோடு". எனவே, நாம் ஆர்ப்பரித்துப் பாடுவது தகுதியே.

திருப்பாடல் 100 ஐந்தே வசனங்கள் கொண்ட ஓர் அருமையான இறைபுகழ்த் திருப்பாடல். "நன்றி நவில்வதற்கான புகழ்ப்பா" என அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது. புகழ்ச்சிப் பாடல் எனத் தலைப்பிடப்பட்டிருப்பதே, இது ஓர் இறைபுகழ்த் திருப்பா என்பதைப் பறைசாற்றுகிறது.

நாம் மகிழ்வின் காலத்தில் இருக்கிறோம். நமக்காகப் பிறந்த குழந்தைக்காக நாம் மகிழ்கொண்டாடுவது பொருத்தமானதே. "ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள், மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்" (2) என்னும் இறைs் திருவாயில்களில் நுழையுங்கள். புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள். அவருக்கு நன்றி செலுத்தி அவர் பெயரைப் போற்றுங்கள்" (4) என்னும் வரிகளில் "நன்றி" என்னும் சொல்லாடல் இருமுறை கையாளப்பட்டிருப்பதையும் கவனிக்கிறோம்.

ஆண்டவரின் மீட்பை மகிழ்ச்சியோடும், நன்றியுணர்வோடும் கொண்டாடுவோம்!

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகன் இயேசுவின் பிறப்பிலே நாங்கள் மகிழ்கிறோம். அவரைக் கொடையாகத் தந்ததற்காக உமக்கு நன்றி நவில்கிறோம், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

"நாசரேத்திலிருந்து நல்லது வரக்கூடுமோ" ?

நத்தனியேல் பிலிப்பிடம் சொன்ன "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரமுடியுமோ?" என்னும் சொற்கள் நமது முற்சார்பு எண்ணங்களை ஆய்வுசெய்ய நமக்கு அழைப்பு விடுக்கின்றன. "இந்த ஊர்க்காரர்கள் இப்படிப்பட்டவர்கள்", "இந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதிகள்", "இந்த மொழியைப் பேசுபவர்கள் ஆதிக்கவாதிகள்" என்றெல்லாம் ஒரு பட்டியலை உருவாக்கி, அதைத் தலைமுறை தலைமுறையாகப் பரப்பி வருகின்றனர் ஒருசிலர். நம்மில் பெரும்பாலானவர்கள் இந்த முற்சார்புப் பதாகைகளைக் கேள்விக்குட்படுத்தாமல், அப்படியே ஏற்றுக்கொள்வதுடன், அதை நமது பங்குக்கு நாமும் பரப்புரை செய்கின்றோம். எவ்வளவு பெரிய தவறு! எவருடைய தவறுக்கும், உயர்வுக்கும் அவரது ஊரோ, மொழியோ, மதமோ, சாதியோ பொறுப்பல்ல. அவரவரே பொறுப்பு என்னும் அறிவார்ந்த சிந்தனையை எப்போது நாம் ஏற்றுக்கொள்வோம்.

நாசரேத்திலிருந்தும் நல்லது வரக்கூடும் என்று அந்த பிற்போக்கு எண்ணத்தைத் தகர்த்தெறிந்த ஆண்டவர் இயேசு, நமது முற்சார்பு மூடநம்பிக்கைகளை உடைத்து, மனிதரை மாண்புடன் எதிர்கொள்ள அருள்தருவாராக!

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எந்த மனிதரையும் ஊரின், சாதியின், சமயத்தின் கண்ணோட்டத்தில் பார்க்காமல், உமது சாயலாகப் பார்க்கின்ற புதிய பார்வையை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

என்னைவிட முன்னிடம் பெற்றவர் !

"பிறர் உங்களைவிட மதிப்புக்குரியவர் என எண்ணுங்கள்" (உரோ 12: 10). திருமுழுக்கு யோவானிடமிருந்து இன்று நாம் கற்றுக்கொள்ளும் உளவியல் மற்றும் ஆன்மீகப் பாடம் இதுதான். பிறரை நம்மைவிட மேலானவராகவும், மதிப்புக்குரியவராகவும் உண்மையிலேயே எண்ணுதல், சொல்லுதல், செயல்படுதல். இந்தக் கடினமாக மதிப்பீட்டை திருமுழுக்கு யோவான் எளிதில் செயல்படுத்திக் காட்டினார். "இதோ, கடவுளின் செம்மறி. இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப் பின்வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்" எனச் சான்று பகர்ந்தார்.

நாம் எப்படி? நம்மோடு பணியாற்றபவர்கள், அல்லது நமக்குப் பின் நமது பணியைத் தொடர்பவர்கள் (ளரஉஉநளளழசள) - இவர்கள் பற்றி நமது மனநிலை என்ன? நமது சொற்கள் என்ன? நமது சான்று என்ன? யோவானைப் போல நம்மாலும் பிறரைப் பாராட்டீ. சான்று பகர முடியுமா?

இன்று இந்தப் பயிற்சியைச் செய்வோமா? இன்று நமது கண்ணில் காணும் அனைவரையும் "இவர் என்னைவிட மதிப்புக்குரியவர்" என மனதிற்குள் சொல்வோம். வாய்ப்பு கிடைத்தால், வாயாலும் அறிக்கையிடுவோம்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். பிறரை எங்களைவிட மதிப்புக்குரியவர் என எண்ணும் நல்ல, நேர்மையான உள்ளத்தை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- அருட்பணி. குமார்ராஜா
--------------------------------------------------------------------------