முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21

அன்பார்ந்தவர்களே, நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இதுவே நாம் அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை. நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும். எனவே, நாம் அவரிடம் கேட்டவற்றைப் பெறுவோம் என்னும் உறுதி நமக்கு உண்டு. பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்யவேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார். சாவுக்குரிய பாவமும் உண்டு. அப்பாவத்தைச் செய்வோருக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என நான் சொல்லவில்லை. தீச்செயல் அனைத்துமே பாவம்; ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல. கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறந்தவர்களை அவர் பாதுகாக்கிறார். தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை. நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; ஆனால், உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது. இது நமக்குத் தெரியும். இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்துகொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே நிலைவாழ்வு. பிள்ளைகளே, சிலைவழிபாட்டைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 149: 1-2. 3-4. 5-6, 9
பல்லவி: ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்.

1 அல்லேலூயா, ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்.
அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.
2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக!
சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக. -பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி,
யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக.
4 ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்;
தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைப் படுத்துவார். -பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மை அடைந்து களிகூர்வராக!
மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக.
6ய அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்.
9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. அல்லேலூயா. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

யோவான் 2:1-11

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12


கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ``திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது'' என்றார். இயேசு அவரிடம், ``அம்மா, அதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே'' என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், ``அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்'' என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும். இயேசு அவர்களிடம், ``இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்'' என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்புவரை நிரப்பினார்கள். பின்பு அவர், ``இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்'' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, ``எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம்போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?'' என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

தீர்ந்தது தீர்க்கமாகும்
07.01.2023 – யோவான் 2: 1 - 12

2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, 2018 ம் ஆண்டு நடந்த கஜா புயல், 2017 ல் ஏற்பட்ட ஓகி புயல் இவைகளின் சூழ்ச்சிக்கு மக்கள் இரையாக்கப்பட்டார்கள். இதனால் தங்களிடமிருந்த பொருட்களெல்லாம் தீர்ந்து போனது. முகம் தெரியாத, முகவரி தெரியாத மனிதர்கள் முன்வந்து இவர்களின் தீர்வை தீர்க்கமாக்கினர். காரணம், தாங்கள் கடவுள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்குத் தங்களையே அர்ப்பணித்தார்கள். அது போலத்தான் கானாவூர் நிகழ்வு. யூத மரபில் திருமணம் என்பது எட்டு நாட்கள் நடக்கின்ற ஒரு சமூக விழா. குடிபானங்களிலே தயாரிப்பதற்கென்று அதிக நாட்கள் எடுக்கக்கூடிய குளிர்பானம் திராட்சை ரசம். ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆகும். அப்படியென்றால் திருமண வீட்டார் எத்தனை வருடங்களாக இருந்து தயாரித்திருப்பார்கள் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த குறைவு பசி அல்லது வெறும் உடலை சார்ந்த குறைவு அல்ல. மாறாக, சமுதாயத்தில் அந்தஸ்தை காட்டுகின்ற குறைவு. அத்தகைய தீர்வில் தான் இயேசு தீர்க்கத்தைக் கொடுக்கின்றார். எவ்வொறெனில் அவர்கள் தங்களிடமிருந்த தண்ணீரை இயேசுவிடம் அர்ப்பணித்தார்கள். அந்த அர்ப்பணிப்பு தான் தீர்வை தீர்க்கமாக மாற்றுகிறது.

நம்முடைய வாழ்வில் அன்பு, பாசம், பொறுமை, கீழ்ப்படிதல், நம்பிக்கை தீர்ந்து போய்க் கொண்டே இருக்கிறதா? பயம் வேண்டாம். கடவுளிடம் நம்மை அர்ப்பணிப்போம். கடவுள் தீர்க்கமாக்குவார். அர்ப்பணிக்க தயாரா? சிந்திப்போம்.

அருட்பணி. பிரதாப்

========================

 

தியானப் பாடல் சிந்தனை:திருப்பாடல் 149: 1 – 2, 3 – 4, 5 – 6அ, 9ஆ

ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்

ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார் என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். எந்த மக்கள் மீது, என்ன விருப்பம் கொள்கின்றார்? தொடக்கத்தில் இஸ்ரயேல் மக்கள் நாடோடிகளாக வாழ்ந்தனர். அவர்களுக்கென்று அரசர்கள் கிடையாது. இருந்து வாழ்வதற்கு ஒரு நாடு கிடையாது. அவர்கள் சாதாரண நாடோடிகள். ஆடு, மாடுகளை மேய்த்து வந்த, மேய்ச்சல் நிலங்களில் தங்கி வாழ்ந்த சாதாரண மக்கள். பல்வேறு பலம் வாய்ந்தவர்களின் தாக்குதலுக்கு பயந்து நடுங்கி ஓடி ஒளிந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள். இவர்களை கடவுள் தம் மக்களாக தேர்ந்து கொள்கிறார்.

பலவீனமானவர்களை தன்னுடைய மக்களாக தெரிந்து கொள்கிறார். இவ்வாறு, இறைவன் ஏழை, எளிய மக்களின் சார்பானவராக தன்னை வெளிப்படுத்துகிறார். அந்த மக்கள் இருந்த அடிமை நிலையை இறைவன் கண்ணோக்கி, அந்த தாழ்நிலையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முனைகிறார். அதற்கு அவர் விருப்பம் கொள்கிறார். எப்படிப்பட்ட விருப்பம்? அவர்களும் மற்றவர்கள் போல மாண்போடு நடத்தப்பட வேண்டும். அவர்களும் மற்றவர்கள் நடுவில் மதிப்பு பெற வேண்டும். எல்லாரும், எல்லாமும் பெற்று இன்புற்று வாழ்வதே இறைவனின் விருப்பமாக இருக்கிறது.

இன்றைக்கு சமுதாயத்தின் அனைத்துதரப்பிலும் ஒருவிதமான அடிமைத்தனம் வேரூன்றி இருப்பதை நாம் பார்க்கலாம். இத்ததகைய அடிமைத்தனம் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் புரையோடிக் காணப்படுவது வேதனையிலும் வேதனை. ஆனால், இறைவன் அப்படிப்பட்ட தாழ்நிலையில் இருப்பவர்களின் மத்தியில் தான் காணப்படுகிறார் என்பதை அறிந்து, அவர்களுக்காக உழைக்கும் வரம் வேண்டுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

இறைவனின் அருட்கரம்

விருந்தோம்பல் என்பது மத்திய கிழக்குப் பகுதியில் புனிதமான ஒன்றாகக் கருதப்பட்டது. அறிமுகமில்லாத நபர்கள் வந்தாலும், அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் கவனிப்பது ஒரு யூதரின் முக்கியக் கடமையாக இருந்தது. அறிமுகமில்லாத நபர்களுக்கே இப்படி என்றால், விருந்தினர்களுக்கு எப்படிப்பட்ட உபசரிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பொதுவாக விருந்தில் திராட்சை இரசம் பரிமாறப்பட்டது. திராட்சை இரசம் மகிழ்ச்சியின், விருந்தின் அடையாளம். அதில் தண்ணீர் கலந்து பரிமாறினார்கள். ஆக, திருமண விருந்து வீடு. விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். அது மகிழ்ச்சியின் இடம். இப்படிப்பட்ட இடத்தில் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்றால், நிச்சயம் அதைவிட திருமண வீட்டார்க்கு அவமானம் ஏதுமில்லை. அவர்களின் நிலைமை படுமோசமானதாக இருந்தது.

பாலஸ்தீனம் பகுதியில் ஏழைகளும், வறியவர்களும் மிகுந்திருந்தனர். உணவுக்காக கடுமையாக அவர்கள் உழைக்க வேண்டியிருந்தது. அப்படியிருக்கிறவர்களுக்கு, திருமண விருந்து என்பது, அந்த வேதனைகளை எல்லாம் மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணமாக, இருக்க வேண்டும். அந்த கொண்டாட்டத்திற்கு வழியே இல்லையென்றால், அது விருந்தினர்களின் முகச்சுளிப்பிற்கு உள்ளாக நேரிடும். அது மணமக்களின் மீது வெறுப்புணர்வை வீசுவதாகக் கூட மாறிவிடலாம். இத்தகைய சிக்கலான கட்டத்தில் தான், இயேசு அவர்களுக்கு உதவ முன்வருகிறார். நெருக்கடிச்சூழ்நிலை நம்மைத் தாக்க வரும்போதும், நம்மைக் காக்க வல்லவர், நம் ஆண்டவர் இயேசு ஒருவர் தான், என்பதை இந்த பகுதி நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

நமது வாழ்விலும் பல இக்கட்டான நேரங்களை நாம் எதிர்கொண்டிருக்கலாம். அந்த தருணங்களில் கடவுளின் அருட்கரம் நிச்சயம் நம் அருகில் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆண்டவர் எப்போதும் நம் அருகிலேயே இருக்கிறார். அவர் நம்மைக் காப்பதற்கு காத்துக்கொண்டிருக்கிறார். அந்த இறைவனிடம் நம்மையே நாம் ஒப்படைப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

"திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" !

கானாவூர் திருமணவிழா பற்றிய செய்தியைப் பலமுறை வாசித்து, சிந்தித்திருக்கிறோம். இன்று "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்னும் வாக்கியத்தை நமது சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். திராட்சை இரசம் என்பது மகிழ்ச்சியின் அடையாளம், விருந்தின் அடையாளம், உறவின் அடையாளம். திராட்சை இரசம் தீர்வது என்பது அவமானத்தின் அடையாளமாக, உறவுச் சிக்கலின் அடையாளமாக இருக்கிறது. எனவேதான், அச்சிக்கலைத் தீர்க்க தம் மகனை அணுகினார் அன்னை மரியா.

நமது வாழ்வில், பணியில், குடும்பத்தில் "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதா?" என்று அவ்வப்போது நம்மைக் கண்காணித்துக்கொள்வது நல்லது. பல பணிகளில் பரபரப்பாக இருக்கும் பலரும், தங்களது நெருங்கிய உறவுகள் ஆழம் குறைந்துவருவதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பணம் சேகரிப்பதிலே கவனம் செலுத்தும் இல்லத் தலைவன் மனைவி, பிள்ளைகளின் பாசம் குறைந்துவருவதைக் கவனிப்பதில்லை. பணியிலே நிறைவின்றி, மகிழ்ச்சியின்றி வேலைசெய்வது "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்பதைக் காட்டுகிறது.

இன்றைய நாளில் நமது வாழ்வை, பணியை, உறவுகளைக் கொஞ்சம் அலசிப்பார்ப்போம். "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்று கண்டால், மனங் கலங்காமல், அன்னை மரியாவை நாடுவோம். அவர் நமக்காகப் பரிந்துபேசி, நமது வாழ்விலும் புதிய திராட்சை இரசம் என்னும் இனிமையை ஆண்டவர் இயேசுவிடமிருந்து பெற்றுத் தருவார்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். அன்னை மரியாவின் பரிந்துரையால், எங்கள் வாழ்விலும் அற்புதங்கள் நிகழ்த்தி, திராட்சை இரசம் என்னும் மகிழ்ச்சி பொங்கி வழியச்செய்தருளும். அம்மா, மரியே, தாயே, எங்களுக்காக உம் திருமகனிடம் பரிந்துபேசுவீராக, ஆமென்.

- அருட்பணி. குமார்ராஜா
-------------------------------------------------------------------------------------------

 

மரியா காட்டிய இறைநீதி !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

மனிதர்களின் நீதி உணர்வுக்கும், இறைவனின் நீதி உணர்வுக்குமுள்ள வேறுபாடு மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு என்பதனை விவிலியத்தின் பல பக்கங்களில் காண்கிறோம். குறிப்பாக, ஆண்டவர் இயேசு இறைத் தந்தையின் நீதியைப் பல உவமைகள் வழியாக நன்கு எடுத்துரைத்துள்ளார். ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தில் அன்னை மரியாவும் அந்த இறைநீதியின் அறிவிப்பாளராகச் செயல்படுவதைப் பார்க்கிறோம்.

முதலில் வந்தவர்களுக்கு நல்ல இரசத்தைப் பரிமாறுவதும், கடைசியில் வருபவர்களுக்குத் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவதும் மனித நீதியாக, ஏற்றுக்கொண்டுவிட்ட பழக்கமாக இருந்தது. ஆனால், மரியாவோ தம் மகன் இயேசுவின் அரும் அடையாளத்தின் வழியாக, கடைசியாக வந்த, ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, சமூக அந்தஸ்து குறைந்த மக்களுக்கு நல்ல, தரமான இரசம் கிடைக்க வழிசெய்துவி;ட்டார். ஒதுக்கப்பட்டவர்களுக்கு, முதலில் வந்தவர்களுக்குச் சமமான இரசம் கிடைக்கச் செய்யாமல், அதைவிடச் சிறந்த இரசம் கிடைக்கச் செய்வதே இறைவனின் நீதி, இறைவனின் திருவுளம். அதனை அன்னை மரி இந்த அற்புதச் செயல்வழி நிறைவேற்றிவி;ட்டார். நாமும் மனித நீதியை அல்ல, இறைநீதியைச் செயல்படுத்துபவர்களாக வாழ முயலுவோம்.

மன்றாடுவோம்: நீதியின் நாயனனே ஆண்டவரே, அன்னை மரியா வழியாக உமது நீதியை நிலைநாட்டியதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இவ்வுலகம் யாரையெல்லாம் ஒதுக்கி வைக்கிறதோ, அவர்களுக்கு நாங்கள் முக்கியத்துவமும், முதன்மை நன்மைகளும் கொடுத்து, இறைநீதியை நிலைநாட்ட எங்களுக்கு வரம் அருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

அன்னை மரியாவின் இட ஒதுக்கீடு !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

அன்னை மரியாவை இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் தாரகை என்று வர்ணித்தால் அது மிகையல்ல. ஒடுக்கப்பட்டோருக்கும், ஓரங்கட்டப்பட்டோருக்கும் சார்பாக வாதிட்டதோடு நின்றுவிடாமல், அவர்களுக்கு உயரிய பங்கைப் பெற்றுத் தந்தார் அன்னை மரியா. திருமண வீடுகளில் முதற் பந்திகளில் பணக்காரர்களும், செல்வாக்கு நிறைந்தவர்களும்தான் அமர்வர். அவர்களுக்கெல்லாம் திராட்சை ரசம் குறைபடாமல் கிடைத்து விட்டது. ஆனால், கடைசிப் பந்தியில் அமர்ந்த ஏழை, எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், திருமண வீட்டாரால் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று கருதப்படாதோர் முதலியோரே அமர்ந்திருப்பர். இவர்களுக்குத்தான் இரசம் குறைபட்டுவிட்டது. மற்றவர்கள் அதைப் பற்றி அதிகம் அக்கறைப்பட்டுக்கொள்ளாத சூழலில்தான் அன்னை மரியா துணிந்து, நீதியுணர்வுடனும், நம்பிக்கையுடனும் இறைமகன் இயேசுவை அணுகுகிறார். தனது நேரம் வரவில்லை என்று இயேசு மறுப்பு தெரிவித்தபிறகும்கூட அவரை வலியுறுத்தி தண்ணீரைத் திராட்சை இரசமாய் மாற்றும் அருஞ்செயலை, தன் முதல் அற்புதச் செயலை இயேசு நிறைவேற்றக் காரணமானார். எனவே, ஒதுக்கப்பட்ட கடைசிப் பந்தில் அமர்ந்திருந்தவர்கள் முதல் பந்திகளில் அமர்ந்து இரசம் குடித்த செல்வாக்கு மிக்கோரைவிட அதிக சுவை நிறைந்த, நல்ல இரசத்தை அவர்கள் மனம் நிரம்பும்வரை அனுபவிக்க முடிந்தது. இவ்வாறு, ஒதுக்கப்பட்டோருக்கு அதிக தரமும், அளவும் மிக்க திராட்சை இரசம் கிடைத்தது. எனவே, அன்னை மரியாவை இட ஒதுக்கீட்டின் தாய் என்று பெருமையுடன் அழைக்கலாம்.

மன்றாடுவோம்: வானகத் தந்தையே இறைவா, உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம். அன்னை மரியாவை எங்கள் அனைவருக்கும் தாயாகத் தந்ததற்காக நன்றி கூறுகிறோம். அந்த அன்னையைப் பின் பற்றி நாங்களும் ஏழை, எளியோர், ஓரங்கட்டப்பட்டோர்மீது சிறப்புக் கவனம் செலுத்தி, அவர்களுக்கு உரிய தரமும், அளவும் மிக்க ஒதுக்கீட்டைப் பெற உழைப்போமாக! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா