முதல் வாசகம்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 23-31

அந்நாள்களில் விடுதலை பெற்ற சீடர்கள், தங்களைச் சேர்ந்தவர்களிடம் வந்து, தலைமைக் குருக்களும் மூப்பர்களும் தங்களுக்குக் கூறிய யாவற்றையும் அறிவித்தார்கள். இவற்றைக் கேட்ட யாவரும் ஒரே மனத்துடன் தங்கள் குரலைக் கடவுள்பால் எழுப்பி, பின்வருமாறு மன்றாடினர்: ``ஆண்டவரே, `விண்ணுலகையும் மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே'. எங்கள் தந்தையும் உம் ஊழியருமாகிய தாவீது வாயிலாகத் தூய ஆவி மூலம் `வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்? பூவுலகின் அரசர்களும் தலைவர்களும் ஆண்டவருக்கும் அவர்தம் மெசியாவுக்கும் எதிராக அணிவகுத்து நின்றனர்' என்று உரைத்தீர். அதன்படியே இந்நகரில் உம்மால் அருள்பொழிவு பெற்ற உம் தூய ஊழியராகிய இயேசுவுக்கு எதிராக ஏரோதும் பொந்தியு பிலாத்தும் பிற இனத்தவரோடும் இஸ்ரயேல் மக்களோடும் ஒன்றுதிரண்டனர். உமது கைவன்மையும் உமது திட்டமும் முன்குறித்த அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தனர். இப்போது கூட ஆண்டவரே, அவர்கள் அச்சுறுத்துவதைப் பாரும். உம் அடியார் முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக் கூற அருள் தாரும். உமது தூய ஊழியர் இயேசுவின் பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்; அடையாளங்களும் அருஞ்செயல்களும் நடைபெறச் செய்யும்.'' இவ்வாறு மன்றாடியவுடன் அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 2:1-3, 4-6, 7-9

பல்லவி: ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர்.

1 வேற்றினத்தார் சீறி எழுவதேன்?
மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?
2 ஆண்டவர்க்கும் அவர்தம் அருள்பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப்
பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்; ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்;
3 `அவர்கள் பூட்டிய தளைகளைத் தகர்ப்போம்;
அவர்கள் வைத்த கண்ணிகளை நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்' என்கின்றார்கள். -பல்லவி

4 விண்ணுலகில் வீற்றிருப்பவர் எள்ளி நகைக்கின்றார்;
என் தலைவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார்.
5 அவர் சினமுற்று அவர்களை மிரட்டுகின்றார்;
கடுஞ்சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்;
6 `என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தினேன். -பல்லவி

7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்:
`நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.
8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்;
பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்.
9 இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்'. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அல்லேலூயா.

யோவான் 3:1-8

பாஸ்கா காலம்-இரண்டாம் வாரம் திங்கள்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-8

அக்காலத்தில் பரிசேயர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர். அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, ``ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ``மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதி யாக உமக்குச் சொல்கிறேன்'' என்றார். நிக்கதேம் அவரை நோக்கி, ``வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?'' என்று கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, ``ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யேவான் 3: 1 - 8
மறுமலர்ச்சி

ஒருவேளை நாம் மறுபிறப்பு பெற்றுக் கொள்ளலாம் இலவசமாக என்ற அழைப்பு வந்தததென்றால். ஏழைகள், நோயாளிகள், கைவிடப்பட்டோர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள முயலுவார்கள். ஏனென்றால் இவர்கள் வாழ்வு அற்றவர்களாக எண்ணுகின்றார்கள். இது இந்த சமுதாய பார்வை.

அது போல ஆன்மீகத்திலும் மறுபிறப்பு பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்தால் பாவிகள் இந்த வாய்ப்பினை பெற முயலுவார்கள். ஏனென்றால் கடவுளின் பார்வையிலிருந்து விலகியவர்களாக எண்ணுகின்றார்கள். ஆனால் கடவுள் யாரையும் ஒதுக்குவதில்லை. மாறாக வாய்ப்பு கொடுக்கின்றார் என்பதனைத் தான் இன்றைய நற்செய்தி வாசகம் கற்றுத் தருகிறது. ஏனென்றால் நாம் அனைவருமே தூய ஆவியால் தான் திருமுழுக்கு வழியாக கிறிஸ்துவுக்குள் பெற்றெடுக்கப்பட்டிருக்கின்றோம். மீண்டும் நாம் மறுபிறப்பு அடைய வேண்டுமென்றால் ஒப்புரவு முக்கியம். இது தான் நம்மை அத்தகைய தூய ஆவியின் ஆற்றலுக்கேற்ப நம்மை வாழ தூண்டுகின்றது. அதனால் தான் இயேசு தூய ஆவியின்படி வாழ ஒழுகுங்கள் என்று கூறுகிறார். பவுல் தூய ஆவியின் கனிகள், கொடைகளாய் உங்கள வாழ்வு தாங்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். காரணம் இது தான் நம்மை கடவுளின் நெறிக்கேற்ப வாழ கற்றுக் கொடுக்கிறது.

நம்முடைய மறுபிறப்பு எதில் இருக்கிறது? துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதிலா? அல்லது பாவங்களிலிருந்து விடுதலை பெறுவதிலா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

====================

உயிர்ப்பும் திருமுழுக்கும் (யோவான் 3 : 1 – 8)

இயேசுவின் வாழ்வில் நிக்கதேமின் பங்களிப்பு அளப்பரியது. இவர் ஒரு பரிசேயராக இருந்தாலும் நேர்மையானவர். எனவேதான் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் ஆண்டவரைச் சிறைப்பிடிக்க ஆள் அனுப்பியதைக் கண்டித்து, ஆண்டவர் இயேசுவின் சார்பாகக் குரல் கொடுத்தார் (யோவான் 7 : 51) இவரின் முதல் சந்திப்பே இன்றைய நற்செய்தி.

நிக்கதேம் ஆணடவரின் உரையை முன்னரே கேட்டிருக்க வேண்டும். அவரது புதுமைகளைக் கண்டிருக்க வேண்டும். அவரே மெசியா என ஊகித்திருக்க வேண்டும். எனவேதான், “ராபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை அறிவேன். தன்னோடு கடவுள் இருந்தாலன்றி எவனும் நீர் செய்கிற அருங்குறிகளைச் செய்ய முடியாது” என்று தன் உரையைத் தொடங்குகிறார். ஆண்டவர் அப்படியே இறையாட்சியைப் பற்றியும், திருமுழுக்கின் முக்கியத்துவத்தைப் பற்றியும் விளக்குகின்றார். திருமுழுக்கிற்கும் இயேசுவின் உயிர்ப்பிற்கும் மிக நெருக்கமானத் தொடர்பு இருப்பது இதன் மூலம் இன்னும் வலுப்படுத்தப்படுகிறது.

திருமுழுக்கு வழியாக நாம் கிறிஸ்துவோடு இணைந்து விடுவதால் அவரது இறப்பிலும் உயிர்ப்பிலும் பங்கு கொண்டு, பழைய பாவ வாழ்வை அவருடன் கல்லறையில் புதைத்துவிட்டு புதுவாழ்வு பெறுகின்றோம் (உரோ 6 : 1-11). எனவே தான், “ஒருவர் தண்ணீராலும், தூய ஆவியாராலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது” என்கிறார் இயேசு. இப்பாஸ்கா காலத்தில் நமது திருமுழுக்கை நினைவுகூர்வது எத்தனை நன்று.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 2: 1 – 3, 4 – 6, 7 – 9
”ஆண்டவரே! உம்மிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்”

கடவுள் தான் இஸ்ரயேல் மக்களை ஆள்வதற்காக தாவீதைத் தேர்ந்தெடுத்தார். தாவீது எருசலேமில் இஸ்ரயேல் மக்களை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால், வேற்றுநாட்டினர் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக போர்தொடுக்கின்றனர். இந்த போர், இஸ்ரயேல் மக்களுக்கு எதிரானதோ, தாவீதுக்கு எதிரானதோ அல்ல. இது கடவுளுக்கு எதிரான போர். ஏனென்றால், இஸ்ரயேல் மக்களைத் தாக்குவது கடவுளையே தாக்குவது போலானதாகும். ஏனென்றால், எப்போது தாவீது இஸ்ரயேல் மக்களின் அரசனாக மாறினாரோ, அப்போதே அவர், கடவுளின் மைந்தனாக மாறிவிட்டார். எனவே, இனி கடவுளின் அருட்கரம் தான், அவரைப் பாதுகாக்கப் போகிறது.

இந்த திருப்பாடல் இயேசுவின் வருகையைக் குறிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. இயேசு எப்படியெல்லாம் கடவுளால் பேணிப் பாதுகாக்கப்பட போகிறார். இயேசுவின் வாழ்க்கை எவ்வளவு சவால்களுக்கு மத்தியில் இருக்கப்போகிறது என்கிற, எதிர்காலத்தில் நடக்க இருக்கிற நிகழ்வுகளையும் இந்த திருப்பாடல் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. எவ்வளவு சோதனைகள் வந்தாலும், எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும், கடவுள் அவரோடு இருப்பார். கடவுள் அவரை வழிநடத்துவார். கடவுள் அவருக்கு வெற்றி தேடித்தருவார். அவருடைய எதிரிகளை கடவுள் அழித்துவிடுவார்.

நாமும் கடவுளின் பிள்ளைகள் தான். கடவுள் நம்மையும் பேணிக்காத்து வருகிறார். கடவுள் நம்மையும் முழுமையாக பாதுகாக்கிறார். நாம் அவருடைய பிள்ளகளாக இருக்கிறோம். நாம் கடவுளுக்கு பிரியமானவர்களாக வாழ வேண்டும். ஏனென்றால், கடவுளுக்கு பிரியமான வாழ்க்கை வாழுகிறபோது, நாமும் அவரது பாதுகாப்பைப் பெற்றவர்களாக வாழ ஆரம்பிக்கிறோம். அப்படிப்பட்ட வாழ்வு வாழ, இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------

மீண்டும் பிறப்போம்

யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் போதனைகளைப் போதிக்கும் விதத்தில் தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறார். முதலில் இயேசு முன் ஒரு கேள்வி வைக்கப்படுகிறது. இயேசு அதனைக்கேட்டவர் புரியாத வண்ணம் அதற்கு விளக்கம் கொடுக்கிறார். சில சமயங்களில் கேட்டவர், அதனைத்தவறாகவும் புரிந்து கொள்கிறார். மீண்டும் இயேசு அதற்கு விளக்கம் கொடுத்துப் புரிய வைக்கிறார். இந்தப்பாணி யோவான் நற்செய்தியில் பல பகுதிகளில் காணப்படுகிறது. நிக்கதேமுடனான உரையாடலிலும் இதே பாணியை இயேசு பின்பற்றுகிறார்.

மறுபிறப்பு என்கிற வார்த்தை நிக்கதேமுக்கு குழப்பத்தையும், தவறாப்புரிந்து கொள்ளவும் தூண்டுகிறது. இதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. ஏனென்றால், கிரேக்கத்தில் “born anew” என்கிற வார்த்தைக்கு மூன்று அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. 1. தொடக்கத்திலிருந்து…2. மீண்டும்….3. மேலிருந்து… மறுபிறப்பு என்று இயேசு பொருள்படுத்துவது, அடிப்படையில் ஏற்படும் மாற்றம். கடவுளின் அருளால் ஏற்படும் மாற்றம். It is a radical change in a person. It is a change in a Person’s Being. அத்தகைய மாற்றம், அந்த மனிதனுடைய வாழ்வையே புரட்டிப்போடுகிறது. இயேசுவின் சீடர்களின் வாழ்வில் நடந்ததும், தூய பவுலடியாரின் வாழ்வில் நடந்ததும் இதுதான்.

நாம் ஒவ்வொருவரும் மீண்டும் பிறக்க வேண்டும் என்பது தந்தையாகிய கடவுளின் விருப்பம். அதாவது, நமது வாழ்வு மற்றவர்களின் வாழ்வில் தாக்கத்தையும், மற்றவர்கள் பார்வையில் முழுமையான மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய வாழ்வாக இருக்க வேண்டும். அத்தகைய வாழ்வு தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நிறைவைத்தருகிறவர் ஆண்டவர்

இயேசு தன்னை ஏழை, எளிய மக்களோடு ஐக்கியப்படுத்திக்கொண்டவர். அவருடைய தொடர்பு பொதுவாக இந்த சமுதாயம் ஒதுக்கித்தள்ளியவர்களோடுதான் இருந்தது. ஆனால், இன்றைய நற்செய்தியில், உயர்குலத்தைச்சேர்ந்த ஒரு மனிதரோடு இயேசுவின் நெருக்கத்தைப்பற்றி பார்க்கிறோம். அவர்தான் நிக்கதேம். நிக்கதேம் உயர்குலத்தைச்சார்ந்த ஒரு பெரிய பணக்காரர். ஏனெனில் யோவான் 19: 39 ல் பார்க்கிறோம்: “அவர் வெள்ளைப்போளமும், சந்தனத்தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார்”. இதிலிருந்தே நிக்கதேமின் செல்வச்செழிப்பு வெளிப்படுகிறது. மேலும் நிக்கதேம் ஒரு பரிசேயர். பாலஸ்தீன நாட்டில் பலவழிகளில் மிகச்சிறந்த குடிமக்கள் என்றால் இந்த பரிசேயர்கள் தான். மறைநூல் வாக்கை அடிபிறழாமல் கடைப்பிடிப்பதற்காக, தங்கள் வாழ்வையே அர்ப்பணித்திருந்தனர்.

நிக்கதேம் இயேசுவை சந்திக்க இரவு நேரத்தில் வருகிறார். இதற்கு இரண்டு காரணங்களைச்சொல்லலாம். 1. இயேசுவை எச்சரிக்கை செய்வதற்காக. ஏற்கெனவே சதுசேயர், பரிசேயர்களின் கோபத்திற்கு, இயேசு ஆளாகியிருந்தார். அவரை ஒழிக்க பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தன. இயேசுவின் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து நேரலாம் என்ற நிலை இருந்தது. எனவே இந்த சதித்திட்டங்களை பற்றி எச்சரிக்கை செய்வதற்காக அவர் இயேசுவை சந்திக்க வந்திருக்கலாம். பயந்து, கோழையாக இரவில் இந்த மனிதர் வருகிறாரோ என்று நாம் நிக்கதேமை தவறாக நினைக்கக்கூடாது. அவருடைய நிலையில், இயேசுவைச் சந்திக்க வந்ததே மிகப்பெரிய சவாலான பணிதான். 2. இயேசுவிடம் சட்டம் பயிலுவதற்காக. இயேசு மிகப்பெரிய அறிவாளி என்பதை அனைவரும் ஏற்றிருந்தனர். பொதுவாக, எந்தவித இடையூறும் இல்லாமல் சட்டம் பயில ஏற்ற நேரம் இரவு நேரம் தான் என்பது, யூதக்குருக்கள் மத்தியில் இருந்த பொதுவான கருத்தாகும். பகல் முழுவதும் இயேசு மக்கள் பணிசெய்வதிலும், போதிப்பதிலும் தன்னுடைய நேரத்தைச்செலவிட்டதால், இயேசுவை தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும் இரவு நேரம்தான் சிறந்தது என்பதால், நிக்கதேம் இரவில் இயேசுவைச்சந்திக்கிறார். நிக்கதேமின் வாழ்வு நமக்குக்கற்றுத்தருவது: நிறைவைத்தருகிறவர் கடவுள் என்பதுதான். நிக்கதேமுக்கு பதவி இருந்தது, பணம் இருந்தது, அதிகாரம் இருந்தது. ஆனாலும் ஏதோ ஒரு குறை இருந்ததது. அந்தக்குறையை நீக்கி, முழுமை பெறுவதற்காக, நிறைவை அடைவதற்காக கடவுளின் மகனாகிய இயேசுவைச் சந்திக்கிறார். நிறைவைப்பெற்றுக்கொள்கிறார்.

கடவுளைத் தேடுவோர்க்கு எந்த நன்மையும் குறைவுபடாது என்று திருப்பாடல் சொல்கிறது. நம்முடைய வாழ்வு நிறைவு பெற கடவுளை நாட வேண்டும். கடவுளோடு இணைந்த வாழ்வுதான் நிறைவான வாழ்வு, முழுமையான வாழ்வு. அத்தகைய வாழ்வு இறைவனை மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

-----------------------------------

நிக்கதேமின் புதுப் பிறப்பு!

நிக்கதேம் ஒர் இரவில் இயேசுவைக் காண வந்து, அவரோடு உரையாடிய நிகழ்வின் ஒரு பகுதியை இன்றைய நற்செய்தி வாசகத்தில் கண்டோம். உயிர்ப்பின் ஒளியில் இந்த நிகழ்வைத் தியானிப்போம்.

நிக்கதேம் இயேசுவைச் சந்தித்தபோது ஒரு புதுப் படைப்பாக மாறினார், புதுப் படைப்பு பற்றிய விழிப்புணர்வைப் பெற்றுக்கொண்டார். அவர் அடைந்த மாற்றங்களைப் பார்ப்போம்:

1. பரிசேயரும், யூதத் தலைவர்களில் ஒருவருமான நிக்கதேம் இயேசுவைச் சந்திக்க விரும்பியதே ஒரு புதுப் பிறப்புதான். பொதுவாக பரிசேயர்களும், குறிப்பாக யூதத் தலைவர்களும் இயேசுவை வெறுத்தனர், அவரைக் கொல்லத் துடித்தனர். ஆனால், நிக்கதேம் அவரைச் சந்தித்து அவருக்குச் செவிமடுக்க விரும்பினார். இது ஒரு புதுப் பிறப்பு.

2. நிக்கதேம் இயேசுவைக் கடவுளிடமிருந்து வந்த போதகராக ஏற்றுக்கொண்டார். அதனை அவரே அறிக்கையிட்டார். "கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது" எனத் துணிவுடன் அறிக்கையிட்டார்.

3. "மறுபடியும் பிறக்க வேண்டும்" என்னும் இயேசுவின் போதனை பற்றிய விளக்கத்தை, தெளிவாகப் பெற்றுக்கொண்டார் நிக்கதேம். மனித இயல்பில் அவருக்கு எழுந்த இயல்பான சந்தேகத்தை இயேசுவிடம் எழுப்பி, விடையும் பெற்றுக்கொண்டார். இதுவும் ஒரு புதுப் பிறப்பே.

இந்தப் பாஸ்கா காலத்தில், நிக்கதேம் போல நாமும் அவரை இறைமகனாக ஏற்றுக்கொண்டு, அவரைத் திருப்பலியிலும், திருவழிபாட்டிலும் சந்தித்து, தூய ஆவியின் கொடையாம் புதுப் பிறப்பைப் பெற்றுக்கொள்வோம்.

மன்றாடுவோம்: சாவை வென்று உயிர்த்த மாட்சி மிகுந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்களைப் புதுப்பிறப்பாக்கும். உமது ஆவியினால் எங்களை நிரப்பியருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

மறுபடியும் பிறந்தாலன்றி !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

நிக்கதேம் இயேசுவைச் சந்தித்து உரையாடியபோது, இயேசு அவருடன் பகிர்ந்துகொண்ட முக்கியமான செய்தி: #8220;மறுபடியும் பிறந்தாலன்றி, எவரும் இறையாட்சியைக் காண இயலாது”. இந்த செய்தியையே இன்றைய சிந்தனைக்காக நாம் எடுத்துக்கொள்வோம். பாஸ்கா காலத்தின் மகிழ்ச்சியிலும், மாட்சியிலும் இருக்கும் நாம் மறுபடி பிறந்தவர்களாக வாழ இன்றைய வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. #8220;மறுபடியும் பிறப்பதற்கு” இயேசு கொடுத்த விளக்கம் #8220;ஒருவர் தண்ணீராலும், துhய ஆவியாலும்” பிறக்க வேண்டும் என்பதே. தண்ணீரும், துhய ஆவியும் அருள்சாதனங்களைக் குறிக்கின்றன என்பதை நாம் அறிவோம். தண்ணீர் திருமுழுக்கையும், துhய ஆவி உறுதிப்பூசுதலையும் அடையாளப்படுத்துகின்றன. உயிர்ப்பு ஞாயிறு அன்று நாம் நமது திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்தோம். இப்போதோ, நாம் துhய ஆவியால் நிரப்பப்பட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். ஆம், துhய ஆவிப் பெருவிழா நெருங்கிக்கொண்டிருக்கிறது, பெந்தகோஸ்து பெருவிழாவின்போது நிறைவாக இறங்கிய துhய ஆவியின் வல்லமை நம்மையும் ஆட்கொள்ள வேண்டும். அதுவே நமது புதுப்பிறப்பு. அந்தப் பிறப்பு நமக்கு நாள்தோறும் நிகழட்டும். நாம் மறுபடியும் பிறந்தவர்களாக வாழ்வோம். உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாவோம்.

மன்றாடுவோம்: உயிர்த்த மகிமையின் இறைவா, உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம். இறையாட்சிக்குள் நுழைய மறுபடியும் பிறக்க வேண்டும் என்று அறிவுறுத்தினீரே, நன்றி. நாங்கள் துhய ஆவியால் நிரப்பப்பட்டு, ஆற்றலுடன் உமது உயிர்ப்புக்கு சான்று பகர அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருட்தந்தை குமார்ராஜா

-----------------------

 

''இயேசு நிக்கதேமைப் பார்த்து, 'காற்று எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது
என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்' என்றார்'' (யோவான் 3:8)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இரவு நேரத்தில் இயேசுவைத் தேடிவந்த மனிதர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர்; பரிசேயர். இயேசுவைப் பற்றியும் அவர் புரிந்த அருஞ்செயல்கள் பற்றியும் கேள்விப்பட்ட நிக்கதேம் ''இரவில்'' வந்தார் என யோவான் குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது (யோவா 3:2). ''இரவு'' என்பது யோவான் நற்செய்தியில் ''நம்பிக்கையின்மை''யைக் குறிப்பதுண்டு; கடவுளிடமிருந்து அகன்றிருக்கின்ற நிலையையும் சுட்டுவதுண்டு. நிக்கதேம் இயேசுவின் போதனையாலும் சாதனையாலும் கவரப்பட்டார். அவருடைய உள்ளத்தில் நம்பிக்கை தளிர்விடத் தொடங்கியிருந்தது என்றாலும் அது நிறைவான நம்பிக்கையாக இன்னும் தழைக்காமலே இருந்தது. அந்நிலையில் நிக்கதேம் இயேசுவிடம் சில கேள்விகள் கேட்டு அதற்கான பதிலைத் தெரிந்துகொள்கிறார். ''மறுபடியும் பிறந்தாலன்றி இறையாட்சியைக் காண இயலாது'' (யோவா 3:3) என இயேசு கூறிதை நிக்கதேம் புரிந்துகொள்ளத் திணறினார். அப்போது இயேசு கடவுளின் செயலை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது என நிக்கதேமுக்குக் கற்பிக்கிறார். நம்மைச் சூழ்ந்திருக்கின்ற காற்று மண்டலத்தில் வீசுகின்ற காற்றை நாம் கண்களால் காணாவிட்டாலும் அது நம் உடலைத் தழுவும்போது நன்றாகவே உணர்கிறோம். காற்றைச் சுவாசிப்பதை நிறுத்திவிட்டால் நம் உயிரே நம்மை விட்டுப் பிரிந்துபோகும். எனவேதான் இறத்தலை ''இறுதிமூச்சு விடுதல்'' என்கிறோம்.

-- இயேசு காற்று பற்றியும் தூய ஆவி பற்றியும் ஒரே ''மூச்சில்'' ஏன் பேசுகிறார் என நமக்கு வியப்பாக இருக்கலாம். எபிரேயத்திலும் கிரேக்கத்திலும் ''காற்று'' என்பதும் ''ஆவி'' என்பதும் ஒரே சொல்லால் குறிக்கப்படுகின்றன (எபிரேயம்: சரயர் கிரேக்கம்: pநெரஅய). ''உயிர் மூச்சு'' என்னும் பொருளும் அதில் அடங்கும். தமிழிலும் இத்தொடர்பு உள்ளதை நாம் காணலாம். எனவே, ''காற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது'' என்பது நமக்குப் புரியாத புதிராக உள்ளதுபோல, தூய ஆவி நமக்குப் ''புதுப்பிறப்பு'' அளிக்கிறார் என்பதும் நம் குறுகிய அறிவுக்கு அப்பாற்பட்டது என இயேசு சிலேடையாகக் கூறுவதை இவண் நாம் படித்து மகிழலாம். ஆவியே நம் ''உயிராக'' உள்ளார்; நம் சுவாசமாகவும் நம்மை உயிர்ப்பிக்கின்ற காற்றாகவும் செயல்படுகிறார்.

மன்றாட்டு
இறைவா, உம்மால் உயிர்பெறும் நாங்கள் உமக்காகவே உயிர் வாழ்ந்திட எங்களுக்கு ஆவியின் ஆற்றலைத் தந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்