முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 17-26

அந்நாள்களில் தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்த சதுசேயக் கட்சியினர் அனைவரும் பொறாமையால் நிறைந்து திருத்தூதரைக் கைது செய்து பொதுச் சிறையில் காவலில் வைத்தனர். ஆனால் இரவில் ஆண்டவரின் தூதர் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்று, ``நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளை யெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்'' என்றார். இதைக் கேட்ட அவர்கள் பொழுது விடிந்ததும் கோவிலுக்குச் சென்று கற்பித்தார்கள். தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்தவர்களும் அனைத்து இஸ்ரயேல் மக்களின் ஆட்சிப் பேரவையாகிய தலைமைச் சங்கத்தைக் கூட்டித் திருத்தூதர்களைச் சிறையிலிருந்து கொண்டுவருமாறு ஆள் அனுப்பினார்கள். அந்த ஏவலர்கள் அங்கு வந்தபோது சிறையில் அவர்களைக் காணவில்லை. எனவே அவர்கள் திரும்பி வந்து, ``நாங்கள் சிறைச்சாலை உறுதியாய்ப் பூட்டப்பட்டிருப்பதையும், காவலர் வாயிலருகில் நின்றுகொண்டு இருப்பதையும் கண்டோம். ஆனால் கதவைத் திறந்தபோது உள்ளே எவரையும் காணவில்லை'' என்று அறிவித்தார்கள். இவ்வார்த்தைகளைக் கேட்ட கோவில் காவல் தலைவரும், தலைமைக் குருக்களும் அவர்களுக்கு என்னதான் நேர்ந்திருக்கும் என்று மனங்குழம்பி நின்றனர். அப்பொழுது ஒருவர் வந்து, ``நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்'' என்று அவர்களிடம் அறிவித்தார். உடனே காவல் தலைவர் ஏவலர்களுடன் கோவிலுக்குச் சென்று அவர்களை அழைத்துச் சென்றார். மக்கள் கல்லெறிவார்கள் என்று அவர் அஞ்சியதால் வன்முறை எதுவும் கையாளவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல் 34: 1-2. 3-4. 5-6. 7-8
பல்லவி: ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;
அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;
எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்;
அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்;
அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்;
எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;
அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6 இந்த ஏழை கூவியழைத்தான்;
ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;
அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.
8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்;
அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். அல்லேலூயா.

யோவான் 3:16-21

பாஸ்கா காலம்-இரண்டாம் வாரம் புதன்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-21

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 3: 16 - 21
மீட்பு

2018 ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலினால் பல பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்பிலிருந்து வெளிவருவதற்கு பலர் தங்களின் உழைப்பை மீட்புக்காக கொடுத்தார்கள். வாச்சாத்தி என்ற கிராமம் காவல்துறையினரால் சூறையாடப்பட்ட போது பல சமூகவாதிகளின் குரல் அந்த மக்களுக்கு மீட்பாக கிடைத்தது. விவசாயிகள் தொழில்ரீதியாக பாதிக்கப்பட்ட போது கிராமப்புற கூட்டுறவு வங்கியின் உதவி மீட்பாக அவர்களுக்கு அமைந்தது.

ஆனால் இந்த உலகம் மீட்படைய இயேசு எவற்றினை விலையாக கொடுத்தார் என்பதனை இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகின்றது. அதுதான் அன்பு. விவிலிய பேராசிரியர்கள் கூறுவார்கள், விவிலியம் மற்றும் இறையியல் கோட்பாடுகள் அனைத்துமே மொத்தமாக உள்வாங்கியுள்ள இறைவார்த்தை தான் இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் வாசகம். ஏனென்றால் இதில் மூன்று நபர்களின் அன்பு வெளிப்படுகின்றது. கடவுள், அவருடைய மகன் இயேசு மற்றும் அவரால் மீட்கப்பட்ட நம்பிக்கையாளர்கள். எல்லாவற்றிற்கும் அடித்தளமாக அமைவது இந்த அன்பு தான். அதனால் தான் எல்லா மதங்களுமே இந்த அன்பைப் பற்றி கூறுகிறது. ஆனால் இயேசு எதற்காக நிக்கதேமிடம் கூறினாரென்றால் பரிசேயராக இருந்தாலும் கூட, இயேசுவின் பணிவாழ்வில் விளங்கிய நற்செயல்களை ஏற்ற நோ்மையாளர். ஆனால் ஒருமுறை இயேசுவின் செயல்பாடுகளை ஏற்க முடியாமல் பரிசேயரும், தலைமைக்குருக்களும் அவரைக் கைது செய்ய முயன்ற போது அவருக்கு ஆதரவாக பேசியவர் நிக்கதேம் மட்டுந்தான். இவர் தான் இயேசு இறந்த பிறகு தகுந்த முறையில் அடக்கம் செய்ய நறுமணப்பொருட்களுடன் வந்தார். அதனால் தான் இயேசு இவரை மறைமுக சீடராக ஏற்றுக்கொண்டதாக விவிலிய பேராசிரியர்கள் கூறுவார்கள்.

நான் மற்றவர்கள் மீட்பு அடைய (பணம், பொருள்) உதவி செய்கிறேனா? விசுவாசத்தில் மீட்பு அடைய (நோயாளர் சந்தித்தல்) முன்வருகிறேனா? சிந்திப்போம்.

அருட்பணி. பிரதாப்

===========================

கட்டளைகளைக் கடைபிடிக்க (யோவான் 3 : 16-21)

மொத்த இறையியலையும் இறையியலின் மையமான கிறித்துவியலையும் ஒரே வாக்கியத்திற்குள் அடக்கிவிட்ட இறைவார்த்தைதான் 3:16. இயேசு என்றால் யார்? இயேசு ஏன் நமக்காக இறக்க வேண்டும்? என்ற அனைத்துவிதமான கேள்விகளுக்கும் இந்த ஓரு வசனம் இரத்தினச் சுருக்க விளக்கமாக அமைகின்றது.

‘அன்பே கடவுள்’ என்பது இறைவனின் இலக்கணம். அவரது அன்பு சொல்லில் மட்டுமல்லாது செயலிலும் வெளிப்படுகிறது. உலகப் படைப்பிலும் அதன் பராமரிப்பிலும் கடவுளின் அன்பை நாம் காண முடிகிறது. அதே அன்பு இறையேசுவின் உருவத்தில் தங்கி நம்மோடு இன்று வரை அவரின் உடனிருப்புடன் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. கல்வாரி மலையில் இந்த அன்பு உச்சத்தை அடைகின்றது. ஆனால் இன்றைய நற்செய்தி இறையன்பையும் அதன் நிராகரிப்பையும் நம்முன் வைக்கின்றது. “ நாம் கடவுளுக்கு அன்பு செய்வதில் அன்று, அவரே நம்மை அன்பு செய்து நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தம் மகனையே அனுப்பியதால் தான் அன்பின் தன்மை விளங்குகின்றது” (உரோ 5:8) இறைவனுடன் முறிந்து போன நமது அன்பைப் புதுப்பிக்க அவரே முன்வந்தார். எலும்பு முறியாத ஆட்டுக் குட்டியாய் தன்னையே தகனப் பலியாக்கினார். நாமும் அவரது அன்புக்குப் பதிலன்பு காட்ட வேண்டும். அந்த அன்பு அவரது கட்டளைகளை செயல்படுத்துவதில் காட்டப்பட வேண்டும். “நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் எனது கட்டளைகளைக் கடைபிடிப்பீர்கள்” என்பது இயேசுவின் வாக்கு (யோவான் 14:15)

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 34: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8
”ஏழை கூவியழைத்தான். ஆண்டவர் அவனுக்கு செவிசாய்த்தார்”

விவிலியத்தில் ஏழைகள் என்று சொல்லப்படுகிறவர்கள் யார்? ஏழைகளை நாம் இரண்டு வகையாகப் பார்க்கலாம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை ஏழைகள் என்று நாம் சொல்கிறோம். அதேபோல, கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறவர்களையும் ஏழைகள் என்று சொல்கிறோம். இவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்க வேண்டும் என்ற நியதில்லை. ஆனால், பணம் இருந்தாலும், கடவுளுக்கு முன்னுரிமை கொடுக்கிறவர்கள், கடவுளை தங்களது முழுமுதற்செல்வமாக ஏற்றுக்கொள்கிறவர்கள். இறைவன் இந்த இரண்டு பேரையுமே கருத்தில் கொள்கிறார். அதாவது, இந்த உலகத்தில் யாரெல்லாம் நிர்கதியில்லாமல் இருக்கிறார்களோ, கடவுளே தங்களது வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் அனைவரையும், கடவுள் கண்ணோக்குகிறார். அவர்களது குரலுக்கு செவிசாய்க்கிறார்.

கடவுள் எப்போதுமே, இந்த சமுதாயத்தின் தாழ்நிலையில் இருக்கிறவர்களை கைதூக்கி விடக்கூடியவராக இருக்கிறார். அவர்களது நிலைகண்டு மனம் வெதும்புகிறவராக, அவர்களும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக, முழுமையான முயற்சியை எடுக்கிறவராக இருக்கிறார். அவர்களை ஒருபோதும் அவர் கைவிடுவதில்லை. அவர்கள் மீது முழுமையான பற்றுள்ளவராக இருக்கிறார். அவர்களை எந்த தீங்கும் அணுகாதவாறு பாதுகாக்கிறவராக இருக்கிறார். இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையிலும், இந்த உலகத்தின் எங்கெல்லாம் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்களோ, அங்கெல்லாம், அவர்களை வாழவைக்கும் தெய்வமாக இறைவன் இருக்கிறார்.

இறைவன் எல்லாருக்குமான இறைவன். அவர் யாரையும் வருத்தப்பட விடுவதில்லை. தன்னுடைய பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை உள்ளம் கொண்டவர். ஒவ்வொரு நொடிப்பொழுதும், நம்மை பாதுகாத்துக்கொண்டிருக்கிறவர். அந்த இறைவனிடத்தில் நம்மையே முழுமையாக ஒப்புக்கொடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

எல்லையற்ற கடவுளின் அன்பு

”தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்” என்கிற இந்த இறைவார்த்தை, கடவுள் எந்த அளவுக்கு இந்த உலகத்தை அன்பு செய்கிறார் என்பது நமக்குத் தெரியவருகிறது. கடவுள் யாரை அன்பு செய்தார்? இந்த உலகத்தை அன்பு செய்தார்.

உலகம் என்பது எதைக்குறிக்கிறது? ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிப்பிடவில்லை. ஒரு குறிப்பிட்ட மனிதரைக் குறிப்பிடவில்லை. மாறாக, ஒட்டுமொத்த மனிதகுலத்தை அது குறிப்பதாக இருக்கிறது. இந்த உலகத்தில் நல்லவர்களும் கெட்டவர்களும் இணைந்தே வாழ்கிறார்கள். கடவுள் நல்லவர்களை மட்டும் அன்பு செய்து, கெட்டவர்களை விலக்கிவைக்கவில்லை. அனைவரையும் அன்பு செய்கிறார். தன்னை நினைக்கிறவர்களை மட்டும் கடவுள் நினைக்கவில்லை. தன்னைப்பற்றிய அறியாதவர்கள், தன்னை ஒரு பொருட்டாக மதிக்காதவர்கள், தன்னை குறைகூறுகிறவர்கள் என அனைவரையும் கடவுள் அன்பு செய்கிறார். இதுதான் கடவுளின் பரந்துபட்ட அன்பு. இதுதான் முழுமையான அன்பு. இதுதான் நிலையான அன்பு.

கடவுளின் இந்த நிலையான முழுமையான அன்பை நாம் அனைவரும் உணர்வோம். அந்த அன்பில் நாம் இணைவோம். அந்த அன்பை நாம் உணர்கிறபோது, நம்மிலும், நமது வாழ்விலும் அளப்பரிய மாற்றம் ஏற்படுகிறது. நமது வாழ்வு மாற ஆரம்பிக்கிறது. அனைவரையும் நாம் ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறோம். நமது எல்லையை விரிவுபடுத்த ஆரம்பிக்கிறோம். கடவுளின் பரந்துபட்ட அன்பை, நமது வாழ்விலும் நாம் செயல்படுத்துவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------

கடவுளின் அன்பு

”கடவுள் உலகின் மீது அன்பு கூர்ந்தார்” என்கிற இறைவார்த்தை கடவுளின் அளவுகடந்த அன்பை நமக்குப் பறைசாற்றுவதாக அமைகிறது. கடவுளன்பின் ஆழத்தை இது காட்டுவதாக அமைகிறது. கடவுள் உலகின் மீது அன்பு கூர்ந்தார். அதாவது, அவர் தனிப்பட்ட நபரை மட்டும் அன்பு செய்யவில்லை. தனிப்பட்ட நாட்டை மட்டும் அன்பு செய்யவில்லை. தனிப்பட்ட மக்களை அவர் அன்பு செய்யவில்லை. மாறாக, ஒட்டுமொத்த உலகத்தையும் அன்பு செய்தார். வெறுக்கிறவர்கள், பகைக்கிறவர்கள், தன்னை நிந்திக்கிறவர்கள் என்று கடவுள் யாரையும் வெறுத்து ஒதுக்குவதில்லை. எனவே தான் தூய அகுஸ்தினார் சொல்கிறார்: நாம் ஒருவர் தான் இருப்பதுபோல கடவுள் நம்மை அன்பு செய்கிறார்”. அந்த அளவுக்கு கடவுளின் அன்பு ஒவ்வொரு தனிநபருக்கும் இருக்கிறது.

பழைய ஏற்பாட்டில் நாம் கடவுளின் அணுகுமுறைகளை நாம் பார்க்கிறபோது கடவுள் ஏதோ இஸ்ரயேல் மக்கள் மீது தனிப்பட்ட அன்பு வைத்திருப்பது போலவும், அந்த அன்பு மற்றவர்க் மீது வெறுப்பாக உமிழப்படுவது போலவும் பார்க்கப்படுகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக நாம் பார்க்கிறபோது, நமது பார்வை தவறு என்பது நமக்கு நன்றாகப்புரியும். கடவுள் தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கிறார். அது இஸ்ரயேலாக இருந்தாலும். அதேபோல, நல்லது செய்கிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்களைப் பாராட்டுகிறார். அவர்களோடு பயணிக்கிறார். அது தேர்ந்தெடுக்கப்படாத நாடாக இருந்தாலும். ஆக, கடவுளின் அன்பு அனைவருக்கும் கிடைப்பதை இன்றைய நற்செய்திப்பகுதி நமக்கு உறுதிப்படுத்துகிறது.

கடவுளின் அன்பை நமது வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் உணர்வதற்கு இந்த நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் ஏழையா? செல்வந்தரா? நல்லவரா? கெட்டவரா? என்று நம்மையே கடவுளிடமிருந்து பிரித்துக்கொள்ளத் தேவையில்லை. கடவுளின் அன்பு எல்லாருக்குமே இந்த உலகத்திலே உண்டு.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

‘மகனையே கையளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்’

கடவுளின் அன்பைப்பற்றி இந்தப்பகுதி சிறப்பாக எடுத்துரைக்கிறது. தன் ஒரே மகனையே இந்த உலகத்திற்கு கையளிக்கும் அளவுக்கு கடவுள் இந்த உலகின் மேல் அன்பு கூர்ந்தார் என்கிற இறைவார்த்தை, மூன்று சிந்தனைகளை நமக்குத்தருகிறது. 1. மீட்புத்திட்டத்தில் கடவுள் எடுத்த முயற்சியை இது நமக்கு எடுத்துக்காட்டுகிறது. பொதுவாக, கடவுள் என்றால் கோபப்படக்கூடியவர், மன்னிக்காதவர், எரிச்சலடையக்கூடியவர் என்ற பார்வை இருக்கிறது. ஆனால், கடவுள் மன்னிக்கக்கூடியவர், அன்பானவர், கருணை உள்ளம் கொண்டவர் என கடவுளின் மறுபக்கத்தை இந்த இறைவார்த்தை அருமையாக எடுத்துரைக்கிறது. ஏனென்றால், கடவுளே இந்த மனுக்குலத்தை மீட்பதற்கு முயற்சி எடுக்க தானாக முன்வருகிறார். அத்தகைய கடவுளின் அன்புக்கு நம்மை முழுமையாகக் கையளிப்போம்.

2. கடவுள் தான் அன்பு. அன்பு தான் கடவுள் என்பதை இரண்டாவது சிந்தனையாக நமக்குத்தருகிறது. மனிதர்கள் ஒவ்வொருவரும் கடவுள் அன்பில் படைக்கப்பட்டவர்கள். கடவுள் அன்பு மயமானவர். மனிதர்கள் எவ்வளவுதான் கடவுளுக்கு எதிராகச் சென்றாலும், கடவுளை மனம் நோகச்செய்தாலும், கோபப்படுத்தினாலும், கடவுள் தொடர்ந்து அன்பு காட்டக்கூடியவராக இருக்கிறார் என்றால், அதற்கு காரணம் அன்புதான் கடவுள். அன்பின் ஒட்டுமொத்த உருவம் தான் கடவுள். நாம் மகிழ்ச்சியாக இல்லையென்றால், கடவுளால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. நாமும் அன்பின் மறுவடிவமாக மாறுவோம்.

3. கடவுளின் அன்பின் ஆழம் எவ்வளவு என்பது நமக்கு தரப்படும் மூன்றாவது சிந்தனை. கடவுள் தனது அன்பை குறிப்பிட்ட நாட்டுக்கோ, இனத்துக்கோ, மக்களுக்கோ தரவில்லை. இந்த உலகத்தில் இருக்கிற அனைவருக்கும் தனது அன்பைத்தருகிறார். இந்த உலகத்தில் நாம் ஒருவர் தான் இருக்கிறோம் என்பதைப்போல ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறார். கடவுளின் அன்பு எல்லையற்றது. பரந்து விரிந்தது. கடவுளின் அன்பைப்போல நமது அன்பும் எல்கை கடந்து இருக்க வேண்டும். சாதி, மதம், இனம், நாடு கடந்த முழுமையான அன்பாக இருக்க வேண்டும்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

இருளும், உயிர்ப்பின் ஒளியும் !

இயேசு நிக்கதேமுவுடன் நிகழ்த்திய உரையாடல் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் தொடர்கிறது. அதில் இறைமகன் இயேசு உலகின் ஒளியாகச் சுட்டப்படுகிறார், உலகின் பாவ இயல்புகள் ஒளியை எதிர்க்கும் இருளாகக் காட்டப்படுகின்றன. ஒளி-இருள் பற்றி இன்று சிந்திப்போம்.

1. இயேசு உலகின் ஒளி: "உலகை மீட்கவே கடவுள் தம் மகனை இந்த உலகிற்கு அனுப்பினார். உலகிற்குத் தண்டனை அளிக்க அல்ல" என்கிறார் இயேசு. இயேசுவே அந்த மீட்பு. மீட்பின் உருவமாகத் தம்மை உலகின் ஒளி என்கிறார் இயேசு. "உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள்" என்கிறார் ஆண்டவர். உயிர்ப்பின் மக்கள் இயேசுவின் பாஸ்கா ஒளியில் வாழ விரும்புகின்றனர். தங்கள் பணிகள் அனைத்தையும் இயேசுவோடு இணைந்தே செய்கின்றனர்.

2. உலகின் இருள்: இயேசுவை நம்பாமல், உலகின் தீமைகளைச் செய்துவாழ்பவர்கள் இருளின் மக்கள். இவர்கள் இயேசுவை நாடுவதில்லை. "ஒளி உலகிற்கு வந்திருந்தும், தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்" என்று வாசிக்கிறோம். இயேசு தரும் மீட்பைவிட, பாவத்தின் கவர்ச்சி பெரிதாக இருக்கின்றது என்னும் உண்மையை உணர்கிறோம்.

நமது ஆர்வம் எங்கே உள்ளது? ஒளியிடமா, அல்லது இருளிடமா? தூய ஆவி தருகின்ற கட்டுப்பாடு மிக்க விடுதலையை நாம் நாடுகிறோமா? அல்லது இந்த உலகம் தருகின்ற கட்டுப்பாடற்ற உலக இன்பங்கள், களியாட்டங்கள், பொழுதுபோக்குகள் மீது ஆர்வம் கொள்கின்றோமா?

இருளை விலக்கி, ஒளியை நாட அருள்வேண்டுவோம்.

மன்றாடுவோம்: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இருளின் ஆற்றல்கள் காட்டும் கவர்ச்சியில் நாங்கள் மயங்காமல், உலகின் ஒளியாம் உம்மையே நாடிவரும் அருளை எங்களுக்குத் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

 ஒளியும், இருளும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மானிடரின் உளவியல் பற்றிப் பேசுகிறார் ஆண்டவர் இயேசு. #8220;ஒளி உலகிற்கு வந்திருந்தும், தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருயையே விரும்பினர்” என்கிறார் இயேசு. ஏன் நன்மையைவிட தீமைக்கு அதிக கவர்ச்சி இருக்கிறது? ஏன் மனிதர்கள் உண்மை, நேர்மை, நன்மையைவிட பொய்மை, அநீதி, தீமைமீது அதிக நாட்டம் கொள்கின்றனர்? இந்தக் கேள்விக்கான விடை: மனிதரின் செயல்கள் தீயனவாய் இருப்பதால். அதாவது, மனித இதயத்தின் ஆழத்திலேயே தீமையும், இருளும் மண்டிக் கிடப்பதால், ஒளியைவிட இருளே அதிகமாக மானிடரை ஈர்க்கிறது. தீமையின்மீதுள்ள ஈர்ப்புக்குக் காரணம் மனிதரின் மனதிற்குள்ளே புதைந்திருக்கும் இருள்தான் என்கிறார் ஆண்டவர். இதைத்தான் நாம் #8220;சென்மப் பாவம்” என்கிறோம். நாம் பிறக்கும்போதே பாவ நாட்டத்தோடு பிறந்துவிடுவதால்தான், பாவத்தின்மீது, இருளின் செயல்கள்மீது நமக்கு நாட்டம் பிறக்கின்றது.

இந்த நாட்டத்திலிருந்து நம்மை விடுவிப்பவர் யார்? பாவத்தையும், சாவையும், இருளின் ஆட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் வென்று உயிர்த்தெழுந்து வெற்றி வீரரான ஆண்டவர் இயேசுதான். அவரிடம் நம்மைக் கையளிப்போம்.

மன்றாடுவோம்: அன்பே உருவான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் ஆன்மாவின் ஆழத்தில் புதைந்திருக்கும் இருளின் நாட்டத்தை அகற்றிவிட்டு, உமது ஒளியால் எம்மை நிரப்புவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருட்தந்தை குமார்ராஜா

-----------------------

''தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி
அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்'' (யோவான் 3:20-21)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- யோவான் நற்செய்தியில் ஆழ்ந்த இறையியல் சிந்தனைகள் உண்டு. குறிப்பாக, இயேசு தம்மை மக்களுக்கு வெளிப்படுத்தும்போது தமக்கும் தந்தை இறைவனுக்கும் இடையே நிலவுகின்ற உறவினைப் பல பொருள்செறிந்த உருவகங்கள் வழியாக எடுத்துரைக்கிறார். குறிப்பாக இயேசு, ''வழியும் உண்மையும் வாழ்வும் நானே'' என்று தம்மை அடையாளம் காட்டுகிறார் (காண்க: யோவா 14:6). மேலும் இயேசு தம்மை ''ஒளி'' என அழைக்கிறார் (''இயேசு 'உலகின் ஒளி நானே' என்றார்'' - யோவா 8:12). வழி, உண்மை, வாழ்வு, ஒளி என்று பலவிதமாக வருகின்ற இவ்வுருவகங்கள் இயேசுவை நாம் ஓரளவு புரிந்துகொள்ள நமக்குத் துணையாகின்றன. இயேசுவை அணுகிச் செல்வோர் ''ஒளி''யை வெறுக்கமாட்டார்கள். ஏனென்றால் இயேசு கடவுளை நமக்கு வெளிப்படுத்துகின்ற ஒளியாக இவ்வுலகிற்கு வந்தார். அதுபோல, ''உண்மை''யைத் தங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டு வாழ்வோர் இயேசுவைப் பின்பற்றத் தயங்கமாட்டார்கள். ஏனென்றால் இயேசுவே கடவுள் என்றால் யார் என்னும் உண்மையை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

-- எனவே, நற்செயல்களும் உண்மையும் நம் வாழ்வில் துலங்கினால் நாம் இயேசுவின் சீடர்களாக வாழ்கிறோம் எனலாம். அப்போது நம் வாழ்வு ஒளி நிறைந்ததாக இருக்கும். அங்கே இருளுக்கு இடமில்லை. இயேசுவை ஒளியாக நாம் ஏற்கும்போது பாவம் என்னும் இருளை நாம் நம் அகத்திலிருந்து அகற்றிவிடுவோம். இயேசுவின் அருள் என்னும் ஒளி அங்கே பரவி நம் இதயத்தை மிளிரச் செய்யும். இயேசுவின் காலத்தில் ஒருசிலர் அவருடைய போதனையை ஏற்க மறுத்தனர். அவர்கள் உண்மையைக் கண்டுகொள்ள முன்வரவில்லை; ஒளியை அணுகிட முனையவில்லை. இன்று இயேசுவைப் பின்செல்லும் நாம் வாழ்வுக்கு வழிகாட்டும் இயேசுவை ஒளியாகக் கொண்டு அவர் காட்டுகின்ற உண்மையைக் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறோம். அப்போது இயேசு வாக்களிக்கின்ற ''நிலைவாழ்வு'' நமதாகும் (காண்க: யோவா 3:16)

மன்றாட்டு
இறைவா, ஒளியாக விளங்கும் உம்மை எங்கள் உள்ளத்தில் ஏற்று, இருளகற்றி வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இனிய சுவையுடன் கனிந்த கனி இருக்க கள்ளிக் காயைக் கடிக்கும் கடின மனத்தினர் சிலர். ஊரெல்லாம் ஒளி வெள்ளமாக இருந்தாலும் சிலர் ஒதுங்கியே இருப்பர். ஊரெல்லாம் ஒன்று கூடி தேரிளுக்கும். ஆனால் அவர்கள் மட்டும் வேரெதையோ நோட்டமிட்டிருப்பார்கள். கலகலப்பாக கலக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு சிலர் கல்லாகி மூலையில் முடங்கிக்கிடப்பர்.

இப்படி இயல்பானதை விட்டு விட்டு,முரணான முறையில் செயல்படும்போது அவனில் ஏதோ ஒரு குறை உள்ளது என்று பொருள். ஒளியில் வந்தால் தன் அழுக்கு, அசிங்கம், குறை. குற்றம் தனக்குத் தெறிய வரும். பிறர் தெறிய நேரிடும். தன்போக்கினை மாற்ற வேண்டும் என்ற தயக்கம். கோயிலுக்கு வந்தால் தன் பாவ வாழ்வு தனக்குத் தெறிய வரும். மனமாற்ற வாழ்வுக்கு தயாராக வேண்டுமே என்ற பயம்.

இருளில் இருப்பது இப்படிப்பட்டவர்களுக்கு வசதியானது; சுகமானது; சௌகரியமானது. ஒளிக்குள் வருவதற்கு உடலை வளைக்க வேண்டும். உள்ளத்தை ஒடுக்கவேண்டும். நாலுபேரோடு கூடி கலகலப்பாக நல்லதைச் செய்ய பலவற்றை இழக்க வேண்டும். இவ்வளவு கஷ்டப்பட்டு கிடைக்கும் இன்பத்தைவிட வலி இல்லாமல் கிடைக்கும் அற்ப இன்பம் போதும் என விட்டில் பூச்சிளாய், ஒளியைவிட இருளையே விரும்பி வாழ்வை இழந்து விடுகின்றனர். ஒளியைத் தேடுவோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்