திருக்காட்சி விழாவுக்குப்பின் சனி

முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21

அன்பார்ந்தவர்களே, நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இதுவே நாம் அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை. நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும். எனவே, நாம் அவரிடம் கேட்டவற்றைப் பெறுவோம் என்னும் உறுதி நமக்கு உண்டு. பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்யவேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார். சாவுக்குரிய பாவமும் உண்டு. அப்பாவத்தைச் செய்வோருக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என நான் சொல்லவில்லை. தீச்செயல் அனைத்துமே பாவம். ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல. கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறந்தவர்களை அவர் பாதுகாக்கிறார். தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை. நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; ஆனால், உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது. இது நமக்குத் தெரியும். இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்துகொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே நிலைவாழ்வு. பிள்ளைகளே, சிலைவழிபாட்டைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




பதிலுரைப் பாடல்�

திபா 149: 1-2. 3-4. 5-6, 9

பல்லவி: ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்.

1 அல்லேலூயா, ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்;
அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.
2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக!
சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக. -பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக;
மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!
4 ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்;
தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைப் படுத்துவார். -பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மை அடைந்து களிகூர்வராக!
மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக!
6 அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்.
9 இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. அல்லேலூயா! -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லேலூயா.

யோவான் 3:22-30

திருக்காட்சிக்குப் பின் சனி

நற்செய்தி வாசகம்�

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30


அக்காலத்தில் இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார். யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்று வந்தார்கள். யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது. ஒரு நாள் யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே தூய்மைச் சடங்குபற்றி விவாதம் எழுந்தது. அவர்கள் யோவானிடம் போய், �ரபி, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே! இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்'' என்றார்கள். யோவான் அவர்களைப் பார்த்து, �விண்ணிலிருந்து அருளப்படா விட்டால் எவரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. `நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்' என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள். மணமகள் மணமகனுக்கே உரியவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார்; அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது. இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது. அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

போதிப்பவரின் கடமை

யோவான் நற்செய்தியாளர் இயேசுவைப்பற்றி செய்தி அறிவிப்பதற்குத்தான் தனது நற்செய்தியை எழுதுவதன் நோக்கமாக தொடக்கத்திலேயே சொல்கிறார். அப்படி இருக்கிறபோது, எதற்காக திருமுழுக்கு யோவானின் நற்செய்திப்பணி பற்றி அவர் கூற வேண்டும்? எதற்காக இயேசுவின் பணிவாழ்வோடு திருமுழுக்கு யோவானின் பணிவாழ்வையும் கலந்து சொல்ல வேண்டும்? இதற்கு பதில் இல்லாமல் இல்லை.

திருமுழுக்கு யோவான் இயேசுவின் முன்னோடி மட்டும்தான். அவர் வரவிருந்த மெசியா அல்ல. இது திருமுழுக்கு யோவானுக்கும் தெரிந்திருந்தது. அவருக்குரிய இடம் நிச்சயமாக அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இயேசுவுக்கான இடம் அதற்கும் மேலான இடம். ஆனால், இயேசுவுக்கான இடத்தை திருமுழுக்கு யோவானுக்குக் கொடுத்து, அவரை மெசியா எனவும், மீட்பர் எனவும் மக்கள் அழைக்கக்கூடிய அளவுக்கு, அவர் பெயர் பெற்றிருந்தார். இந்த நிலையில் தான், இயேசு, நிச்சயமாக திருமுழுக்கு யோவானைவிட உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்பதை காட்டுவதற்காக, நற்செய்தியாளர் இந்த பகுதியில், இரண்டு கேள்விகளுக்கும் பதில் கொடுக்கிறார். இந்த பகுதி திருமுழுக்கு யோவானின் தாழ்ச்சியின் மகிமையையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது. ஏனென்றால், திருமுழுக்கு யோவானின் போதனையைக் கேட்க கூடியிருந்த பல மக்கள், இயேசுவின் போதனையைக் கேட்ட கூட்டம், கூட்டமாகப் போய்க்கொண்டிருந்தனர். அதைப்பார்த்து, திருமுழுக்கு யோவான் மகிழ்ச்சி அடைந்தார். ஏனென்றால், தனது போதனையின் அடிப்படைச் செய்தி மக்களை சென்றடைந்திருக்கிறது என்பது நிச்சயம் அவருக்கு பேரானந்தம்.

இன்றைக்கு யாருடைய போதனைக்கு அதிக மக்கள்கூட்டம் வருகிறது என்பது பற்றி போட்டியே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனது போதனைதான் நன்றாக இருக்க வேண்டும்? மக்கள் என்னைத்தான் பாராட்ட வேண்டும் என்று, மனிதர்களை முன்னிறுத்தி போதனைகள் அமைந்திருக்கின்றன. போதனையை முன்னிறுத்தி, யாரும் போதிக்கவில்லை. அப்படி போதித்தாலும் அது அவர்களால் வாழ்ந்து காட்டப்படவில்லை. திருமுழுக்கு யோவானைப்போல், போதனையில் தாழ்ச்சியும், போதிப்பதில் எடுத்துக்காட்டும் உள்ளவர்களாக வாழப்பழகுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இணையதள உறவுகளே

ரோடு போட்டுக் கொடுத்தால் கார் ஓட்டுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். திக்குத் தெறியாத காட்டில் ஒற்றைத் தடம் அமைக்க யாரும் முன்வருவதில்லை. புதிய பாதை அமைத்து புது வழிகாட்ட முனைந்து வருவோர் வெகு சிலரே. கடின உழைப்பு, தெளிவான சிந்தனை, தீர்க்கமான முடிவு, செயல்படுத்தும் ஆற்றல் வேண்டும். எதிர்ப்பு, ஏமாற்றம், ஏளனம், இழப்பு இவற்றிற்கு குறைவே இருக்காது. இத்தகையோரால் மட்டுமே சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் முறையாக அழைத்துச் செல்ல முடியும்.

திருமுழுக்கு யோவான் இந்த குழுவில் முதலானவர். புதிய புரட்சிப் பாதைக்கு அடித்தளம் அமைத்தவர்.தான் வாழ வேண்டும், தன் செல்வாக்கு பெருக வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர். அதனால் கொலை செய்யப்பட்டவர். ஆனாலும் பெண்ணிடம் பிறந்தவருள் பேறுபெற்றவர் என்னும் பாராட்டைப் பெற்றவர்.

இன்றும் இத்தகையோரால் மட்டுமே இந்தச் சமுதாயம் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்தச் சமுதாயம் இவர்களை ஒதுக்கலாம். அவதூராகப் பேசலாம். கொலை செய்யலாம். ஆனால் அவர்கள் இறைவனின் பாராட்டைப் பெறுவார்கள். முயற்சி செய்யுங்கள்.

-ஜோசப் லீயோன்

 

எனது செல்வாக்கு குறையவேண்டும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

திருமுழுக்கு யோவானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல: அவற்றுள் ஒன்று அவரது தன்னடக்கமும், தன்னுணர்வும். மெசியாவைப் பற்றிச் சான்று பகரும்போது, தன்னை மணமகனாக அல்லாது, மணமகனின் அருகில் நின்று, மணமகன் சொல்வதைக் கேட்டு அதில் மகிழ்ச்சி அடையும் தோழருக்கு ஒப்பிடுகிறார். இறுதியாக, “அவரது செல்வாக்கு பெருக வேண்டும். எனது செல்வாக்கு குறையவேண்டும் ” என்றார்.

இதுதான் கிறிஸ்துவின் பணியாளர், சீடர் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய மனநிலை. பெருமையும், பாராட்டும் தனக்கென்று தேடாமல், இறைவனையே மாட்சிப்படுத்தவேண்டும். தனக்கென்று சொந்தக் கனவுகள், திட்டங்கள் தீட்டாமல், இறைவனின் திட்டத்தை, கனவை நிறைவேற்ற முன்வர வேண்டும். தனது சொந்த செல்வாக்கு குறையவேண்டும் என்று மனதார விரும்பவேண்டும். அவர்கள்தான் இயேசுவின் உண்மையான சீடர்கள், நேர்மையான முன்னோடிகள்.

மன்றாடுவோம்: அன்பே உருவான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். எரிகின்ற திரியாக, உமக்காகத் தன்னையே கரைத்துக்கொண்ட திருமுழுக்கு யோவானுக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். அவரைப் போல நானும் எளிய மனம் கொண்டு உமக்காக வாழ அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

-----------------

 

''நான் மெசியா அல்ல, மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்'' (யோவான் 3:28)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- திருமுழுக்கு யோவானும் இயேசுவும் உறவினர் என்பது நற்செய்தியிலிருந்து தெரிய வருகிறது. சில மாத இடைவெளியில்தான் இருவரும் பிறந்தனர். இயேசுவின் தாய் மரியாவும் யோவானின் தாய் எலிசபெத்தும் உறவினர்கள். இவ்வாறு நெருங்கிய உறவுகொண்டிருந்த யோவானும் இயேசுவும் திருமுழுக்குக் கொடுத்தனர் என்னும் செய்தியை யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார் (காண்க: யோவா 3:22-30). இருவரும் இறைவாக்கினர் போல மக்களுக்குத் தோற்றமளித்தனர். இருவரும் கடவுளின் ஆட்சி பற்றியும் மக்கள் மனமாற்றம் பெறவேண்டிய தேவை பற்றியும் எடுத்துரைத்தனர். எனவே மக்களிடையே ஒரே குழப்பம். இயேசு பெரியவரா யோவான் பெரியவரா என்னும் கேள்வி எழுந்தது. இக்கேள்விக்குத் திருமுழுக்கு யோவானும் இயேசுவும் அளித்த பதில்கள் நற்செய்தி நூல்களில் பதிவாகியுள்ளன. யோவான் தம்மைப் பற்றிக் கூறும்போது, ''நான் மெசியா அல்ல, மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்'' (யோவா 3:28) என உரைக்கிறார். தம்மைவிடவும் இயேசு பெரியவர் என்றும், இயேசுவே உலக மீட்பராக வருகிறார் என்றும் யோவான் அறிக்கையிடுகிறார்.

-- யோவான் தம்மை ஒரு ''முன்னோடி'' என அறிமுகப்படுத்துகிறார். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்கின்ற நாமும் கிறிஸ்துவுக்கு முன்னோடிகளாகத் திகழ அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து வருகிறார் என்றும் கிறிஸ்து நம்மிடையே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எனவும் மக்களுக்கு அறிவித்துச் சான்று பகர்கின்ற பணி நமக்குத் தரப்பட்டுள்ளது. யோவானைப் போல நாமும் இயேசு யார் என மக்களுக்குச் சுட்டிக்காட்ட அழைக்கப்படுகிறோம். இயேசுவே மெசியா என நாம் நாவினால் மட்டும் அறிக்கையிடுவதோடு நின்றுவிடாமல் நம் சொல் செயல் வழியாகவும் சிந்தனைப் பாணிகள் வழியாகவும் இயேசுவிடம் மக்களை இட்டுச் செல்ல வேண்டும். யோவான் நமக்கு முன் உதாரணமாக உள்ளார்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகன் எங்களோடு வாழ்கின்றார் என்னும் உண்மைக்குச் சான்றுகளாக நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

---------------------

"அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்"

இயேசுவின் அன்புக்குரியவரே!

நாம் வாழும்; இக்காலத்தில் இந்த திருமுழுக்கு யோவான்போல தாழ்ச்சியும் தயாகமும் உள்ள மனிதர்களைப் பார்ப்பது அறிதாக உள்ளது. ஒண்ட இடம் கொடுத்தால் வீட்டையும் ஊரையும் அபகரித்துக்கொள்ளும் அவல நிலையைக் காண்கிறோம். வேலை வசதி இல்லாத மனிதன் என்று இரக்கப்பட்டு நம் தொழிலில் ஒரு வாய்ப்புக் கொடுத்தால், சில நாட்களில் அவனே நமக்கு எதிராக அதே தொழிலில் ஈடுபட்டு போட்டியும் பொறாமையும் கொண்டு செயல்படுவதைப் பார்க்கிறோம். வளர்ச்சியையும் முன்னேற்றத்;தையும் இங்கு குறை சொல்லவில்லை.

திருமுழுக்கு யோவானிடமிருந்த நற்பண்பு இருந்தால் நம் வாழ்வில் குறை இருக்காது. எப்பொழுதும் முன்னேற்றம் இருக்கும். உண்மையான தொண்டனாக, உடன் உழைப்பாளியாக, நன்றி மறவா ஊழியனாக திருமுழுக்கு யோவான் திகழுகிறார். தன் எஐமானின் வளர்ச்சியில் மகிழ்ச்சியடைகிறார். "அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்"(யோவா 3:30) என்ற திருமுழுக்கு யோவானின் தாழ்ச்சி நிறைந்த இவ் வார்த்தைகள் அவரது தொண்டு மனப்பான்மையை அருமையாக விவரிக்கின்றன.

"நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பபப்பட்டவன்" என்ற அவரின் ஏற்புடைமை உண்மைத் தொண்டனின் தியாகத்திற்குச் சான்று.அரசியலிலும் அன்றாட வாழ்விலும் குழப்பம் உண்டாக்கி, புரட்சிசெய்து ஆட்சியை, சொத்துக்களை அபகரிக்கும் இன்றைய உலகுக்குத் திருமுழுக்கு யோவான் ஓரு மேல்வரிச்சட்டம், ஒரு பாடம். அவரிடம் கற்றுக்கொள்வோம். வாழ்க்கையில் வளர்ச்சியும் முன்னேற்றமும் தேடிவரும். வாழ்த்துக்கள். ஆசீர்;.

-: ஜோசப் லியோன்