முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65: 17-21

ஆண்டவர் கூறுவது: இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனத்தில் எழுவதும் இல்லை. நான் படைப்பனவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன். நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்; என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்; இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா. இனி அங்கே சில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது; தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்; ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும் இளைஞனாகக் கருதப்படுவான். பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சாபத்திற்கு உட்பட்டிருப்பான். அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்; திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திருப்பாடல் 30: 1,3. 4-5. 10-11 மற்றும் 12

பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.

1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்;
ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்;
என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்;
சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். -பல்லவி

4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
5 அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்;
அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்;
மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. -பல்லவி

10 ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்;
ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
11 நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;
12b என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.

யோவான் 4:43-54

தவக்காலம் -நான்காம் வாரம் திங்கள்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 43-54

அக்காலத்தில் இயேசு சமாரியாவிலிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர். கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கேதான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார். இயேசு அவரை நோக்கி, ``அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்'' என்றார். அரச அலுவலர் இயேசுவிடம், ``ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்'' என்றார். இயேசு அவரிடம், ``நீர் புறப் பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்'' என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார். அவர் போய்க்கொண்டிருக்கும்போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள். ``எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?'' என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், ``நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்குக் காய்ச்சல் நீங்கியது'' என்றார்கள். `உம் மகன் பிழைத்துக்கொள்வான்' என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 4: 43-54

தாழ்ச்சி + இடைவிடாத நம்பிக்கை = அருளடையாளம்

இன்றைய நற்செய்தி நம்மை இறையன்பில் குறிப்பாக அவர் மீது நாம் கொண்டுள்ள இறை நம்பிக்கையே நமக்கு வாழ்வளிக்கும் என்பதை நமக்க வலியுறுத்துகிறது.

அரச அலுவலன் இவன் ஏரோது மன்னன் அரண்மனையில் பெரிய பதவியில் இருந்தவன். பல மைல் தூரம் கடந்து இயேசுவினைச் சந்தித்து உயிர்ப்பிச்சைக் கேட்பது அவனின் தாழ்ச்சி என்ற புண்ணியத்தை எடுத்துரைக்கிறது. ஆனால் நமது அன்றாட வாழ்க்கைச் சூழல்களில் சிறு பதவிகளும், பொறுப்புகளும் கொடுக்கப்பட்டாலே நாம் ஆடுகிற ஆட்டம் அனைவரையும் ஆட்டிவிடுகிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லஇ இறைவனுக்கு அடிபணிய மறந்து விடுகிறோம். பதவியை விடுங்கள். இன்று கைநிறைய சம்பாதித்தாலே நான் ஏன் திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்கள் மிக அதிகம். பொருளாதாரம் உயர உயர கடவுளுக்கும் மனிதனுக்குமான தூரம் அதிகரிக்கின்றது.

மேலும் குணம் தேடி வந்தவரை ஏமாற்றக் கூடிய நிலையில் இயேசுவின் பதில் கூறுகின்றது. இயேசுவின் எரிச்சல் மிகுந்த தொனி அவரை, மனம், நம்பிக்கைத் தளர வைத்திருக்கலாம். ஆனாலும் அவர் சோர்வுறவில்லை. நாம் நமது இறைநம்பிக்கையில் எப்படி? என்பதைச் சிந்திக்கின்ற நல்ல தருணம் இது. சிறிய துன்பத்திற்கும், சோதனைக்கும் பயந்து இன்று ஆண்டவரை விட்டு ஓடுபவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சில பிரிந்து போன கிறித்தவர்களிடம் நீங்கள் ஏன் போய்விட்டீர்கள்? என்றால் கத்தோலிக்கக் குருக்கள் கன்னியர்கள் சரியில்லை அதனால்தான் நான் வேறு சபைக்குச் சென்று விட்டேன் என்பார்கள். இதனை யார் மனதையும் புண்படுத்துவதற்காக கூறவில்லை. மாறாக, சின்ன சோதனைகளைக் கண்டு அஞ்சாமல், அதனை வெல்ல அவரைப் பற்றிக் கொள்ளாமல் அவரை விட்டு விலகி ஓடுவது என்ன அறிவு. சோதனைகள் எந்த வடிவிலும் வரலாம். இறைவனே அதனை அனுமதிக்கலாம். ஆனால் எந்நிலையிலும் அரச அலுவலனைப் போல ஆண்டவரைப் பற்றிப் பிடித்தால் நம் வாழ்வில் அடையாளங்களும் அதிசயங்களும் நடக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 30: 1, 3, 4 – 5, 10 – 11அ, 12ஆ
”ஆண்டவரது கருணையோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்”

கடவுள் நல்லவர். கடவுள் பொறுமையுள்ளவர். கடவுள் மன்னிப்பு வழங்குகிறவர். இப்படி பல நல்ல பண்புகளை கடவுளுக்கு நாம் கொடுக்கிறபோது, கடவுளால் எப்படி தீமை செய்கிறவர்களைத் தண்டிக்க முடியும்? கடவுள் ஏன் தண்டிக்கிறார்? இது போன்ற கேள்விகள் கடவுளின் பண்புகளைக் கேள்விக்குள்ளாக்கும். கடவுளின் அன்பையும், கருணையையும் முழுமையாக உணர்ந்த, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உணர்ந்த திருப்பாடல் ஆசிரியர் அதற்கான பதிலைத்தருகிறார்.

கடவுள் கோபப்படக்கூடியவர் தான். எப்போது நாம் தவறு செய்கிறோமோ, எப்போது இந்த இயற்கையைச் சின்னாபின்னமாக்கி, இந்த வாழ்வியல் நெறிகளை, இயற்கையின் இயல்புகளைச் சிதைக்கிறோமோ, அப்போது, பொங்கி எழக்கூடியவர். வலியவன் எளியவனை அடக்கி ஆள நினைக்கிறபோது, அவர்களை அடிமைப்படுத்த நினைக்கிறபோது, அதனை தட்டிக்கேட்கிறவர் தான். ஆனாலும், கடவுளின் கோபம் நம்மை அழிக்க நினைப்பது அல்ல, கண்டித்து திருத்துவது மட்டுமே. நாம் நல்லவர்களாக வாழ வேண்டும், திருந்தி, திரும்பி கடவுளிடம் வர வேண்டும் என்பது மட்டும் தான். எனவே தான், அவர் எவ்வளவுக்கு கோபப்பட்டாலும், நாம் மனம் திருந்தி கடவுளிடம் வருகிறபோது, உடனடியாக அவர், நம் மீது மனமிரங்குகிறவராக இருக்கிறார். அதுதான் கடவுளின் உண்மையான அன்பு.

கடவுளின் அன்பை நாம் புரிந்துகொண்டால், நிச்சயம் நாம் தவறு செய்ய தயங்குவோம். அப்படியே தவறு செய்தாலும், உடனடியாக கடவுளிடம் ஓடோடி வருவோம். நமது பாவங்களுக்காக மனம் வருந்துவோம். கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் முழுமையாக உணர வேண்டி, இந்த திருப்பாடலை தியானிப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

தாழ்ச்சி நிறைந்த உள்ளம்

அரச அலுவலர் ஒருவர் தனது மகனுக்காக இயேசுவைத்தேடி வந்த நிகழ்ச்சி இன்றைய நற்செய்தியாக நமக்கு தரப்பட்டிருக்கிறது. யார் இந்த அரச அலுவலர்? அரசரின் அவையில் பணிபுரியக்கூடியவருக்கு தச்சுத்தொழிலாளியின் மகனிடம் என்ன வேலை? அரச அலுவலர் ஏரோது அரசரின் அவையின் பணிபுரியக்கூடியவராக இருக்கலாம். இயேசு கானாவூரில் இருக்கிறார். அலுவலரின் சொந்த ஊரோ கப்பர்நாகும். கிட்டத்தட்ட இரண்டிற்கும் இடையேயான தொலைவு 20 மைல். இங்கே, அரச அலுவலரின் தாழ்ச்சி நிறைந்த நம்பிக்கை நமக்கு உதாரணமாக தரப்படுகிறது.

அரசருடைய அவையில் பணியில் இருக்கிற அதிகாரிக்கு பல சலுகைகள் நிச்சயம் இருக்கும். அரண்மணையில் பணிபுரியும் மிகச்சிறந்த மருத்துவர்கள் நிச்சயம் அவருடைய மகனுக்கு சிகிச்சை அளித்திருப்பார்கள். அரசரின் அலுவலகத்தில் பணிபுரிகிறவர் இயேசுவைத் தேடி வந்தால், அது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது அவருக்குத் தெரியும். தான் மிகப்பெரிய அதிகாரத்தில் இருக்கிறேன். எனவே, ஆளனுப்பி இயேசுவை அதிகாரத்தோடு, அழைத்து வர ஆணையிட்டிருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு, இயேசுவை அவர் தேடி வந்தது, அவருடைய தாழ்ச்சியையும். இயேசு மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

இயேசுவை நாம் நம்பி வருகிறபோது, நம்மிடத்தில் தாழ்ச்சி நிறைந்த உள்ளம் இருக்க வேண்டும். நமக்குள்ள அனைத்தையும் விட்டு விட்டு, நம்பிக்கை நிறைந்த உள்ளத்தோடு அவரைத் தேடி வர வேண்டும். அந்த தாழ்ச்சிநிறைந்த உள்ளம் தான், இயேசுவின் வல்லமையை நமக்குப் பெற்றுத்தரக்கூடிய மிகப்பெரிய ஆயுதம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறையனுபவம் பெறுவோம்

மாற்கு, லூக்கா மற்றும் மத்தேயு ஆகிய மூன்று நற்செய்தியாளர்களுமே, சொந்த ஊரில் இறைவாக்கினர்களுக்கு மதிப்பு இல்லை என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர். ”இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை” (லூக்கா 4: 24, மாற்கு 6:4, மத்தேயு 13: 57). ஆனால், யோவான் அதற்கு நேர் எதிரான ஒரு கருத்தை தனது நற்செய்தியில் சொல்கிறார். ஏனென்றால், இன்றைய நற்செய்தியில், ”இயேசு கலிலேயா வந்தபோது, கலிலேயர் அவரை வரவேற்றனர்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பகுதி வாயிலாக யோவான் நற்செய்தியாளர் என்ன சொல்ல விரும்புகிறார்? என்று பார்ப்போம்.

சமாரியர்கள் இயேசுவை நம்பினார்கள். மற்றவர்கள் சொன்னதனால் அல்ல, மாறாக, அவர்களே இயேசுவிடமிருந்து கேட்டதால். இதுபோல யாரும் இதுவரை பேசியதில்லையே, என்று அவர்களே வியக்குமளவுக்கு அவர்கள் வியந்துப் பார்த்தனர். அதேபோல, கலிலேயர்களும், மற்றவர்கள் சொன்னதால் அவர்கள் நம்பவில்லை. மாறாக, அவர்களோ யெருசலேமில் இயேசு செய்த அதிசயங்களை, அற்புதங்களைப் பார்த்ததால் நம்பினார்கள். இயேசுவின் வார்த்தைகளும், செயல்களும் மற்றவர்களின் நம்பிக்கைக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன. அதாவது, சமாரியர்களும், கலிலேயர்களும் பெற்ற நேரடி அனுபவம்தான், அவர்கள் இயேசுவை நம்புவதற்கு உறுதுணையாக இருந்தது.

இறையனுபவம் என்பது ஒவ்வொரும் கண்டிப்பாகப் பெறக்கூடிய அனுபவம். பெறவேண்டிய அனுபவம். அந்த அனுபவம் தான் நமது விசுவாசத்திற்கான மூலைக்கல். அன்றைக்கு திருத்தூதர்களின் விசுவாசத்திற்கு உறுதுணையாக இருந்தது அத்தகைய இறையனுபவம் தான். நாமும், இறையனுபவத்திற்காக ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நம்பிக்கை வாழ்வு

இயேசு கலிலேயாவுக்கு ஓய்வு எடுப்பதற்காகச்செல்கிறார். பிற இடங்களில் இயேசு சென்றால், அவர் பின்னால் திரளான மக்கள் கூட்டம் அணிதிரண்டு சென்றது. ஆனால், சொந்த ஊரில் இறைவாக்கினர்கள் எவரும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்கிற பொதுவான சிந்தனை, இயேசுவை தனது சொந்த ஊருக்குச்சென்று ஓய்வெடுக்கத் தூண்டியிருக்க வேண்டும். ஏனெனில், தனது சொந்தஊரில் மக்கள் தன்னை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என இயேசு நினைத்திருக்கலாம். எனவே அவர் கலிலேயாவிற்கு வருகிறார். ஆனால், அங்கே அவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக, வரவேற்பு இருப்பதைப்பார்த்து இயேசுவே திகைக்கிறார். இதேபோல், எதிர்பார்ப்பில்லாமல் சென்ற சமாரியாவிலும் மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவர்மேல் தங்கள் முழுமையான நம்பிக்கையை வைத்தனர். அந்தவகையில், கலிலேயாவிலும் மக்கள் அவரை வரவேற்கின்றனர். காரணம், அவர்கள் ஏற்கெனவே யெருசலேமில் திருவிழா சமயத்தில் அவர் செய்திருந்த அற்புதங்களையும், ஆற்றல்மிக்க செயல்களையும் அவர்களே கண்டிருந்தனர்.

இன்றைய நற்செய்திப்பகுதியில் அரச அலுவலரின் நோயுற்ற மகனுக்கு இயேசு குணம்தருகிற செய்தி தரப்பட்டுள்ளது. இந்தப்பகுதி அரசஅலுவலரின் விசுவாசத்தின் பல்வேறு பரிமாணங்களை நமக்கு எடுத்தியம்புகிறது. முதலில், அரசஅலுவலரின் தாழ்ச்சி. அரச அலுவலர் என்பது ஒரு மதிப்புமிக்கப்பதவி. அப்படி மதிப்புமிக்க பதவியில் இருக்கிற ஒருவர், பல மைல்கள் கடற்து, சாதாரண தச்சுத்தொழிலாளியின் மகனிடத்தில் வந்து கெஞ்சுவது மற்றவர்களுக்கு இழுக்காகத்தெரிந்திருக்கலாம். ஆனால், இந்த அரச அலுவலர் அதைப்பொருட்படுத்தவில்லை. இரண்டாவது, இயேசுவின் சோர்ந்து போகச்செய்யக்கூடிய வார்த்தைகள், சற்று நேர்மறையாகப்பார்த்தால் விசுவாசத்தைச் சோதிக்கக்கூடிய வார்த்தைகள்( ‘அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்’) அவரை சோர்வடையச்செய்யவில்லை. உறுதியாக, பொறுமையாக இருக்கிறார். மூன்றாவது, அவரின் விசுவாசம். இங்கே தனது மகனை அழைத்துவரவில்லை. இயேசு சொன்னவுடன், தன் மகன் குணமடைந்துவிட்டானா? என்று கேட்டு, உடனே அறிந்துகொள்வதற்கு தொலைபேசி வசதி இல்லை. இயேசு தன்னோடு வரவேண்டும் என அவரைக்கட்டாயப்படுத்தவில்லை. தனது மகன் குணமடைய வேண்டும் என்று பரிந்துரை வைக்கிறார். அவ்வளவுதான். எந்த வழியில், வகையில் குணப்படுத்த இயேசு திருவுளம் கொள்கிறாரோ, அதை ஏற்று அப்படியே கீழ்ப்படிகிறார். இறுதியாக, அவருடைய மகன் குணமடைந்தவுடன், தனது நன்றியை வெளிப்படுத்தும் விதமாக, தன்னுடைய குடும்பத்தோடு இயேசுவை ஏற்றுக்கொண்டு, மற்றவர்களுக்கு சாட்சியாக மாறுகிறார். விசுவாசத்தை வெறும் நம்பிக்கையாகக்கருதாமல், எல்லாவகையிலும் அந்த விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார்.

விசுவாசம் என்பது வெறுமனே நம்பிக்கையல்ல. அந்த நம்பிக்கை பல பரிமாணங்களில் வெளிப்படும்போதுதான் விசுவாசமாகிறது. நான் கடவுளை நம்புகிறேன் என்று வெறுமனே சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதை நம் வாழ்வில் அரச அலுவலரைப்போல செயல்படுத்த வேண்டும். அது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் வெளிப்பட வேண்டும்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

வார்த்தையை நம்பி !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

அரச அலுவலர் இயேசுவிடம் வந்து தன் மகனை நலமாக்க வருமாறு அழைத்தபோது, இயேசு அவரிடம், “நீர் புறப்பட்டுப் போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்” என்றார். அவரும் இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார் என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அவர் மகன் பிழைத்துக்கொண்டான்.  எனவே, அவரும் அவர் வீட்டாரும் இயேசுவை நம்பினர்.

இறைவனின் இயல்புகளுள் ஒன்று அவர் “வாக்கு மாறாதவர்” என்பது. எனவேதான், காலையில் அவரது பேரன்பையும், இரவில் அவரது வாக்குப் பிறழாமையையும் புகழ்வது நல்லது என்று திருப்பாடலில் (92) வாசிக்கிறோம். இறைவன் வாக்குப் பிறழாதவர், சொன்ன சொல் தவறாதவர். எனவே, நாமும் அவரது வார்த்தையை நம்பி வாழ்வோம். இறைவனின் வாக்கே விவிலியம். அந்நூலில் இறைவனின் வாக்குறுதிகளும், ஆறுதல் மொழிகளும், அறைகூவல் சொற்களும் அடங்கியுள்ளன. அவரது வார்த்தைகள் நிலைவாழ்வைத் தருகின்றன. எனவே, இறைவனின் வார்த்தையை நம்புவோம். அந்த வார்த்தைகளின்படி நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம்.

மன்றாடுவோம்: வாழ்வு தரும் வார்த்தைகளின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நலம்; தரும், வாழ்வு தரும், உயிர் தரும் உம் வார்த்தைகளை ஆர்வத்துடன் வாசிக்கவும், வாசித்த வார்த்தைகளை நம்பி வாழவும் எங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்தியருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------

 

''இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர்
அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்'' (யோவான் 4:47)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு அதிசய செயல்களைச் செய்தார் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. ஆனால் ஏன் அவர் அச்செயல்களைச் செய்தார் என்று கேட்டால் மக்களின் தேவைகளை அறிந்து, அவர்கள்மேல் இரக்கம் கொண்டு, மனமுவந்து அவர்களுக்கு உதவினார் என நாம் பதிலிறுக்கலாம். இயேசுவின் உதவியை நாடிச்சென்ற மனிதரிடம் அவர் எதிர்பார்த்தது ஆழ்ந்த நம்பிக்கை ஆகும். கானா என்னும் ஊரில் இயேசு தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியிருந்தார். அதே ஊருக்கு இன்னொருமுறை சென்றபோது அவரைத் தேடி வருகிறார் அரச அலுவலர் ஒருவர். அவருடைய மகன் சாகும் தறுவாயிலிருக்கிறார். அம்மகனைக் குணமாக்க வேண்டும் என அவர் இயேசுவிடம் மன்றாடுகிறார். ''உம் மகன் பிழைத்துக்கொள்வான்'' என இயேசு கூறிய சொல்லை நம்பி அரச அலுவலர் புறப்படுகிறார் (யோவா 4:49-50). அவர் போய்க்கொண்டிருக்கும்போதே அவருடைய மகன் பிழைத்துக்கொண்டான் என்னும் நல்ல செய்தி அவருடைய காதுகளை எட்டுகிறது. இந்த அதிசய செயலைக் கண்டு அந்த அரச அலுவலரும் அவருடைய வீட்டாரும் இயேசுவை ''நம்புகின்றனர்'' (யோவா 4:53). அதிசயமான இந்நிகழ்ச்சியை இயேசு தம் சொல்லால் நிகழ்த்தினார் என யோவான் விவரித்துள்ளார் (யோவா 4:50).

-- இயேசு கடவுளின் வல்லமையோடு செயல்படுகிறார் என்பதை அந்த அரச அலுவலர் முதலிலேயே மனதார ஏற்றுக்கொண்டார் என்பது கவனிக்கத் தக்கது. தம் மகன் பிழைத்துக்கொண்டது இயேசுவின் வல்லமையாலேயே என உணர்ந்ததும் அந்த அரச அலுவலர் மீண்டும் ''இயேசுவை நம்பினார்'' (யோவா 4:53). எனவே ''நம்பிக்கை'' என்பது கடவுளின் செயலை நாம் அடையாளம் காண நமக்குத் துணையாகிறது என்பதை நாம் அறிகிறோம். இயேசுவிடத்தில் நம்பிக்கை இல்லாத மனிதருக்கு அவர் புரிந்த செயல்கள் ஆழ்ந்த பொருளுள்ளவையாகத் தெரியாது. ஆனால் இயேசுவிடத்தில் கடவுளின் வல்லமை துலங்குகிறது என்றும், அவர் இரக்கம் கொண்டால் அதிசயங்கள் நிகழும் என்றும் நாம் ''நம்பிக்கை'' கொண்டால் நம் வாழ்வில் புதுமை மலரும் என்பது உறுதி.

மன்றாட்டு
இறைவா, எங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்தியருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

மேலைநாட்டுக் கலாச்சார தாக்கம், இன்று நம் நகரங்களில் பரவி ,கிராமங்களுக்கு ஊடுறுவிக்கொண்டிருக்கிறது. பெற்றோர் பலர் நொந்து நொடிந்து நூலாகிக்கொண்டிருக்கின்றனர். கலாச்சார சீர்கேடு, என் மகனை(ள) நான் இழக்கச் செய்துவிடுமோ! ஆலயம்தோறும், 'ஐயா, என் மகனை(ள) இழக்குமுன் வாரும்' என்று எத்தனையோ பெற்றோரின் வேண்டுதல்கள்.

இளமையின் வேகத்தில் பெற்ற தாய் தகப்பனை மறந்து, ஒட்டி, ஊட்டி உறவாடிய பந்த பாசத்தை மறுத்து, வாழ்வின் விளிம்பில் நின்று, சாவின் பள்ளத்தாக்கில் இறங்க காத்துக்கொண்டிருக்கும் மகளு(னு)க்காக, "ஐயா, என் மகன்(ள்) இறங்குமுன் வாரும்" என்று விண்ணப்பிக்கும் பெற்றோர்களும் இதில் அடங்குவர்.

எத்தனையோ விதவிதமான விசித்திரமான காரணங்களால் இன்று நம் மகள்கள், மகன்கள், உடலில், உள்ளத்தில், பொருளாதாரத்தில், ஆன்மீகத்தல், குடும்ப வாழ்வில், அரசியலால் இறந்துகொண்டிருக்கிறார்கள். பெற்றோர் பலர், " ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்" 'ஐயா, என் மகனை(ள) இழக்குமுன் வாரும்' "ஐயா, என் மகன்(ள்) இறங்குமுன் வாரும்" என்று அபயக் குரல் எழுப்பி, கோயில் குளம் என்றெல்லாம் அலைந்து, கௌரவம் பாராது, காவி அணிந்து, மொட்டை அடித்து, கால்நடையாய், அலுவலன் தன் மகனுக்காகக் கெஞ்சி கதறியதுபோல வாழும் பெற்றோரைப் புறிந்துகொள்வோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்