முதல் வாசகம்

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9,12

அந்நாள்களில் வானதூதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்துகொண்டிருந்தது. அம்மனிதர் கையில் ஓர் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்று, ஆயிர முழம் அளந்தார்.
பின்னர் கணுக்காலளவு ஆழமுள்ள அத்தண்ணீர் வழியாய் என்னை அழைத்துச் சென்றார். அவர் மேலும் ஆயிர முழம் அளந்து என்னை முழங்காலளவு ஆழமுள்ள தண்ணீரில் அழைத்துச் சென்றார். மேலும் ஆயிர முழம் அளந்து இடுப்பளவு தண்ணீரில் என்னை நடத்திச் சென்றார். அவர் மேலும் ஆயிர முழம் அளந்தார். ஆனால் இப்போது அது ஆறாக ஓடியது. எனவே என்னால் அதைக் கடக்க இயலவில்லை. ஏனெனில் தண்ணீர் உயர்ந்து நீந்திப் போகுமளவுக்கு ஆழமுடையதாய், யாராலும் நடந்து கடக்க முடியாத ஆறாய் ஓடியது. அவர் என்னிடம், `மானிடா! இதைப் பார்த்தாயா?' என்றார்.
பின்னர் அவர் என்னை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார். நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக் கண்டேன். அவர் என்னிடம் உரைத்தது: ``இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும். பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 46: 1-2. 4-5. 7-8
பல்லவி: ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; நமக்கு அரணாயும் இருக்கின்றார்.

1 கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்;
இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே.
2 ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும்,
மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. -பல்லவி

4 ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின்
திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.
5 அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது;
வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. -பல்லவி

7 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்;
யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்.
8 வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்!
அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! -பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்.

யோவான் 5:1-16

தவக்காலம் -நான்காம் வாரம் செவ்வாய்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-3, 5-16

யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார். எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர். இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்கு வாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக் கிடப்பர். முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார். இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, ``நலம்பெற விரும்புகிறீரா?'' என்று அவரிடம் கேட்டார். ``ஐயா, தண்ணீர் கலங்கும்போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்'' என்று உடல்நலமற்றவர் அவரிடம் கூறினார். இயேசு அவரிடம், ``எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்'' என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார். அன்று ஓய்வுநாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், ``ஓய்வுநாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்'' என்றார்கள். அவர் மறுமொழியாக, ``என்னை நலமாக்கியவரே `உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்' என்று என்னிடம் கூறினார்'' என்றார். `` `படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்' என்று உம்மிடம் கூறியவர் யார்?'' என்று அவர்கள் கேட்டார்கள். ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய்விட்டார். பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, ``இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்'' என்றார். அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார். ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 46: 1 – 2, 4 – 5, 7 – 8
”ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்”

இறைவன் தான் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாக இருக்கிறவர். அவரின்றி அணுவும் அசையாது. எனவே, வாழ்க்கையில் பயம் இல்லை, என்கிற ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகள் தான், இன்றைய திருப்பாடல் நமக்குத்தரக்கூடிய வார்த்தைகள். கடவுள் எல்லா நேரத்திலும், தான் தேர்ந்து கொண்ட மக்களோடு இருக்கிறார். குறிப்பாக, அவர்களது துன்பநேரத்தில் அவர்களோடு தங்கியிருக்கிறார். இயற்கையின் சீற்றங்கள் எவ்வளவு தான் பயமுறுத்தினாலும், கடவுளின் பாதுகாப்பு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. எனவே, எவற்றிற்கும் பயப்படுவது கிடையாது.

கடவுள் தான் எல்லாமுமாக இருக்கிறார். எதிரிகளிடமிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறார். எதிரிகளை வெற்றி பெறச் செய்கிறார். எல்லாவித நெருக்கடிகளிலிருந்தும் ஆண்டவர், கடவுளின் பிள்ளைகளை விடுவிக்கிறார். வாழ்க்கையில் எது நடந்தாலும், நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆண்டவர் உடன் இருப்பதால், எத்தீங்கும் நெருங்கப்போவதில்லை. வாழ்க்கையில் பலவீனத்தில் தவறுகள் செய்தாலும், கடவுள் மன்னிக்கக்கூடியவராக இருக்கிறார். இன்றைய நற்செய்தியிலும் 38 ஆண்டுகளாக, பாவத்தினால் முடக்குவாதமுற்ற நிலையில் இருந்த மனிதருக்கு இயேசு சுகம் கொடுக்கிறார். கடவுள் இருக்கிறபோது, பாவிகளும், முழுமையான மன்னிப்பைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதை, இது வெளிக்காட்டுகிறது.

கடவுள் நம்மோடு இருக்கிறார் என்கிற அந்த நம்பிக்கை, நமது வாழ்க்கையில் நாம் எப்போதும், எதற்கும் கவலைப்படாது, மகிழ்வாய் வாழ உந்துசக்தியாய் இருக்க வேண்டும். நாம் தவறு செய்வதற்கு வழிசெய்து விடக்கூடாது. வாழ்க்கையை கடவுளுக்கு பிரியமான முறையில் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

சோர்வில்லாத விசுவாசம்

எருசலேமில் பெத்சதா என்ற குளம் இருந்தது. இந்த குளத்தின் அருகில் இருக்கக்கூடிய மண்டபத்தில், நோயாளிகள் படுத்து கிடப்பர். அந்த குளம் நீந்திச்செல்லலாம், என்கிற அளவுக்கு சற்று ஆழமானதாக இருந்தது. அந்த குளத்தின் அடியில் நீரோடை ஒன்று இருந்தது. சில வேளைகளில், அதிலிருந்து நீர்க்குமிழிகள் தோன்றும். வானதூதர் அந்த தண்ணீரைக் கலக்குவதால் ஏற்படக்கூடிய நீர்க்குமிழிகள் என்று, மக்கள் நம்பினர். அப்படி கலங்குகிறபோது, அந்த குளத்தில் இறங்குகிற முதல் நோயாளி, தனது நோயிலிருந்து முற்றிலும் குணமாவார், என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்தது.

ஒருவேளை கணிணி உலகத்தில் இருக்கிற நமக்கு, அது மூடநம்பிக்கையாகத் தோன்றலாம். அல்லது அறிவியல்பூர்வமாக நாம் விளக்குவதற்கு முற்படலாம். ஆனால், யூத மக்களுக்கு, இதுபோன்ற நிகழ்வுகள், கடவுள் மீதான அவர்களின் நம்பிக்கைக்கு அடையாளமாக இருந்தது. அந்த குளத்தின் அருகில் தான், பல ஆண்டுகளாக நோயுற்றிருந்த ஒரு மனிதரை இயேசு பார்க்க நேரிடுகிறது. எத்தனையோ நோயாளிகள் அங்கிருந்தாலும், அவரைப் பார்த்தவுடன் இயேசு அவரருகில் வருகிறார். நிச்சயம் அதற்கு காரணம் இல்லாமல் இருந்திருக்காது. அவரிடத்தில் ஏதாவது சிறப்பம்சம் இருந்திருக்க வேண்டும். அதுதான் அவரது தளர்ச்சியடையாத நம்பிக்கை. அந்த நம்பிக்கை இயேசுவின் கேள்விக்கு, அவர் தரக்கூடிய பதிலில் வெளிப்படுகிறது. இத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவர் நம்பிக்கையோடு இருக்கிறார். சோர்வில்லாமல் இருக்கிறார். களைப்போ, வெறுப்போ, நம்பிக்கையின்மையோ, கழிவிரக்கமோ அவரது பேச்சில் இல்லை. நிதானமாக இருக்கிறார். நிதானமாக பதில் சொல்கிறார். அதுதான் இயேசுவை ஆச்சரியப்பட வைக்கிறது.

வாழ்வில் பல இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் நாம் உள்ளாகிறோம். அப்படி பிரச்சனை சந்திக்கிறபோது, சோர்வில்லாமல் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய துணிவை, நோயுற்ற மனிதரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். அந்த சோர்வில்லாத, தளராத விசுவாசத்திற்காக, இறைவனிடத்தில் மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

”குணம் பெற விரும்புகிறீரா?”

இயேசு உடல் நலமற்ற மனிதரிடம் ”குணம் பெற விரும்புகிறீரா?” என்ற கேள்வியைக் கேட்கிறார். பல ஆண்டுகளாக, எப்படியாவது குணம் பெற்று விட வேண்டும் என்று அந்த மனிதர் நிச்சயமாக முயற்சி எடுத்திருப்பார். எப்படியாவது குணம் பெற்றுவிட வேண்டும் என்ற அவரின் எண்ணத்தின் வெளிப்பாடுதான், அந்த குளத்தின் அருகில் அவர் நீண்ட நாட்களாக காத்திருப்பது. அந்த மனிதர் தனது உடல் நலக்குறைபாட்டிற்கேற்ப தனது வாழ்வை மாற்றிக்கொண்டாலும், இதுதான் வாழ்க்கை, இதை வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள, சந்தர்ப்பத்தை அவர் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்.

இயேசுவிடமிருந்து நிறைவான அருளைப்பெற்றுக்கொள்வதற்கு நமக்கு அடிப்படையிலே இருக்க வேண்டியது, ஆர்வம். எந்த ஒரு சூழலிலும் நம்பிக்கை இழக்காத தன்மை. கடைசி நிமிடத்திலும் இருக்கும் அந்த ஒரு துளி நம்பிக்கை. எதை இழந்தாலும் ஒரு மனிதன் நம்பிக்கை இழக்கக்கூடாது என்பதற்கு இந்த உடல் நலமற்றவர் சிறந்த எடுத்துக்காட்டு. எப்படியாவது குணம் பெற்றுவிட வேண்டும் என்கிற ஆர்வம் அந்த மனிதருக்குள்ளாக இருக்கிறது. இயேசு அந்த ஆர்வத்திற்கு நம்பிக்கையூட்டுகிறார். அந்த ஆர்வத்தை அவர் ஊக்குவிக்கிறார். கடைசிவரை அதே ஆர்வத்தோடு இருக்கிறபோது, நிச்சயம் கடவுளின் அருள் நம்மை வந்தடையும் என்பதற்கு இந்த உடல் நலமற்றவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

நமது நம்பிக்கை வாழ்வில் நமக்கு எப்போதும் அடிப்படை ஆதாரமாக இருக்க வேண்டியது, நம்பிக்கை. அந்த சிறுதுளி நம்பிக்கை தான் நமது வாழ்வில் பல அற்புதங்கள் நடப்பதற்கு தூண்டுகோலாய் இருக்கப்போகிறது. எனவே, நமது வாழ்வில் நாம் எப்போதும், நம்பிக்கையாளர்களாய் வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

விசுவாசத்தளர்ச்சியைப் போக்குவோம்

யூதர்களுக்கு மூன்று திருவிழாக்கள் முக்கியமானவைகளாக இருந்தன. அவைகள் முறையே, பாஸ்கா திருவிழா, பெந்தகோஸ்து திருவிழா மற்றும் கூடாரத்திருவிழா. யெருசலேம் ஆலயத்திலிருந்து 15 மைல்களுக்குள் வாழும் ஒவ்வொரு யூத ஆண்மகனும், இந்த திருவிழாக்களில் கட்டாயம் கலந்தகொள்ள வேண்டும். இன்றைய நற்செய்திப் பகுதியை யோவான் ஒரு உருவகமாக எழுதியிருக்கலாம் என சிலர் விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள். முடக்குவாதமுற்ற மனிதன் இஸ்ரயேல் மக்களை குறிக்கிறவர். ஐந்து தூண்களும் முதல் ஐந்து புத்தகங்களைக் குறிக்கிறது. 38 ஆண்டுகள் என்பது இஸ்ரயேல் மக்கள் பாலைவனத்தில் நாடோடிகளாக வாழ்ந்ததைக்குறிக்கிறது. தண்ணீரைக்கலக்குவது என்பது திருமுழுக்கை நினைவூட்டுகிறது. ஆனால், உண்மையில் இயேசுவின் புதுமைகளுள் ஒன்றுதான் இது என்று வாதிடுகிற அறிஞர்கள்தான் ஏராளம்.

இயேசு அந்த மனிதரிடம் ‘நலம் பெற விரும்புகிறீரா?’ என்று கேட்கிறார். இயேசுவின் இந்தக்கேள்வி பொருத்தமான கேள்வியாக, அறிவார்ந்த கேள்வியாக இருக்க முடியுமா? என்ற கேள்வி நமக்குள்ளாக எழலாம். காரணம், இத்தனை ஆண்டுகளாக, அந்த குளத்தின் கரையில் அந்த மனிதன் இருந்ததே, குணமடைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான். அவனைத்தூக்கிவிட்டு, உதவக்கூடியவர்கள் யாரும் இல்லையெனினும் ஏதோ ஒரு நம்பிக்கையில், என்றாவது தனக்கும், வானதூதர் அந்த குளத்தைக் கலக்கும்போது, குளத்தில் இறங்கும் ஒரு வாய்ப்புகிட்டும் என்ற நம்பிக்கையில்தான் அங்கே அமர்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட மனிதரிடத்தில் இயேசு இந்தக்கேள்வியைக் கேட்பது சரியா? என்று நாம் நினைக்கலாம். இயேசு அந்த மனிதரிடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்பதன் நோக்கம், முடக்குவாதமுற்ற மனிதரிடத்திலே உள்ள நம்பிக்கையின் ஆழத்தைக் கண்டுபிடிப்பதற்காக. அந்த மனிதர் அங்கே இருந்தது நம்பிக்கையின் அடிப்படையில்தான். ஆனாலும், தொடக்கத்தில் அந்த இடத்திற்கு வந்தபோது இருந்த அதே விசுவாச ஆழம் அவனிடம் இருக்கிறதா? என்பதை இயேசு அறிய விரும்புகிறார். ஏனெனில், இயேசுவின் வல்லமையைவிட, அந்த மனிதரின் விசுவாசம் தான், அவர் செய்யப்போகிற புதுமையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, இயேசு அறியாதவரல்ல. அந்த மனிதர் தருகிற பதிலில் அவரின் நம்பிக்கையின் ஆழம் இன்னும் குறையாமல் இருப்பதை இயேசு கண்டுகொள்கிறார். எனவே அவருக்கு குணமளிக்கிறார்.

இறைவனின் அபரிவிதமான ஆசீரைப்பெற நமக்குத்தடையாக இருப்பது விசுவாசத்தளர்ச்சி. இந்த விசுவாசத்தளர்ச்சிக்கு பல காரணங்கள் இருக்கலாம். கடவுளின் அன்பை முழுமையாகப் புரிந்துகொள்ளாமை, பொறுமையின்மை, துன்பங்களை ஏற்றுக்;கொள்ளும் பக்குவமின்மை போன்றவை விசுவாசத்தளர்ச்சிக்கு வழிவகுக்கு காரணிகளாகும். விசுவாசத்தளர்ச்சியை அகற்றி, இறைவனின் இரக்கத்தைப்பெற விசுவாசத்தை வளப்படுத்துவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

"நலம்; பெற விரும்புகிறீரா?"

இயேசு நிகழ்த்திய அழகான அருள்நிகழ்வுகளுள் ஒன்றை இன்றைய நற்செய்தி வாசகமாகப் பெற்றிருக்கிறோம்.

எருசலேமின் பெத்சதா குளத்தருகே திரளாய்ப் படுத்துக்கிடந்த நோயுற்ற மனிதர்களிலே முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த மனிதரும் இருந்தார். வியத்தகு முறையில் இயேசு அவரைக் குணமாக்கிய இந்த நிகழ்வின் சில பண்புகளைத் தியானிப்போம்.

1. இயேசுவின் முன்னறிவு. இயேசு அந்த மனிதரைக் கண்டபோதே அவர் நெடுங்காலமாக அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்தார் என்று வாசிக்கிறோம். இயேசு அனைத்தையும், அறிபவராக, நாம் வேண்டுவதற்கு முன்பே நமது ஏக்கங்களை உணர்ந்தவராக இருக்கிறார் என்பது ஆறுதல் தருகிறது.

2. இயேசுவின் முன்னெடுப்பு. இயேசு அந்த மனிதரைக் கண்டபோதே, அவர்மீது பரிவு கொண்டுவிட்டார். எனவேதான், தாமாகவே முன்வந்து, அவரிடம் "நலம் பெற விரும்புகிறீரா?: என்று வினவுகிறார். நமது வாழ்விலும் இயேசு தாமாகவே முன் வந்து நமக்கு நலமும், வளமும் தர வல்லவராக இருப்பதில் மகிழ்ச்சி கொள்வோம்.

3. இயேசுவின் முன் எச்சரிக்கை. நலமடைந்த மனிதரை இயேசு மீண்டும் கண்டபோது, "நீர் நலமடைந்துள்ளீர். இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்" என்று எச்சரிக்கிறார். இறையருளும், நலமும் பெற்றவர்கள், நற்செய்தியின் சான்றுகளாக வாழவேண்டுமே தவிர பழைய வாழ்விலே மீண்டும் வீழ்ந்துவிடக்கூடாது என்னும் செய்தியை இந்நிகழ்வின் வாயிலாகப் பெற்றுக்கொள்வோம்.

மன்றாடுவோம்: நாங்கள் கேளாமலே எங்களுக்கு நலமருளும் நன்மைகளின் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மிடமிருந்து அருளுக்கு மேல் அருளைப் பெற்றுக்கொள்ளும் நாங்கள் உமது சான்றுகளாக வாழவும், பாவம் தவிர்த்த நிறைவாழ்வு வாழவம் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

நலம் பெற விரும்புகிறீரா ?

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் நலமளிக்கும் பணியின் முகாமையான ஓர் அம்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது. நலமற்ற மனிதரிடம் நலம்பெற வேண்டும் என்னும் விருப்பம், ஆர்வம், அதற்கேற்ற நம்பிக்கை இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தபின்னரே, அந்த மனிதரைக் குணமாக்க முன் வருகிறார் இயேசு. இந்த வாசகத்திலும் “நலம் பெற விரும்புகிறீரா?” என்று அந்த மனிதரிடம் வினவி, அவருடைய விருப்பத்தையும், நம்பிக்கையையும் அறிந்த பின்னர் அவரைக் குணப்படுத்துகிறார்.

இத்தவக்காலத்தில் நாம் நலம் பெற விரும்புகிறோமா, மனமாற்றம் அடைய விரும்புகிறோமா என்று நம்மையே கேட்டுக்கொள்வோம். மனமாற்றத்திற்கான அடிப்படை ஆர்வமோ, விருப்பமோ இல்லாவிட்டால், மனமாற்றத்தை இறைவன் எப்படித் தருவார்? நாம் விரும்புவோம், நம் விருப்பத்தை அறிக்கை இடுவோம்.

மன்றாடுவோம்: நாங்கள் நலமோடு வாழவேண்டும் என்று விரும்பும் இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். இத்தவக் கால நாள்களில் நாங்கள் மனமாற்றம் அடைந்து, உம்மிடம் திரும்பி வருகின்ற ஆர்வத்தை, விருப்பத்தை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------

 

''இயேசு அவரிடம், 'எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு
நடந்து செல்லும்' என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து
தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார்'' (யோவான் 5:8-9)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு மனிதர்களுக்கு முழுநலமளிக்க இவ்வுலகிற்கு வந்தார். கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற நலனுக்குப் பெயர் மீட்பு, விடுதலை, நிலைவாழ்வு. இந்த முழுநலனை வழங்கவந்த இயேசு பல மனிதருடைய உடல்நோய்களையும் உளநோய்களையும் குணமாக்கினார். இத்தகைய செயல்களால் அக்காலத்தில் பலர் பயன்பெற்றனர் என்பதோடு அச்செயல்கள் இயேசு கொணர்ந்த முழுநலனை வெளிப்படுத்துகின்ற அடையாளங்களாகவும் மாறின. முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமின்றி படுத்தபடுக்கையாய் இருந்த ஒரு மனிதர் இயேசுவிடம் குணம் வேண்டி இறைஞ்சுகிறார். இயேசு அவர்மீது இரக்கம் கொண்டு, ''எழுந்து உம் படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்'' என்று கூறிய உடனேயே அம்மனிதர் குணம் பெறுகிறார்; தம் படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கிறார். அன்று ஓய்வுநாள். ஓய்வுநாளில் இயேசு குணமளித்தது சட்டத்தை மீறிய செயல் என அவருடைய எதிரிகள் குற்றம் சாட்டுகின்றனர். அது மட்டுமல்ல, ஓய்வுநாளில் படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கலாகாது என்னும் சட்டத்தையும் மீற இயேசு தூண்டுதலானார் என அவர்மீது குறைகாண்கின்றனர்.

-- நன்மை செய்வதற்குக் காலம் நேரம் உண்டா என நாம் கேட்கலாம். ஆனால் இயேசுவின் காலத்தில் ஓய்வுநாள் என்பது பல துல்லியமான சட்டதிட்டங்களைக் கொண்ட ஒரு பழக்கமாக மாறிவிட்டிருந்தது. இது முறையாகாது என இயேசு கற்பித்தார். எனவே, இயேசு ஒரு கலகக்காரர் என்றும் மக்களைத் திசைதிருப்புகிறார் என்றும் கூறி, அவருடைய எதிரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இன்றும்கூட இந்நிலை நிலவுவதை நாம் காணலாம். மக்களுக்கு நன்மை செய்கின்ற மனிதர்களை இழித்துரைக்கின்ற சமுதாயம் இது. அடுத்தவர்களுக்கு நன்மைவிளைந்தால் அதனால் தங்களுக்கு ஏதோ குறை ஏற்பட்டதுபோல நடக்கின்ற மனிதர்கள் இன்றும் உள்ளனர். இது ஒருவித சுயநலப்போக்கின் விளைவேயன்றி வேறல்ல. ஆனால் இயேசு நமக்கு உணர்த்தும் உண்மை இது: நன்மை செய்வதற்குக் காலமும் நேரமும் கிடையாது; எந்நாளும் எவ்விடத்திலும் நன்மை செய்வதே நம் நோக்கமாதல் வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்தில் பரிவான சிந்தனைகளை உருவாக்கியருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"நலம்பெற விரும்புகிறீரா?"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

ஒரு மருத்துவமனையில் இது என்ன கேள்வி? உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர்,இதய நோய், மனநோய், முடக்குவாதமுற்றோர் இவர்கள் கூடியிருக்கும் இடத்தில் இது என்ன கேள்வி? எல்லா மனிதனுக்கும் ஏதோ ஒரு விதத்தில் இந்த கேள்வி தேவைப்படுகிறது. இவ்வுலகில் வாழும் நாம் அனைவரும் மண்டபத்தில் படுத்துக்கிடப்பவர்கள்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு நோய். அவ்வளவுதான் வேறுபாடு. ஏதோ ஒரு வரிசையில், எதற்கோ காத்திருக்கிறோம்.

நம்மை நாமே அருள்நிலையில் வைத்திருந்தால், எல்லாவற்றிலும் நமக்கு முதலிடம் கிடைத்திருக்கும். முப்பத்தெட்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்;பினும் மனம் சோர்ந்திட வேண்டாம். நம்பிக்கையோடு இருப்போரைக் கடவுள் கைவிடுவதில்லை. அவரே தேடி வருகிறார்.

சில சமயங்களில் ஆண்டாண்டாக துன்பம் நம்மை தொடர்ந்து வரலாம். ஆம் முப்பத்தெட்டு ஆண்டுகள். அடுத்தவனோடு போட்டிபோடவும் நமக்கு துணிவு, திறமை, வசதி இல்லாமல் இருக்கலாம். நல்லவர்கள் நாலுபேர் நமக்கு உதவி செய்ய முன்வராமலிருக்கலாம். கவலைப்பட வேண்டாம். மனம் சோர்ந்து போக வேண்டாம். தெய்வம் உன்னைத் தேடிவரும் நேரத்தில் தயாராக இரு. கடவுள் உன்னிடம் "நலம்பெற விரும்புகிறீரா?" என்று கேட்கும்போது உன் உடலும் உள்ளமும் தயாராக இருக்கட்டும். எத்தகைய நோயோடு, குறையோடு, தேவையோடு இருந்தாலும் நம் இயேசு நமக்குத் தருவார். நம்பிக்கை கொள்வோம். தயாராக இருப்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்