முதல் வாசகம்

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-14

அந்நாள்களில் சீனாய் மலையில் ஆண்டவர் மோசேயை நோக்கி, ``இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர். நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக்குட்டியை வார்த்துக்கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, `இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே' என்று கூறிக்கொள்கிறார்கள்'' என்றார். மேலும் ஆண்டவர் மோசேயிடம், ``இம்மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள். இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்'' என்றார். அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, ``ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமை மிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்? `மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக் கூட்டிச் சென்றார்' என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்? உமது கடுஞ்சினத்தை விட்டுவிட்டு உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும். உம் அடியாராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன்; நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே'' என்று வேண்டிக்கொண்டார். அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 106: 19-20, 21-22, 23

பல்லவி: ஆண்டவரே! உமது இரக்கத்திற்கு ஏற்ப என்னை நினைவுகூரும்!

19 அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்;
வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;
20 தங்கள் `மாட்சி'க்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச் செய்துகொண்டனர். -பல்லவி

21 தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்;
எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;
22 காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்;
செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். -பல்லவி

23 ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்;
ஆனால், அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே,
அவர்முன் உடைமதில் காவலர்போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

யோவான் 5:31-47

தவக்காலம் -நான்காம் வாரம் வியாழன்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 31-47

அக்காலத்தில் இயேசு யூதர்களை நோக்கிக் கூறியது: ``என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது. என்னைப்பற்றிச் சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப்பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும். யோவானிடம் ஆள் அனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன். யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள். யோவான் பகர்ந்த சான்றைவிட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும். ``என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார். நீங்கள் ஒருபோதும் அவரது குரலைக் கேட்டதுமில்லை; அவரது உருவைக் கண்டதுமில்iலை. அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை; ஏனெனில், அவர் அனுப்பியவரை நீங்கள் நம்பவில்லை. மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என எண்ணி அதனைத் துருவித் துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே! அம்மறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது. வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை. மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை. நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவர் தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். கடவுள் ஒருவரே. அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்களே! உங்களால் எப்படி என்னை நம்ப இயலும்? தந்தையின் முன்னிலையில் உங்கள்மேல் குற்றம் சுமத்தப்போகிறவன் நான் என நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார். நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள். ஏனெனில் அவர் என்னைப் பற்றித்தான் எழுதினார். அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்பவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

23.03.2023 – யோவான் 5: 31 - 47
உண்மை சான்று

மாய உலகில் போலி சான்றுகள் தான் நிறைய இடங்களில் செயலாற்றிக் கொண்டிருக்கின்றார். ஒருபுறம் இடங்கள் கேட்பாறின்றி இருந்தால், அரசியல் முதலைகள் அதற்கு போலி சான்று தயார் செய்து தன்வயப்படுத்துகின்றனர். இன்னொருபுறம் திறமைசாலிகள் ஒதுக்கப்பட்டு பண பினாமிகளின் பண வலிமையால் போலி சான்றுகள் தயார் செய்து சில முக்கியமான கல்வி இடங்களை ஆக்கிரமித்து கொள்கின்றனர். மற்றொரு பார்த்தோமென்றால் உண்மையாக உழைத்து மக்கள் மத்தியில் என்றும் நீங்காத நினைவலைகளாக வாழக்கூடிய தலைவர்களின் பெயரையோ அல்லது சின்னங்களையோ பயன்படுத்தி இவர்கள் போலி சான்றுகளாக செயல்பட்டு கொண்டிருக்கின்றார்கள். நாகரிகம் வளர பொய், போலி சான்றுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

ஆனால் இயேசுவின் சான்று எப்படிப்பட்டதாக இருந்தது என்பதனைத்தான் இன்றைய வாசகத்தின் வழியாக எடுத்து கூறுகின்றார். இயேசுவுக்கான சான்று திருமுழுக்கு யோவானின் வார்த்தை. எதற்காக சான்று என்றால், யூதர்களுக்கு ஓர் எண்ணம், தன்னை மிஞ்சியவர்கள் யாருமே இருக்க கூடாது. அதனால் தான் மக்களை அடிமைப்படுத்தினார்கள். இயேசு அந்த மக்களை ஆதரிக்கின்றார். அவர்கள் மத்தியில் தான் அநேக புதுமைகளை நிகழ்த்துகின்றார். யூதர்கள் எப்படியாவது இவனை ஒழித்து விட வேண்டும் என்று நினைத்து தான் இத்தகைய புதுமைக்கான இயேசுவின் சான்று என்ன என்று கேட்கின்றனர். அத்தகைய மனநிலையில் தான் பேய் பிடித்தவனை குணமாக்கிய போது பேய்களின் தலைவனை வைத்து பேய் ஓட்டுகிறான் என்றனர். காரணம் அவரை காரணம் காட்டி ஒதுக்குவதற்காக. அதனால் தான் இயேசு திருமுழுக்கு யோவானை உள்ளே நுழைக்கின்றார். காரணம், இயேசுவை பற்றி உண்மையாக அறிந்தவர். எப்படி என்றால் ‘இவரே என் அன்பார்ந்த மைந்தர். இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்’ என்ற தந்தையின் திருமுழுக்கு வார்த்தை. இதன் வழியாக அறிந்து கொள்கின்றார்கள்.

நாம் நமக்குரிய சான்றாக எவற்றை மற்றவர்களுக்கு கொடுக்கின்றோம்? அன்பு? அமைதி? உதவி? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

==============================

(யோவான் 5:31-47)
பதில் தொடர்கின்றது

பரிசேயர்களுக்கான பதில் இன்றைய நற்செய்தியிலும் தொடர்கின்றது. இயேசுவே இறைமகன் என்பதற்கான சான்றுகளைத் தனக்குத்தானே எடுத்துக்காட்டுவதோடு, மற்றவர்கள் அவருக்கு சான்று பகர்ந்தது பற்றியும் எடுத்துரைக்கின்றார். இதில் தந்தைக் கடவுளின் சான்றும், திருமுழுக்கு யோவானின் சான்றும் மிகவும் இன்றியமையாதவை. ஆனால் இச்சான்றுகள் அனைத்தும் வெறும் வார்த்தைகளால் மட்டுமே இருந்தன. அதனால் யூதர்களுக்குக் குறிப்பாகப் பரிசேயர்களுக்கு இயேசுவே இறைமகன் என்று கூறுவது மிகவும் கடினமாக இருந்தது. அச்சான்றுகளை அறியாதவர்கள் பலர். அறிந்தவர்களிலும் உணர்ந்தவர்கள் சிலர். இப்படியிருக்க எப்படி இயேசுவின் சான்றினை ஏற்றுக் கொள்வார்கள்? ஆனால் இயேசு தான் இறைமகன் என்பதனை தன் வார்த்தைகளால் மட்டும் காட்டவில்லை. மாறாகத் தன் செயல்களினாலும் காட்டினார். அவருடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லை. மற்றவர்களைப் போல அவர் சொல்லிவிட்டுச் செல்லவில்லை. மாறாகத் தான் சொன்னது அனைத்தையும் செய்துவிட்டுச் சென்றார்.

காண்க :
“பார்வையற்றோர் பார்க்கின்றனர், ஊனமுற்றோர் நடக்கின்றனர், தொழுநோயாளர் குணமடைகின்றனர், காது கேளாதோர் கேட்கின்றனர், இறந்தவர் உயிர்க்கின்றனர், எளியவர்க்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. (லூக் 7:22) இவை அனைத்தையும் அவர் தம் பணிவாழ்வினை தொடங்கும் முன்பே சொன்னார். சொன்னதைச் செய்தும் காட்டினார்.
“தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” (யோவான் 15:13) இதனைத் தனது வாழ்நாளின் கடைசி நேரத்தில் நமக்காக பலியானார் இயேசு என்பதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.

இவ்வாறு கிறித்து என்பதை அவர் தமது சொல்லினாலும் செயலினாலும் நிரூபித்தார். கிறித்து + அவர்கள் ஸ்ரீ கிறித்தவர்கள். உண்மைக் கிறித்தவர்கள் என்றால் நம் சொல்லினால் மட்டுமல்ல நமது செயல்களும் கிறித்தவர்கள் என்பதற்குச் சான்று பகரட்டும். சான்று பகர இத்தவக்காலம் நமக்கு உதவட்டும்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 106: 19 – 20, 21 – 22, 23
”ஆண்டவரே உமது இரக்கத்திற்கு ஏற்ப என்னை நினைவுகூறும்”

இந்த திருப்பாடல் “அல்லேலூயா” என்கிற வார்த்தையோடு தொடங்கி, அதே வார்த்தையோடு முடிவுறுகிறது. அதாவது, கடவுள் போற்றப்படுவாராக என்பது, இதனுடைய பொருளாக இருக்கிறது. புகழ்ச்சிக்குரிய இந்த இரண்டு வார்த்தைகளுக்கு இடையே, இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராக செய்த பாவங்கள், கடவுளின் பொறுமை தெளிவாக விளக்கப்படுகிறது. மனிதர்களின் பாவங்களும், கடவுளின் அளவுகடந்த இரக்கமும் இந்த திருப்பாடலில் வெளிப்படுகிறது.

இஸ்ரயேல் மக்கள் கடவுளிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றிருந்தனர். நன்மைகளைப் பெற்றதற்கு மாறாக, அவர்கள் கடவுளுக்கு எதிராக பாவச்செயல்களில் ஈடுபட்டனர். படைத்தவரை மறந்தனர். படைக்கப்பட்ட பொருளை வணங்க ஆரம்பித்தனர். அதாவது, உண்மையான தெய்வத்தை விட்டுவிட்டு, தாங்களாகவே படைத்த தெய்வங்களை வணங்க ஆரம்பித்தனர். இறைவன் எகிப்திலிருந்து அவர்களை விடுவித்த அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் மறந்துவிட்டு, தங்கள் மனம்போன போக்கில் வாழ ஆரம்பித்தனர். ஆனாலும், கடவுள் அவர்கள் மட்டில் பொறுமையாக இருந்தார். அவர்களுக்கு இன்னும் அதிக உதவிகளைச் செய்தார். அதுதான் கடவுளின் அன்பு. அதுதான் கடவுளின் இரக்கம்.

நமது வாழ்க்கையில் நாம் எவ்வளவுதான் தவறுகள் செய்தாலும், அந்த தவறுகளை கடவுள் எப்போதும் நினைவில் கொள்ளுவதில்லை. நம்முடைய பாவங்களுக்கு ஏற்ப நம்மை தண்டிப்பதுமில்லை. இவையனைத்துமே, நாம் கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்க்கையை வாழ்வதற்காகத்தான். அதனை முற்றிலும் உணர்ந்தவர்களாக, நமது வாழ்வை அமைத்துக்கொள்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

திருமுழுக்கு யோவானின் போதனை

இன்றைய நற்செய்தியில் இயேசு திருமுழுக்கு யோவானுக்கு புகழ் மகுடம் சூட்டுகிறார். அதே வேளையில் யூதர்களைக் கண்டிக்கிறார். ஏன் யூதர்களை, திருமுழுக்கு யோவானைப் புகழ்ந்து, யூதர்களைக் கண்டிக்கிறார்? திருமுழுக்கு யோவான் மக்களால் இறைவாக்கினராகப் பார்க்கப்பெற்றவர். திருமுழுக்கு யோவான் மக்களுக்கு போதிக்க ஆரம்பித்தபோது, அனைவருமே மகிழ்ச்சியடைந்தனர். ஏனென்றால், இறைவாக்கினர்கள் வாழ்ந்த காலத்திற்கும், திருமுழுக்கு யோவானின் காலத்திற்கும் இடையே மிக நீண்ட இடைவெளி இருந்தது. கடவுளுடைய வார்த்தை தங்களுக்கு கிடைக்கவில்லையே என்கிற ஏக்கம் மக்களுக்கு அதிகமாக இருந்தது. எங்கே கடவுள் நம்மை கைவிட்டு விட்டாரோ? என்ற வேதனை அனைத்து யூதர்களையும் வாட்டியெடுத்தது.

இந்த சூழ்நிலையில் திருமுழுக்கு யோவானின் வருகை, வாழ்வு, போதனை மக்களுக்கு, மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. எனவே, அவர்கள் திருமுழுக்கு யோவானை மிகவும் நேசித்தனர். ஆனால், திருமுழுக்கு யோவான் அவர்களின் வாழ்வில் இருந்த குறைகளைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தபோது, அவர்கள் கோபம் கொள்ளத் தொடங்கினர். அவரை வெறுக்க ஆரம்பித்தனர். சாதாரண மக்கள் அவரை நேசித்தாலும், ஆளும் வா்க்கத்தினர், அதிகார வர்க்கத்தினர் அவரை வெறுக்கத்தொடங்கினர். திருமுழுக்கு யோவானின் உண்மை, அவர்களை சுட்டது.

இன்றைக்கு சொல்லப்படும் போதனைகள், நமது வாழ்வை சுடுகிறபோது, நாமும் நமக்கு போதிக்கக்கூடியவர்களை வெறுப்போடு தான் பார்க்கிறோம். போதிக்கிறவர்களும் எதற்கு தனக்கு தேவையில்லாத வம்பு? என்ற உள்ளம் கொண்டவர்களாய், மக்களைத் தொடாத போதனையையே தந்து கொண்டிருக்கிறார்கள். நமது போதனை மக்களை தொட்டு, அவர்களது வாழ்வை மாற்றுவதாக அமைய வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவின் சாட்சிகளாய் வாழ்வோம்

‘நீர்தான் கடவுளின் மகன் என்பதற்கு என்ன சான்று தருகிறீர்?’ என்று தன்னை மற்றவர்கள் கேட்டதற்கு, இயேசு இன்றைய நற்செய்தியில் பதில் தருகிறார். யூதர்களைப்பொறுத்தவரையில் உண்மை என்று நம்புவதற்கு இரண்டு சாட்சிகள் கட்டாயம் வேண்டும். ஒருவர் தனக்குத்தானே சான்று கூறுவதை, அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இணைச்சட்டம் 17: 6 “இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை முன்னிட்டே, குற்றவாளி கொலை செய்யப்பட வேண்டும்”. இணைச்சட்டம் 19: 15 “ஒருவனது எந்தக்குற்றத்தையும் எந்தப்பழிபாவச்செயலையும் உறுதிசெய்ய, ஒரே சாட்சியின் வாக்குமூலம் போதாது. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே அது உறுதி செய்யப்பட வேண்டும்.” இயேசு இந்த ஒழுங்குமுறையின்படி சான்றுகளைத்தருகிறார்.

இயேசுவின் முதல் சான்று திருமுழுக்கு யோவான்(33) இயேசுவின் இரண்டாவது சான்று தந்தையாகிய கடவுள்(37)மூன்றாவது சான்று மறைநூல். ஆனால், இந்த சான்றுகளையெல்லாம் விட இயேசு அதிக அழுத்தம் கொடுத்து கூறுவது, அவரின் செயல்கள்(36). தனது செயல்களை விட வேறு என்ன பெரிய சான்றை தான் கொடுத்தவிட முடியும்? என்பது இயேசு நேரடியாகச்சொல்லாமல் சொல்கிற செய்தியாக இருக்கிறது. இயேசு செய்த ஒவ்வொரு புதுமைகளும், போதனைகளும், விளக்கங்களும் இயேசு எத்தகையவர் என்பதை உறுதியாக நமக்குக்கூறும் சான்றுகளாகும். தான் கடவுளின் மகன் என்பதற்கும், தான் கடவுளிடம் இருந்துதான் வந்திருக்கிறேன் என்பதற்கும், தான் செய்கின்ற செயல்களைச் சான்றாக இயேசு சொல்கிறார்.

ஒருவரின் செயல்பாடுகளைக்கொண்டே ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிய வருகிறோம். நான் உண்மையிலே திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவன் என்பதை நான் வைத்திருக்கிற திருமுழுக்குச்சான்றிதழை வைத்து அல்ல, என்னுடைய செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து மற்றவர்கள் அறியவேண்டும். இயேசுவின் செயல்கள் அனைத்தும் அவர் கடவுளிடமிருந்து வந்திருக்கிறவர் என்பதை அனைவருக்கும் அறியவைத்தது போல, நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் நாம் ‘கிறிஸ்தவர்கள்’ என்பதை மற்றவருக்கு அடையாளம் காட்ட வேண்டும். அப்படிப்பட்ட வாழ்வு வாழ முயல்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

மூன்று சான்றுகள் !

யூதர்களின் சட்டப்படி ஒருவர் தமக்குத் தாமே சாட்சியாக இருக்க முடியாது. அவருக்குப் பிற சாட்சிகள் தேவை. எனவே, இயேசுவும் யூதர்களின் சட்டத்தை மதித்து, தம்முடைய சான்றுகளை முன்வைக்கிறார்.

1. இயேசுவின் முதல் சான்று திருமுழுக்கு யோவான். அவரைப் பற்றியே இயேசு "என்னைப் பற்றி சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப் பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும். யோவானிடம் ஆள் அனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார்" என்கிறார் இயேசு. திருமுழுக்கு யோவான் ஒரு நேர்மையாளர், இறைவாக்கினர். அவருடைய சான்று ஏற்றுக்கொள்ளத்தக்கது.

2. இயேசுவின் இரண்டாவது சான்று அவரது பணிகள். " நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்". கனிகளைக் கொண்டே மரத்தை எடைபோடலாம் என்னும் இயேசுவின் வாக்கிற்கு, அவரது பணிகளே உரைகல். இயேசுவின் பணிகள் நேர்மையான, உள்நோக்கமற்ற, தந்தைக்குப் பணிந்து அவர் ஆற்றிய பணிகள்.

3. இயேசுவின் மூன்றாவது சான்று மறைநூல். " மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என அதனைத் துருவி துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே. அமமறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது". இறைவார்த்தையின்படியே இயேசு வாழ்ந்தார், இறைவார்த்தை முன்மொழிந்த அனைத்து வாக்குகளையும் அவரது வாழ்வும், பணிகளும் நிறைவேற்றின.

இயேசுவைப் போலவே நமக்கும் மறைநூலும், நமது நேர்மையான பணிகளும், யோவானைப் போன்ற நேர்மையான மனிதர்களும் சான்றுகளாய் இருந்தால், நாம் பேறுபெற்றவர்கள்.

மன்றாடுவோம்: தந்தையின் திருவுளப்படியே பணியாற்றிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போலவே நாங்களும் தந்தை இறைவனின் திருவுளத்திற்குப் பணிந்து, நேர்மையாகப் பணியாற்றி, நேர்மையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று வாழும் வரத்தைத் தந்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

நமது சான்று எது ?

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

தனது பணி இறைவனின் பணிதான் என்பதற்கான சான்றுகளாக இயேசு முன்வைப்பவற்றை இன்று வாசிக்கிறோம். 1. திருமுழுக்கு யோவான். யோவான் “இவரே இறைவனின் செம்மறி” என்று அறிவித்தார். 2. தந்தை ஒப்படைத்த செயல்கள். எளியோருக்கு நற்செய்தி, நோயுற்றோருக்கு நலம், சிறைப்பட்டோருக்கு உரிமை வாழ்வு என்பவை இறைவனால் அனுப்பப்பட்டவரின் செயல்கள். இயேசு அவற்றைச் செய்தார். 3. வானகத் தந்தை. “இவர் என்பார்ந்த மகன். இவருக்கு செவிசாயுங்கள்” என்ற தந்தையின் குரலை பலர் கேட்டிருந்தனர். 4. மறைநூல். இயேசுவின் வாழ்வில் நடந்த பலவும் மறைநூலில் முன்குறித்தபடியே நிகழ்ந்திருந்தன.

யூத முறைப்படி ஒருவருக்கு இரண்டு சாட்சிகள் போதும். ஆனால், இயேசு தனது பணியின் உண்மைத் தன்மையை மெய்ப்பிக்க மறுக்க இயலாத வகையில் நான்கு சான்றுகளை வழங்குகிறார். நாம் இறைவனின் விருப்பப்படியே வாழ்கிறோம் என்பதற்கு என்ன சான்றுகள் இருக்கின்றன என்று இத்தவக்காலத்தில் ஆய்வு செய்வோம்.

மன்றாடுவோம்: நிறைவின் நாயகனாம் இயேசுவே, உம்மைப் Nபுhற்றுகிறோம். மறைநூலின்படியும், இறைத்தந்தையின் விருப்பப்படியும் நீர் வாழ்ந்தீர். பணி செய்தீர். உம்மைப் போல நாங்களும் இறைவார்த்தையின்படி வாழ, சாட்சிகளாய் மாற அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------

 

''மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை'' (யோவான் 5:41)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவின் எதிரிகள் அவர்மீது பலவிதமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். இயேசு எந்த அதிகாரத்தோடு போதிக்கத் துணிந்தார் என்பது அவர்கள் எழுப்பிய ஒரு முக்கியமான கேள்வி. அதற்குப் பதில் அளிக்கும்போது இயேசு தம்முடைய அதிகாரம் தந்தை இறைவனிடமிருந்து வருகிறது என்று கூறுகிறார் (யோவான் 5:31-35). இயேசுவைப் பற்றித் திருமுழுக்கு யோவான் சான்றுபகர்ந்தார் (யோவான் 5:33-36). இயேசு புரிந்த செயல்களே அவர் யார் என்பதை வெளிப்படுத்துகின்றன (யோவான் 5:36-37). மேலும், யூத சமயத்திற்கு மையமாக அமைந்த (பழைய ஏற்பாட்டு) விவிலியம் இயேசுவைப் பற்றி அறிவிக்கிறது (யோவான் 5:39-47). இவ்வாறு இயேசு தம்மைப் பற்றியும் தம் பணிபற்றியும் விளக்கம் தந்தார். அப்போது அவர் கூறியது: ''மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை'' (யோவான் 5:41) என்பதாகும்.

-- மனிதர் சில சமயங்களில் உண்மையின் அடிப்படையில் தீர்ப்பிட மறுக்கிறார்கள்; தம் கண்முன்னால் நிகழ்வதை ஏற்கத் தயங்குகிறார்கள். உண்மையை ஏற்றுக்கொண்டால் அந்த உண்மையின் அடிப்படையில் தங்கள் கருத்துக்களை மாற்றவேண்டிய தேவை எழும் என்பதைக் கண்டு மனிதர் அஞ்சுகிறார்கள். இயேசு இதைத் தம் எதிரிகளுக்குச் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் தங்கள் கடின மனத்தைத் தவிர்த்து, இளகிய மனம் கொண்டவர்களாக மாறினால், அடைபட்ட உள்ளத்தைச் சிறிது திறந்துவிட்டால் உண்மையைக் கண்டுகொள்வார்கள் என இயேசு உணர்த்துகிறார். எனவே, மனிதர் தம் சொந்தக் கருத்துக்களின் அடிப்படையில் இயேசுவை மதிப்பிடுவதற்குப் பதிலாகக் கடவுளின் பார்வையில் இயேசு எந்நிலையில் உள்ளார் என்பதைச் சிறிது கவனித்திருந்தால் இயேசுவைப் பற்றிய உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள். இது இன்றைய மனிதருக்கும் ஒரு சவாலாக உள்ளது. நாம் இயேசுவை எவ்வாறு புரிந்துகொள்கிறோம்? நம் விருப்பு வெறுப்புகளைத் தவிர்த்து, இயேசுவைக் கடவுள் எவ்வாறு கண்டாரோ அவ்வாறே நாமும் காண முயலவேண்டும்.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் திறந்த உள்ளம் கொண்டவர்களாக வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"செயல்களே அச்சான்று"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

யாரையும் தண்டிக்க "இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை முன்னிட்டே, குற்றவாளி கொலை செய்யப்பட வேண்டும்" (இ.ச.17:6) என்பது மோயீசனின் சட்டம். பரிசேயர்களின் உள்ளத்து உணர்வை,அதாவது எப்படியாவது இயேசுவைக் கொன்றுவிட வேண்டும் என்ற உய்த்துணர்ந்த இயேசு,அவர்கள் பெரிதும் போற்றும் மோசேயின் சட்டத்தை எடுத்துச் சொல்லி, அதைச் சான்றுடன் எண்பித்துக் காட்டுகிறார்.

சாட்சி: 1 யூதர்களும் பரிசேயர்களும் பெரிதும் போற்றும் திருமுழுக்கு யோவான்.இயேசுவைப்பற்றிய இவரது சாட்சியம் யோவான் நற்செய்தியில் காணக்கிடக்கிறது. தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன்.1:32"இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.1:29 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன். "1:34

சாட்சி :2 யூதர்கள் வழிபடும் 'யாவே' இறைவனின் சாட்சியம். தந்தை இறைவனின் சாட்சியமாக நற்செய்தி நூல்கள் நான்கும் ஒருவாய்ப்பட ஒலிக்கின்றன். "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" மத்3:17 "இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்"லூக் 9:35

இவை அனைத்தையும் பொருட்படுத்தவில்லையாயினும் நான் செய்யும் என் அன்புச்செயல்கள், தியாகச் செயல்கள், இரக்கச் செயல்கள் இவை சொல்லும் சாட்சியம் போதாதா. தீர்ப்பை எழுதியபின் விசாரணை செய்பவனுக்கு எந்த சாட்சியம் இருந்து என்ன, இல்லாமல் என்ன. இவைகளைத் தவிர்ப்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்