முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 34-42

அந்நாள்களில் கமாலியேல் என்னும் பெயருடைய பரிசேயர் ஒருவர் தலைமைச் சங்கத்தில் எழுந்து நின்றார். இவர் மக்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட திருச்சட்ட ஆசிரியர். திருத்தூதரைச் சிறிது நேரம் வெளியே போகும்படி ஆணையிட்டு, அவர் சங்கத்தாரை நோக்கிக் கூறியது: ``இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். சிறிது காலத்திற்கு முன்பு தெயுதா என்பவன் தோன்றி, தான் பெரியவன் என்று கூறிக்கொண்டு, ஏறத்தாழ நானூறு பேரைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டான். ஆனால், அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப் போகவே, அந்த இயக்கம் ஒன்றுமில்லாமல் போயிற்று. இவற்றுக்குப் பின்பு மக்கள் தொகை கணக்கிடப்பட்ட நாள்களில் கலிலேயனான யூதா என்பவன் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்யும்படி மக்களைத் தூண்டினான். அவனும் அழிந்தான்; அவனைப் பின்பற்றிய மக்கள் அனைவரும் சிதறிப்போயினர். ஆகவே இப்போது நீங்கள் இம்மனிதர்களை விட்டுவிடுங்கள் என நான் உங்களுக்குக் கூறுகிறேன். இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது; நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்.'' அவர் கூறியதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர். பின்பு அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப் புடைத்து, இயேசுவைப் பற்றிப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர். இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள். அவர்கள் நாள்தோறும் கோவிலிலும் வீடுகளிலும் தொடர்ந்து கற்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்தார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 27: 1. 4. 13-14
பல்லவி: ஆண்டவரின் இல்லத்தில் நான் குடியிருக்க வேண்டும்.

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு;
யாருக்கு நான் அஞ்சவேண்டும்?
ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;
யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? -பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்;
அதையே நான் நாடித் தேடுவேன்;
ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்;
ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்;
அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். -பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக்
காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்;
உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.

யோவான் 6:1-15

பாஸ்கா காலம்-இரண்டாம் வாரம் வெள்ளி

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15

அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, ``இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?'' என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக, ``இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே'' என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, ``இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?'' என்றார். இயேசு, ``மக்களை அமரச் செய்யுங்கள்'' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், ``ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்'' என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், ``உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே'' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 6: 1 - 15
பகிர்வுள்ளவர்களாய்

பகிர்வு இருக்கின்ற இடத்தில் பரமனின் உடனிருப்பு உண்டு என்பார் ஔவையார். மிகப்பெரிய செல்வந்தர்கள் பெரிய கொடையாளிகளாகவும் இருந்திருக்கின்றனர். Rockfeller என்ற அமொிக்கரும் ANDREW CARNEGIE என்ற ஸ்காட்டிஷ்காரரும் உதாரணமாக விளங்குகின்றனர். சமகாலத்து தொழிலதிபர்களான இருவரும் ஒன்று போல செல்வம் தேடுவதையும் பகிர்வதையும் பற்றி கூறுகின்றனர். கலை, இசை போல மருத்துவரது செவிலியரது திறன் போல செல்வம் தேடும் திறன், அதனை மற்றவர்களோடு பகிர்வது கடவுள் எனக்கு கொடுத்த வரம் என்று Rockfeller கூறுகின்றார். அது போல பணம் பண்ணுவதே பகிர்வுக்காக தான் என்று ANDREW CARNEGIE கூறுகின்றார். சென்ற தலைமுறை செல்வந்தர்கள் கொடுத்த கொடையினால் உருவான சுகாதார நிலையங்கள், இன்று சுகாதரதுறை தந்தை, மருத்துவ தந்தை என்று பெயரிட முடியாத மனிதர்களுக்கு சூட்டுகின்றார்கள்.

ஆனால் இயேசுவின் பகிர்வுதன்மை 5 ஆயிரம் மக்களின் வயிற்று பசியை போக்குவதை நாம் பார்க்கின்றோம். ஏனென்றால் அப்பம் பலுகுதல் புதுமை தொடக்க கால திருச்சபையில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றிருக்க வேண்டும். இதற்கு உதாரணம் தான் மேலே நாம் பார்த்த இரண்டு செல்வந்தர்கள். இந்த நிகழ்வில் இயேசு மக்களிடையே ஏற்கெனவே இருந்த சிறிய உணவுப் பொருட்களைப் பெற்று தான் மாபெரும் அளவுக்கு உணவை ஏற்பாடு செய்கிறார். மக்களிடையே பகிர்வு முறை இருந்ததால் பற்றாக்குறை நீங்குகிறது. இவ்வாறு அன்பு, பரிவு, பகிர்வு, நட்புறவு பகிரப்படுகின்றபோது, மானிட நல்லிணக்கம் வளரும். இந்த அப்பம் பகிர்தல் புதுமை இன்றைய சமுதாயத்தில் தொடர வேண்டும் என்பது இயேசுவின் இறையாட்சி கனவு.

நான் என்னிடம் இருப்பதை பகிர்கின்றேனா? பகிர்வதன் வழியாக படைத்தவனை காண முயல்கிறேனா? சிந்திப்போம்.

அருட்பணி. பிரதாப்

===========================

நம் அருகில் (யோவான் 6 : 1-15)

கலிலேயக் கடலை ‘இயேசுவின் கடல்’ என்பர். காரணம் இதையடுத்த பகுதிகளில் தான் இயேசு அதிகமாகப் போதித்து வந்தார். இங்கே தான் ஏராளமான மக்கள் தம்மை மறந்து, தம் உணவை மறந்து இறைவார்த்தையாகிய ஆன்மீக உணவில் ஆர்வம் கொண்டனர். அவர்களிடம் கேட்காமலே இயேசுவாக முன்வந்து அவர்களுக்கு உதவுகிறார்.

தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் இவ்வுலகினையே அழித்திடுவோம் என்ற பாரதியின் வரிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இயேசுவின் மனதில் இருந்தது. அதனை செயல்படுத்தியுமிருந்தார். நாற்பது நாள் நோன்பிற்குப் பிறகு பசியின் கொடுமையை இயேசு நன்கு அறிவார். எனவே புதுமை செய்து பசியை போக்க முடிவெடுத்து விட்டார். இயேசுவின் மனிதப் பண்பையும் இரக்கப் பெருக்கத்தையும் நாம் இங்கே காண்கிறோம். எமது கடவுள் எமக்கு எட்டாத தூரத்தில் இல்லை. எம் அருகில், எம் மத்தியில் இருக்கிறார் என்ற உண்மையை உணர்கிறோம். பசியாய் இருந்தவர் இன்று மக்களின் பசியைப் போக்குகின்றார். இறையாற்றலின் நிகழ்வுகளைக் கண்ட மக்கள் ‘புதுமை புதுமை’ எனப் புகழ் பாடுகின்றனர். ஆனால் இறைவனின் ஆற்றலும், தெய்வீகப் பராமரிப்பும் நாள்தோறும் நடைபெற்று வருவதை நாம் மறந்து விடுகிறோம். ஒவ்வொரு நிமிடமும், அவர் நம்மருகில் இருக்கும் பொழுதும், நாம் அவரை முழுவதுமாக நம்பும் பொழுதும் அவர் நமக்கு பல்வேறு புதுமைகளை செய்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 27: 1, 4, 13 – 14
”நெஞ்சே ஆண்டவருக்காகக் காத்திரு”

ஒருவரின் உள்ளத்தில் கவலையும் கலக்கமும் எழுகிறபோது, பலவிதமான கேள்விகள் உள்ளத்தில் தோன்றுகிறது. கடவுள் இருக்கிறாரா? அப்படி இருந்தால் இவ்வளவு கவலைகள் நமது வாழ்க்கையில் வருமா? இந்த கேள்விகள் எல்லாருக்கும் தோன்றாது. மாறாக, கடவுளுக்கு பயந்து வாழக்கூடிய ஒரு சிலருடைய வாழ்வில் நிச்சயம் இது தோன்றும். இந்த கேள்விகள் எழக்கூடிய தருணங்கள் கடினமான, கடுமையான தருணங்கள். காரணம், நம்பிக்கை இழக்கக்கூடிய தருணங்களில் மற்றவர்களின் வழிகாட்டுதல் இல்லையென்றால், அது கடவுள் நம்பிக்கையோ சீர்குலைத்துவிடும்.

இப்படிப்பட்ட மோசமான தருணத்தில் தான், திருப்பாடல் ஆசிரியரும் இருக்கிறார். அவருடைய உள்ளத்தில் பலவிதமான கேள்விகள் தோன்றுகிறது. அவைகளுக்கு அவரால் பதில் சொல்லி சமாளிக்க முடியவில்லை. என்ன செய்வது? எப்படி இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வது என்கிற ஏக்கம் அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுவதை நம்மால் உணர முடியும். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலாக அவர், ”காத்திரு” என்கிற பதிலை கண்டுபிடிக்கிறார். தன்னுடைய உள்ளத்தை பொறுமையாகக் காத்திருக்கச் சொல்கிறார். எப்படியும் கடவுள் தனக்கு மிகச்சரியான பதிலை வழங்குவார். அதுவரை நான் காத்திருக்க வேண்டும் என்று தன்னுடைய உள்ளத்திற்கு கட்டளையிடுகிறார்.

நம்முடைய வாழ்க்கையில், நாம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு உடனடியாக கடவுள் பதில் தர வேண்டும் என்று நினைப்பது சரியான பார்வையாக இருக்காது. பொறுமையாக காத்திருக்க வேண்டும். கடவுள் நிச்சயம் நமக்கு உதவி செய்வார் என்கிற, நம்பிக்கையோடு காத்திருக்கிறபோது, அதற்கான பதிலை நாம் நிச்சயம் பெற்றுக்கொள்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------

பரந்துபட்ட உள்ளம்

இயேசு அப்பங்களைப் பலுகச்செய்கிற புதுமையில் ஒரு சிறுவனின் செயல் பாராட்டுதற்குரியதாக இருக்கிறது. ஒட்டுமொத்த மக்கள்கூட்டத்திற்கும் அவனிடத்தில் இருந்த குறைந்த அப்பங்கள் போதாதுதான். ஆனால், அவன் கொண்டு வந்த உணவுதான், அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது. ஒருவேளை அந்த சிறுவன் அங்கே இல்லாமல் இருந்திருந்தால், வரலாற்றில் ஒரு புதுமை நடைபெறாமல் போயிருக்கலாம். இந்த புதுமை நமக்கு அருமையான செய்தியையும் தருகிறது.

நம்மிடம் இருப்பதை கடவுளிடம் நாம் கொண்டு வர வேண்டும். ஒருவேளை அது குறைவானதாக இருக்கலாம். ஆனால், நல்ல மனதோடு நாம் கடவுளிடத்தில் கொண்டு வருகிறபோது, கடவுள் அவற்றை பலுகச்செய்து, ஆசீர்வதிப்பார். இன்றைக்கு புதுமைகள் நடக்காமல் இருப்பதற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம். நம்மிடம் இருப்பதை நாம் மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணங்கள், மக்கள் நடுவில் பெருகிவிட்டது. அந்த சிறுவனும் இதேபோல் நினைத்திருந்தால், அங்கிருக்கிற மக்கள் கூட்டம் தங்களது பசியைப் போக்கியிருக்க முடியாது. அந்த சிறுவனின் பரந்துபட்ட உள்ளம், இருப்பதை கடவுளிடம் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணம், இழப்பதில் மகிழ்ச்சி என்கிற சிந்தனை, மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வருகிறது.

நமது வாழ்விலும் நாம் கடவுளுக்கு கொடுப்பதற்கு தாராள உள்ளத்தைப் பெற வேண்டும். எவ்வளவு கொடுக்கிறோம் என்பது அல்ல, மாறாக, எத்தகைய உள்ளத்தோடு நாம் கொடுக்கிறோம் என்பதுதான், கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. அந்த நேர்மையான உள்ளத்தை, திறந்த உள்ளத்தை, பரந்துபட்ட உள்ளத்தை கடவுளிடம் கேட்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவிடம் அழைத்து வருவோம்

இயேசு கப்பர்நாகுமிலிருந்து கலிலேயா கடற்கரையின் மறுபக்கத்திற்குச் செல்கிறார். இரண்டுக்கும் இடையிலான கடற்பயண தூரம் ஏறக்குறைய நான்கு மைல்கள். இயேசு செல்லக்கூடிய இடம் மக்களுக்குத் தெரிந்தவுடன் அவர்கள் கால்நடையாக செல்ல ஆரம்பிக்கின்றனர். அவர்கள் அங்கே கால்நடையாகச் செல்வதற்கு சுமார் 9 மைல்கள் நடக்க வேண்டும். ஆனால், இயேசு அங்கு வந்து சேர்ந்தவுடன் அவர்களும் கூட்டம், கூட்டமாக வரத்தொடங்கினார்கள். இதிலிருந்து, எந்த அளவுக்கு மக்கள் இயேசுவைப் பார்க்க வேகமாக தங்கள் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

இன்றைய நற்செய்தியில் பேதுருவின் சகோதரர் அந்திரேயாவின் பணி பாராட்டுதற்குரியது. நாம் நமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பணி ஆகும். அவர்தான், சிறுவன் ஒருவனை இயேசுவுக்கு அறிமுகப்படுத்துகிறார். அந்திரேயாவிற்கு அந்த சிறுவனை இயேசுவிடத்தில் அறிமுகப்படுத்துகிறபோது, என்ன நடக்கும்? என்பது தெரியாது. ஆனால், ஏதாவது செய்வதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்று அறிமுகப்படுத்துகிறார். அறிமுகப்படுத்துதல் ஒரு முக்கியமான பணி. நாம் ஒருவரை இயேசுவிடத்தில் கூட்டி வருகிறபோது, அவர் வழியாக கடவுள் செய்யவிருக்கிற அற்புத செயல்கள் நாம் அறியாமல் இருக்கிறோம். ஆனால், கடவுள் வல்ல செயல்கள் செய்வதற்கு அவரையே பயன்படுத்தலாம், அந்த சிறுவனைப்பயன்படுத்தியது போல.

இயேசுவிடம் மற்றவர்களைக் கூட்டி வருவதற்கு நம் அனைவருக்குமே பொறுப்பிருக்கிறது. அது குறிப்பிட்ட பணியாளர்களுக்கு மட்டுமல்ல. திருமுழுக்கு பெற்றிருக்கிற அனைவருக்குமே இருக்கிறது. இயேசுவை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துகிற நற்செய்திப்பணியை நாம் அனைவரும் செய்வோம். நற்செய்தி அறிவிப்பில் நம்மையே ஈடுபடுத்துவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கடவுளுக்கு நாம் செவிமடுப்போம்

இயேசு மக்களுக்கு அப்பங்களைப் பகிர்ந்து கொடுக்கிறார். இயேசுவின் புதுமை செய்யும் ஆற்றலைப்பார்த்த மக்கள், ”உலகிற்கு வரவிருநத உண்மையான இறைவாக்கினர் இவரே” என்று இயேசுவைப் புகழ்கிறரர்கள். எதற்காக இயேசுவை மக்கள் இறைவாக்கினராகப் பார்க்கத் தொடங்கினார்கள் என்பதற்கு இணைச்சட்ட நூல் ஓர் ஆதாரத்தைத் தருகிறது. ”உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு”(18: 15). இந்த இறைவார்த்தை இயேசுவில் உண்மையாவதை மக்கள் பார்க்கத் தொடங்கினார்கள்.

அந்த நேரத்தில் அவர்கள் இயேசுவை தாங்கள் எதிர்பார்த்த மெசியாவாக ஏற்றுக்கொள்ளத்தொடங்கினார்கள். ஆனால், சிலநாட்களில், அதே மக்கள், ”அவனைச்சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என்று கத்தத்தொடங்கினார்கள். ஏன் மக்கள் மனதில் உடனடி மாற்றம்? அதற்கான காரணம் இதோ: இயேசு நோயுற்றவர்களைக் குணமாக்கியபோதும், முடவர்களை நடக்கச்செய்தபோதும், செவிடர்களைக் கேட்கச்செய்தபோதும், இயேசுவை மெசியாவாகத்தான் மக்கள் நினைத்தனர். ஆனால், தங்கள் விருப்பப்படிதான் இயேசு இருக்க வேண்டும் என்றும் , தங்களது எண்ணத்திற்கேற்ப இயேசு இருக்க வேண்டும் என்றும் கடிவாளம் போட ஆரம்பித்தபோது, அதற்கு இயேசுவின் போக்கு இசைவு கொடுக்காததால் அவரைக் கொன்றுவிட முடிவு செய்தனர்.

கடவுளை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது. கடவுளுடைய எண்ணத்தின்படி நாம் தான், நமது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். அவருக்கு எதிராக நாம் செல்கிறபோது, அது தோல்வியில்தான் முடியும். இந்த உண்மையை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இறைவன் நமது வானகத்தந்தை

சில நேரங்களில் இயேசு மக்கள் கூட்டத்தினரிடமிருந்து விலகி இருந்த நிகழ்ச்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அதற்குக்காரணம், மக்களை ஒதுக்குவது அல்ல, மாறாக, சீடர்களைப் பக்குவப்படுத்துவதற்கும், செபத்தில் நேரத்தில் செலவிடுவதற்கும் தான். ஆனாலும், அதையும் மீறி பல சமயங்களில் மக்கள் பணியே கடவுளின் பணியாகச்செய்து மிகச்சிறந்த எடுத்துக்காட்டினையும் நமக்கு காட்டியிருக்கிறார். இன்றைய நற்செய்தியிலே, யூதர்களின் பாஸ்கா விழா அண்மையிலிருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே பெரும்பாலும், யெருசலேமுக்கு திருயாத்திரையாகச்செல்லும் திருப்பயணிகள் அந்த வழியாக வரும்போது, இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டிரு;ததால், அவரைப்பார்க்க அங்கே கூடியிருக்கலாம். எது எப்படியிருந்தாலும், அங்கே மிகப்பெரிய கூட்டம் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இயேசுவும் மக்களும் திரளாக இருந்த பகுதி பெத்சாய்தா.

இயேசு மக்கள் கூட்டத்திடம் பரிவுகொண்டு, பிலிப்பிடம் அவர்களுக்கு ஏதாவது கொடுக்க முடியுமா? என்று கேட்கிறார். பிலிப்பிடம் இயேசு கேட்பதற்கு காரணம், அவர் பெத்சாய்தாவைச் சேர்ந்தவர். அவருக்கு அங்குள்ள நிலைமை நன்றாகத்தெரியும். எனவேதான் அவரிடம் கேட்கிறார். பிலிப்பின் பதில் எதிர்மறையாக இருக்கிறது. இயேசு மக்களை அமரவைத்து, அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கிறார். இங்கே இயேசு ஒரு குடும்பத்தலைவர் செய்கிற பணியைச்செய்கிறார். பொதுவாக, யூதக்குடும்பங்களில் தந்தைதான் குடும்பத்தலைவர். முக்கிய திருவிழாக்களில் அவர்தான் இறைவேண்டல் செய்வார். இயேசு இங்கே இறைவேண்டல் செய்வதன் மூலம் தன்னை மக்கள் அனைவருக்கும் தந்தையாக உருவகப்படுத்துகிறார். அவர்களின் வாழ்விற்கு பொறுப்பேற்கிறார்.

இறைவன் நமது வானகத்தந்தை. நாம் அவருடைய பிள்ளைகள். தந்தைக்கு தன்னுடைய பிள்ளைகளுக்குச்செய்ய வேண்டியது நன்றாகத்தெரியும். எதை, எந்தநேரத்தில், எப்படி செய்ய வேண்டும் என்பதில், தந்தைக்கு நிகர் தந்தைதான். பிள்ளைகளின் வளர்ச்சியில் அதிக அக்கறை எடுத்து அன்பு செலுத்தும் தந்தையாகிய கடவுளைப்பெற்றிருக்கிற நாம் எதற்கும் அஞ்சத்தேவையில்லை. தந்தையின் அருகில் இருக்கும் பிள்ளைகள் அஞ்சாது இருப்பதுபோல, நாமும் இறைவன் நமது விண்ணகத்தந்தை என்ற மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

உணவைப் பெருக்கும் உயிர்த்த ஆண்டவர்!

இயேசு ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு உணவளித்த இந்த அற்புத நிகழ்வை அனைத்து நற்செய்தியாளர்களும் பதிவு செய்திருக்கிறார்கள்.

யோவானின் நற்செய்தியாளரின் இந்தப் பதிவு இயேசுவின் உயிர்ப்புக் காலத்துக்குப் பொருத்தமான நற்செய்திப் பகுதியாக அமைந்துள்ளது. இயேசுவின் உயிர்ப்பு அச்சத்தை, கலக்கத்தை, கண்ணீரை, கவலையை, நம்பிக்கையின்மையைப் போக்கிய அற்புத நிகழ்வு என்பதைக் கடந்த வாரம் முழுவதும் தரப்பட்ட நற்செய்திப் பகுதிகளில் கண்டோம்.

அப்பங்களைப் பலுக்கிய நிகழ்வு இயேசு பசியைப் போக்கி, நிறைவு தருபவர் என்ற செய்தியை நமக்கு வழங்குகிறது. மக்களின் ஆன்மீகப் பசியைப் போக்க விரும்பிய இயேசு முதலில் அவர்களின் உடற் பசியைப் போக்குகிறார். உடற் பசியைப் போக்கிய அந்த அப்பமே, ஆன்மீகப் பசி போக்கும் நற்கருணையின் முன் அடையாளமாக விளங்கியது.

இன்றைய திருப்பலியில் நாம் பெறும் நற்கருணை உணவு, நமது பசியைப் போக்கி, மனநிறைவு தருவதாக!

மன்றாடுவோமாக: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். பசியால் வாடிய மக்களின் பசி போக்கி, நிறைவு செய்த நீர் நற்கருணை என்னும் விருந்தால், எங்களின் உடல், உள்ள, ஆன்ம பசியைத் தணிப்பீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

வரவிருந்தவர் இவரே!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு ஐந்து அப்பங்களைக் கொண்டு, ஐயாயிரம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு உணவளித்த நிகழ்வை நாம் எத்தனையோ முறை வாசித்திருக்கிறோம். தியானித்திருக்கிறோம். எனவே, இன்று நாம் இந்த நிகழ்வை இன்னொரு கோணத்தில் பார்ப்போம். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், #8220;உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றார்கள். இயேசுவே மெசியா, வரவிருந்தவர், இறைவனால் அனுப்பப்பட்டவர் என்பதை இயேசு பல வழிகளில் வெளிப்படுத்தினார். அவரது அதிகாரம் நிறைந்த போதனை, அவரது பரிவு, அவரது நற்செய்தி அறிவிப்புப் பணிரூhநடடip; இவை அனைத்துக்கும் சிகரமாக அவரது வல்ல செயல்கள். அனைத்தும் அவரை வரவிருந்தவராக, தந்தையால் அனுப்பப்பட்டவராக அடையாளம் காட்டின.

நம்முடைய வாழ்வில் இயேசுவின் அடையாளத்தை நாமும் பல வழிகளில் காணவேண்டும். சிறப்பாக, இயேசு தன்னையே உணவாகத் தரும் நற்கருணை விருந்தில்; அவரை மெசியாவாகக் கண்டுகொள்வோமாக!

மன்றாடுவோம்: இறைவாக்;கினரான இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தீரே. இன்றும் எண்ணிலடங்கா மக்களுக்கு உம்மையே உணவாகத் தருகிறீரே. உம்மைப் போற்றுகிறோம். நற்கருணை விருந்தில் உம்மை இறைவனாக, ஆண்டவராகக் கண்டு ஆராதிக்க அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

----------------------

வயிறார உண்டனர் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இறைவனின் பண்புகளுள் ஒன்று அவர் நிறைவானவர், நிறைவளிப்பவர். விவிலியத்தின் பல பக்கங்கள் இந்த உண்மையை எடுத்துரைக்கின்றன. இன்றைய நற்செய்தி வாசகமும் இதைத் தெளிவாகச் சொல்கிறது. பாலை நிலத்தில் பசியோடு இருந்த மக்களுக்கு இயேசு அற்புதமான வகையில் உணவளிக்கிறார். எப்படிப்பட்ட முறையில்? அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டனர் என்று வாசிக்கிறோம்.

இறைவனின் ஆசிகள் எப்போதும் அப்படித்தான். அமுக்கிக் குலுக்கி சரிந்து விழும்படியாக நம் மடிமீது போடுபவர் (லுhக் 6;38) இறைவன். நாம வேண்டுவதற்கும், விரும்புவதற்கும் மேலாகவே நம்மை ஆசிர்வதிப்பவர் நம் இறைவன் (எபே 3;20). அவர் நிறைவான, முழமையான அமைதியை, ஆசிர்வாதத்தை நமக்குத் தர விரும்புகிறார். நாம் நிறைவான வாழ்வு வாழ நம்மை அழைக்கிறார்.

எனவே, அழிந்துபோகும் உணவுக்காக உழைக்காமல், அழியாத வாழ்வு தரும், நிறைவான உணவாம் இயேசுவுக்காக நாம் ஏங்குவோமா!

மன்றாடுவோம்; நிறைவின் உருவே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். அன்று பாலை நிலத்தில் உமது வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு நீர் வயிறார உணவளித்தீரே. வேண்டிய மட்டும் அளித்தீரே. உமக்கு நன்றி. எனது வாழ்விலும் நாம் வேண்டியதற்கும், நினைத்ததற்கம் மேலாகவே என்னை ஆசிர்வதித்திருக்கிறீர். உயர்த்தியிருக்கிறீர். உமக்கு நன்றி. நிறைவற்ற பொருள்கள்மீது பற்று கொள்ளாமல், நிறைவான இன்பமாம் உம்மையே பற்றிக்கொண்டு வாழ எனக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

''மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச்
சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்'' (யோவான் 6:13)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- அப்பம் பலுகிய நிகழ்ச்சிக்கும் நற்கருணையை இயேசு ஏற்படுத்தியதற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதையும் யோவான் காட்டுகிறார். ''இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், 'ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்' என்று தம் சீடரிடம் கூறினார்'' (யோவா 6:11-12) என்று யோவான் குறிப்பிடுகிறார். இங்கே இயேசு அப்பத்தை ''எடுத்தார்'' எனவும், கடவுளுக்கு ''நன்றிசெலுத்தினார்'' எனவும், ''பகிர்ந்தளித்தார்'' எனவும், மக்களுக்கு ''வேண்டிய மட்டும் இருந்தது'' எனவும், ''எஞ்சிய துண்டுகள் சேர்த்துவைக்கப்பட்டன'' எனவும் வருகின்ற சொற்றொடர்களை நாம் கருதலாம். இச்சொற்றொடர்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய பிற நற்செய்தி நூல்களில் இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்ச்சி தொடர்பாக வருகின்ற தகவல்களை உள்ளடக்கியவை என நாம் அறிகிறோம்.

-- உணவு உண்ணும்போது தட்டிலோ இலையிலோ மீதி வைக்கக் கூடாது எனவும் உணவை வீணடிக்கக் கூடாது எனவும் குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுக்கொடுப்பர். ஆனால் இன்றும் பல இடங்களில் பலர் உணவைத் தூர எறிந்து வீணடிப்பது வழக்கமாயுள்ளது. இயேசு ஐயாயிரத்திற்கு மேலான மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவளித்தபின் ''பன்னிரு கூடை'' நிறைய அப்பம் எஞ்சியது. பன்னிரண்டு என்னும் எண் பன்னிரு குலங்களை உள்ளடக்கிய இஸ்ரயேல் மக்களைக் குறித்ததால் இங்கே எல்லா மக்களுக்கும் பயன்படும் வண்ணம் உணவு சேமிக்கப்படுவதை யோவான் குறிப்பிடுகிறார். எஞ்சியிருந்த அப்பம் ஏழைகளுக்கு உணவாக மாறும். நாம் உண்டோம், நிறைவடைந்தோம் என்றிராமல் பிறருடைய பசியை ஆற்றுவதற்கு நாம் அப்பத்தைச் சேர்க்க வேண்டும். கடவுள் தருகின்ற எந்தக் கொடையும் மக்களின் பயன்பாட்டுக்கு உரியதே ஒழிய வீணடிக்கப்படுவதற்கு அல்ல. இயேசு தம்மையே உணவாகத் தருகின்ற நற்கருணையும் இந்த உலகத்தின் பசியைப் போக்க நமக்குத் தூண்டுதலாக அமைய வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, மக்களின் பசியை ஆற்றிட நீர் வழங்கும் கொடைகளை நாங்கள் வீணடிக்காமல் பயன்படுத்த அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார்.
அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது'' (யோவான் 6:11)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளர்களும் இயேசு புரிந்த பல அருஞ்செயல்களைப் பதிவுசெய்துள்ளனர். ஒரு நற்செய்தியாளர் குறிப்பிடும் அருஞ்செயல் பிற நற்செய்தியாளர்களால் குறிப்பிடப்படாமல் இருக்கலாம். ஆனால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அற்புதமான விதத்தில் இயேசு உணவளித்தார் என்னும் அருஞ்செயல் மட்டுமே நான்கு நற்செய்தியாளர்களாலும் தவறாமல் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது (மத் 14:13-21; 15:32-38; மாற் 6:31-44; 8:1-10; லூக் 9:10-17; யோவா 6:1-15). இயேசு அப்பங்களை ''எடுத்தார்''; ''கடவுளுக்கு நன்றி செலுத்தினார்''; ''மக்களுக்குக் கொடுத்தார்'' என இந்நிகழ்ச்சியை யோவான் விவரிப்பது அன்றைய கிறிஸ்தவ சமூகத்தில் நிகழ்ந்த ''நற்கருணைக் கொண்டாட்டம்'' நிகழ்ந்த முறையை அழகாக எடுத்துக்கூறுகிறது.

-- இயேசு புரிந்த அருஞ்செயலைக் கண்ட மக்கள் இயேசுவே கடவுளால் தரப்பட்ட உணவு என்பதைக் கண்டுகொள்கிறார்கள். எனவே, அவர்கள் ''உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் இவரே'' என அறிக்கையிடுகிறார்கள் (காண்க: யோவா 6:14). இயேசு மக்களுக்கு உணவளித்தது அவர் தம்மையே நமக்கு உணவாக அளித்ததற்கு அடையாளம் ஆயிற்று. இன்று நாம் கொண்டாடுகின்ற நற்கருணை இவ்வுலகில் பசியால் வாடுகின்ற மக்களுக்கு உணவளிக்க வேண்டிய கடமையை நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறு கடவுள் நமக்கு வெளிப்படுத்துகின்ற அன்பு நம் வாழ்வில் பிறரன்பாகப் பரிணமிக்க வேண்டும் என்பதும் பெறப்படுகிறது. நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது ''வார்த்தை வழிபாடு'' என்னும் பகுதியும் ''திருவிருந்து வழிபாடு'' என்னும் பகுதியும் உண்டு. இந்த இரண்டு பகுதிகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இயேசு கடவுளின் ''வார்த்தை''யாக நம்மிடையே வந்தார். அவரே கடவுளின் ''வார்த்தை''யை நமக்கு அறிவித்தார். அதே நேரத்தில், இயேசு தம்மையே நமக்கு ''உணவாக'' அளித்தார். ஆக, இயேசுவின் வார்த்தையும் அவருடைய உடலும் நமக்கு உணவாக உள்ளன. இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர் அவரிடமிருந்து வாழ்வு பெறுவர்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனை எங்களுக்கு உணவாக அளித்ததற்கு நன்றி!

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"200 தெனாரியத்திற்கு வாங்கினாலும் சிறு துண்டும் கிடைக்காதே"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

பிரச்சனைகளுக்குத் தீர்வு பணத்தால் கிடைத்து விடுவதல்ல. அல்லது அறிவுத் திறமையால் சாதித்துவிடுவதும் அல்ல. பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் பணத்தை வைத்து தீர்க்கப் பார்க்கிறோம். பத்துப்பேரை வைத்து சாதிக்கலாம் என நினைக்கிறோம். ஆண்கள் மட்டும் ஏறக்குரைய 5000 பேர்,பெண்கள் குழந்தைள் வேறு. இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு, அதுவும் மூன்று நாட்கள் பசியாக இருக்கும் கூட்டத்திற்கு ஒரு வனாந்தரத்தில், அக்கம் பக்கம் ஆள் அரவம் இல்லாத இடத்தில்,உணவு கொடுக்க வேண்டும். இது பெரிய பிரச்சனை.

பணத்தால் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முற்பட்டால்,திருத்தூதர் பிலிப்பு சொன்னதுபோல இரு நூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காது. இரண்டாவதாக, பணத்தை வைத்து அல்லது பணத்தைக் கொடுத்து, சோறு போட்டு, முட்டை கொடுத்து, சைக்கிள், தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்து செய்யும் முயற்சிகள் எல்லாம் பிரச்சனைகளுக்குத் தீர்வு தருவதல்ல. பிரச்சனைகளைப் பின் விழைவுகளோடு பெரிதாக்குபவை.

ஆகவே திருத்தூதர் அந்திரேயா காட்டிய வழியே சரியானது. "இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வார்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன" என அடையாளம் காட்டி, அனைவரின் பங்களிப்புக்கும் அடித்தளமிடுகிறார். கடவுளுக்கு நன்றி செலுத்தியதன் வழியாக ஆன்மீகத்தை கூட்டத்துள் ஏற்படுத்தி, அனைவரையும் தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளும் பண்பாளர்களாக்குகிறார். பசி பிரச்சனை பறந்தோடுகிறது. ஆகவே ஆன்மீகத்தை அனைத்துப் பிரச்சனையினுள்ளும் அனுமதிப்போம். தீர்வு காண்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்