இறந்த விசுவாசிகள் நினைவு நாள்
நவம்பர் 2

முதல் வாசகம்:

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25:6-9

படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் திகிலைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்;;தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார். அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்; இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம். "

இது ஆண்டவரின் அருள்வாக்கு

பதிலுரைப் பாடல் திருப்பாடல் 23:1-3, 4, 5, 6

பல்லவி: இருள் சூழ்ந்த பள்ளத் தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் தீமையானதெதெற்கும் அஞ்சேன்.

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்;
அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்;
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; -பல்லவி

4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;
உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்;
என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;
எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்
உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்;
நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி

இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான், நடக்க நேர்ந்தாலும்
தீமையான தெதற்கும் அஞ்சேன்

1. என் ஆயன் ஆண்டவர் எனக்கென்ன குறைவு
பசும்புல் மேய்ச்சலில் என்னை இளைப்பாறச் செய்கின்றார்
என் களைப்பை ஆற்றுகின்றார்
எனக்கு புத்துயிர் ஊட்டுகின்றார்

2. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்
தீமையானதெதற்கும் அஞ்சேன்
ஏனெனில் நீர் என்னோடு இருக்கின்றீர்
உமது கோலும் கைத்தடியும் எனக்கு ஆறதலாய் உள்ளன

3. என் எதிரிகள் காண நீர் எனக்கு விருந்தொன்றைத் தயாரிக்கின்றீர்
என் தலைக்கு எண்ணெய் பூசீனீர்
என் கிண்ணம் நிரம்பி வழிகின்றது
என் கிண்ணம் நிரம்பி வழிகின்றது

4. கருணையும் அருளும் என்னைத் தொடரும்
என் வாழ்நாளெல்லாம் என்னைத் தொடரும்
ஆண்டவர் தம் இல்லத்தில் நான் குடியிருப்பேன்
ஊழி ஊழிக் காலமும் குடியிருப்பேன்

 

இரண்டாம் வாசகம்:

தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1:5-11

அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார். ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப்பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! அது மட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.

இது ஆண்டவரின் அருள்வாக்கு

நற்செய்திக்குமுன் வாழ்த்தொலி :
அல்லேலுயா அல்லேலுயா "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்;" -அல்லேலுயா

யோவான் 6:37-40

நவம்பர் 2
சகல ஆத்துமாக்கள் திருநாள்

+தூய யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 37-40

தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்; ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்;ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன். "அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்" என்று கூறினார்

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

-------------------------

வாழ்ந்தாலும், இறந்தாலும்... !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று இறந்த விசுவாசிகளின் நினைவைக் கொண்டாடுகிறோம். வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கு உரியவர்கள் என்னும் பவுலடியாரின் வாக்கின்படி, இறந்தாலும் இவர்கள் இறைவனுக்கும், நமக்கும் உரியவர்கள் என்னும் நம்பிக்கையுடன் இறந்த விசுவாசிகளுக்காக இன்று சிறப்பாக மன்றாடுகிறோம்.

இறந்த விசுவாசிகளுக்காக மன்றாடும் பழக்கம் காலம் காலமாக திருச்சபையில் இருந்துவந்தாலும், அறிவியலாளர் ஐன்ஸ்டீனின் வருகைக்குப் பின் இந்த நம்பிக்கை அறிவியல் வழியாகவும் வலுப்பெற்றிருக்கிறது. இது ஒரு வியப்பான தகவல்தான். ஐன்ஸ்டீன் கிறித்தவர் அல்லர், ஒரு யூதர். இருந்தபோதிலும், அவரது ஒப்புமைக் கொள்கையின் தாக்கம் இறந்தோர் பற்றிய கத்தோலிக்கரின் பார்வையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஒப்புமைக் கொள்கையின்படி காலமும், இடமும் நிலையானவை (யடிளழடரவந) அல்ல, மாறாக ஒப்புமைக்குரியவை (சநயடவiஎந). எனவே, உடலோடு வாழும் காலத்தில்தான் காலமும், இடமும் மனிதர்களைக் கட்டுப்படுத்துகின்றன. உடலைக் கடந்தபின், காலத்தையும், இடத்தையும் (வiஅந யனெ ளியஉந) நாம் கடக்க முடியும். எனவே, இறந்தவர்கள் உடலைக் கடந்தவர்களாதலால், அவர்கள் காலத்தையும், இடத்தையும் வென்றவர்களாகிறார்கள். எனவே, ஒருவர் இறந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆனாலும்கூட, அவருக்கு அது இன்று போலத்தான். நமக்குத்தான் இருபத்தைந்து ஆண்டுகள். எனவே, நாம் இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்தபின் அவருக்காக மன்றாடினாலும், அவருக்கு அது இறப்பின் நேரத்திலேயே பலன் கொடுக்கும். இதுதான் ஐன்ஸ்டீனின் தாக்கம். எனவே, என்றோ இறந்துபோன நம் உறவுகளை இன்று எண்ணிப்பார்த்து மன்றாடுவது அவர்களுக்கு என்றும் உதவுவதே.

மன்றாடுவோம்: வாழ்வோரின் கடவுளாகிய ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நீர் என்றும் வாழ்பவர். சாவைக் கடந்தவர். உம்மீது நம்பிக்கை கொள்ளும் அனைவருக்கும் முடிவில்லாத வாழ்வைத் தருபவர். உமக்கு நன்றி கூறுகிறோம். இன்றைய நாளில் உமது விசுவாசிகள் அனைவரையும், குறிப்பாக யாரும் நினையாத, மறக்கப்பட்ட ஆன்மாக்களை நினைவுகூர்ந்து மன்றாடுகிறோம். அனைவருக்கும் இன்பமும், ஒளியும், அமைதியும் அளித்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா

-- அருள்தந்தை குமார்ராஜா

 

-------------------------------

''இயேசு, 'என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே
நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்' என்றார்'' (யோவான் 6:38)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- ''வாழ்வு தரும் உணவு'' பற்றி இயேசு அளித்த விளக்கம் யோவான் நற்செய்தியில் விரிவாகத் தரப்பட்டுள்ளது. இயேசுவின் போதனையைக் கேட்கக் கூடி வந்த மக்களின் பசியைப் போக்கிட இயேசு அப்பங்களைப் பலுகச் செய்தார். அந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் தங்களுக்கு இவ்வாறு மீண்டும் உணவு கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் இயேசுவை அணுகி வந்தனர். ஆனால் இயேசு மக்களின் உடல் பசியை மட்டுமல்ல, அவர்களது ஆன்ம பசியையும் போக்க வந்தார். உடலுக்குத் தேவையான உணவைப் பற்றி மட்டுமே கவலைப்படாமல் கடவுளோடு நமக்குள்ள உறவை ஆழப்படுத்துகின்ற ஆன்ம உணவு பற்றியும் மக்கள் கவலைப்பட வேண்டும் என இயேசு உணர்த்தினார். மக்களின் உள்ளத்தில் நிலவுகின்ற ஆன்ம பசியை இவ்வுலகத்தைச் சார்ந்த எந்த சக்தியாலும் நிறைவுசெய்ய இயலாது. ''விண்ணலிருந்து இறங்கி வந்த'' உணவாகிய இயேசு மட்டுமே நம் ஆன்ம பசியைப் போக்க வல்லவர். அவருடைய போதனை, அவர் புரிந்த செயல்கள், அவரிடமிருந்து வருகின்ற தூய ஆவியின் வல்லமை ஆகியவை நமக்குக் கொடையாக வழங்கப்படுகின்றன. கடவுள் வழங்குகின்ற இக்கொடையை நாம் நன்றியுணர்வோடு ஏற்று, அதை நம் உள்ளத்தில் உணர்ந்து, அதற்கேற்ப வாழும்போது நம் ஆன்மா நிறைவடையும்.

-- விண்ணிலிருந்து இறங்கி வந்த உணவாகிய இயேசு நமக்கு உணவாகவும் பானமாகவும் இருக்கின்றார். அவர் ஏற்படுத்திய நற்கருணை விருந்து நம் உள்ளத்தில் இறைவாழ்வு பொழியப்படுவதற்கு வெளி அடையாளமாக உள்ளது. நமக்கு உணவாகவும் பானமாகவும் மாறிய இயேசு தம் சொந்த விருப்பப்படி நடக்கவில்லை. மாறாக, கடவுளே வகுத்த திட்டத்திற்கு ஏற்ப அவர் தம் உயிரை நமக்காகத் தம் சிலுவைச் சாவு வழியாகக் கையளித்தார். சிலுவையில் இறந்த இயேசு சாவின்மீது வெற்றிகொண்டார். புது வாழ்வு பெற்றவராக உயிர்பெற்றெழுந்தார். அவருடைய உயிரில் நாமும் பங்கேற்கின்றோம். எனவே நம்மில் நிலை வாழ்வு ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அந்த நிலைவாழ்வின் நிறைவு நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. அதை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நாமும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகின்ற மனிதர்களாக மாற வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் திருவுளத்தை நிறைவேற்ற எங்களுக்கு வல்லமை தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

-------------------------

''மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறவேண்டும்
என்பதே என் தந்தையின் திருவுளம்'' (யோவான் 6:40)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசு அப்பங்களைப் பலுகச் செய்து, அதிசயமான விதத்தில் மக்களுடைய பசியை ஆற்றுகிறார் (யோவான் 6:1-15). தாம் புரிந்த அரும் அடையாளத்தின் உட்பொருள் என்னவென்பதையும் இயேசு விளக்குகிறார். கடவுள் மனிதருடைய உடல்சார்ந்த பசியை மட்டுமே போக்குபவர் அல்ல. மனிதருக்கு இருக்கின்ற ஆன்மிகப் பசியைப் போக்குபவரும் கடவுளே. இதற்காகவே கடவுள் தம் மகன் இயேசுவை இவ்வுலகுக்கு அனுப்பினார். அழிந்துபோகின்ற மண்ணுலக வாழ்வைத் தொடர விரும்புவோர் உணவு அருந்தவேண்டும். ஆனால் அழிந்துபோகாத விண்ணக வாழ்க்கையில் பங்கேற்க விரும்புவோர் விண்ணகத்திலிருந்து வந்த இயேசுவையே உணவாகக் கொள்ளவேண்டும். இயேசுவின் போதனை மட்டுமல்ல, இயேசுவே நமக்கு உணவாகின்றார். அவரையும் அவருடைய போதனையையும் நம் உணவாக ஏற்று நாம் வாழ்ந்தால் நமக்கு நிலைவாழ்வில் பங்குண்டு.

-- நிலைவாழ்வு என்பது ஒருபோதும் முடிவுக்கு வராத நீடித்த வாழ்வு என்று மட்டுமே பொருளாகாது. மண்ணக வாழ்க்கையோடு ஒப்பிடும்போது நிலைவாழ்வு என்றுமே நீடிக்கின்ற வாழ்வுதான். என்றாலும், இயேசு வாக்களிக்கின்ற நிலைவாழ்வு உண்மையிலேயே ''நிறைவான'' வாழ்வைக் குறிக்கிறது. அதாவது, இம்மண்ணக வாழ்வு எப்போதுமே குறைகள் நிறைந்தது; ஆனால் நமக்கு இயேசு வாக்களிக்கின்ற வாழ்வில் எந்த ஒரு குறையுமே இராது; வாழ்வின் முழுமையை அங்கே நாம் காண்போம். இவ்வாறு வாழ்வின் முழுமையை நாம் அடையவேண்டும் என்றால் இயேசுவை நாம் நம்பவேண்டும். இயேசுவில் நம்பிக்கை கொள்வது அவருடைய வாழ்க்கையை நம் வாழ்க்கையாக மாற்றிக்கொள்வதில் அடங்கும். இயேசுவில் நம்பிக்கை கொள்ளும்போது நமது விருப்பப்படி நாம் நடக்காமல் கடவுளின் விருப்பப்படியே நடப்போம். இயேசு தந்தையின் திருவுளத்தை ஏற்று அதற்கேற்பத் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டதால் புதிய வாழ்வு நிலைக்கு உயிர்பெற்றெழுந்தார். அதே நம்பிக்கையோடு நாம் வாழ்ந்து, கடவுளின் மாட்சிமையில் பங்குபெற அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, உம்மிடம் நம்பிக்கை கொள்வோருக்கு நிலைவாழ்வு அளிக்கிறீர் என்னும் உண்மையை நாங்கள் ஆழமாக உணரச் செய்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

இறப்பே .. புது வாழ்வு

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வுக்கு அழுத்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வின் உந்து சக்தியும் இறப்பு. நம் வாழ்வின் இலக்கின் தொடக்கமும் இறப்பே. இறுதி நாளில் இறப்பை எப்படி சந்திக்கிறோமோ அப்படி வாழ்ந்துள்ளோம் என்று பொருள். இறப்பை மன நிறைவோடு மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் மனிதன்,இவ்வுலக வாழ்வை ஆண்டவர் எதிர்பார்க்கும் விதத்தில் வாழ்ந்துள்ளான், புது வாழ்வுக்குத் தன்னை தயாரித்துள்ளான் என வெளிப்படுகிறது.

இயேசுவின் பார்வையில் இறப்பு ஒரு திருமுழுக்கு. புது வாழ்வின் தொடக்கம். இயேசு, ஒவ்வொரு சாவையும் வாழ்வின் உதயமாகக் கண்டார். இலாசரின் இறப்பு கடவுளின் மாட்சி வெளிப்படும் நிகழ்வாகக் காண்கிறார்.(யோவா 11'4) பன்னிரெண்டு வயது சிறுமியை உயிர்பெறச் செய்தபோது, "விலகிப் போங்கள், சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்"( மத் 9 :24) என்றபோது, இறப்பை, புத்துயிர் பெற உறங்கி விழிக்கும் அன்றாட நிகழ்வாகக் காண்கிறார்.

எவ்வாறு இறக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அவ்வாறு வாழ வேண்டும். அமைதியாக, நிம்மதியாக, வேதனையின்றி,தனிமையின்றி சாக வேண்டுமென்றால், வாழும்போதும் அவ்வாரே வாழ வேண்டும். வாழ்க்கை எப்படியோ அப்படியே மரணமும். இறைவன் பாராட்ட, மனிதர் புகழ, உன் மனம் பெருமிதமடைய வாழ்ந்துகொள். மரணம் மகிழ்ச்சியாக இருக்கும். புது வாழ்வாக அமையும்.

--அருட்திரு ஜோசப் லியோன்