முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-20

அந்நாள்களில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் சீடர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி, இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைது செய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார். இவ்வாறு அவர் புறப்பட்டுச் சென்று தமஸ்குவை நெருங்கியபோது, திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது. அவர் தரையில் விழ, ``சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?'' என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார். அதற்கு அவர், ``ஆண்டவரே நீர் யார்?'' எனக் கேட்டார். ஆண்டவர், ``நீ துன்புறுத்தும் இயேசு நானே. நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்'' என்றார். அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர். சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் அவருக்குத் தோன்றி, ``அனனியா!'' என அழைக்க, அவர், ``ஆண்டவரே, இதோ அடியேன்'' என்றார். அப்போது ஆண்டவர் அவரிடம், ``நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கிறார். அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார்'' என்று கூறினார். அதற்கு அனனியா மறுமொழியாக, ``ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான்'' என்றார். அதற்கு ஆண்டவர் அவரிடம், ``நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் இருக்கிறார். என் பெயரின் பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக் காட்டுவேன்'' என்றார். அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று, கைகளை அவர்மீது வைத்து, ``சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்'' என்றார். உடனே அவருடைய கண்களிலிருந்து செதில்கள் போன்றவை விழவே, அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார். பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார். சில நாள்களாக சவுல் தமஸ்குவில் சீடர்களுடன் தங்கியிருந்தார். உடனடியாக அவர் இயேசுவே இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 117: 1. 2

பல்லவி: உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்!
மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! -பல்லவி

2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது;
அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா! -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ``எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்,'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

யோவான் 6:52-59

பாஸ்கா காலம்-3 வாரம் வெள்ளி

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 52-59


அக்காலத்தில் ``நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?'' என்ற வாக்குவாதம் யூதர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களிடம், ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.'' இயேசு கப்பர்நாகுமில் உள்ள தொழுகைக்கூடத்தில் இவ்வாறு கற்பித்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 6: 52 – 59
இணைவோமா?

இந்தியா நாடு இன்று ரஷ்யா நாடோடு இணைபிரியா நாடாக இருப்பதற்கு காரணம் அந்த நாடு இந்தியா நாட்டிற்கு வழங்குகின்ற மருத்துவ உதவி. கிராமப்புறங்களில் ஒரு வீடு மற்றொரு வீடாக இணைந்து இருப்பதற்கு திண்ணை என்ற அமைப்பு உள்ளது. காரணம் ஊர் காரியங்களை பொழுதுபோக்காக அதில் அமர்ந்து உரையாடி உறவை புதுப்பித்துக் கொள்ள. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள இரட்டைக் கோபுரம். ஒன்றோடொன்று இணைந்து இருப்பது போல அமைத்திருக்கின்றார்கள். காரணம் நாட்டின் ஒற்றுமையை பிரதிபலிப்பதாக உள்ளது. இவ்வாறு உணவின் வழியாக, பொருளின் வழியாக இடத்தின் வழியாக சமுதாயமானது, மற்றொடொன்று இணைந்து காணப்படுகின்றது.

ஆனால் தன் உடலின் வழியாக இரத்தத்தின் வழியாக நாம் இணைந்து இருக்க இறைமகன் இயேசு இன்றைய நாளிலே அழைப்பு விடுக்கின்றார். எவ்வாறெனில் இயேசு அப்பத்தைப் பிட்டு தம் சீடருக்கு வழங்கிய பாஸ்கா உணவு நிகழ்ச்சி, அவர் தம் பணிநாட்கள் முழுவதும் தம்மையே மக்களுக்கு வழங்கியதையும் தம் சிலுவை மரணத்தில் இன்றும் முழுமையாகத் தம்மையே அர்ப்பணித்ததையும் குறிப்பிடுகின்றது. இயேசு குறிப்பிடும் இரத்தம் அவர் உருவாக்க விரும்பிய புதிய இறையாட்சி சமூகத்தை மோசே கடவுளுடன் இணைத்து ஓர் உடன்படிக்கை ஏற்படுத்தி அதை விலங்குகளின் இரத்தத்தால் நிறைவு செய்தார். ஆனால் இயேசுவின் புதிய சமுதாயத்தைக் கடவுளுடன் இணைக்கும் புதிய உடன்படிக்கை இயேசுவின் இரத்தத்தால் நிறைவு செய்யப்படுகின்றது. இயேசுவே புதிய உடன்படிக்கையின் இணைப்பாளர். அவருடைய தியாக பலியே புதிய சமுதாயத்தின் வல்லமை. அவரே அவர் வழியாக இணைக்கின்றார்.

நாம் இயேசுவோடு இணைந்து வாழ விரும்புகிறோமா? இயேசுவின் புதிய உடன்படிக்கையில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளோமா? சிந்திப்போம்.

அருட்பணி. பிரதாப்

===========================

திருத்தூதர் பணி 9: 1 – 20
திறந்த உள்ளத்தினராக வாழ்வோம்

சவுலுடைய மனமாற்றம் பற்றிய சிந்தனைகளை இன்றைய முதல் வாசகம் நமக்குக் கற்றுத்தருகிறது. சவுல் திருச்சபையை அழித்தொழிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டு செயல்பட்டவர். யூதப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர். கிறிஸ்தவம் யூத மறையை அழித்துவிடும். எனவே, அதனை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்று, விரோத மனப்பான்மையோடு செயல்பட்டவர். மற்றவர்களால் அவர் இயக்கப்பட்டார் என்று சொன்னாலும், அவருடைய உள்ளத்திலும் கிறிஸ்தவர்களை அழிக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே இருந்தது. ஆனால், அனைவரும் ஆச்சரியப்படக்கூடிய வகையில் அவர் ஒரே ஒரு காட்சியினால் மனமாற்றம் அடைகிறார். இது எப்படி சாத்தியம்?

சவுல் உயிர்த்த இயேசு அவருக்கு கொடுத்த காட்சியினால் மனம்மாறினால் என்று ஒரு வரியில் சொன்னாலும், சவுலின் மனமாற்றம் எப்போது தொடங்கியிருக்கும் என்பது தான் உண்மை. அந்த தொடக்கத்தின் நிறைவு தான், இந்த மனமாற்றம். எது சவுலின் மனமாற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கும்? நிச்சயம் தொடக்க கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த உறுதியான விசுவாசம் தான், சவுலை சிந்திக்க வைத்திருக்கும். இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் எப்படி இவர்களால், கிறிஸ்தவ திருமறையில் உறுதியாக நிற்க முடிகிறது? தங்களது உயிரை இழக்கவும் முடிகிற துணிவு எங்கிருந்து வருகிறது? கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த அந்த ஆழமான விசுவாசம், சவுல் கிறிஸ்தவர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை அசைத்துப் பார்த்திருக்க வேண்டும். ஏனென்றால், சவுல் சிறந்த கல்விமான். உண்மைக்கு திறந்த உள்ளத்தோடு செவிமடுக்கிறவர். ஆக, தனக்கென்று நம்பிக்கை இருந்தாலும், திறந்த உள்ளத்தோடு உண்மைக்கு செவிகொடுக்க தயாராக இருந்த அந்த தாராள உள்ளம் தான், உண்மையான இறைவனைப் பற்றிப் பிடிப்பதற்கு, அவருக்கு வாய்ப்பாக அமைந்தது.

நாம் எப்போதும் திறந்த உள்ளத்தோடு இருக்க வேண்டும். நான் சொல்வது தான் சரி? என்று, மூடிய மனநிலையோடு, இறுகிய மனநிலையோடு இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், நிச்சயம் நம்முடைய வாழ்க்கை வளர்ச்சிப் பாதையை நோக்கியதாகவே இருக்கும். எந்த நேரத்திலும் நாம் சறுக்கி விழ மாட்டோம். அந்த திறந்த உள்ளத்தை இறைவன் நமக்குத் தர வேண்டுமென்று மன்றாடுவோம்.

- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

திருப்பாடல் 117: 1, 2, மாற்கு 16: 15
”பிற இனத்தவரே! ஆண்டவரைப் போற்றுங்கள்”

திருப்பாடல்களின் வரிசையில் இந்த திருப்பாடலின் சிறப்பு, மிக மிகச் சிறியது. இரண்டே இரண்டு இறைவார்த்தைகளைக் கொண்ட திருப்பாடல். இந்த பாடல் பிற இனத்தவர் மீது ஆண்டவர் கொண்டுள்ள பேரன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. உரோமையர் 15: 11 ல், ”பிற இனத்தவரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள். மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்” என்று மேற்கோள் காட்டப்படுவது, இந்த திருப்பாடலை அடிப்படையாகக் கொண்டுதான்.

இந்த மேற்கோள் நமக்கு அருமையான செய்தியைத் தருகிறது.  நற்செய்தி உலகம் முழுவதிற்கும் சொல்லப்பட வேண்டும் என்பது தான் அந்த செய்தி. யூதர்களைப் பொறுத்தவரையில், நற்செய்தி என்பது யூதர்களுக்கு மட்டும் தான், மெசியா யூதர்களுக்கு மட்டும் தான், கடவுளின் அன்பு யூதர்களுக்கு மட்டும் தான் என்கிற மனநிலையோடு வாழ்ந்து வந்தனர். தூய பவுல், பிற இனத்தாரை, யூதர்கள் ஏற்றுக்கொள்ளாத மனநிலையை தவறு என்று சுட்டிக்காட்வதற்காக, யூதர்கள் பாடி, செபித்த இந்த திருப்பாடலையே, அவர்கள் ஏன் பிற இனத்தாரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாகச் சொல்கிறார். ஒரு சில யூத போதனையாளர்கள், இந்த திருப்பாடல் மெசியாவின் முழுமையான இறையாட்சியைக் குறிக்கக்கூடிய பாடலாக ஏற்றுக்கொள்கிறார்கள். எது எப்படி இருந்தாலும், நற்செய்தி அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்கிற கருத்து, இங்கே உறுதிப்படுத்தப்படுகிறது.

நமக்குள்ளாக இருக்கிற குறுகிய எண்ணங்கள், நான் மட்டும் தான் உயாந்தவன் என்கிற எண்ணம், நம்மை மட்டும் நல்லவராப் பார்க்கிற எண்ணம் மறைய வேண்டும் என்பதை, இந்த திருப்பாடல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. வேறுபடுத்திப்பார்ப்பது, பிளவுபடுத்திப் பார்ப்பது போன்ற செயல்களிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும்.
---------------------------------

நம்முள் இருக்கிறவராக நம் இயேசு

”விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன்” என்ற இயேசுவின் வார்த்தைகளை நமது பிண்ணனியிலிருந்து பார்க்காமல், அவர் வாழ்ந்த அந்த வரலாற்றுப்பிண்ணனியில் அணுகுகிறபோது, நிச்சயமாக நம்மால் அதனுடைய உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

இயேசுவின் சதையை நாம் உண்ண வேண்டும் என்று சொல்லப்படுவது, அவர் நம்மில் கலக்க வேண்டும் என்பதைக்குறிக்கிறது. அதாவது, இயேசுவை ஒரு விவாதப்பொருளாகவோ, அவரது இறப்பை வெறும் நிகழ்வாகவோ பார்த்தால் நம்மில் எந்தவொரு மாற்றத்தையும் அது ஏற்படுத்தாது. மாறாக, அவர் நம்மில் ஒருவராக மாறி, நமது வாழ்வாக்கப்பட வேண்டும். நம்மில் ஒருவராக அவர் மாற வேண்டும். அவரது வாழ்வில் கடைப்பிடித்த விழுமியங்கள், நமது விழுமியங்களாக மாற்றப்பட வேண்டும். இயேசு ஓர் இறையனுபவம். நமது உடல், உள்ளம் மற்றும் ஆன்மா அனைத்திலும், இயேசுவின் பெயர் ஒலிக்கப்பட வேண்டும்.

இன்றைக்கு இந்த உலகம் வளர்ந்திருக்கிறது. அறிவியல் முன்னேறியிருக்கிறது. பயண நேரம் குறைந்திருக்கிறது. பாதுகாப்பு அதிகரித்திருக்கிறது. மருத்துவம் அசுர வளர்ச்சி பெற்றிருக்கிறது. நமது அறிவு பல மடங்கு பெருகியிருக்கிறது. ஆனாலும், ஏட்டளவில் மட்டும் தான், இயேசுவைப்பற்றி அறிந்திருக்கிறோமே தவிர, அனுபவ அளவில் இன்னும் நாம் குறைவாகவே அனுபவம் பெற்றவர்களாக இருக்கிறோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

”இது என் உடல்”

இயேசுவின் சதை என்பது அவரது மனிதத்தன்மையை பறைசாற்றுவதாக இருக்கிறது. யோவான் தனது முதல் திருமுகத்தில் இதை தெளிவாக விளக்குகிறார். ”இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடமிருந்து வருவது. இவ்வாறு கடவுளிடமிருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள். இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடமிருந்து வருவதல்ல. இதுவே எதிர்க்கிறிஸ்துவிடமிருந்து வரும் தூண்டுதல்”.

யோவான் இயேசு நம்மில் ஒருவர் என்கிற செய்திக்கு அழுத்தம் தருகிறார். இயேசுவில் கடவுளை நாம் அறிகிறோம். இதுநாள்வரை கடவுள் எப்படி இருப்பார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், இயேசுவில் நாம் கடவுளை கண்கூடாக பார்க்கிறோம். நமது வாழ்க்கைச்சூழலில் துன்பங்கள், வறுமை, நஷ்டங்கள், பலவீனங்கள், போராட்டங்கள் இயல்பாக வருவதுண்டு. அந்த நேரத்தில் நாம் இயேசுவை நினைத்துப்பார்க்க வேண்டும். அவர் நமது சுமைகளை தாங்கியிருப்பதை எண்ண வேண்டும். அவர் நமக்காகத்தான் இந்த உடலை எடுத்தார். நமக்காக தன்னையே அவர் கையளித்தார். நமக்காக நொறுக்கப்பட்டார். அவருடைய மண்ணகப்பிறப்புதான், இந்த உடலின் புனிதத்தன்மையை நமக்கு எடுத்துக்காட்டியது. உடலும் புனிதமானது என்கிற உண்மையை நமக்குப்பறைசாற்றியது. ஆக, உடலின் புனிதத்தன்மையை நாம் பேணிக்காக்க வேண்டும்.

இன்றைக்கு புனிதமான இந்த உடல் பலவித வடிவங்களில் சிதைத்துச் சூறையாடப்படுகிறது. அதனுடைய புனிதத்தன்மை கெட்டுப்போய் இருக்கிறது. உடலின் புனிதத்தன்மையை நாம் உணர வேண்டும். அதன் புனிதத்தன்மையை போற்றிப்பாதுகாப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைவனோடு இணைந்திருப்போம்

“எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக்குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்”. பொதுவாக, விலங்குகள் பலிபீடத்தில் காணிக்கையாக செலுத்தப்படும்போது, விலங்கு முழுவதையும் எரிபலியாக செலுத்துவதில்லை. மாறாக, எரிபலிக்கு அடையாளமாக, அந்த விலங்கின் சிறிய பகுதியை மட்டும் பயன்படுத்துவர். மீதி உள்ள இறைச்சியை பலிசெலுத்துகின்ற குருவும், பலியிட்ட குடும்பத்தாரும் பகிர்ந்து கொள்வர். ஒரு விலங்கு பலியிடப்படுகிறது என்றால், அதனுள் கடவுள் குடிகொண்டிருக்கிறார் என்பது பொருள். ஏனெனில் அது கடவுளுக்கு உரியது. கடவுளுடையது. அந்த விலங்கின் இறைச்சியை உண்ணும் மனிதருக்குள்ளும் கடவுள் குடிகொள்கிறார் என்பது அதனுடைய பொருள். இந்தப்பிண்ணனியில் இந்தப்பகுதியை நாம் பார்க்க வேண்டும்.

இது ஒருவேளை காட்டுமிராண்டித்தனமான செயலாகவோ, சிலைவழிபாடு போலவோ தெரியலாம். ஆனால், அதன் பிண்ணனியின் பொருள் தெரிந்தால், நம்மால் அதன் பொருளை நல்லமுறையில் புரிந்துகொள்ள முடியும். இங்கே சதை, இரத்தம் என்கிற வார்த்தையை நாம் இறைவார்த்தைக்கு ஒப்பிடலாம். ஆண்டவரின் வார்த்தையை நாம் தியானித்து அந்த வர்த்தையை உள்வாங்குகின்றபோது, இறைப்பிரசன்னம் நம்மை ஆட்கொள்கிறது. நாம் ஆண்டவரில் புதுப்பிக்கப்படுகிறோம். கடவுளோடு இணைந்திருக்கிறோம். கடவுளும் நம்மோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கின்றபோது, நாம் புதிய மனிதர்களாக மாறுகிறோம். நம் வாழ்வு மாறுகிறது.

எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலே 4: 12ல் ஆசிரியர் கூறுகிறார்: “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது: ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்கு குத்தி ஊடுறுவுகிறது”. கடவுளுடைய வார்த்தைக்கு அந்த அளவு ஆற்றல் இருக்கிறது. எனவே, நாம் ஆண்டவரின் வார்த்தை நம்மில் செயலாக்கம் பெற உறுதி எடுப்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

“உண்பதற்கு இவர் தமது சதையை எப்படி?”

இயேசு தமது உடலை உணவாகத் தருவதாக யூதர்களிடம் சொன்னபோது, “நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்ற வாக்குவாதம் யூதர்களிடையே எழுந்தது என்று இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகிறது. அந்த வரிகளையே நமது சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம்.

இயேசுவின் சொற்களை யூதர்கள் நம்பவில்லை. எனவே, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நம்பிக்கை குறைகின்றபோது வாதங்கள், வாக்குவாதங்கள், விவாதங்கள் தோன்றுகின்றன. நம்பிக்கை பெருகுகின்றபோது, பேச்சு குறைந்து செயல் அதிகரிக்கிறது.

நம்முடைய உறவுகளிலும் அப்படியே. கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளைகள், நண்பர்களிடையே நம்பிக்கை குறைகின்றபோது, அங்கே விவாதங்கள், வாக்குவாதங்கள் நிகழ்கின்றன. நம்பிக்கை இருக்கின்றபோது, பேச்சுக்கு இடமில்லை. அமைதியுடன் ஏற்றுக்கொள்கின்றோம். இன்று நமது உறவுகளைக் கொஞ்சம் ஆய்வு செய்வோம். நம்பிக்கை-நம்பிக்கையின்மை எது அதிகமாக இருக்கிறது என்று நம்மையே கேட்டுக்கொள்வோம். அமைதியில் ஏற்பு அல்லது விவாதம் இவற்றில் எது அதிகம் நிகழ்கிறது என்றும் கேட்டுப் பார்ப்போம்.

நம்பிக்கைய அதிகரிப்போம். உறவில் வளர்வோம்.

மன்றாடுவோமாக: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம் சொற்களில் நம்பிக்கை கொள்ளாத யூதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுபோல, எங்கள் உறவுகளிலும் நம்பிக்கைக் குறைவினால் நாங்கள் வாதம் செய்யாது, உறவில் வளரும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

உண்மையான உணவு ” !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நாளில் நற்கருணை என்னும் வானக உணவு பற்றிச் சிந்திப்போம். இறைவன் நமக்குத் தந்த கொடைகளில் எல்லாம் தலைசிறந்தது அவரது உடலாகிய உணவுதான். மானிடர் உயிர் வாழ உணவு அவசியம் என்பதாலேயே இறைவன் உணவின் வடிவில் நம்மிடம் உறவு கொண்டார். எனவே, நாம் அழிந்து போகும் உணவுக்காக அதிகம் கவலைப்படாமல், அழியாத உணவாகிய ஆண்டவர் இயேசுவின் திருவுடலை ஆர்வத்துடன் உண்போமாக!

நற்கருணை அருந்தியதும் இயேசுவுக்கு நன்றி சொல்வது நமது கடமை. உணவு உண்டதும் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமல்லவா! அவரது உடலாகிய உணவைப் பெற்றதும் சில மணித்துளிகளை இறைபுகழ்ச்சியிலும், நன்றியிலும் செலவழிப்பது நமது கடமை. எனவே, நமது நற்கருணைப் பழக்கத்தைக் கொஞ்சம் ஆய்வு செய்து, நன்றியோடு திருவிருந்தில் கலந்துகொள்வோமாக!

மன்றாடுவோம்: அன்பே உருவான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மையே எங்களுக்கு உணவாகத் தருவதற்காக நன்றி கூறுகிறோம். பலமுறை நாங்கள் தகுதியற்ற விதத்தில் நற்கருணை விருந்தில் பங்கேற்றதற்காக எங்களை மன்னியும். நன்றியுணர்வோடு திருவிருந்தில் பங்குகொள்ளும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

----------------------

 

''இயேசு, 'எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர்,
நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்' என்றார்'' (யோவான் 6:56)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு மக்களுக்கு நிலைவாழ்வு தரும் உணவைத் தரப்போவதாகக் கூறியதும் அவர்கள் தமக்குள்ளே ''முணுமுணுத்தார்கள்'' (யோவா 6:41). ஆனால், அவர் வழங்கப்போகின்ற உணவு அவருடைய சொந்த ''சதையும் இரத்தமும்'' என்றதுமே மக்களிடையே வாக்குவாதமே எழுந்துவிட்டது! அவர்கள் ''நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்'' என்று வாதாடத் தொடங்கினர். இதைக் கண்ட இயேசு மக்களுக்கு இன்னும் அழுத்தமாகக் கூறிய உண்மை இது: ''எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்'' (யோவா 55). இவ்வாறு இயேசு கூறியதைக் கேட்ட மக்கள் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்திருப்பார்கள். அதாவது, எந்த மனிதரும் பிற மனிதரின் சதையை உண்பதை முறையானதாகக் கருத மாட்டார்கள். ஏன், இத்தகைய செயல் காட்டுமிராண்டித்தனமானது என்று கூடக் கூறுவார்கள். ஆனால் இயேசு கூறுகின்ற சொற்கள் உண்மையிலேயே அவர் தம்மை நமக்கு உணவாகவும் பானமாகவும் தருகின்ற கொடையைக் குறிக்கின்றன. என்றாலும் இயேசுவின் உடலை நாம் உண்ண முடியுமா, அவருடைய இரத்தத்தை நாம் குடிக்க இயலுமா எனச் சிலர் கேட்கலாம். இங்கே இயேசு கூறுவது நம் ஆன்ம உணவையும் பானத்தையும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அதே நேரத்தில், நாம் உட்கொள்கின்ற உணவும் அருந்துகின்ற தண்ணீரும் நாம் உயிர்வாழ நமக்குச் சக்தி தருவதுபோல, இயேசுவை நமது உணவாகவும் பானமாகவும் நாம் ஏற்றுக்கொண்டு, அவருடைய தன்மையை நமது தன்மையாக மாற்றிக்கொண்டால் நாம் ஆன்ம வாழ்வில் வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைவோம்.

-- நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது அப்பமும் இரசமும் இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாற்றம் பெறுகின்றன என்பது நம் நம்பிக்கை. இயேசுவே தம்மை நமக்குக் கொடையாக அளிக்கின்றார் என்பதே இதன் பொருள். தம்மையே கொடையாகத் தருகின்ற இயேசுவை நாம் ஏற்று, அவருடைய சக்தியிலிருந்து சக்தி பெற்று வாழ்ந்தால் அவருடைய வல்லமை நமக்கு ஊக்கமும் ஆக்கமும் தரும். இயேசுவிடம் துலங்கிய பண்புகள் நம்மிடமும் துலங்கும். அப்போது நம் வாழ்க்கை இயேசுவின் வாழ்க்கைக்கு ஒத்ததாகவும் உகந்ததாகவும் மாற்றம் பெறும். இயேசுவின் சதையை உண்டு. அவருடைய இரத்தத்தைக் குடிக்கும் நாம் ஒருவிதத்தில் இயேசுவின் தன்மையைப் பெறுவதால் அவர் எல்லா மனிதரையும் அன்புசெய்து அவர்களின் நலனுக்காகத் தம்மையே பலியாக்கியதுபோல நாமும் தன்னலம் களைந்து பிறர்நலம் பேணுவதில் நிலைத்திருப்போம்; நிலைவாழ்வு பெற்று மகிழ்வோம்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் வாழ்க்கையை இயேசுவின் வாழ்க்கையோடு இணைத்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

";இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

"எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். என்ற இயேசுவின் வெளிப்பாடு அன்றும் இன்றும் விவாதத்திற்கும் வினாவுக்கும், சர்ச்சைக்கும் சலசலப்புக்கும் உள்ள கருப்பொருள். ஆனால் விசுவசிப்போருக்கு அதுவே மூலப்பொருள். அறிவு மட்டும் பயன்படுத்தி விடை காணும் விஞ்ஞான வினைப் பொருள் அல்ல இயேசு குறிப்பிடும் உணவு.

உண்ணும் உணவு உடலோடு இணைந்து விடுவது போல, இவ்வுணவை உண்போரும் அவராகவே மாறிவிடுவர். அவரில் இணைந்துவிடுவர். "எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்".(யோவா6:56) இவ்வாறு இணைந்துவிடுவதால் இயேசுவைப்போன்ற மனநிலை, சிந்தனை, செயல்பாடுகள் அனைத்தும் அவர்உடலை உண்போரிலும் காணப்படும்.

இவ்வாறு அவராகவே மாறுவதால் அவரோடு உயிர்ப்பிலும் பங்குபெறுகிறோம். அதுவே நிலை வாழ்வாகிறது. ஆகவே இது முன்னோர் உண்ட உணவு போன்றதல்ல. மாறாக இது உண்போருக்கு முடிவில்லா வாழ்வைக் கொடுக்கவல்லது. இவ்வுணவை உண்டு இயேசுவோடு இணையும் நாம், இயேசுவின் உயிர்ப்பிலும் பங்கு பெறுவதால், அவரோடு விண்ணக வாழ்வையும் அவ்வுணவு நமக்குத் தருகிறது. இதை உண்டு இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்