முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 31-42

அந்நாள்களில் யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளில் எல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது. பேதுரு எல்லா இடங்களுக்கும் சென்று வந்தார்; ஒரு நாள் லித்தாவில் வாழ்ந்த இறைமக்களிடம் வந்து சேர்ந்தார். அங்கே அவர் எட்டு ஆண்டுகள் முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த ஐனேயா என்னும் பெயருடைய ஒருவரைக் கண்டார்; அவரிடம், "ஐனேயா, இயேசு கிறிஸ்து உம் பிணியைப் போக்குகிறார்; எழுந்து உம் படுக்கையை நீரே சரிப்படுத்தும்'' என்று பேதுரு கூறினார். உடனே அவர் எழுந்தார். லித்தாவிலும் சாரோனிலும் வாழ்ந்து வந்தவர்கள் அனைவரும் அதைக் கண்டு ஆண்டவரிடம் திரும்பினார்கள். யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருடைய பெண் சீடர் ஒருவர் இருந்தார். அவர் தொற்கா என்றும் அழைக்கப்பட்டார்; நன்மை செய்வதிலும் இரக்கச் செயல்கள் புரிவதிலும் அவர் முற்றிலும் ஈடுபட்டிருந்தார். உடல்நலம் குன்றி ஒரு நாள் அவர் இறந்துவிட்டார். அங்கிருந்தோர் அவரது உடலைக் குளிப்பாட்டி மேல்மாடியில் கிடத்தியிருந்தனர். யோப்பாவிற்கு அருகிலுள்ள லித்தாவுக்குப் பேதுரு வந்திருப்பதைச் சீடர்கள் கேள்விப்பட்டு இருவரை அவரிடம் அனுப்பி, ``எங்களிடம் உடனே வாருங்கள்'' என்று கெஞ்சிக் கேட்டார்கள். பேதுரு புறப்பட்டு அவர்களோடு வந்தார். வந்ததும் அவர்கள் அவரை மேல்மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். கைம்பெண்கள் அவரருகில் வந்து நின்று, தொற்கா தங்களோடு இருந்தபோது செய்துகொடுத்த எல்லா அங்கிகளையும் ஆடைகளையும் காண்பித்தவாறே அழுதார்கள். பேதுரு அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, முழந்தாள்படியிட்டு இறைவனிடம் வேண்டினார்; அவரது உடலின் பக்கமாகத் திரும்பி, ``தபித்தா, எழுந்திடு'' என்றார். உடனே அவர் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டு, எழுந்து உட்கார்ந்தார். பேதுரு அவருடைய கையைப் பிடித்து எழுந்து நிற்கச் செய்தார். இறைமக்களையும் கைம்பெண்களையும் கூப்பிட்டு, அவர்கள்முன் அவரை உயிருடன் நிறுத்தினார். இது யோப்பா நகர் முழுவதும் தெரிய வரவே, ஆண்டவர்மீது பலர் நம்பிக்கை கொண்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 116: 12-13. 14-15. 16-17
பல்லவி: ஆண்டவர் செய்த நன்மைகளுக்காக என்ன கைம்மாறு செய்வேன்?

12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்
நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து,
ஆண்டவரது பெயரைத் தொழுவேன். -பல்லவி

14 இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில்
அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.
15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. -பல்லவி

16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்;
நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்.
17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்;
ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

யோவான் 6:60-69

பாஸ்கா காலம்-3 வாரம் சனி

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 60-69

அக்காலத்தில் இயேசு நிலைவாழ்வு அளிக்கும் உணவு பற்றி கற்பித்துக்கொண்டிருந்த பொழுது, சீடர் பலர் இதைக் கேட்டு, ``இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?'' என்று பேசிக்கொண்டனர். இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், ``நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை'' என்றார். நம்பாதோர் யார் யார் என்பதும், தம்மைக் காட்டிக்கொடுக்க இருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது. மேலும் அவர், ``இதன் காரணமாகத்தான் `என் தந்தை அருள்கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது' என்று உங்களுக்குக் கூறினேன்'' என்றார். அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரைவிட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. இயேசு பன்னிரு சீடரிடம், ``நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?'' என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, ``ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 6: 60 - 69
வார்த்தை

சமுதாயத்தில் நாம் பெறும் அனுபவங்கள் எல்லாமே வார்த்தை எனும் அடித்தளத்தின் மீதே அமைகின்றன. உறவின் அன்பு, ஆசிரியரின் அறிவு, கல்வி, கண்டிப்பு மற்றும் நட்பு, ஆறுதல், வாழ்த்து போன்ற அனுபவங்கள் அனைத்துமே வார்த்தையின் கோர்வையாகத் தான் நிகழ்கின்றன. சில வார்த்தைகள் குணத்தைக் காட்டும், சில வார்த்தைகள் பண்பைக் காட்டும். சில வார்த்தைகள் சாட்சி சொல்லும், சில வார்த்தைகள் மக்களை ஏமாற்றி ஆட்சி செய்யும். எனவே தான் வள்ளுவன் சொல்லும் சொல்லின் பொருளறிந்து பேசுவது அறிவுடைமையாகும் என்று கூறுகிறான்.

வார்த்தைக்கு பல்வேறு வடிவங்களை நம்மால் கொடுக்க முடிகிறது. ஆனால் இதில் எந்த வார்த்தையும் நமக்கு வாழ்வு தருவதில்லை. ஏனென்றால் நம்மை செதுக்க, உருவாக்க, வெளிப்படுத்த பயன்படுகின்றன. ஆனால் கடவுளின் வார்த்தை மட்டுமே நமக்கு இன்னொரு வாழ்வைக் கொடுக்கின்றன. அதனால் தான் இயேசு என் தந்தை அருள் கூர்ந்தாலொழிய யாரும் என்னிடம் வர இயலாது என்றார். காரணம் தந்தையின் வார்த்தைக்கு செவிமடுக்க வேண்டும். இதனை பேதுரு தம் வாழ்வில் உணர்கின்றார். அதனால் தான் நிலைவாழ்வு தரும் வார்த்தை உம்மிடமே உள்ளது என்றார். எதற்காக சீடர்களை பார்த்துக் கூறுகிறாரென்றால் சீடர்கள் இயேசுவைப் பின்பற்றினார்கள். அவர் சொல்வதைச் செய்தார்கள். அவருக்கு பணிவிடை புரிந்தார்கள். ஆனால் அவர் கூறுவதை கடைபிடிக்கவில்லை. அதனால் தான் ஒருமுறை ஆண்டவரே எங்களால் ஏன் பேய்களை ஓட்ட முடியவில்லை என்று கேட்டபோது, என் வார்த்தையை கடைப்பிடித்து பேய் ஓட்டுங்கள், அதிசயம் காண்பீர்கள் என்பார். சீடர்கள் அவ்வாறே செய்தார்கள். திரும்பி வந்து ஆண்டவரே உமது பெயரை சொன்னால் பேய்கள் நடுநடுங்குகின்றன என்பார்கள். பிள்ளைகளே ஆழத்திற்கு கொண்டு வலை போடுங்கள். இதுதான் வார்த்தையின் வல்லமை.

நாம் யாருடைய வார்த்தையை கடைப்பிடிக்கின்றோம். கடவுளா? அரசியல்வாதியா? என் வாழ்வில் வார்த்தை வழி மாற்றத்தை விரும்புகிறேனா? சிந்திப்போம்.

அருட்பணி. பிரதாப்

===========================

திருத்தூதர் பணி 9: 31 – 42
பேதுருவின் இறையனுபவம்

திருத்தூதர் பேதுரு செய்கிற வல்ல செயல்களை, அற்புதங்களை இன்றைய வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சுகமும், இறந்து போனவர்க்கு உயிரும் கொடுக்கிறார். இயேசுவோடு வாழ்ந்தபோது, பல அற்புதங்களை செய்ய முடியாமல் இருந்தவர், இப்போது தனியாகவே அற்புதங்களைச் செய்வது, நிச்சயம் அங்கிருந்தவர்க்கெல்லாம் ஆச்சரியத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். எப்படி இவரால் இவற்றைச் செய்ய முடிகிறது? என்கிற கேள்வி மக்களின் உள்ளங்களை துளைத்தெடுத்திருக்க வேண்டும்.

ஒரு குழந்தை தன் தாய் இருக்கிறபோது, நடந்து வருகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒருவேளை அந்த குழந்தை நடக்கிறபோது கீழே விழுந்துவிட்டால், அது மீண்டும் எழ முயற்சிக்காது. மாறாக, அழ ஆரம்பிக்கும். தாய் தன்னை தூக்க வேண்டும் என்று அடம்பிடிக்க தொடங்கும். அதே குழந்தை தாய் இல்லாத நேரத்தில், நடந்து வருகிறபோது கீழே விழுகிறது என்று வைத்துக் கொள்வோம். அங்குமிங்கும் பார்க்கும். தொடர்ந்து எழுந்து நடக்க ஆரம்பிக்கும். இயேசுவோடு சீடர்கள் இருந்தபோது, கிட்டத்தட்ட குழந்தைகள் நடக்க பயில்கிற நிலையில் தான் இருந்தார்கள். ஆனால், உயிர்ப்பு அனுபவம், அவர்களை முற்றிலுமாக மாற்றுகிறது. நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. எனவே, அவர்கள் சங்கடங்கள் இல்லாமல், தங்கள் கடமையைச் செய்ய முடிகிறது.

இறைவன் மீது நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கை அதிகமாவதோடு நின்றுவிடக்கூடாது. அது ஆழப்பட வேண்டும். இன்னும் வலுப்பெற வேண்டும். அதற்கு நாமும் முயற்சி எடுக்க வேண்டும். சீடர்கள் அதைத்தான் செய்தார்கள். இயேசுவின் இறப்பு நிகழ்ந்த பிறகு சந்தித்த நெருக்கடிகள், சவால்கள் அவர்களது விசுவாசத்தை உறுதிப்படுத்தியது. இறை அனுபவத்தைக் கொடுத்தது. நாமும் அத்தகைய அனுபவத்தைப் பெற மன்றாடுவோம்.

- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

திருப்பாடல் 116: 12 – 13, 14 – 15, 16 – 17
”ஆண்டவர் தம் அன்பர்களின் சாவு அவரின் பார்வையில் விலைமதிப்புக்குரியது”

இந்த உலகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொருவருமே கண்டிப்பாக இறந்தே ஆக வேண்டும். ஒரு சிலர் இயற்கையாக இறக்கலாம். ஒரு சிலர் விபத்தில் இறக்கலாம். ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்ளலாம். ஒரு சிலர் கொலை செய்யப்படலாம். மனிதர்கள் எல்லாருமே ஒருநாள் இறப்பது உறுதி என்றாலும், யாரும் சாவையே நினைத்துக்கொண்டிருப்பதில்லை. ஒருவேளை நாம் உடல் சுகவீனப்பட்டிருந்தால், நாம் சாவை நினைத்துப் பயந்து கொண்டிருக்கலாம். ஆனால், பெரும்பாலும், நாம் வாழ்க்கையை வாழத்தான் விரும்புவோம்.

இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒரு சிலருக்கு சாவு எப்போது வரும் என்பது தெரியாமல் இருந்தாலும், தாங்கள் சாவுக்கு அருகில் இருக்கிறோம், சாவு எப்போதும் தழுவலாம் என்பதை அறிந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தான் கடவுளின் பார்வையில் விலைமதிப்புக்குரியவர்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். யார் இவர்கள்? எதற்காக இவர்களின் சாவு மதிப்பிற்குரியது? எப்படி  இவர்களால் சாவை முன்கூட்டியே தீர்மானிக்க முடிகிறது? இவர்கள் தான் நேர்மையாளர்கள். கடவுளுக்கு அஞ்சி நடக்கிறவர்கள். தாங்கள் எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், தவறு என்றால் தவறு. சரி என்றால் சரி என்ற எண்ணத்தோடு வாழ்கிறவர்கள். இவர்களைப் பொறுத்தவரையில் பல எதிர்ப்புக்களை சம்பாதித்து வைத்திருக்கிறவர்கள். சாவை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறவர்கள். நிச்சயம் சாவு எந்த நேரமும் தங்களைத்தழுவலாம் என்று உறுதியாக நம்பக்கூடியவர்கள். இவர்களைத்தான் கடவுள் விலைமதிப்புள்ளவர்களாகக் கருதுகிறார். இவர்கள் தான் கடவுளின் பார்வையில் விலையேறப்பெற்றவர்கள்.

நாமும் இப்படிப்பட்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அப்படி வாழ்கிறவர்களுக்கு கடவுளின் அருளும் ஆசீரும் நிறைவாகக் கிடைக்கும். கடவுளின் அன்பிற்கு உரியவர்களாக நாம் மாறுவோம். திருச்சபையின் புனிதர்கள் இப்படிப்பட்ட வாழ்வு வாழ்ந்து நம்மையும் வாழப்பணிக்கிறார்கள். அவர்களின் வழியில் நாமும் வாழ முனைவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

ஆவியின் செயல்பாடு

உடல் மற்றும் ஆன்மாவிற்கு இடையிலான போராட்டம் ஒரு மனிதனின் வாழ்வில் நீண்ட, நெடிய போராட்டமாக இருந்து வருகிறது. ஆன்மா, உடலில் சிறைவைக்கப்பட்டு, அங்கிருந்து போராடி வெளியே வருவதற்கான முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டில் எது பெரியது, என்கிற கேள்வியை விட, எதற்கு அதிக முக்கியத்துவம் என்பதனை, இயேசு விளக்குகிறார். வாழ்வு தரக்கூடியது, முடிவில்லாதது ஆவி தான் என்கிறார். இது உடலின் புனிதத்தன்மையை குறைத்து மதிப்பிடுவது ஆகாது. ஆனால், அதே வேளையில், ஆவியின் இயல்புகளை, அதன் மதிப்பை இது அதிகப்படுத்திக் காட்டுகிறது.

வெறும் உடல் ஆசைக்காக சாப்பிடுவது பெருந்தீனிக்கு சமமானது. ஆனால், நன்றாக உழைக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும் என்று அதற்காக சாப்பிடுவது, உடலின் இயக்கத்திற்கு, ஆவியின் தூண்டுதலுக்கும் பயன்படுவதாக அமைகிறது. ஆக, நமது எண்ணம், நமக்குள்ளாக இருக்கிற இந்த ஆவியை இயக்குவதாக அமைய வேண்டும். அந்த ஆவி தன்னெழுச்சி பெற வேண்டும். அது நம்மை இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும். நீதி மற்றும் நேர்மையின் சார்பான போராட்டங்களில், நம்மை ஈடுபட வைத்துக்கொண்டிருக்க வேண்டும்.

உடல் அழகைப் பேணிப்பாதுகாப்பதிலும், உடலின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அதிக சிரத்தை எடுக்கும் நாம், நிறைவைத்தருகிற, நிம்மதியைத் தருகிற ஆவியின் செயல்பாடுகளை ஊக்குவிக்க, அது இயக்கப்படுவதற்கு தேவையான காரியங்களைச் செய்ய நாம் முழுமுயற்சி செய்யாமல் இருக்கிறோம். அதற்கான காரியங்களை நாம் முன்னெடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------

உண்மையான கிறிஸ்தவ வாழ்வு

இயேசு தான் கடவுளின் மகன் என்பதை பல வழிகளில் மக்களுக்கு உணர்த்திக்கொண்டிருந்தார். தனது புதுமைகள் மூலமாக, தனது இறைவார்த்தை மூலமாக, ஏழைகள்பால் இரக்கத்தைக் காட்டியதன் மூலமாக, அநீதிகளைத் துணிவோடு எதிர்த்துக் கேட்பதன் மூலமாக, அவர் உண்மையிலே இறைமகன் என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருந்தார். இவ்வளவு செய்திருந்தாலும், இன்னும் பலபேர் அவரிடத்தில் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தனர். இயேசு தான் கடவுளிடமிருந்து வந்திருக்கிறேன், என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதற்கு வைத்திருந்த கடைசி ஆயுதம், அவருடைய விண்ணேற்பு. அதைப்பற்றிய முன்னோட்டத்தை இந்த நற்செய்தியில் அவர் சொல்கிறார்.

இயேசுவின் போதனைகள், சீடர்களுக்கு பல வேளைகளில் புதிராக இருந்தது. இயேசுவின் போதனைகள் புரியாததனால் அல்ல, மாறாக ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்ததால். இயேசுவின் போதனைகளை நாம் வாழ முடியுமா? அது நடைமுறைக்கு சரிப்பட்டு வருமா? என்ற கேள்விகள் சீடர்களிடம் அதிகமாக இருந்தது. அவர்கள் இயேசுவை அதிகமாக அன்பு செய்தார்கள். அவரிடத்தில் அதிகமாக நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனாலும், அவருடைய போதனைகள் அவர்களுக்கு மகிழ்ச்சியைத்தரவில்லை. குழப்பத்தையும், சோர்வையும் ஏற்படுத்தின. இயேசுவுக்கு அது புரியாமல் இல்லை. அவரும் தன்னால் இயன்ற அனைத்து வகைகளிலும், அவர்களுக்கு புரியவைக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். நிச்சயம் தன்னால் புரிய வைக்க முடியும் என்ற நம்பிக்கையும் கொண்டிருந்தார்.

இன்றைக்கும் நாம் இயேசுவை முழுமையாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். நமது அறிவுக்கு அவருடைய போதனைகள் எட்டாததனால் அல்ல, மாறாக, அவருடைய போதனைகள் வாழ்வதற்கு கடினமாக இருப்பதனால். ஆனால் அதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. சவாலான வாழ்க்கை.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கிறிஸ்தவ வாழ்வு – சவாலான வாழ்வு

இன்றைய நற்செய்தி சற்று வித்தியாசமான ஒரு செய்தியை நமக்குத்தருகிறது. இதுவரை இயேசுவைச்சாராத மற்றவர்கள் இயேசுவின் போதனையை ஏற்றுக்கொள்வது கடினமென்றும், அது குழப்பத்தை உண்டாக்குகிறது என்றும் சொல்லி வந்தனர். ஆனால், இன்றைய பகுதியில் இயேசுவோடு உடனிருந்த சீடர்களே, இயேசுவின் போதனையைக்கேட்டு, “இதை ஏற்றுக்கொள்வது கடினம்: இப்பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” என்று சொல்லிக்கொள்கிறார்கள். இயேசுவின் போதனை சீடர்களுக்கு ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருக்கிறது.

கிறிஸ்தவ மறையைப்பொறுத்தவரையில், இரண்டு கடினமான காரியங்களை நாம் பார்க்கலாம். 1. நம்மை முழுவதும் இயேசுவிடம் சரணடையச் செய்ய வேண்டும். 2. இயேசு சொல்கிற வார்த்தைகளை செயல்படுத்த வேண்டும். இதில் முதல் காரியம் அனைவரும் செய்கிற எளிதான ஒன்று. இயேசுவிடம் நம்மைச் சரணடையச்செய்வது அனைவரும் விருப்பத்தோடு செய்கிற செயல்பாடுகளுள் ஒன்று. ஆனால், இயேசுவின் மதிப்பீடுகளை, விழுமியங்களை வாழ்வாக்குவது எல்லோராலும் முடிகின்ற ஒன்று அல்ல. ஏனென்றால், அது ஒரு சவாலான வாழ்வு. நம்மையே ஒறுத்து வாழ்கிற வாழ்வு. உடலின் உணர்வுகளை ஒட்டுமொத்தமாக அடக்கி ஆள்கிற வாழ்வு. சுயத்தை விடுத்து பொதுநலனில் அக்கறை கொள்கிற வாழ்வு. ஆனால், அத்தகைய வாழ்வுதான் உன்னதமான வாழ்வு. இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிற வாழ்வு.

அத்தகைய உன்னதமான வாழ்வை வாழத்தான் கிறிஸ்தவர்களாகயி நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். அது கடினமான, சவாலான ஒன்றாக இருந்தாலும், முடியாத ஒன்றல்ல. ஆண்டவரின் துணைகொண்டு நம்மால் எதையும் செய்ய முடியும். எனவே, அப்படிப்பட்ட ஒரு சாட்சிய வாழ்வு வாழ, இறைத்துணையை நாம் நாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

“அன்றே பலர் அவரைவிட்டு விலகினர்”

நிலைவாழ்வு அளிக்கும் உணவாகத் தம் உடலைத் தருவதாக இயேசு கற்பித்தபோது, யூதர்கள் மட்டுமல்ல, இயேசுவின் சீடர்களில் பலரும்கூட முணுமுணுத்தனர் என்பதைத் தயங்காமல் பதிவு செய்திருக்கிறார் நற்செய்தியாளர் யோவான்.

அதுமட்டுமல்ல, தமது போதனையை இயேசு இன்னும் அழுத்தத்துடன் எடுத்துரைத்தபோது, அந்தப் போதனையை ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள் பிரிந்து சென்றனர் என்பதை “அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர்” என்று சோகத்துடன் பதிவுசெய்திருக்கிறார் நற்செய்தியாளர்.

நற்கருணை என்னும் அருள்சாதனத்தை நம்பாமல், ஏற்றுக்கொள்ளாமல் அதன் காரணமாகத் திருச்சபையை விட்டுப் பிரிந்து செல்லும் ஏராளமான கத்தோலிக்கர்களின் முதல் முன்னோடிகள் இவர்களே. ஆனால், இவர்களின் பிரிவு குறித்து, இயேசு கவலைப்படவில்லை, தமது போதனையை மாற்றிக்கொள்ளவுமில்லை.

திருச்சபையும் அவ்வாறே. விலகிச் செல்பவர்களை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக அடிப்படைப் போதனைகளில் மாற்றம் எதையும் செய்யவில்லை கடந்த 21 நூற்றாண்டுகளில். இயேசுவின் போதனைகள், திருச்சபையின் போதனைகளை முழு மனத்தோடு நாம் ஏற்று, வாழ்கிறோமா?

மன்றாடுவோமாக: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது போதனை ஏற்க மறுத்து உம்மைவிட்டு விலகிச் சென்ற சீடர்கள் போல, திருச்சபையைவிட்டுப் பிரிந்து செல்வோருக்காகவும் மன்றாடுகிறோம். நாங்களும் எங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கும் வரம் தருவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

#8220; நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா” !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு தன் சீடர்களை நோக்கி உருக்கத்துடன் கேட்ட இந்தக் கேள்வியை இன்று இயேசு நம்மை நோக்கிக் கேட்பதாக எடுத்துக்கொள்வோம். இன்றைய நாள்களில் பல்வேறு காரணங்களுக்காக இறைவனைவிட்டு, ஆலய வழிபாடுகளைவிட்டு, இறைமதிப்பீடுகளை விட்டுப் பிரிந்துபோகும் மனிதரின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்கும் இளையோரின் எண்ணிக்கை குறைகிறது. இறைபக்தி இல்லாமல், செபம் இல்லாமல், உலக நாட்டங்களில் ஈடுபட்டு வாழும் மனிதர் அனைவரும் இயேசுவை விட்டுப் பிரிந்து செல்கின்றனர். அவர்களை நோக்கி இயேசு கேட்கிறார்: #8220;நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” நாமோ ஆண்டவரையே என்றும் பற்றிக்கொள்வோமாக! #8220;நானும் என் வீட்டாருமோ, ஆண்டரையே என்றும் வழிபடுவோம்” என்று யோசுவா துணிவுடன் அறிக்கையிட்டதுபோல, நாமும் ஆண்டவரையே பற்றிக்கொண்டு வாழ உறுதி பூணுவோம்.

மன்றாடுவோம்: நிறைவின் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். உலக இன்பங்கள், செல்வம், பல்வேறு விதமான சோதனைகள் இவற்றின் மத்தியிலும், நான் உம்மை விட்டுப் பிரிந்துவிடாத அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

----------------------

 

 

இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் சீடரில் பலரும் இயேசுவின் போதனைகள் சிலவற்றைப் பற்றி, குறிப்பாக தமது உடலை உணவாகத் தருவது பற்றி இயேசு குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம் என்று பேசிக் கொண்டது ஒரு வியப்பான தகவல்தான். அந்தச் சீடர்களைப் பற்றி நாம் வியப்படைவதை நிறுத்திவிட்டு, நம்மைப் பற்றி ஓரிரு நிமிடங்கள் சிந்திப்போம்.

நமது வாழ்விலே பல வேளைகளில் இயேசுவின் போதனைகளைப் பற்றி இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம் என்றோ, அல்லது இதைக் கடைப்பிடிப்பது இயலாது என்றோ நாம் எண்ணியதில்லையா? நிச்சயமாக எண்ணியிருக்கிறோம். இயேசுவின் போதனைகள் பலவும் - எடுத்துக்காட்டாக மன்னிப்பைப் பற்றிய அவரது போதனை, கண்ணால் இச்சையுடன் நோக்குவதே விபச்சாரத்துக்குச் சமம், அனைத்தையும் துறந்துவிட்டு என்னைப் பின் செல்...  போன்றவை மிகக் கடினம் என்று தோன்றியிருக்கின்றன. இத்தகைய நேரங்களில் நாம் செய்ய வேண்டியது என்ன?

ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம். கடினமானதாக இருந்தாலும், உமது வார்த்தைகள்தான் எங்களை வாழவைக்கும் என்று அவரிடமே அடிபணிவோமா!

மன்றாடுவோம்; கடவுளுக்கு அர்ப்பணமானவரான இயேசுவே, நிலைவாழ்வு தரும் உமது வார்த்தைகளுக்காக உம்மைப் போற்றுகிறேன். உமது அறைகூவல் வார்த்தைகள் கேட்பதற்கும், கடைப்பிடிப்பதற்கும் கடினமாக இருந்தாலும், அவையே எங்களுக்கு நிறை வாழ்வைத் தரும் என்று நம்புகிறோம். எங்களை ஆசீர்வதியும். வலுப்படுத்தும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

 

''இயேசு பன்னிரு சீடரிடம், 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' என்று கேட்டார்.
சீமோன் பேதுரு மறுமொழியாக, 'ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்?
நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன' ... என்றார்'' (யோவான் 6:67-68)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மனித வாழ்க்கையில் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய தருணங்கள் அவ்வப்போது எழுவதுண்டு. வாழ்நாள் முழுவதும் கூடி வாழ்ந்து ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்க எண்ணுவோர் தங்கள் வாழ்க்கைத் துணை பற்றித் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட படிப்புத் துறையில் சேர்ந்து பிற்காலத்தில் நிலையான ஒரு தொழில் செய்ய விரும்புவோர் தங்கள் படிப்புப் பற்றி உறுதியான முடிவெடுக்க வேண்டும். அதுபோலவே, இயேசுவைப் பின்செல்வோரும் தங்கள் வாழ்க்கை முறை பற்றி உறுதியான முடிவெடுக்க அழைக்கப்படுகிறார்கள். இயேசு தாமே வானிலிருந்து இறங்கிவந்த உணவு என்றும் தம்மில் நம்பிக்கை கொள்வோர் எந்நாளும் வாழ்வர் என்றும் அறிவித்தார். மக்கள் எந்நாளும் உயிர்வாழ்வதற்காக இயேசு தம் உடலையும் இரத்தத்தையும் உணவாக, பானமாக அளிப்பதாகக் கூறினார். இயேசுவின் இந்தப் போதனையைக் கேட்ட மனிதர்கள் இயேசுவை நம்பி அவர் வழியில் செல்வதற்காக அழைக்கப்பட்டார்கள். அவர்கள் இயேசுவை ஏற்பதா வேண்டாமா என்பது பற்றி முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்தது. அப்போது பலர் இயேசுவை விட்டுச் சென்றுவிட்டார்கள். அவ்வாறு சென்றவர்களைக் கட்டாயப்படுத்தித் தம்மோடு இருக்க இயேசு அழைக்கவில்லை. மாறாக, தம்மோடு நெருங்கிப் பழகி, தம் போதனைகளின் உள்பொருளை அறியக் கொடுத்துவைத்த தம் ''பன்னிரு சீடரையும்'' நோக்கி இயேசு கேட்கிறார்: ''நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?'' (யோவா 6:67). அக்கேள்விக்கு எல்லார் பெயராலும் பதிலளிக்கிறார் பேதுரு. அவர் அளித்த பதில் இயேசுவில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. ''ஆண்டவரே, யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன'' என பேதுரு அளித்த பதில் நம் இதயத்திலிருந்தும் உதடுகளிலிருந்தும் எழ வேண்டும் (யோவா 6:68).

-- நிலைவாழ்வு தரும் வார்த்தைகள் இயேசுவிடம் இருப்பதால் அவருடைய போதனைக்கு நாம் எப்போதும் செவிமடுக்க வேண்டும். இயேசுவை நம்பி, அவரைப் பின்செல்வதாகக் கூறிய பன்னிரு சீடர்கள் தங்கள் உறுதிப்பாட்டிலிருந்து தடுமாறிய நேரங்கள் இருக்கத்தான் செய்தன. யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தார்; பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்தார்; எல்லாரும் இயேசுவின் உயிருக்கு ஆபத்து ஏற்படப்போகிறது என்றறிந்ததும் அவரைத் தனியே விட்டுவிட்டு ஓடிப்போய்விட்டார்கள். இவ்வாறு உறுதியற்ற நிலையில் இருந்த சீடரை இயேசு தூய ஆவியின் வல்லமையால் உறுதிப்படுத்தினார். அவர்களும் துணிந்து இயேசுவைப் பற்றி மக்களுக்கு அறிவிக்கலாயினர். இயேசுவுக்காகத் தங்கள் உயிரைக் கொடுக்கவும் முன்வந்தார்கள். நாம் இயேசுவின் போதனையைக் கேட்டு அதன்படி நடக்கும்போது எதிர்ப்புகள் எழலாம். அவற்றைப் பொருட்படுத்தாமல் இயேசுவின்மீது கொண்ட உறுதியான நம்பிக்கையில் நிலைத்திருந்தால் ''நிலைவாழ்வை''க் கடவுளிடமிருந்து கொடையாகப் பெற்று மகிழ்வோம்.

மன்றாட்டு
இறைவா, வாழ்வு தரும் வார்த்தைகளை உம் திருமகன் இயேசு வழியாக எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி!

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''இயேசு பன்னிரு சீடரிடம், 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' என்று கேட்டார்.
சீமோன் பேதுரு மறுமொழியாக, 'ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்?
நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன...' என்றார்'' (யோவான் 6:68)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவின் போதனை அவர்தம் சீடர்களின் கருத்துக்களையும் பொதுமக்கள் சிந்தனையையும் புரட்டிப்போடுவதாக அமைந்த நேரங்கள் இருந்தன. மக்களின் பொதுவான சிந்தனை ஒரு போக்கில் இருக்கவே, இயேசுவின் போதனை அவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்ததுண்டு. தம்மையே மக்களுக்கு உணவாக அளிக்கப்போவதாக இயேசு கூறிய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மக்கள் தயங்கினார்கள் என்பதை நாம் அறிகிறோம். ஏன், இயேசுவோடு கூடியிருந்து அவரோடு நெருங்கிப் பழகிய அவருடைய சீடர்கள் கூட இயேசு தம் உடலையும் இரத்தத்தையும் அவர்கள் உண்ணவும் பருகவும் வேண்டும் என்று கூறியதை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டினார்கள். அப்போது பல சீடர்கள் இயேசுவிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டார்கள். அவருடைய போதனை அவர்களுக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை. இப்பின்னணியில்தான் இயேசு தம் நெருங்கிய நண்பர்களாக இருந்த பன்னிரு திருத்தூதர்களையும் நோக்கி ''நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?'' என்று கேட்கிறார். இக்கேள்வியில் ஒருவித வேதனை தெரிவது நமக்குப் புரிகிறது. அதாவது. இயேசுவோடு நெருங்கிப் பழகிய பன்னிரு திருத்தூதர்களும் அவருடைய அன்புக்குத் தனிப்பட்ட சொந்தக்காரர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு இயேசு தம் போதனைகளின் உள் கருத்தைப் பலதடவைகளில் விளக்கியதுண்டு. அவர்களைத் தேர்ந்தெடுத்து தம் பணியைத் தொடர்வதற்கான பொறுப்பை இயேசு கொடுத்திருந்தார். இவ்வாறு இயேசுவுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் கூட அவரைக் கைவிட்டுவிட்டால் அதைப்போலப் பெரும் ஏமாற்றம் யாதுண்டு என்னும் எண்ணம் இயேசுவில் உள்ளத்தில் கவலையை உருவாக்கியிருக்க வேண்டும்.

-- எனவே இயேசு கேட்ட கேள்விக்குப் பேதுரு பதிலளிக்கின்றார். அவர் அளித்த பதில் இயேசுவிடத்தில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ''ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன...'' என்று பேதுரு அளித்த பதில் மொழி நம் பதில் மொழியாக மாறிட வேண்டும். நாமும் இயேசுவிடமிருந்து ''வாழ்வுதரும் வார்த்தைகளை'' பெற்றுள்ளோம். ஏன், இயேசுவே ''வாழ்வுதரும் கடவுளின் வார்த்தையாக'' நம்மிடையே வந்து பிறந்தார்; அவருடைய சொற்களும், செயல்களும் நமக்குக் கடவுளின் அன்பை வெளிப்படுத்தியுள்ளன; இயேசுவின் வாழ்வும் சாவும் உயிர்த்தெழுதலும் நம்மைக் கடவுளோடு ஒப்புரவாக்கியுள்ளன. இவ்வாறு இயேசு நமக்கு நிலைவாழ்வில் பங்களித்துள்ளார். இத்தகைய அரும் பேற்றினைப் பெற்றுக் கொண்ட நாம் வேறு யாரைத் தேடிச் செல்ல முடியும்? நம் வாழ்வின் ஆழ்ந்த வேட்கையை நிறைவேற்றுபவர் இயேசு. நம் இதயத்திலிருந்து எழுகின்ற தாகத்தைத் தணிக்கின்றவர் அவர். இவ்வாறு இயேசு நம் வாழ்க்கையை நிறைவுசெய்வதால் அவரிடமே நாம் மீண்டும் மீண்டும் செல்ல வேண்டும். அவரிடமிருந்தே நாம் கடவுளின் சக்தியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இயேசுவே கடவுளின் அருளை நம் இதயத்தில் பொழிந்து நம் வாழ்வின் வேட்கையைத் தணிப்பார்.

மன்றாட்டு
இறைவா, நீரே எங்கள் ஆன்ம வேட்கையைத் தணிக்கின்ற உணவாக வந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நற்கருணை ஒற்றுமையின் அருட்சாதனம். கிறிஸ்தவ வாழ்வின் மையம். கத்தோலிக்கத்தின் அடித்தளம். அன்பின் அருட்சாதனம். எல்லோரையும் ஒன்றிணைப்பது. உருவாக்குவது. நற்கருணை இல்லையேல் கத்தோலிக்க கிறிஸ்தவம் இல்லை.

இத்தனை சிறப்பு வாய்ந்த அருட்சாதனம்பற்றி இயேசு தன் சீடர்களுக்கு மிகப்பெரிய மறைக்கல்வி வகுப்பு நடத்தி அவர்களைத் தயாரித்துள்ளார். பல்வேறு விதங்களில் இந்த அருட்சாதனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் முணுமுணுமுத்தவர்கள், நம்பாதவர்கள், இப்பேச்சைக் கேட்காதவர்கள், போய்விட நினைத்தவர்கள், காட்டிக்கொடுக்க இருந்தவர்கள் இப்படி பெரிய கூட்டமே அன்றைக்கு இருந்துள்ளது.

இன்றைக்கும் இக் கூட்டத்திற்கு குறை இல்லை. நற்கருணையில் இறை பிரசன்னத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள், பல்வேறு பிரிவினைச் சபையினர்கள், அறைகுறையாக இதை ஏற்றுக்கொள்பவர்கள், ஏற்றுக்கொள்வோரிலும் அலட்சியமாக இருப்பவர்கள் என்று மாற்றுக் கருத்து கொடுப்போர் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

ஆளாலும் நற்கருணை இன்று வரையிலும் உலகம் முடியும் வரையிலும் இறை பிரசன்னமாக, ஆன்ம உணவாக, அன்பின் அருட்சாதனமாக, வாழ்வின் மையமாக, அனைத்தையும் ஒன்றிணைக்கும் அருளின் ஊற்றாக இருக்கிறது; இருக்கும் என்பதில் மாற்றம் இருக்காது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள அருள்நிலை அவசியம். ஆழ்ந்த விசுவாசம் இல்லாமல் இவ்வுண்மையை ஏற்றுக்கொள்ளமுடியாது. தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும்அவரிடம் வர இயலாது. தந்தை அருள்கூரும் நிலையை உருவாக்கிக் கொள்ளவோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்