வெள்ளி

முதல் வாசகம்

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2:1, 12-22

இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக்கொண்டார்கள்: `நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்; நம் செயல்களை எதிர்க்கிறார்கள்; திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள்; நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள். கடவுளைப் பற்றிய அறிவு தங்களுக்கு உண்டு என அவர்கள் பறைசாற்றுகிறார்கள்; ஆண்டவரின் பிள்iளைகள் எனத் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள். அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது; அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது. அவர்களது வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையினின்று வேறுபட்டது; அவர்களுடைய வழிமுறைகள் மாறுபட்டவை. இழிந்தோர் என நம்மை அவர்கள் எண்ணுகிறார்கள்; தூய்மையற்ற பொருளினின்று ஒதுங்கிச் செல்வதுபோல நம்முடைய வழிகளினின்று விலகிச் செல்கிறார்கள்; நீதிமான்களின் முடிவு மகிழ்ச்சிக்குரியது எனக் கருதுகிறார்கள்; கடவுள் தம் தந்தை எனப் பெருமை பாராட்டுகிறார்கள். அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார். அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.' இறைப்பற்று இல்லாதவர்கள் இவ்வாறு எண்ணி நெறி தவறிச் சென்றார்கள். அவர்களின் தீயொழுக்கமே அவர்களைப் பார்வையற்றோர் ஆக்கிவிட்டது. அவர்கள் கடவுளின் மறைவான திட்டங்களை அறிய வில்லை; தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்று நம்பவில்லை; மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும் என்று உய்த்துணரவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 34: 16-17, 18-19, 20 மற்றும் 22

பல்லவி: உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்.

16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது;
அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.
17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;
அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். -பல்லவி

18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; ந
ைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.
19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல;
அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். -பல்லவி

20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்;
அவற்றுள் ஒன்றும் முறிபடாது.
22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்;
அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

`மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.'

 

யோவான் 7:1-12,10,25-30

தவக்காலம் -நான்காம் வாரம் வெள்ளி


நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1, 2, 10, 25-30

அக்காலத்தில் இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக்கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை. யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது. தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார். எருசலேம் நகரத்தவர் சிலர், ``இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்து கொண்டார்களோ? ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே'' என்று பேசிக்கொண்டனர். ஆகவே கோவிலில் கற்பித்துக் கெண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், ``நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே'' என்றார். இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

24.03.2023 – யோவான் 7: 1 – 12, 25 - 30
நன்மை குறுகியதே

இந்த சமுதாயத்திலு நல்லோரின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. அது மட்டுமில்லாமல் அவர்களுக்கு வாழ்வு நாள் எதிர்ப்பின் காலமே என்று கிராமப்புறங்களில் முன்னோர்கள் கூறுவர். இது பல நேரங்களில் சாத்தியமான கூற்றாகவே அமைகிறது. அதனால் தான் காந்தியை கொலை செய்தார்கள், மக்கள் பணியாற்றிய அருட்சகோதரி. ராணி மரியாவை கொன்றார்கள். நீதிக்காக குரல் கொடுத்த டிராபிக் ராமசாமியை கேவலப்படுத்தினார்கள். இன்றைய விழா எழுச்சி நாயகன் புனித ஆஸ்கர் ரொமேரோ – வை கொலை செய்தார்கள். இவர்கள் அனைவருமே குறுகிய காலத்தில் இறந்தவர்கள் என்பதை விட மக்கள் பணியாற்றி உத்தமர்கள். அதனால் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் இன்றும் போற்றப்படுகின்றனர்.

இத்தகைய ஒரு நிலைமை தான் இன்றைய நாளிலே இருவருக்கு வருகின்றன. ஒன்று முதல் வாசகத்தில் கடவுளின் பிள்ளைகள் தாக்கப்படுவதையும், நற்செய்தி வாசகத்தில் கடவுளின் மகன் தாக்கப்பட போவதையும் நாம் பார்க்கின்றோம். இயேசு தம்முடைய இறையாட்சிப் பணியைத் தொடங்கிய காலத்திலிருந்தே மரணத்தின் சாயல் அவர் மீது தொடர்ந்து படர்ந்து கொண்டே இருந்தது என்று நாம் பார்க்கின்றோம். இயேசுவின் முன்னோடி திருமுழுக்கு யோவான் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு தலைவெட்டுண்டு கொல்லப்பட்டது இயேசுவின் மரணத்தை முன்னதாகவே பிரதிபலிக்கின்றது. தம் பணி வாழ்வில் சந்தித்த பல்வேறு மோதல்களில் அவரை எதிர்கொள்ள இயலாத அவருடைய எதிரிகளின் இறுதிக்சூழ்ச்சி அவரை எப்படி ஒழிக்கலாம் என்பதே. இதற்காகத் தான் பரிசேயரும், ஏரோதியரும் ஒன்று சோ்கின்றனர். இயேசு தம்முடைய கலிலேய பணியை முடித்துக் கொண்டு எருசலேம் நுழைந்த போது எருசலேம் ஆலயத்தில் யூதர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்த பிற இனத்தவரின் உரிமைகளை வலியுறுத்தவே ஓர் அடையாள வன்முறையில் ஈடுபட்டார். இதன் விளைவாக இயேசுவை கொலை செய்வதற்கான சூழ்ச்சி இன்றைய வாசகத்தில் நடைபெறுகிறது. ஆனால் இயேசு தான் கடவுளின் மகன் தன்னை யாரும் நெருங்க முடியாது (நெருப்புடா) என்ற கோட்பாட்டில் தெளிவாக இருக்கிறார். காரணம், தந்தையை முழுமையாக நம்பினார்.

நல்லோராக வாழ்வதனால் சீக்கிரமாக இறந்து விடுவேன் என்று நினைக்கிறோமா? துன்பம் வந்தாலும் கடவுளை மட்டும் தான் நம்புவேன் என்று எதிர்நீச்சல் போடுகிறோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

==============================

(யோவான் 07: 1-2, 10, 25 - 30)
பகை முற்றுகிறது

யோவான் ஐந்தாம் பிரிவில் இயேசு ஓய்வு நாளில் குணப்படுத்தியதால், எழும்பிய எதிர்ப்பு அப்படியே தொடர்ந்து, ஆறாம் பிரிவில் இயேசு, “நான் உயிர் தரும் உணவு” என்று கூறியதைக் கேட்டதும் இன்னும் வலுக்கிறது. இன்றைய ஏழாம் பிரிவோ எதிர்ப்பிலேயே தொடங்குகிறது. இந்த எதிர்ப்பு இன்னும் அதிகமாக வலுக்கிறது.
ஓய்வு நாளில் குணம் கொடுத்ததற்கே அவரை எதிர்த்த யூதர்களுக்கு இப்போது அவரின் மீது பழிபோட இன்னும் அதிகக் காரணங்கள் கிடைக்கின்றன.

1. யூதக் கணிப்புப்படி (மாற்கு 14 : 61-63) தன்னை மெசியா, தன்னைக் கடவுளிடமிருந்து வந்தவன் என்று சொல்லும் எவனும் கடவுளைப் பழித்துரைக்கிறான் என நம்பினர்.

2. இதையும் கூறிவிட்டு இயேசு இன்னும் ஒரு படி மேலே சென்று இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூத மக்களைப் பார்;த்து, “நீங்கள் கடவுளை அறியவில்லை, நானோ அவரை அறிவேன்” (யோவான் : 28,29) என்கிறார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருக்கிறது இயேசுவின் வார்த்தை. ஆனால் இயேசுவின் சொற்கள் அனைத்தும் உண்மையை எடுத்துரைக்கின்றன. உண்மைக்குச் சான்று பகர்கின்றன. இந்த உண்மை அவர்களைக் குறிப்பாக அதிகார வர்க்கத்தில் இருந்த யூதர்களைச் சுட்டதால் அவர்கள் இயேசுவைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்கள்.

இயேசுவின் வார்த்தை நம்மை சுடுகிறதா? அல்லது நாம் பட்ட காயங்களுக்குக் கட்டுப் போடுகிறதா? என்பதிலிருந்து நாம் அவர் பக்கமா? அல்லது எதிர்ப்பக்கமா? என்பதைக் கண்டுணர முடியும். இத்தவக்காலத்தில் அவர் பக்கம் நின்று அவரது சிலுவையைத் தாங்க முயற்சிப்போம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 34: 16 – 17, 18 – 19, 20, 22
”உடைந்த உள்ளத்தோர்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்”

உடைந்த உள்ளம் கொண்டோர் யார்? உடைந்த உள்ளம் கொண்டவர்கள் நேர்மையாக வாழ வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள். கடவுளைப் பற்றிக்கொண்டு வாழ்க்கையை நடத்துகிறவர்கள். கடவுளுக்கு பயந்து வாழ்கிறவர்கள். வாழ்க்கையில் எல்லாமே கடவுள் தான், என்று கடவுள் நம்பிக்கை கொண்டு வாழ்கிறவர்கள். அவர்களுக்கு அருகில் ஆண்டவர் இருக்கிறார் என்கிறது திருப்பாடல்.

உடைந்த உள்ளத்தோர்க்கு அருகில் ஆண்டவர் ஏன் இருக்க வேண்டும்? இந்த உலகத்தில் எல்லாருக்குமே கவலைகள், துன்பங்கள் நிச்சயம் இருக்கும். பலவற்றிற்கு நாம் செய்கிற தவறுகளே கூட, காரணமாக இருக்கலாம். ஆனால், நேர்மையாக வாழ வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள், எல்லா சவால்களையும், எதிர்ப்புக்களையும் கண்டு, பயப்படாமல், கடவுள் நம்மோடு இருக்கிறார் என்கிற எண்ணத்தின்படி, வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள். அவர்களது வாழ்க்கையில் சிறிய துன்பம் வந்தாலும், நிச்சயம் அவர்கள் கடவுளைத் தேடுவார்கள். ஏனெனில், அவர்கள் கடவுள் வகுத்துக்கொடுத்த நெறிகளின்படி வாழ்கிறவர்கள். துன்பங்கள் அவர்களை தாக்குகிறபோது, மற்றவர்களைவிட, அவர்களது உள்ளம் எளிதில் நொறுங்கிவிடும். காரணம், அவர்கள் கடவுளைப் பற்றிக்கொண்டு வாழ்கிறவர்கள். எனவே, அவர்கள் கவலை கொள்ளாமல் இருப்பதற்காக, திருப்பாடல் ஆசிரியர், இந்த நம்பிக்கையை அவர்களுக்குள்ளாக விதைக்கிறார்.

கடவுள் உடைந்த உள்ளத்தோர்க்கு அருகில் இருந்து, அவர்களை வழிநடத்துகிறார். அவர்களை எதிரிகளின் கண்ணியினின்று விடுவிக்கிறார். அவர்களை துன்பங்கள் தாக்காதவாறு பாதுகாக்கிறார். அந்த நம்பிக்கையோடு, அவர்கள் வாழ வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் விடுக்கின்ற அழைப்பு, நமக்கும் பொருந்தும். நாமும் நேர்மையானவர்களாக வாழ வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கையில், கடவுள் நம்மோடு இருக்கிறார் என்கிற எண்ணம் கொண்டு வாழ வேண்டும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------

நாம் யார் பக்கம்?

இயேசு யூதர்களுக்கு மத்தியில் போதித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய போதனையில் காணப்பட்ட இரண்டு செய்திகள், யூதர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதல் செய்தி: இயேசு கடவுளிடமிருந்து வந்ததாகச் சொன்னது. இரண்டாவது செய்தி: யூதர்களுக்கு கடவுள் யார்? என்பது தெரியவில்லை என்பது. இயேசுவின் இந்த இரண்டு செய்திகளுமே, யூதர்களுக்கு அதிர்ச்சியை மட்டுமல்ல, எரிச்சலையும், கோபத்தையும் கொண்டு வந்தது. எதற்காக யூதர்கள் கோபப்பட வேண்டும்? அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

யூதர்கள் தாங்கள் மட்டும் தான், கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், தாங்கள் மட்டும் தான் கடவுளை அறிந்தவர்கள் என்ற, கர்வம் கொண்டிருந்தார்கள். பிற இனத்தவர்களை மிகவும் இழிவாகக் கருதினார்கள். அப்படிப்பட்ட யூதர்களைப்பார்த்து, கடவுளைப்பற்றி ஒன்றும் தெரியாது, என்று சொன்னால் நிச்சயம் அவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். இயேசுவின் இந்த போதனை, அவர் மீது குற்றம் சுமத்துவதற்கு, அவருடைய எதிரிகளுக்கு மிகவும் எளிதாய்ப் போனது. இதுநாள் வரை ஓய்வுநாள் ஒழுங்குகளை மீறுகிறவர் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருந்தது. இப்போது, கடவுளுக்கு எதிராகப் பழிச்சொல்லைப் பேசுகிறவர் என்கிற குற்றச்சாட்டும் அவா் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், இயேசு உண்மைக்காக எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்.

இயேசுவுக்கு எதிராக, இயேசுவுக்கு ஆதரவாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் இயேசுவின் பக்கம் பலர் நின்றனர். அவருக்கு எதிராகவும் இருந்தனர். நாம் யார் பக்கம் நிற்கப் போகிறோம்? இயேசுவின் சார்பில் நிற்கப் போகிறோமா? அல்லது அவருக்கு எதிராக நிற்கப் போகிறோமா? சிந்திப்போம், செயல்படுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கடவுளை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம்?

”என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத்தெரியாது”. இந்த வார்த்தைகள் தான் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முக்கியமான வார்த்தைகள். இந்த வார்த்தைகள் தான் இயேசுவைக் குற்றவாளியாக்கிய வார்த்தைகள். இந்த வார்த்தைகள் தான், இயேசுவிடமிருந்து பல நாட்களாக, அவரிடத்தில் குற்றம் காணுகிறவர்கள் எதிர்பார்த்த வார்த்தைகள். அவர்கள் இயேசுவைக் குற்றம் சுமத்த தேடிக்கொண்டிருந்தது கிடைத்துவிட்டது.

இந்த வார்த்தைகளில் அப்படி என்ன தான் குற்றம் சுமத்த முடியும்? யூதர்கள் தாங்கள் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாக நினைத்தனர். தாங்கள் கடவுளுக்கு மிக அருகாமையில் உள்ளவர்களாக எண்ணினர். கடவுளை தங்களைத்தவிர அறிந்தவர்கள் யாரும் இல்லை என்ற மமதை கொண்டிருந்தனர். ஆனால், இயேசு அவர்களுக்கு கடவுளைத்தெரியாது என்று சொல்கிறார். சாதாரண மனிதர்கள் யாரும் பேசக்கூடாத இஸ்ரயேலைப்பற்றியும், இஸ்ரயேலின் கடவுளைப்பற்றியும் அவர் பேசியது, கடவுளைப்பழித்துரைத்ததற்கான செயல் என்று அதிகாரவர்க்கத்தினர் அவரை குற்றம் சுமத்தினர்.

கடவுளைப்பற்றி பலரும், பலவிதமாகப் புரிந்துகொண்டுள்ளனர். தங்களது அனுபவத்தை பலவிதமாக வெளிப்படுத்தியுள்ளனர். எழுதியும் வைத்துள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வெளிப்படுத்தியுள்ளனர். நாமும் கடவுள் அனுபவம் பெற வேண்டும். அந்த அனுபவத்தை மற்றவர்கள் பெறுவதற்கு உதவ வேண்டும். குறுகிய கண்ணோட்டத்தோடு கடவுள் அனுபவத்தை நாம் அணுக முடியாது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கடவுளின் வல்லமை

இயேசு மீது பல குற்றச்சாட்டுக்கள் உயர்மட்ட யூதர்களால் முன்வைக்கப்பட்டது. இயேசு ஓய்வுநாளுக்கு எதிராகப்பேசுகிறார், மக்கள் மத்தியில் கலகம் செய்கிறார் போன்றவை இயேசுவின் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுக்களுள் முக்கியமானவை. இவற்றின் உச்சகட்டமாக இன்றைய நற்செய்தியில் தன்னை மெசியாவாக, கடவுளின் மகனாகச்சொல்லி, கடவுளுக்கு எதிராக அவதூறாகப்பேசுவதாக இயேவின் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதிலே குறிப்பிடத்தக்க காரணம், மெசியாவின் வருகையைப்பற்றிய யூதர்களின் நம்பிக்கை. மெசியா பெத்லகேமில் தோன்றுவார் என்பதை அவர்கள் நம்பினர். ஆனால், மெசியா எப்பேர்து, எங்கேயிருந்து, எப்படி வருவார் என்பதை யாரும் சொல்ல முடியாத அளவுக்கு திடீரென்று மின்னலைப்போல வருவார் என்று நம்பினார். ஆனால், இயேசு யார்? அவரின் ஊர் எது? அவருடைய பெற்றோர்கள், சகோதரர்கள் யார்? என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. எனவே, இயேசு மெசியாவாக இருக்க முடியாது என்பது அவர்களின் எண்ணம்.

மக்கள் நடுவில் எவ்வளவுதான் புதுமைகள் செய்தாலும், அறிவார்ந்த முறையில் பேசினாலும், அதிகாரத்தோடு போதித்தாலும் மக்களின் உள்ளத்தில் தான் ‘மெசியா’ என்ற உண்மையை சரியான விதத்திலே விதைக்க முடியவில்லையே என்று இயேசு எப்போதும் சோர்ந்து போனதில்லை. அப்படி மக்களுக்குத் தெளிவுபடுத்துகிற வேளையில், தன்னுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் தவறாகத்திரிக்கப்பட்டு, தன்மேல் குற்றச்சாட்டுகளுக்கு மேல் குற்றசாட்டுக்களை அடுக்கிக்கொண்டு, தன்னை ஏளனமாக, இழிவாக, பொறாமை உணர்வோடு பார்க்கும் தன்னுடைய எதிரிகளைக்கண்டு இயேசு பயப்படவும் இல்லை. தன்னுடைய இலக்கு நிறைவேறும்வரை அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல், கொண்ட இலக்கில் உறுதியாக இருக்கிறார். தடைகளைத்தாண்டி தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறார். அவருக்கு நேசக்கரம் நீட்டியவர்கள் அவருடைய உறவினர்கள்அல்ல, அவரோடு இருந்த சீடர்கள் அல்ல, மாறாக, தந்தையாகிய கடவுள் மட்டும்தான். கடவுளைப்பற்றிக்கொண்டு துணிவோடு நடக்கிறார். தன் இலக்கை அடைகிறார்.

வாழ்வில் கடவுளைப்பற்றிக்கொள்கிறவர்களுக்கு தோல்வியே கிடையாது. எத்தனை தடைகள் வந்தாலும், யார் நம்மை இழிவுபடுத்தினாலும் கடவுளைத்துணையாகக் கொண்டு, அவர்கரம் பற்றி நடக்கின்றபோது, நமது இலக்கை நிச்சயமாக அடைவோம். கடவுள்பக்தி, வருகிற தடைகளைக்கண்டு துவண்டுபோவது அல்ல, மாறாக நம்மை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும். அத்தகைய கடவுளின் ஆற்றலைப்பெற மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

நேரம் வராததால், யாரும் அவரைத் தொடவில்லை!

இயேசு சாவுக்கு அஞ்சியவர் அல்லர், இருப்பினும் எப்படிச் சாகலாம் எனத் தற்கொலை உணர்வுடன் வாழ்ந்தவரும் அல்லர்.

எனவேதான், "யூதர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக்கொண்டிருந்ததால், அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை. அவரது சீடர்கள் எருசலேம் திருவிழாவுக்குச் சென்றபின் இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார் "வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்" என்கிறார் நற்செய்தியாளர்.

ஆனால், அதே வேளையில் எருசலேமில் அவர் ஒளிந்து திரியவுமில்லை. தேவைப்பட்ட நேரங்களில் அவர் பேசினார், போதித்தார். எனவேதான், "இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? இதோ, இங்கே இவர் வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருக்கிறாரே? யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே!" என மக்கள் பேசிக்கொண்டனர்.

இயேசுவும் கோவிலில் உரத்த குரலில் போதித்தார். ஆனால்,"அவருடைய நேரம் இன்னும் வராததால், யாரும் அவரைத் தொடவில்லை" என்கிறார் நற்செய்தியாளர் யோவான்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இதுதான். இயேசுவைப் போல, நாமும் அச்சமற்றவர்களாய், அதேவேளையில் பாம்புகளைப்போல் முன்மதி கொண்டவர்களாய்ப் பணியாற்ற வேண்டும். தேவையின்றி ஆபத்தான பணிகளில் ஈடுபடவேண்டியதில்லை, அதே வேளையில் நமது உயிரும், வாழ்வும் இறைவன் கையில் இருப்பதனால், அச்சமின்றி பணியாற்றலாம்.

நமக்கென இறைவன் குறித்த நேரம் வரும்வரையில் யாரும் நம்மைத் தொடமுடியாது.

மன்றாடுவோம்: எங்கள் வாழ்வின் நிறைவும், செல்வமுமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போல நாங்களும் அச்சமின்றி, நேர்மையுடன் எங்கள் பணிகளை ஆற்ற தூய ஆவியின் கொடையை எங்களுக்குத் தந்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

''இயேசு, 'என்னை அனுப்பியவர் உண்மையானவர்...
நான் அவரிடமிருந்து வருகிறேன்' என்றார்'' (யோவான் 7:28-29)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவை நாம் புரிந்துகொள்வதற்கு நான்கு நற்செய்தியாளர்கள் பல தகவல்களைத் தருகின்றனர். குறிப்பாக யோவான் நற்செய்தியாளர் இயேசு தம்மைப் பற்றி யூதர்களுக்கு விளக்கிக் கூறியதை விரிவாகப் பதிவுசெய்துள்ளார். தங்களை எல்லாவித அடிமைத்தனங்களிலிருந்தும் விடுவிடுத்து, தங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்கி நீதியோடு ஆட்சிபுரிவதற்கு ஒரு மெசியா வருவார் என்னும் எதிர்பார்ப்பு யூதர்கள் நடுவே மிக ஆழமாக வேரூயஅp;ன்றியிருந்தது. அதிகாரத்தோடும் படைபலத்தோடும் மெசியா வருவார் என்றும், அவரே உரோமையரின் ஆட்சியை முறியடிப்பார் என்றும் மக்கள்நடுவே எதிர்பார்ப்பு இருந்தது. இப்பின்னணியில் இயேசு தாம் கடவுளிடமிருந்து வருவதாக அறிவிக்கின்றார். இதை ஏற்க மறுக்கின்றனர் பல யூதர்கள். எனவே, இயேசு அவர்களைப் பார்த்து, ''நான் கடவுளிடமிருந்து வருகிறேன்'' என்று கூறியதோடு அதே கடவுளின் வல்லமையோடு தாம் அரும்செயல்கள் ஆற்றுவதாகவும் உரைக்கின்றார்.

-- இயேசு உண்மையிலேயே கடவுள்தானா என்னும் கேள்வி அன்று எழுந்ததுபோல இன்றும் எழுகின்றது. கிறிஸ்தவ நம்பிக்கைப்படி, இயேசு கடவுளிடமிருந்து வருகிறவர்; ஏன், இயேசு கடவுளின் ''மகன்''. ஆகவே, இயேசு தம்மைக் கடவுளுக்கு ஒப்பிட்டுப் பேசியபோதும் தாம் கடவுளால் அனுப்பப்பட்டதாகவும் கூறினார். இதைப் புரிந்துகொள்ள பல யூதர் தயக்கம் காட்டினார்கள். ஏனென்றால் அவர்களது சமய நம்பிக்கைப்படி எந்த மனிதரும் தம்மைக் கடவுளுக்கு நிகராகக் கருதமுடியாது. ஆனால் நாசரேத்திலிருந்து வந்த இயேசுவோ தம்மைக் கடவுளுக்கு நிகரானவராகக் காட்டினார். எனவே பல யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. இன்றைய உலகில் வாழ்கின்ற நாம் இயேசுவின் வரலாற்றை அறிந்து, அவருடைய சொற்களை ஏற்று, அவர்மீது நம்பிக்கை கொள்வதற்கு முன்வருகிறோம். ஆனால் இந்நம்பிக்கை நம்மில் இயல்பாகத் தோன்றுகின்ற மனநிலை அல்ல. நம்பிக்கை என்பது கடவுள் நமக்கு அளிக்கின்ற ஒரு கொடை. அதை நன்றியோடு ஏற்பது நம் பொறுப்பு.

மன்றாட்டு
இறைவா, எங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தியருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை."

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

ஆமாம். நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை. உங்கள் நேரம் வரும் வரை யாரும் உங்களையும் தொடமுடியாது. அதுவரை மகிழ்ந்து வாழுங்கள். இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வாழுங்கள். நன்மைகளைச் செய்து, நல்லவைகளுக்கும் நற்செய்திக்கும் சான்று பகர்ந்து வாழுங்கள். உங்களை யாரும் தொடமுடியாது. தலைமுடி ஒன்றையேனும் அசைக்க முடியாது. துணிவோடு செயல்படுங்கள்.

உங்களைத் துன்புறுத்துவோர் திட்டமிட்டு , வாய்ப்பு தேடி காத்திருப்பர். கும்பல் எங்கு கூடும், கோயில் திருவிழா எப்பொழுது கொண்டாடப்படும் என்ற யூதர்களும் பரிசேயர்களும் காத்துக்கிடந்தது போல,உன்னை அவமானப்படுத்த, உனக்குப் பொருள் இழப்பு ஏற்படுத்த, உன்னைத் தனிமைப்படுத்தி மனவேதனை கொடுக்க உன் எதிரிகள் காலம் காலமாக, ஆண்டு ஆண்டாக காத்திருக்கலாம், முயற்சி செய்யலாம். உன் நேரம் வரும்வரை யாரும் உன்னைத் தொட உன் தேவன் அனுமதிக்கமாட்டார்.

அழிவு செய்ய பல நாட்கள், பல மாதங்கள், பல ஆண்டுகள் உன் பகைவர்கள் திட்டமிடலாம். காலங்கள் அவர்களுடையதாக இருக்கலாம். நீங்கள் அஞ்சவேண்டாம். ஏனெனில் நேரமும் நிமிடமும் இறைவனுடையது. கடைசி துளி உன் தேவனுடையது. அதுவரை நீ தொடர்ந்து போராடலாம். கடைசி நேரத்தில், நிமிடத்தில் உன்னைக் காப்பார். ஆகவே யாரும் உங்களைத் தொடமுடியாது. இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்