முதல் வாசகம்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20

`ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்; நானும் புரிந்து கொண்டேன். பின்னர் நீர் அவர்களின் செயல்களை எனக்குக் காட்டினீர். வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்; அவர்கள் எனக்கு எதிராய், `மரத்தைப் பழத்தோடு அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்; அவன் பெயர் மறக்கப்படட்டும்' என்று சொல்லிச் சதித் திட்டம் தீட்டியதை நான் அறியாதிருந்தேன். படைகளின் ஆண்டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்; உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர்; நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும். ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 7: 1-2. 8-9. 10-11

பல்லவி: ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.

1 என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்;
என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.
2 இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்;
விடுவிப்போர் எவரும் இரார். -பல்லவி

8 ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும்.
9 பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்;
நல்லாரை நிலைநிறுத்தும்; நீர் எண்ணங்களையும்
விருப்பங்களையும் கண்டறிபவர்; நீதி அருளும் கடவுள். -பல்லவி

10 கடவுளே என் கேடயம்; நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார்.
11 கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி;
நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக்கொள்ளாத இறைவன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

 

யோவான் 7:40-53

தவக்காலம் -நான்காம் வாரம் சனி

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 40-53

அக்காலத்தில் யூதர்களின் திருவிழா கூட்டத்தில் சிலர் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, ``வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே'' என்றனர். வேறு சிலர், ``மெசியா இவரே'' என்றனர். மற்றும் சிலர், ``கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?'' என்றனர். இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது. சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை. தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், ``ஏன் அவனைப் பிடித்துக் கொண்டு வரவில்லை?'' என்று கேட்டார்கள். காவலர் மறுமொழியாக, ``அவரைப்போல எவரும் என்றுமே பேசியதில்லை'' என்றனர். பரிசேயர் அவர்களைப் பார்த்து, ``நீங்களும் ஏமாந்து போனீர்களோ? தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா? இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்'' என்றனர். அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம், ``ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?'' என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக, ``நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்'' என்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

(யோவான் 07 : 40-53)
பிளவு ஏன்?

“அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது” (யோவான் 7:43) ஆம், நேற்றைய நற்செய்தியின் தொடக்கமாக இன்றைய நற்செய்தியின் சிந்தனை அமைகின்றது. அவருக்குச் சார்பாகவும் எதிராகவும் மக்களிடையே பிளவு ஏற்படுகிறது. இப்பிளவுக்குக் காரணம் இயேசுவா? உறுதியாக இல்லவே இல்லை. மக்களின் முற்சார்பு எண்ணங்களையும், அறியாமையையும், அதிகார வர்க்கத்தினர் மிகவும் சரியாக அவர்களுக்கேற்றார் போல் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

கலிலேயர்கள் என்றாலே கலகக்காரர்கள் என்ற முற்சார்பு எண்ணத்தையும், கலிலேயாவில் இயேசு தன் பணிவாழ்வின் பெரும்பகுதியை செலவழித்ததால் அவர் ஒரு கலிலேயன் என்ற முடிவுக்கு வருகின்ற அறியாமையை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும். ‘கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றவில்லை’ என்ற எண்ணம் திசை திருப்புபவர்களின் திமிரையும், அதிகார வர்க்கத்தினரின் அடக்குமுறையையும், படித்தவர்களின் முட்டாள் தனத்தையும் காட்டுகின்றது.

இதே நபர்கள் தான் இன்றும் நம்மைப் போன்ற பாமர மக்களின் அறியாமையையும், முற்சார்பு எண்ணத்தையும் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். கடவுளுக்கும் எல்லை வகுத்துக் கட்டுப்படுத்தி மதக்கலவரத்தைத் தூண்டிவி;ட்டு நாட்டைக் கூறு போடக் காத்திருக்கின்றனர். இயேசுவின் பக்கம் நின்று இவர்களை இனம் கண்டு வேரறுப்போம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

”ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்”

இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்கள் ஒவ்வொரு விதத்தில், ஒவ்வொரு இடத்தில் அடைக்கலம் புகுகிறார்கள். ஒருசிலர், புகழுக்கு மயங்கி, புகழிடத்தில் அடைக்கலம் புகுகிறார்கள். ஒரு சிலர், வாழ்க்கை முழுவதும் செல்வம் சேர்க்க வேண்டும், செல்வம் தான் வாழ்க்கை என செல்வத்திடம் தங்களையே கையளிக்கிறார்கள். ஒரு சிலா் அதிகாரம் தான் எல்லாமே, என்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தங்களது வாழ்க்கையை செலவழிக்கிறார்கள். இவர்கள் அனைவருமே எப்போதும் நிறைவைக் காணப்போவதில்லை. புகழும், பணமும், அதிகாரமும் எவருக்கும் நிறைவைத் தந்ததில்லை. நிம்மதியின்மையைத்தான் கொடுத்திருக்கின்றன. கடவுளிடம் நாம் அடைக்கலம் புகுவதுதான், நமக்கு நிறைவையும், மகிழ்வையும் தரும் என்று, திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

கடளிடம் தஞ்சம் கொள்வதே நமக்கு நலம் என்பது திருப்பாடல் ஆசிரியரின் கருத்து மற்றும் வாழ்க்கைப்பாடம். கடவுளிடம் ஏன் நாம் அடைக்கலம் புக வேண்டும்? ஏனென்றால், கடவுள் தான் நமக்கு எல்லாமுமாக இருக்கிறார். கடவுள் தான் நம்மைப்படைத்தவர். கடவுள் தான், நமக்கு வழிகாட்டியாக இருக்கிறவர். நமக்கு வாழ்க்கைநெறிகளை வகுத்துத்தருகிறவர். நாம் மகிழ்வோடு, மனநிறைவோடு வாழ வேண்டும என்று நினைக்கக்கூடியவர் கடவுள் ஒருவர் தான். எனவே தான், மனிதர்கள் எவ்வளவு தான் தவறுகள் செய்தாலும், அவர்களை மன்னித்து, அவர்களுக்கு மீட்பைப் பெற்றுத்தருவதில் கடவுள் அதிக அக்கறை காட்டுகிறார். அவர்களை சரியான பாதைக்கு வழிநடத்துவதில் அக்கறை கொள்கிறார்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் கடவுளிடம் தஞ்சம் புகுந்தால், நாம் செல்ல வேண்டிய பாதைகளை கடவுள் வகுத்துத்தருவார். நாம் செல்கிற பாதை சவால்கள் நிறைந்திருந்தாலும், அவர் நம்மை பாதுகாப்பாய் வழிநடத்துவார். எனவே, மனிதர்களாகிய நாம் ஆண்டவரிடத்தில் நம்மை முழுமையாக ஒப்படைப்போம். ஒப்புக்கொடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

இறையனுபவம்

இயேசுவை முன்னிட்டு மக்களிடையே பிளவு ஏற்படுகிறது. ஒரு சில யூதர்கள் இயேசுவை, மோசே உறுதியளித்த இறைவாக்கினராகப் பார்த்தார்கள். இணைச்சட்டம் 18: 15 ”உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஒர் இறைவாக்கிரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு”. மற்றும் சிலர், இயேசுவை கடவுளின் அபிஷேகம் செய்யப்பட்டவராகப் பார்த்தனர். இதனைத் தொடர்ந்து, ஒரு சிலர் பெத்லகேமிலிருந்து தான், மெசியா வரக்கூடும் என்று சொல்ல ஆரம்பிக்கிறார்கள். இவ்வாறு இறையியல் வாக்குவாதம் அவர்களுக்காக தொடர்கிறது.

இயேசு வாக்குவாதத்திற்கு உட்பட்டவர் அல்ல. அவர் அறியப்பட வேண்டியவர். அன்பை அறிந்து கொள்ள வைக்கக்கூடியவர். ஒவ்வொருவரும் வேறு வேறு விதமாக இயேசுவை அறிந்து கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அவரை அனைவருமே மீட்பராக ஏற்றுக்கொண்டால் அதுவே போதுமானது. நமது வாழ்க்கையில் நாமும் நமது சூழ்நிலையில், நமது பிண்ணனியில் இயேசுவை அனுபவிக்கிறோம். நம்மைப்போல ஒவ்வொருவரும் அவரவர் சூழலில், பிண்ணனியில் இயேசுவை அனுபவிக்கிறார்கள். நாம் தான் சரி, மற்றவர்களின் அனுபவம் தவறு என்கிறபோது, அங்கே தேவையற்ற வாக்குவாதமும், பிரச்சனையும் எழுகிறது. அதனை விடுத்து, ஒருவர் மற்றவரின் அனுபவங்களை, அறிந்துகொண்டு, நமது அனுபவத்தை வளப்படுத்திக் கொள்வோம்.

இயேசுவின் அனுபவம் நம்மையும் நமது வாழ்வையும் வளப்படுத்த வேண்டும். ஆன்மீக நெறியில் நம்மை ஆழப்படுத்த வேண்டும். நமது வாழ்வை மாற்றி, நம் வழியாக மற்றவர்கள் வாழ்வு பெறுவதற்கு உதவியாக இருக்க வேண்டும். அத்தகைய ஒரு இறையனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் இறைவனிடம் மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நன்மைக்குத் துணைபோவோம்

தலைமைக்குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் இயேசுவைப்பிடிக்காமல் திரும்பி வந்தனர். அவரது போதனையைக் கேட்டு அவர்களே மலைத்துப்போயினர். இதைக்கேட்ட பரிசேயர்கள் அவர்கள் மீது கோபமடைந்தனர். அப்போது நிக்கதேம், இயேசுவுக்காகப் பரிந்து பேசுகிறார். தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்திக்கொள்ள, சட்டத்தைக் கையிலெடுக்கிறார். ”பொய், புரளியை நீ கிளப்ப வேண்டாம். அநியாயமாய்ப் பொய்ச்சாட்சியாகி, நீ தீயவருக்குக் கைகொடுக்க வேண்டாம்” (விடுதலைப்பயணம் 23: 1). இயேசுவைப்பற்றி அவர்கள் சொல்வது தவறு என்பது நிக்கதேமுக்கு தெரிந்திருந்தது. அதை எதிர்த்துக் கேட்கவும் செய்கிறார். ஆனாலும், அவர் பயப்படுகிறார். பட்டும் படாமலும் பேசி, தனக்கு ஆதரவு இல்லையென்று தெரிந்தவுடன், அவர் வாய்மூடி மெளனியாகி விடுகிறார்.

இன்றைக்கு பொதுநன்மைக்காய் உழைக்கிற மனிதர்கள் நம் மத்தியில் பலர் இருந்தாலும், எவற்றையும் எதிர்கொள்ள அவர்கள் துணிவு கொண்டிருந்தாலும், குறைந்தபட்சம் அவர்களுக்கு நமது ஆதரவு தெரிவிக்கக்கூட நாம் தயங்கிக்கொண்டிருக்கிறோம். அவர்கள் மீது அவதூறுகள் வீசப்படுகிறபோது, அவர்கள் அநியாயமாகத்தண்டிக்கப்படுகிறபோது, தட்டிக்கேட்காமல், நமக்கு ஏன் வீண் வம்பு என ஒதுங்குவதற்கு முயல்கிறோம். அது தவறு என்பதை நாம் உணர வேண்டும். பொதுநன்மைக்காய் உழைக்கிறவர்களி சார்பாக நாம் நிற்காதது, தீமைக்குத் துணைபோவது என்பதை நாம் உணர வேண்டும்.

நமது வாழ்வில் நீதிக்காய் உழைப்போரின் கைகளை வலுப்படுத்த, அவர்களோடு நாமும் சேர்ந்து உழைக்க, நமக்கு மனவலிமை வேண்டி ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம். நமது வாழ்வு உண்மையான சாட்சிய வாழ்வாக இருக்க, தொடர்ந்து உறுதி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இவர்களில் நாம் யார்?

இன்றைய நற்செய்தியில் மூன்று வகையான கதைமாந்தர்களையும், அவர்களின் எண்ண ஓட்டங்களையும் பார்க்கிறோம். இவர்கள் ஒவ்வொருவருமே, பலதரப்பட்ட மனிதர்களைப்பிரதிபலிக்கிற பிம்பங்களாக இருக்கின்றனர். இவர்களில் நாம் யாராக இருக்கிறோம்? யாராக இருக்க வேண்டும்? என்னும் கேள்வியோடு இவர்களைப்பார்ப்போம்.

1. காவலர்கள்: தலைமைக்குருக்களாலும், காவலர்களாலும் இயேசுவைக் கைதுசெய்வதற்காக அனுப்பப்பட்டவர்கள் காவலர்கள். அவர்களுக்கு தலைமைக்குருக்களின் அதிகாரம் நன்றாகத்தெரியும். அவர்கள் சொல்வதைத் தாங்கள் செய்யவில்லை என்றால், அதனால் வரும் விளைவுகளும் நன்றாகத்தெரியும். ஆனாலும், அவர்களின் துணிவு நம்மை வியக்கவைக்கிறது. நிச்சயம் அவர்களை அனுப்பிய தலைமைக்குருக்களுக்கு இது ஒரு அதிர்ச்சியான செய்திதான். ஆனாலும் அந்த அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ‘நீங்களும் ஏமாந்துபோனீர்களா?’ என்று தங்களது ஏமாற்றத்தை வெளியே காட்டாமல், அவர்களைப்பார்;த்து முணுமுணுக்கிறார்கள். காவலர்களின் உடல் மட்டுமல்ல, உள்ளமும் வீரம் என்பதற்கு அவர்களின் சாட்சியம் சிறந்த எடுத்துக்காட்டு. சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் அவர்களுக்கு இடம் இல்லையென்றாலும், அவர்களின் நேர்மை நமக்கெல்லாம் மிகப்பெரிய படிப்பினை.

2. நிக்கதேம்: படித்தவர், மிகப்பெரிய பதவியிலே இருக்கிறவர். செல்வாக்குப்பெற்றவர். இயேசுவுக்கு எதிராக நடக்கும் அனைத்து சதிகளையும் முழுமையாக அறிந்திருக்கிறவர். இயேவுக்கு எதிராகச் சாட்டப்படும் அனைத்தும் ஆதாரமற்றவை, தவறானவை என்பதும் அவருக்குத்தெரியும். ஆனாலும், துணிவோடு உண்மையைச்சொல்வதற்கு தயங்குகிறார். காரணம் தனது இந்த செல்வாக்குமிக்க வாழ்வுக்கு ஆபத்த வந்தவிடுமோ? என்கிற பயம். இயேசுவின் சார்பில் நிற்க வேண்டும், ஆனாலும் பாதுகாப்பான நிலையிலிருந்து கேட்க வேண்டும். தனது பாதுகாப்பிற்கு ஆபத்து வருகின்றபோது, ஒதங்கிக்கொள்ள வேண்டும் என்கிற மனநிலையை நிக்கதேம் பிரதிபலிக்கிறார். சுயநலம் என்கிற வார்த்தைக்கு முழுஇலக்கணம் இந்த நிக்கதேம்.

3. தலைமைக்குருக்கள் மற்றும் பரிசேயர்கள்: தங்களை எப்போதும் உயர்ந்தவர்களாக நிலைநிறுத்திக்கொள்கிறவர்கள். தங்களின் அந்த உயர்ந்த நிலைக்கு ஒருபோதும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறவர்கள். அதற்காக எதையும் செய்யத்தயாராக, வேண்டுமென்றால் கொலையும் செய்வதற்குத்துணிந்தவர்கள். உண்மையை ஏற்க மனமில்லாத கோழைகள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு தங்களின் செவிமடல்களை மூடிக்கொள்கிறவர்கள். மற்றவர்களின் எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் மதிப்பு கொடுக்காத மனநிலையை இவர்கள் பிரதிபலிக்கிறார்கள்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

சர்ச்சைக்குரிய இறைவாக்கினர் !

இயேசுவைப் போல இத்தனை சர்ச்சைகளுக்குள்ளான இறைவாக்கினர் வேறு யாரும் இருந்திருக்க முடியாது. அவரைப் பற்றித்தான் எத்தனை குழப்பங்கள் ? எத்தனை விவாதங்கள்?

1. மக்கள்: இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்களிடையே அவர் இறைவாக்கினரா, அல்லரா என்ற விவாதம் எழுந்தது. ஒருசிலர் "வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றனர். பிறரோ அவரது பிறப்பிடம் குறித்து- கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் வரமாட்டார் என ஐயமுற்றனர். இவ்வாறு, "அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது".

2. காவலர்கள்: அவரைப் பிடித்துக்கொண்டு வர அனுப்பப்பட்ட காவலர்களும் அவரைப் பிடிக்காமல் திரும்பி வந்தனர். காரணம் கேட்டபோது, "அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை" என்றனர். இயேசுவின் போதனை அந்த அளவுக்கு அதிகாரம், புதுமை, புரட்சி நிறைந்ததாக இருந்தது.

3. நிக்கதேம் போன்ற தலைவர்கள்: நிக்கதேம் ஓர் இரவில் இயேசுவைச் சந்தித்து உரையாடியவர், அவரால் கவரப்பட்டவர். அவர் துணிவுடன் "ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது, ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா"? என்று அவர்களுடன் வாதிட்டார்.

இவ்வாறு இயேசுவைக் குறித்து அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இறுதியில் எந்த முடிவுக்கும் வராமல் "அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்".

பல பாடங்களை நாம் கற்கிறோம்:

 நேர்மையாளர்கள், இறைவாக்கினர்கள், புரட்சித் தலைவர்களைப் பற்றிப் பலரும் பல விதமாகப் பேசுவார்கள். நேர்மையாளர்கள் அதைப் பற்றிக் கவலை கொள்வதில்லை, கொள்ளக்கூடாது.
 பிறரைப் பற்றி மற்றவர்கள் தவறாக நம்முடன் உரையாடும்போது, நிக்கதேம் போல, பாதிக்கப்பட்டவர் சார்பாக நாம் பேசவேண்டும். தவறாக தீர்ப்பிடக்கூடாது என எச்சரிக்க வேண்டும்.
 மாற்றுக் கருத்துக்களுக்கும்கூட நாம் கவனமுடன் செவி மடுக்கவேண்டும்.
 ஒருவரின் பிறப்பிடம், ஊர், சாதி, குடும்பப் பின்னணி... இவற்றைக் கொண்டு அவரின் கருத்துகள், சிந்தனைகளை எடைபோடக்கூடாது. எண்ணங்கள்தான் முதன்மையே தவிர, எண்ணங்களின் பின்னணி அல்ல.

மன்றாடுவோம்: நேர்மைத் திறம்கொண்ட இறைவாக்கினரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். பிறருடைய கருத்துக்களை மதிக்கவும், பிறரைத் தீர்ப்பிடாதிருக்கவும், பிறரின் சார்பாக பரிவுகொள்ளவும் எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

வாக்குமூலத்தைக் கேளாது !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

“ஒருவரின் வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்டார் நிக்கதேம். இயேசுவின் சார்பாக, குற்றமற்ற மனிதரின் சார்பாக இவ்வாறு வாதிட்டுத், தமக்கு இறவாப் புகழ் பெற்றுக்கொண்டார் நிக்கதேம். பல நேரங்களில் என்ன நடந்தது என்பதைத் தொடர்புள்ள மனிதரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல், வதந்திகளையும், அவதூறுச் செய்திகளையும் எளிதில் நம்பி பிறரைத் தீர்ப்பிட்டுவிடும் நமக்கு ஓர் எச்சரிக்கையாக அமைகின்றன இந்த வார்த்தைகள்.

பிறரைத் தீர்ப்பிடுவது ஒரு பாவம். தீர்ப்பிடும் உரிமை இறைவனுக்கும், அவரால் நியமிக்கப்பட்ட நடுவர்களுக்கும் மட்டுமே உரிய பணி. மற்ற எவருக்கும் தீர்ப்பளிக்கும் உரிமை இல்லை. எனவே, பிறரைத் தீர்ப்பிடாதபடி எச்சரிக்கையாய் இருப்போம். பிறரைப் பற்றிய அவதூறுகளைப் பரப்புகின்ற பாவத்திலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்வோம்.

மன்றாடுவோம்: நல்ல நடுவரான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நீர் மட்டுமே தீர்ப்பிடும் உரிமை பெற்றவர். எங்களுக்கு அந்த உரிமை இல்லை என்று ஏற்றுக்கொள்கிறோம். பல நேரங்களில் நியாயமற்ற முறையில் பிறரைத் தீர்ப்பிட்டதற்காக, வதற்திகளைப் பரப்பியதற்காக மன்னிப்புக் கோருகிறோம். எங்களை மன்னியும். தீர்ப்பிடாத மனநிலையை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

---------------------------

 

''நிக்கதேம் அவர்களிடம், ''ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று
அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?' என்று கேட்டார் (யோவான் 7:50-51)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- நிக்கதேம் இயேசுவைத் தேடி இரவில் வந்த பரிசேயர். யூத சமயத்தில் மிகுந்த பிடிப்புள்ளவர். ஆனால் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்ட அவர் குறுகிய பார்வையினராக இல்லாமல் இயேசுவைப் பற்றி அதிகமாக அறிய விரும்பினார். எனவே இயேசுவைச் சந்திக்கச் சென்றார். முதலில் அவர் பயந்து, தயங்கிக்கொண்டே இயேசுவை அணுகினார். பிறர் தம்மைப் பற்றித் தவறாக நினைப்பார்களோ என அவருக்குப் பயம். ஆனால் அவர் திறந்த மனம் கொண்டவராக இருந்ததால் இயேசுவின்பால் ஈர்க்கப்பட்டார். இயேசுவின் எதிரிகள் ஒன்று சேர்ந்து இயேசுவுக்கு எதிராக சதித்திட்டம் வகுத்தபோது அவர்களை எதிர்த்துப் பேசும் துணிச்சல் நிக்கதேமுக்குப் பிறந்தது. இயேசு உண்மையிலேயே குற்றம் செய்தார் என்றால் அவருடைய குற்றம் யாது என விசாரித்து அறியாமல் அவருக்கு எதிராகத் தீர்ப்பளிப்பது முறையல்ல என நிக்கதேம் துணிந்து வாதாடினார்.

-- நிக்கதேம் இயேசுவிடம் கொண்ட நம்பிக்கை படிப்படியாகத்தான் வளர்ந்தது. நம் வாழ்விலும் நம்பிக்கை என்பது வளர்ச்சிக்கு உட்பட்டதே. சில வேளைகளில் நாம் உறுதியான நம்பிக்கையுடையவர்களாக இருக்கின்றோம். ஆனால் வேறு தருணங்களில் கடவுளின்மீது நாம் கொள்ளும் நம்பிக்கை தளர்ந்துபோய்விடுகிறது. நம்பிக்கை என்பது கடவுளின் கொடை. ஆனால் அதை நன்றியோடு ஏற்று நம்மில் வளரச் செய்வது நம் பொறுப்பு.

மன்றாட்டு
இறைவா, இருளிலிருந்து ஒளிக்கு எங்களை வழிநடத்தும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"யாரும் அவரைத் தொடவில்லை"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

யாரும் அவரைத் தொடவில்லை .(யோவா 7:44). மாறாக "அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள். (யோவா 7:55) அவ்வளவு எளிதல்ல ஒரு இறை மனிதனைத், ஆண்டவனின் அடியானைத், உண்மைக்கும் நீதிக்கும் சாட்சியாக வாழும் மனிதனைத், நற்செயல் செய்து வாழும் நல்லவனைத் தொடுவதென்பது. இயேசுவுக்கு நிகழ்ந்தது போலவே உங்களுக்கும் நிகழும்.

எதிரிகளிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். இயேசு கலிலேயரா, யூதரா? பெத்லகேம் மெசியாவா, நசரேத்து இயேசுவா? எதிரிகளிடையே கருத்து வேறுபாடு உண்டானால், எவரும் உங்களைத் தொடமாட்டார்கள்.

சட்டமும் காவல்துறையும் அதிர்ந்து போய்விடும். இயேசுவை கைது செய்யச் சென்றவர்கள் "அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை"(யோவா7:47) என்ற அதிர்ச்சி தகவல் கொடுத்தனர். உங்கள் தூய வாழ்வை, நற்செயல்களைக் காண்போர், உங்களுக்குச் சான்று பகர்வர். எவரும் உங்களைத் தொடமாட்டார்கள்.

சான்றோர், பெரிய மனிதரகள் உங்கள் சார்பில் பேசுவார்கள். நிக்கதேம் ஒரு பரிசேயர், நல்லவர், நீதிமான். இவர் இயேசுவின் விசாரணையில் "ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?" என்று கேட்டு நிலை தடுமாறும் நீதிக்கு ஒரு ஊன்றுகோல் வழங்கினார். உங்களுக்கும் ஒருவர் உதவ வருவார். எவரும் உங்களைத் தொடமாட்டார்கள். தொடர்ந்து உங்கள் அன்பு தெய்வம் கிறிஸ்துவின் உயிருள்ள சாட்சியாக வாழுங்கள். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்