முதல் வாசகம்

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 21: 4-9

அந்நாள்களில் ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ரயேலர் `செங்கடல் சாலை' வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: ``இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது'' என்றனர். உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, ``நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்ளும்'' என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், ``கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்'' என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 102: 1-2. 15-17. 18-20

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்

1 ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்! என் அபயக் குரல் உம்மிடம் வருவதாக!
2 நான் இடுக்கண் உற்ற நாளிலே உமது முகத்தை மறைக்காதீர்!
உமது செவியை என் பக்கமாகத் திருப்பியருளும்! நான் மன்றாடும் நாளில் விரைவாய் எனக்குப் பதிலளியும்! -பல்லவி

15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.
16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.
17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். -பல்லவி

18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும்.
19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார்.
20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கென குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்
விதை கடவுளின் வார்த்தை; விதைப்பவரோ கிறிஸ்து; இவரைக் கண்டுகொள்கிற அனைவரும் என்றென்றும் நிலைத்திருப்பர்.

யோவான் 8:21-30

தவக்காலம் -ஐந்தாம் வாரம் செவ்வாய்


+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 21-30

அக்காலத்தில் இயேசு பரிசேயர்களை நோக்கி, ``நான் போனபின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்'' என்றார். யூதர்கள், `` `நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது' என்று சொல்கிறாரே, ஒருவேளை தற்கொலை செய்துகொள்ளப்போகிறாரோ?'' என்று பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், ``நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல. ஆகவேதான் நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். `இருக்கிறவர் நானே' என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்'' என்றார். அவர்கள், ``நீர் யார்?'' என்று அவரிடம் கேட்டார்கள். அவர், ``நான் யார் என்று தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்துள்ளேன். உங்களைப் பற்றிப் பேசுவதற்கும் தீர்ப்பிடுவதற்கும் பல உண்டு. ஆனால் என்னை அனுப்பியவர் உண்மையானவர். நானும் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கிறேன்'' என்றார். தந்தையைப் பற்றியே அவர் பேசினார் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், ``நீங்கள் மானிடமகனை உயர்த்தியபின்பு, `இருக்கிறவர் நானே'; நானாக எதையும் செய்வதில்லை; மாறாகத் தந்தை கற்றுத்தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள். என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்'' என்றார். அவர் இவற்றைச் சொன்னபோது பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 8: 21 - 30
எத்தகைய இருத்தல்?

யூத மத நூலான ‘டால்மட்’ (TALMUD) கடவுள் இந்த உலகத்தைப படைத்த போது குறித்த ஒரு அழகான கதை ஒன்று சொல்கிறது. கடவுள் முதலில் ‘அன்பை’ மட்டும் மூலக்கூறாக வைத்து இந்த உலகை உருவாக்கினார். ஆனால் அந்த உலகம் சரியாக அமையவில்லை. பின்பு நீதியை மட்டும் மூலக்கூறாக வைத்து மற்றொரு உலகைப் படைத்தார். அதுவும் சரியாகப் படவில்லை. பின்பு நீதியையும் அன்பையும் சமவிகிதத்தில் கலந்த ஒரு உலகைப் படைத்தார். அதுவே இந்த உலகம் என்று அந்த நூல் கூறுகிறது.

அதே மனநிலையைத் தான் இன்றைய வாசகங்கள் நமக்குத் தருகின்றன. இயேசு முதலில் அன்பாக பரிசேயர்கள் வாழ்வை மாற்ற முயலுகின்றார். ஏனென்றால் இயேசு செய்த புதுமைகள், அற்புதங்களையெல்லாம் கேள்விக்குறியாக மாற்றியவர்கள் தான் இந்த பரிசேயர்கள். இவர்கள் இயேசுவை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று தீர்மானித்து தான் இயேசுவின் பின்புலத்தை திரைக்கு கொணர்கின்றார்கள் தச்சனின் மகன் என்று. ஆனால் இயேசு அவர்களை அன்போடு அணுகுகின்றார். ஆனாலும் மாற்றம் உருவாகவில்லை. அவர்கள் அதனை தவிடு பொடியாக்கினார்கள். பிறகு நீதியின் அடிப்படையில் அவர்களை மாற்ற முயற்சி எடுத்தார். அதாவது ‘இருக்கின்றவர் நானே’ கடவுளின் மகன் என்ற உண்மை கூற்று வழியாக எடுத்துக் கூறினார். அதற்கும் செவிமடுக்கவில்லை. அதனால் தான் அடையாளம் கேட்டு சோதித்தார்கள். ஓய்வுநாளில் குணப்படுத்தும் போது, பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் உமக்கு எங்கிருந்து வந்தது என்றார்கள். பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு தான் பேய்களை ஓட்டுகிறான் என்றெல்லாம் இறைவல்லமையைக் குறித்து கேள்விக்குறியாக்கினார்கள். ஆனால் இயேசு கூறிய பதில் ‘இருக்கின்றவர் நானே’ என்று மிகவும் எளிமையாக முடித்து விட்டார். ஆனால் இறுதியில் அன்பின் அடிப்படையிலும் நீதியின் அடிப்படையிலும் ‘தந்தை என்னோடு இருக்கிறார்’ என்று கூறுகின்ற போது தான், அவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்கின்றார்கள்.

நம்முடைய இருத்தல் எப்படிப்பட்ட இருத்தலாக இருக்கிறது? சுயநலம் சார்ந்த இருத்தலாக இருக்கிறதா அல்லது இயேசு வாழ்ந்து காட்டிய அன்பு, நீதியை பிரதிபலிக்கக்கூடிய இருத்தலாக இருக்கிறதா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

======================

யோவான் 8: 21-30
தாழ்த்தினால் உணர்வாய்

கடவுளுக்கும் மோசேவுக்குமான உரையாடலில் மோசேவின் கேள்விக்கு கடவுளின் பதில் கிடைக்கிறது. காண்க வி.ப 3:13-14, “கடவுள் மோசேயை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நாமே” என்றார். இன்றைய நற்செய்தியில் அவர்களின் கேள்விக்கு இயேசு ‘இருக்கிறவர் நாமே’ என்ற பதிலினைக் கொடுக்கின்றார்.

கடவுளின் வார்த்தையை மோசே முழுவதுமாக புரிந்து கொண்டாரா? என்பது தெரியவில்லை, ஆனால் அவரின் வார்த்தை அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க உந்தி தள்ளியது. அவரும் தன்னிடம் பேசிய அக்குரலினை நம்பி ஏற்றுக் கொண்டார். ஆனால் இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் குரலினை மட்டும் அவர்கள் கேட்கவில்லை, மாறாக, அவரையும் அவரின் ஒவ்வொரு வல்ல செயல்களையும் தன் கண்களால் பார்த்தும் உணர்ந்தும் கொண்டவர்கள,; அவரை நம்ப தயங்கி, ‘இருக்கின்றவராக இருக்கிறவர் நானே’ என்பதினை இன்னும் எளிதாக்கி ‘நானே’ என்று ஏழுமுறை எடுத்துக்காட்டோடு பேசியவரின் (நேற்றைய சிந்தனையைப் பார்க்கவும்) வார்த்தைகள் இவர்களின் அதிமேதாவித்தனத்துக்கு புரியவில்லை. புரிந்தாலும் தன்னோடு பார்த்து பழகியவர்கள் என்பதால் அவர்களின் முற்சார்பு எண்ணங்கள் முட்டுக்கட்டை போடுகின்றது.

நாமும் எளிய மனத்தோடு அவரின் குரலுக்கும் வார்த்தைக்கும் செவிமடுப்போம். நாம் படித்த அறிவியலையும் அறவியலையும் அவரினை அறிவதற்காக பயன்படுத்துவோம். அவரை நாம் கண்டடைய எளிய வழி நம் ஆணவத்தையும், அகங்காரத்தையும் வேரறுத்து தாழ்த்துவோம் அவரே தந்தை, தந்தையே அவர் என்பதை உய்த்து உணர்வோம். நம்மையே அவர்முன் தாழ்த்துவோம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 102: 1 – 2, 15 – 17, 18 – 20
”ஆண்டவரே என் மன்றாட்டைக் கேட்டருளும்”

வருத்தமுற்றிருக்கிற ஒரு மனிதன், தன்னுடைய துன்பமான நேரத்தில் இந்த திருப்பாடலை வாசித்தால், கடவுள் தரும் அமைதியைப் பெற்றுக்கொள்ள முடியும். நமக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும். அந்த அளவுக்கு ஆறுதலைத்தரக்கூடிய திருப்பாடல்களுள் ஒன்று தான், இன்றைய திருப்பாடல். 2 சாமுவேல் புத்தகத்தில் அப்சலோம், தாவீதிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த நிகழ்வை வாசிக்கிறோம். அந்த தருணத்தில் வேதனையின் உச்சத்தில், தாவீது அரசர் இந்த திருப்பாடலை எழுதியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஒரு சிலர், தானியேல், நெகேமியா அல்லது வேறு இறைவாக்கினர்கள், யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட வேளையில், இந்த பாடலை எழுதியிருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். எருசலேம் நகரைப் புதுப்பிக்கிறபோது, பழையதை அசைபோடக்கூடியதாகவும் இந்த பாடல் அமைந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். எது எப்படி இருந்தாலும், மனம் கலங்கிய ஓர் உள்ளத்தின் பாடலாக இது அமைந்துள்ளது.

உள்ளத்தில் கவலை வருகிறபோது, கண்களில் கண்ணீர் வடிகிறபோது, மனம் சுமையால் வெதும்புகிறபோது, ஆண்டவரிடத்தில் நாம் தஞ்சமடைய வேண்டும் என்பதுதான், இந்த திருப்பாடல் நமக்கு வழங்கும் செய்தியாக இருக்கிறது. ஏனென்றால், நாம் செய்த தவறுகளுக்கு தண்டனை அடைந்தாலும், கடவுள் தண்டனையோடு நம்மை அழித்துவிட மாட்டார். ஏனென்றால், கடவுள் தண்டிப்பது நம்மை திருந்தி வாழச்செய்வதற்கே. அவரிடத்தில் அளவு கடந்த இரக்கம் வழிந்தோடுகிறது. அவருடைய உள்ளத்தில் நமக்காக அன்பு நிறைந்திருக்கிறது. எருசலேம் நகரம், பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டாலும், கடவுள் அத்தோடு விட்டுவிடவில்லை. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அதனை மீண்டும் கட்டி எழுப்ப திருவுளம் கொள்கிறார். அதேபோல நம்முடைய வாழ்க்கையிலும், நமது தவறுகளின் பொருட்டு, கடவுள் நம்மை தண்டிக்கிறவர் அல்ல. அப்படியே நமது தவறுகளுக்கான தண்டனையைப் பெற்றாலும், கடவுள் நம்மீது மனமிரங்கி, நமக்கு தன்னுடைய மன்னிப்பை நிறைவாக வழங்குவார் என்று நாம் நம்பி வேண்டும்.

நமது துன்ப நேரத்தில் நாம் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், கடவுளின் அருளைப் பெறுவதற்கு தகுதியற்ற நிலையில் இருந்தாலும், நாம் கடவுளிடத்தில் முழுமையாக தஞ்சமடைகிறபோது, கடவுள் நம்மை நிறைவாக ஆசீவதிப்பார். அவர் எந்நாளும் நம்மை வழிநடத்துவார்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

 

வாழ்வின் முக்கியத்துவம்

இயேசு யூதர்களிடம், தான் அவர்களிடமிருந்து செல்லவிருப்பதாகச் சொல்கிறார். எங்கு செல்கிறார்? எதற்காக செல்கிறார்? என்பதை இயேசு சொல்லவில்லை. ஆனால், அவருடைய பிரிவிற்கு பின், யூதர்கள் வருந்துவார்கள் என்றும் முன்னறிவிக்கிறார். வருந்துவதோடு மட்டும் அல்லாமல், அவரைத் தேடவும் செய்வார்கள், ஆனால் அவர்கள் காணமாட்டார்கள், என்று சொல்கிறார். இதனை வெளிப்படையாக அல்லாமல், சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், தெளிவான சிந்தனை நமக்கு புலப்படும்.

காலமும், வாழ்வும் வரையறுக்கப்பட்டது. ஒவ்வொரு இனத்திற்கும் குறிப்பிட்ட காலம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களுக்கு அதிகபட்சமாக நூறு வயது வரை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வாழ்க்கையில் பலபேர் வாழத்தெரியாமல், கடைசி காலத்தில், இப்படி வாழ்ந்துவிட்டோமே, இதைவிட நன்றாக வாழ்ந்திருக்கலாமே, என்று வருந்துகின்றனர். கண் கெட்ட பிறகு, அதனை நினைத்து வருந்தி பயனில்லை. அப்படி வருந்துவதால், பயன் ஏதும் கிடைக்கப்போவதில்லை. ஆனால், பலபேர் வாழ்வை தவறாக வாழ்ந்தபிறகு, அதனை எண்ணி, எண்ணி வருந்திக்கொண்டிருக்கிறார்கள். வாழ்வை நல்ல முறையில் வாழ, அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் விட்டுவிட்டு, கடைசியில் வருந்தி பயன் ஒன்றுமில்லை.

வாழுகிறபோதே நன்றாக வாழ வேண்டும். பயனுள்ள வகையில் வாழ வேண்டும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் வாழ வேண்டும். எனவே, வாழ்வின் மகத்துவத்தை, அதனுடைய முக்கியத்துவத்தை, புனிதத்தன்மையை உணர்ந்து வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

வாய்ப்புக்களைப் பயன்படுத்துவோம்

இன்றைய நற்செய்தியை நாம் வாசிக்கிறபோது, இயல்பாகவே ஏழை இலாசர் உவமையில் வரும் செல்வந்தனின் நிலை நமக்கு நினைவுக்கு வருகிறது. இயேசு சொல்கிறார், ”நான் போன பின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்”. இழந்த வாய்ப்புகளை நாம் திரும்பப்பெற முடியாது, என்று பொதுவாகச் சொல்வார்கள். கிடைக்கிற வாய்ப்பைப்பயன்படுத்தி, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் நமக்கு வருகிற அழிவை யாராலும், தடுக்க முடியாது.

ஏழை இலாசர் உவமையில், அந்த செல்வந்தன் தனது சகோதரர்களுக்காக இலாசரை திரும்ப அனுப்புவதற்கு, ஆபிரகாமிடம் மன்றாடுகிறார். ஆனால், ஆபிரகாமோ அவர்களை வழிநடத்துவதற்கு இறைவாக்கினர்கள் இருப்பதாகக்கூறுகிறார். அப்படி செவிசாய்க்காதவர்கள் யாருக்கும் செவிசாய்க்க மாட்டார்கள் என்றும், அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதாகவும் நாம் புரிந்து கொள்ளலாம். கடவுள் நமக்கு நாம் திருந்தி வாழ்வதற்கு பல வாய்ப்புகளைத் தருகிறார். அந்த வாய்ப்புக்களை இழந்தபிறகு அதனை நினைத்து வருந்த முடியாது. கொடுக்கப்படுகிற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி நல்லமுறையில் நாம் நமது வாழ்வை அமைத்துக்கொள்வோம்.

இந்த உலகவாழ்க்கையில் நமது வாழ்வை திரும்பிப்பார்த்து, திருந்திவாழ்வதற்கு இயலாத அளவிற்கு நாம் பல பணிகளுக்குள்ளாகச் சிக்குண்டிருக்கிறோம். ஆனாலும், நாம் நமது வாழ்வைப்பற்றி தியானிப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். குறிப்பாக, இந்த தவக்காலம் நமது வாழ்வை எண்ணிப்பார்த்து, சரியான பாதையில் நடப்பதற்குத் தூண்டுகின்ற காலம். இதனை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

அடுத்தவர் உணர்வுகளை சரியாகப்புரிந்துகொள்வோம்

‘நான் போகும் இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்று இயேசு சொல்கிறார். இயேசு சொன்னதின் பொருள்: மகிமையோடு அவர் தந்தையாகிய கடவுளிடம் திரும்புகிற இடத்தை. ஆனால், அவருடைய எதிரிகள் புரிந்துகொண்டது: இயேசு நரகத்திற்கு போகப்போகிறார் என்று. ஏனெனில் தற்கொலை செய்வோர் அனைவரும் நரகத்திற்குச்செல்வார்கள் என்பது யூதர்களின் நம்பிக்கையாக இருந்தது. எனவே, இயேசு தற்கொலை செய்துகொண்டு நரகத்திற்குப்போகப்போகிறார். நம்மால் அங்கே செல்ல முடியாது என்பதை இயேசு சொல்வதாக, யூதர்கள் நினைத்தனர். இயேசு சொன்னது ஒரே செய்திதான். ஆனால், அது புரிந்துகொள்ளப்பட்ட விதம் வேறு, வேறானது. இங்கே புரிதலில் தவறு இருக்கிறது. இந்த நற்செய்திப்பகுதியில், யூதர்களின் தவறான புரிதலுக்கு காரணம் என்ன? எது சரியான புரிதல்? என்பதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.

ஒரு புத்தகம் வாசிக்கிறோம். அந்தப்புத்தகத்தை சரியாகப்புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அந்த புத்தக ஆசிரியரின் எண்ண ஓட்டத்தோடு இணைந்து நாம் வாசிக்க வேண்டும். நமது எண்ண ஓட்டத்தில் நாம் வாசித்தால், அதனை சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. புரிந்துகொள்ள முடியாதது மட்டுமல்ல, தவறாகப் புரிந்து கொள்ள ஏராளமான வாய்ப்பு இருக்கிறது. ஒருவரைப்புரிந்துகொள்ள அவராகவே மாற வேண்டும். யூதர்கள் இயேசுவைப் புரிந்திருக்க வேண்டுமென்றால், அவர்கள் இயேசுவின் மனநிலையைப் பெற்றிருக்க வேண்டும். இயேசுவின் உணர்வுகளோடு கலந்திருக்க வேண்டும். இயேசுவாக அவர்கள் மாறியிருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால், அவர் சொன்னதின் உண்மையான பொருளை அவர்களால் அறிந்திருக்க முடியும். ஆனால், அப்படி மாறுவதற்கு யூதர்கள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. தங்களுடைய எண்ணத்திலே வாழ்ந்து கொண்டு, தங்களுடைய உணர்வுகளையே அவர்கள் பிரதிபலிப்பதன் வெளிப்பாடுதான், இயேசு சொன்னதின் உண்மையான பொருளை அறிந்துகொள்ள முடியாமை மற்றும் தவறாகப் புரிந்துகொண்டமை. இப்படிப்பட்ட சரியான புர்pதல் இல்லாமை, பகைமைக்கு தூண்டுகோலாய் இருக்கிறது.

ஏழை, எளியவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப்புரிந்து கொள்ள அவர்களின் உணர்வுகள் நமக்குள்ளாக புகுத்தப்பட முயற்சி எடுக்க வேண்டும். இயேசு ஏழைகளின் சார்பில், ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நின்றார் என்றால், அதற்கு காரணம் அவர் ஏழைகளின் மனநிiயைப் பெற்றிருந்தார். ஏழைகளில் ஒருவராக மாறியிருந்தார். ஏழையாகவே வாழ்ந்தார். சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்குப் பணியாற்ற விரும்பினால், அவர்களின் எண்ண ஓட்டத்தை நமக்குள்ளாக உள்வாங்க வேண்டும். அத்தகையதொரு அருளுக்காக மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

 

நீர் யார்?

"இருக்கிறவர் நானே" என்று தம்மைப் பற்றி இயேசு வெளிப்படுத்தியபோதிலும், அவரிடம் மீண்டும் யூதர்கள் கேட்ட கேள்வி: "நீர் யார்?".

தாம் யார் என்று தொடக்கத்திலிருந்தே இயேசு சொல்லிவந்த போதிலும், அவர்கள் இக்கேள்வியை அவரிடம் கேட்டதற்கு காரணம் அவர்கள் அவரை நம்பவில்லை, நம்ப விரும்பவுமில்லை.

ஆனால், இயேசுவை நம்பி, ஆண்டவராக ஏற்றுக்கொண்ட நாம் இயேசுவை முழுமையாக அறிந்திருக்கிறோமா? இயேசு யார்?

இந்தக் கேள்விக்கான விடையை இன்றைய நற்செய்தி வாசகத்திலிருந்தே அறிவோம்.

1. இயேசு மேலிருந்து வந்தவர்.

2. இயேசு "இருக்கிறவர்"

3. இயேசு தீர்ப்பிடும் நடுவர்

4. இயேசு தந்தையின் சொற்களை உலகுக்கு எடுத்துரைப்பவர்

5. இயேசு தந்தையோடு எப்போதும் இருப்பவர்.

6. இயேசு தந்தைக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்பவர்

இயேசுவால் மீட்கப்பட்ட நாமும், மேல் உலகத்தைச் சார்ந்தவர்களாக, இயேசுவின் சொற்களை வாழ்பவர்களாக, இயேசுவைப்போல தந்தையோடு இணைந்து, தந்தைக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்பவர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம்.

மன்றாடுவோம்: தந்தைக்கு உகந்த மகனான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மை எங்கள் மீட்பராகவும், நடுவராகவும், தந்தையிடம் பரிந்துபேசுபவராகவும் ஏற்று அறிக்கையிடுகிறோம்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

போனபின் தேடுவீர்கள் ” !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

“ நான் போனபின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது” என்னும் ஆண்டவர் இயேசுவின் அமுத மொழிகளை இன்று தியானிப்போம். “தேடுங்கள், கண்டடைவீர்கள்” என்று சொன்ன அதே இயேசுதான் ‘நான் போனபின் என்னைத் தேடுவீர்கள், ஆனால் உங்களால் கண்டடைய முடியாது’ என்றும் கூறுகிறார்.  இந்த வார்த்தைகள் எசாயா இறைவாக்கினரின் எச்சரிக்கை அறைகூவலை நினைவுபடுத்துகின்றன: “ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள். அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள்” (எசா 55:6) என்னும் சொற்களை இன்று நாம் நினைவுகூர்வோம். இறைவன் நம்மைவிட்டுப் பிரிந்தபிறகு, இறையருள், அவரது பேரிரக்கம் நம்மைவிட்டு விலகியபிறகு, அவரைத் தேடி என்ன பயன்? வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுவோம். இத்தவக்காலம் அவரைத் தேடுவதற்கான நல்லதொரு காலம். எனவே, செபம், தவம், அன்புச் செயல்கள் மூலமாக இன்றே, இப்போதே இறைவனைத் தேடுவோமாக!

மன்றாடுவோம்: அன்பே உருவான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். வாய்ப்புள்ளபோதே உம்மைத் தேடவேண்டும் என்று நீர் தரும் அழைப்புக்காக இன்று நன்றி கூறுகிறோம். பலமுறை நாங்கள் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல் இருந்திருக்கிறோம். மன்னியும். உம்மை இன்று தேட அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருட்தந்தை குமார்ராஜா

---------------------

''இயேசு, 'என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார்...நானும் அவருக்கு
உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்' என்றார்'' (யோவான் 8:29)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவின் வாழ்க்கையில் துலங்கிய ஒரு முக்கியமான பண்பு அவர் எப்போதுமே கடவுளின் திருவுளத்திற்கு அமைந்து நடந்ததாகும். கடவுளிடமிருந்து வந்த இயேசு கடவுள் தன்மை கொண்டவராக இருந்தாலும், நம்மைப் போல மனித இயல்பை ஏற்றுக்கொண்டார். கடவுள் அவருக்கு அளித்த பணியை நிறைவேற்றுவதில் இயேசு கண்ணும் கருத்துமாயிருந்தார். அவர் தம் சொந்த விருப்பப்படி செயல்படவில்லை. மாறாக, கடவுள் எதை விரும்பினாரோ அதையே இயேசுவும் தம் விருப்பமாகக் கொண்டிருந்தார். தம்மை அனுப்பிய கடவுள் தம்மோடு இருப்பதை இயேசு எப்போதுமே உணர்ந்திருந்தார். எனவேதான் இயேசு நற்செய்தி அறிவிப்புக்கு இடையிலும் கடவுளோடு தனித்திருந்து இறைவேண்டலில் ஈடுபட்டார். கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவிய ஆழ்ந்த உறவு அந்த இறைவேண்டல் நேரங்களில் இன்னும் அதிகமாக ஆழப்பட்டிருக்க வேண்டும்.

-- கடவுளோடு ஒன்றித்திருந்த இயேசு மனிதரோடும் தம்மை ஒன்றுபடுத்திக் கொண்டார். ஏன், மனிதருக்குக் கடவுளின் அன்பைக் கொடையாக வழங்குவதற்குத் தானே இயேசு வந்தார்? கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்னும் உணர்வு நம்மில் ஆழப்பட வேண்டும். கடவுள் நம்மோடு இருப்பதால் நாம் கடவுளின் குரலுக்குச் செவிமடுப்பது தேவை. கடவுளின் குரலை நம் உள்ளத்திலும் வாழ்வு அனுபவத்திலும் நாம் கேட்டு உள்வாங்கும்போது அக்குரல் நம் இதயத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த அனுபவம் நம்மில் நிலைக்கும்போது நாமும் ''கடவுளுக்கு உகந்தவற்றையே செய்திட'' முன்வருவோம்.

மன்றாட்டு
இறைவா, உம் பிரசன்னத்தை எங்கள் வாழ்வில் உணர்ந்திட அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"நீர் யார்?"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இயேசுவின்; காலம்தொட்டு இன்று முதல் 'யார் இந்த இயேசு' என்ற கேள்வி, பலராலும் பலவிதங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த கேள்வியும் அதன் பதிலும் மனிதர்களையும் மனித வரலாற்றையும் மாற்றியுள்ளது. "; நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" (மத்16:15) என்ற கேள்வியும் அதன் பதிலும் சீமோனைப் பேதுருவாக மாற்றியது. திருச்சபையின் அடித்தளமாக மாற்றியது. விண்ணின் ஆற்றல், அதிகாரம் மண்ணுக்கு வழங்கப்பட்டது.

இந்த கேள்வியை எழுப்பி, அதற்குச் சரியான பதில்காணும் இன்றைய மனிதர்களும் இத்தகைய பெரும் மாற்றத்தை, தன்னிலும் தான் வாழும் சமுதாயத்திலும் ஏற்படுத்துகிறார்கள். இயேசு தான் யார் என்பதை தான் வாழ்ந்த சம காலத்து மக்களுக்கு, தன் போதனையாலும் அரும்செயல்களாலும் பலமுறை மறைமுகமாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் சொல்லிவந்துள்ளார். கேட்டவர்கள் வாழ்வு பெற்றார்கள். கேளாதோர் வாழும் வாய்ப்பை இழந்தார்கள்.

இயேசுவின் கடைசி நாட்களிலும் இந்த கேள்வி எழுகிறது. இயேசுவும் வழக்கம் போல் பதில் கொடுக்கிறார். 'நான் வந்த இடமும் போகுமிடமும் உங்களுக்குத் தெரியாது', 'நான் மேலிருந்து வந்;தவன்', 'இருக்கிறவர் நானே', 'என்னை அனுப்பிய தந்தை என்னோடு இருக்கிறார்' என்னும் விவரங்கள் இந்த கேள்விக்கு போதுமான பதில். ஆயினும் அப் பரிசேயர்கள் அதற்குச் செவி சாய்க்கவில்லை. எனவே அவர்களில் எந்த மாற்றமும் இல்லை. கேள்விக்குப் பதில் காண்போம். மகிழ்ந்து இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

 

--அருட்திரு ஜோசப் லியோன்