முதல் வாசகம்

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 3: 14-20, 24-25, 28

அந்நாள்களில் நெபுகத்னேசர் அவர்களை நோக்கி, ``சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள் மூவரும் என் தெய்வங்களை வணங்கவில்லை என்பதும், நான் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவில்லை என்பதும் உண்மைதானா? இப்பொழுதாவது எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்டவுடன், நீங்கள் தாழவீழ்ந்து நான் செய்துவைத்துள்ள சிலையைப் பணிந்து தொழத் தயாராய் இருக்கிறீர்களா? தொழாவிட்டால் அந்த நொடியிலேயே எரிகிற தீச்சூளையில் தூக்கிப் போடப்படுவீர்கள். உங்களை என் கைகளிலிருந்து தப்புவிக்கக்கூடிய தெய்வம் ஒன்று உண்டோ?" என்றான். சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்பவர்கள் நெபுகத்னேசர் அரசனை நோக்கிப் பதில்மொழியாக, ``இதைக் குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை. அப்படியே எது நிகழ்ந்தாலும், நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர். அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும், அரசரே! நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம்; நீர் நிறுவிய பொற்சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும்'' என்றார்கள். இதைக் கேட்ட நெபுகத்னேசர் அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்மீது வெகுண்டெழ, அவனது முகம் சினத்தால் சிவந்தது. வழக்கத்தைவிட ஏழு மடங்கு மிகுதியாகத் தீச்சூளையைச் சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான். பின்னர் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைக் கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போடுமாறு தன் படைவீரர்களுள் வலியவர் சிலருக்குக் கட்டளையிட்டான். அப்பொழுது நெபுகத்னேசர் அரசன் வியப்புற்று விரைந்தெழுந்து தன் அமைச்சரை நோக்கி, ``மூன்று பேரைத்தானே கட்டி நெருப்பினுள் எறிந்தோம்!'' என்றான். ``ஆம் அரசரே'' என்று அவர்கள் விடையளித்தனர். அதற்கு அவன், ``கட்டவிழ்க்கப்பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவுகிறதை நான் காண்கிறேன்! அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே! மேலும் நான்காவது ஆள் தெய்வ மகன் ஒருவன் போல் தோன்றுகிறானே!" என்றான். அப்பொழுது நெபுகத்னேசர், ``சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுள் புகழப்படுவாராக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் பணிந்து தொழ மறுத்து, அரசனது கட்டளையையும் பொருட்படுத்தாமல், அவர்மேல் நம்பிக்கை வைத்துத் தங்கள் உடலைக் கையளித்த அவருடைய ஊழியர்களை அவர் தம் தூதரை அனுப்பி மீட்டருளினார்'' என்றான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்
தானியேல் (இணைப்பு) 1: 29. 30-31. 32-33

பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்.

29 எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக;
என்றென்றும் நீர் புகழப்பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.
மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. -பல்லவி

30 உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக;
உயர் புகழ்ச்சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர்.
31 கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக;
நீர் என்றென்றும் புகழப்படவும் ஏத்திப் போற்றப்படவும் தகுதியுள்ளவர். -பல்லவி

32 உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக;
என்றென்றும் நீர் புகழ்ந்தேத்தப் பெறுவீராக, ஏத்திப் போற்றப் பெறுவீராக.
33 உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக; என்றென்றும் நீர் பாடல் பெறவும், மாட்சி அடையவும் தகுதியுள்ளவர். -பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்
சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மனஉறுதியுடன் பலன் தருபவர் பேறுபெற்றோர்.

 

யோவான் 8:31-42

தவக்காலம் -ஐந்தாம் வாரம் புதன்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 31-42

அக்காலத்தில் இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, ``என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்'' என்றார். யூதர்கள் அவரைப் பார்த்து, `` `உங்களுக்கு விடுதலை கிடைக்கும்' என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!'' என்றார்கள். அதற்கு இயேசு, ``பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு. மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள். நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம் பெறாததால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள்'' என்றார். அவர்கள் அவரைப் பார்த்து, ``ஆபிரகாமே எங்கள் தந்தை'' என்றார்கள். இயேசு அவர்களிடம், ``நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போலச் செயல்படுவீர்கள். ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே! நீங்கள் உங்கள் தந்தையைப்போலச் செயல்படுகிறீர்கள்'' என்றார். அவர்கள், ``நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு; கடவுளே அவர்'' என்றார்கள். இயேசு அவர்களிடம் கூறியது: ``கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 8: 31 - 42
அடிமைத்துவம்

இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுமே சுதந்திரமாகத்தான் வாழ ஆவல் கொள்கின்றார்கள். யாருமே இன்னொரு மனிதனுக்கு அடிமைகளாக இருக்க விரும்புவதில்லை. அதனால் தான் பால கங்காதர திலகர், ‘சுதந்திரம் என்பது நமது பிறப்புரிமை’ என்று முழங்கினார். ஆனால் நாம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களுக்கும், அதிகாரத்திற்கும் அடிமைகளாக இருந்து வருகிறோம். அரசியல்வாதிகள் பதவிக்கு அடிமை, ஏழை குடிமகன் மதுவிற்கு அடிமை, அரசு ஊழியர்கள் பணத்திற்கு அடிமை. மனிதன் மனிதனுக்கு அடிமை அல்ல. மாறாக மனிதன் மனிதனால் உருவாக்கப்பட்டவைக்கு அடிமைகளாக இருந்து வருகிறான்.

எவற்றிற்கும் நாம் உண்மையிலேயே நம்முடைய வாழ்வில் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று இயேசு கற்றுக் கொடுக்கின்றார். உண்மைக்கு நீங்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று பாடம் புகட்டுகின்றார். ஏனென்றால் நம்முடைய ஆதிப்பெற்றோர்கள் கூறிய பொய் வார்த்தையினால் தான், அவர்கள் கடவுளின் கண்காணிப்பிலிருந்து விலக்கப்பட்டார்கள். தண்டனை பெற்றார்கள். காயின் கடவுளிடம் பொய் கூறியதனால் தான் கடவுளிடமிருந்து தண்டனை பெற்றான். ஆனால் பேதுரு கடவுளிடம் உண்மையை பேசி ஏற்றுக்கொண்டதனால் தான் சீடத்துவத்தின் மகத்துவத்தை உணர வைக்கின்றார். ஆக உண்மை தான் சீடத்துவத்தின் முதற்படி என்பதனை சுட்டிக் காட்டுகின்றார். உண்மைக்கு நாம் அடிமைகளாக இருந்தோமென்றால் நம் வாழ்வில் பாவத்திற்கு அடிமையாக மாட்டோம். இத்தகைய அடிமைத்தனம் தான் சீடத்துவத்தின் பாராளுமன்றத்தில் நம்மை பங்கு கொள்ள தகுதியான வழிமுறையாக அமைகின்றது. ஆனால் யூதர்கள் மற்றும் ஏரோதியர்கள் மத்தியில் உண்மை இல்லை. எனவே தான் இயேசு உண்மையின் மகத்துவத்தை உணர வைக்கின்றார்.

நாம் எவற்றிற்கு அடிமைகளாக இருக்கின்றோம்? பணம், பதவி, கெட்ட நடத்தை அல்லது இயேசு விரும்புகின்ற நற்பண்புகள் (உண்மை, அன்பு)? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

========================

யோவான் 8: 31-42
உண்மையா?

“உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” -இதை இன்றைய தேர்தல் நெருங்குகிற சூழலில் சொன்னால் கண்டிப்பாக அனைவரும் சிரித்துவிடுவர். “உண்மையா அது என்ன” என்று பிலாத்து கேட்டதுப் போலதான் நாம் அனைவரும் கேட்போம். காரணம் யார் அதிகமாக பொய்க்கூறி ஏமாற்றுவார்களோ அவர்களே சிறந்தவர்கள், தலைவர்கள் ஆகுகிறார்கள். காரணம் இன்றைய உலகம் உண்மைப் பேசுபவர்களைவிட பொய் பேசுபவர்களுக்கே அதிகம் முக்கியத்துவம் தருகிறது. மசாலா தடவிப் பேசுபவர்களை உடனடியாக நம்புகிறது.

பல வருடங்களாக மாற்றாத, பொய்யான தேர்வு வரைவினை இன்றுவரை கட்சிகள் வெளியிடுவது நாம் எவ்வளவு பொய்யானாலும் நம்புவோம் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். உண்மை ஊனமாகி விட்டது இவ்வுலகினில். ஆனால் இவ்வுலகில் இயேசுவின் வார்த்தையில் நிலைத்திருப்பவன் உண்மையை உணர்கின்றான். அது அவனுக்கு விடுதலை அளிக்கும், எதையும் தனது இயல்பான நாட்டத்தின் வழியே, செய்ய வேண்டியதை மனத்திடத்துடன் செய்வதே உண்மையான விடுதலையாகும்.

அத்தகைய உரிமை வாழ்வுக்கே இயேசு நம்மை அழைக்கிறார். அதையம் அவரே அளிக்கிறார். மகனுக்குரிய உரிமையுடனும் பொறுப்புடனும் நான் செயல்படுகின்றேனா? இதையெல்லாம் ஏற்று அதை நம்புபவனே உண்மையான சீடன்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

தானியேல்(இ) 1: 29, 30 – 31, 32 - 33
”என்றென்றும் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்”

தானியேல் இணைப்புப் புத்தகத்தில் மூன்று இளைஞர்களைப் பற்றிய நிகழ்வை முதல் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அந்த மூன்று இளைஞர்கள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ. இவர்கள் உண்மையான தெய்வமாகிய “யாவே“ இறைவனை வணங்கிக்கொண்டிருக்கிறவர்கள். வேற்றுத்தெய்வத்திற்கு ஆராதனை செலுத்த, அரசரால் வற்புறுத்தப்படுகின்றனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் இந்த இளைஞர்கள், கடவுளின் மாட்சியையும், மகிமையையும் புகழ்ந்து பாடுகிறார்கள். அதைத்தான் இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது.

கடவுள் இன்றோ, நேற்றோ கண்டுபிடித்து வழிபடக்கூடியவர் அல்ல. மாறாக, பல தலைமுறைகளாக வழிபட்டு வரக்கூடிய கடவுள். இந்த கடவுள் அவர்களின் மூதாதையரின் கடவுள். அவர்களை பல தலைமுறைகளாக வழிநடத்தி வந்த கடவுள். இன்றைக்கு இஸ்ரயேல் மக்களின் உயர்வுக்கு அவர் தான் காரணமானவராக இருக்கிறார். கடவுளின் அன்பையும், அருளையும் பெற, இஸ்ரயேல் மக்கள் தகுதியற்றவர்களாக இருந்தும், கடவுள் அந்த தகுதியை அவர்களுக்கு வழங்கியிருக்கிறார். கடவுள் உண்மையாகவே போற்றுதற்குரியவர். இந்த பாடல் முழுவதும், மூன்று இளைஞர்களின் ஆழமான நம்பிக்கையையும், அவர்கள் கடவுள் செய்திருக்கிற அரும் செயல்களை நினைவிற்கொண்டு, நன்றியுணர்வுடன் வாழக்கூடியவர்களாகவும் இருப்பதை காண முடிகிறது.

கடவுள் மீது நாம் ஆழமான பற்றுறுதி கொள்ள வேண்டும். ஏனென்றால், அவர் நமது புகழ்ச்சிக்குரியவராக இருக்கிறார். கடவுள் நமக்கு செய்திருக்கிற எல்லா நன்மைகளையும் நாம் நன்றியுணர்வோடு நினைவிற்கொண்டு, அவருடைய மாட்சியையும், மகிமையையும புகழ்ந்தேத்துவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------

கீழ்ப்படிதல்

யூதர்கள் இயேசுவிடம், ”நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல. எங்களுக்கு ஒரே தந்தை உண்டு. கடவுளே அவர்” என்று சொல்கிறார்கள். இயேசு தனது சொல்லாற்றலின் மூலமாக, அவர்களுடைய வாழ்க்கை முறையினாலும், நடத்தையினாலும், ஆபிரகாமின் பிள்ளைகள் அல்ல என்பதை, தெளிவாக அவர்களுக்கு உரைத்துவிட்டார். உடனே யூதர்கள், அடுத்ததாக, தாங்கள் கடவுளின் பிள்ளைகள் என்று விவாதம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இயேசு அதனையும் உடைத்தெறிகிறார். அதனைத்தான். இந்த நற்செய்தியின் கடைசிப்பகுதி நமக்கு தெளிவுபடுத்துகிறது.

விடுதலைப்பயணம் 4: 22 ”இஸ்ரயேல் என் மகன்: என் தலைப்பிள்ளை”. இவ்வாறு கடவுள் இஸ்ரயேலை தனது முதல் பிள்ளையாக தேர்ந்தெடுக்கிறார். இஸ்ரயேல் மக்கள் கீழ்ப்படியாமையோடு பாலைவனத்தில் மோசேயோடு சண்டையிடுகிறார்கள். அப்போது மோசே அவர்களிடம் சொல்கிறார்: ”ஞானமற்ற மதிகெட்ட மக்களே! ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும் கைம்மாறும் இதுதானா? உங்களைப் படைத்து உருவாக்கி நிலைநிறுத்திய உங்கள் தந்தை அவரல்லவா? இவ்வாறு இஸ்ரயேலை தனது பிள்ளையாக கருதிய இறைவனை, இஸ்ரயேல் மக்கள் வேற்று நாட்டினரோடு தொடர்பு வைத்து, அவர்களது தெய்வங்களையும் வணங்கி, இறைவனுக்கு பிரமாணிக்கமில்லாமல் வாழ்ந்தனர். அந்த கீழ்ப்படியாமையை, பிரமாணிக்கமின்மையை இயேசு சுட்டிக்காட்டி, அவர்களை எச்சரிக்கிறார்.

இன்றைக்கு கீழ்ப்படிதல் அடிமைத்தனமாக பார்க்கப்படுகிறது. கீழ்ப்படிதல் என்பது மிகப்பெரிய பண்பு. அதனை சரியான பார்வையோடு பார்க்கிறபோது, அது இறைவனின் அளவுகடந்த, அருளை நமக்குப் பெற்றுத்தருகிறது. அதேபோல மனிதர்களிடையே, கணவன், மனைவி உறவிலும், பிரமாணிக்கம் என்கிற வார்த்தையின் உன்னதம் மறைந்து கொண்டேயிருக்கிறது. அதனை மீட்டெடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

 

பாவத்திலிருந்து விடுதலை பெறுவோம்

‘உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்’ என்று இயேசு கூறிய வார்த்தைகள், யூதர்களுக்கு கோபத்தைத்தூண்டுகிறது. அவர்களுடைய பதில்: ‘நாங்கள் யாருக்கும் அடிமைகளாய் இருந்ததில்லை. பின் ஏன் எங்களுக்கு விடுதலை?’. யூதர்களின் பதில் உண்மைக்குப்புறம்பானது போலத் தோன்றுகிறது. ஏனெனில், யூதர்கள் எகிப்தியர்களிடம் அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். அதேபோல் இயேசு வாழ்ந்த காலத்தில், உரோமையர்களிடம் அடிமைகளாய் இருந்திருக்கிறார்கள். அப்படியிருக்கையில் எப்படி யூதர்கள் இயேசுவிடம் தாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்று கூறமுடியும்? சற்று ஆழமாக சிந்தித்துப்பார்த்தால், யூதர்கள் சொல்வதில் தவறு ஏதுமில்லை. யூதர்களைப்பொறுத்தவரையில், அவர்களுக்கு கடவுள் மட்டும் தான் அரசர். வேறு எவரையும் அரசராக ஏற்றுக்கொள்வதில்லை. எனவேதான், உரோமையர்களுக்கு அடிமைகளாக இருந்தகாலத்தில், பல்வேறு புரட்சிப்படைகள் ஆங்காங்கே தோன்றி, விடுதலைக்காக போரிட்டுக்கொண்டிருந்தனர். வெளிப்படையாக அடிமை என்று தோற்றம் இருந்தபோதிலும், அவர்களின் உள்ளம் சுதந்திரமானதாக, கடவுளை மட்டும் ஏற்றுக்கொள்வதாக இருந்தது. இந்த சுதந்திரத்தை அடிமைத்தனம் என்ற பெயரில் அவர்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது. எனவேதான், அவர்கள் இப்படிச்சொல்கிறார்கள்.

இயேசு இங்கே அடிமைத்தனம் என்று சுட்டிக்காட்டுவது, இந்த உலகம் சார்ந்த அடிமைத்தனம் அல்ல, மாறாக, பாவம் சார்ந்த அடிமைத்தனம். பாவத்திற்கு அடிமைகளாக இருக்கிறவர்கள், தங்கள் மீதான கட்டுபாட்டை இழந்துவிடுகிறார்கள். பாவம் தான் அவர்களுக்கு எஜமானனாக இருக்கிறது. பாவம் அவர்களை ஆட்டுவிக்கிறது. அடிமை என்கிறவன் தன் எஜமானன் என்ன சொல்கிறானோ, அதைச்செய்கிறான். அதேபோலத்தான் பாவம் செய்கிறவன், தனக்கு எஜமானனாக இருக்கக்கூடிய பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான். இயேசு இங்கே ஓர் உருவகத்தைப் பயன்படுத்துகிறார்: மகன் மற்றும் அடிமை. மகனுக்கு வீட்டில் நிலையான இடம் உண்டு. ஆனால், அடிமையின் நிலை அப்படி அல்ல. அவன் எந்த நேரமும் வீட்டிலிருந்து துரத்தப்படலாம். அதேபோல, தங்களை ஆபிரகாமின் வழிமரபினர், ஆபிரகாமின் மக்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் விண்ணகத்திற்குச் சென்று விடலாம் என்று நினைக்க முடியாது. அவர்கள் பாவத்திற்கு அடிமையானால், மகன் என்ற நிலையிலிருந்து துரத்தப்படுவார்கள். விண்ணக வாழ்வை இழந்து விடுவார்கள். எனவே, பாவம் அவர்களை அடிமைநிலைக்கு உட்படுத்தாதபடி எச்சரிக்கையாக இருப்பதற்கு இயேசு அறைகூவல் விடுக்கிறார்.

இறைவனோடு நெருங்கிவர நமக்குத் தடையாக இருப்பது பாவம். இறைவனின் ஆசீரைப்பெறுவதற்கு நமக்கு தடையாக இருப்பது பாவம். நிறைவாழ்வை நோக்கி புனிதத்தன்மையோடு வாழ்வதற்கு நமக்கு தடையாக இருப்பது பாவம். பாவத்திற்கு அடிமையாக இருக்கும் நிலையிலிருந்து விடுதலை பெற, இறைஆற்றல் வேண்டி மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

யார் அடிமைகள் ?

இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசுவுக்கும், யூதர்களுக்கும் இடையே விடுதலை-அடிமைத்தனம் பற்றிய காரசாரமான உரையாடலை வாசிக்கிறோம். அதனையே நமது சிந்தனை-வேண்டல்-வாழ்வுக்காக எடுத்துக்கொள்வோம்.

இயேசுவின் வார்த்தை அவர்களுக்கு விடுதலை அளிக்கும் என்கிறார் இயேசு. அவர்களோ "நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே" என்கின்றனர். இயேசுவோ "பாவம் செய்யும் எவரும் பாவத்துக்கு அடிமை" என்று சொல்லி, அவர்களின் கண்களைத் திறக்க முயல்கிறார்.

உண்மையில் யூதர்கள் இரண்டுவிதமான அறியாமையில் பேசியுள்ளனர் என்பது நமக்குத் தெரிகிறது. முதலில், ஆபிரகாமின் வழிமரபினரான யூதர்கள் பல ஆண்டுகள் எகிப்தில் அடிமைகளாய் இருந்தனர், பின்னர், பாபிலோனுக்கு அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர். இயேசுவின் காலத்தில்கூட அவர்கள் உரோமைப் பேரரசின் அடிமைகளாய்த்தான் இருந்தனர். இந்த உண்மையை ஒத்துக்கொள்ள மறுத்ததே அவர்களின் பொய்மையின் அடிமை என்பதைக் காட்டுகிறது.

வரலாற்று உண்மையைவிட மேலாக, ஆன்மீக-இறையியல் உண்மை ஒன்றையும் அவர்கள் மறந்துவிட்டனர். எனவேதான், இயேசு அவர்களுக்கு நினைவூட்டுகிறார், "பாவம் செய்யும் எவரும் பாவத்துக்கு அடிமை" என்று. அந்தப் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அளிக்கவே இயேசு இந்த உலகிற்கு வந்தார்.

வருத்தமூட்டும் வகையில் யூதர்கள் இயேசு கொண்டு வந்த விடுதலையை அறியவுமில்லை, விரும்பவுமில்லை. ஆனால், கிறித்தவராகிய நாம் இயேசு சொன்ன வார்த்தைகளை அறிந்திருக்கிறோம். பல பாவங்களுக்கும், பழக்கங்களுக்கும், செல்வத்துக்கும், சிலைகளுக்கும் நாம் அடிமைகளாய் வாழ்ந்து வருகிறோம். இந்த உண்மையை அறிக்கையிட்டு, இயேசுவின் மன்னிப்பையும், விடுதலையையும் இத்தவக்காலத்தில் பெற்றுக்கொள்வோமா!

மன்றாடுவோம்: உமது வார்த்தையால் எங்களுக்கு விடுதலை வழங்கும் இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். பாவத்திற்கு அடிமைகளாய் வாழும் எங்களை மன்னித்து, உமது வார்த்தையாலும், அருள்சாதனங்களாலும் எங்களை விடுதலை வாழ்வுக்கு இட்டுச் செல்லும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

உண்மை விடுதலை அளிக்கும் ” !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

‘உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்’ என்னும் ஆண்டவர் இயேசுவின் அருள்வாக்கை இன்று சிந்திப்போம். உண்மை என்பது இரண்டு பொருள்படும்: 1. சொல்லில், சிந்தனையில், செயல்பாட்டில் நேர்மை, வாய்மையை உண்மை என்று அறிவோம். நமது பேச்சிலும், செயலிலும், மனநிலையிலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், நாம் எந்தவித குற்ற உணர்வும் இன்றி, அக விடுதலை அடைந்தவர்களாக வாழலாம். இவ்வாறு, உண்மை நமக்கு விடுதலை அளிக்கிறது. 2. உண்மையின் இரண்டாவது பொருள்: இயேசுதான் உண்மை. ‘நானே வழியும், ஒளியும், உண்மையும்’ என்றார் இயேசு. இயேசுவே உண்மை. எனவே, இயேசு நமக்கு விடுதலை தருகிறார். இந்த விடுதலை உடல், உள்ள, ஆன்மா தழுவிய முழு விடுதலை. அகவிடுதலை மற்றும் புறவிடுதலை இணைந்த ஒரு விடுதலை. இந்த விடுதலை அடைவதற்கு நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். அந்த உண்மையை அவரது வார்த்தைகள் அருள்கின்றன. ஆம், இறைவார்த்தையே உண்மை. இறைவார்த்தையைக் கடைப்பிடித்து, வாழ்ந்தால் நாம் விடுதலை பெற்றவர்களாக வாழ்வோம்.

மன்றாடுவோம்: விடுதலையின் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். இத்தவக்காலத்தில் இறைவார்த்தையை நாள்தோறும் வாசித்து, இறைவார்த்தையின்படி வாழ்ந்து, உண்மையுள்ளவர்களாய்த் திகழவும், அதன் வழியாக முழு விடுதலை அடையவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருட்தந்தை குமார்ராஜா

---------------------

''இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, 'உண்மை உங்களுக்கு
விடுதலை அளிக்கும்' என்றார்'' (யோவான் 8:31-32)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு மக்களுக்கு விடுதலை அளிக்க வந்தார். ஆனால் விடுதலை என்னும் சொல்லைக் கேட்டதும் சிலர் அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார விடுதலை பற்றி மட்டுமே நினைப்பார்கள். இயேசுவோ விடுதலை என்னும் சொல்லுக்கு ஆழ்ந்த ஒரு பொருள் தருகின்றார். இயேசு வழங்குகின்ற விடுதலை பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் நமக்குக் கிடைக்கின்ற விடுதலை ஆகும். கிறிஸ்தவ கண்ணோட்டத்தின்படி, இவ்வுலகில் நிலவுகின்ற எல்லா அடிமைத்தனங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் அட்டூழியங்களுக்கும் மூல காரணம் பாவம் ஆகும். கடவுளை எதிர்க்கின்ற போக்கு பாவம் என அழைக்கப்படுகிறது. கடவுளின் விருப்பத்தை நாம் செயல்படுத்தாமல் நம் மனம் போன போக்கிலே செல்வது பாவம் ஆகும். ஆக, பாவம் செய்வோர் ஒருவித அடிமைத்தனத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு முக்கிய ஊற்றாக இருப்பது நம் சுய நலம் ஆகும். கடவுளையும் பிறரையும் கருத்தில் கொள்ளாத போக்கு இந்த சுய நலம். இயேசு இந்த இழிநிலையிலிருந்து நமக்கு விடுதலை தர வருகின்றார்.

-- ஆக, ''உண்மை நமக்கு விடுதலை அளிக்கும்'' என்பதன் பொருள் என்ன? இயேசுவே கடவுளின் உண்மை. கடவுள் மனிதருக்கு வாழ்வளிப்பதற்காகவே தம் மகன் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார். கடவுளின் உண்மையை இயேசு நமக்கு வெளிப்படுத்தினார். கடவுள் என்றால் அன்பின் உருவம் என்பதே அந்த வெளிப்பாடு. இவ்வாறு உண்மையை நாம் இயேசுவின் வழியாக அறிகின்றோம். எனவே இயேசுவே தம்மை நமக்கு ''வழியும் உண்மையும் வாழ்வும் நானே'' என அறிமுகப்படுத்துகின்றார் (யோவா 14:6). இயேசுவை நம்புவோர் விடுதலை பெறுவர். இது முதன்முதலில் ஓர் உள்ளார்ந்த அனுபவம். அதே நேரத்தில் நாம் அடைகின்ற விடுதலை அனுபவத்தை நாம் பிறரோடு பகிர்ந்துகொண்டு, அவர்களும் உண்மையைக் கண்டு, ஏற்று விடுதலை அடைந்திட உழைக்க அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்தில் விடுதலை உணர்வையும் சுதந்திர மனநிலையையும் நாங்கள் கொண்டிருக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

'வாய்மையே வெல்லும்' என்று தமிழக அரசு முழங்குகிறது. "உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்" என்று இயேசு சொல்வதும் முழு உண்மையே. விடுதலை பெற்ற சுதந்திர வாழ்வு வாழ, வாழ்க்கையில் உண்மை வேண்டும். அமைதி வாழ்வுக்கு, நிம்மதி வாழ்வுக்கு, வார்த்தையிலும், செயலிலும் உண்மை ததும்ப வேண்டும்.பொய், எப்போதும் வெல்லாது; எப்போதுமே வெல்;லாது. உண்மை மட்டுமே வெல்லும். கள்ளம், கபடு, சூது, வஞ்கம், ஏமாற்று என்னும் பொய்யின் பல்வேறு போலிமுகங்கள் தரும் வெற்றியும் விடுதலையும் அமைதியும், கவிழ்த்தக் காத்திருக்கும் கயவனுக்குச் சமம்.

உண்மையுள்ள இடம் தெய்வ ஆசீரால் நிறைந்திருக்கும். நேர்மை அரைக்கச்சையாகவும்; உண்மை இடைக்கச்சையாகவும் அணிந்திருங்கள். அது,"உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும்." ;.(தி.பா 43 :3) "உண்மையைக் கடைப்பிடிப்போர் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பர்" (தோபித்து 4 :6) மண்ணினின்று உண்மை முளைத்தெழுந்தால் விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.(தி.பா 85 :11)."இறக்கும்வரை உண்மைக்காகப் போராடு; கடவுளாகிய ஆண்டவர் உனக்காகப் போரிடுவார்" (சீராக்கின் ஞானம் 4 :28)

அதே வேளையில், "உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று".( எரே 7:28), எரே9 :3 -5பொய்பேசத் தங்கள் நாவை வில்லைப்போல் அவர்கள் வளைக்கின்றனர்; உண்மைக்காக நாட்டில் யாரும் நிமிர்ந்து நிற்பதில்லை; அவர்கள் தீமையிலிருந்து தீமைக்கே சென்று கொண்டிருக்கிறார்கள்; என்னும் நிலை ஏற்படுமாயின் எரேமியா இறைவாக்கினரின் கடுஞ்சொல் தண்டனையாக நம்மேல் விழும். "உண்மையைப் பற்றிக்கொண்டு வாழாது தீமையில் இன்பம் காணும் அனைவரும் தீர்ப்புக்கு உள்ளாவர்.(2 தெச 2 :12) உண்மையைப் பற்றிக்கொண்டு இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்