முதல் வாசகம்
தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 3-9

அந்நாள்களில் ஆபிராம் பணிந்து வணங்க, கடவுள் அவரிடம் கூறியது: ``உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய். இனி உன் பெயர் ஆபிராம் அன்று; `ஆபிரகாம்' என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஏனெனில் எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையாக்குகிறேன். மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்; உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன். உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர். தலைமுறை தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இதனால் உனக்கும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன். நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழிமரபினருக்கும் வழங்குவேன். நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்'' என்றார். மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், ``நீயும் தலைமுறைதோறும் உனக்குப் பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்'' என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 105:4-5, 6-7, 8-9

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.

4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்!
அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!
5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!
அவர்தம் அருஞ்செயல்களையும்,
அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். -பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே!
அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்!
அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. -பல்லவி

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்;
ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம்
ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்
உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள். மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக.

 

யோவான் 8:51-59

தவக்காலம் -ஐந்தாம் வாரம் வியாழன்


நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 51-59

அக்காலத்தில் இயேசு யூதர்களிடம், ``என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். யூதர்கள் அவரிடம், ``நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே! எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?'' என்றார்கள். இயேசு மறுமொழியாக, ``நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள். ஆனால் அவரை உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப் போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைப்பிடிக்கிறேன். உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்'' என்றார். யூதர்கள் இயேசுவை நோக்கி, ``உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?'' என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், ``ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 8: 51 - 59
புரியாத புதிர்

நம்முடைய சமுதாயத்தில் நடக்கின்ற ஒரு சில காரியங்களைப் பார்க்கின்ற போது புரியாத புதிராகவே இருக்கின்றது. அது நம்முடைய நாட்டின் பாராளுமன்ற உறுப்பினார் இன்னொரு நாட்டு கிரிக்கெட் வீரர்களை சந்தித்து உற்சாகப்படுத்திய நிகழ்வாக இருக்கலாம், அல்லது திடீரென்று 10 இலட்சம் கோடி வாரா கடன் தள்ளுபடி செய்த மத்திய நிதியமைச்சர் அறிவிப்பாக இருக்கலாம், இந்து மத பூசாரிகளுக்கு திடீரென்று சம்பள உயர்வு என்ற அறிவிப்பாக இருக்கலாம். இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்தால் நமக்கு புரியாத புதிராகவே இருக்கின்றது.

இத்தகைய ஒரு புரியாத செயல் யூதர்கள் மத்தியில் காணப்படுவதைத்தான் யோவான் நற்செய்தியாளர் வெளிச்சமிட்டு காட்டுகின்றார். அவர்களின் குறுகிய மனப்பான்மை தான் இயேசுவை யாரென்று புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையிலேயே இயேசு இறைமகன் என்பதனை எண்பித்துக் காட்டத் தான் பல புதுமைகளைச் செய்தார். ஆனால் அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. அதனால் தான் ஆபிரகாமை இயேசுவோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றார்கள். அவர்கள் ஆபிரகாமை முன்னிறுத்தியது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பினும், அவரின் வாழ்க்கை முறையை உய்த்துணர மறந்து விட்டார்கள். எவ்வாறெனில் கடவுளுடைய வார்த்தைக்கு ஆபிரகாம் கீழ்ப்படிந்தார். அதனால் தான் எண்ணற்ற மக்களுக்கு அதிபதியாக மாற்றினார். ஆனால் இவர்கள் ஆபிரகாமின் பெயரைத் தூக்கிக் கொண்டு அவர் விட்டு சென்ற விழுமியங்களை கசப்புக் கனியாக மாற்றினார்கள். அதனைச் சுட்டிக் காட்டவே இயேசு, என் வார்த்தையை கடைப்பிடிப்போர் என்றுமே சாக மாட்டார் என்ற உண்மையான புரிதலைக் கொடுக்கின்றார்.

என்னுடைய புரிதல் இயேசுவைப் பற்றி எப்படிப்பட்டதாக இருக்கிறது? கீழ்ப்படிகின்ற புரிதலாக இருக்கின்றதா? அல்லது அவருடைய புதுமைகளை நம்முடைய துன்பங்களை கொண்டு உதாசீனப்படுத்துகின்ற முறையில் அமைகிறதா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

======================

யோவான் 8: 51-59
வார்த்தையே வாழ்வு

உண்மைக்கு சான்று கூறவே இயேசு வந்தார். உண்மையைக் கூறியதால் அவரைச் சிலுவையில் அறைந்துக் கொன்றார்கள். “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்கு சொல்லுகிறேன்” என்றதால் அவர்மேல் கல் எறிய கற்களை எடுத்தார்கள் என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். இயேசுவின் இந்த வார்த்தையை யூதர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

மத்தேயு இயேசுவின் மூதாதையர் பட்டியலை ஆதாமில் முடிக்கிறார் (ஏறுவரிசை) ஆனால் யோவான் நற்செய்தியாளரோ இயேசுவின் உடனிருப்பை இவ்வுலகப்படைப்பின் தொடக்கத்திலிருந்தே இருப்பதை நம் கண்முன் கொண்டுவருகிறார். “தொடக்கத்தில் வாக்கு இருந்தது அவ்வாக்கு கடவுளோடு இருந்தது, அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது,” (யோவான் 1:1) இந்த வார்த்தை மனிதனாகிப் பேசிய பொழுது வல்லமையுள்ள வாழ்வளிக்கும் வார்த்தையாகவே இருந்தது. இதையே இயேசு “என் வார்த்தையைக் கடைபிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்” என்கிறார்.

நாம் வார்த்தையானக் கடவுளை வாழ்வாக்குவோம். அவரினைப்பற்றி இன்னும் அதிகம் அறிய, உணர இறைவார்த்தையை தினமும் வாசிப்போம். நம்முடைய அனைத்துப் பிரச்சனைகளிலும் அவரின் வார்த்தை நமக்கு விடுதலையளிக்கும். அவரின் வார்த்தையை வாழ்வாக்குவோர் தன் செயலினாலும் வாழ்வினாலும் என்றுமே வாழ்வார்கள்;.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 105: 4 – 5, 6 – 7, 8 - 9
”ஆண்டவரையும், அவரது ஆற்றலையும் தேடுங்கள்”

திருப்பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் கடவுளைப் போற்றுவதற்கும், புகழ்வதற்குமானது. இந்த புகழ்ச்சிப்பாடல்களில் ஒரு சில பாடல்கள் மிகச்சிறியதாகவும், ஒரு சில பாடல்கள் மிக நீண்டதாகவும் காணப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது என்றால், கடவுளைப் புகழ்வதற்கு நீண்ட பாடல்கள் தேவையில்லை. மாறாக, நல்ல தூய்மையான மனநிலை தான் அவசியம். எவ்வளவு நீளமாக நாம் பாடுகிறோம், வாழ்த்துகிறோம் என்பது முக்கியமல்ல, எந்த மனநிலையோடு நாம் கடவுளைப் போற்றுகிறோம், புகழ்கிறோம் என்பதுதான், இங்கே நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடமாக இருக்கிறது.

கடவுளையும், அவரது ஆற்றலையும் தேட வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார். எதற்காக கடவுளையும், அவரது ஆற்றலையும் நாம் தேட வேண்டும்? இந்த உலகம் வாழ்வதற்கு கடினமானது. இங்கே நாம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் ஏராளமாக இருக்கிறது. ஒவ்வொருநாளும் நாம் விழித்தெழுகிறபோது, பிரச்சனைகள் இல்லாத நாளாக இருக்க வேண்டும் என்று தான், நாம் செபிக்கிறோம். அந்த நாளில் கடவுளை வேண்டுகிறோம். நாம் அன்றாடம் சந்திக்கக்கூடிய வாழ்க்கைப்பிரச்சனைகளை நம் தனி ஒருவரால் நிச்சயம் எதிர்கொள்ள முடியாது. அதற்கு கடவுளின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அவரது ஆற்றல் தேவைப்படுகிறது. அவரது உடனிருப்பு தேவைப்படுகிறது. கடவுள் நம்மோடு இருக்கிறபோது, இந்த உலகத்தில் எந்த பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை நம்மால் எதிர்கொள்ள முடியும். எனவே, நாம் கடவுளின் ஆற்றலுக்காக, அருளுக்காக மன்றாட வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார்.

நமது வாழ்க்கையில் நாம் கடவுளிடம் தேவைகளுக்காக வேண்டுகிறோம். செல்வத்திற்காக வேண்டுகிறோம். புகழுக்காக மன்றாடுகிறோம். ஆனால், நாம் வேண்டுவது, கடவுளின் ஆற்றலுக்காக இருக்க வேண்டும். கடவுளின் வழிநடத்துதலுக்காக இருக்க வேண்டும். பிரச்சனைகளை அணுகுவதற்கு ஞானத்தைத் தருவதாக இருக்க வேண்டும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------

இயேசு தரும் வாழ்வு

நற்செய்தி நூல்களில் யோவான் நற்செய்தி புரிவதற்கு சற்று கடினமான ஒன்றாக இருக்கிறது. அவரது நற்செய்தியில் இறையியல் கருத்துக்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. ஆனால், அவரின் நற்செய்தியின் அடிப்படையை புரிந்து கொண்டால், மிக எளிதாக அவரின் நற்செய்தியைப் புரிந்து கொள்ளலாம். யோவான் நற்செய்தியாளரைப் பொறுத்தவரையில், ”நாம் இதுவரையில் பார்த்திராத கடவுளின் மறுசாயல் தான் இயேசு. இயேசு வழியாக கடவுள் தன்னையே வெளிப்படுத்துகிறார்” என்கிற கருத்தை மையமாக வைத்து, தனது நற்செய்தியை எழுதுகிறார்.

ஆபிரகாம் வாழ்வதற்கும் முன்னால் நான் வாழ்கிறேன், என்று இயேசு சொல்வதன் கருத்தை, நற்செய்தி நூலின் மையத்தின் அடிப்படையில் புரிந்து கொண்டால், நமக்கு அது மிக எளிதானதாக இருக்கும். இயேசுவில் வெறும் மனிதன் மட்டும் குடிகொண்டிருக்கவில்லை. மாறாக, கடவுள் கொடுத்திருக்கிற வாழ்வு இருக்கிறது. தொடகத்தில் கடவுளால், முதல் மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருந்த வாழ்வு, இயேசுவில் இருக்கிறது. அதனைக் கொடுப்பதற்காகவே இயேசு வந்திருக்கிறார். முதல் மனிதன் வழியாக நாம், இறைவன் கொடுத்த வாழ்வை இழந்தோம். இன்றைக்கு கடவுளே அந்த இழந்த வாழ்வைக் கொடுக்க, இயேசு வழியாக நம்மில் ஒருவராக இருக்கிறார். இயேசு செய்த புதுமைகள் அனைத்துமே, கடவுள் வாழ்வைக் கொடுக்க வந்ததன் முன்னடையாளமாக இருக்கிறது. வாழ்வை கொடுக்க வந்தவர் கடவுள், என்கிற கருத்தின் உண்மையை நாம் உணர வேண்டும், என்பதே இந்த நற்செய்தி பகுதி, நமக்கு தரக்கூடிய செய்தியாகும்.

இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கும் நாம் அனைவரும், இயேசு வழியாக கடவுள் நமக்கு கொண்டு வந்திருக்கிற வாழ்வை உணர வேண்டும். அவர் தருகிற அருளை நாம் பெற்றுக் கொள்வதற்கு, இயேசு மீது நாம் வைக்கக்கூடிய நம்பிக்கை அவசியமாகிறது. நாம் இயேசு மீது வைத்திருக்கிற நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டி, இந்த நாளில் மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

திறந்த உள்ளம் வேண்டுவோம்

யூதர்களின் தந்தை ஆபிரகாமைப்பற்றி மக்கள் பல எண்ணங்களைக் கொண்டிருந்தனர். அவற்றுள் ஒன்று, ஆபிரகாம் உயிரோடு வாழ்ந்தபோதே இஸ்ரயேல் மக்களின் நடக்கப்போகிற வரலாற்றையும், மெசியாவின் வருகையையும் அறிந்திருந்தார் என்று உறுதியாக நம்பியிருந்தார்கள். இந்த மனநிலையோடு இந்தப்பகுதியை நாம் வாசித்துப்பார்த்தால், இயேசு சொல்வதின் பொருளையும், யூதர்கள் அவருக்கு எதிராக ஏன் கிளம்பினார்கள் என்பதின் காரணத்தையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

”உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பத முன்னிட்டுப் பேருவகை கொண்டார். அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்” என்ற இறைவார்த்தை மூலம், இயேசு தன்னை, ஆபிரகாம் முற்காலத்திலேயே கண்ட மெசியாவாக சித்தரிக்கிறார். நீங்கள் எதிர்பார்த்த மெசியா நான் தான், என்பதை இயேசு மறைமுகமாக வெளிப்படுத்துகிறர். இது யூதர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் அவர்கள் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளத்தயாரில்லை. இயேசுவை மெசியா தான் என ஏற்றுக்கொள்வதற்கு ஆயிரம் காரணம் இருந்தாலும், யூதர்கள் அவரை ஏற்றுக்கொள்வதற்கு தயாரில்லை. காரணம், அவர்கள் திறந்த உள்ளத்தோடு அல்லாமல், மூடிய கதவுகளோடு வாழ்ந்தனர்.

ஆண்டவரை அறிந்து கொள்வதற்கு நமது உள்ளத்தை நாம் திறக்க வேண்டும். ஆண்டவரை நமது வாழ்வில் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். மூடிய கதவுகளோடு அல்ல, மாறாக, திறந்த உள்ளத்தோடு. அப்போது தான் இறைவனை நாம் அடைய முடியும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைவனோடு இணைந்திருக்கும் வாழ்வு

‘என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாக மாட்டார்கள்’ என்று இயேசு சொல்கிறார். யூதர்கள் இயேசு மீது கோபப்படுகிறார்கள். எதற்காக யூதர்கள் கோபப்படுகிறார்கள்? இறைவார்த்தையைக் கடைப்பிடிப்போர் சாக மாட்டார்கள் என்று இயேசு ஒருபக்கத்தில் சொல்ல, யூதர்கள் இயேசுவின் வார்த்தைகளை தங்கள் மூதாதையர்களோடு ஒப்பிட்டுப்பார்க்கிறார்கள். ஆபிரகாம் இறந்துவிட்டார், இறைவாக்கினர்களும் இறந்துவிட்டார்கள். அப்படியானால் அவர்கள் இறைவார்த்தையைக் கடைப்பிடிக்கவில்லையா? இவ்வளவு பெரிய இறைவாக்கினர்களை இயேசு எப்படி பழிகூறலாம்? என்பதுதான் யூதர்களின் கேள்வி. இயேசு ஆபிரகாமையோ, இறைவாக்கினர்களையோ குறைத்துப்பேசவில்லை. அவர்கள் இறைவார்த்தையைக் கடைப்பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை. மாறாக, ‘சாக மாட்டார்கள்’ என்கிற வார்த்தையின் பொருளை இயேசு சொன்ன அர்த்தத்தோடு யூதர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான், இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. ‘சாக மாட்டார்கள்’ என்று சொல் வெறுமனே சாவு தொடர்பான பொருள் அல்ல. அது நிலைவாழ்வு தொடர்பான பொருள். அதாவது கடவுளோடு இணைந்த ஒரு வாழ்வு.

‘என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாக மாட்டார்கள்’ என்று இயேசு சொல்வதின் பொருள், அவர்கள் என்றென்றும் இறைவனோடு இணைந்திருப்பார்கள் என்பது. இறைவனோடு இணைந்திருப்பதுதான் ஒருவர் பெறக்கூடிய மேலான வாழ்வு. அத்தகைய உயரிய கொடையைப் பெறுவது, நாம் எப்படி வாழ்கிறோம்? என்பதில் அடங்கியிருக்கிறது. புனிதர்கள் இறைவனோடு வாழ்கிறார்கள். அதற்கு காரணம், அவர்கள் வாழ்ந்த உன்னதமான வாழ்வு. இறைவனோடு இணைந்த வாழ்வைப்பெறுவதற்காகத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த உலகம் நிலையற்ற உலகம். நிலையற்ற வாழ்விலிருந்து, நிலையான வாழ்வாகிய இறைவனோடு இணைந்திருப்பதுதான் வாழ்க்கைப்பயணம். தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலே 1: 23 ல் கூறுகிறார். “உயிர் நீத்து கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்கிற ஆவல், என்னை வாட்டுகிறது”. ஏனென்றால், தூய பவுலுடைய நம்பிக்கை: இறப்பு என்பது வாழ்விற்கான முடிவல்ல, மாறாக அது ஒரு தொடக்கம். நிலையற்ற உலகிலிருந்து நிலையான உலகத்திற்கான ஒரு பயணம். துன்பத்திலிருந்து, மகிழ்ச்சியான வாழ்வுக்கான அடித்தளம். சாலமோனின் ஞானம் 2: 23 கூறுகிறது,“கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தர்”;. கடவுள் மனிதர்களை சாக வேண்டும் என்பதற்காக, அழிந்து விட வேண்டும் என்பதற்காக படைக்கவில்லை. மேற்கண்ட விவிலிய வசனங்கள், இறைவனோடு இணைந்திருப்பதுதான் மனித வாழ்வின் மையம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

நாம் வாழும் வாழ்வு இறைவனோடு இணைந்திருக்கும் அருளைப்பெற்றுத்தரக்கூடிய வாழ்வாக இருக்க வேண்டும். நமது வாழ்வின் நோக்கமும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். அத்தகைய அருளைப்பெற நாம் ஒவ்வொருநாளும் முயற்சி எடுக்க வேண்டும். கடவுளுக்கு ஏற்ற வாழ்வு வாழ நாம் எடுக்கும் முயற்சிதான், கடவுளின் அருளைப்பெற்றுத்தரும் வழிமுறையாகும். கடவுள் இத்தகைய மனித முயற்சியை ஆவலாக எதிர்பார்க்கிறார். தனது அருளைப்பொழிந்து, அந்த முயற்சியை முழுமையாக்க காத்திருக்கிறார். இறைவனில் இணைந்த வாழ்வு வாழ, வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

இயேசுவும், ஆபிரகாமும் !

இயேசு தம் வாழ்;வில் தம்மைப் பழைய ஏற்பாட்டின் பல தலைவர்களோடு ஒப்பிட்டுப் பேசுவதைப் புதிய ஏற்பாட்டின் பல பகுதிகளில் பார்க்கிறோம். சாலமோனைவிடத் தாம் பெரியவர் என்றும், இறைவாக்கினர் யோனாவைவிடத் தாம் மேலானவர் என்றும், தாவீதைவிட மேலானவர், தாவீதுக்கும் தலைவர் என்றும் இயேசு தமது தான்மையையும், தாம் இறைமகன் என்பதையும் வலியுறுத்திப் பேசுவதைப் பார்க்கிறோம்.

இன்றைய வாசகப் பகுதியில் இயேசு "உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காணமுடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார். அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்" என்று சொன்னபோது யூதர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், ஆபிரகாம்தாம் யூத இனத்தின் தந்தை. எனவே, அவரைப் பற்றி இயேசு இவ்வாறு சொன்னதை அவர்களால் தாங்கமுடியவில்லை. எனவே, அவர்கள் "உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை. நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?" எனக் கேட்க, இயேசு அவர்களிடம் " ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று சொல்லி, அவர்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறார்.

ஆனால், இயேசு தாம் இறைமகன் என்பதையும், உலகின் தொடக்கமுதல் தந்தையின் நெஞ்சில் வாழ்ந்தவர் என்னும் உண்மையைத்தான் அவர்களிடம் எடுத்துரைத்தார். மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்தில் "தாவீதின் மகனும், ஆபிரகாமின் மகனுமாகிய இயேசுகிறிஸ்து" (மத் 1: 1) என்றுதான் நற்செய்தியே தொடங்குகிறது. பலவிதங்களில் இயேசு ஆபிரகாமின் மகன் என்று அழைக்கப்பட்டாலும், அவர் இறைவன் என்ற முறையில் ஆபிரகாமைவிட மேலானவர்தான்.

இதனை யூதர்கள் உணரவில்லை, ஏற்றுக்கொள்ளவும் விரும்பவில்லை. ஆனால், நாம் இயேசு ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, தாவீது, சாலமோன், இறைவாக்கினர்கள் அனைவரிலும் மேலானவராகவும், தந்தையின் வலப்புறம் வீற்றிருக்கும் நம் மீட்பராகவும் ஏற்று, அறிக்கையிட்டு, அந்த விசுவாசத்தின்படி வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம்.

மன்றாடுவோம்: தாவீதின் மகனும், ஆபிரகாமின் மகனுமாகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீர் யூதர் என்ற முறையில் ஆபிரகாமின் வழிமரபினராக இருந்தாலும், இறை இயல்பில் ஆபிரகாமுக்கும் இறைவனாய் இருக்கின்றீர்! நீரே எங்கள் ஆண்டவர், நீரே எங்கள் மீட்பர், நீரே எங்கள் நடுவர் என்று ஏற்று அறிக்கையிடுகிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

''இயேசு யூதர்களிடம், 'ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்
என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்.
இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள்'' (யோவான் 8:58-59)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு யார் என்பதைப் புரிந்துகொள்ள மக்கள் எக்காலமுமே முயன்றுள்ளனர். இயேசுவின் சொற்களைக் கேட்ட மனிதர்களில் சிலர் அவரை நம்ப மறுத்தனர். அவருடைய இறப்புக்குப் பிறகு கிறிஸ்தவ சமூகங்கள் அவர் உயிர்த்தெழுந்து தங்களோடு இருப்பதை உணர்ந்து நம்பிக்கையோடு ஏற்றன. இவ்வாறு கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் எண்ணிக்கை வளர வளர, அவர்களுக்கும் சில யூதர்களுக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்து எழுந்தது என்பதை யோவான் நற்செய்தி காட்டுகிறது. இயேசு உண்மையிலேயே மெசியாதானா? அவரைக் கடவுளின் மகன் என நாம் எப்பொருளில் அழைக்கலாம்? அவர் கடவுளிடமிருந்து வந்தார் என்றால் அவரையே நாம் கடவுள் எனக் கருதலாமா? - இத்தகைய கேள்விகளை யூதர்கள் கிறிஸ்தவ சமூகத்தினரிடம் கேட்டதில் வியப்பில்லை. குறிப்பாக, ஆபிரகாமுக்கும் இயேசுவுக்கும் உள்ள உறவு கருதத்தக்கது. யூதர்கள் ஆபிரகாமைத் தங்கள் தந்தை என ஏற்றனர். ஆனால் இயேசுவோ ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னரே தாம் இருப்பதாக அழுத்திக் கூறுகிறார். இதைக் கேட்ட ''யூதர்கள்'' இயேசு மீது எறியக் ''கற்களை எடுத்தனர்'' (காண்க: யோவா 8:58-59). இயேசு தம்மையே கடவுளுக்கு நிகராக்கிக்கொண்டார் என்பதே இதற்குக் காரணம்.

-- இயேசுவைப் பற்றி அறிய வேண்டும் என்றால் நம் ஆய்வு வெறும் வரலாற்று ஆய்வாக மட்டுமே இருந்தால் போதாது. இயேசுவை நாம் ஏற்பதற்கு நமக்கு ''நம்பிக்கை'' வேண்டும். அதாவது, இயேசுவின் சொற்களை நாம் ஏற்று, அவர் கூறுவது உண்மையே என அச்சொற்களை உள்வாங்கி, அதனால் நம் இதயத்தில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும். இத்தகைய மாற்றம் நிகழாவிட்டால் இயேசுவை நாம் வரலாற்றில் வாழ்ந்த ஒரு தலைசிறந்த மனிதராக மட்டுமே கொள்ளுவோமே தவிர, அவர் கடவுளை நமக்கு வெளிப்படுத்தி, நம்மைக் கடவுளிடம் இட்டுச்செல்கின்ற மெசியா என ஏற்கத் தவறிவிடுவோம்; அவரைக் ''கடவுளின் மகன்'' என்னும் சிறப்புத் தகுதி கொண்டவராக ஏற்றிடத் தயங்குவோம். ஆனால் உண்மையிலேயே இயேசு நம்மிடையே கடவுளின் உடனிருப்பாக வாழ்ந்துவருகிறார் என்றும், அவரைக் கண்டுகொள்ள நம் அகக்கண்களை நாம் திறந்திட வேண்டும் என்றும் கிறிஸ்தவ நம்பிக்கை அறிவுறுத்துகிறது. அதே நேரத்தில் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த எல்லா யூதர்களுமே இயேசுவைப் புறக்கணித்தனர் என்றோ, அதனால் அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றோ நாம் கொள்ளலாகாது. கடவுளின் அன்பிலிருந்து பிறக்கின்ற மீட்புத் திட்டத்தில் யூத மக்களுக்கு எப்போதுமே ஒரு சிறப்பிடம் உண்டு (காண்க: இரண்டாம் வத்திக்கான் சங்கம், கிறிஸ்தவமல்லா மறைகளோடு திருச்சபைக்குள்ள உறவு, எண் 4).

மன்றாட்டு
இறைவா, யூத குலத்தில் பிறந்து வளர்ந்த இயேசுவை மீட்பராக ஏற்கும் நாங்கள் எல்லா மனிதரையும் உம் பிள்ளைகளாக ஏற்றிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை;"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இந் நாட்களில் ஆணும் சரி பெண்ணும் சரி, யாரும் வயதைச் சொல்ல தயாரில்லை. பெண்ணின் அழகும், ஆணின் அந்தஸ்தும் வயதுள் வடிவம் கொண்டிருப்பதாகக் கணிப்பு. இயேசுவின் காலத்து யூத சமூகத்திலும் இதுபோல ஒரு எண்ணம் மேலோங்கி இருந்தது. ஆகவேதான் "உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள்.

யார் இந்த இயேசு? இவரின் இத்தகைய தீவிர போதனைக்கும் செயல்பாடுகளுக்கும் ஏதேனும் அடிப்படைக் காரணம் உண்டா? ஆபிரகாமை விட பெரியவர் என்கிறாறே? தந்தை இறைவனும் நானும் ஒன்று என்கிறாறே? 'இருக்கிறவர் நானே' என்கிறாறே, இவர் யாரோ என்று சிந்திக்க இவர்களால் முடியவில்லை. "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்".(எபி 13:8)

வயது என்ற வரம்பை வைத்துக்கொண்டு உண்மையைக் கூனி குறுக்கி பார்த்தார்கள். அத்தனை வரம்புகளையும் அகற்றிவிட்டு, திறந்த மனதோடு மனிதர்களைப் பாருங்கள், உண்மையைத் தேடுங்கள், நியாயத்தைப் பாருங்கள். தீமை நிகழ வாய்ப்பு இல்லை. நல்லவைகள் நடக்கும். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்