முதல் வாசகம்
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13

அந்நாள்களில் எரேமியா கூறியது: `சுற்றிலும் ஒரே திகில்!' என்று பலரும் பேசிக்கொள்கின்றார்கள்; `பழி சுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்' என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்; `ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன்மேல் வெற்றிகொண்டு அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம்!' என்கிறார்கள். ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை; அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது. படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரை சோதித்தறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே; நீர் என் எதிரிகளைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும்; ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன். ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 18: 1-3, 4-5, 6
பல்லவி: என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்.

1 அவர் உரைத்தது: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.
2 ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்;
3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். -பல்லவி

4 சாவின் கயிறுகள் என்னை இறுக்கின; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.
5 பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன. -பல்லவி

6 என் நெருக்கடிவேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்;
என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்;
என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது. -பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்
ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வும் அளிக்கின்றன.

 

யோவான் 10:31-42

தவக்காலம் -ஐந்தாம் வாரம் வெள்ளி

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 31-42

அக்காலத்தில் இயேசுவின் மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, ``தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள்முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டார். யூதர்கள் மறுமொழியாக, ``நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்'' என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, `` `நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்' என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது. அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை `இறைமகன்' என்று சொல்லிக் கொண்டதற்காக `இறைவனைப் பழித்துரைக்கிறாய்' என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்பவேண்டாம். ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்'' என்றார். இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார். யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார். பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், ``யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று'' எனப் பேசிக்கொண்டனர். அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 10: 31 - 42
செயல்: செத்ததா? மாத்தவா?

மதுக்கடைகளை ஒழிப்போம் என்று கோஷமிட்டவர்கள் தான் இன்று இந்தியாவிலே சிறந்த மது விற்பனையாளர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். வாக்கு காற்றாய் பறந்தது, செயல் செத்ததாக இருக்கிறது. வைகை ஆற்றின் தண்ணீரை சேமிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் தொ்மாகோல் நிரப்பிய செயலையும் நாம் வாசித்திருக்கின்றோம். மக்களுக்கு சிறந்த கலையாகிய யோகா கலையை கற்றுக் கொடுப்பதாகக் கூறி, பின்புலத்தில் கல்லூரி, பள்ளிக்கூடங்கள் போன்றவற்றின் மூலம் இந்தியாவில் பணக்கார வரிசையில் குறிப்பிட்ட இடத்தைப் பிடித்த மத தலைவர்களின் செயல்களையும் நாம் அறிந்தவர்களே. இத்தகைய நபர்களின் செயல்களெல்லாம் இந்த சமுதாயத்தை மாற்றக் கூடியதாக அல்லாமல் மேலும் இழப்பு நிலைக்கு அழைத்து செல்லக் கூடியதாகவே அமைகிறது.

ஆனால் இந்த சமுதாய செயல்பாடுகளில் மாற்றத்தை தன் செயலால் கொண்டு வந்தவர் தான் இயேசு. இத்தகைய சமூக மாற்றம் தான் யூதர்களுக்கு எரிச்சலையூட்டுகின்றது. எதற்காக என்றால் அவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு சிலரை உயர்குடியினராக பார்த்தார்கள். அதாவது குருக்கள், பரிசேயர்கள், மறைநூல் வல்லுநர்கள், சதுசேயர். இவர்கள் அனைவருமே யூத குலத்தில் உயர்ந்தவர்கள் என்ற கண்ணோட்டம். அது போல ஒரு சிலரை தாழ்ந்தவர்களாக அவர்கள் எண்ணினார்கள். அதாவது பாவிகள், வரிதண்டுவோர், சமாரியர், பிற இனத்தவர்கள். எனவே தான் இயேசுவின் செயல்பாடு இந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாழ்வு அளிப்பது போன்றே பல செயல்களைச் செய்து காட்டினார். நல்ல சமாரியன் உவமை, சமாரியப் பெண் – இவையெல்லாம் இந்த சமுதாய கட்டுக்களை உடைத்து மாற்றத்தைக் கொணர. இதுதான் உண்மையான செயல்பாடு. இதனை இறுதியில் யூதர்கள் புரிந்து கொண்டதால் இயேசுவின் மீது கற்கள்.

நம்முடைய இல்லங்களில் கணவன், மனைவிக்கிடையே செயல்பாடு மாற்றத்தைக் கொணர்கிறதா? சமுதாயத்தில் நம் சிந்தனைகள் மாற்றத்தைக் கொணர்கிறதா அல்லது செத்த சிந்தனையாக இருக்கிறதா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

======================

யோவான் 10.31-42
கடவுள் எங்கோ இல்லை.

பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே இயேசு தன் பணியைச் செய்து வந்தார். “இதோ இக்குழந்தை இஸ்ராயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்” என்ற இறைவாக்கினர் சிமியோனின் வாக்கு (லூக் 2:24) செயல்பட தொடங்கியது. தன் சொந்த ஊரிலேயே அவருக்கு எதிர்ப்பு, அவரைக்கல்லால் எரிந்து கொல்லவும், கேள்விகள் கேட்டு அவமானப்படுத்தவும், வாதம் புரிந்து தோற்கடிக்கவும், சூழ்ச்சிகள் செய்து உரோமையர்களிடம் மாட்டி விடவும் பல முயற்சிகள்.

இவை அனைத்திற்குமான காரணம் அவர் கடவுளை தந்தை என்று அழைத்தும், என்னைக் காண்கின்றவன் தந்தையைக் காணலாம் என்றும், தந்தையின் செயலினையே நான் செய்கிறேன் என்றும், கடவுளை நம்மோடு ஐக்கியப்படுத்தியதற்காகவே, கடவுளை நம் மத்தியில் கொண்டு வந்ததற்காகவே, அவரை மத்தியில் விட்டு அனைவரும் ஏளனம் செய்தனர். யூதர்களைப் பொறுத்தவரை கடவுளை எங்கோ இருப்பவராகவேப் பார்த்தனர். அவரை தம்மில் ஒருவராக அவர்களால் பார்க்க முடியவில்லை. அவர் இப்படி, அப்படியென்று கடவுளுக்கு வரையறைக் கொடுத்தார்கள். கடவுளை தன் அறிவுத்திறனால் கட்டிப்போட நினைத்தார்கள். ஆனால் இயேசு இம்மானுவேலனாக (கடவுள் நம்மோடு) இருப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடவுளை எங்கோ இருப்பவர் என நினைத்து நம் வாழ்வினை அமைத்துக் கொண்டோம் என்றால் நாம் முற்றிலும் தேங்கிவிடுவோம். கடவுளின் செயல்கள் நம்மோடு இருக்கிறது. அவரின் வார்த்தைகள் நம்மை வழிநடத்துகிறது என்பதை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே நம் வாழ்வு நமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாய் அமையும்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 18: 1 – 2a, 3, 4 – 5, 6
”என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்”

அழுகையின் இறைவாக்கினர்“ என்று எரேமியாவைச் சொல்வார்கள். தாவீதிற்கும் இந்த அடைமொழி முற்றிலுமாகப் பொருந்தும். ஏனென்றால், அவரது உள்ளத்துயரத்தின் வெளிப்பாடே, அவர் எழுதிய திருப்பாடல்கள். இந்த திருப்பாடலும், தாவீதின் கலக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய திருப்பாடல். தன்னுடைய கவலையை அவர் பாடலாக வடிக்கிறார். துயரத்தோடு தொடங்குகிற அவரது பாடல், மகிழ்ச்சியில் முடிவடைகிறது. இந்த பாடல், சாமுவேல் புத்தகத்தில் வருகிற அன்னாவின் பாடலோடு இணைந்த ஒன்றாக இருக்கிறது. அன்னாவும் தன்னுடைய வேதனையை, பாடலின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார். நேரம் செல்லச்செல்ல அவரது வேதனை அதிகரிக்கிறது. இறுதியில் கடவுளின் மாட்சிமையை வலிமையாக உணர்த்தி அது நிறைவடைகிறது. அந்த பாணி, இந்த பாடலிலும் காணப்படுகிறது.

இந்த உலகத்தில் நமக்கென்று இருக்கிற ஒரே ஆறுதல், ஆதரவு கடவுள் மட்டும்தான். நமக்கென்று ஏராளமான நண்பர்கள் இருந்தாலும், உயிர் நண்பர் என்று ஒருவர் மட்டும் தான் இருக்க முடியும். அவரும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை தான், நம்மோடு துன்பத்தில் பயணிக்க முடியும். குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகு அவரால், நம்மோடு இணைந்து வர முடியாது. அந்த நேரத்தில் நாம் தனியாக விடப்படுகிறோம். இந்த அனுபவம் எல்லோரும் வாழ்க்கையில் பெறக்கூடியது. இத்தகைய துன்ப நேரத்திலும், நெருக்கடியான வேளையிலும் நமக்கு உற்ற தோழனாக, துணைவராக இருக்கக்கூடிய கடவுள் ஒருவர் மட்டும் தான் என்று ஆசிரியர் கூறுகிறார். எனவே, நெருக்கடியான வேளையில் ஆண்டவரைத் தேடுவதற்கு இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

நம்மோடு உடன்பயணிக்கக்கூடிய கடவுள் எப்போதும் இருப்பதனால், நாம் எதிர்காலத்தை நினைத்தோ, நமது வாழ்க்கையை நினைத்தோ கவலைப்படத் தேவையில்லை. நம்பிக்கையோடு நமது நாட்களை நாம் நகர்த்துவோம். எல்லாச்சூழ்நிலையிலும் நம்மோடு இருக்கிற கடவுள், நிச்சயம் நம்மை பாதுகாப்பார்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------

விசுவாசத்தை அதிகரிக்க…

இயேசு தான் உண்மையில் கடவுளிடமிருந்து தான் வந்திருக்கிறேன் என்பதை, யூதர்களுக்கு பல வழிகளில் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். எப்படியாவது அவர்கள் உண்மையை அறிந்துவிட வேண்டும் என்று, தன்னால் இயன்றதைச் செய்திருக்கிறார். ஆனால், யூதர்களின் மனம் கல்லாகத்தான் இருந்தது. இன்றைய நற்செய்தியிலும் இயேசு, தனது வாதத்திறமையினால், அவர்களுக்கு தான் யாரிடமிருந்து வருகிறேன்? என்பதை உணர்த்த விரும்புகிறார். அதற்கான முயற்சியை எடுக்கிறார்.

”தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் மீது செய்து காட்டியிருக்கிறேன்” என்று சொல்கிறார். பொதுவாக, வார்த்தைகளில் போதிக்கிறபோது, அது வாதத்திற்கு உட்பட்டது. நாம் சொல்லக்கூடிய வார்த்தைகளை ஒவ்வொருவரும் அவரவர் பிண்ணனியிலிருந்து புரிந்து கொள்வார்கள். அது நாம் சொல்கிற அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படுமா? என்றால், அது நிச்சயம் இல்லை. ஆனால், செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், வாதத்திற்கு அப்பாற்பட்டது. இயேசு ஒரு சிறந்த போதகர். காரணம், வார்த்தையினால் மட்டுமல்ல, நற்செயல்களால், தான் யார் என்பதை, மற்றவர்களுக்கு உணர்த்த முயற்சி எடுத்தவர். இதுவரை யாரும் அப்படிப்பட்ட நற்செயல்களை, மக்கள் மத்தியில் செய்தது இல்லை. எனவே, தன்னுடைய நற்செயல்களின் பொருட்டு அவர்களை, நம்புவதற்கு அழைப்புவிடுக்கிறார்.

விசுவாசம் என்பது மற்றவர்கள் போதிக்க நாம் கேட்பதனால் அதிகரித்து விடாது. நாம் தனிப்பட்ட முறையில், நமது வாழ்க்கையில் இயேசுவை அனுபவிக்கிறபோது தான், நாம் அதிகரிக்கச் செய்ய முடியும். அந்த விசுவாசம் தான், காலத்திற்கும் நிலைத்திருக்கும் விசுவாசமாக இருக்க முடியும். ஆக, இயேசுவை அனுபவிக்க நாம் என்ன முயற்சி எடுக்கிறோம்? என சிந்தித்துப் பார்ப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறையனுபவம்

இயேசு அவரை கல்லெறிய முயன்றவர்களிடம் அகப்படாமல் இருக்க, அங்கிருந்து சென்றார், என நற்செய்தி சொல்கிறது. எதற்காக இயேசு அவர்களைப்பார்த்து ஓட வேண்டும்? சாவைக்கண்டு இயேசுவுக்கு பயமா? அவர்களை எதிர்கொள்வதற்கு பயமா? அங்கே இருந்தால் நிச்சயம் தனது உயிருக்கு ஆபத்து வந்துவிடும், என்று தப்பி ஓடினாரா? என்றால், அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் “இல்லை“. பிரச்சனைகளைப்பார்த்து பயந்து ஓடுகிறவர் அல்ல இயேசு. மாறாக தனது இறுதிப்பாடுகளை அனுபவிப்பதற்கு முன்னதாக, அவருக்கு சற்று அமைதி தேவைப்படுகிறது. அதனை எதிர்கொள்ள ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே அந்த இடத்தை விட்டு இயேசு அகன்று செல்கிறார்.

இயேசு அந்த இடத்தைவிட்டு, எந்த இடத்திற்குச் செல்கிறார்? என்பது இங்கே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. யோர்தானுக்கு அப்பால், தான் திருமுழுக்குப் பெற்ற அந்த இடத்திற்கு அவர் சென்றதாகப் பார்க்கிறோம். அங்கே தான் ”இவரே என் அன்பார்ந்த மகன். இவருக்கு செவிசாயுங்கள்” என்ற தந்தையின் வார்த்தைகள் வெளிப்பட்டது. அங்கே தான் அவர் கடவுள் அனுபவத்தின் நிறைவைப்பெற்றார். அதுதான் அவரது பணிவாழ்வின் தொடக்கம். அங்கிருந்துதான் தனது பணிவாழ்வைத் தொடங்குகிறார். வாழ்வில் கலக்கம், கவலை, கண்ணீர் வருகிறபோது, நமது வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களுக்கு, கடவுளை நாம் அனுபவமாக உணர்ந்த இடங்களுக்கும், நமக்கு விடுதலை பெற்றுத்தந்த இடங்களுக்கும்  செல்வதில் ஒன்றும் வியப்பில்லை. தொடக்கநூல் 35: 1 – 5 ல், யாக்கோபு தம் வீட்டாரையும், அவரோடிருந்த அனைவரையும் நோக்கி, ”எழுந்து வாருங்கள். பெத்தேலுக்குச் செல்வோம். அங்கே, துன்ப நாளில் என் மன்றாட்டைக் கேட்டருளி, நான் சென்றவிடமெல்லாம் எனக்கு வழித்துணையாய் இருந்த இறைவனுக்கு ஒரு பலிபீடத்தை எழுப்புவேன்” என்று சொல்கிறார். ஆக, துன்பமான காலத்தில், நமக்கு ஆற்றல் தந்த இடங்கள் நமது வாழ்வில் மறக்கமுடியாதவை.

நமது வாழ்வின் துன்பங்களுக்கு ஆறுதல் இறைவன் தாம். நமது வாழ்வில் எது நடந்தாலும், ஆண்டவரிடத்தில் செல்கிறபோது, நிச்சயம் ஆண்டவர் நமக்கு மகிழ்ச்சி பிறக்கும். ஆண்டவரின் பிரசன்னம் நமக்குப்புத்துணர்ச்சியைத் தரும். அவரது ஆற்றல் நம்மை வழிநடத்தும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

மனத்துணிவோடு வாழ்வோம்

‘இயேசு மீது எறிய யூதர்கள் கற்களை எடுத்தனர்’ என்று வாசிக்கக்கேட்டோம். எதற்காக இயேசுவை கல்லெறிய யூதர்கள் முடிவு செய்தனர்? அதற்கான பதில்: யோவான் 10: 33 “மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்”. பழைய ஏற்பாடு நூலில் லேவியர் 25: 16 ல் வாசிக்கிறோம், “ஆண்டவரின் திருப்பெயரை இகழ்பவர் கொலை செய்யப்படுவார். சபையார் கல்லாலெறிவர்”. இயேசு தன்னை மெசியா, கடவுளின் மகன் என்று சொன்னதால், அவர் கடவுளைப்பழித்துரைக்கிறார் என்பது யூதர்களின் வாதம். எனவே, அவரை கல்லால் எறிய தயாராக இருந்தனர். ஆனால், இயேசு அவர்களின் பகைமையை தனது வாதத்திறமையால் துணிவோடு எதிர்கொள்கிறார்.

இயேசு தான் கடவுளின் மகன் என்பதை அழகாக நிரூபிக்கிறார். திருப்பாடல் 82: 6 சொல்கிறது: “நீங்கள் தெய்வங்கள்;: நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்”. இந்தப்பகுதியில் நீதித்தலைவர்களை திருப்பாடல் ஆசிரியர் தெய்வங்களாக சித்தரிக்கிறார். ஏழை, எளிய மக்களுக்கு நேர்மையோடு நீதி வழங்கச்செய்யும்போது, அவர்கள் தெய்வங்களாக, கடவுளின் புதல்வர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஒரு நீதித்தலைவர் கடவுளால் தெய்வமாக மக்கள் நடுவில் அனுப்பப்படுகிறார். விடுதலைப்பயணம் 21: 6 ல் மற்றும் 22: 9, 28 ல், நீதித்தலைவர்கள் கடவுள் பெயரால் அழைக்கப்படுகிறார்கள். “அவனை அவன் தலைவன் கடவுளிடம் கூட்டிக்கொண்டு வருவான்”. “கடவுளை நீ பழிக்காதே”. மறைநூலே சாதாரண மனிதர்களான நீதித்தலைவர்களை அவர்களின் பணி அடிப்படையில் கடவுள் என்ற அளவுக்கு போற்றும்போது, பல வல்ல செயல்களை செய்யும் நான் ஏன் இப்படி பேசக்கூடாது? என்பது இயேசுவின் முதல் வாதம். இயேசுவின் இரண்டாம் வாதம்: என் வார்த்தைகளின் பொருட்டு அல்ல, என் செயல்களின் பொருட்டு நம்புங்கள். யூதச்சமுதாயத்தில் எத்தனையோ பேர் தங்களை மெசியா, கடவுளின் மகன் என்று சொல்லிக்கொண்டு, மக்கள் மத்தியில் வலம் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களால், வல்ல செயல்களைச்செய்யமுடியவில்லை. இதன்மூலம் அவர்கள் போலியானவர்கள் என்பது தெளிவு. ஆனால், இயேசு வெறும் வார்த்தைகளினால் மட்டுமல்ல, தன்னுடைய செயல்களினால் மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். இதுவரை யாரும் செய்யாத வல்ல செயல்களை இயேசு செய்திருக்கிறார். முடவர்களை நடக்க வைத்திருக்கிறார், ஊமையர்களை பேச வைத்திருக்கிறார், கடலை அடக்கியிருக்கிறார். தீய ஆவிகளை ஓட்டியிருக்கிறார். இறந்தவர்களை உயிர்ப்பித்திருக்கிறார். தன்னுடைய வல்லமை கடவுளிடமிருந்து இல்லையென்றால், தன்னால் எப்படி இந்த அளவுக்கு வல்ல செயல்கள் செய்ய முடியும் என்பது இயேசுவின் இரண்டாம் வாதம். ஆக, பதில் சொல்ல முடியாமல், யூதர்கள் திகைத்து மீண்டும் அவரைப்பிடிக்க முயல்கின்றனர்.

இயேசுவின் மனத்துணிவு நம்மை வியக்கவைக்கிறது. எந்தச்சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட கேள்விகளுக்கும், எந்த அறிவார்ந்த மனிதர் முன்னிலையிலும் பயப்படாது, பின்வாங்காது, பொறுமையோடு, ஆதாரங்களோடு பதில் கொடுப்பது இயேசுவுக்கே உள்ள தனி அடையாளம். அதற்கு காரணம் அவரின் கடவுள் அனுபவம். இறைத்தந்தையோடு இருந்த ஒன்றிப்புதான், அவருக்கு இந்த ஆற்றலையும், பலத்தையும் தந்தது. வாழ்வை நிமிர்ந்து எதிர்கொள்ள ஆற்றல் தந்தது. அத்தகைய இறைவல்லமையை, கடவுள் ஒன்றிப்பை நாமும் பெற, இறையருள் வேண்டுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

"நான் இறைமகன்" !

"மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்" என்பது யூதர்கள் இயேசுவின்மேல் வைத்த குற்றச்சாட்டுகளுள் முகாமையானது. இக்காரணத்துக்காகவே அவரைக் கல்லால் எறிந்து கொல்ல முயன்றனர் அவர்கள். ஆனால், இயேசு இக்குற்றச்சாட்டுக்குத் தம் தரப்பு நியாயங்களை முன் வைப்பதே இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி.

தாம் இறைமகன் என்பதற்கு இயேசு முன் வைக்கும் வாதங்கள் இவையே:

1. "கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களே தெய்வங்கள் எனச் சொல்லப்படுகிறார்கள்" என்று இயேசு மறைநூலையே மேற்கோள் காட்டுகிறார். இறைவார்த்தையைப் பெற்றுக்கொள்ளும் அனைவருமே இறைவனின் பிள்ளைகளாகும் பேறு பெறுகின்றனர் என்றால், இயேசுவுக்கு அந்தப் பேறு நிச்சயம் உண்டு. காரணம், இறைவனின் வார்த்தையின்படியே அவர் இவ்வுலகிற்கு வந்தார். ("அவரே வாக்கு" என யோவான் தமது நற்செய்தி நூலின் தொடக்கத்தில் கூறுவதை இங்கு நினைவுகூர்வது நன்று).

2. தந்தைக்குரிய செயல்களைச் செய்பவர்கள் அனைவரும் அவருடைய பிள்ளைகளே என்பது இயேசுவின் இரண்டாவது வாதம். இயேசு தமது விருப்பச் செயல்களைச் செய்யாமல், இறைத் தந்தை விரும்பிய செயல்களையே செய்தார்.

இயேசுவின் வாதத்தை ஏற்காத யூதர்கள் அவரைக் கொல்லமுயன்றனர். எனவே, அவர் அங்கிருந்து யோர்தான் நதியின் அக்கரைப் பகுதிக்குச் சென்றார். "அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்" என்று இன்றைய வாசகம் நிறைவு பெறுகிறது.

இயேசுவின் சொற்களையும், செயல்களையும் கண்ட யூதர்களில் பலர் அவரில் நம்பிக்கை கொண்டனர். அவரை இறைமகனாக ஏற்றுக்கொண்டனர். ஆனால், இன்னும் பலர் அவரை இறைமகனாக ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல, அவரைக் கொல்லவும் முயன்றனர்.

நாம் இயேசுவின் சொற்களிலும், செயல்களிலும் நம்பிக்கை கொள்கிறோமா? அவரை இறைமகனாக நம் வாழ்வில் ஏற்றுக்கொள்கிறோமா?

மன்றாடுவோம்: உலகின் ஒளியாக உம்மை வெளிப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீரே இறைத் தந்தையின் மகன், நீரே உலகின் மீட்பர், வாழ்வு தரும் வார்த்தைகளும், பேரன்பும் உம்மிடமே உள்ளன என்று ஏற்றுக்கொள்கிறோம், அறிக்கையிடுகிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

இறைமகன்” !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின்மேல் எறிய யூதர்கள் கற்களை எடுத்தபோது, இயேசு அவர்களைக் கேள்வி கேட்கிறார். அதற்கு அவர்கள் அளிக்கின்ற பதில் “இறைவனைப் பழித்துரைத்தற்காகவே உன் மேல் கல் எறிகிறோம்”. எனவே, இயேசு மறைநூலை அவர்களுக்கு மேற்கோள் காட்டுகிறார்: ‘நீங்கள் தெய்வங்கள். நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்’ (திபா 82:6) என்னும் திருப்பாடல் வரிகளை மேற்கோள் காட்டி, ‘கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள்’ என்று சொல்லி, தாம் ‘இறைமகன்’தான் என்று தம் நிலையை நியாயப்படுத்துகிறார்.

இயேசுவின் நிலைப்பாட்டின்படி நாம் அனைவருமே இறைமக்கள்தானே, தெய்வத் தன்மை உடையவர்கள்தானே! கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்கள், கடவுளுடைய வார்த்தையை வாழ்ந்துகாட்டுபவர்கள் இறைவனின் பிள்ளைகள். எனவே, நமது கடப்பாடு பெரிதாகிறது. இறைவார்த்தையின்மீது ஆர்வம் உடையவர்களாக மட்டுமிராமல், அவ்வார்த்தையின்படி வாழ்கிறவர்களாவும் இருந்து, ‘இறைமக்கள்’ என்னும் பெயருக்குத் தகுதியுடையவர்களாக நம்மை மாற்றிக்கொள்வோமாக!

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, எங்களை உமது பிள்ளைகள் என்று அழைப்பதற்காக நன்றி செலுத்துகிறோம். உமது வார்த்தையைப் பெற்றுக்கொள்ளும் நாங்கள், அவ்வார்த்தையின்படி வாழ்கிற அருளை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருட்தந்தை குமார்ராஜா

---------------------

 

''இயேசு, 'நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால்
நீங்கள் என்னை நம்ப வேண்டாம். ஆனால் நான் அவற்றைச் செய்தால்,
என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்' என்றார்'' (யோவான் 10:37-38

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- யோவான் நற்செய்தியில் இயேசு தமக்கும் தம் தந்தைக்கும் இடையே உள்ள உறவு பற்றிப் பல இடங்களில் விளக்கிக் கூறுகிறார். இயேசு கடவுளைத் தம் தந்தை என அழைத்தார். தந்தை-மகன் உறவை நாம் பெற்றோர்-பிள்ளை உறவாகப் புரிந்துகொள்கின்றோம். ஆனால் இயேசு கடவுளைத் தம் தந்தை என அழைப்பது மனித உறவுகளுக்கு அப்பாற்பட்ட முறையில் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இயேசு கடவுளின் மகன் என்னும் முறையில் காலத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் ''தந்தையிடமிருந்து புறப்படுகின்றார்''. இப்புறப்பாடு மனிதப் பாணியில் தந்தை மகனுக்குப் பெற்றோர் ஆவதிலிருந்து வேறுபட்டது. அதே நேரத்தில் இயேசு கடவுளைச் சார்ந்து இருக்கின்றார் எனவும் கடவுளுக்கு நிகராக உள்ளார் எனவும் கிறிஸ்தவர் நம்புகின்றனர். ''தந்தைக்குரிய செயல்கள்'' என இயேசு எதைக் குறிப்பிடுகிறார்? தந்தை கடவுள் தம் மகன் வழியாகத் தம்மையே நமக்கு வெளிப்படுத்துகிறார்; இயேசுவின் சொல், செயல், பணி எல்லாமே தந்தையை நமக்கு அறிவிக்கின்ற விதத்தில் அமைகின்றன. ஆக, இயேசுவைக் காண்போர் தந்தையைக் காண்கின்றனர் (காண்க: ''என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்'' - யோவா: 12:45). இயேசுவிடம் கடவுளின் செயல் துலங்குகிறது என்பதைப் பலர் ஏற்க மறுத்தனர்.

-- அந்நிலையில் இயேசு தம் எதிரிகளைப் பார்த்து, தம் செயல்கள் எதைக் குறிக்கின்றன என்று அறிவதற்கு அவர்கள் திறந்த மனம் உள்ளவர்களாக இருக்கவேண்டும் எனக் கேட்கிறார். இயேசுவின் செயல்கள் மக்களுக்கு நன்மை பயப்பதற்காகவே செய்யப்பட்டன. அவர் ஆற்றிய புதுமைகள் மக்களுக்கு நலம் அளிக்கவும், அவர்களது பசியைப் போக்கவும், துயரத்தை அகற்றி மகிழ்ச்சி கொணரவுமே செய்யப்பட்டன. அச்செயல்கள் வழியாகவும் இயேசுவின் போதனை வழியாகவும் மக்களுக்குக் கடவுளின் எல்லையற்ற அன்பும் இரக்கமும் வெளிப்படுத்தப்பட்டன. ஆனால் சிலர் இதை ஏற்க மறுத்தனர். இன்றும்கூட, நாம் இயேசுவைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் திறந்த மனத்தோடு அவரை அணுக வேண்டும். கடவுளின் அருள் நம் உள்ளத்தில் தூண்டுகின்ற நம்பிக்கை உணர்வை மழுங்கடித்துவிடாமல் நாம் திறந்த இதயத்தோடு இயேசுவிடம் சென்றால் அவரில் கடவுளின் செயல் துலங்குவதைக் கண்டுகொள்வோம்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்தில் நம்பிக்கை உணர்வைத் தூண்டி எழுப்ப உம்மை வேண்டுகிறோம்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இயேசுவின் வாழக்கையைப் பின்தொடர்ந்தால் திரும்பத் திரும்ப கேள்விப்படும் செய்தி அதிர்ச்சியைத் தரும். "அவனுக்குப் பேய்பிடித்துவிட்டது; பித்துப்பிடித்து அலைகிறான்"(யோவா10:20) என்ற ஆவதூறு. "அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்."(யோவா10:39 "பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?" என்ற சொல்லி அவரை வெளியே தள்ளினர்.(யோவா9:34) "அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.(யோவா8:59) "அவர்களும் தலைமைக் குருக்களும் அவரைப் பிடித்து வரும்படி காவலர்களை அனுப்பினார்கள்"(யோசா.7:32)

இத்தனை நடந்தும், சிறிதும் மனம் தளராது, இயேசு தன் இலட்சியத்தில் சிறிதும் பிறழாது உறுதியுடன் துணிந்து முன்னேற காரணமாய் இருந்ததென்ன? "தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான்" என்ற ஒரே இறை அனுபவம் தவிற வேறெதுவும் இல்லை. யாரிடம், எங்கு, எதற்கு, நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம், அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறோம், அனுப்பப்பட்டிருக்கிறோம் என்ற தெழிவு இருக்கிறதோ, அவர்களிடம், அப்பணிகளில் அர்ப்பணத்திற்கும் குறைவிருக்காது. எதையும், ஏன் தன் இன்னுயிரையும் இன்முகத்தோடு இத்தகையோர் இழப்பதற்கும்; தயங்கார்.

இயேசு இத்தகையோர் முதலும் முழுமையும். இந்த இயேசுவாலும் இத்தகையோராலும் மட்டுமே இந்த உலகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது, வளர்ந்துகொண்டிருக்கிறது. திருமுழுக்கால் அர்ப்பணிக்கப்பட்டு அனுப்பப்பட்ட நாமும் இத்தகைய வாழ்வு வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். இவ் வாழ்க்கையை வாழ்வோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்