முதல் வாசகம்

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 21-28

தலைவராகிய ஆண்டவர் கூறியது: இதோ நான் இஸ்ரயேலர் சிதறுண்ட நாடுகளிலிருந்து அவர்களை அழைத்து, எம்மருங்கினின்றும் கூட்டிச் சேர்த்து, அவர்களின் சொந்த நாட்டிற்குக் கொணர்வேன், இஸ்ரயேலின் மலைகள் மீது அவர்களை ஒரே நாட்டினர் ஆக்குவேன். அவர்கள் எல்லாருக்கும் ஒரே அரசன் இருப்பான். அவர்கள் இனிமேல் ஒருபோதும் இரு நாடுகளாகவோ இரு அரசுகளாகவோ பிரிந்திரார். அவர்கள் இனிமேல் ஒருபோதும் தங்கள் தெய்வச் சிலைகளாலோ இழிந்த அருவருப்பான பொருள்களாலோ தங்கள் வேறெந்த குற்றங்களாலோ தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பாவம் செய்த எல்லாக் குடியிருப்புகளிலிருந்தும் அவர்களை நான் மீட்டுத் தூய்மையாக்குவேன். அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்; நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன். என் ஊழியன் தாவீது அவர்களுக்கு அரசனாய் இருப்பான். அவர்கள் அனைவருக்கும் ஒரே ஆயன் இருப்பான். என் நீதிநெறிகளின்படி அவர்கள் நடப்பர்; என் நியமங்களைக் கருத்தாய்க் கடைப்பிடிப்பர். நான் என் ஊழியன் யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் மூதாதையர் வாழ்ந்ததுமாகிய நாட்டில் அவர்கள் வாழ்வர். அவர்களும், அவர்களின் மக்களும், மக்களின் மக்களும் அங்கு என்றென்றும் வாழ்வர். என் ஊழியன் தாவீது என்றென்றும் அவர்களின் தலைவனாய் இருப்பான். நான் அவர்களுடன் நல்லுறவு உடன்படிக்கை செய்துகொள்வேன். அது அவர்களுடன் என்றென்றும் நிலைத்திருக்கும். நான் அவர்களை நிலைபெறச் செய்து அவர்களைப் பெருகச் செய்வேன். என் தூயகத்தை அவர்கள் நடுவே என்றென்றும் நிலைக்கச் செய்வேன். என் உறைவிடம் அவர்கள் நடுவே இருக்கும்; நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர். என் தூயகம் அவர்கள் நடுவே என்றென்றும் நிலைத்திருக்கையில், இஸ்ரயேலைத் தூய்மைப்படுத்துபவர் ஆண்டவராகிய நானே என வேற்றினத்தார் அறிந்துகொள்வர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்
எரேமியா 31: 10, 11-12

பல்லவி: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்.

10 மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;
தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்;
`இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்;
ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்' என்று சொல்லுங்கள். -பல்லவி

11 ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்;
அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார்.
12 அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்;
ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள். -பல்லவி

13 அப்பொழுது கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்;
அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்;
அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்;
அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்;
துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்
எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர்.

 

யோவான் 11:45-56

தவக்காலம் -ஐந்தாம் வாரம் சனி

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 45-57

அக்காலத்தில் மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர். ஆனால் அவர்களுள் சிலர் பரிசேயரிடம் சென்று இயேசு செய்ததைத் தெரிவித்தனர். தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, ``இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்துகொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்? இவனை இப்படியே விட்டு விட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே!'' என்று பேசிக்கொண்டனர். கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்தார். அவர் அவர்களிடம், ``உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை'' என்று சொன்னார். இதை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்ததால், இயேசு தம் இனத்திற்காகவும், தம் இனத்திற்காக மட்டுமன்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார். ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள். அது முதல் இயேசு யூதரிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் அவ்விடத்தினின்று அகன்று பாலை நிலத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போனார்; அங்கு எப்ராயிம் என்னும் ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார். யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழ இருந்தது. விழாவுக்கு முன் தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றப் பலர் நாட்டுப் புறங்களிலிருந்து எருசலேமுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் இயேசுவைத் தேடினார்கள். ``அவர் திருவிழாவுக்கு வரவேமாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கோவிலில் நின்று கொண்டிருந்தவர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள். ஏனெனில் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் இயேசுவைப் பிடிக்க எண்ணி அவர் இருக்கும் இடம் யாருக்காவது தெரிந்தால் தங்களிடம் வந்து அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 11: 45 - 57
வலி வழியே தோ்வாகட்டும்

UNSUNG HERO OF THE YEAR என்ற விருதை பெற்ற லக்ஷ்மி அகர்வால் (சிறு வயதிலே முகத்தில் காதலனால் ஆஷீட் வீசப்பட்ட இளம்பெண், வலியோடு சாதனை) இருக்கட்டும், 2 குண்டுகளை தன் வயிற்றிலும் கழுத்திலும் வாங்கி ஸ்டொ்லைட் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வலியைப் பெற்றுக் கொண்ட அருட்தந்தை. லியோ ஜெயசீலன் (தூத்துக்குடி மறைமாவட்டம்) இருக்கட்டும், இரயிலிலிருந்து தூக்கி எறிந்த போதிலும் கூட நாட்டு விடுதலைக்காக வலியைத் தாங்கிய காந்தியாக இருக்கட்டும், சமுதாயத்திலே வலியின் பாதையை தோ்வு செய்தார்கள். வலி கொடுமையானது என்பதனை அறிந்தும் கூட. அதனால் தான் என்னவோ கவிஞர் பா.விஜய் ‘உளிதாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும், வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்’ என்று எழுதியுள்ளார்.

இப்படி வலியை மட்டும் தன் வாழ்வில் தாங்கி, அதன் வழியாக வெற்றி கொண்டவர் தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. ஏனென்றால் இயேசுவின் செயல்பாடுகளை கண்டு பரிசேயர்களும், மறைநூல் வல்லுநர்கள் கொதித்து எழுகின்றனர். காரணம் என்னவென்றால் இயேசு யூதர்களின் சட்ட திட்டங்களையும் வழிபாட்டு முறைகளையும் எதிர்க்கின்றார். ஆனால் இதில் புலமை வாய்ந்தவர்கள் மற்றும் அட்டைப்பூச்சியாக செயல்படுபவர்கள் பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும். அதனால் தான் மீட்புப் பணியில் பலமுறை மக்கள் நலனை முன்னிட்டு சட்டத்தை ஒதுக்கிய போது, இயேசுவுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். பரிசேயர்களை புறக்கணித்து தாழ்ந்த மனநிலை கொண்ட வரிதண்டுபவரை ஏற்று இயேசு செயல்படும் போதும் எரிச்சலாகின்றார்கள். அவர்களை எதிர்ப்பது நம்முடைய வேட்டிக்குள் ஓணானை விட்டது போல் ஆகிவிடும் என்று இயேசு அறிந்திருந்தார். இருந்தாலும் அந்த முறையைத் தான் கையாளுகின்றார். வலி என்று அறிந்தும் அதே வழியை தோ்வு செய்கின்றார்.

நம்முடைய வாழ்வில் சொகுசான வழியை தோ்வு செய்கின்றோமா? அல்லது வலியை கொடுக்கக்கூடிய வழியை தோ்வு செய்கிறோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

======================

யோவான் 11: 45-57
பலருக்காக ஒருவர்

நேற்றைய நற்செய்தியின் இறுதியிலும், இன்றைய நற்செய்தியின் தொடக்கத்திலும் முக்கியமான ஒரு ஒற்றுமை இருப்பதை நம்மால் காண முடிகிறது. அதாவது அதிகார வர்க்கத்தினரான தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அவரை எதிர்த்தாலும் சாதாரண பாட்டாளி மக்கள் அவரை நம்ப துவங்கினர். எளிய மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தான் கயப்பா, “இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது” என்றார். இங்கே அவர் யூத இனமக்களையும், அவரின் அதிகாரத்தையும் பாதுகாப்பதற்கே இவ்வாறு கூறினார். ஆனால் உண்மையிலேயே இது தான் கிறிஸ்துவின் வருகையின் நோக்கம். இதை நாம் பல இடங்களில் காணலாம். குறிப்பாக 3: 16 ல் அவர் இவ்வுலகிற்கு வந்ததே இறப்பதற்காக, அந்த இறப்பு நம்மை மீட்பதற்காகவே.

எப்படி ஓர் ஆதாமினால் பாவம் இம்மண்ணுலகில் நுழைந்ததோ. இரண்டாம் ஆதாமினால் பாவம் முழுவதும் அகற்றப்பட்டது. எப்படி ஒரு மரத்தினால் முதல் பாவத்தைச் செய்தார்களோ, சிலுவை மரத்தினால் அதற்கு பாவக்கழுவாய் செய்யப்பட்டது. முதல் பாவம் செய்தவுடன் ஒருவர் மற்றவரை பழிசுமத்தினார்கள். ஆனால் இயேசு மற்றவர்களின் பழியையும் தன்மீது தாங்கி கொண்டு, இவர்கள் இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள் என மன்னித்தார். முதல் பாவம் செய்தவுடன் அடையில்லாமல் இருந்தவர்கள் ஆடையை அணிந்து கொண்டார்கள். இயேசு தன் ஆடை அனைத்தையும் இழந்து நிர்வாணமாக, பிறந்த மனிதனைப்போல இருந்தார். முதல் பாவம் செய்தவுடன் ஆதாமும் ஏவாளும் தன்னை மறைத்துக் கொண்டார்கள், ஆனால் பாவக்கழுவாய் கல்வாரி மலையில் செலுத்தப்படும் போது இரண்டாம் ஆதாமும் (இயேசு) இரண்டாம் ஏவாளும் ( அன்னை மாயாள்) அனைவரும் ஓடி ஒழிந்த நிலையில் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக நின்றனர்.

இவ்வாறு மனிதகுலம் முழுவதையும் மீட்டு எடுக்க தன்னைப் பலியாக்கினார். இவ்வளவு விலையினைக் கொடுத்து மீட்கப்பட்ட நம் வாழ்வு எப்படியிருக்கிறது? இன்னும் பொருளுள்ளதாக மாற்ற திருப்பாடுகளின் வாரத்தில் அடிஎடுத்து வைப்போம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

எரேமியா 31: 10, 11 – 12b, 13
”ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்”

இஸ்ரயேல் மக்கள் பாபிலோனில் அடிமைகளாக நெபுகத்நேசர் மன்னரால் நாடு கடத்தப்பட்டனர். அது கடவுள் கொடுத்த தண்டனையாகவே அவர்கள் பார்த்தார்கள். தாங்கள் கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் புறக்கணித்ததற்காக பெற்றுக்கொண்ட தண்டனை தான் இது என்று எண்ணிக்கொண்டார்கள். அவர்களுக்கு வேற்றுநாட்டில் இருப்பது மிகப்பெரிய வருத்தத்தைக் கொடுத்தாலும், கடவுளுக்கு எதிராக தாங்கள் செய்த பாவத்தையும், நன்றி மறந்த நிலையையும் நினைத்துப்பார்த்தபோது, இந்த தண்டனைக்கு தாங்கள் தகுதியானவர்கள் என்று, தங்களையே சமாதானப்படுத்திக் கொண்டார்கள். இது தான் அவர்களின் மனமாற்றம். என்றைக்கு நாம் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறோமோ அது மனமாற்றத்தின் தொடக்கமாக அமைகிறது. இந்த நிலையில் கடவுள் அவர்களை மன்னித்து, அவர்களுக்கு எதிர்காலத்தில் வழங்கக்கூடிய ஆசீர்வாதங்களை இறைவாக்கினர் வாயிலாக அறிவிக்கின்றார்.

கடவுள் தன் மக்களை ஆயர் மந்தையைக் காப்பது போல, காத்து வழிநடத்துவதாக இறைவாக்கினர் பாடுகிறார். அவர் மீண்டும் மக்களை, சொந்த நாட்டிற்கு, கடவுள் அவர்களுக்கு கொடுத்த நாட்டிற்கு அழைத்துச் செல்வார். பாபிலோனியர்கள் வலிமையானவர்கள் தான். இவர்களிடமிருந்து கடவுள் நம்மை எப்படிக் காக்கப்போகிறாரோ? என்று கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், சாதாரண மக்களாக இருந்த இஸ்ரயேல் மக்களை கடவுள் இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறார் என்றால், இங்கே கடவுளின் வல்லமையை ஒருவர் உணர்ந்திருக்க முடியும். கடவுளுக்கு அது எளிதானது. மக்கள் ஆயருடைய குரலுக்கு செவிகொடுக்க வேண்டும். ஏற்கெனவே, ஆயருடைய குரலுக்கு எதிராகச் சென்றதுபோல சென்றால், அவர்களுக்கு மீண்டும் அழிவே வரும். இப்போதாவது, அவர்கள் ஆயருடைய குரலுக்கு கவனமுடன் செவிகொடுக்க வேண்டும் என்று இறைவாக்கினர் அறைகூவல் விடுக்கிறார்.

நமது வாழ்க்கையில் நன்மை எது? தீமை எது? என்று நாம் அறிந்திருந்தாலும், தீமை செய்வதைத்தான் மனம் விரும்புகிறது. தீயதை நாம் நாடுகிறோம். கடவுளுடைய குரலுக்குச் செவிமடுத்து, நாம் எப்போதும் கடவுளின் பிள்ளைகளாக வாழ உறுதி எடுப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

சுயநலம் அகற்றுவோம்

சதுசேயர்கள் சுயநலவாதிகளாக வாழ்ந்தனர். யாரையும் மதிக்காதவர்களாகவும், தங்களுக்கே உரித்தான் கர்வத்தோடு வாழ்ந்து வந்தனர். இது வெளியாட்களுக்கு மட்டுமல்ல, மற்ற சதுசேயரோடு கூட அவர்கள் இப்படித்தான் முரட்டுத்தனமாக இருந்தனர். அவர்கள் எப்போதும் தங்களது நலன் தேடுகிறவர்களாகவும், தங்களது நிலைக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் தான் தங்களின் அன்றாட வாழ்வை அமைத்துக்கொண்டனர். அவர்களின் முரட்டுத்தனத்திற்கு தலைமைக்குரு கயபாவின் வார்த்தைகள் சிறந்த எடுத்துக்காட்டு.

இயேசு மீது மக்கள் நம்பிக்கை கொள்வதால், இவர்களுக்கு என்ன இழப்பு? என்ற கேள்வி நிச்சயம் நமக்குள்ளாக எழும். மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்குப் பின்னால் அணிவகுத்து நின்றால், தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். இந்த நிலையை அவர்களை ஆளுகின்ற உரோமையர்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். இந்தச்சூழ்நிலை உரோமையர்களின் கைப்பாவைகளாக இருக்கிற இந்த தலைமைச்சங்கத்தின் அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் முடிவு கட்டுவதாக அமைந்து விடும். எங்கே தங்களின் சொகுசு வாழ்க்கை இயேசுவின் பெயரால், அழிந்துவிடுமோ? என்கிற எண்ணம் தான், எப்படியாவது இயேசுவைத்தடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அவர்களுக்குள்ளாக உருவாக்கியது.

இன்றைக்கு நாமும் கூட நமது வாழ்க்கையின் நிகழ்வுகளை நம்மை மையப்படுத்தியே சிந்திக்கிறோம். இந்த உலகமும், அதனில் இருக்கிற ஒவ்வொன்றும் நாம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம். நமக்கு எந்த பாதிப்பும், பங்கமும் வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறோம். நமது நிலையிலிருந்து, பொது நிலைக்கு வந்து நம்மையே மாற்றுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

சுயநலம் அகற்றி பொதுநலம் பேணுவோம்

தலைமைச்சங்கத்தில் பரிசேயர்களும், சதுசேயர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். பரிசேயர்களைப்பொறுத்தவரையில் அவர்களுக்கு அரசியல் ரீதியான ஆர்வம் கிடையாது. சட்டத்தை நுணுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் உயிர்மூச்சு. தாங்கள் தங்களுடைய மதச்சட்டங்களை கடைப்பிடிப்பதற்கு, தங்களை ஆளுகிற வேற்று அரசுகள் தொந்தரவு செய்யாதவரை, அவர்களுக்கு, பிரச்சனை இல்லை. சதுசேயர்கள் அரசியல் தொடர்பானவர்கள். அவர்கள் உயர்குடிமக்களாக இருந்தனர். தங்களை ஆளுகிற வேற்று அரசுகள் தங்களைத்தீண்டாதவரை, தங்களின் அதிகாரத்திற்கும், பதவிக்கும் ஆபத்துவராதவரை, அவர்களுக்குப் பிரச்சனை இல்லை. மற்றவர்களை எப்போதும் தங்களுக்கு கீழுள்ளவர்களாக, ஒன்றும் தெரியாதவர்களாக, கருதினர்.

நம்மில் பலருக்கு ஒரு கேள்வி எழலாம். எதற்காக இயேசுவை தலைமைச்சங்கத்தினர் ஒழிக்க சதித்திட்டம் தீட்டினர்? இயேசுவால் அவர்களுக்கு அப்படி என்ன பெரிய ஆபத்து வந்துவிடப்போகிறது? ஏன் இயேசுவை ஒழித்துவிட இவ்வளவு முயற்சிகளை அவர்கள் எடுக் வேண்டும்? பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் கூட்டுச்சதிக்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். எந்தக்காரணத்தைக் கொண்டும் தங்களின் பதவிக்கு, பலத்திற்கு அதிகாரத்திற்கு இடையூறு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். இயேசுவின் பின்னால் மக்கள் பெருந்திரளாக செல்வது, அவர்களது அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கருதினர். ஏனென்றால், ஒருவேளை ஏதாவது ஆங்காங்கே சிறிய குழப்பங்கள், கலகங்கள் ஏற்படலாம். உரோமை அரசு மிகப்பெரிய அரசாக இருந்ததால், ஏதேனும் சிறிய கலகங்கள், குழப்பங்கள் வந்தால்கூட, உடனடியாக கடுமையாக, கொடூரமாக கலகத்தை அடக்கி, அனைத்தையும் கலைத்துவிட்டு, வேறு யாரையாவது பொறுப்பில் அமர்த்திவிடுவார்கள். இதனால், ஏற்கெனவே, அதிகாரத்தில் இருக்கிற இந்த தலைமைச்சங்கத்திற்கு ஆபத்து வந்துவிடும். தங்களுடைய அதிகாரம் எல்லாம் போய்விடும். கலகங்கள், குழப்பங்கள் வரும்போது உரோமையர்கள் எந்த சமாதானத்தையும் ஏற்க மாட்டார்கள் என்பது, சதுசேயர்களுக்கு நன்றாகத்தெரியும். எனவேதான், தங்களின் அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள இயேசுவை ஒழித்துவிட திட்டம் தீட்டினர்.

மனிதர்களிடையே காணப்படும் சுயநலம்தான் இன்றைய உலக வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. எங்கும், எதிலும் சுயநலம். நாடுகளுக்கிடையே, மக்களுக்கிடையே, குடும்பங்களுக்கிடையே, தனிப்பட்ட மனிதர்களுக்கிடையே இன்று சுயநலம் தலைவிரித்தாடுகிறது. அதுதான் அமைதியின்மைக்கு காரணமுமாக இருக்கிறது. அத்தகைய சுயநலத்தை அறவே ஒழிப்பதற்கு தனிப்பட்ட மனிதர்கள் அனைவரும் முயற்சி எடுக்க உறுதிமொழி ஏற்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

பலருக்காக ஒருவர் இறப்பது நல்லது!

"இனம் முழுவதும் அழிந்துபோவதைவிட, ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது" என்னும் தலைமைக் குரு கயபாவின் சொற்களை இன்று நாம் தியானிப்போம்.

இவ்வார்த்தைகளை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவர் அவ்வாண்டின் தலைமைக்குருவாய் இருந்ததால், இயேசு தம் இனத்திற்காகவும், தம் இனத்திற்காக மட்டுமன்றி சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப் போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார் என்று நற்செய்தியாளர் யோவான் உடனே ஒரு குறிப்பை எழுதியுள்ளார்.

ஆம், இயேசு "பலருக்காக ஒருவர்" என்னும் சிந்தனையை செயல்படுத்தியுள்ளார், இறைத் திட்டத்தின்படியே அதைச் செய்துள்ளார்.

"ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல, ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்" (உரோ 5: 18-19) என்று பவுலடியார் மொழிந்தது இது பற்றியே.

பலருக்காக ஒருவர் துன்பங்களை அனுபவிப்பது நல்லது என்னும் இறைத் திட்டத்தை இயேசு அறிமுகப்படுத்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து, எத்தனையோ மறைசாட்சியர், புனிதர்கள் இத்திட்டத்தின்படி தம் இன்னுயிரைக் கையளித்துள்ளனர்.

நம்முடைய வாழ்விலும் சின்னச் சின்னச் செயல்பாடுகளில் பலருக்கான ஒருவர் சிறிய துன்பங்களை, இடர்ப்பாடுகளை, வசதிக் குறைவுகளை ஏற்றுக்கொள்வது என்னும் இயேசுவின் மாதிரியைப் பின்பற்ற முயல்வோமா?

மன்றாடுவோம்: அனைவரும் வாழ்வுபெற உம்முயிரை ஈந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். பலருடைய வசதிக்காக, நான் சில வசதிக்குறைவுகளை ஏற்றுக்கொள்ள, பலருடைய மகிழ்ச்சிக்காக நான் சில மகிழ்ச்சிகளை விட்டுக்கொடுத்து வாழும் அருளைத் தந்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

பலருக்காக ஒரு மனிதன் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

தலைமைக் குரு கயபா இறைவாக்காக அறிவித்த “இனம் முழுதும் அழிந்துபோவதைவிட, ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது” என்னும் வார்த்தைகளை இன்றைய சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். கயபா கயமை நிறைந்த உள்ளத்தோடு இந்த வார்த்தைகளைச் சொன்னாலும், நற்செய்தியாளர் அதனையும் இறைவாக்காகவே எடுத்துக்கொள்கிறார். மனித இனத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ஓர் இனத்திற்காக உயிர் துறந்த தலைவர்கள் பலரைப் பார்க்கலாம். அல்லது ஒரு குடும்பத்தைக் காக்க உயிர் துறந்த தனி மனிதர்களையும் சந்திக்கலாம். சாதாரண மனிதர்களுக்கும், மாமனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்: பிறர் வாழ தங்களைக் கையளிப்பவர்கள் மாமனிதர்கள். இயேசு இந்த உலக மாந்தர் அனைவரும் வாழ்வுபெற, மீட்படைய தம்மையே கையளிக்க முன் வந்தார்.

இந்த மீட்பின் நிகழ்வுகளைக் கொண்டாட இருக்கும் நாம், நமது வாழ்வில் பிறர் வாழ நாம் என்ன செய்கிறோம் என்று நம்மையே கேட்டுக்கொள்வோம். நமது உயிரைக் கொடுக்காவிட்டாலும் தாழ்வில்லை, பிறர் வாழ்வு பெற, பிறர் விடுதலை அடைய, சிறிய இழப்புகளை ஏற்றுக்கொள்ள முன் வந்தாலே, அது பெரிதான செயலாக இருக்கும். புனித வாரம் நெருங்கி வரும் இந்நாள்களில் இந்த சிந்தனையை மனதில் கொள்வோம்.

மன்றாடுவோம்: எங்கள் வானகத் தந்தையே இறைவா, உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம். உம் அன்புத் திருமகன் இயேசு நாங்கள் மீட்படைவதற்காக தாம் இறக்க முன் வந்தார். நன்றி செலுத்துகிறோம். அவரைப் பின்பற்றி நாங்களும் பிறர் வாழ்வடைய எங்களையே கையளிக்கும் தாராள மனதை எங்களுக்குத் தந்து எம்மை வலிமைப்படுத்தும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருட்தந்தை குமார்ராஜா

---------------------

 

''தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி,...
'இவனை இப்படியே விட்டுவிட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர்.
அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும்
அழித்துவிடுவார்களே!' என்று பேசிக்கொண்டனர்'' (யோவான் 11:47-48)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டதற்குப் பல காரணங்கள் இருந்தன. சிலர் இயேசு புரிந்த அதிசய செயல்களைக் கண்டு வியந்தார்கள். கடவுளின் வல்லமையோடுதான் அவர் இச்செயல்களைச் செய்தார் என அவர்கள் ஏற்றனர். வேறு சிலர் இயேசு முன்னாளைய இறைவாக்கினர் போல போதித்துச் செயல்பட்டதைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொண்டனர். இன்னும் சிலர் இயேசுவிடம் துலங்கிய இரக்க குணம், அனைவரையும் மன்னித்து ஏற்கும் தன்மை, ஏழைகளைச் சார்ந்து செயல்படல், நோயுற்றோருக்கு நலமளித்து அவர்களைச் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்கச் செய்தல் போன்ற செயல்பாடுகளைக் கண்டு, அவரிடம் நம்பிக்கை வைத்தனர். ஆனால் வேறுசிலரோ இயேசுவை ஏற்க மறுத்தனர். இவர்கள் பெரும்பாலும் அக்காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்களே. சமய அதிகாரிகள் இயேசுவை யூத சமயத் துரோகியாகக் கண்டனர். அரசியல் அதிகாரிகள் அவர் ஆதிக்கத்திற்கு உலைவைக்கப்போகிறாரோ என எண்ணி அஞ்சினர்.

-- ஆனால் சாமானிய மக்கள் இயேசுவை ஏற்கத் தயங்கவில்லை. அவர்களுடைய இதயத்தில் நெகிழ்ச்சி இருந்தது. கடவுளின் வார்த்தையைக் கேட்கின்ற மனநிலை அவர்களிடத்தில் துலங்கியது. குறிப்பாக, ஏழைகளும் அக்காலத்தில் பாவிகளாகக் கருதப்பட்டவர்களும் இயேசு தங்களுக்கு நன்மை செய்யவே வந்துள்ளார் என்பதை எளிதில் கண்டுகொண்டனர். அவர்கள் இயேசுவைத் தேடிச் சென்றனர்; அவருடைய சொல்லிலும் செயலிலும் கடவுளின் வல்லமையையும் அன்பையும் கண்டனர். இன்று வாழ்கின்ற நாம் இயேசுவை எவ்வாறு அணுகுகின்றோம்? நம் இதயம் திறந்திருக்கிறதா அல்லது அடைபட்டிருக்கிறதா? இயேசுவின் குரல் நம் உள்ளத்தில் ஒலிக்க ஒருபோதும் தவறுவதில்லை; நாம்தான் அக்குரலுக்குச் செவிமடுக்க முன்வருவதில்லை.

மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்தில் உம் உடனிருப்பை உணர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது" யோவா 11:50

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

"ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது" (யோவா 11:50) தலைமைக்குரு கயபாவின் இவ்வறிக்கை ஒரு இறை வாக்கு. அறிவுள்ள விவாதம். உண்மையின் வெளிப்பாடு. ஒரு முன்னறிவிப்பு. ஆதாம் என்னும் ஒரு மனிதனால் வந்த பாவத்தையும் சாபத்தையும்,இயேசு தன் இறப்பால் அழிக்க இருப்பதை, கயபா தலைமைக்குரு தன்னை அறியாமல் முன்னறிவிக்கிறார். பவுலடியார் இதை உறுதிசெய்கிறார். "ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது".( உரோ5 :12)

ஒரு மனிதனின் பாவத்தால் மனிதன் சிதறினான். நாடுகள் சிதறின. பல மொழிகள் உண்டாயின. பல கலாச்சாரம் உதயமானது. பல அரசுகள் ஏற்பட்டன. சிதறச் சிதற அன்பு வற்றி அலைந்தான். ஒருமை, ஒற்றுமை அழிந்து தனிமையில் வெந்தான். பயமும் பகையும் பெருகியது. பழியும் பாவமும் பலுகியது. இறைவாக்கினர் எசேக்கியேலின் "அவர்களை ஒரே நாட்டினர் ஆக்குவேன். (எசே37:22) அவர்கள் எல்லாருக்கும் ஒரே அரசன் இருப்பான். அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்; நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்.( எசே37:23) அவர்கள் அனைவருக்கும் ஒரே ஆயன் இருப்பான்.(எசே37:24) இறைவாக்கை நடைமுறைப்படுத்த ஒருவர் இறக்கவேண்டும்.

இன்றும் நடைமுறை இதுதான். ஒருசில நல்லவர்களின் இறப்புதான் பலருக்கு வாழ்வைக் கொடுக்கிறது. ஒருவருடைய தவறான வாழ்வு பலருக்கு அழிவைக் கொண்டுவருவதும் உண்மையே. நல்லவர் ஒருவர் இன்று அறிதாக உள்ளது. பொல்லாதவர் கூட்டம் பெரிதாக உள்ளது. நல்லவர் ஒருவராக நாமிருப்போம். பலருக்கு வாழ்வு கொடுப்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்