புனித வாரம் - திங்கள்

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-7

ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர். விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல் 27: 1, 2, 3, 13-14

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு;
யாருக்கு நான் அஞ்சவேண்டும்?
ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;
யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? -பல்லவி

2 தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில்,
என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள். -பல்லவி

3 எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது;
எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன். -பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்;
உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. -பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்
எங்கள் அரசரே போற்றப் பெறுக. எங்கள் குற்றம் கண்டு இரக்கம் கொண்டவர் நீர் ஒருவரே.

யோவான் 12:1 - 11

தவக்காலம் -புனித வாரம் திங்கள்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-11

பாஸ்கா விழாவுக்கு ஆறு நாளுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார். அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார். மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத் தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது. இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து, ``இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?'' என்று கேட்டான். ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல, மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக்கொள்வதுண்டு. அப்போது இயேசு, ``மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும். ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை'' என்றார். இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச்செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள். ஆதலால் தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். ஏனெனில் இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 12: 1 - 11
மரியாதை

தமிழர் பண்பாடு மரியாதைக்கு பெயர் போன பண்பாடு என்றால் அது மிகையாகாது. அதனால் தான் சினிமா நடிகர்களுடைய படங்கள் மீது பால் ஊற்றுகிறோம், அரசியல் தலைவர்கள் வருகின்ற போது வாகன சக்கரத்தில் விழுந்து வணங்குகின்றோம், நல்ல காரியங்களுக்காக பயன்படுத்தக்கூடிய வாழை மரங்களை வைத்து வரவேற்கின்றோம். அரசியல் தலைவர்கள் இறக்கின்ற போது தேசியக் கொடி அணிந்து பல எண்ணிக்கையில் குண்டுகள் முழங்க பவனி எடுக்கின்றோம். இவையெல்லாம் உண்மையிலேயே போலித்தனமாக வாழ்கின்ற போலியர்களுக்கு இந்த சமுதாயத்தில் கொடுக்கப்படக்கூடிய மரியாதை. தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்று வாழ்ந்த சுயநலவாதிகளுக்காக நாம் கொடுக்கும் மரியாதை.

ஆனால் இந்த சமுதாயம் மீட்பு பெற வேண்டும் என்பதற்காக தன் உயிரையே தியாகம் செய்ய வந்த தியாகிக்கு எப்படிப்பட்ட மரியாதை கொடுக்கப்பட்டது என்பதனைத் தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கின்றோம். பாதங்களில் தைலம் பூசுவது பொதுவாக ஒரு விருந்தினருக்குக் காட்டும் மரியாதை எனக் கூறலாம். இது அவரின் பாடுகளுக்கும் மரணத்திற்கும் ஓர் உடனடி முன்னுரையாக விளங்குகின்றது. இயேசுவின் பாடுகளிலும் மரணத்திலும் தான் அவருடைய மெசியாத்தன்மை வெளிப்படுகிறது என்ற கருத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. நறுமணத் தைலத்தின் அருமை கருதி, அதைப் பூசி வீணாக்காமல் ஏழைகளின் நலனுக்காக அதன் விலையைப் பயன்படுத்தியிருக்கலாமே என்கிற ஒரு சிலரின் ஆட்சேபணையை இயேசு ஏற்க மறுக்கிறார். பூசுதல் செய்த பெண்ணையும் பாராட்டுகிறார். இயேசு சொன்ன வார்த்தை அவர் இறந்த பிறகு கல்லறையில் தைலம் பூசச் சென்ற பெண்களின் ஏமாற்றத்திற்கு ஓர் ஈடு செய்யும் முயற்சியாகக் கருதப்படலாம். இயேசுவின் செயல் அவருடைய மெசியாத் தன்மையுடனும், மீட்புப்பணியுடனும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதனை இயேசு குறிப்பிடுகின்றார். இயேசு தன் மரியாதைக்காக பெண்ணை பூச செய்யவில்லை. மாறாக தான் இறந்து உயிர்த்தெழ கூடிய மெசியா என்பதனை சமுதாயம் புரிந்து கொள்ளவே.

நாம் எதற்காக மரியாதை பெற விரும்புகிறோம்? நம்முடைய அடையாளத்திற்காகவா (தலைவன், தொண்டன்)? அல்லது சமுதாய முன்னேற்றத்திற்காக உழைக்கப் போகிறேன் என்பதற்காகவா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

======================

யோவான் 12:1-11
உலகமா? உன்னதவரா?

மார்த்தா மரியா குடும்பத்தின் உற்ற நண்பர் இயேசு. எருசலேமில் இட நெருக்கடியான பாஸ்கா காலத்தில், பயணிகள் பெத்தானியாவில் தங்குவது வழக்கம். நாடோடி வாழ்வு வாழ்ந்து, தலைசாய்க்க இடமில்லாத இயேசுவுக்கு இவர்களின் வீடே இளைப்பாறும் இடம். அங்கு நடந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு நிகழ்வும், கதை மாந்தர்களும் நம்மை பிறதிப்பலிக்கிறவர்களாகவே தெரிகின்றனர். புனித வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள நாம் மரியா போல இயேசுவிடம் உறவு கொண்டுள்ளோமா? அல்லது யூதசைப்போல இயேசுவிடம் நடந்து கொள்கின்றோமா?

மரியா: ஆண்டவரின் காலடியில் அமர்ந்து அவரது வார்த்தைக்குச் செவி சாய்த்தவர். (லூக்10:34) ஆண்டவரிடத்தில் அளவுக்கதிகமாக அன்பினைக் கொண்டவள், அவ்வன்பினை தன் செயலில் காட்டியவள். ‘விலையுயர்ந்த’, ‘நல்ல’ என்ற ஒவ்வொரு சொல்லும் அவரின் அன்பிற்கு சான்றே, அவர் தன் சீடர்களின் கால்களை நீரினால் கழுவும்முன்பே இவள் இவரின் கால்களை நறுமணத்தைலம் கொண்டு கழுவுகிறார். சீடத்துவத்தின் சிகரம் ஆகுகிறாள்.

யூதாஸ்: இயேசுவை காசுக்காகவே காட்டிக்கொடுக்கப் போகிறான் என்பதின் முன்னோட்டமாகவே இந்நிகழ்வு அமைகின்றது. உண்மையான சீடர் (மரியா) காசினை தைலமாக்கி, அவரின் காலடியைக் கழுவி, இவ்வுலகச் செல்வம் எல்லாம் நான் பெற்று பெறும் இன்பத்தைக் காட்டிலும், இவரின் பாதத்திலிருப்பது எத்தனை பேறு என்று வாழ்கிறார். யூதாசோ, இவரைவிட உலகின் செல்வமே இன்பம் என உலக ஆசைக்குள்ளும், மாய வலைக்குள்ளும் தன்னையே சிக்க வைக்கிறான். இப்புனித வாரத்தில் நாம் நல்ல முடிவெடுப்போம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 27: 1, 2, 3, 13 - 14
”ஆண்டவரே என் ஒளி, அவரே என் மீட்பு”

சவுல் மக்களின் மனதில் தன்னைவிட பிரபலமாகிக்கொண்டிருந்த தாவீதைக் கொல்ல தேடுகிறார். அதற்கு காரணம் பொறாமை. எங்கே தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயம். தன்னை விட யாரும் புகழ்பெற்றுவிடக்கூடாது என்கிற அகம்பாவம். அவர்களை எதிரிகளாக பாவிக்கக்கூடிய முதிர்ச்சியற்ற தன்மை. இந்த பிரச்சனைக்கு அவர் கொலை தான், சரியான முடிவு என்று நினைக்கிறார். தனக்கு எதிராக யார் வளர்ந்தாலும், அவர்களை வேரோடு வெட்டிச் சாய்க்க வேண்டும் என்று அவர் முடிவெடுக்கிறார். அந்த கொலைவெறியோடு தாவீதைக் கொல்ல தேடுகிறார்.

அரசருடைய இந்த முடிவு தாவீதிற்கு நிச்சயம் அதிர்ச்சியளித்திருக்கும். அரசருக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்து, இப்போது எதிரியாக தன்னைச் சித்தரிப்பதை அவர் நிச்சயம் விரும்பியிருக்க மாட்டார். அதிகாரவர்க்கத்தை எதிர்த்து நிற்பது என்பது இயலாத காரியம். எந்த அளவிற்கும் செல்வதற்கு பயப்பட மாட்டார்கள். இந்த உலகமே அவருக்கு எதிராக நிற்பது போலத்தான் தாவீது பயந்துபோயிருப்பார். எங்கு சென்றாலும் கூடவே பய உணர்வும் இருந்திருக்கும். யாரோ தன்னை பின்தொடர்கிறார்களோ என்கிற மிரட்சி இருந்திருக்கும். தன்னுடைய உயிருக்கு எந்த பக்கத்தில் இருந்தும் ஆபத்து வரலாம் என்கிற சிந்தனை இருக்கிற மனிதன், எப்படி இயல்பாக இருக்க முடியும்? அந்த தருணத்தில் தாவீது அரசர், கடவுள் தன்னுடைய வாழ்க்கையில் செய்து வந்திருக்கிற அதிசயங்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறார். தனக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பகைவர்கள் எப்படியெல்லாம் கடவுளின் வல்லமையால், தோற்றுப்போனார்கள் என்பதை நினைத்துப்பார்க்கிறார். அவர் தான், தன்னுடைய மீட்பு என்று முற்றிலுமாக கடவுளிடம் கையளிக்கிறார்.

இந்த உலகத்தில் தான் வளராவிட்டாலும், அடுத்தவர் வளர்ந்து விடக்கூடாது என்கிற எண்ணம் மனிதர்களின் உள்ளத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. இத்தகைய பொறாமை எண்ணங்களை நாம் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று, இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது. தூய்மையான எண்ணங்களை உடையவர்களாக நமது வாழ்வை நாம் அமைத்துக்கொள்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இயேசு காட்டும் அறவழி

இலாசரை உயிர்த்தெழச்செய்த நிகழ்ச்சி ஏராளமான யூதர்களை மனம்மாற்றியிருந்தது. அவர்கள் இயேசுவில் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தார்கள். இயேசுவிடம் பலர் நம்பிக்கை கொள்வது, அதிகாரவர்க்கத்தினருக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்த தொடங்கியது. அதற்காக அவர்கள் இலாசரை கொல்வதற்கும் துணிந்து விட்டார்கள். இயேசு மீது மக்கள் நம்பிக்கை கொள்வதனால், அவர்களுக்கு என்ன இழப்பு?

சதுசேயர்கள் உரோமை அரசோடு நெருங்கிய தொடர்பில் இருந்தனர். அவர்களுடைய நோக்கம் தங்களது அதிகாரத்திற்கும், பதவிக்கும் எந்த பாதகமும் வந்துவிடக்கூடாது என்பதுதான். பொதுவாக, உரோமையர்கள் தாங்கள் அடிமைப்படுத்தியிருந்த நாடுகளுக்கு சுதந்திரத்தைக் கொடுத்திருந்தார்கள். அங்கே அதிகாரத்தோடு இருக்கிறவர்களை தங்களது கைகளில் போட்டுக்கொண்டு, ஆட்சி செய்து வந்தனர். ஆனால், கலகம் ஏதாவது வந்தால், அதனை முடிவுக்குக் கொண்டுவர எதற்கும் செல்லத்துணிந்தவர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பல மக்கள் இயேசுவின் மீது விசுவாசம் கொள்வது, நிச்சயம் கலகத்தைத் தூண்டுவதற்கான ஒரு வாய்ப்பாக முடியும். இது உரோமையர்களுக்கு மிகுந்த கோபத்தையும், அடக்க வேண்டும் என்கிற வெறியையும் தூண்டும். அது அதிகாரவர்க்கத்தினருக்கு இழப்பாக முடியும். ஆகவே, இயேசுவை நம்புவதற்கு காரணமாக இருக்கிற, இலாசரை கொல்வதன் மூலம், இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறார்கள். இவ்வாறு, தங்களது பதவியை, அதிகாரத்தை காப்பாற்றுவதற்கு எந்த எல்லைக்கும் தாங்கள் தயார், என்கிற சுயநலத்திற்கு அதிகாரவர்க்கமான, பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் விளங்குகிறார்கள்.

சுயநலத்திற்காக எதைச்செய்தாலும் தவறில்லை என்கிற உணர்வுள்ள உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே நீதி, நேர்மை, விழுமியங்களுக்கு மதிப்பில்லை. எப்படியாவது வாழ வேண்டும்? அதுதான் மதிப்பீடு. அதற்காக என்ன செய்தாலும் தவறில்லை என்பதுதான், இன்றைய உலகின் நடைமுறை. அதனை உடைத்து, இயேசு காட்டிய அறவழியில் வாழ்வதற்கு நாம் தயாராக இருக்கிறோமா? என சிந்திப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நமது வாழ்வை சீர்தூக்கிப்பார்ப்போம்.

இயேசுவுக்கு தன்னுடைய சீடர்களைப்பற்றி முழுமையாகத் தெரிந்திருந்தது. ஒவ்வொருவரைப்பற்றியும் முழுமையாக அறிந்திருந்தார். யூதாஸ் எப்படிப்பட்டவர்? அவரை நம்பலாமா? அவர் என்ன செய்யப்போகிறார்? என்பதையும் இயேசு அறிந்திருந்தார். எனவேதான், யோவான் 6: 70 ல் ”பன்னிருவராகிய உங்களை நான் தேர்ந்து கொண்டேன் அல்லவா? ஆயினும் உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்” என்று சொல்கிறார். யூதாஸ் எப்படிப்பட்டவர்? என்பது இயேசுவுக்குத் தெளிவாகத் தொந்ததால் தான் இப்படி இயேசு பேசுகிறார்.

இவ்வளவுக்கு யூதாசைப்பற்றித் தெரிந்தவர், ஏன் யூதாசிடம் முக்கியமானப் பொறுப்பைக் கொடுக்க வேண்டும்? என்ற கேள்வி நமக்குள் எழலாம். இயேசு யூதாசுக்கு திருந்துவதற்கு பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி தருகிறார். ஒருவன் ஒரேநாளில் கெட்டவனாக மாற முடியாது. அதேபோல், ஒருவன் ஒரேநாளில் நல்லவனாக மாற முடியாது. கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் சிறிது, சிறிதாக யூதாஸ் தன்னையே கறைபடித்துக்கொள்கிறார். தான் செய்வது சரிதான் என்று நினைத்துக்கொண்டு ஒருவன் தவறு செய்து கொண்டிருக்கலாம். ஆனால், நீ செய்வது தவறு என மற்றவர் சொல்லியும், திருந்தாமல் ஒருவன் தவறு செய்கிறான் என்றால், அவனை என்ன செய்வது? மற்றவரின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், குறைந்தபட்சம், அதில் ஏதாவது உண்மையிருக்கிறதா? என்ற சிந்தனையையாவது செய்ய வேண்டும். அதில் யூதாஸ் தவறிவிடுகிறார். தனக்கான முடிவைத்தேடிக்கொள்கிறார்.

கடவுள் கொடுக்கும் வாய்ப்புக்களை நாம் திருந்துவதற்கான அழைப்பாக ஏற்றுக்கொண்டு, திருந்தி வாழ முன்வரவேண்டும். பவுலடியாரும் தொடக்கத்தில், தான் செய்வது சரி என்றுதான் நினைத்து, கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார். ஆனால், அவரிடத்தில் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற தேடல் இருந்ததால், தன்னை மாற்றிக்கொண்டார். நாமும் அதே போல் திருந்திவாழ முடிவெடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நம்பிக்கைதான் வாழ்க்கை

இஸ்ரயேல் மக்களின் கடவுள் அனுபவம் தான் விவிலியத்தின் பழைய ஏற்பாடு. நாடோடிகளாக, நாடே இல்லாமல், தங்களை வழிநடத்த அரசர் இல்லாமல், போர்த்தந்திர முறைகள் தெரியாமல் வாழ்ந்தவர்கள் இஸ்ரயேல் மக்கள். சமுதாயத்தின் விளிம்பு நிலை மக்களாக, ஒடுக்கப்பட்ட மக்களாக அறியப்பட்டார்கள். ஆனால், அவர்களைச்சுற்றிலும் பெரிய நிலப்பரப்புகளோடு, வழிநடத்த அரசர்களோடு, போர்த்தந்திர முறைகளோடு பாபிலோனியர்கள், அமலேக்கியர்கள், கானானியர்கள் எனப் பலர் வாழ்ந்து வந்தனர். இஸ்ரயேல் மக்களின் ஒரே நம்பிக்கை அவர்கள் வழிபட்டு வந்த ‘யாவே’ இறைவன். சிறிது காலங்களுக்குப்பின் அவர்கள் நாடுகளைக்கைப்பற்றி, ஒரு பெரிய தேசமாக உருவானபோது, இது தங்களின் வலிமையினால் கிடைத்த வெற்றி அல்ல, மாறாக, ‘யாவே’ இறைவன் தந்த வெற்றி என்று ஆர்ப்பரித்தனர். இது நெடுநாள் நீடிக்கவி;ல்லை. யாவே இறைவனை விட்டு விலகிச்சென்று, இறைவனுக்கு எதிராகப் பாவம் செய்தவுடன் நாட்டை இழந்து அடிமைநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அப்போது, அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டபோது, கடவுள் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். அவர்களை மீட்பதற்காக மெசியாவை அனுப்புவேன் என்று இறைவாக்கினர் எசாயா வாயிலாக உரைக்கிறார். இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறார்.

மெசியா வரும்போது என்னென்ன மாற்றங்கள் வரும், என்னென்ன அருங்குறிகள் தோன்றும் என்பதை இன்றைய வாசகம் நமக்குத் தெளிவாக்குகிறது. குருடர் பார்வை பெறுவர், முடவர் நடப்பர், கைசூம்பிப்போனவர்கள் குணமடைவர், ஊமையர் பேசுவர், ஏழைகள் உரிமைவாழ்வு பெறுவர் என்பது போன்ற அதிசயங்கள், அற்புதங்கள் நடைபெறுவதுதான் மெசியா வருகையின் அருங்குறிகள். இயேசு தன்னுடைய பணிவாழ்வை ஆரம்பித்தபோது, எசாயாவின் மறைநூல் வாக்கு நிறைவேறியதாகச்சொல்கிறார். அதாவது தான்தான் வரவிருந்த மெசியா என்பதை இயேசு தெளிவாக்குகிறார். கடவுள் ஏழைகளின் சார்பானவர். ‘ஏழை’ என்கிற வார்த்தையின் பொருள், கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறவர்கள். யாரெல்லாம் இந்த உலகத்தில் கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறார்களோ, கடவுள் அவர்கள் சார்பாக இருக்கிறார். அவர்களை கைவிட மாட்டார். அந்தக் கடவுளின் மீது முழுமையான நம்பிக்கை வைப்பதற்கு அழைக்கப்படுகிறோம்.

இறைவன் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை. அவர்மீது முழுமையான நம்பிக்கை வைப்பது ஒன்றுதான் நாம் செய்ய வேண்டிய ஒன்று. அந்த நம்பிக்கைதான், எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை தந்தது. அவர்களை நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் எல்லாவித இடர்பாடுகளையும் தாங்கிக்கொள்ளச் செய்தது. அத்தகைய நம்பிக்கையை நாமும் பெற்றுக்கொள்ள இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைவன் மீது நமது முழுமையான நம்பிக்கையை வைப்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

"நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது"!

இந்த வாரம் முழுவதும் நாம் ஆண்டவர் இயேசுவின் பாடுகள் மற்றும் இறப்பு என்னும் இறையுண்மைகளிலே நம் மனத்தையும், கவனத்தையும் செலுத்தவிருக்கிறோம்.

புனித வாரத்தின் திங்களாகிய இன்று "பாஸ்கா விழாவுக்கு ஆறு நாளுக்கு முன்பு" அதாவது இன்று, இயேசுவின் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வை யோவான் மிக அருமையாகச் சித்தரித்துக் காட்டுகிறார். பெத்தானியாவிலுள்ள லாசரின் வீட்டுக்குச் சென்ற இயேசுவுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இலாசரின் சகோதரி "மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத் தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தம் கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது". இயேசு "மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்" என்றார்.

இயேசுவின் வாழ்வில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளுமே நேரடியாக, அல்லது மறைமுகமாக அவரது இறப்பு-உயிர்ப்பு என்னும் இறுதி நிகழ்வுகளை நோக்கியே அமைந்திருந்தன. அதிலும் இந்த நிகழ்வை இயேசு அவ்வாறே பார்க்கின்றார். இந்த நிகழ்வு நமக்குத் தரும் பாடங்களைப் பார்ப்போம்.

1. மரியா விலையுயர்ந்த நறுமணத் தைலத்தை இயேசுவின் காலடியில் பூசினார். அன்பு விலையைப் பார்ப்பதில்லை. இறைவனின் அன்பு, இயேசுவின் அன்பு விலைமதிப்பற்றது. நாமும் விலைமதிப்பற்ற அன்பை இயேசுவுக்குக் கொடுக்கிறோமா? அல்லது இறைவனுக்குரியவற்றில் கணக்குப் பார்க்கிறோமா?

2. மரியா கலப்பற்ற நறுமணத் தைலத்தைப் பூசினார். அவரது அன்பு கலப்பற்றதாக, பிளவுபடாததாக இருந்து. ஒருவர் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது. ஆனால், மரியா தமது முழு அன்பையும் இயேசுவுக்கே அளித்தார். இறைவன்மீது நாம் கொண்டுள்ள அன்பு கலப்பற்றதாக, பிளவுபடாததாக இருக்கிறதா? அல்லது உலகப் பொருள்களோடு இறைவனையும் அன்பு செய்கிறோமா?

3. தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது, விளக்கின் ஒளியை மறைக்க முடியாது. அது தன் ஒளியை எங்கும் பரப்புகிறது. அதுபோலவே, உண்மையான அன்பு நறுமணம் போல எங்கும் பரவும், சான்றாய் விளங்கும். நமது இறையன்பு எங்கும் கமழ்கிறதா? அல்லது இருக்கிறதா, இல்லையா எனத் தேடிப்பார்க்க வேண்டுமா?

4. இயேசுவின் அடக்க நாளை முன்னிட்டு மரியா இதைச் செய்ததாக இயேசு கூறினார். நமக்காக இறந்த இயேசுவின் இறப்புக்கு, தன்னையே பலியாகத் தந்த அவரது அன்புக்கு ஈடாக நாம் எதைக் கொடுக்க இருக்கிறோம்? நமக்காக இறந்து உயிர்த்த அவருக்காக நாம் வாழ்கிறோமா?

மன்றாடுவோம்: எங்களுக்காக சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்ட இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். மரியாவைப் போல எங்களது அன்பும் கலப்பற்றதாக, விலைமதிப்பற்றதாக, எங்கும் கமழ்வதாக அமையும் வரத்தைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

புனித வாரத் திங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று இயேசு தன் முழு ஆளுமையிலும் இறைவனுக்கு உகந்தவராக வாழ்ந்தார், இறந்தார் என்னும் நமது சிந்தனையின் இரண்டாவது நாளாக இன்று இந்தக் கருத்தை சிந்திப்போம்:

  1. இயேசு தன் மனதை ஒப்புக்கொடுத்தார்:

 மனித ஆளுமையின் இரண்டாவது பரிமாணம் மனம், சிந்திக்கும் ஆற்றல். மாந்தரின் மனம் இறைவனையே எப்போதும் நினைக்க வேண்டும். “நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன். இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்” (திபா 63:6) என்றார் திருப்பாடலாசிரியர். இயேசு எப்போதும் தந்தை இறைவனை மாட்சிப்படுத்துவது பற்றியே சிந்தித்தார். “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும், அவர் கொடுத்த வேலையை செய்து முடிப்பதுமே என் உணவு” (யோவா 4:34) என்றார். அவரது மனம் இறைவனையே எப்போதும் நாடியது. வேறு சிந்தனைகள் அவரிடம் இல்லை. பணம், பொருள், உணவு, ஓய்வு என எதுபற்றியும் இயேசு கவலைப்படவில்லை.

மனம் செயல்படும் விதம் பற்றிய ஓர் எடுத்துக்காட்டைப் பவுலடியார் நன்றாகச் சொல்கிறார்: “மணமானவர் உலகுக்குரியவற்றில் அக்கறை கொள்கிறார். எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்” (1 கொரி 7:33). ஆனால்,  “மணமாகாதவர் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்கிறார். எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்” (1 கொரி 7:32). இயேசு அப்படித்தான் வாழ்ந்தார், தந்தை இறைவனுக்கு உகந்தவற்றை எப்படிச் செய்யலாம் என்றே எப்போதும் எண்ணிக்கொண்டிருந்தார். அவரது இறப்பின் வேளையிலும் தந்தை இறைவனையே அவரது உள்ளம் நாடியது. எனவே, தந்தை இறைவனை நோக்கி மன்றாடினார் (யோவா 17 அதிகாரம் முழுவதும்). சிலுவையில் தொங்கும்போதும் அவரது சிந்தனை தந்தை இறைவனுக்குரியவை பற்றியே இருந்தது. இவ்வாறு, வாழ்விலும், இறப்பிலும் இயேசு தன் மனதை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தார்.

மன்றாடுவோம்: எங்களை உமது மாட்சியின் பங்குதாரர்களாக அழைக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நீர் உமது மனதை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து, எப்போதும் உமக்கு உகந்தவை பற்றியே சிந்தித்ததுபோல, நாங்களும் எங்கள் மனதால் உம்மை மாட்சிமைப்படுத்துவோமாக ! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருட்தந்தை குமார்ராஜா

---------------------

 

''ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு
என்றும் இருக்கப்போவதில்லை' என்றார்'' (யோவான் 12:8)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மார்த்தாவின் சகோதரி மரியா விலையுயர்ந்த நறுமணத் தைலத்தால் இயேசுவின் காலடிகளைப் பூசுகிறார். இது இயேசுவின் மரணத்திற்கு ஒரு முன்னடையாளமாக அமைகிறது. இறந்துபோனவர்களின் உடலை நறுமணத் தைலத்தால் பூசுவது வழக்கம். மார்த்தாவுக்கும் மரியாவுக்கும் சகோதரரான இலாசர் இறந்து கல்லறையில் வைக்கப்பட்டபின் இயேசு அவரை மீண்டும் உயிர்பெறச் செய்திருந்தார். எனவே, இயேசு உண்மையிலே நமக்குத் தம் சாவின் வழியாக உயிரளிக்கிறார் என்பது தெரிகிறது. ஆனாலும் இங்கே ஒரு கேள்வி எழுகிறது. கடவுளின் புகழுக்காக நாம் செலவுசெய்வதற்குப் பதிலாக ஏழைகளுக்குக் கொடுத்து உதவ வேண்டாமா என்பதே அக்கேள்வி. இதற்கு இயேசு தருகின்ற பதில்: ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை' (யோவான் 12:8) என்பதாகும். நாம் எவ்வளவுதான் உதவிசெய்தாலும் சில மக்கள் நம் நடுவே ஏழைகளாகத் தொடர்ந்து இருக்கத்தான் போகிறார்கள் என்றும், அதனால் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்னும் தவறான முடிவுக்கு ஒருசிலர் வந்துவிடுகிறார்கள்.

-- ஆனால் இயேசுவின் சொற்களை இவ்வாறு திரித்து விளக்குவது சரியாகாது. ஏழ்மை என்பது கடவுள் நம் மீது திணிக்கின்ற நிலை அல்ல. மக்கள் பசி பட்டினியால் வாடவேண்டும் என்றோ, அவ்வாறு வாடுவோருக்கு உதவிசெய்ய நமக்குக் கடமை இல்லை என்றோ கடவுள் நமக்குக் கூறுவதில்லை. இதற்கு நேர்மாறாக, ஏழைகளுக்கு உதவும்போது நாம் இயேசுவுக்கே உதவுகிறோம் (காண்க: மத் 26:31-46). கடவுளுக்குச் செலவழிக்கிறோம் என்னும் சாக்குப்போக்குக் கூறி ஏழைகளைச் சுறண்டுவது கடவுளுக்கு ஏற்புடையதல்ல (காண்க: மத் 15:3-9). எனவே சமூக நீதிக்காக உழைப்பதும் கடவுள் புகழுக்காகத் தியாகம் செய்வதும் இயேசுவின் போதனைப்டி மிக நெருக்கமாக இணைந்துப் பிணைந்தவை ஆகும். கடவுளை நினைந்து மனிதரை மறப்பதோ, மனிதரை நினைந்து கடவுளை மறப்பதோ கிறிஸ்தவின் பார்வையல்ல. மாறாக, ஒடுக்கப்பட்டோரை ஆதரிக்கின்ற அதே வேளையில் நாம் கடவுளைப் புகழ்வதையும் நாம் மறந்துவிடலாகாது.

மன்றாட்டு
இறைவா, அனைவருக்கும் வேறுபாடின்றி உதவுகின்ற மனநிலையை எங்களுக்கு அளித்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

ஆறு நாளுக்கு முன்பு

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

ஒரு இலட்சியத்திற்காக வாழ்வதால் உங்கள் நண்பர், உறவினர், தோழர் ஒருவர் எல்லோராலும் புறக்கணிக்கப்படுகிறார், அலட்சியப்படுத்தப்படுகிறார். அவதூரை அள்ளி வீசி அவமானப்படுத்தப்படுகிறார். பணம் இப்போது அவரிடம் இல்லை. பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. அவருக்குப் பாதுகாப்பில்லை. நண்பர் கூட்டம் ஒழுகிவிட்டது.மேலிடம் கைவிரித்துவிட்டது. உங்களுடைய தீர்மானம் என்ன?

இயேசுவின் இத்தகைய அனுபவத்தில் அவரோடு கூட இருந்த சிலரை நம் கண்முன்னிருத்துவோம்.

மார்த்தா: இயேசுவுக்கு உணவு பரிமாறினார். அவளால் முடிந்த செயல். அப்போதைக்குத் தேவையான செயல். இயேசு மனம்நொந்து,உடல் சோர்ந்திருந்த வேளையில் ஒரு பெண் என்னும் நிலையில் அவள் செய்தது அவசியமான செயல். அவளது துணிச்சல் பாராட்டுக்குறியது.

மரியா: இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத்தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். ஒரு பெண் ஒரு ஆணைத் தொடுவது, தொட்டு தைலம் பூசுவது அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளும் செய்தி அல்ல.கள்ளம் கபடற்ற ஒருவருக்குச் செய்யும் ஊழியத்தால் அவப்பெயர் வரினும் பயமில்லை என்னும் துணிவோடு, இயேசுவோடு இறுதிவரை இருப்பேன் என்ற வைராக்கியத்தோடு அவர் செயல்பட்டது இயேசுவின் பாராட்டைப்பெறுகிறது.

லாசர்: தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். கூட இருப்பவர்களைச் சிதறடிப்பார்கள். பயமுறுத்துவார்கள். விலைகொடுத்து வாங்குவார்கள். அநேகமாக அவர் கொலைசெய்யப்பட்டிருப்பார்.

யூதாஸ்: வாய்ச் சொல்லில் வீரர். ஏழைகள்பால் இயேசுவைவிடவும் இரக்கம் உள்ளவர்?!. 'பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக் கொள்வதுண்டு.' யார் நீங்கள். உங்கள் தீர்மானம் என்ன? தேர்ந்து செயல்படுங்கள். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்