முதல் வாசகம்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 31-34

இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன், என்கிறார் ஆண்டவர். அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள், என்கிறார் ஆண்டவர். அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர். இனிமேல் எவரும் `ஆண்டவரை அறிந்துகொள்ளும்' எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தரமாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூரமாட்டேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 51: 1-2. 10-11. 12-13
பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.
11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி

12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
13 அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். பல்லவி

இரண்டாம் வாசகம்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறை மகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

`எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்,' என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

யோவான் 12:20-33

நற்செய்தி வாசகம்
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 20-33

அக்காலத்தில் வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, ``ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்'' என்று கேட்டுக்கொண்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அது பற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, ``மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்'' என்றார். மேலும் இயேசு, ``இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? `தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்' என்பேனோ? இல்லை! இதற்காகத்தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன். தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்'' என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், ``மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்'' என்று ஒலித்தது. அங்குக் கூட்டமாய் நின்றுகொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, ``அது இடிமுழக்கம்'' என்றனர். வேறு சிலர், ``அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு'' என்றனர். இயேசு அவர்களைப் பார்த்து, ``இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது. இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்'' என்றார். தாம் எவ்வாறு இறக்கப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

இறைவனைத் தேடுவோம்

யோவான் நற்செய்தி தவிர மற்ற மூன்று நற்செய்தி நூல்களிலும் இந்தப் பகுதி காணப்படவில்லை. யோவான் நற்செய்தியாளர் மட்டும் குறிப்பிடும் பகுதி இது. யோவான் நற்செய்தியாளர் தனது நற்செய்தியை மக்களுக்கு விளக்குகிற பாணியை, உண்மையிலே கிரேக்கர்கள் பாராட்டியிருப்பார்கள். ஏனென்றால், கிரேக்கர்கள் எப்போதும் புதுமையைத் தேடுகிறவர்கள். உண்மையைத் தேடி அலைகிறவர்கள். ஞானத்தைத் தேடுகிறவர்கள். ஒருபோதும் எதிலும் திருப்பதியடையாதவர்கள். வாழ்வு முழுவதும் தேடிக்கொண்டே இருக்கிறவர்கள்.

இயேசுவை அவர்கள் காண வேண்டும் என்று பிலிப்பிடம் சொல்கிறார்கள். எதற்காக பிலிப்பிடம் வர வேண்டும்? என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லையென்றாலும், பிலிப்பு என்பது, கிரேக்க மொழிப்பெயர். எனவே, அவரிடத்தில் வந்திருக்கலாம் என்ற விளக்கம் கொடுக்கப்படுகிறது. பிலிப்பு அந்திரேயாவின் உதவியை நாடுகிறார். அந்திரேயாவும் அவரோடு சென்று இயேசுவிடம் அறிவிக்கிறார். இயேசு அனைவரையும் ஏற்றுக்கொள்கிறவர் என்பதும், உண்மையைத் தேடி அலைகிறவர்கள் இயேசுவுக்கு நெருக்கமானவர்கள் என்பதும் இங்கே வெளிப்படுகிறது.

நாம் எப்போதும் நமது விசுவாசப்பயணத்தில் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். எதிலும் திருப்தியடையக்கூடாது. உண்மையாக இருக்கலாம், அறிவாக இருக்கலாம், ஞானமாக இருக்கலாம். நமது வாழ்வு எப்போதும் பயணிப்பதாக இருக்க வேண்டும். கடவுளை நாடித்தேடி அலைந்து கொண்டே இருக்க வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

`--------------------------------------------------------

கோதுமை மணியின் மாட்சி ...

தம்மைத் தேடிவந்த கிரேக்கர்களுக்கு இயேசு சொன்ன அருமையான போதனை கோதுமை மணி உவமை. கிரேக்கர்கள் அறிவுஜீவிகள். அவர்கள் ஞானத்தைத் தேடியவர்கள். எனவே, ஞானம் நிறைந்த இயேசுவின் போதனைகளையும், அருங்குறிகளையும் கேள்விப்பட்டு அவரைக் காணவந்தார்கள். அவர்களுடைய அறிவாற்றலுக்கு ஏற்றவகையில் இயேசு அவர்களிடம் உரையாடுகிறார்.

கிரேக்கர்களுக்குத் தோல்வி, துன்பம் இவற்றில் நம்பிக்கை இல்லை. துன்பத்தின் வழியாக இன்பமும், வெற்றியும் கிடைக்கும் என்பதெல்லாம் அவர்களின் அறிவாற்றலுக்கு ஒவ்வாத செய்திகள். எனவேதான், ஞானத்தை நாடும் கிரேக்கருக்கு சிலுவை மடமையாய் இருக்கிறது என்றார் பவுலடியார். பவுலைப் பொறுத்தவரையில், சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து "கடவுளின் வல்லமையும், ஞானமுமாய் இருக்கிறார்" (1 கொரி 1: 22-24).

அந்த ஞானத்தைத்தான் தம்மைத் தேடிவந்த கிரேக்கர்களுக்கும், அவர்களோடு நின்றுகொண்டிருந்த தம் சீடர்களுக்கும் இயேசு கற்றுக்கொடுக்க முன்வந்தார். "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்" என்றார் இயேசு.

இந்த போதனையைக் கேட்டு அந்தக் கிரேக்கர்கள் மலைத்திருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள்கூட வியந்திருப்பர். அவர்களின் வியப்பை அதிகரிக்கும் வகையில் "மாட்சிப்படுத்தினேன், மீண்டும் மாட்சிப்படுத்துவேன்" என்று தந்தையின் குரல் வானிலிருந்து ஒலித்தது. கோதுமை மணிபோல மடிந்தாலும், இறுதியில் இறைத்தந்தையால் இயேசு மாட்சிப்படுத்தப்படுவார் என்னும் உண்மையை அப்போது அவர்கள் உணராமல் இருக்கலாம். ஆனால், இயேசுவின் இறப்பு, உயிர்ப்பு என்னும் அனுபவங்களிலிருந்து சீடர்கள் கோதுமை மணியின் மாட்சியை உணர்ந்துகொண்டனர்,

நாமும் இந்த ஞானத்தைக் கற்றுக்கொள்வோம்.

மன்றாடுவோம்: கோதுமை மணிபோல மண்ணில் மடிந்த ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். மடிந்த உம்மை உயிர்த்தெழச் செய்து மாட்சிப்படுத்திய தந்தை இறைவன், பிறருக்காகத் தம் உயிரைக் கையளிக்கும் அனைவரையும் மாட்சிப்படுத்துவதற்காக நன்றி செலுத்துகிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

''கிரேக்கர் சிலர்... பிலிப்பிடம் வந்து, 'ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்'
என்று கேட்டுக்கொண்டார்கள்'' (யோவான் 12:20-21)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவில் நம்பிக்கை கொண்ட மக்கள் யூதர்கள் மட்டுமல்ல, பிற இனத்தாரும் அவரை ஏற்றனர் என்னும் உண்மையை இங்கே யோவான் நற்செய்தி தெரிவிக்கிறது. இயேசு எருசலேம் நகருக்கு வருகிறார். அங்கே வழிபடுவதற்கென்று யூதர்களும் ''சில கிரேக்கர்களும்'' வருகின்றனர். இங்கே கிரேக்கர்கள் எனக் குறிக்கப்படுவோர் ''பிற இனத்தார்'' ஆவர். அவர்கள் இயேசுவைத் தேடி வருகிறார்கள். நேரடியாக அவர்கள் இயேசுவிடம் போகவில்லை. மாறாக, இயேசுவின் சீடர்களில் ஒருவராகிய பிலிப்புவை அவர்கள் அணுகுகிறார்கள். ''ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்'' என்பது அவர்களது வேண்டுகோள்.

-- இங்கே பல கருத்துக்கள் அடங்கியுள்ளன. தொடக்க காலத் திருச்சபை இயேசுவின் நற்செய்தி யூதர்களுக்கு மட்டுமல்ல, பிற இனத்தாருக்கும் உலக மக்கள் அனைவருக்குமே உரியது என்னும் உண்மையை உணர்ந்தது. ஆகவே, இயேசுவைத் தேடி எல்லா மக்களுமே வருகிறார்கள். அவ்வாறு வருவோரை இயேசுவிடம் கொண்டுசெல்லும் பணி இயேசுவின் சீடர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிலிப்பு இங்கே இயேசுவின் சீடர்களுக்கு அடையாளம். இயேசுவில் நம்பிக்கை கொண்டோர் பிற மக்களையும் இயேசுவிடம் இட்டுச் செல்ல வேண்டும். ஏனென்றால் ''இயேசுவைக் காண விரும்பி'' வருகின்ற மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களது உள்ளத்தில் எழுகின்ற தாகத்தைத் தணிக்க வேண்டும் என்றால் அவர்களை வாழ்வின் ஊற்றாகிய இயேசுவிடம் நாம் இட்டுச் செல்ல வேண்டும். இயேசுவே நமக்கு வாழ்வளிக்கின்றார். மண்ணில் விழுந்து மடிகின்ற கோதுமை மிகுந்த விளைச்சலைத் தருவதுபோல, சிலுவையில் இறக்கின்ற இயேசு நமக்கு நிலைவாழ்வு அளிக்கிறார். அவரை நாம் அணுகிச் சென்று வாழ்வு பெறுவதோடு பிறரையும் அவரிம் கூட்டிச் செல்ல நாம் அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, நற்செய்தியின் தூதுவர்களாக எங்களை மாற்றியருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்