முதல் வாசகம்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 5-18

அந்நாள்களில் பிற இனத்தாரும் யூதரும் தம் தலைவர்களுடன் சேர்ந்து திருத்தூதரை இழிவுபடுத்தி, கல்லால் எறியத் திட்டமிட்டனர். இதை அவர்கள் அறிந்து லிக்கவோனியாவிலுள்ள நகரங்களான லிஸ்திராவுக்கும் தெருபைக்கும் அவற்றின் சுற்றுப்புறங்களுக்கும் தப்பிச் சென்றார்கள். அங்கெல்லாம் அவர்கள் நற்செய்தியை அறிவித்தார்கள். லிஸ்திராவில் கால் வழங்காத ஒருவர் இருந்தார். பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த அவர் ஒருபோதும் நடந்ததில்லை. அவர் அமர்ந்து பவுல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் நலம் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதைக் கண்டு பவுல் அவரை உற்றுப்பார்த்து உரத்த குரலில், ``நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்'' என்றார். அவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினார். பவுல் செய்ததைக் கூட்டத்தினர் கண்டு லிக்கவோனிய மொழியில், ``தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன'' என்று குரலெழுப்பிக் கூறினர். அவர்கள் பர்னபாவைச் `சேயுசு' என்றும், அங்குப் பவுலே பேசியபடியால் அவரை `எர்மசு' என்றும் அழைத்தார்கள். நகருக்கு எதிரிலுள்ள சேயுசு கோவில் அர்ச்சகர் காளைகளையும் பூமாலைகளையும் கோவில் வாயிலுக்குக் கொண்டு வந்து கூட்டத்தினருடன் சேர்ந்து பலியிட விரும்பினார். இதைக் கேள்வியுற்ற திருத்தூதர் பர்னபாவும் பவுலும் தங்கள் மேலுடைகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள் பாய்ந்து சென்று உரக்கக் கூறியது: ``மனிதர்களே, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்; நீங்கள் இந்தப் பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம். கடந்த காலங்களில் அவர் அனைத்து மக்கள் இனங்களையும் அவரவர் வழிகளில் நடக்கும்படி விட்டிருந்தார்; என்றாலும் அவர் தம்மைப்பற்றிய சான்று எதுவும் இல்லாதவாறு விட்டுவிடவில்லை. ஏனெனில் அவர் நன்மைகள் பல செய்கிறார்; வானிலிருந்து உங்களுக்கு மழையைக் கொடுக்கிறார்; வளமிக்க பருவ காலங்களைத் தருகிறார்; நிறைவாக உணவளித்து உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சி பொங்கச் செய்கிறார்.'' இவற்றை அவர்கள் சொன்னபின்பு கூட்டத்தினர் தங்களுக்குப் பலியிடுவதை ஒருவாறு தடுக்க முடிந்தது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 115: 1-2. 3-4. 15-16 (
பல்லவி: எங்களுக்கன்று, ஆண்டவரே! மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்.

1 எங்களுக்கன்று, ஆண்டவரே! எங்களுக்கன்று: மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்;
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு அதை உமக்கே உரியதாக்கும்.
2 `அவர்களுடைய கடவுள் எங்கே' எனப் பிற இனத்தார் வினவுவது ஏன்? -பல்லவி

3 நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்;
தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார்.
4 அவர்களுடைய தெய்வச் சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே,
வெறும் மனிதக் கைவேலையே! -பல்லவி

15 நீங்கள் ஆண்டவரிடமிருந்து ஆசி பெறுவீர்களாக!
விண்ணையும் மண்ணையும் உருவாக்கியவர் அவரே.
16 விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது;
மண்ணகத்தையோ அவர் மானிடர்க்கு வழங்கியுள்ளார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். அல்லேலூயா.

யோவான் 14:21-26

பாஸ்கா காலம்-5 வாரம் திங்கள்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 21-26


அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர்மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.'' யூதா - இஸ்காரியோத்து யூதாசு அல்ல, மற்றவர் - அவரிடம், ``ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?'' என்று கேட்டார். அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: ``என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 14: 21 – 26
கடைபிடிப்போமா?

சமுதாயத்திலே பலர் அரசியல் தலைவர்களை கடைப்பிடிக்க முயற்சி எடுப்பர். காரணம் கட்சியில் சேர என்ற எண்ணம். பலர் சாதி தலைவர்களை கடைப்பிடிக்க முயற்சி எடுப்பர். காரணம் சமுதாயத்தில் அந்த சாதி பெயர் வைத்து அநியாயங்கள் செய்வதற்காக. பலர் செல்வம் படைத்த தலைவர்களை கடைப்பிடிக்க முயல்வர். காரணம் அவர்களின் செல்வாக்கினால் தங்கள் பொருளாதார பிரச்சனையை தீர்த்துக் கொள்ள. இப்படி எல்லோருமே ஏதாவது ஒரு நோக்கத்திற்காக தான் மற்றவர்களின் கோட்பாடுகளை கடைப்பிடிக்க முயற்சி எடுக்கின்றார்கள்.

ஆனால் எந்தவித கோட்பாடுகளும் விழுமியங்களும் இல்லாமல் அன்பால் மட்டுமே கடவுளை கடைப்பிடிக்க முடியும் என்று இன்றைய வாசகம் கற்றுத் தருகிறது. விவிலியம் முழுவதுமே அன்பால் நிறைந்துள்ளது. எதற்காக இயேசு அன்பால் மட்டுமே அவரை கடைப்பிடிக்க முடியும் என்று கூறினாரென்றால் பரிசேயர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும் சமாரியர்களை தாழ்த்தப்பட்டவர்களாகவும் கருதினார்கள். அவர்கள் செய்கின்ற தொழிலை வைத்து அவர்களை ஒதுக்கினர். ஆனால் இயேசு அன்பால் மட்டும்தான் மற்றவர்களை எடை போட வேண்டும் என்று பரிசேயர்களின் சிந்தனை கற்களை உடைக்கின்றார். அதனால் தான் சீடர்களை பார்த்துக் கூறி மற்றவர்களுக்கு பாடம் புகட்டுகின்றார். அவரின் பாதை அன்பின் பாதை, அவரின் பின்தொடர்தல் அன்பின் தொடர்தல், அவரின் கட்டளை அன்பின் கட்டளை என்று அன்பை அடித்தளமாக கட்டுகின்றார்.

நாம் யாரை எதற்காக கடைப்பிடிக்கின்றோம்? நம்முடைய கடைப்பிடித்தலில் எவற்றை பெற்றிருக்கின்றோம்? சிந்திப்போம்.

அருட்பணி. பிரதாப்

===========================

திருத்தூதர் பணி 14: 5 – 18
வாழ்க்கை என்னும் கொடை

தனி மனித வழிபாடு, நாம் வாழும் இந்த நவீன உலகத்தில் மட்டுமல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இருந்திருக்கிறது என்பதற்கு, இன்றைய வாசகம் அருமையான எடுத்துக்காட்டு. பவுல் மற்றும் பர்னபா ஆகிய இருவரும், மக்கள் நடுவில் சென்று, நோய்களை குணமாக்குகின்றனர். முடவர்களை நடக்கச் செய்கின்றனர். அதனைக்கண்டு அவர்களை வழிபடுவதற்காக, அவர்களுக்கு பலி செலுத்துவதற்காக ஒரு கூட்டம் அவர்களிடத்தில் வருகிறது. அதனைப் பார்த்து, பவுலும், பர்னபாவும் அதனை புறக்கணித்துவிட்டு, அவர்களை கண்டிக்கின்ற விதமாக, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்.

பணம் கொடுத்து விளம்பரங்களை தேடிக்கொள்ளும் இந்த உலகத்தில், இறைவன் ஒருவர் தான் மகிமைப்படுத்தப்பட வேண்டியவர் என்பதில், உறுதியாக இருந்து அதனை வாழ்ந்தும் காட்டியிருக்கிறார் பவுலடியார். உண்மைதான். இறைவனுக்காக அனைத்தையும் குப்பையென்று கருதுகிறேன் என்று வெறும் வார்த்தையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் நிறைவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். புறவினத்து மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காக, தன்னுடைய வாழ்க்கை முழுவதையுமே அர்ப்பணித்த பவுலடியார், எந்த நேரத்திலும் தான் பெருமைப்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்கவில்லை. எப்போதுமே, தன்னுடைய வாழ்வு கடவுளுக்கானது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

வெற்றுப்புகழுக்காக, பெயருக்காக எதனையும் செய்ய துணியும் மனிதர்கள் வாழும் உலகில், நம்முடைய உடல், பொருள், ஆவி அனைத்தையுமே இறைவனுக்கு அர்ப்பணிப்பதற்கு நாம் அழைக்கப்படுகிறோம். நாம் பெற்றிருக்கிற இந்த வாழ்க்கை கடவுள் கொடுத்த கொடை. அதை அவரை மகிமைப்படுத்தும் விதமாக வாழும் வரம் வேண்டி மன்றாடுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

திருப்பாடல் 115: 1 – 2, 3 – 4, 15 – 16
”மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்”

இந்த உலகத்தில் இருக்கிற எல்லாருமே ஏதாவது ஒரு வகையில் சாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறோம். கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். நமது பெயர் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும், நமது பெயர் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக இருக்கிறது. இந்த உலகத்தில் மன்னராட்சி முறை வழக்கில் இருந்தபோது, அரசர்கள் நாடுகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அது எதற்காக? தங்கள் வலிமை நிலைநாட்டப்பட வேண்டும். தங்களது பெயர் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

இவ்வளவுக்கு நமது பெயரை நிலைநாட்ட முயற்சி செய்கிற நாம் ஒன்றை மறந்து விடுகிறோம். அதுதான் நமக்கு இந்த வாழ்வை வழங்கிய கடவுளின் திருப்பெயர். கடவுள் தான் நமக்கு எல்லாமே. கடவுள் இல்லையென்றால் இந்த வாழ்க்கை இல்லை, சாதனை இல்லை என்கிற உண்மை, நம்மில் பலருக்கு புரிவதும் இல்லை. புரிந்தாலும் அதனை வாழ்வாக்குவது கடினமாக இருக்கிறது. எப்போதுமே ”நான்” என்கிற சிந்தனை நமக்குள்ளாக உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதுதான் கடவுளுக்கும் நமக்குமான உறவை சிதைப்பதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. கடவுளுக்குத்தான் எல்லா மாட்சியும் உரித்தாக்கப்பட வேண்டும் என்பதை, இன்றைய திருப்பாடல் உரக்கச் சொல்கிறது.

கடவுளின் வழிகாட்டுதலை, அவர் நமக்கு காட்டி வந்திருக்கிற எல்லா வல்ல செயல்களையும் நாம் உணர்ந்து, நமது மனித நிலையை உணர்வோம். கடவுள் இல்லையென்றால், நிச்சயம் நம்மால் எதுவும் இந்த உலகத்தில் சாதிக்க முடியாது என்கிற, அந்த தாழ்ச்சியுள்ள மனநிலையை ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

கண்ணின்மணிபோல் காக்கும் தெய்வம்

இயேசுவின் வார்த்தைகள் சீடர்கள் உள்ளத்தில் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஏதோ ஒரு சோகம் தங்களை ஆட்கொள்ளப்போகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அது என்னவென்று அவர்களுக்குச் சொல்லத்தெரியவில்லை. ஆனாலும், அவர்களின் உள்ளங்களில் சோக ரேகை படர்ந்திருந்தது. இயேசு அவர்களின் உள்ளங்களை அறிந்தவராக, தனது போதனையைத்தொடங்குகிறார். அவருடைய போதனை அவர்களுக்கு ஆறுதல் தருவதாக இருக்கிறது.

தான் அவர்களிடமிருந்து பிரியப்போவதை பல நேரங்களில், அவர்கள் அறியும்வண்ணம் மறைபொருளாகச்சொன்ன இயேசு, இப்போது தனது பிரிவு தவிர்க்க முடியாது என்பதையும், ஆனால், அதைப்பற்றி அவர்கள் அஞ்சத்தேவையில்லை என்பதை, அவர்களுக்கு தூய ஆவியானவரைக்கொடுப்பதன் மூலம் சொல்கிறார். சீடர்கள் இயேசுவின் பிரிவைப்பற்றிக் கவலைகொள்ளக்கூடாது. இயேசு நம்மை தனியே விட்டுவிட்டுச் செல்கிறவர் அல்ல. இயேசுவுக்கு நம்மைப்பற்றி நன்றாகத் தெரியும். எப்படியும் அவர் நம்மை ஏதாவது ஒருவகையில், பாதுகாத்துக்கொண்டே இருப்பார்.

இயேசுவின் பிரசன்னம் நம்மோடு ஏதாவது ஒருவகையில் இருந்துகொண்டே இருக்கும். அவர் நம்மைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார். நம்மை எந்த ஆபத்தும் நெருங்காமல் பாதுகாத்துக்கொண்டு இருக்கிறார். எனவே, அவரிடத்திலே முழுமையாக நம்பிக்கை வைத்து, அவரிடத்திலே சரணாகதி அடைவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

திப 9: 5-18
யோவா 14: 21-26

அன்பும் கீழ்ப்படிதலும்

“என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்புகொண்டுள்ளார். என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்”“ என்னும் இயேசுவின் சொற்களை இன்று இதயத்தில் இருத்துவோம்.

அன்பும் கீழ்ப்படிதலும் இணைந்தே செல்லும் என்பது நாம் அறிந்ததே. பெற்றோரை அன்பு செய்யும் பிள்ளைகள் பெற்றோருக்குப் பணிந்து நடக்கின்றன. பெற்றோரின் சொல் கேட்காத பிள்ளைகளை நாம் மதிப்பதில்லை. காரணம், அவர்கள் பெற்றோரை அன்பு செய்வதில்லை.

அவ்வாறே, இயேசுவின் சீடர்களும் இயேசுவின் சீடர்களும் அவர்மீது உண்மையான பற்று கொண்டிருந்தால் அவரது கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பே.

இயேசுவை “ஆண்டவரே”“ என அன்புடன் அழைக்கும் நாம், அவர் சொல்வதை ஏற்றுக் கடைப்பிடிக்க அருள்வேண்டுவோம்.

மன்றாடுவோம்: தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி பெருமைப்படுத்தும் இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மை ஆண்டவராக அறிக்கையிடும் நாங்கள், உமது கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் அருளை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

''என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாம் துணையாளர் உங்களுக்கு
அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும்
உங்களுக்கு நினைவூட்டுவார்'' (யோவான் 14:26)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு தம் சீடர்களுக்கு இறுதி அறிவுரை வழங்கும்போது, ''மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு தந்தையிடம் கேட்பேன்'' (யோவா 14:16) என்கிறார். அந்தத் துணையாளர்தாம் தூய ஆவியார். ''துணையாளர்'' என இங்கே குறிப்பிடப்படுகின்ற சொல்லுக்கு இரு பொருள்கள் உண்டு. எபிரேய மரபில் இதற்குத் ''தேற்றுகிறவர்'', ''ஆறுதல் அளிப்பவர்'' என்பது பொருள். இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் ஆறுதல் அளித்தார். அவர்களுடைய துன்பங்களில் அவரே மக்களைத் தேற்றினார். கடவுளின் ஆதரவும் தேற்றுதலும் மக்களுக்கு நிறைவாகக் கிடைத்ததை எசாயா விரிவாக விளக்குகிறார் (காண்க: எசாயா, அதி. 40-55). சிமியோன் இஸ்ரயேலுக்கு அளிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தார் (லூக் 2:25). இயேசு மக்களுக்கு நற்செய்தி அறிவித்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளித்து, ஆறுதல் வழங்கிட வருகின்றார் (லூக் 4:18-19). இயேசுவின் சீடர்கள் அவர் புரிந்த ஆறுதலளிக்கும் பணியைத் தொடர்ந்தார்கள். ''ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய கடவுள்'' தம்முடைய ஆறுதலைத் திருத்தூதர்களின் பணி வழியாக மக்களோடு பகிர்ந்துகொள்கிறார். தூய பவுல் இக்கருத்தை அழகாக விளக்குகிறார் (காண்க: 2 கொரி 1:3-7).

-- துணையாளர் என்னும் சொல்லுக்கு மற்றொரு பொருள் உரோமைப் பின்னணியிலிருந்து பெறப்படுகிறது. இதற்குப் ''பரிந்துபேசுபவர்'', ''சார்பாக வாதாடுபவர்'', அருகிருந்து ''உதவி செய்பவர்'' என்னும் பொருள் உண்டு. இயேசு இறையாட்சிப் பணியை ஆற்றியபோது தாம் புரிந்த செயல்களுக்குக் கடவுள் சாட்சி என்றார்; திருமுழுக்கு யோவானும் இயேசு பற்றிச் சான்றுபகர்ந்தார்; மறைநூலில் எழுதப்பட்டவையும் இயேசுவுக்குச் சான்றாக அமைந்தன. தம் சீடர்கள் தம் பணியைத் தொடரும்போது அவர்களுக்கு இன்னல்கள் ஏற்படும் என்பதை இயேசு முன்னறிவித்தார். அவர்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்படும்போது அவர்களுக்காகப் பரிந்து பேசத் தூய ஆவி துணையாவார் எனவும் இயேசு அறிவிக்கிறார் (காண்க: மாற் 13:9-13; லூக் 12:11-12). இயேசு தந்தையிடம் நமக்காகப் பரிந்துபேசிப் பெற்றுத் தருகின்ற தூய ஆவி திருச்சபையோடு என்றும் தங்கியிருந்து நமக்கு அனைத்தையும் கற்றுத் தருவார். அவர் நம் உள்ளங்களில் எழுப்புகின்ற நல்ல சிந்தனைகள் நம் வாழ்வுக்குத் துணையாகும். கடவுளின் ஆவியே நமக்குச் சார்பாக இருக்கும்போது நாம் எந்தச் சக்திக்கும் அஞ்சவேண்டியதில்லை என இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.

மன்றாட்டு
இறைவா, உம் தூய ஆவி எந்நாளும் எங்களோடு இருந்து எங்களை வழிநடத்துவதை உணர்ந்து நாங்கள் ஆறுதல் அடைந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

திக்கற்றவர்களாக விடமாட்டேன்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நாம் ஒருவர் ஒருவரை எவ்வாறு அறிமுகம் செய்கிறோம் என்பதை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம். அது இயேசு விரும்பும் சமூகத்தை உருவாக்கும். நாம் பொதுவாக ஒருவரை அறிமுகம் செய்யும்போது, இவர் ஆ.யு இ டீ.நு படித்திருக்கிறார்; இவர் 25000 சம்பளம் வாங்குகிறார்; இவர் இந்தப் பதவியில் இருக்கிறார் என்றுச் சொல்லி அறிமுகம் செய்கிறோம்.இவர் அன்புள்ளம் கொண்டவர்; ஏழைகளுக்கு இரங்குபவர்; நியாயம் நீதியோடு வாழ்பவர் என்று யாருடைய நற்பண்புகளையும் சொல்லி அறிமுகம் செய்வது மிக அறிதாகிவருகிறது.

இறைவன் தன்னை வெளிப்படுத்தும்போதெல்லாம் தன்னை அன்புசெய்யும் இறைவனாக அறிமுகம் செய்கிறார். அன்புசெய்து அவர்களோடு குடிகொள்ளும் தெய்வமாக அறிமுகம் செய்கிறார். "நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்"(யோவான் 14:23). "திக்கற்றவர்களாக விடமாட்டேன்"(யோவான்14:18) "கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்"(1 யோவான் 1:9) நம்மை திக்கற்றவர்களாக கைவிடாத இறைவன், நம்மோடு குடிகொள்ள விரும்பியதால், இம்மானுவேல் இறைவனாக இவ்வுலகில் பிறந்தார். தொடர்ந்து நம்மை வாழ்விக்க விரும்பிய இறைவன் தூய ஆவியாம் இறைவனைத் துணையாளரா நமக்கு அனுப்ப வாக்கு கொடுக்கிறார்.

அன்பை அடிப்படை தகுதியாக வைத்து அறிமுகம் செய்யும் சமூகம் ஒரு தெய்வீக சமூகம். அங்கே யாரும் கைவிடப்படுவதில்லை. திக்கற்றவர்கள் யாரும் இல்லை. இறைவன் அவர்களை தாங்கி வழிநடத்துவார். இத்தயை நற்பண்பில் நம்மை உருவாக்குவோம். எக்குறையும் இன்றி இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்