முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 19-28

அந்நாள்களில் அந்தியோக்கியாவிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல்மேல் கல் எறிந்தார்கள்; அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி நகருக்கு வெளியே அவரை இழுத்துப் போட்டார்கள். சீடர்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது அவர் எழுந்து நகரினுள் சென்றார். மறுநாள் அவர் பர்னபாவுடன் தெருபைக்குப் புறப்பட்டுச் சென்றார். அந்த நகரில் அவர்கள் நற்செய்தி அறிவித்துப் பலரைச் சீடராக்கியபின் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, ``நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்'' என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து, நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள். அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள். அங்கே அவர்கள் சீடர்களுடன் பல நாள்கள் தங்கினார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 145: 10-11. 12-13. 21
பல்லவி: ஆண்டவரே, உம் மக்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பர்.
.
10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்;
உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும்
உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13 உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு;
உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. -பல்லவி

21 என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக!
உடல் கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை
என்றும் எப்பொழுதும் போற்றுவதாக! -பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மெசியா பாடுபட்டு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து மாட்சிமை அடையவேண்டும். அல்லேலூயா

யோவான் 14:27-31

பாஸ்கா காலம்-5 வாரம் செவ்வாய்


நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 27-31

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். `நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்' என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லிவிட்டேன். இனி நான் உங்களோடு மிகுதியாகப் பேசப் போவதில்லை; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் வந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை. ஆனால் நான் தந்தைமீது அன்புகொண்டுள்ளேன் என்பதையும் அவர் எனக்குக் கட்டளையிட்டபடி செயல்படுகிறேன் என்பதையும் உலகு தெரிந்துகொள்ள வேண்டும்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 14: 27 – 31
அமைதியின் தூதர்களாய்

வளர்ந்து வரும் நாகரிக சமுதாயம் அமைதியற்ற சமுதாயமாக மாறி வருகிறது. ஒருபுறம் அதிக அழுத்தம் கொண்ட இயந்திரங்கள் உள்ள வாகனங்கள் எழுப்பும் சத்தம், இன்னொருபுறம் உக்ரைன்-ரஷ்யா நாட்டு போர் மீண்டும் எழுச்சியின் விளைவு, இன்னொருபுறம் அரசின் கருணையில்லாத செயல் திட்டங்கள். இவையெல்லாம் இந்த சமுதாயத்தில் இருந்த சிறிதளவு அமைதியையும் காற்றில் பறக்க விட தூண்டுதலாக அமைகின்றன.

இந்த உலகத்தை படைத்தவர் கடவுள். அப்படியிருக்க இந்த உலகம் குறைபாடோடு இருக்கும்போது அதனை நிறைவுள்ளதாக மாற்றுபவர் அதே கடவுள். அதனால் தான் துன்பங்கள், சோதனைகள் வருகின்றபோது கடவுளிடமிருந்து வருகிறது என்று கூறுவார்கள். துன்பம் வருகிறதென்றால் அதனை இன்பமாக மாற்றக்கூடிய வலிமையையும் கடவுள் தான் பெற்றிருக்கின்றார். அதனால் தான் நான் தரும் அமைதி இந்த உலகம் தரும் அமைதி போன்றது அல்ல என்கிறார். காரணம் உரோமையர்களின் எண்ணம் ஆலய வரி அளித்தால் மக்களின் குறை தீரும். அதனால் தான் வருவாயில் குறிப்பிட்ட தொகையினை வரியாக செலுத்த கட்டளையிட்டார்கள். இதனால் மக்கள் பொருளாதார ரீதியில் குழம்பிக் கொண்டிருந்தார்கள். தங்களுக்கென்று மெசியா ஒருவர் வருவார் என்ற ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் இயேசு நான் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல என்று கூறுகிறார். அமைதியை ஏற்படுத்த வந்ததனால் தான், உயிர்த்த பிறகும் உங்களுக்கு அமைதி உண்டாகுக என்று கூறுகிறார்.

இயேசுவிடமிருந்து அமைதி பெற்ற நாம் மற்றவர்கள் அமைதியாக இருக்க (மனதளவில், உடலளவில்) துணை புரிகிறேனா? அமைதியின் தூதனாக செயல்படுகிறேனா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

திருத்தூதர் பணி 14: 19 – 28
பவுலடியாரின் நம்பிக்கை வாழ்வு

தொடங்கியிருக்கிற பணியில், உறுதி கொண்ட கொள்கையில் பிடிப்போடு இருக்க வேண்டும் என்கிற வார்த்தைகளுக்கு முன்னோடியாக திகழக்கூடியவராக, பவுலடியார் இருப்பதை, இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்துவைப் பற்றி பல இடங்களுக்குச் சென்று அறிவித்து வந்த, பவுலடியாரின் போதனைகளுக்கு மக்கள் நடுவில் ஆதரவும் இருந்தது. எதிர்ப்பும் இருந்தது. எதிர்ப்பு என்பது சாதாரணமானதாக இல்லை. அவரை கொலை செய்ய செல்லும் அளவுக்கு இருந்தது. இன்றைய வாசகம் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது.

அந்தியோக்கியாவிலிருந்தும், இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல் மேல் கல் எறிந்தார்கள். அவர் இறந்துவிட்டார் என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது போல பவுல் இறக்கவில்லை. இந்த நிகழ்ச்சி நம்மில் ஒருவருக்கு நடந்திருந்தால், நம்முடைய அடுத்த சிந்தனை என்னவாக இருக்கும்? இனிமேல் இந்த பணி எதற்கு என்று, சோர்ந்துவிடுவோம் அல்லது சற்று உடல் தேறுகிறவரையில் ஓய்வு எடுத்துவிட்டு, சில நாட்கள் கழித்து, மீண்டும் தொடர்வோம். ஆனால், பவுலடியார் இவ்வளவு நடந்தபிறகும், அவருடைய உயிருக்கே ஆபத்து வந்தபோதிலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அந்த நிகழ்ச்சியை வெகுசாதாரணமாக எடுத்துக்கொண்டு, அவர் தொடர்ந்து தன்னுடைய பணியைச் செய்கிறார். கிறிஸ்துவை அறிவிக்கிறார்.

சாதாரண துன்பங்களைக் கண்டாலே, விசுவாசத்தைக் கேள்விக்குள்ளாக்குகிற மனிதர்கள் வாழுகிற உலகத்தில், பவுலடியார் நம்முடைய நம்பிக்கை வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்பதற்கு அழைப்பு விடுக்கிறார். கடவுளிடமிருந்து அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை. கடவுள் தனக்கு கொடுத்த பணியைச் செய்வதில் உறுதியாக இருக்கிறார். கடவுள் தனக்கு எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும், தனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்றெல்லாம், அவர் நினைக்கவில்லை. இறைவனுடைய பணியைச் செய்வதில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார். நம்முடைய நம்பிக்கை வாழ்விலும் அத்தகைய உறுதியைப் பெற மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

திருப்பாடல் 145: 10 – 11, 12 – 13, 21
”ஆண்டவரே! நீர் உருவாக்கிய அனைத்தும் உமக்கு நன்றி செலுத்தும்”

கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார். இந்த உலகத்தில் இருக்கிற அனைத்துமே கடவுள் உருவாக்கியவை தான். ஆனால், கடவுளிடமிருந்து பலவற்றைப் பெற்றிருக்கிறவர்கள் நன்றி செலுத்துகிறார்களா? படைப்பு அனைத்தும் கடவுளை நினைத்துப் பார்க்கிறதா? இந்த கேள்விகள் அனைத்தையும் நாம் சற்று சிந்தித்துப் பார்க்கிறபோது, நாம் பெறுகிற பதில் நெருடலாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்த உண்மையை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். மனிதர்கள் நன்றி இல்லாதவர்களாக, படைத்தவரை மறக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இந்த திருப்பாடலில், ஆசிரியர் ஒரு நம்பிக்கை விதையை விதைக்கிறார். அதாவது, நிச்சயம் இந்த உலகத்தில் இருக்கிற மனிதர்கள் என்றாவது ஒருநாள், கடவுளின் வல்லமையை நினைத்துப் பார்ப்பார்கள். அவருக்கு உரிய மரியாதையை தருவார்கள் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இந்த பாடல் அமைகிறது. ஒன்றை இழந்தால் தான், அதன் அருமை தெரியும் என்பார்கள். பலவற்றை நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த இயற்கையை நமது சுயநலத்திற்காக விற்றுக்கொண்டிருக்கிறோம். இந்த இயற்கையைச் சுரண்டிக்கொண்டிருக்கிறோம். இன்னும் சுரண்டலில் ஒளிந்து கொண்டிருக்கிற பேரழிவை உணர்வதற்கு நாம் தயாரில்லை. ஆங்காங்கே, அது பற்றிய விழிப்புணர்வு விதைக்கப்பட்டாலும், நம்மை ஆளுகிறவர்கள் அதனை அடக்கி ஒடுக்குவதற்குத்தான் முனைகிறார்கள். நிலத்தடி நீரை உறிஞ்சி பன்னாட்டு நிறுவனங்களக்கு விற்பது, ஆற்றுமணலை திருட்டுத்தனமாக அள்ளுவது, உச்ச நீதிமன்றமே தடைவிதித்தாலும் எப்படியாவது குறுக்குவழியில் மதுபானக்கடைகளைத் திறந்து, குடும்பங்களைச் சூறையாடுவது என, அதிகாரவர்க்கத்தினரின் சுயநலவெறியும், பணத்தின் மீதான பைத்தியமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

அழிவில் தான் நாம் பாடங்களைக் கற்க வேண்டுமானால், அது நடந்தே தீரும். கடவுள் நாம் அழிவதை விரும்பவில்லை என்றாலும், அப்படித்தான் இந்த மனித இனம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------

விண்ணக வாழ்வு

இறப்பு என்பது இந்த உலகத்தின் கொடுமையான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒருவிதத்தில் நம்முடைய அனுபவத்தில் அது உண்மையும் கூட. ஒருவருடைய இழப்பு எந்த விதத்திலும் ஈடுசெய்ய முடியாத ஒன்று. இது இந்த உலக கண்ணோட்டம். அதே வேளையில், நாம் அடைய வேண்டிய இலக்கைப்பற்றிய தெளிவு நம்மிடம் இருந்தால், இந்த இழப்பின் ஆழம், ஓரளவுக்கு நம்மை பாதிக்காமல் இருக்கும் என்பதுதான் உண்மை. அதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தி வாயிலாக கற்றுத்தருகிறார்.

இந்த உலகம் நாம் அடைய வேண்டிய இலக்கு அல்ல. இந்த உலகத்தைத் தாண்டிய இலக்கு தான் நமது இலக்கு. ஆனால், இந்த உலகத்தை நாம் இலக்காக வைத்திருக்கிறோம். இயேசு இன்றைய நற்செய்தியில் தெளிவாகச் சொல்கிறார்: ”நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால், நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்”. ஆக, இயேசு சீடர்களைவிட்டு பிரிந்து செல்லக்கூடிய அனுபவம், அவர்களுக்கு மகிழ்ச்சியைத்தர வேண்டும் என்று, கூறுகிறார். தந்தையிடம் செல்வதுதான் அனைவரின் இலக்கு. தந்தையிடம் செல்வது வருத்தப்படக்கூடியது அல்ல. மாறாக, ஆனந்தப்பட வேண்டிய ஒன்று என்பது இங்கே வலியுறுத்தப்படுகிறது. எனவே, இயேசு அவர்களோடு இல்லாத நிலை வருகிறபோது, சீடர்கள் கவலைப்பட வேண்டியது இல்லை. மாறாக, இயேசு தந்தையிடம் செல்கிறார் என்பது குறித்து, அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

நமது வாழ்வு விண்ணகத்தை நோக்கிய பயணமாக அமைய வேண்டும். மண்ணகம் நமது நிலையான இல்லம் அல்ல. இங்கு நாம் வாழ்வதன் அடிப்படையில் தான், நமது விண்ணக வாழ்வு அமைய இருக்கிறது. இந்த நிலையான வாழ்விற்கு நம்மையே தகுதியாக்கிக்கொள்ள, இந்த மண்ணகத்தில் நாம் முழுமுயற்சி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

அமைதி தரும் இயேசு

இன்றைய நற்செய்தியில் இயேசு நம் அனைவருக்கும் அமைதியைத்தருகிறார். அமைதி என்கிற வார்த்தை, விவிலியத்தில் ”ஷலோம்” என்கிற வார்த்தை அமைதியைக்குறிக்கிறது. இங்கே பயன்படுத்தப்படும் இந்த வார்த்தை சாதாரண மெளனத்தைக்குறிக்கக்கூடிய சொல் அல்ல. பிரச்சனை இல்லாத தன்மையைக்குறிப்பதும் அல்ல. ”ஷலோம்” என்கிற வார்த்தையின் உண்மையான பொருள் ஒரே வார்த்தையில் நாம் விளக்க முடியாது. அது நெருக்கடியிலும் மனஉறுதியோடு இருக்கும் நிலை. எதைப்பார்த்தும் பயப்படாத, துணிவுள்ள, நம்பிக்கையுள்ள தன்மை. வாழ்வின் எந்த நிகழ்வுகளிலும் சோர்ந்து போகாத நிலை. அதுதான் இங்கே அமைதி என்கிற ஆசீராக இயேசுவால் கொடுக்கப்படுகிறது.

இத்தகைய அமைதியை இயேசு ஒருவரால் மட்டும்தான் கொடுக்க முடியும். அத்தகைய அமைதியைக் கொடையாகப் பெற்றவர்கள் மட்டும் தான் வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ முடியும். நிறைவோடு வாழ முடியும். இயேசுவை உண்மையான மனத்தோடு பின்பற்றும் அனைவருக்கும் இந்த அமைதி தரப்படுகிறது. புனிதர்களின் வாழ்வும், திருத்தூதர்களின் வாழ்வும் நமக்கு மிகப்பெரிய சவாலா பல வேளைகளில் அமைகிறது. எப்படி அவர்களால் இவ்வளவு துன்பத்திலும் மகிழ்ச்சியாக வாழ முடிந்தது? என்ற கேள்வி நமக்குள் அடிக்கடி எழக்கூடிய ஒன்றாகும். அந்த துயரமான நேரத்திலும் எப்படி அவர்களுக்கு மனஉறுதி இருந்தது என்று நம் மனது அடிக்கடி நிச்சயம் நமக்குள்ளாக இருந்து கேட்கும்? இயேசுவின் அமைதி என்கிற கொடைதான் இந்தக் கேள்விகள் அனைத்திற்குமான விடை.

நாமும் ஆண்டவரிடம் இந்த அமைதி என்கிற கொடையைப் பரிசாகக் கேட்போம். நமது வாழ்வில் சிறு துன்பம் வந்தாலும் நாம் தவித்துப்போகிறோம். அதை மனஉறுதியோடு எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் இல்லாமல், நமது விசுவாசம் ஆட்டம் காண்கிறது. அத்தகைய நிலையிலிருந்து நமது ஆன்மீகம் மாற்றம் பெற வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

 

திப 14: 19-28
யோவா 14: 27-31

உலகம் தரும் அமைதி

“நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல”“ என்னும் இயேசுவின் சொற்களுக்காக இன்று நன்றி கூறுவோம்.

உலகம் பல வழிகளில் நமக்கு அமைதி தர முயல்கிறது: பொழுதுபோக்கு, நலவாழ்வுப் பயிற்சிகள், கருத்தரங்குகள், உளவியல் ஆலோசனைகள்... என மன அமைதி பெறுவதற்கான பல வழிகள் உலகிலே இருக்கின்றன. இருப்பினும், மணமுறிவு பெறுவோர், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போர், வன்முறையை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதானே இருக்கின்றது. காரணம், உலகம் தரும் அமைதி நிலையானது அல்ல, நிறைவானதும் அல்ல.

ஆனால், இயேசு தரும் அமைதி நிலையானது, நிறைவானது. உடல், உள்ளம், ஆன்மா மூன்றுக்கும் நிறைவு தருவது. அந்த அமைதியைத் தேடித்தான் மக்கள் தியான இல்லங்களுக்கும், நற்செய்திக் கூட்டங்களுக்கும், விவிலிய வகுப்புகளுக்கும் செல்கின்றனர். நாமும் உலகம் தரும் அமைதியை நாடாமல், இயேசு தரும் அமைதிக்காக உழைப்போம்.

மன்றாடுவோம்: அமைதியின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உலகம் தர முடியாத உண்மையான அமைதியை எங்கள் உள்ளங்களிலும், குடும்பங்களிலும் பொழிந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

உலகம் தரமுடியாத அமைதி !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

தனி மனிதர்களும், சமூகங்களும், நாடுகளும் நாடித் தேடும் ஒன்று அமைதி. பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், பல நாடுகளும் போர்களாலும், உள்நாட்டுக் குழப்பங்களாலும் அமைதியின்றி தவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தியத் திருநாடுகூட, பொருளாதார வளர்ச்சி பெற்றாலும், அண்டை நாடுகளாலும், நக்சலைட் தீவிரவாதத்தாலும் அமைதியின்றித் தவிக்கின்றது. ஆயுதங்களால் உண்மையான அமைதியைக் கொண்டுவர முடியாது. உறவால்தான் முடியும்.

குடும்பங்களிலும் இன்று அமைதியற்ற சூழல். கணவன்-மனைவிக்கிடையே, பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையே அமைதியின்றி வாழும் நிலை காண்கிறோம். பணமோ, பொருள்களோ அமைதியைத் தர இயலாது. உறவுதான் அமைதியைத் தரும். முதலில், இறைவனோடு நல்லுறவு கொள்வோம். அப்போது, உலகம் தர இயலாத அமைதியை அவர் நமக்குத் தருவார்.

மன்றாடுவோம்: அமைதியின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் விரும்பித் தேடுகிற அமைதியை, நீர் மட்டுமே தரமுடிகின்ற அமைதியை எங்கள் நாட்டுக்கும், குடும்பங்களுக்கும், எங்களுக்கும் தந்தருள்வீராக.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

------------------------

''இயேசு, 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்.
நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல' என்றார்'' (யோவான் 14:27)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு தம்மோடு பந்தியமர்ந்திருக்கின்ற தம் சீடர்களுக்கு அமைதியை வாக்களிக்கிறார். வழக்கமாகக் கூறப்படுகிற வாழ்த்துச் சொல் ''அமைதி!'' என்பதாகும். இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்து தம் சீடர்களுக்குத் தோன்றிய போதும் ''உங்களுக்கு அமைதி உண்டாகுக!'' என வாழ்த்தினார். இவ்வாறு இயேசு வாக்களிக்கின்ற அமைதி உலகம் தருகின்ற அமைதி அல்ல. அதாவது, கடவுளிடமிருந்து வருகின்ற அமைதி நம்மைக் கடவுளோடு ஒன்றிணைக்கின்ற சக்தி கொண்டது. கடவுளே நம் குற்றங்களை மன்னித்து நம்மைத் தம் பிள்ளைகளாக ஏற்பதால் நாம் கடவுளின் அமைதியில் பங்கேற்கிறோம். இந்த அமைதியை உலகமோ உலகத்திலுள்ள எந்த சக்தியோ நமக்குத் தர இயலாது. எனவே, இயேசு வாக்களிக்கின்ற அமைதி நம்மைக் கடவுளோடு உறவாக்குகின்ற அதே வேளையில் நம்மை அடுத்திருப்போரோடும் நாம் நல்லுறவில் வாழ்ந்திட நமக்கு வழியாகிறது.

-- இயேசு கொணர்கின்ற அமைதி சொல்லளவில் நின்றுவிடாது. மாறாக, கடவுளின் வல்லமையால் அமைதி செயலாக்கப்படும். இயேசு காற்றையும் கடலையும் நோக்கி, ''அமைதியாயிரு!'' என்றதும் ''மிகுந்த அமைதி'' உண்டாயிற்று (காண்க: மாற் 4:39). ஆனால் கடவுள் அமைதி கொணர்வது இயற்கையைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதோடு நின்றுவிடுவதில்லை. அது மனித உள்ளங்களைப் பண்படுத்தி எல்லா மனிதரும் அன்பும் நீதியும் நிறைந்த உலகை உருவாக்கிட அவர்களுக்கு ஊக்கம் தருகின்ற சக்தியாகவும் செயல்படுகிறது. எனவே, அமைதி என்பது போர் நிகழா நிலை மட்டுமல்ல, மாறாக, கடவுள் உலகுக்கென்று வகுத்த திட்டத்தை மனிதர் நன்மனத்தோடு இணைந்து செயல்படுத்துவதன் பயனாகவே அமைதி தோன்றும். இத்தகைய அமைதி கடவுளின் கொடையாக நமக்கு அளிக்கப்படும் என இயேசு கற்பிக்கிறார். ஆனால் இக்கொடையை நாம் நன்றியோடு பெற்றுக்கொள்ள வேண்டும். அது நிலையாக நம்மிடையே நிலவிட நாம் உழைக்கவும் வேண்டும். ஆக, கடவுள் வாக்களிக்கின்ற அமைதி நம் உள்ளத்திலும் இல்லத்திலும் உலகிலும் நிலவித் தழைத்திட வேண்டும் என்றால் கடவுளின் அருளோடு நாமும் ஒத்துழைப்பது தேவை.

மன்றாட்டு
இறைவா, உம் அமைதியை எங்களுக்கும் இவ்வுலகிற்கும் அளித்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

நான் உங்களுக்குத் தரும் அமைதி

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

எங்கே நிம்மதி, அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்பது மனிதனின் அமைதி தேடும் படலத்தில் பின்னணிப் பாடல். பொன் இருந்தும், பொருள் இருந்தும், பெண் இருந்தும ;, பெயர் இருந்தும், மனதிலும் குடும்பத்திலும் அமைதி இல்லாது இந்த பின்னணிப் பாடலை முனகிக் கொண்டிருக்கிறான் மனிதன். அமைதியைத் தேடி மதுவிலும் மாதுவிலும் புகையிலும் போதையிலும் முங்கி மூழ்கிக்கொண்டிருக்கிறான் மனிதன். இவற்றில் அமைதி தேடும் மனிதன்இவையெல்லாம் நமக்கு அமைதி தருவதாகப் படம் காட்டி, படுகுழிக்கு பாதை அமைக்கும் கானல்நீர் என்பதை மனிதன் அறிவதில்லை.

அமைதிதேடி அலைமோதி நிலைகுலையும் மனித சமுதாயத்திற்கு இயேசு பதிலாக தீர்வாக இருக்கிறார். "என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல"(யோவான் 14:27) இவ்வாறு தன் தெய்வீக அமைதியில் நமக்குப் பங்கு தருகிறார்.எதைப்பற்றியும் கலங்கவோ மருளவோ அவசியம் இல்லா அமைதி இந்த இறை அமைதி.

இறைவன் தரும் இந்த அமைதி சற்று வித்தியாசமானது; முற்றிலும் புதுமையானது. ஆனால் அதில் கிடைக்கும் அமைதியோ அலாதியானது. இது வேதனையில் கிடைக்கும் அமைதி. இழப்பில் குவியும் அமைதி.பாரங்கள் சுமப்பதில் புதைந்திருக்கும் அமைதி. குழப்பங்களின் ஆழத்தில் அமிழ்ந்திருக்கும் அமைதி. வெறுமையில் வெற்றிடத்தில் பரவியிருக்கும் அமைதி.கொடுப்பதில் சேரும் அமைதி. உள்ளுக்குள் இருந்து உயிரூயஅp;ட்டி, உரமூட்டி, உற்சாகப்படுத்தி வாழவைக்கும் அமைதி. இந்த அமைதியைத் தேடுவோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்