முதல் வாசகம்

திருத்தூதர் பணியிலிருந்து முதலாம் வாசகம்: (தி ப 9:26-31)

அந்நாள்களில் சவுல் எருசலேம் நகரத்துக்கு வந்தபோது சீடர்களுடன் சேர்ந்து கொள்ள முயன்றார். ஆனால் அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல் அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர். பர்னபா அவருக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார். பவுல் ஆண்டவரை வழியில் கண்டதுபற்றியும் ஆண்டவர் அவரோடு பேசியதுபற்றியும் அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும் பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார். அதன்பின் சவுல் அவர்களோடு சேர்ந்து எருசலேமில் அங்கும் இங்குமாகச் சென்று ஆண்டவரின் பெயரால் துணிவுடன் பேசிவந்தார். கிரேக்க மொழி பேசும் யூதரிடம் சென்று அவர்களோடு வாதாடினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட முயன்றார்கள். ஆனால் அவரோடு இருந்த சகோதரர்கள் இதை அறிந்து அவரைச் செசரியாவுக்குக் கூட்டிச்சென்று அங்கிருந்து தர்சு நகருக்கு அனுப்பி வைத்தார்கள். யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளிலெல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல்: 22:26-27, 28, 30, 31-32

பல்லவி: ஆண்டவரே! நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக!!

25 உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
26 எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக!
அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக! -பல்லவி

27 பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்;
பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.
29 மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்;
புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர். -பல்லவி

30 வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்;
இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.
31 அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்;
இனி பிறக்கப்போகும் மக்களுக்கு "இதை அவரே செய்தார்" என்பர். -பல்லவி

 

இரண்டாம் வாசகம்

1யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிலிருந்து இரண்டாம் வாசகம்: (1யோவான் 3:18-24)

பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம். இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என அறிந்து கொள்வோம்: நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும். ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்: அனைத்தையும் அறிபவர். அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்: ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்: அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்: கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடன் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

யோவான் 15:1-8

பாஸ்கா காலம்-5 வாரம் ஞாயிறு

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18

"உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது. நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருத்தூதர் பணி 9: 26 – 31
உடனிருப்பு

பவுல் மனமாறியதைப் பற்றி, பலரும் நம்ப மறுத்தனர். தங்களை அழிப்பதற்காக யூதர்களின் அதிகாரவர்க்கத்தினர் தீட்டிய திட்டம் என்று அவர்கள் நினைத்தனர். அதற்காகவே பவுலை மனமாறியது போல அனுப்பியிருக்கிறார்கள் என்று பவுலை நம்ப மறுத்தனர். நிச்சயமாக, உண்மையான மனமாற்றத்தைப் பெற்றிருக்கிற பவுலுக்கு அது அவமானமாகவோ, மற்றவர்களால் ஒதுக்கப்படுவதாகவோ அமைந்திருருக்கலாம். இந்த இக்கட்டான நேரத்தில், பர்னபா அவருக்கு துணைசெய்கிறார். திருத்தூதர்களிடம் அவரை அழைத்துச் செல்கிறார். அவர் கண்ட காட்சியை விவரிக்கிறார். இவ்வாறு, அவருடைய மனமாற்றம் உண்மையானது என்பதை அவர் மற்றவர்கள் உணரச் செய்கிறார்.

சந்தேகம் என்பது எல்லாருக்கும் வரக்கூடியது. அதேபோல, கடவுள் நம்பிக்கையிலும் சந்தேகம் ஏற்படலாம். சாதாரண விசுவாசிகளுக்கு, வாழ்வின் பிரச்சனைக்கண்டு, கடவுள் மீது சந்தேகம் வருகிறபோது, இறைவனுடைய பணியாளர்களாகஇருக்கிற ஒவ்வொருவரும், அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். பர்னபா செய்தது மிகப்பெரிய இறைவாக்குப்பணி. உண்மையான மனமாற்றம் அடைந்த ஆன்மாவிற்கு துணைநின்ற பணி. அந்த பணியை இறைவனின் பணியாளர்களாக இருக்கிற ஒவ்வொருவரும் செய்ய அழைக்கப்படுகிறோம். அந்த பணியைச் செய்வதற்கு நமக்கு பொறுமை வேண்டும். இறைநம்பிக்கை வேண்டும். தூய ஆவியானவரின் அருள்துணை வேண்டும்.

இந்த நவீன உலகத்தில், இளைய தலைமுறையினர் கடவுள் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை நல்வழிப்படுத்துவதும், கடவுளை அவர்களுக்கு அறிவிப்பதும், இறைப்பணியாளர்களின் முக்கியமான கடமையாக இருக்கிறது. இளையோரின் சந்தேகங்களை தீர்த்து, அவர்கள் இறையனுபவத்தைப் பெற, இறைவனை அறிந்து கொள்ள நாம் உதவி செய்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

நானே உண்மையான திராட்சைச்செடி

இயேசு திராட்சைச் செடியைப்பற்றிப் பேசுகிறபோது, திராட்சைச்செடியைப்பற்றி நன்றாக அறிந்தவராகப்பேசுகிறார். பாலஸ்தீனத்தின் அனைத்துப்பகுதிகளிலும் திராட்சைச்செடி வளர்க்கப்படுகிறது. திராட்சைச்செடியை வளர்க்கிறபோது, அதற்கான தனிக்கவனம் செலுத்த வேண்டும். திராட்சைச்செடி தன் வசதிக்கு ஏற்றாற்போல கொடிகளைப்படரவிட்டாலும், அது நல்லமுறையில் வெட்டப்பட்டு, பராமரிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அதனால் பயன் ஒன்றும் இல்லை.

இயேசு இந்த உவமையை யாருக்குச்சொல்கிறார்? இரண்டு விளக்கங்கள் தரப்படுகிறது. முதலாவதாக, யூதர்களைப்பார்த்து இந்த உவமையைச்சொல்லியிருக்கலாம். ஏனென்றால், இஸ்ரயேல் இனம் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம். பழைய ஏற்பாடு முழுவதும் இஸ்ரயேல் இனம் திராட்சைச்செடியோடு ஒப்பிடப்படுகிறது. அது கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக இருந்தாலும், தன்போல வளரமுடியாது. அவ்வப்போது கடவுள் இறைவாக்கினர் வழியாக, இஸ்ரயேல் இனம் மற்ற இனங்களுக்கு ஆசீயாக இருக்கும் வண்ணம் கண்டித்து திருத்துவார். அப்படி திருந்தாதவர்கள், அதற்கான தீர்ப்பைப்பெறுவார்கள். இரண்டாவது, அது கிறிஸ்தவர்களுக்காகவும் எழுதப்பட்டிருக்கலாம். கிறிஸ்தவர்களில் பலர், தொடக்ககாலத்தில், பெயரளவு கிறிஸ்தவர்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும் என்ற அழைப்பு இதன் மூலமாக தரப்படுகிறது.

நாம் அனைவருமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகள். அது நமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். ஆனால், அதற்கேற்ற வாழ்வு வாழ்வது மிகவும் அவசியம். அப்படி இல்லையென்றால், அதுவே நமக்கு மிகப்பெரிய தண்டனைக்கு ஒன்றாக மாறிவிடும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

திராட்சைச் செடியும், கிளைகளும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தம்மை திராட்சைச் செடியாகவும், நம்மை அதன் கிளைகளாகவும் உருவகப்படுத்துகிறார். இந்த உருவகத்திலிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். குறிப்பாக கனி தருதல் என்பது பற்றி நாம் அறிந்துகொள்பவை இதோ:

  1. கிளைகள் தானாகக் கனி தர இயலாது. இயேசுவை விட்டுப் பிரிந்து நாம் எதுவும் செய்ய இயலாது. நமது ஆற்றல்கள், திறமைகள், கொடைகள் ... அனைத்தும் அவரிடமிருந்தே நாம் பெற்றுக்கொள்கிறோம். எனவே, நன்றி கூறுவோம்.
  1. இயேசுவோடு இணைந்திருப்பவர் மிகுந்த கனி தருவார். நமது ஆற்றல்கள், திறமைகள் நல்ல பலன் தரவேண்டுமென்றால், இயேசுவோடு இணைந்து நாம் செயல்படவேண்டும். எனவே, அவரோடு செபத்தில் ஒன்றிப்போம்.
  1. “நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது”“. நாம் இயேசுவோடு இணைந்து சிறப்பாகச் செயல்படும்போது, தந்தை இறைவன் பெருமையடைகிறார். இயேசுவின் சீடர்கள் என்ற முறையில் தந்தை இறைவனைப் பெருமைப்படுத்துவதே நம் கடமை. அதற்காக நாம் செய்யவேண்டியது தரம் நிறைந்த பணியாற்றலே.

மன்றாடுவோம்: திராட்சைச் செடியான இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உம்மோடு நாங்கள் இணைந்து மிகுந்த கனி தந்து, தந்தை இறைவனை மாட்சிப்படுத்தும் வரத்தை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

மிகுந்த கனி தந்து

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

#8220;நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய்; இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது” என்னும் ஆண்டவரின் அருள்மொழிகளை இன்று சிந்திப்போம். இயேசுவின் சீடர்கள் கனி தர வேண்டும், அதுவும் மிகுந்த கனிதர வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. கனி தராத அத்திமரத்தை இயேசு சபிக்கவும் முன்வந்த நிகழ்ச்சியை நாம் நினைவுகூர வேண்டும். நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் முப்பது, அறுபது, நுhறு மடங்கு எனப் பலன் தந்தன என்னும் விதைப்பவன் உவமையையும் ஆண்டவரே மொழிந்துள்ளார். எனவே, மிகுந்த கனி தருபவர்களாகப் பணியாற்றுகிறோமா, வாழ்கிறோமா என்று நம்மையே நாம் கேட்டுக்கொள்வோம்.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையும், ஒரு சிலருக்கு, ஏன் மிகுந்த பலருக்குப் பயன் உள்ளதாக, ஆற்றல் தருவதாக அமையவேண்டும் என்பதே அவரது அழைப்பு. அதுவே நற்செய்தி அறிவிப்பும்கூட. நமது வாழ்வும், பயனும் யாரையுமே தொடவில்லையென்றால் என்னே ஒரு பரிதாபம்! எனவே, கனி தரும் சொற்களைப் பேசுவோம், மிகுந்த கனிதருமாறு வாழ்வோம்.

மன்றாடுவோம்: நாங்கள் மிகுந்த கனி தந்து சீடராய் வாழவேண்டுமென்று அழைத்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்வு உம் தந்கைக்கு மாட்சி அளிக்குமாறு எங்களை ஆசிர்வதித்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

---------------------

''இயேசு, 'நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே
என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது' என்றார்'' (யோவான் 15:8)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு தம்மைத் ''திராட்சைச் செடி'' என்றும் தம்மில் நம்பிக்கை கொள்வோரைத் ''திராட்சைக் கொடி'' என்றும் உருவகித்துக் கூறுகிறார். செடியோடு இணைந்திருக்கின்ற கொடிதான் உயிரோடு இருக்கும். செடியை விட்டுப் பிரிந்த கொடி மடிந்துபோகும். இந்த உருவகத்தில் இயேசு இரு உண்மைகளைக் காட்டுகிறார். முதல் உண்மை இயேசுவுக்கும் தந்தை இறைவனுக்கும் இடையே உள்ள உறவு. இயேசு என்னும் திராட்சைச் செடியை ''நட்டு வளர்ப்பவர்'' இயேசு தந்தை என அழைக்கின்ற கடவுள்தாம். இதனால் இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவு தெரிகிறது. இயேசு தந்தையோடு கொண்டுள்ள உறவு மனித உறவுகளைக் கடந்தது. ஆனால் அன்பின் நிறைவும் முழுமையும் அந்த உறவில் உண்டு. அந்த அன்பு எவ்வளவு ஆழமானது என்றால் இயேசு தம்மைக் காண்போர் தம் தந்தையையே காண்கின்றனர் என்றார். அதே நேரத்தில் இயேசு தந்தையின் திருவுளத்திற்கு முற்றிலும் அமைந்தவராகவே இவ்வுலகிற்கு வந்தார். தந்தை தமக்களித்த பணியை நிறைவேற்றுவதில் இயேசு கருத்தாயிருந்தார்.

-- தந்தையாம் கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு இயேசுவுக்கும் சீடர்களுக்கும் இடையே நிலவுகின்ற உறவாக மாறுகிறது. அதாவது, இயேசு தம்மைத் திராட்சைச் செடிக்கும் தம் சீடர்களைத் திராட்சைக் கொடிக்கும் ஒப்பிடுகிறார். இயேசு செடி என்றால் அவரில் நம்பிக்கை கொள்ளும் நாம் கொடிகள். கொடி செடியோடு இருந்தால் வாழ்வு பெறும்; செடியைப் பிரிந்த கொடி மடியும். இயேசுவோடு இணைந்திருத்தலில் இரு அம்சங்கள் உண்டு. முதலில் நாம் அவரிடத்தில் நம் முழு நம்பிக்கையையும் வைக்க வேண்டும். அதன் விளைவாக நாம் அவருடைய அன்புக் கட்டளையை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செயல்படும்போது கடவுளுக்கு நாம் மாட்சி அளிப்போம். கடவுள் நமக்குத் தருகின்ற வாழ்வு மறைந்துபோகும் ஒன்றல்ல; அது எந்நாளும் நீடிக்கின்ற நிலைவாழ்வு. அதே நேரத்தில் நம்மில் உறைகின்ற இறைவாழ்வு நற்கனிகளாக வெளிப்பட வேண்டும். அன்பிலிருந்தும் இறைநம்பிக்கையிலிருந்தும் பிறக்கின்ற கனிகள் மனித குலம் வாழ்வதற்கு வழியாகும். பிறருடைய நலனை நாம் முன்வைத்துச் செயல்படும்போது நாம் ''மிகுந்த கனி தருவோம்''. மனிதர் வாழ்வு பெறுவதே கடவுளுக்கு மாட்சியாக அமையும்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் வாழ்வு அன்பு என்னும் கனியை ஈந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

இணைந்திருந்தால்.. .. நிலைத்திருந்தால் .. .. கேட்பதெல்லாம் நடக்கும்.

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

வாழ்க்கை என்பது கனி நிறைந்த வாழ்வாக இருக்க வேண்டும். இந்த கனி தரும் வாழ்வு என்பது, நமக்குள் நிறைவையும் நிம்மதியையும் தருவது. பிறருக்கு பயன்படக்கூடியது. இறைவனுக்கு மகிமை சேர்ப்பது. ஒருவன் வாழ்ந்ததன் பயன் இதுதான். இத்தகைய கனி தரும் வாழ்க்கையை வாழ, ஒருவன் இறைவனோடு இணைந்திருக்க வேண்டும். இக் கருத்தை இயேசு இப்பகுதியில் பலமுறை உணர்த்துகிறார். 'இணைந்திருத்தல்' , 'நிலைத்திருத்தல்' என்னும் வார்த்தைகளை இதற்கென பலமுறை பயன்படுத்துகிறார். "இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது". "இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்". "என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது". "நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்." இவ்வசனங்கள் இதற்குச் சான்றுகள்.

இயேசுவோடு இணைந்திருப்பதன் நெருக்கம் பல பலன்களைக் கொடுக்கவல்லது. இயேசுவை விட்டுக் கொஞ்சம் விலகினாலும் அந்த இழப்பு, கொஞ்சம் அல்ல. மிக மிகப் பெரிது. "என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது" கொஞ்சம்தானே இயேசுவை விட்டு விலகியிருக்கறேன். ஆகவே கொஞ்சம்தானே நஷ்டம் என்ற கணக்கு, ஆன்மீகத்தில் தப்புக்கணக்கு. இயேசுவை விட்டு கொஞ்சம் விலகினாலே நாம் எல்லாவற்றையும் நஷ்டமடைந்துவிடுவோம்.

அதே வேளையில், நாம் இயேசுவோடு இருந்தால், "விரும்பிக் கேட்டதெல்லாம் கிடைக்கும்". இயேசுவோடு நெருக்கமாக இருந்துகொள்ளுங்கள். செடியும் கிளையுமாக, கிளையும் கொடியுமாக. இணை பிரியாத இந்த நெருக்கம் மிகுந்த பலனைத் தரும். கனி கொடுக்கும். இணைந்து இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்