முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 1-6

அந்நாள்களில் யூதேயாவிலிருந்து வந்த சிலர், ``நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது'' என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர். அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர். அங்கிருந்து திருச்சபையார் அவர்களை வழியனுப்பிவைத்தனர். அவர்கள் பெனிசியா, சமாரியா வழியாகச் சென்று பிற இனத்தவர் மனந்திரும்பிய செய்தியை எடுத்துரைத்தார்கள். இது சகோதரர், சகோதரிகள் அனைவரிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் எருசலேம் வந்தபோது திருச்சபையாரும், திருத்தூதர்களும், மூப்பர்களும் அவர்களை வரவேற்றார்கள். அப்போது கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் பரிசேயக் கட்சியினருள் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட சிலர் எழுந்து, ``அவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்; மோசேயினது சட்டத்தைக் கடைப்பிடிக்க அவர்களுக்குக் கட்டளையிட வேண்டும்'' என்று கூறினர். இதனை ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 122: 1-2. 4-5
பல்லவி: அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1 "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். -பல்லவி

4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்;
இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க
ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன.
அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடன் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

யோவான் 15:1-8

பாஸ்கா காலம்-5 வாரம் புதன்

நற்செய்தி வாசகம்
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``உண்மையான திராட்சைக் கொடிநானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது. நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 15: 1 – 8
இணைந்திருத்தல்

இன்று மனித வாழ்வியல் கோட்பாடுகளில் பரவலாகப் பேசப்படும் ஒரு கருத்து “தனி ஓநாயக இருத்தல்”. Being a loner or being a lone wolf. அது என்ன தனி ஓநாய்? சர்க்கஸ் விளையாட்டுக்களில் சிங்கம் பழக்கப்பட்டு நிறைய விளையாட்டுகள் விளையாடுவதை நாம் பார்த்திருப்போம். அவ்வாறே புலி, குரங்கு, யானை என மனிதர்களால் பழக்கப்படுகின்றன. ஆனால் பழக்கப்படுத்தி விட முடியாத ஒரு விலங்கு ஓநாய். எந்த ஒரு சர்க்கஸ் விளையாட்டிலும் பார்த்திருக்க முடியாது. ஏனெனில் ஓநாய் தனக்கென்று உள்ள இயல்பை ஒருநாளும் மாற்றிக் கொள்ளாது. தனி ஓநாயாக இருத்தல் என்னும் கருத்துருவைப் பின்பற்றுபவர் யாரையும் சாராமல், தன் இயல்பின்படி தனித்திருப்பார். பிறருடன் வெறும் வணிகத்திற்காக மட்டுமே உறவாடுவாரே தவிர மற்ற எந்த உறவையும் வளர்த்துக் கொள்ள மாட்டார்.

இணைந்திருத்தல் தேவையற்றது என்று கூறித்திரியும் இந்த சமுதாயத்திற்கு என்னோடு இணைந்திருங்கள் என்று இயேசு சொல்வது ஏற்புடையதாக இருக்குமா? இயேசுவின் இணைந்திருப்பு யாரோடு? எப்படி? எதற்காக என்ற ஆழ்ந்த கேள்வியை எழுப்புகின்றது. நான் உங்களோடு இணைந்திருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்திருங்கள். இயேசுவின் மனுவுருவாதலின் பின்புலத்திலிருந்து இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எப்படிப்பட்ட இணைப்பு என்பதற்காககத்தான் திராட்சைச் செடி, கனி உவமை வழியாக எடுத்துக் கூறுகின்றார். இயேசு தன்னையே திராட்சைச் செடியாக வர்ணித்துக் காட்டுகின்றார். எதற்காக இணைந்திருக்க வேண்டும் என்ற நோக்கம் வேண்டும். இல்லையெனில் அது சுமையாக மாறிவிடும். இயேசுவின் நோக்கம் நாம் அனைவருமே புதுவாழ்வு பெற்று திகழ வேண்டும் என்பதே. அதனால் தான் இயேசு நாம் அனைவரும் இணைந்து வாழ அழைக்கின்றார்.

நாம் எல்லோருடமும் இணைவதன் வழி கடவுளோடு இணைந்திருக்கின்றோமா? மற்றவர்களும் கடவுளோடு இணைய தூண்டுதலாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

திருத்தூதர் பணி 15: 1 – 6
கிறிஸ்தவ ஒன்றிப்பு வாழ்க்கை

மோசேயின் சட்டப்படி, ஒவ்வொரு யூத ஆண்மகனுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். யூதர்கள் அனைவருமே விருத்தசேதனம் செய்திருந்தார்கள். அவர்கள் கடவுளுடனான உடன்படிக்கையின் அடையாளமாக விருத்தசேதனத்தை செய்திருந்தார்கள். அது அவர்களுக்கு முக்கியமான அடையாளம். மீட்பு பெறுவதற்கான அடையாளம். எனவே, யூத மறையின் தொடர்ச்சியாக கருதப்படும், கிறிஸ்தவத்தைத் தழுவுகிறவர்கள் கண்டிப்பாக மீட்பைப் பெற விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும் என்று, சில யூதர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இது தொடக்க கால கிறிஸ்தவர்கள் நடுவில் எழுந்த முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

நல்ல எண்ணத்தோடு, நன்மைத்தனத்தோடு வாழ வேண்டும் என்று நினைத்து வாழ விரும்புகிறவர்கள் சேர்ந்து வருகிறபோது, பிரச்சனைகளே இருக்காது என்று சொல்ல முடியாது. கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் நாம் உண்மையை உணர்ந்து கொள்ள உதவிகரமாக இருக்கிறது என்பதே உண்மை. தொடக்க கால திருச்சபையில், அனைவரும் ஒரே எண்ணத்தோடு, நல்ல எண்ணத்தோடு, கிறிஸ்தவ மதிப்பீடுகளின்படி வாழ்வதற்கு எல்லாவிதத்திலும் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களுக்குள்ளாக ஒரு சில கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அந்த கருத்து வேறுபாடுகளை அவர்கள் இணைந்து, அதற்கு ஒரு தீர்வைக் காண முற்பட்டார்கள் என்பதை, இன்றைய வாசகம் நமக்கு விளக்கிக் காட்டுகிறது.

பிரச்சனைகள் வருகிறபோது, நாம் கூடி சேர்ந்து, மீண்டுமாக அதே நல்ல சிந்தனை மற்றும் எண்ணத்தோடு, அவற்றை விவாதிக்க வேண்டும். அந்த விவாதம் பல உண்மைகளை நமக்கு விளக்கிக் காட்டுவதாக அமையும். கருத்து வேறுபாடுகள் ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கக் கூடாது. அது நமக்குள்ளாக இருக்கிற பிணக்குகளை அகற்றி, இன்னும் அதிகமான பிணைப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட பரந்துபட்ட எண்ணமுள்ளவர்களாய் வாழ நாம் முயற்சி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

திருப்பாடல் 122: 1 – 2, 4 – 5
”அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்”

யெருசலேம் நகரத்தின் முக்கியத்துவத்தை தாவீது அரசர் காலத்தில் தான், மக்கள் அதிகமாக உணர்ந்தனர். அதற்கு தாவீதின் முயற்சியும் ஒரு காரணம், யெருசலேம் நகரை, கடவுளின் நகரமாக மாற்றியதில், தாவீதின் பங்கு மிக அதிகம் உண்டு என்பதில், மாற்றுக்கருத்து இல்லை. மக்களை ஒன்றிணைக்க, யெருசலேம் நகரத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர வேண்டும் என்பதில், அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இந்த திருப்பாடல் இந்த பிண்ணனியில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இஸ்ரயேல் மக்கள் பல திருவிழாக்களை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த திருவிழாக்களை எருசலேமில் கொண்டாடினர். திருவிழாக்களைக் கொண்டாடுவதற்காக அவர்கள் எருசலேம் வருகிறபோது பாடுகிற பாடலாக இந்த பாடல் அமைந்திருக்கிறது.

எருசலேம் என்பதை, நம்முடைய புரிதலில் விண்ணக வீடாக எடுத்துக்கொள்ளலாம். விண்ணகம் தான் நமது நிலையான இல்லம். அந்த விண்ணக இல்லத்தில் நுழைவதைத்தான் நாம் நமது வாழ்வின் இலக்காகக் கொள்ள வேண்டும். அந்த இல்லத்தில் நுழைய நாம் அகமகிழ்வோடு செல்ல வேண்டும். பொதுவாக, இந்த உலக வாழ்வை முடிப்பதற்கு யாருமே விரும்புவதில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நம்முடைய அன்புக்குரியவர்களை விட்டுப்பிரிவது என்பது எளிதானது அல்ல. நம்முடைய உறவுகளோடு வாழ்வதற்கே நாம் விரும்புகிறோம். இந்த உலகத்தின் மீது, தனிப்பட்ட பாசம் வைத்திருக்கிறோம். எனவே தான், இந்த உலகத்தை விட்டுப் பிரிகிறபோது, நம்மை கவலை வாட்டுகிறது. ஆனால், விண்ணக இல்லத்திற்கு நாம் செல்வதற்கு மகிழ்ச்சியோடு செல்ல வேண்டும். மீண்டும் நம்முடைய உறவுகளை விண்ணகத்தில் சந்திக்கப்போகிறோம் என்கிற உணர்வோடு, மகிழ்ச்சியோடு நாம் நமது வாழ்வை வாழ வேண்டும்.

இந்த உலகத்தின் மீது நாம் பற்று கொண்டிருப்பதில் தவறில்லை. ஆனால், விண்ணகத்தை நோக்கிய நம்முடைய பயணத்திற்கு அது தடையாக இருக்கக்கூடாது. விண்ணகத்திற்கு நாம் செல்வதற்கு மகிழ்ச்சியை ஆடையாக அணிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட வாழ்வை வாழ, நாம் அனைவரும் முயற்சி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

உண்மையான வாழ்வு

நானே உண்மையான திராட்சைச் செடி என்று இயேசு கூறுகிறார். “உண்மையான“ என்கிற வார்த்தை எதைக்குறிக்கிறது? அதனுடைய விவிலியப்பிண்ணனி என்ன? என்பதை இங்கு பார்க்கலாம். பழைய ஏற்பாட்டில் எப்போதெல்லாம், திராட்சைச்செடி பற்றிய செய்தி வந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் எதிர்மறையாகத்தான் பெரும்பாலும் சொல்லப்பட்டிருக்கிறது. திராட்சைச்செடி இஸ்ரயேலுக்கு ஒப்பிடப்பட்டாலும், இஸ்ரயேலின் தவறான அணுகுமுறைதான் இறைவாக்கினர்களால், திராட்சைச்செடியோடு ஒப்பிடப்படுகிறது. உதாரணமாக, இறைவாக்கினர் எரேமியா, இஸ்ரயேலை காட்டுத்திராட்சைக்கு ஒப்பிடுகிறார். அதிலிருந்து உண்பதற்கான பழங்களைப் பார்க்கமுடியவில்லை என்றும் கூறுகிறார். இதே கருத்தைத்தான் இறைவாக்கினர் எசாயாவும் முன்வைக்கிறார். ஆக, இங்கே திராட்சைச்செடி போலியானதாக சித்தரிக்கப்படுகிறது.

இயேசு சொல்ல வருகிற செய்தி இதுதான்: இஸ்ரயேல் கடவுளின் உண்மையான திராட்சைச்செடியாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. இஸ்ரயேலின் நடத்தையைப் பார்க்கிறபோது, அது உண்மையான திராட்சைச்செடியாக இல்லை. இயேசு தான் உண்மையான திராட்சைச்செடி. யூதர்கள் என்பதால் யாரும் மீட்பு பெற்றுவிட முடியாது. யூதராக இருந்தாலும், அதற்கேற்ற வாழ்வை வெளிப்படுத்த வேண்டும். யூத நம்பிக்கை வாழ்ந்து காட்டப்பட வேண்டும். அதாவது, இயேசு தான் உண்மையான மீட்பர் என்பதை அறிந்து கொள்ளக்கூடிய, அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இயேசுவை ஏற்றுக்கொள்ளாத எவரும், யூதராக இருந்தாலும், மீட்பு பெற முடியாது. காரணம், இயேசு தான் உண்மையான திராட்சைச்செடி.

நமது வாழ்க்கை கடவுளுக்கு பிரியமான முறையில் வாழ்ந்து காட்டப்பட வேண்டும். மற்றவர்களைத் திருப்திப்படுத்துவது நமது வாழ்வின் நோக்கமல்ல. மாறாக, நமது மனச்சாட்சிக்கு ஏற்றாற்போல வாழக்கூடிய வாழ்வை, நாம் வாழப்பழகிக்கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான வாழ்வு. அதுதான் போலித்தனம் இல்லாத வாழ்வு. அந்த வாழ்வை நாம் வாழ உறுதியும், முயற்சியும் எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

இயேசுவில் இணைந்திருப்போம்

இயேசுவோடு நாம் அனைவரும் இணைந்திருக்க வேண்டும் என்று நற்செய்தி சொல்கிறது. இயேசுவோடு இணைந்திருத்தல் என்றால் என்ன? இயேசுவோடு இணைந்திருத்தல் என்பது ஒருவிதமான இறையனுபவம். இதனை சிறிய உதாரணம் கொண்டு விளக்கலாம். உதாரணமாக, ஒருவர் அவரது பலவீனத்தில் தவறு செய்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். தான் தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் அவருக்கு வாழ்வே வெறுத்துக்போயிருக்கும். இந்த வாழ்க்கை தேவைதானா? என்று, ஒருவேளை தனது வாழ்வை முடிக்கக்கூடிய நிலைக்குக்கூட அவர் செல்லலாம். அந்த சமயத்தில் அவருடைய நண்பர்கள் அவரைத்தேற்றுகிறார்கள். அவரைத்தாங்குகிறார்கள். அவருக்கு ஆறுதல் சொல்கிறார்கள். அவர்களின் ஆறுதல்மொழிகள் தவறுசெய்தவர் மீண்டு எழுவதற்கு உதவியாக இருக்கிறது. அவர்களின் தோழமை, அவரை பலமுள்ளவராக வாழ்வதற்கு உதவி செய்கிறது.

இறையனுபவம் என்பது ஏறக்குறை இதேநிலைதான். கடவுளோடு இணைந்திருத்தல் என்பது, மிகப்பெரிய பலம். தவறிலிருந்து மீண்டு வருவதற்கான ஆன்மீக சக்தி. குறைகளை ஏற்றுக்கொண்டு, நிறைவோடு வாழ்வதற்கான உந்துசக்தி. எந்தச்சூழ்நிலையிலும் சோர்ந்து போகாத ஒரு நிலை. இயேசுவின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவியாக இருந்தது, அவர் தந்தையோடு கொண்டிருந்த இறையனுபவம். கடவுளோடு ஒருசில மணித்துளிகள் நாம் இருந்தாலும், கடவுளிடம் ஒருசில மணித்துளிகள் நாம் செபித்தாலும், அது தீமையை உதறித்தள்ள, தீமையைவிட்டு ஒதுங்கி வாழ நமக்கு உதவி செய்கிறது.

கடவுளோடு இணைந்து வாழக்கூடிய வாய்ப்பை நாம் தான், எப்போதும் உருவாக்க வேண்டும். கடவுள் அனுபவத்தைப் பெற நாம்தான் முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்கிறபோது, நிச்சயமாக அது நமக்குக்கைகூடும். நமது வாழ்வில் அது ஒளியேற்றும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

 

திப 15: 1-6
யோவா 15: 1-8
“தூய்மையாய் இருக்கிறீர்கள்”

“நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்”“ என்னும் இயேசுவின் சொற்களுக்காக இன்று நன்றி சொல்வோம்.

இயேசுவின் வார்த்தைகள் வல்லமை மிக்கவை என்பது நாம் அறிந்ததே. அவரது சொற்களைக் கேட்டுப் பேய்கள் அலறியடித்துக்கொண்டு ஒடின. அவரது வார்த்தைகளைக் கேட்டு நோயாளர்கள் நலம் பெற்றனர். அவரது வார்த்தையால் தண்ணீர் இரசமானது. அவரது வார்த்தைக்கு இயற்கையும் பணிந்தது, கடல் அமைதி அடைந்தது.

இன்றைய வாசகத்தில் இயேசுவின் வார்த்தைகள் தூய்மைப்படுத்துகின்றன என அறிகிறோம். அவரது சொற்கள் நம்மைப் பாவத்தினின்றும், தீமைகளினின்றும், தீய பழக்கங்களிலிருந்தும் தூய்மைப்படுத்துகின்றன. அவரது வார்த்தையைக் கேட்பதன் மூலமும், வார்த்தையைச் சுமப்பதன் மூலமும்,  வார்த்தையைச் சிந்திப்பதன் வழியாகவும் நாம் தூய்மை அடைய இயேசு இன்று அழைக்கிறார்

எனவே, நாள்தோறும் விவிலியத்தைக் கையில் ஏந்துவோம், விவிலியத்தை வாசிப்போம், செபிப்போம்.

மன்றாடுவோம்: உமது வார்த்தைகளால் எம்மைத் தூய்மைப்படுத்தும் இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களுக்கு இறைவார்த்தைமீது தாகத்தைத் தந்தருளும். இதனால் நாங்கள் மென்மேலும் தூய்மை அடைவோமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

மிகுந்த கனி தந்து

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

#8220;நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய்; இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது” என்னும் ஆண்டவரின் அருள்மொழிகளை இன்று சிந்திப்போம். இயேசுவின் சீடர்கள் கனி தர வேண்டும், அதுவும் மிகுந்த கனிதர வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. கனி தராத அத்திமரத்தை இயேசு சபிக்கவும் முன்வந்த நிகழ்ச்சியை நாம் நினைவுகூர வேண்டும். நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் முப்பது, அறுபது, நுhறு மடங்கு எனப் பலன் தந்தன என்னும் விதைப்பவன் உவமையையும் ஆண்டவரே மொழிந்துள்ளார். எனவே, மிகுந்த கனி தருபவர்களாகப் பணியாற்றுகிறோமா, வாழ்கிறோமா என்று நம்மையே நாம் கேட்டுக்கொள்வோம்.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையும், ஒரு சிலருக்கு, ஏன் மிகுந்த பலருக்குப் பயன் உள்ளதாக, ஆற்றல் தருவதாக அமையவேண்டும் என்பதே அவரது அழைப்பு. அதுவே நற்செய்தி அறிவிப்பும்கூட. நமது வாழ்வும், பயனும் யாரையுமே தொடவில்லையென்றால் என்னே ஒரு பரிதாபம்! எனவே, கனி தரும் சொற்களைப் பேசுவோம், மிகுந்த கனிதருமாறு வாழ்வோம்.

மன்றாடுவோம்: நாங்கள் மிகுந்த கனி தந்து சீடராய் வாழவேண்டுமென்று அழைத்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்வு உம் தந்கைக்கு மாட்சி அளிக்குமாறு எங்களை ஆசிர்வதித்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

---------------------

''இயேசு, 'நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே
என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது' என்றார்'' (யோவான் 15:8)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு தம்மைத் ''திராட்சைச் செடி'' என்றும் தம்மில் நம்பிக்கை கொள்வோரைத் ''திராட்சைக் கொடி'' என்றும் உருவகித்துக் கூறுகிறார். செடியோடு இணைந்திருக்கின்ற கொடிதான் உயிரோடு இருக்கும். செடியை விட்டுப் பிரிந்த கொடி மடிந்துபோகும். இந்த உருவகத்தில் இயேசு இரு உண்மைகளைக் காட்டுகிறார். முதல் உண்மை இயேசுவுக்கும் தந்தை இறைவனுக்கும் இடையே உள்ள உறவு. இயேசு என்னும் திராட்சைச் செடியை ''நட்டு வளர்ப்பவர்'' இயேசு தந்தை என அழைக்கின்ற கடவுள்தாம். இதனால் இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவு தெரிகிறது. இயேசு தந்தையோடு கொண்டுள்ள உறவு மனித உறவுகளைக் கடந்தது. ஆனால் அன்பின் நிறைவும் முழுமையும் அந்த உறவில் உண்டு. அந்த அன்பு எவ்வளவு ஆழமானது என்றால் இயேசு தம்மைக் காண்போர் தம் தந்தையையே காண்கின்றனர் என்றார். அதே நேரத்தில் இயேசு தந்தையின் திருவுளத்திற்கு முற்றிலும் அமைந்தவராகவே இவ்வுலகிற்கு வந்தார். தந்தை தமக்களித்த பணியை நிறைவேற்றுவதில் இயேசு கருத்தாயிருந்தார்.

-- தந்தையாம் கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு இயேசுவுக்கும் சீடர்களுக்கும் இடையே நிலவுகின்ற உறவாக மாறுகிறது. அதாவது, இயேசு தம்மைத் திராட்சைச் செடிக்கும் தம் சீடர்களைத் திராட்சைக் கொடிக்கும் ஒப்பிடுகிறார். இயேசு செடி என்றால் அவரில் நம்பிக்கை கொள்ளும் நாம் கொடிகள். கொடி செடியோடு இருந்தால் வாழ்வு பெறும்; செடியைப் பிரிந்த கொடி மடியும். இயேசுவோடு இணைந்திருத்தலில் இரு அம்சங்கள் உண்டு. முதலில் நாம் அவரிடத்தில் நம் முழு நம்பிக்கையையும் வைக்க வேண்டும். அதன் விளைவாக நாம் அவருடைய அன்புக் கட்டளையை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செயல்படும்போது கடவுளுக்கு நாம் மாட்சி அளிப்போம். கடவுள் நமக்குத் தருகின்ற வாழ்வு மறைந்துபோகும் ஒன்றல்ல; அது எந்நாளும் நீடிக்கின்ற நிலைவாழ்வு. அதே நேரத்தில் நம்மில் உறைகின்ற இறைவாழ்வு நற்கனிகளாக வெளிப்பட வேண்டும். அன்பிலிருந்தும் இறைநம்பிக்கையிலிருந்தும் பிறக்கின்ற கனிகள் மனித குலம் வாழ்வதற்கு வழியாகும். பிறருடைய நலனை நாம் முன்வைத்துச் செயல்படும்போது நாம் ''மிகுந்த கனி தருவோம்''. மனிதர் வாழ்வு பெறுவதே கடவுளுக்கு மாட்சியாக அமையும்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் வாழ்வு அன்பு என்னும் கனியை ஈந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

இணைந்திருந்தால்.. .. நிலைத்திருந்தால் .. .. கேட்பதெல்லாம் நடக்கும்.

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

வாழ்க்கை என்பது கனி நிறைந்த வாழ்வாக இருக்க வேண்டும். இந்த கனி தரும் வாழ்வு என்பது, நமக்குள் நிறைவையும் நிம்மதியையும் தருவது. பிறருக்கு பயன்படக்கூடியது. இறைவனுக்கு மகிமை சேர்ப்பது. ஒருவன் வாழ்ந்ததன் பயன் இதுதான். இத்தகைய கனி தரும் வாழ்க்கையை வாழ, ஒருவன் இறைவனோடு இணைந்திருக்க வேண்டும். இக் கருத்தை இயேசு இப்பகுதியில் பலமுறை உணர்த்துகிறார். 'இணைந்திருத்தல்' , 'நிலைத்திருத்தல்' என்னும் வார்த்தைகளை இதற்கென பலமுறை பயன்படுத்துகிறார். "இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது". "இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்". "என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது". "நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்." இவ்வசனங்கள் இதற்குச் சான்றுகள்.

இயேசுவோடு இணைந்திருப்பதன் நெருக்கம் பல பலன்களைக் கொடுக்கவல்லது. இயேசுவை விட்டுக் கொஞ்சம் விலகினாலும் அந்த இழப்பு, கொஞ்சம் அல்ல. மிக மிகப் பெரிது. "என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது" கொஞ்சம்தானே இயேசுவை விட்டு விலகியிருக்கறேன். ஆகவே கொஞ்சம்தானே நஷ்டம் என்ற கணக்கு, ஆன்மீகத்தில் தப்புக்கணக்கு. இயேசுவை விட்டு கொஞ்சம் விலகினாலே நாம் எல்லாவற்றையும் நஷ்டமடைந்துவிடுவோம்.

அதே வேளையில், நாம் இயேசுவோடு இருந்தால், "விரும்பிக் கேட்டதெல்லாம் கிடைக்கும்". இயேசுவோடு நெருக்கமாக இருந்துகொள்ளுங்கள். செடியும் கிளையுமாக, கிளையும் கொடியுமாக. இணை பிரியாத இந்த நெருக்கம் மிகுந்த பலனைத் தரும். கனி கொடுக்கும். இணைந்து இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்