வியாழன்

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 7-21

அந்நாள்களில் நெடுநேர விவாதத்திற்குப் பின்பு, பேதுரு எழுந்து, திருத்தூதர்களையும் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: ``சகோதரரே, பிற இனத்தவர் என் வாய்மொழி வழியாக நற்செய்தியைக் கேட்டு அதில் நம்பிக்கை கொள்ளும்படி கடவுள் தொடக்கத்திலேயே உங்களிடமிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். உள்ளங்களை அறியும் கடவுள் நமக்குத் தூய ஆவியைக் கொடுத்தது போல் அவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏற்றுக் கொண்டார். நம்பிக்கையால் அவர்களுடைய உள்ளங்களைத் தூய்மைப்படுத்தினார். நமக்கும் அவர்களுக்கும் இடையே அவர் எந்த வேறுபாடும் காட்டவில்லை. ஆகவே நம் மூதாதையரோ நாமோ சுமக்க இயலாத நுகத்தை இப்போது நீங்கள் இந்தச் சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்? ஆண்டவர் இயேசுவின் அருளால் நாம் மீட்புப் பெறுவதுபோலவே அவர்களும் மீட்புப் பெறுகிறார்கள் என நம்புகிறோம்.'' இதைக் கேட்டு அங்குத் திரண்டிருந்தோர் யாவரும் அமைதியாயினர். கடவுள் தங்கள் வழியாகப் பிற இனத்தவரிடம் அடையாளங்களும் அருஞ்செயல்களும் செய்தார் என்பதைப் பர்னபாவும் பவுலும் எடுத்துரைத்ததை அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசி முடித்ததும், யாக்கோபு அவர்களைப் பார்த்துக் கூறியது: ``சகோதரரே, நான் கூறுவதைக் கேளுங்கள். கடவுள் பிற இனத்தாரிடமிருந்து தமக்கென மக்களைத் தேர்ந்துகொள்ள முதலில் அவர்களைத் தேடி வந்த செய்தியைச் சீமோன் எடுத்துரைக்கக் கேட்டீர்கள். இறைவாக்கினரின் சொற்களும் இதற்கு ஒத்திருக்கின்றன. அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்: `இவற்றுக்குப்பின் நான் திரும்பி வந்து விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் எழுப்புவேன்; அதிலுள்ள கிழிசல்களைப் பழுதுபார்த்து அதைச் சீர்படுத்துவேன். அப்பொழுது மக்களுள் எஞ்சியிருப்போரும் என் திருப்பெயரைத் தாங்கியிருக்கும் வேற்று இனத்தார் அனைவரும் ஆண்டவரைத் தேடுவர், என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.' தொடக்கத்திலிருந்தே இதனை அவர் தெரியப்படுத்தியுள்ளார். எனவே என் முடிவு இதுவே: கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது. ஆனால் சிலைகளுக்குப் படைக்கப்பட்டுத் தீட்டுப்பட்டவை, கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை, இரத்தம் மற்றும் பரத்தைமை ஆகியவற்றைத் தவிர்க்குமாறு அவர்களுக்கு நாம் எழுத வேண்டும். மோசேயின் சட்டத்தை அறிவிப்போர் முற்காலத்திலிருந்தே எல்லா நகரங்களிலும் இருக்கின்றனர்; அதனை ஓய்வுநாள்தோறும் தொழுகைக் கூடங்களில் வாசித்தும் வருகின்றனர்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்
திபா 96: 1-2. 2-3. 10
பல்லவி: ஆண்டவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.
2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
அவர் பெயரை வாழ்த்துங்கள். -பல்லவி

2b அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;
அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி

10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: `ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;
பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது;
அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி சாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

யோவான் 15:9-11

பாஸ்கா காலம்-5 வாரம் வியாழன்


நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-11

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 15: 9 – 11
நிலைத்த வாழ்வு

எல்லோருமே நிலைத்த வாழ்வு வாழ ஆவல் கொள்கின்றோம். அது வயதானவர்களாக இருக்கலாம் அல்லது உடல் முழுவதும் நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். இந்த நிலைத்த வாழ்வு வாழ சிலர் உடல் பயிற்சியில் ஈடுபடுவர். சிலர் அதற்கான உணவு ஆதாரங்களை தேடிக் கொள்வார்கள். முந்தைய காலங்களில் காட்டுத்தேன், கிழங்கு இவற்றை உண்டு நம் முன்னோர்கள் நிலைத்த வாழ்வு வாழ்ந்துள்ளார்கள் என்று தமிழ் பண்பாடு எடுத்துக் கூறுகின்றது.

ஆன்மீக வாழ்வில் நிலைத்த வாழ்வு வாழ வேண்டுமென்றால் நாம் கடவுளின் அன்பில் நிலைத்திருக்க வேண்டும் என்று இன்றைய வாசகங்கள் கற்றுக் கொடுக்கின்றன. விவிலியம் முழுவதுமே இந்த அன்பில் தான் தாங்கி இருக்கின்றன. மெசியாவின் வருகை இந்த அன்பை நிலைநிறுத்தக் கூடியதாக தான் இருக்கின்றன. அதனைச் சுட்டிக்காட்டத்தான் இயேசு, என் அன்பில் நிலைத்திருங்கள் என்கிறார். விவிலிய பேராசிரியர்கள் கூறுவார்கள்: இயேசுவை பலதரப்பட்ட மக்கள் பின்பற்றினார்கள். சிலர் வயிற்றுப் பசிக்காக, சிலர் வாழ்க்கை பசிக்காக. இவர்கள் அவர் செல்கின்ற இடமெல்லாம் பின்பற்றினார்கள். காரணம் ஏதாவது உண்ண கொடுப்பார் என்று. அவர்களின் தேடலை அறிந்த இயேசு என் தேவைக்காக மட்டுமல்ல, என் அன்பில் நிலைத்திருங்கள். எல்லாமே சோ்த்துக் கொடுக்கப்படும் என்ற கண்ணோடத்தில் தான், என் அன்பில் நிலைத்திருங்கள் என்று கூறுகிறார்.

நாம் எவற்றில் நிலைத்திருக்க விரும்புகின்றோம்? கடவுளின் அன்பிலா அல்லது நிலபுலன்களிலா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

திருப்பாடல் 96: 1 – 2a, 2b – 3, 10
”ஆண்டவர் தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்”

இறைவன் இஸ்ரயேல் மக்களை அற்புதமாக வழிநடத்தியிருக்கிறார். இறைவனின் வழிகாட்டுதலை, அற்புதமான முறையில், அதிசயமான முறையில் அவர்களை வழிநடத்தியதை, இஸ்ரயேல் மக்கள் மட்டும் தான் அறிவார்கள். இன்றைய திருப்பாடல், இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு செய்திருக்கிற சிறப்பான செயலை அறிவிப்பதாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்களுக்கு பலவிதமான செயல்களைச் செய்திருந்தாலும், இந்த திருப்பாடல் குறிப்பிட்ட நிகழ்ச்சியை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடலாக விளங்குகிறது.

1குறிப்பேடு புத்தகத்தில்ன 13 வது அதிகாரத்திலிருந்து நாம் வாசிக்கிறபோது, இத்தியரான ஓபேது, ஏதோம் இல்லத்தில் கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்ததை நாம் வாசிக்கலாம். அந்த பேழை அங்கே இருந்தவரை, கடவுள் அவரது குடும்பத்தை அற்புதமாக ஆசீர்வதித்தார் என்று விவிலியம் சொல்கிறது. அந்த பேழையை மீண்டுமாக கடவுளின் இல்லத்திற்கு கொண்டு வருகிறபோது, இந்த பாடல் பாடப்பட்டதாக நாம் சொல்லலாம். இதில் தான், கடவுள் எப்படியெல்லாம், படைபலம் பொருந்திய பெலிஸ்தியர்களையும், மற்ற நாட்டினரையும் தாவீதின் வழியாக கடவுள் தோற்கடித்தார் என்பது நமக்குச் சொல்லப்பட்டுள்ளது. கடவுள் செய்த இந்த வல்ல செயல்கள் தான், இந்த திருப்பாடல் நமக்குச் சொல்லக்கூடிய செய்தியாக இருக்கிறது.

நம்முடைய் வாழ்வில் நாம் எப்போதும், கடவுள் நமக்குச் செய்திருக்கிற வல்ல செயல்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி நினைத்துப்பார்ப்பது, அவர் எந்த அளவுக்கு நம்மை அன்பு செய்கிறார் என்பதை நமக்கு உணர்த்துவதாகவும், இன்னும் வல்லமையோடு மகிழ்ச்சியோடு வாழ்வதற்கும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

இயேசு காட்டும் அன்பு

பொதுவாக, “நான் உன்னை அன்பு செய்கிறேன்”, ”நான் உன்னை காதலிக்கிறேன்” ”நான் உன்னை நேசிக்கிறேன்” போன்ற வார்த்தைகள், மக்கள் மத்தியில் அடிக்கடி உச்சரிக்கப்படுகிற வார்த்தைகள். இங்கு சொல்லப்படக்கூடிய கருத்து, அல்லது வெளிப்படக்கூடிய கருத்து ”அன்பு” என்பதாகும். ஒரு மனிதன், சக மனிதரிடம் தான் அவர் மீது வைத்திருக்கக்கூடிய அன்பை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இந்த வார்த்தையை ஒருவர் எல்லாரிடமும் பயன்படுத்த மாட்டார். வாழ்வில் ஒரு நபரிடம், தன் வாழ்வை பகிர்ந்து கொள்ள நினைக்கும் ஒருவரிடம் மட்டுமே இந்த வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்வார். அவரது வாழ்க்கையில் பலரை அன்பு செய்தாலும், ஒரு குறிப்பிட்ட நபரிடம் அவர் காட்டும் அன்பு, வேறு எங்கும் அவர் கொடுக்க முடியாத, கொடுக்க விரும்பாத அன்பு.

இன்றைய நற்செய்தியில் கடவுள் நம்மீது வைத்திருக்கும் அளவுகடந்த அன்பு வெளிப்படுகிறது. அந்த அன்பு எல்லாருக்கும் காட்டப்படுகிறது. ஆனால், அந்த அன்பு குறிப்பிட்ட நபரிடம் காட்டப்படும் அன்பிற்கு இணையானது. கடவுள் நம் ஒவ்வொருவரையும் மேலே குறிப்பிட்டவாறு அன்பு செய்கிறார். என்னை தனிப்பட்ட முறையில் அதிகமாக அன்பு செய்கிறார். அதேபோல, என்னோடு வாழக்கூடிய என் சகோதர, சகோதரிகளையும் அன்பு செய்கிறார். அவர்களையும் முழுமையாக அன்பு செய்கிறார். அந்த அன்பை நாம் உள்வாங்கிக்கொண்டு, அதன் மகிழ்ச்சியில் நிறைவுகொள்ள இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார்.

இயேசுவை நாம் எந்த அளவுக்கு அன்பு செய்கிறோம்? ஒருவர் நம்மை முழுமையாக, நிறைவாக அன்பு செய்தால், அவருக்கு அதே அன்பை நாமும் காட்ட, நமக்கு கடமை உண்டு. ஆனால், இயேசு நம்முடைய நிறைகுறைகள பொருட்படுத்தாமல் நம்மை முழுமையாக அன்பு செய்கிறார். அப்படியென்றால், நாம் எந்த அளவுக்கு அன்பு செய்ய வேண்டும்? அதற்கு நான் தயாரா? தகுதியா? சிந்தித்துப்பார்ப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

மனிதரின் அழைப்பு

கடவுள் முன்னிலையில் நிற்பதற்கே நாம் தகுதியற்றவர்கள். அப்படியிருக்கக்கூடிய நமக்கு கடவுள் தகுதியைக்கொடுத்து, நம்மை தேர்ந்தெடுத்திருக்கிறார். எதற்காக நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்? நம்மைத் தேர்ந்தெடுத்தத்ற்கு ஏதாவது காரணம் உண்டா? நிச்சயம் உண்டு. கடவுள் நம்மை மகிழ்ச்சியாக இருப்பதற்காகத் தேர்ந்தெடுத்தார். கிறிஸ்தவ அழைப்பு என்பது மகிழ்ச்சியான வாழ்வுக்கான ஓர் அழைப்பு. மகிழ்ச்சி என்பது இந்த உலகம் தருகின்ற மகிழ்ச்சி அல்ல. மாறாக, கடவுள் கொடுக்கும் மகிழ்ச்சி.

கடவுள் நம்மை ஒருவர் மற்றவரை அன்பு செய்வதற்காகவும் அழைத்திருக்கிறார். தந்தை மகனை அன்பு செய்வது போல, மகன் தந்தையை அன்பு செய்வது போல நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டாம். நாம் அனைவரும் இந்த உலகத்திற்கு அன்பு செய்வதற்காகவே வந்திருக்கிறோம். மற்றவர்களோடு போட்டியிடுவதற்கு அல்ல, வாக்குவாதத்தில் ஈடுபட அல்ல, மாறாக, நாம் மற்றவர்களை அன்பு செய்வதற்காக பிறந்தவர்கள் என்பதை வாழ்ந்து காட்டுவதற்காகத்தான் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அதை நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல், வாழ்வை அன்புமயமாக வாழ வேண்டும். அத்தகைய வாழ்வுக்கு இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தின் மூலமாக நம்மை அழைக்கிறார்.

இயேசுவின் இந்த அழைப்பை ஏற்று நமது வாழ்வில் எப்போதும் மகிழச்சியாக இருக்க நாம் முயற்சி எடுப்போம். எந்த அளவுக்கு என்றால், யாக்கோபு தனது திருமுகத்தில் சொல்கிறார்: பலவகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதைக்கருத்தில் கொண்டிருங்கள்” (1: 2). நாம் மகிழ்ச்சியாக இருக்கிறபோது, நிச்சயம் மற்றவர்களை நாம் அன்பு செய்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

 

புனித தமியான் ஜோசப்

திப 15: 7-21
யோவா 15: 9-11
இயேசு தரும் மகிழ்ச்சி

“என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்”“ என்னும் இயேசுவின் சொற்களை இன்று மனத்தில் இருத்துவோம்.

  1. நாம் மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்பதே இறைவனின் விருப்பம், இயேசுவின் விருப்பம் என்பதே ஒரு வியப்பான நற்செய்தி. இதனை நாம் நம்பவேண்டும், மனத்தில் இருத்த வேண்டும். நாம் துன்புற வேண்டும், துயரில் வாடவேண்டும் என்பது இயேசுவின் விருப்பம் அல்ல.
  1. மகிழ்ச்சியில் ஒரு படிநிலை இருக்கிறது என்பதுவும் இயேசுவின் போதனையே. சில மகிழ்ச்சிகள் நிறைவானவை, சில மகிழ்ச்சிகள் நிறைவற்றவை என்பது தெளிவாகிறது. இயேசு தரும் மகிழ்ச்சி நம்மை நிறைவுபடுத்துகிறது.
  1. “இவற்றை உங்களிடம் சொன்னேன்”“ என்பதிலிருந்து, இயேசுவின் சொற்கள் மகிழ்ச்சியைத் தருகின்றன என உணர்கிறோம். இறைவார்த்தை நம்மைத் தூய்மைப்படுத்துவதோடு, மகிழ்ச்சியையும் தருகின்றது. “உமது திருச்சட்டத்தில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்”“ (திபா 119: 174) என்று இறைவார்த்தையைப் பற்றித் திருப்பாடல் ஆசிரியர் உரைத்துள்ளார். எனவே, இறைவார்த்தையை அடிக்கடி வாசிப்போம். நிறைமகிழ்வடைவோம்.

மன்றாடுவோம்: நிறைமகிழ்வின் ஊற்றான இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உலகம் தரமுடியாத நிறைவான மகிழ்வை எங்கள் உள்ளங்களில் பொழிவீராக.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

மகிழ்ச்சி நிறைவுபெற

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

மானிடர் வாழ்வதன் நோக்கமே மகிழ்ச்சிதான். ஆனால், அந்த மகிழ்ச்சியிலும் சில வகைகள் இருக்கின்றனவே. சில நிலையற்றவை, சில நீடிப்பவை. சில பிறருக்குத் துன்பம் அளிப்பவை. சில அனைவருக்கும் மகிழ்ச்சி தருபவை. இந்தப் பலவகையான மகிழச்சிகளுள் சிறந்தவற்றை, நிறைவானவற்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இறைமொழி நமக்குக் கற்றுத் தருகிறது.

ஆண்டவர் இயேசுவின் சொற்கள் நமக்கு அந்த நிறைவான மகிழ்ச்சியைத் தரும் ஆற்றல் உடையவை என்று அறிவிக்கிறார் ஆண்டவர். #8220;என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிறைவுபெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்” என்கிறார் ஆண்டவர். நமக்குள் உலகமும், உலகப் பொருள்களும் தருகிற நிலையற்ற மகிழ்ச்சி இருக்காமல், இயேசுவின் மகிழ்ச்சி இருக்க வேண்டும். அவரது வார்த்தைகளின்படி வாழ்ந்தால், நமக்கு அந்த மகிழ்ச்சி கிடைக்கும், அதுவும் நிறைவாகக் கிடைக்கும். எனவே, நிறைவான அந்த மகிழ்ச்சிக்காக இயேசுவிடம் மன்றாடுவோம்.

மன்றாடுவோம்: மகிழ்ச்சியின் ஊற்றே இறைவா, உம்மைப் போற்றுகிறோம்.  செல்வமோ, உலக இன்பங்களோ தரும் மகிழ்ச்சி நேர்மையானதோ, நிலையானதோ அல்ல. நீர் தருகின்ற நிறைவான மகிழ்ச்சியே மேலானது. அந்த மகிழ்ச்சியை இந்த வேளையில் எனக்குத் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

----------------------

 

''இயேசு, 'இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன்...
உங்களை நான் நண்பர்கள் என்றேன்' என்றார்'' (யோவான் 15:15)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு கலிலேயாவில் இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்தபோது பலரைத் தம் சீடராகச் சேர்த்துக்கொண்டார். அவரே விரும்பி தம் சீடரை அழைத்தார். அவர்கள் தம் பணியைத் தொடர வேண்டும் எனவும் இயேசு பணித்தார். எனவே, ஒருவிதத்தில் இயேசுவின் சீடர்கள் எல்லாரும் பணியாளர்களே. ஆனால் இயேசு தம் சீடர்களைப் பணியாளர் என அழைக்காமல் ''நண்பர்கள்'' என அழைக்கிறார். இதில் ஆழ்ந்த பொருள் அடங்கியிருக்கிறது. அதாவது, இயேசுவை அவருடைய சீடர்கள் ஒரு சிறந்த ஆசிரியராகப் பார்த்தார்கள்; ஓர் இறைவாக்கினராகக் கருதினார்கள்; அவருடைய தலைமையை ஏற்றுக்கொண்டார்கள். அக்காலத்தில் யூத சமயத்தில் வழக்கிலிருந்தவாறே இயேசுவைப் பற்றிச் சீடர்கள் சிந்தித்தார்கள். ஆனால் இயேசு அவர்களுடைய சிந்தனையைப் படிப்படியாக மாற்றினார். அவர்கள் இயேசுவை மெசியாவாகப் பார்த்தபோது இயேசு அவர்களுக்குத் தாம் ஒரு துன்புறும் மெசியாவாக வந்ததாக விளக்கினார். இவ்வுலக அதிகாரத்தோடும் ஆட்சித் தோரணையோடும் அவர் வரவில்லை. மாறாக, அவருடைய அதிகாரம் பணிசெய்வதில் அடங்கியது என இயேசு எடுத்துரைத்தார்.

-- இவ்வாறு தம்மையே பணியாளராகக் கண்ட இயேசு தம் சீடர்களைத் தம் ''நண்பர்கள்'' என அழைத்தது ஏன்? இயேசுவுக்கும் அவர்தம் சீடர்களுக்கும் இடையே நிலவுகின்ற உறவு குரு-சீடன் என்னும் உறவைவிட ஆழமானது. அந்த உறவு அன்பின் அடிப்படையில் உருவாகும் ஒன்று. நண்பர்களுக்கிடையே நெருக்கமான உறவு நிலவும். ஒருவர் மற்றவருடைய சிந்தனைகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்வர்; இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்பர். தம்மிடம் இருப்பதை மகிழ்வோடு பகிர்ந்துகொள்வர். இந்த உறவைத்தான் இயேசு தம் சீடர்களுக்கு வாக்களிக்கிறார். சீடர்கள் இயேசுவின் அன்பை அருகிலிருந்து துய்த்து உணர முடிந்தது. அவர்கள் எப்போதுமே இயேசுவுக்குப் பிரமாணிக்கமாக இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இயேசுவைப் பொறுத்தமட்டில் அவருடைய அன்பு ஒருநாளுமே குறைபடவில்லை. மன்னித்து ஏற்கும் பண்பும் நட்பின் அடையாளம்தானே. இயேசு தம் சீடர்கள் தவறியபோதெல்லாம் அவர்களை மீண்டும் அரவணைத்திட முன்வந்தார். ஆக, நமக்கும் இயேசு உண்மையான அன்பராக, நண்பராக இருக்கவே விரும்புகிறார். நாம் அவருடைய நட்பை ஒரு கொடையாக ஏற்றிட வேண்டும். அவருடைய அன்பைப் பெற நாம் தகுதியவற்றவர்களாக இருந்தாலும் அந்த அன்பு நம்மைத் தேடி வந்துகொண்டே இருக்கும். தேடி வரும் கடவுளை நாம் நாடிச் செல்லும்போது அங்கே நட்பும் அன்பும் உருவாகும். நம் அன்புக் கடவுளின் பாசக் கயிற்றினால் நாம் பிணைக்கப்படுவோம். அவருடைய பற்றினை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்வோம். இயேசுவின் நட்பைத் துய்க்கின்ற நாம் அந்த நட்புறவைப் பிறரோடும் பகிர்ந்திட முன்வருவோம்.

மன்றாட்டு
இறைவா, உம் அன்பில் நாங்கள் நிலைத்திருக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

சிறந்த அன்பு

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இன்றைய உலகில் உறவின் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது நட்பு. ஒரு நல்ல நண்பன் நூறு உறவிருக்குச் சமம். நண்பர்கள், தோழர்கள் இவர்கள்தான் ஒவ்வொருடைய வாழ்க்கையையும் செதுக்கும் சிற்பிகள். ரேடியோ நிகழ்ச்சியில் ஒருவன்: காதல், நட்பு விளக்கம் தருக. மற்றவன்: காதல் ளை pழளைழn.நட்பு ளை அநனiஉiநெ. அதேவேளையில் உங்கள் வாழ்க்கையை உடைத்து உருக்குலைப்பதும் அவர்களே. கவிஞன் ஒருவன் இவ்வாறு செபிக்கிறான்: "இறiவா! என் பகைவனை நான் பார்த்துக்கொள்கிறேன்.நண்பனிடமிருந்து என்னை நீ காப்பாற்று" என்று. நட்பு, நண்பர்கள் அவ்வளவு கடினமான ஒன்று.

நட்பின் சிறப்பை உணர்ந்த இயேசு, "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" என்றார்.தன்னைக் காட்டிக்கொடுத்தவரையும் 'தோழா, எதற்காக வந்தாய்?' என்ற உயிரை உறைய வைத்த வார்த்தைகள் பகைவனையும் பதற வைத்துவிடும். இவ்வாறு இயேசு, பகையைக்கூட நட்பாக மாற்றவேண்டும். இருக்கின்ற நட்பை, உயிரைக்கொடுத்தேனும்; வளர்க்க வேண்டும் என்பதைத் தெழிவுபடுத்துகிறார்.

உயிரை வாங்குகின்ற நட்பு பல வடிவங்களில் மாறுவேடங்களில் அலைவதைப் பார்க்கிறோம்.சுயநலம் என்ற போர்வையில், பணம் பதவி ஆசையில் காட்டிக்கொடுக்கும் துரோகங்கள் நட்பில் நயவஞ்சகமாக நடைபெறுவதை முன்னுணர்ந்தே இயேசு இதைச் சொன்னார். நட்பை வளர்ப்போம். உயிரைக்கொடுத்தும் நண்பனைக் காப்போம்.தலை போனாலும் ஒருபோதும் பகைவனைக்கூட காட்டிக்கொடுக்க வேண்டாம். அது அவனைத் திருந்தி வாழ வைக்கும். நட்பை வளர்க்கும். நம்மை வாழ வைக்கும்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்