வெள்ளி

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 22-31

அந்நாள்களில் திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள். அக்கடிதத்தில், ``திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம். எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம். இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள். இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம். சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள்'' என்று எழுதியிருந்தார்கள். யூதாவும் சீலாவும் விடை பெற்று அந்தியோக்கியா வந்தனர். அங்கு மக்களைக் கூட்டிக் கடிதத்தைக் கொடுத்தனர். அதை வாசித்ததும் அவர்கள் ஊக்கமடைந்து மகிழ்ச்சியுற்றார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 57: 7-8. 9-11

பல்லவி: என் தலைவரே! மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்.

7 என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; நான் பாடுவேன்; உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
8 என் நெஞ்சே, விழித்தெழு! வீணையே, யாழே, விழித்தெழுங்கள்; வைகறையை நான் விழித்தெழச் செய்வேன். -பல்லவி

9 என் தலைவரே! மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்; எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
10 ஆண்டவரே! உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது! உமது வாக்குப்பிறழாமை முகில்களைத் தொடுகின்றது!
11 கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக; பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில், என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

யோவான் 15:12-17

பாஸ்கா காலம்-5 வாரம் வெள்ளி

நற்செய்தி வாசகம்
நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.


+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 12-17

"நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

-------------------------

யோவான் 15: 12 – 17
வாக்குறுதிகள்

இன்பத்திலும், துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாயிருந்து அல்லது என் தல ஆயருக்கு நான் என் கீழ்ப்படிதலையும் வணக்கத்தையும் வாக்களிக்கிறேன் என்று திருமணம் மற்றும் அருட்பணி நிலைக்கு உயர்த்தப்படும் போது ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கும் வாக்குறுதி வரை, நாம் வாக்குறுதிகள் கொடுத்துக் கொண்டெ இருக்கிறோம். இன்னொரு பக்கம் தோ்தல் வாக்குறுதிகள், விளம்பரங்களின் வாக்குறுதிகள், நிறுவனங்களின் வாக்குறுதிகள் என நம்மை வாக்குறுதிகள் சூழ்ந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால் கடவுள் கொடுக்கக்கூடிய வாக்குறுதி சற்று வித்தியாசமான வாக்குறுதியாக இருக்கின்றது. எவ்வாறெனில் அன்பின் வழி மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஏனென்றால் பரிசேயர்கள் மத்தியில் ஒரு எண்ணம் இருந்தது. தங்களை படித்த மேதையாக காட்டிக் கொள்வதோடல்லாமல் மற்ற மனிதர்களை ஒதுக்கப்பட்டவர்களாக கருதினார்கள். அந்த கண்ணோட்டம் தான் இயேசுவை பார்த்துக்கூட நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ? என்ற கேள்வியை வைத்தார்கள். மோசேயின் சட்ட திட்டங்களை வாழ்வின் இரு கண்களாக வைத்துக்கொண்டு செயல்பட்டார்கள். ஆனால் எத்தகைய சூழலுக்காக மோசே அவ்வாறு கூறினார் என்பதனை தங்கள் வாழ்வில் அறிந்து கொள்ளவில்லை. அது தான் அவர்களின் வளர்ச்சிக்கும், ஆசீர்வாதத்திற்கும் தடையாக இருந்தது. அதனை அறிந்து தான் சீடர்களை அன்பில் நிலைத்திருக்க அழைப்பது போன்று அவர்களுக்கும் பாடம் புகட்டுகின்றார். அன்பால் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள், அப்போது தான் நான் தரும் மகிழ்ச்சி உங்களுள் இருக்கும் என்ற வாக்குறுதியை ஆணித்தரமாக கூறுகின்றார்.

நம் வாழ்வு எதன் மீது அமைக்கப்பட்டுள்ளது? அன்பின் மீதா? அல்லது பணத்தின் மீதா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

திருத்தூதர் பணி 15: 22 – 31
உயிர்ப்பு தரும் அர்ப்பணம்

இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்ததில், தூய பவுலடியார் எந்த அளவுக்கு முன்மதியோடும், அர்ப்பண உணர்வோடும் செயல்பட்டார் என்பதை, இன்றைய வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. ஒரு சிலர் மக்களை குழப்புகிற நேரத்தில், சரியானவிதத்தில் அதனைக் கவனித்து, அவர்களை தெளிவுபடுத்துவதற்காக, சரியான ஆட்களை அனுப்புகிறார். அதுமட்டுமல்லாது, தன்னுடைய கடிதத்தின் மூலமாகவும் சிறப்பாக அவர்களை வழிநடத்துகிறார். அவருடைய கடிதத்தை வாசித்துக் கேட்டவுடன், மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்களது விசுவாசம் உறுதிப்படுத்தப்படுகிறது.

இறைமக்களை விசுவாசத்தில் கட்டியெழுப்ப, எவ்வளவுக்கு சாதாரண காரியங்களில் எல்லாம் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பது, இங்கே வெளிப்படுத்தப்படுகிறது. கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி அறிவிப்பதில் தன்னுடைய நேரம் முழுவதையும் செலவிட்டார். எந்த அளவுக்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக கிளம்பினாரோ, அதனை விட பல மடங்கு கிறிஸ்துவுக்காக உழைத்தார். பவுலின் இத்தகைய முழுமையான மாற்றத்திற்கான காரணத்தைத் தேடுகிறபோது, உயிர்ப்பு தான் நம்முடைய நினைவுக்கு வருகிறது. உயிர்த்த இயேசுவின் அனுபவம் அந்த அளவுக்கு, பவுலடியாருக்கு அர்ப்பண உணர்வைக் கொடுத்தது.

பவுலடியார் பெற்றுக்கொண்ட அந்த அர்ப்பண உணர்வு நம்முடைய வாழ்க்கையிலும் நமக்கு இருக்க வேண்டும். உயிர்ப்பு அனுபவம் நமதாக வேண்டும். இன்றைக்கு இறையனுபவத்தைப் பெறுவதற்காக எத்தனையோ மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இறையனுபவத்தைப் பெற வேண்டுமென்றால் நாம் முதலில் அந்த இறையனுபவத்தைப் பெற வேண்டும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

திருப்பாடல் 57: 7 – 8, 9 – 11
”என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது”

இந்த திருப்பாடல் ஒரு வித்தியாசியமான திருப்பாடல். தாவீது அரசரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நெருக்கடி. ஒரு கலக்கமான நேரம். அது மட்டுமல்ல சோதனையான நேரமும் கூட. கலக்கத்தையும், சோதனையையும் ஒரே நேரத்தில் அவர் வெற்றி கொள்ள வேண்டும். அந்த வேதனையான நேரத்தில் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு, அவரது உதவிக்காக இந்த பாடலைப் பாடுகிறார். கடவுள் மிக விரைந்து தனக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற வேண்டுதல் தான், இந்த திருப்பாடல்.

தாவீது அரசர் உண்மையிலேயே கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதற்கு பலவிதமான எடுத்துக்காட்டுக்களை நாம் பார்க்கலாம். தாவீது அரசர் மிகப்பெரிய பலவீனர்தான். வெகு எளிதாக தவறு செய்யக்கூடியவர் தான். கடவுள் அவருக்குச் செய்திருக்கிற செயல்களையெல்லாம், மிக விரைவாக மறந்து விடக்கூடியவர் தான். ஆனாலும், எல்லாவிதமான சோதனை, இக்கட்டுக்கள் நிறைந்த தருணங்களில் அவர், கடவுளின் உதவியையும், ஆலோசனையையும் எதிர்பார்க்கிறார். தான் எவ்வளவு தான் தவறுகள் செய்தாலும், நிச்சயம் கடவுள் தனக்கு உதவி செய்வார் என்கிற ஆழமான நம்பிக்கை தாவீது அரசரிடத்தில் இருந்தது மிக்ப்பெரிய ஆச்சரியம். அது தாவீது அரசரின் தனிப்பெரும் பண்பு என்று கூடச் சொல்லலாம். அந்த நம்பிக்கையும், விசுவாசமும் இன்றைய பாடலில் வெளிப்படுகிறது.

நமது வாழ்வின் சோதனை, நெருக்கடி, இக்கட்டான வேளைகளில் நாம் தாவீது அரசரிடம் கற்றுக்கொள்ளக் கூடிய பாடங்கள் அதிகமாக இருக்கிறது. எந்த சூழ்நிலையிலும், நாம் எவ்வளவு தான் பலவீனர்கள், பாவிகள் என்றாலும், கடவுள் நம்மை கரம் தூக்கி விட தயாராக இருக்கிறார். அந்த கடவுளிடம் நாம் வைத்திருக்கிற விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------

வாழ்வு ஏற்படுத்தும் தாக்கம்

ஒரு மரத்தை நாம் நடுகிறோம்? எதற்காக? அதிலிருந்து பயன் பெறுவதற்காக, பலன் பெறுவதற்காக. எதை நாம் செய்தாலும், அதிலிருந்து பலன் எதிர்பார்க்கிறோம். இந்த உதாரணத்தைத்தான் நமது வாழ்விற்கு ஒப்பிட்டு இயேசு இன்றைய நற்செய்தியில் பேசுகிறார்? ”நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்”. இந்த இறைவார்த்தையில் இரண்டு அர்த்தங்களை நாம் பார்க்கலாம். 1. கனி தர வேண்டும். 2. அந்த கனி நிலைத்திருக்க வேண்டும்.

சீடர்களை இயேசு அழைத்தது இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான். சீடர்கள் அனைவரும் பலன் தர வேண்டும். சீடர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு பயன் உள்ளதாகவும், பலன் உள்ளதாகவும் இருக்க வேண்டும். அதாவது சீடர்கள் நற்செய்தி அறிவிப்பதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நற்செய்தி மக்களுக்கு போய்ச் சேர வேண்டும். அந்த நற்செய்தி மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதேபோல, போதிக்கக்கூடிய சீடர்களின் வாழ்வும் மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த இரண்டு பலன்களையும் இயேசு சீடர்களிடம் எதிர்பார்க்கிறார்.

திருமுழுக்கு பெற்றிருக்கிற அனைவருமே நற்செய்தி அறிவிக்க கடமைப்பட்டவர்கள். அவர்கள் அனைவருடைய வாழ்வும் இந்த இரண்டு பலன்களை உலகிற்கு தர வேண்டும். அவர்கள் நற்செய்தி அறிவிக்க வேண்டும். அவர்களின் வாழ்வும் மற்றவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எனது வாழ்வு இந்த இரண்டு பலன்களையும் தருவதாக இருக்கிறதா? சிந்திப்போம், செயல்படுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

இயேசுவின் நண்பர்கள்

இயேசு நம்மை நண்பர்களாக இருக்க அழைக்கிறார். தனது சீடர்களைப்பார்த்து, ”இனி உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். உங்களை நண்பர்கள் என்றேன்”. பணியாளர்கள் என்கிற வார்த்தைக்கும், நண்பர்கள் என்கிற வார்த்தைக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. பணியாளர் என்பவரை அடிமைநிலைக்கு ஒப்பிடலாம். பழைய ஏற்பாட்டில் கடவுளின் பணியாளர்களாக இருந்தவர்கள், தங்களை கடவுளின் அடிமைகள் என்று சொல்வதில் மகிழ்ச்சி கொண்டனர்.

இணைச்சட்டம் 34: 5 ல் பார்க்கிறோம்: ”ஆண்டவர் கூறியபடியே, அவர்தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார்”. யோசுவா 24: 29 ”நூனின் மகனும் ஆண்டவரின் ஊழியருமாகிய யோசுவா இறந்தார்”. திருப்பாடல் 89: 20 ”என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்”. புதிய ஏற்பாட்டில் அன்னை மரியாளும் தன்னை இறைவனின் அடிமையாகச்சொல்வதில் பெருமை கொள்கிறார். லூக்கா 1: 38 ”நான் ஆண்டவரின் அடிமை”. பவுலடியாரும் தான், இறைவனின் பணியாளன் என்பதில் பெருமைகொள்கிறார், ”கடவுளின் பணியாளனும் இயேசுகிறிஸ்துவின் திருத்தூதனுமாகிய பவுல் எழுதுவது”. ஆக, இயேசுவுக்கு முன்னால் பணியாளன் என்றிருந்த நிலையை இயேசு மாற்றி கடவுளோடு இன்னும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்துகிறார். எனவே, சீடர்களை ”நண்பர்கள்” என்று அழைக்கிறார்.

கடவுள் நம்மோடு நெருங்கி வருவதற்கு, நம்மை தனது அன்புப்பிள்ளையாக ஏற்று வாழ்வதற்கு அழைப்பு விடுக்கிறார். அந்த அழைப்பினை ஏற்று நாம் அனைவரும், கடவுளோடு நெருங்கி வருவோம். நாம் தகுதியற்றவர்கள் என்றாலும், நம்மைத்தகுதியுள்ளவராக்கும் கடவுளின் அன்பில் நாம் இணைவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

 

திப 15: 22-31
யோவா 15: 12-17
“உங்களை நண்பர்கள் என்றேன்”

நட்பைப் பற்றியும், நண்பர்கள் பற்றியும் எந்த இலக்கியமும், எந்த மறைநூலும் சொல்லாத உயர்வான இரண்டு கருத்துகளை இயேசு கூறியுள்ளார் என்பது நமக்குப் பெருமிதம் தரும் செய்தி.

  1. “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை”“ என்னும் கருத்து எந்த இலக்கியத்திலும் இல்லை. சிறந்த அன்பு உயிரைத் தியாகம் செய்வது, அதுவும் இரத்த உறவினர்களுக்காக அல்ல, நட்பு உறவிலான நண்பர்களுக்கு என்பது நட்பின் மேன்மையை அழகாக எடுத்துரைக்கிறது. நட்பின் பெருமையை இதைவிட உயர்வாக யாராவது பேசியிருக்கிறார்களா?
  1. இறைவன் தம் படைப்புகளைத் தமக்குச் சமமானவர்களாக்குவது அரிதான ஒன்று. ஆனால், இயேசு தமது சீடர்களை நண்பர்கள் என்று அழைத்தார். அதன் வழியாக நம் அனைவரையுமே நண்பர்கள் ஆக்கிக்கொண்டார். இயேசுவால் “நண்பர்கள்’“ என அழைக்கப்படுவதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த அழைப்புக்கேற்றவாறு, இயேசுவின் நண்பர்களாய் வாழ முயற்சி எடுப்போம்.

மன்றாடுவோம்: எங்களுக்காக உமது உயிரையே கொடுத்து, எங்களை நண்பர்களாக்கிக் கொண்ட இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மால் நண்பர்கள் என அழைக்கப்படும் நாங்கள், உமது கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் அருளை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

இயேசுவின் நண்பர்களாய்ரூhநடடip; !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

#8220;நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்” என்னும் இயேசுவின் வார்த்தைகளை இன்று தியானிப்போம். பேறுகளிலெல்லாம் மிகப் பெரிய பேறு இயேசுவின் நண்பர்களாய் இருப்பதுதான். இயேசு வாழ்ந்த காலத்தில் லாசர், மரியா, மார்த்தா போன்றவர்களுக்கு அந்தப் பேறு கிட்டியது. அவர்கள் இயேசுவின் பாதத்தில் அமர்ந்து, அவர் சொல்வதைக் கேட்கவும், அவரோடு உறவாடவும், அவரது வழிகாட்டுதலின்படி வாழவும் பேறு பெற்றிருந்தனர். அதே பேற்றினை இயேசு இன்றும் நமக்கு வழங்க முன்வருகிறார். அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அனைவருமே அவரது நண்பர்கள்தான் என்னும் அறிவிப்பு நமக்கு ஓர் அழைப்பாக வருகிறது. நாமும் அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்போம். இயேசுவின் நண்பர்களாக வாழ்வோம்.

மன்றாடுவோம்: நல்ல நண்பரான இயேசுவே, இறைவா, உம்மைப் போற்றுகிறோம்.  எங்களை உமது நண்பர்கள் என்று அழைத்து, மாண்பு தந்தமைக்காக உமக்கு நன்றி. உமது கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் அருளைத் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

----------------------

 

''இயேசு சீடர்களை நோக்கி, 'நான் துணையாளரை உங்களிடம் அனுப்புவேன்.
அவர் வந்து, பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள்
தவறானவை என எடுத்துக்காட்டுவார்' என்றார்'' (யோவான் 16:7-8)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- உயிர்த்தெழுந்த இயேசு தூய ஆவியை நமக்குத் துணையாளராக அனுப்புகிறார். நமக்குத் துணை செய்கின்ற ஆவியார் நம்மோடு தங்கியிருந்து நம்மை உறுதிப்படுத்துகிறார். இயேசு நமக்குக் காட்டிய வழியில் நாம் தவறாது நடந்து செல்ல நமக்குத் தூய ஆவியின் துணை எப்போதும் இருக்கும். தூய ஆவியின் செயல்களாக இயேசு மூன்றினைக் குறிப்பிடுகிறார்: ''அவர் வந்து, பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றிய'' உண்மையை நமக்கு உணர்த்துவார் என்பதன் பொருள் என்ன? (காண்க: யோவா 15:8). இங்கே நீதி மன்றக் காட்சியை நாம் காணலாம். நீதி மன்றத்தில் குற்றம் என்னவென்பது சுட்டிக் காட்டப்படும்; அது பற்றி இயேசுவை எதிர்த்துநின்ற ''உலகம்'' ஒரு பெரிய தவறிழைத்தது. அதாவது, கடவுளால் அனுப்பப்பட்டவரை அது ஏற்க மறுத்தது. இதுவே பெரிய பாவம் என அமைந்தது. இதைத் தூய ஆவி உணர்த்துவார். இரண்டாவதாக, தூய ஆவி கடவுளின் ''நீதி''யை நமக்கு வெளிப்படுத்துவார். அதாவது, இந்த ''உலகம்'' கண்டனம் செய்த இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து மாட்சிப்படுத்தியதே கடவுளின் ''நீதி''. இறுதியாக, தூய ஆவியார் ''தீர்ப்பு'' பற்றிய உண்மையை உணர்த்துவார். அதாவது, இயேசு வழியாகத் தம் அன்பை நமக்கு வெளிப்படுத்திய கடவுளிடம் திட்டத்தை எதிர்க்கும் சக்திகள் ஒருநாள் முறியடிக்கப்படும் என்பதையும் நமக்குத் தூய ஆவி வெளிப்படுத்துவார்.

-- நம் இதயம் என்னும் நீதி மன்றத்திலும் சரி, உலகம் என்னும் நீதி மன்றத்திலும் சரி, தூய ஆவியின் முப்பெரும் செயல் தொடர்கிறது. இயேசுவை நம்பி அவர் காட்டிய வழியில் நடப்போர் கடவுளின் அன்பை உணர்வார்கள். கடவுள் இயேசுவை மாட்சிப்படுத்தியதை ஏற்பார்கள். கடவுளின் திட்டம் நிறைவேறும்போது தங்கள் நம்பிக்கை தங்களை ஏமாற்றவில்லை என்பதை அறிந்துகொள்வார்கள். உலக மக்கள் முன்னிலையில் தூய ஆவியின் துணையோடு நாம் இயேசுவுக்குச் சான்று பகரும்போது இயேசுவைப் பற்றிய உண்மை அறிவிக்கப்படும்; கடவுளின் மாட்சி போற்றப்படும்; சீடர்களின் வாழ்வும் உலகின் வாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாக மாறும்.

மன்றாட்டு
இறைவா, உம் தூய ஆவியின் வல்லமையை எங்கள் வாழ்வில் உணர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

சிறந்த அன்பு

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இன்றைய உலகில் உறவின் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது நட்பு. ஒரு நல்ல நண்பன் நூறு உறவிருக்குச் சமம். நண்பர்கள், தோழர்கள் இவர்கள்தான் ஒவ்வொருடைய வாழ்க்கையையும் செதுக்கும் சிற்பிகள். ரேடியோ நிகழ்ச்சியில் ஒருவன்: காதல், நட்பு விளக்கம் தருக. மற்றவன்: காதல் ளை pழளைழn.நட்பு ளை அநனiஉiநெ. அதேவேளையில் உங்கள் வாழ்க்கையை உடைத்து உருக்குலைப்பதும் அவர்களே. கவிஞன் ஒருவன் இவ்வாறு செபிக்கிறான்: "இறiவா! என் பகைவனை நான் பார்த்துக்கொள்கிறேன்.நண்பனிடமிருந்து என்னை நீ காப்பாற்று" என்று. நட்பு, நண்பர்கள் அவ்வளவு கடினமான ஒன்று.

நட்பின் சிறப்பை உணர்ந்த இயேசு, "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" என்றார்.தன்னைக் காட்டிக்கொடுத்தவரையும் 'தோழா, எதற்காக வந்தாய்?' என்ற உயிரை உறைய வைத்த வார்த்தைகள் பகைவனையும் பதற வைத்துவிடும். இவ்வாறு இயேசு, பகையைக்கூட நட்பாக மாற்றவேண்டும். இருக்கின்ற நட்பை, உயிரைக்கொடுத்தேனும்; வளர்க்க வேண்டும் என்பதைத் தெழிவுபடுத்துகிறார்.

உயிரை வாங்குகின்ற நட்பு பல வடிவங்களில் மாறுவேடங்களில் அலைவதைப் பார்க்கிறோம்.சுயநலம் என்ற போர்வையில், பணம் பதவி ஆசையில் காட்டிக்கொடுக்கும் துரோகங்கள் நட்பில் நயவஞ்சகமாக நடைபெறுவதை முன்னுணர்ந்தே இயேசு இதைச் சொன்னார். நட்பை வளர்ப்போம். உயிரைக்கொடுத்தும் நண்பனைக் காப்போம்.தலை போனாலும் ஒருபோதும் பகைவனைக்கூட காட்டிக்கொடுக்க வேண்டாம். அது அவனைத் திருந்தி வாழ வைக்கும். நட்பை வளர்க்கும். நம்மை வாழ வைக்கும்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்