சனி

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 1-10

அந்நாள்களில் பவுல் தெருபை, லிஸ்திரா ஆகிய நகர்களை வந்தடைந்தார். லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள சீடர் ஒருவர் இருந்தார். அவருடைய தாய் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட ஒரு யூதப் பெண். தந்தையோ கிரேக்கர். திமொத்தேயு லிஸ்திராவிலும், இக்கோனியாவிலும் உள்ள சகோதரர் சகோதரிகளிடையே நற்சான்று பெற்றவர். பவுல் அவரைத் தம்முடன் கூட்டிச் செல்ல விரும்பினார். அவ்விடங்களிலுள்ள யூதரின் பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார். ஏனெனில் அனைவரும் அவருடைய தந்தை கிரேக்கர் என்று அறிந்திருந்தனர். அவர்கள் நகர் நகராகச் சென்றபோது எருசலேமிலுள்ள மூப்பரும் திருத்தூதரும் செய்த தீர்மானங்களை அவர்களிடம் கொடுத்துக் கடைப் பிடிக்குமாறு கூறினார். இவ்வாறு திருச்சபைகள் நம்பிக்கையில் உறுதி பெற்று நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிவந்தன. பின்பு ஆசியாவில் இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே, அவர்கள் பிரிகிய, கலாத்தியப் பகுதிகளைக் கடந்து சென்றனர். அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை. எனவே அவர்கள் மீசியா வழியாகச் சென்று துரோவா நகரை அடைந்தனர். பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, ``நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்'' என்று வேண்டினார். இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 100: 1-2. 3. 5
பல்லவி: அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! -பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!
அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! -பல்லவி


5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

 

யோவான் 15:18-21

பாஸ்கா காலம்-5 வாரம் சனி

18 "உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

19 நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.

20 பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால் தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்!

21 என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.

 

-------------------------

திப 16: 1-10
யோவா 15: 18-21
“நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்லர்”

“நான் உங்கள உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்லர்”“ என்னும் துணிவான இயேசுவின் சொற்களை இன்று நம் சிந்தையில் இருத்துவோம்.

யோவான் நற்செய்தியில் “உலகு”“ என்னும் சொல் மூன்று பொருள்களைக் கொண்டிருக்கிறது.

  1. இறைவன் படைத்த உலகம் . அது நல்லது.
  2. தீய நாட்டங்கள் நிறைந்த இடம். அது தீயது.
  3. இறைவன் படைத்த மனிதர்கள். இறைவனால் அன்பு செய்யப்படுபவர்கள்

இந்த இடத்தில் இரண்டாவது பொருளையே அது கொண்டிருக்கிறது. இருளின் ஆற்றல்கள் நிறைந்த இந்த உலகிலிருந்து, இயேசு நம்மைப் பிரித்து எடுத்துள்ளார். எனவே, நாம் இனி உலகைச் சாராமல், இயேசுவையே சார்ந்து வாழவேண்டும். உலகு சார்ந்த இச்சைகள், எண்ணங்கள், செயல்களைக் களையவேண்டும். “உலகின்மீதும்  அதிலுள்ளவைமீதும் அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது. ஏனெனில் உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை உலகிலிருந்தே வருபவை”“ (1 யோவா 2: 15-16) என்னும் இறைமொழியை மனத்தில் கொண்டு வாழ்வோம்.

மன்றாடுவோம்: எங்களைத் தேர்ந்துகொண்ட தெய்வமே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உலகிலிருந்து எங்களைத் தேர்ந்தெடுத்தவரே, நாங்கள் உலகைச் சார்ந்து வாழாமல், உம்மையே சார்ந்து வாழும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

உலகைச் சார்ந்தவர்கள் அல்ல !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நற்செய்தி வாசகம் மூலமாக இயே நமக்குத் தரும் செய்தி: #8220;நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல”. இயேசு உலகினரை இரு பிரிவினராகப் பிரிக்கவே வந்தார். இருளைச் சார்ந்தவர்கள், ஒளியைச் சார்ந்தவர்கள், இந்த உலகைச் சார்ந்தவர்கள், இவ்வுலகில் வாழ்ந்தாலும், விண்ணைச் சார்ந்தவர்கள். இயேசுவின் சீடர்கள் அனைவரும் இரண்டாம் பிரிவைச் சொந்தமாக்கிக்கொண்டவர்கள். நாம் இந்த உலகில் வாழ்ந்தாலும், நாம் இவ்வுலகைச் சார்ந்தவர்கள் அல்லர். இவ்வுலகின் தலைவன் என அழைக்கப்படும் அலகையின் அடிமை அல்ல. மாறாக, விண்ணகமே நமக்குத் தாய்நாடு. நாம் இங்கே பயணிகள் மட்டுமே. நமது கால்கள் மண்ணில் இருந்தாலும், நமது கண்களும், இதயமும் விண்ணை நோக்கிய வண்ணமே இருக்கவேண்டும். நமது எண்ணங்கள் இவ்வுலக எண்ணங்கள் போல் இல்லாமல், நமது கவலைகளும் இவ்வுலகக் கவலைகளாக இருக்கக் கூடாது. நாம உயிர்ப்பின் மக்கள். ஆவியின் ஆற்றல் பெற்றவர்கள். எனவே, நமது வாழ்வின் தரத்தை உயர்த்திக்கொள்வோமாக.

மன்றாடுவோம்: எங்களின் ஆர்வமும், ஆற்றலுமான இறைவா, உம்மைப் போற்றுகிறோம்.  தந்தை இறைவனை நோக்கி எங்கள் இதயங்களை எழுப்பியருளும். எங்களது ஆர்வமும், ஏக்கமும் இவ்வுலகப் பொருள்கள்மீது இல்லாமல், நிலையான இன்பமான உம்மீதே இருப்பதாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

----------------------

 

''இயேசு சீடர்களை நோக்கி, 'நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன்.
நீங்கள் உலகைச் சார்;ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.
பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக்
கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்' என்றார்'' (யோவான் 15:19-20)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு தமக்கும் தம்மை அனுப்பிய தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவு பற்றிப் பேசுகிறார். பிறகு தம்மையும் தம்மை அனுப்பியவரையும் அறிந்து அன்புசெய்பவர்களும் அந்த உறவில் பங்கேற்பது பற்றிப் பேசுகிறார். இவ்வாறு தந்தை - இயேசு - சீடர்குழு ஆகிய மூவருக்கும் இடையே ஆழ்ந்த அன்புறவு நிலவுகிறது. இவ்வுறவு பற்றிப் பேசிய பிறகு இயேசு ''உலகம்'' சீடர்களை வெறுக்கும் என்பதையும் அறிவிக்கிறார். இங்கே உலகம் எனக் குறிக்கப்படுவது கடவுள் அன்போடு படைத்த எழில்மிகு இயற்கை உலகமோ, அதில் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டு வாழ்கின்ற மனிதரோ அல்ல. மாறாக, ''உலகம்'' என்னும் சொல்லுக்கு யோவான் நற்செய்தியில் இன்னொரு எதிர்மறையான பொருளும் உண்டு. அதாவது, இயேசு கடவுளிடமிருந்து வருகிறார் என்னும் உண்மையை ஏற்க மறுக்கின்ற சக்திகளையே ''உலகம்'' என யோவான் குறிப்பிடுகிறார். இந்த ''உலகம்'' கடவுளின் திட்டத்தை ஏற்க மறுக்கிறது. கடவுளையும் அவரால் அனுப்பப்பட்டு நம்மை மீட்ட இயேசுவையும் ஏற்கத் தயங்குகிறது.

-- கடவுளின் திட்டத்தை எதிர்க்கிற ''உலகம்'' இயேசுவின் சீடர்களையும் எதிர்த்து நிற்கும். ஆனால் இயேசு தம் சீடர்களை நோக்கி ''அஞ்சாதீர்கள்'' என ஆறுதல் மொழி கூறுகின்றார். தலைவராகிய இயேசுவையே எதிர்த்தவர்கள் இயேசுவின் சீடர்களையும் எதிர்ப்பார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே, எதைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என்று கூறி இயேசு தம் சீடருக்கு ஊக்கமூட்டுகிறார். அன்று சீடர்களுக்குக் கூறப்பட்டது இன்றைய திருச்சபைக்கும் பொருந்தும். இயேசுவை நம்புவோர் பல தருணங்களில் துன்பங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் தம்மை எதிர்க்கின்ற சக்திகளைக் கண்டு கிறிஸ்தவ நம்பிக்கையுடையோர் அஞ்ச வேண்டியதில்லை. அவர்களுக்குத் துணையாக இயேசுவும் அவர் அனுப்புகின்ற தூய ஆவியும் இருப்பார்கள். எனவே நாம் நம்பிக்கை இழக்கவேண்டியதில்லை.

மன்றாட்டு
இறைவா, எங்களை எதிர்க்கின்ற சக்திகளைக் கண்டு நாங்கள் துவண்டுவிடாதிருக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

"இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவனுமாகிய பவுல்" என்று தன்னை அறிமுகம் செய்து உரோமையருக்கு எழுதிய தன் திருமடலைத் தொடங்குகிறார். இவ்வாறு தான்உலகைச் சார்ந்தவன்அல்ல, புனிதப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன், உலகிலிருந்து பிரித்து உன்னதப் பணிக்காகத் திருநிலைப்படுத்தப்பட்டவர் என்பதைச் சொல்லி தன் மடலைத் தொடங்குகிறார்.

இறை பணியாளனும் கிறிஸ்தவனும் உலகைச் சார்ந்தவன் அல்ல. உலகிலிருந்து சிறப்புப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆமாம் நீங்களும் தான் உலகிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இறை பணியாளர்கள் இன்னும் சிறப்பான விதத்தில் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். இறை பணியாளனும் கிறிஸ்தவனும் வெவ்வேறு நிலையில், சமுகத்தின் ஆழத்தில், அகலத்தில் இயேசுவின் புனிதப்பணியைச் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம்.

எனவே நம்முடைய இப் புனிதப் பணியில் நாம் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல என்பதால் ஒதுங்கி வாழ வேண்டும் என்பதல்ல இயேசுவின் போதனை. தடாகத்து தாமரையை வளர்த்து பூக்க வைக்கும்; தண்ணீர் போல, பட்டும் பாடாமலும் தொட்டும் தொடாமலும், அதே வேளையில் உப்பாக, ஒளியாக ஊடுறுவி உருவாக்க வேண்டும். உலகின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படக்கூடாது என்பதே இயேசுவின் போதனை. நாம் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள். இப் பெருமைக்கேற்ப வாழ வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.இவ்வாறு வாழும்போது உலகை வென்றவர்கள் ஆவோம். வென்று இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

 

--அருட்திரு ஜோசப் லியோன்