முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 9-18

பவுல் கொரிந்து நகரில் இருந்தபோது, இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, ``அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்'' என்று சொன்னார். அவர் அவர்களுக்கு ஓர் ஆண்டு ஆறு மாதம் இறைவார்த்தையைக் கற்பித்து அங்கேயே தங்கியிருந்தார். கல்லியோ என்பவர் அக்காயா நாட்டின் ஆட்சியாளராக இருந்தபோது யூதர்கள் ஒருமித்து, பவுலைத் தாக்கி, அவரை நடுவர் மன்றத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்து, ``இவன் திருச்சட்டத்துக்கு எதிரான முறையில் கடவுளை வழிபடுமாறு மக்களைத் தூண்டிவிடுகிறான்'' என்றார்கள். பவுல் பேச வாயெடுத்தபோது கல்லியோ அவர்களை நோக்கி, ``யூதர்களே, ஏதாவது குற்றமோ பழிபாவமோ இருக்குமாயின் நான் பொறுமையுடன் உங்கள் வழக்கைக் கேட்டிருப்பேன். ஆனால் இது சொற்களையும் பெயர்களையும் உங்கள் திருச்சட்டத்தையும் பற்றிய சிக்கலாய் இருப்பதால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்; இதில் நடுவராயிருக்க நான் விரும்பவில்லை'' என்று கூறி, அவர்களை நடுவர் மன்றத்திலிருந்து துரத்திவிட்டார். உடனே அவர்கள் அனைவரும் தொழுகைக்கூடத் தலைவரான சொஸ் தேனைப் பிடித்து நடுவர் மன்றத்துக்கு முன்பாக அடித்தனர். ஆனால் கல்லியோ எதையும் பொருட்படுத்தவில்லை. பவுல் பல நாள்கள் கொரிந்துவிலுள்ள சகோதரர் சகோதரிகளிடம் தங்கியிருந்தார். அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றக் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக் கொண்டு, அக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 47: 1-2. 3-4. 5-6
பல்லவி: கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே.

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்;
ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்;
உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. -பல்லவி

3 வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்;
அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார்.
4 நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்;
அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். -பல்லவி

5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்;
எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்;
பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மெசியா பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து மாட்சிமை அடைய வேண்டும். அல்லேலூயா.

யோவான் 16:20-23

பாஸ்கா காலம்-ஆறாம் வாரம் வெள்ளி

நற்செய்தி வாசகம்
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 20-23

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும். பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார். இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது. அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

===============================

யோவான் 16: 20 - 23
மகிழ்ச்சி

மகிழ்ச்சி என்பது நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து அல்ல. மாறாக எதற்காக வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தே என்பார் எழுத்தாளர் வில்லியம் ஆர்தர் வார்டு. இன்பமும் துன்பமும் நம் வாழ்வில் நடக்கின்ற நிகழ்வுகளைப் பொறுத்ததல்ல, அந்த நிகழ்வுகளை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது என்பார் எழுத்தாளர் அந்தோணி டி மெல்லோ. இத்தகைய மகிழ்ச்சி என்பது அகத்தைச் சார்ந்தது என்ற செய்தியைத் தெளிவாக விளக்குகின்றன. மகிழ்ச்சி புறத்தைச் சார்ந்தது என்று எண்ணினோம் என்றால், கடவுள் நம்மைச் சூழலின் கைதிகளாக படைத்து விட்டார் என்று அர்த்தம்.

அப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியைத் தான் இயேசு இன்றைய நாளில் தன் சீடர்களை பார்த்துக் கூறுகின்றார். இயேசு கூறக்கூடிய மகிழ்ச்சி அகம் சார்ந்தது என்பது உண்மை. ஏனென்றால் நம் அகத்தின் தன்மையையும் முதிர்ச்சியையும் வளர்த்துக் கொள்ளாமல் இருந்தோம் என்றால், சூழலைத் தாண்டி செல்வதற்கான வல்லமையும், சூழலினால் பாதிக்கப்படாத ஆற்றலும் நம்மிடம் இருக்காது. நம் அகமானது ஒரு விதையைப் போன்றது. விதை சூழலை பயன்படுத்தாமல் வளராமல் இருந்தால் அது அப்படியே இருக்கும். அது போல தான் மகிழ்ச்சி தம் சூழலுக்கேற்ப மாற்றியமைக்க வேண்டும். அதனால் தான் இயேசு உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும் என்று கூறினார். காரணம் சூழலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு உதாரணமாக தான் பேறுகால தாயின் வேதனை. இந்த சூழலை அவர் புரிந்து செயல்பட்டால் அது அவருக்கு மகிழ்ச்சியைத் தரும். எதற்காக இயேசு இவ்வாறு கூறினாரென்றால் இயேசுவின் பிரிவு சீடர்களுக்கு வருத்தத்தைத் தரும் என்பதனை இயேசு உணருகின்றார்.

நமக்கு எது மகிழ்ச்சி தருகிறது? பணமா? கடவுளா? உறவுகளா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

==========================

உங்கள் மகிழ்ச்சி உங்களிடமே!

துன்பக் கிண்ணம் இன்றி இன்பக் கிண்ணம் அமையவில்லை இயேசுவுக்கு. சிலுவைச் சாவின் வழியாகத்தான் இயேசு மாட்சி பெற முடிந்தது. வெற்றியை அல்லது இலக்கை தொட சில தியாகங்களை, கடினமான பாதைகளை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அப்படி பெற்ற வெற்றி, மனிதர்களுக்கு நிறைவான மகிழ்ச்சியைத் தருகிறது. தன்நம்பிக்கையும், கடவுளின் ஆசிரும் இத்தகைய மகிழ்ச்சிக்கு அடித்தளமாக இருக்கிறது.

மனிதர்களின் போராட்டமே மகிழ்ச்சியை தக்க வைப்பதில்தான் இருக்கிறது. நம் மகிழ்ச்சியை யாரும் நம்மிடமிருந்து நீக்கிவிட முடியாது. அதை தக்க வைப்பதும், இழப்பதும் நம் கையில் தான் இருக்கிறது. இருப்பதைக் கொண்டு நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறோமா? அல்லது இல்லாததை எண்ணி, எதிர்காலத்தை நினைத்து வருந்துகிறோமா? குடிசை வீட்டில் நிம்மதியாக தூங்கும் ஏழையும், பணத்தை சேமித்து, பாதுகாக்க போராடும் வசதியானவனும் அவரவரின் மகிழ்ச்சியை அவர்களே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

 

திருத்தூதர் பணி 18: 9 – 18
இறைவன் நம்மோடு இருக்கிறார்

கடவுளுடைய பணியை நாம் செய்கிறபோது, எதற்கும் அஞ்சத்தேவையில்லை. இறைவன் நம்மோடு இருக்கிறார் என்கிற ஆழமான செய்தியை, இன்றைய வாசகம் நமக்குத் தருகிறது. கடவுளின் பணி என்ன? நன்மை செய்வது கடவுளின் பணி. ஏனென்றால், கடவுள் நன்மையே உருவானவர். அப்படி நன்மை செய்கிறபோது, நிச்சயம் தீமையின் மொத்த உருவமாக இருக்கிற அலகை, நமக்கு பல சோதனைகளைத் தருவதற்கு தனக்கு சாதகமாக இருக்கிறவர்களை வைத்து, நம்மை பயமுறுத்தும். அப்படிப்பட்ட தருணத்தில், ஆண்டவர் நம்மோடு இருப்பதாக நமக்கு வாக்குறுதி கொடுக்கிறார்.

பவுல் கொரிந்து நகரில் ஆண்டவருடைய வார்த்தையை அறிவித்தபோது, அவருக்கு பலவிதமான நெருக்கடிகள் யூதர்களிடமிருந்து வரத் தொடங்கியது. அதற்கு முன்னரே, ஆண்டவர் காட்சியில் பவுலுக்கு தோன்றி, உறுதியாகவும், துணிவோடும் இருக்குமாறு பணிக்கிறார். கடவுளைப் பணியைச் செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல. பலவிதமான போராட்டங்களும், நெருக்கடிகளும் நிறைந்த வாழ்வுதான், கிறிஸ்துவுக்காக வாழும் வாழ்வு. இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தபோது கூட, ஆண்டவரின் திருவுளப்படி வாழ்ந்தார். அவரும் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தார். ஆனால், துணிவோடு இருந்தார். ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருந்தார். இறைவனின் ஆவி தன்னுள்ளாக இருந்தததை அவர் ஆழமாக உணர்ந்திருந்தார். எனவே தான், அவரால் தீமையை துணிவோடு எதிர்க்க முடிந்தது. அத்தகைய நம்பிக்கையை வைக்குமாறு, ஆண்டவர் பவுலை உறுதிப்படுத்துகிறார்.

தீமைக்கு எதிரான போராட்டம் சாதாரணமானது அல்ல. இன்றைக்கு நம்மில் எத்தனையோ பேர் மக்கள் நலனுக்காக தங்களது ஆடம்பர வாழ்வைத்துறந்து, நீதிக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரவர்க்கம் மக்களைச் சிந்திக்க விடாது, அவர்களை அடக்குமுறையால் தாக்கிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், அவர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இறைவன் அவர்களுக்கு துணைநிற்க வேண்டுமென்று நாம் மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

திருப்பாடல் 47: 1 – 2, 3 – 4, 5 – 6
”கடவுளே அனைத்து உலகின் வேந்தர்”

கடவுள் அனைத்து உலகின் வேந்தர் என்பதை நாம் இரண்டு விதங்களாகப் புரிந்து கொள்ளலாம். முதலாவது, உலகம் என்பது நாம் வாழக்கூடிய இந்த பூமியோடு, இன்னும் பல கோள்கள் இருக்கின்றன. அவற்றையும் குறிக்கக்கூடியதாக நாம் பார்க்கலாம். இரண்டாவது, இந்த உலகத்தில் இருக்கக்கூடிய நாடுகளாக நாம் பார்க்கலாம். இந்த உலகத்தில் எத்தனை நாடுகள் இருந்தாலும், அந்த நாடுகளில் எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், அவற்றிற்கெல்லாம் ஒரே ஒரு கடவுள், அதுதான் யாவே கடவுள். அவர் தான் உண்மையான கடவுள். அந்த உண்மையான கடவுள் தான், இந்த உலகத்தின் வேந்தராக இருக்கிறார்.

கடவுள் அனைத்து உலகின் வேந்தர் என்பதை, எதை வைத்து ஆசிரியர் முடிவு செய்கிறார்? கடவுள் செய்த வல்ல செயல்களை வைத்து, ஆசிரியர் முடிவு செய்கிறார். ஏனென்றால், நடந்திருக்கிற செயல்கள் ஒவ்வொன்றுமே, ஆச்சரியத்தைத் தரக்கூடிய செயல்கள். மனிதர்களால் செய்ய முடியாது, மனிதர்களால் நடக்க முடியாத செயல்கள். மனிதர்களை விட வலிமையான கடவுளை அதுதான் இந்த உலகத்திற்கு கற்றுக்கொடுத்தது. இஸ்ரயேல் மக்களின் நிலை மற்ற நாட்டினர் அனைவர்க்குமே தெரியும். ஆனால், அப்படிப்பட்ட இஸ்ரயேல் மக்கள் இந்த உலகத்தில் இவ்வளவுக்கு மதிப்பையும், மாண்பையும் பெற்றிருக்கிறார்கள் என்றால், நிச்சயமாக அது கடவுளால் மட்டுமே முடிந்திருக்கும். அந்த கடவுள் நிச்சயமாக வலிமையான கடவுள் தான் என்பதை, பிறநாட்டினர் அறிந்து கொள்வதற்கு இது உதவியாக இருந்தது.

கடவுள் இந்த உலகத்தின் வேந்தராக இருக்கிறார். குறிப்பாக, அவர் சாதாரண மக்களின் பாதுகாவலராக இருக்கிறார். அந்த இறைவனிடத்தில் முழுமையாக நம்மை ஒப்படைப்போம். நிச்சயம் இறைவன் நமக்கு நிறைவான ஆசீரை வழங்குவார். வலுவற்றவர்களை வலுவுள்ளவர்களாக மாற்றிய இறைவன், நம்மையும் நிறைவாக ஆசீர்வதிப்பார்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

இறைவனோடு நாம் கொண்டிருக்கும் உறவு

”என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் தருவார்” என்று இயேசு சொல்கிறார். முன்பின் தெரியாத ஒருவர் நமக்கு அறிமுகமாகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடனான நமது உறவு நமக்கு எப்படி இருக்கும்? அவரிடத்தில் ஒரு மரியாதை இருக்கும். அவருக்கும் நமக்கும் இடையே நமது உறவில் சிறிது மரியாதை இருக்கும். அதே நபரிடத்தில் நாம் நெருங்கி, நண்பர் என்ற நிலைக்கு வந்தபிறகு எப்படி இருப்போம்? அந்த இடைவெளி குறைந்திருக்கும். மரியாதையுடன் அன்பும், நட்பும் பிணைந்திருக்கும். எதையும் அவரிடத்தில் கேட்பதற்கோ, பேசுவதற்கோ நமக்கு கூச்சம் இருக்காது. கடவுளுடன், அப்படி ஒரு உறவுநிலைக்கு இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார்.

கடவுளைப்பார்த்து நாம் பயப்படத்தேவையில்லை. கடவுளை தந்தையாக, உற்ற நண்பராக நாம் பார்க்க வேண்டும். அந்த அன்பை நாம் உணர வேண்டும். அப்படி உணர்கிறபோது, நாம் வெளிப்படையாக இருப்பதற்கு கற்றுக்கொள்கிறோம். அவரிடத்தில் நம்மை ஒரு திறந்த புத்தகமாக காட்டுகிறோம். நமக்குத் தேவையானவற்றை நாம் கேட்கிறோம். நமக்கு அது கிடைக்குமா? கிடைக்காதா? என்பதைப்பற்றிய பயம் நமக்கு இருக்காது. நமக்கு தேவை என்றாலோ, அது வேண்டும் என்றாலோ நிச்சயம் அவர் தருவார் என்கிற நம்பிக்கை நமக்குள்ளாக இருக்கும். நாம் எப்படி எண்ணுகிறோமோ அப்படி அவரிடத்தில் பேசுகிறோம். அவரின் இதயம் அன்பு என்பது நமக்கு தெளிவாகிறது. நம் மட்டில் அவர் வைத்திருக்கிற அக்கறை உண்மையாகிறது.

கடவுளுடனான நமது உறவுநிலையை, இயேசு எதிர்பார்ப்பது போல அமைதல் வேண்டும். அந்த உறவுதான் கடவுளோடு நம்மை நெருங்கி வைக்கிற உணர்வு. அத்தகைய உணர்வு தான், நம்மை பயமில்லாமல் மகிழ்வோடு வாழவைக்கிற உணர்வு. எதையும் பார்த்து கவலைப்படாமல் கடவுளோடு நெருங்கி வாழ வைக்கிற உறவு. அத்தகைய உறவை நாம் வாழ, இயேசுவின் அழைப்புக்கு செவிமடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

நிலையான, நிறைவான மகிழ்ச்சி

இயேசு கிறிஸ்து ”உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்” என்று சொல்கிறார். கிறிஸ்தவர்களாக இருக்கக்கூடிய நமக்கு எப்படிப்பட்ட மகிழ்ச்சி பரிசாகக் கிடைக்கும் என்பதை இன்றைய வாசகங்கள் வாயிலாக நாம் பார்ப்போம். 1. கிறிஸ்து தருகிற மகிழ்ச்சி நம்மிடமிருந்து எடுக்கப்படாது. உதாரணமாக, ஒரு பொருள் வாங்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். அந்த பொருளை வாங்கியும் விடுகிறோம். நமக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சி எத்தனை காலம் இருக்கும்? ஒருநாள் இருக்கும். ஒரு வாரம் இருக்கும். அவ்வளவுதான். அந்த மகிழ்ச்சி காலப்போக்கில் மறைந்துவிடும். ஆனால், இயேசு தரக்கூடிய மகிழ்ச்சி காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

இயேசு தரக்கூடிய மகிழ்ச்சியின் இரண்டாவது பண்பு 2. நிறைவான மகிழ்ச்சி. முழுமையான மகிழ்ச்சி. ஒரு பொருளை நாம் வாங்குகிறபோது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி நிறைவான மகிழ்ச்சி அல்ல. அதைவிட சிறந்த பொருளைப் பார்க்கிறபோது, அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதை வாங்கினாலும், நமது மகிழ்ச்சி நிறைவு கொள்வதில்லை. இன்னும் வாங்க வேண்டும், என்ற எண்ணம் நமக்குள்ளாக ஏற்படுகிறது. காரணம், பொருட்களினால் நாம் பெறும் மகிழ்ச்சி நிறைவான மகிழ்ச்சி அல்ல. ஆனால், இயேசு தரும் மகிழ்ச்சியை நாம் பெற்றுக்கொண்டால், அதை மிஞ்சிய மகிழ்ச்சியை யாரும் நமக்குத்தர முடியாது. அதற்கு மேல் நாம் மகிழ்ச்சியைத் தேட மாட்டோம்.

இந்த உலகத்தில் அனைவருமே மகிழ்ச்சியைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மகிழ்ச்சியை பொருளிலும், பதவியிலும், அதிகாரத்திலும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இயேசுவிடம் மட்டும்தான் நிலையான, நிறைவான மகிழ்ச்சியைப் பெற முடியும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------------

தந்தை – மகன் உறவு

கடவுளுக்கும் நமக்கும் உள்ள புதிய உறவுமுறையைப்பற்றியும், அந்த புதிய உறவினால் நமக்கு கிடைக்கும் பலன்களையும் இயேசு நமக்குக் கற்றுத்தருகிறார். நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவுமுறை தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவுமுறை. இந்த உறவுமுறை நன்றாக இருக்க வேண்டுமென்றால், நாம் தந்தையைப்பற்றி நல்லமுறையில் புரிந்துகொள்ள வேண்டும். தந்தையிடம் நாம் செல்வதற்கு எந்தத்தடையும் இல்லை. தந்தையிடம் நாம் எதையும் கேட்கலாம். ஆனால், கேட்பது அனைத்துமே கிடைத்துவிட வேண்டும் என்று நினைக்கக்கூடாது. காரணம், ஒரு குழந்தை எதைக்கேட்டாலும் அந்த தந்தை கொடுத்தால், அவர் நல்ல தந்தையாக இருக்க முடியாது. குழந்தையின் தேவை அறிந்து கொடுக்க வேண்டும். அதேபோலத்தான் கடவுளும் நமக்கும். நமது தேவை அறிந்து விண்ணகத்தந்தை நமக்குத்தருகிறார்.

இன்றைய உலகில் மக்கள் அனைவரும் கடவுள் மீது விசுவாசம் வைத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். கடவுளை தங்களது தந்தையாக ஏற்றுக்கொள்வதாகவும் வாக்களிக்கிறார்கள். ஆனாலும், தங்களின் தேவைகள் கடவுளால் நிறைவேறாதபோது, வெகு எளிதாக அந்த உறவை முறித்துக்கொள்கிறார்கள். இது சரியான அணுகுமுறை அல்ல. நாம் கேட்பது அனைத்தையும் விட, நமது தேவைகளை இறைவன் தருவார் என்ற விசுவாசம் கடவுளிடம் இருந்தால், நம்மால் இறை உறவிலே தொடர்ந்து நிலைத்திருக்க முடியும்.

கடவுளின் பிள்ளைகளாக இருக்கக்கூடிய நாம் ஒவ்வொரு நாளும் இந்த உறவில் வளரவேண்டும். இந்த உறவை வளர்க்க முயற்சி எடுக்க வேண்டும். கடவுள் நம்மை பிள்ளைகளாக வெறுமனே ஏற்றுக்கொள்ளாமல், நம்மை நல்ல பிள்ளைகளாக வளர்ப்பதற்கு தொடர்ந்து வழிநடத்தி வருகிறார். அந்த இறைவனின் அன்பை நம்மி;ல் உணர்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

திப 18: 9-18
யோவா 16: 20-23

பேறுகால வேதனை

“பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால், பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார்” என்னும் இயேசுவின் அருள்வாக்கை இன்று மனத்தில் இருத்துவோம்.

மிகவும் யதார்த்தமான ஒரு வாழ்வியல் உண்மையைக் கிறித்தவ வாழ்வுக்கு எடுத்துக்காட்டாகத் தந்திருக்கிறார் இறைமகன் இயேசு. வேதனையின்றி உலகில் புது உயிர் தோன்றுவதில்லை. அந்த வேதனையைத் தாய்மார்கள் உள்ளன்போடு ஏற்றுக்கொள்கிறார்கள்.

கிறித்தவ வாழ்வும் ஒரு தாய்மை அனுபவம்தான் என்கிறார் நம் ஆண்டவர். நம் வாழ்வில் வருகின்ற துன்ப, துயரங்கள் பேறுகால வேதனை போல. அவை நம்மை வாட்டுகின்றன. ஆனால், அந்தத் துன்பங்களின் வழியாக உலகில் இறையாட்சி மலரும், ஆன்மாக்கள் மீட்படையும், உலகம் புதுப்பிறப்பு அடையும். இதுவே கிறித்தவத்தின் நெடுங்கால நம்பிக்கையும், அனுபவமும்.

இதன்பொருட்டுதான், ஆயிரக்கணக்கான மறைசாட்சியர் தம் இன்னுயிரை இழக்க முன்வந்தனர். தங்களின் வேதனையால் உலகில் மீட்பும், புதுவாழ்வும் தோன்றும் என்பதால் அந்த வேதனைகளை மன நிறைவுடன் ஏற்றுக்கொண்டர். எத்தனை புனிதர்கள் தங்கள் நோய்களை, முதுமையை மீடபின் கருவிகளாக மாற்றினர்! ஏன் நாமும் அவ்வாறு செய்யக்கூடாது?

மன்றாடுவோம்: எங்களைத் தேர்ந்துகொண்ட தெய்வமே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களது துன்பங்களை ஏற்றுக்கொள்வதன் வழியாக உலகம் மீட்பு அடைவதைக் காணும் நம்பிக்கைப் பார்வையை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

 

''நான் உங்களை மீண்டும் காணும் பொழுது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும்.
உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது'' (யோவான் 16:22)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு தாம் துன்பங்கள் அனுபவித்து இறக்கப் போவதை முன்னறிவித்ததும் சீடர்கள் துயரத்திற்கு உள்ளானார்கள். ஆனால் அவர்களது துயரம் மகிழ்ச்சியாக மாறுகின்ற நேரம் வரும் என்பதை இயேசு முன்னறிவிக்கிறார். துன்பத்தையும் சாவையும் அனுபவித்தாலும் இயேசு சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார். அது சீடர்களுக்கு மகிழ்ச்சியைக் கொணர்ந்தது. தம் தலைவரும் ஆண்டவருமாகிய இயேசு தங்களோடு தொடர்ந்து தங்கியிருக்கிறார் என்னும் உணர்வு அவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. இயேசு உயிர்வாழ்கின்றார் என்னும் உணர்விலிருந்த பிறக்கின்ற மகிழ்ச்சியை இயேசு ஓர் உவமையால் விளக்குகிறார். பேறுகால வேதனை அனுபவிக்கின்ற பெண் தனக்குப் பிறக்கப் போகின்ற குழந்தையின் வரவைக் கண்டு தன் துயரத்தை மறந்து மகிழ்ச்சியடைகிறார். அதுபோலவே சீடர்களும் இயேசுவின் சாவினால் துயரத்திற்கு உள்ளானாலும், புதிய முறையில் இயேசு தங்களோடு உயிர் வாழ்கின்றார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவார்கள்.

-- இயேசுவின் உயிர்த்தெழுதலால் நமக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியை யாரும் நம்மிடமிருந்து நீக்கிவிட முடியாது (யோவா 16:22). அந்த மகிழ்ச்சி நம் உள்ளத்தை நிரப்பும். அதை யாரும் பறித்துவிட முடியாது. ஏனென்றால் அது கடவுள் நமக்கு இயேசு வழியாகத் தருகின்ற அன்புக் கொடை. உள்ளத்தின் ஆழத்தில் நாம் உணர்கின்ற அந்த மகிழ்ச்சியை ''உலகம்'' புரிந்துகொள்ளாது. ஆனால் கடவுளைத் தங்கள் உள்ளத்தில் ஏற்போர் அந்த மகிழ்ச்சியின் இனிமையைச் சுவைப்பார்கள். தாம் பெற்ற மகிழ்ச்சியை இயேசுவின் சீடர்கள் தம் சகோதர சகோதரிகளோடு பகிர்ந்துகொள்ள முன்வர வேண்டும். இயேசுவை நாம் நம்புவதே இந்த மகிழ்ச்சிக்கு ஒரே நிபந்தனை. அப்போது நம்மோடு தங்கியிருந்து நம்மை வழிநடத்துகின்ற இயேசு நமக்குத் தம் மகிழ்ச்சியையும் அமைதியையும் வழங்குவார். அதை யாரும் நம்மிடமிருந்து பறித்திட இயலாது.

மன்றாட்டு
இறைவா, உம் மகிழ்ச்சியால் எங்கள் உள்ளங்களை நிரப்பியருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

சிறிது காலம்.

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இயேசுவின் உயிர்ப்புக்கும் அவரது இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலம் மிகக் குருகிய காலம். இயேசு குறிப்பிடும் 'சிறிது காலம்' இதுவே. இயேசுவின் வி;ண்ணேற்புக்கும் தூய ஆவியின் வருகைக்கும் இடைப்பட்ட குருகிய காலத்தையும் இயேசு இந்த 'சிறிது காலமாக' குறிப்பிடுவதாகவும் கருதலாம். மொத்தத்தில் இறைவனோடு, இயேசுவோடு, தூய ஆவியோடு இல்லாத காலத்தை இச் 'சிறிது காலத்திற்குச்' சமமாக்கலாம்.

இச் சிறிது காலம் துன்பம் நிறைந்த காலம் என இயேசு குறிப்பிடுகிறார். அழுகையும் புலம்பலும் உள்ள காலம். பேறுகால வேதனையோடு அதனை ஒப்பிடுகிறார். ஆயினும் இறைவனோடு உள்ள உறவில் வாழ்வோருக்கு, இச் சிறிது காலம் பேறுகாலம் போல கொடிய வேதனை நிறைந்த ஒன்றாக இருந்தபோதிலும் இறுதியில் அது பெரு மகிழ்ச்சி தருகின்ற ஒன்றாகவும் இருக்கும். பிள்ளையைப் பெற்றெடுத்த பின், வேதனையுற்ற தாய் மகிழும் மகிழ்ச்சிக்கு ஈடாகும்.

எனவே அன்புச் சகோதர சகோதரிகளே! நம் வாழ்க்கையில் நாம் துன்புறும் காலம் சிறிது காலம் என்று எண்ணுவோம். இச் சிறிது காலம் சீக்கிரமே மாறிவிடும் என்று எதிர்பார்ப்போம். இச் சிறிது காலத்தின் துன்ப துயர வேளைகளில் ஒருபோதும் இயேசுவை விட்டுப் பிறியாது, அவரோடு எப்போதும் தங்கி இருக்குமாறு பார்த்துக்கொள்வோம். அப்போது நம் துன்பம் இன்பமாக மாறும். நம் வேதனை பிள்ளையைப் பெற்ற தாயின் மகிழ்ச்சிக்கு ஒப்பாகும். இக்கட்டு காலத்தில் இயேசுவோடு இருந்தால் 'நீங்கள் இயேசுவின் பெயரால் தந்தையிடம் கேட்டதையெல்லாம் அவர் உங்களுக்குத் தருவார்' என உறுதியாக நம்பி வாழலாம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்