முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 19: 1-8

அப்பொல்லோ கொரிந்தில் இருந்தபோது பவுல் மலைப்பாங்கான பகுதி வழியாக எபேசு வந்தார். அங்கு அவர் சில சீடர்களைக் கண்டு, அவர்களை நோக்கி, ``நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ``தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே'' என்றார்கள். ``அவ்வாறெனில் நீங்கள் எந்தத் திருமுழுக்கைப் பெற்றீர்கள்?'' எனப் பவுல் கேட்க, அவர்கள், ``நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெற்றோம்'' என்றார்கள். அப்பொழுது பவுல், ``யோவான் மனம் மாறிய மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, தமக்குப்பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுமாறு கூறினார்'' என்றார். இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றனர். பவுல் அவர்கள்மீது கைகளை வைத்ததும், தூய ஆவி அவர்கள்மேல் இறங்கியது. அப்பொழுது அவர்கள் பரவசப் பேச்சுப் பேசினர்; இறைவாக்கும் உரைத்தனர். அங்கு ஏறக்குறைய பன்னிரண்டு பேர் இருந்தனர். பின்பு பவுல் தொழுகைக்கூடம் சென்றார். அங்கு அவர் மூன்று மாதங்கள் இறையாட்சி பற்றித் துணிவுடன் மக்களோடு பேசி அவர்களோடு விவாதித்து அவர்களை நம்பச் செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 68: 1-2. 3-4. 5-6

பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்.

1 கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்;
அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்;
2 புகை அடித்துச் செல்லப்படுவதுபோல அடித்துச் செல்லப்படுவர்;
நெருப்புமுன் மெழுகு உருகுவது போல கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர். -பல்லவி

3 நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்;
கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர்.
4 கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்;
`ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம். -பல்லவி

5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும்
கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்!
6 தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்;
சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால், மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அல்லேலூயா.

யோவான் 16:29-33

பாஸ்கா காலம்-ஏழாம் வாரம் திங்கள்

நற்செய்தி வாசகம்
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 29-33

அக்காலத்தில் சீடர்கள் இயேசுவிடம், ``இப்போதுதான் உருவகம் எதுவுமின்றி வெளிப்படையாகப் பேசுகிறீர். உமக்கு அனைத்தும் தெரியும். யாரும் உம்மிடம் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது எங்களுக்கு இப்போது புரிகிறது. இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்'' என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ``இப்போது நம்புகிறீர்களா! இதோ! காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார். என் வழியாய் நீங்கள் அமைதி காணும்பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 16: 29 - 33
துன்பமும் துணிவும்

திருத்தந்தை 23 ம் அருளப்பர் ஒருமுறை தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் திருச்சபைக்கென்று உள்ள மிகச்சிறந்த அம்சம் என்ன? என்று கேட்டபோது பலரும் பல்வேறு விதமான பதில்களைத் தந்தனர். எதிலும் திருப்தி அடையாத திருத்தந்தை, இறுதியில் இவ்வாறு கூறினார், “திருச்சபைக்கென்று உள்ள மிகச்சிறப்பான அம்சம் மகிழ்ச்சி, அதுவும் சிலுவையினால் வரும் மகிழ்ச்சி”. உளவியல் சிந்தனையாளர் சிக்மண்ட் ஃப்ராய்டு இந்த துன்பத்தை இரண்டாக பிரிக்கின்றார். ஒன்று நம்மை மையப்படுத்திய வாழ்க்கை வாழ்வதன் காரணமாக வரும் துன்பம். இரண்டு பிறரை மையப்படுத்திய வாழ்க்கை வாழ்வதன் காரணமாக வரும் துன்பம்.

இன்றைய நாளில் இயேசு தன் சீடர்களிடம் கூறக்கூடிய துன்பம் இரண்டாவது வகையைச் சார்ந்தது. ஏனென்றால் தன்னிலை மறந்து பொதுப்பணியில் ஈடுபடக்கூடியவர்கள் தான் சீடர்கள். எதற்காக இவ்வாறு கூறுகிறார் என்று பார்க்கின்ற போது இயேசுவின் வழியை பின்பற்ற வந்தவர்கள் தான் சீடர்கள். இயேசு உரோமைப் பேரரசை எதிர்க்கின்றார், அது மட்டுமல்லாமல் சென்ற இடங்களிலெல்லாம் அதிசயங்கள் செய்கின்றார், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கொடுக்கின்றார். இதன் விளைவாக தான் அவரை எப்படியாவது சமுதாயத்திலிருந்து நீக்கி விட வேண்டும் என்று திட்டமிடுகின்றார்கள். இருந்தாலும் இயேசு துணிவோடு தன் பணியை செய்து வந்தார். அதனால் தான் சிலுவைச்சாவு நடந்தது. எனவு சீடர்களுக்கும் அதே நிலை ஏற்படலாம். இருந்தாலும் துணிவோடு இருக்க அழைப்பு விடுக்கின்றார். அது கடவுளின் துணை இருக்கும் என்ற எண்ணத்தில் தான் இவ்வாறு கூறுகின்றார்.

நம்முடைய வாழ்வில் துன்பத்தைச் சோர்ந்து போகக்கூடியதாக நினைக்கின்றோமா? அல்லது துணிவோடு எதிர்கொள்ள போகிறோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

கல்லான காடு; துணிவோடு நட!

யோவான் 16: 29-33

சீடர்கள் இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இன்றைய நற்செய்தி பகுதியில் அறிக்கையிடுகின்றனர். நம்பிக்கை அறிக்கையிடும் இவர்கள் தான் இன்னும் சிறிது காலத்தில் தன்னை மறுதலித்து துரோகம் செய்வார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆனால் இயேசு அவர்களை புரிந்து கொண்டார். தன்னை விட்டு விலகி செல்லும் அந்த செயல் முறைகளிலிருந்து சீடர்கள் தெளிவான பார்வையைப் பெற்று, அமைதியான சூழலுக்கு திரும்புவார்கள்; தன் பணியை தொடர்வார்கள் என்ற தெளிவான பார்வை இயேசுவிடம் இருந்தது.

மனிதர்களுக்கு பிரச்சினை அல்லது சிக்கல் என்ற ஒன்று வரும்போது அவர்கள் அதிலிருந்து எப்படி தப்பலாம்; நம் பிரச்சினையை எப்படி தீர்க்கலாம் என்று மட்டுமே சிந்திப்பார்கள். ஆனால் நமக்கு பிரச்சினை என்று வந்தால், நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் நமக்கு துரோகம் செய்து விட்டதாகவும், நமக்கு உதவி செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை சுமத்துவோம். இயேசு எப்படி சீடர்களை அவர்கள் நிலையில் இருந்து புரிந்து கொண்டாரோ, நாமும் நம்முடைய உறவினர்களை, நண்பர்களை அவர்கள் இடத்தில் இருந்து புரிந்து கொள்வது அவசியமாகிறது. இயேசுவைப் போல துயரமான நேரங்களில், நாமும் தனித்து விடப்படுவோம். தந்தையாகிய இறைவன் நம்மோடு கரம் பிடித்து நடக்கிறார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கல்லான காட்டில் பயணிப்போம்.

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

 

திருப்பாடல் 68: 1 – 2, 3 – 4, 5 – 6
”நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்”

நேர்மையாளர்கள் யார்? அவர்கள் ஏன் மகிழ்ச்சியடைவார்கள்? நேர்மையாளர்கள் என்பவர்கள், கடவுளின் சட்ட திட்டங்களுக்கு தங்களையோ முழுமையாக ஒப்புக்கொடுத்து மன்றாடுகிறவர்கள். கீழ்ப்படிதலோடு வாழ்கிறவர்கள். தங்கள் மனச்சான்றுக்கு பயந்து வாழக்கூடியவர்கள். சுயநலத்தோடு எல்லாவற்றையும் அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள். அவர்கள் எப்போதும் கடவுளுக்காகவே தங்களது வாழ்வை அர்ப்பணித்திருக்கிறவர்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று ஆசிரியர் சொல்கிறார்.

இந்த உலக வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்க்கிறபோது, மேலே சொல்லப்பட்டிருக்கிற விழுமியங்களோடு ஒரு மனிதர் வாழ்ந்தால், அவர் நிச்சயம் கவலைகொள்வதற்குத்தான் அதிகமான காரணங்கள் நமக்குக் கிடைக்கிறது. பின்னர் எப்படி நோ்மையாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்? அநீதி இந்த உலகத்தில் இருந்தாலும், அதற்கென்று ஒரு வரைமுறை இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பிறகு அநீதி செய்கிறவர்களால், தொடர்ந்து அநீதியோடு வாழ முடியாது. அவர்களுக்கும் ஒரு முடிவு வரும். அதுதான் இந்த திருப்பாடலில் வெளிப்படுகிறது. அநீதி செய்கிறவர்கள் காற்றால் அடித்துச்செல்லும் புகையைப்போல அடித்துச்செல்லப்படுவார்கள். நெருப்பு முன்னால் எரியும் மெழுகு போல, அவர்களும் கரைந்துபோவார்கள். நிச்சயமாக இது நேர்மையாளர்களுக்கும், கடவுளுக்கு பயந்து வாழ்கிறவர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

நாம் நேர்மையாளர்களாக வாழ்வதில் கவலையோ, வருத்தமோ கொள்ளக்கூடாது. நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கடவுள் நம்மை எப்போதும் கவலை கொள்ள விட மாட்டார். நம்மை தனித்து விட மாட்டார். அவர் எப்போதும் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவார். நேர்மையாளர்களாக வாழ்வதில் பெருமை கொள்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

இயேசுவின் மதிப்பீடுகள்

இயேசு தனது பணிவாழ்வில், சீடர்களை பயிற்றுவிப்பதில் சிறந்த ஆசானாக செயல்படுகிறார் என்பதை, இன்றைய நற்செய்தி நமக்கு சொல்கிறது. எப்படி? இயேசு தனது பயிற்சியை பல தளங்களாக செயல்படுத்துகிறார். அந்த வகையில், முதலில் தன்னுடைய சீடர்களுக்கு விசுவாசத்தின் அவசியத்தை விளக்குகிறார். அவர்களது விசுவாசத்தை அதிகப்படுத்த முயற்சி எடுக்கிறார். புதுமைகள் செய்கிறபோதும், மக்களிடம் போதிக்கிறபோதும், சீடர்கள் தன்னுடன் இருந்து, விசுவாசத்தை அதிகப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறார். சீடர்கள் கற்றுக்கொள்ள கடினப்பட்டபோதிலும், இன்றைய நற்செய்தியில் அவர்கள் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டது தெளிவாகிறது. முதல் இலக்கில், தளத்தில் இயேசு வெற்றிபெறுகிறார். ஆனால், இது அடைய வேண்டிய இறுதி இலக்கு அல்ல. இன்னும் முன்னேற இலக்கு இருக்கிறது. அதை நோக்கி முன்னேற இயேசு முனைகிறார்.

சீடர்கள் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டவுடன், இயேசு அடுத்த தளத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கிறார். விசுவாசத்தோடு இருக்க வேண்டியவர்கள், எதிர்கொள்ள வேண்டிய சவால்களை அவர் முன்னெடுக்கிறார். விசுவாசத்தில் வாழ்கிறவர்களின் வாழ்க்கை எளிதானது அல்ல, அது ஒரு சவாலான பணி. ஆனாலும், விசுவாசத்தை காத்துக்கொள்வதில் சீடர்கள், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று அவர்களைப் பயிற்றுவிக்கிறார். இதுதான் இயேசுவின் வெற்றிக்கு காரணம். அவர் ஒரேநாளில் அனைத்தையும் கற்றுக்கொடுக்கவில்லை. சீடர்களின் புரிந்துகொள்ளும் திறனுக்கேற்ப, அனுபவத்திற்கேற்ப, அவர்களைப் பயிற்றுவிக்கிறார்.

நமது குழந்தைகளுக்கு அவர்களது இளவயதிலிருந்தே நாம் நல்ல மதிப்பீடுகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களின் வயது அதிகரிக்க, அதிகரிக்க அவர்களது வாழ்வை சுயமதிப்பீடு செய்து வாழ, அவர்களை நாம் பயிற்றுவிக்க வேண்டும். அத்தகைய நோக்கத்தோடு உழைக்கும் அருட்பணியாளர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் உழைப்பிற்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

நீங்கள் என் சாட்சிகள்

”இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்” என்று சீடர்கள் இயேசுவிடத்தில் சொல்கிறார்கள். இதுவரை இயேசுவை நம்பாதவர்கள் எப்படி திடீரென ”நம்புகிறோம்” என்று பதில் சொல்கிறார்கள் என்பது நமக்கு சற்று வியப்பாக இருக்கிறது. எதனால் சீடர்கள் இயேசுவை நம்பினர்? என்ற கேள்வியும் நமக்குள்ளாக எழுகிறது.

யோவான் நற்செய்தி 16: 16 மற்றும் 17வது இறைவார்த்தைகளில் சீடர்கள் குழம்பிப்போயிருப்பதை நாம் வாசிக்கிறோம். ”அவர் பேசுவது நமக்குப்புரியவில்லையே” என்றும் தங்களிடையே பேசிக்கொள்கின்றனர். ஆனால், 19 வது இறைவார்த்தையில், இயேசு ”இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மீண்டும் சிறிதுகாலத்தில் என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைப்பற்றி உங்களிடையே சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று, அவர்கள் உள்ளத்தில் எண்ணியதை வெளிப்படையாக இயேசு சொன்னபோது, அவருடைய உள்ளத்தையும் ஊடுருவி அறியும் சிந்தனையைப்பார்த்தவுடன், இயேசுவிடத்தில் அவர்களின் நம்பிக்கை உறுதியாகிவிட்டது.

இயேசுவிடத்தில் நாம் நம்பிக்கை கொள்வதற்கு பல விசுவாசத்தின் சாட்சியங்கள் நம்மிடையே இருக்கிறது. ஆண்டவரின் வார்த்தை, சாட்சிய வாழ்வு வாழும் கிறிஸ்தவர்கள், புதுமைகள் என இந்த பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. இந்த விசுவாச சாட்சியங்கள் நமது விசுவாசத்தை தட்டி எழுப்பட்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------------

அன்பு செய்வோம், நம்பிக்கை வைப்போம்

இயேசுவோடு சீடர்கள் பல நாட்கள் இருந்திருந்தாலும், இன்றைய நற்செய்தியில் மட்டும் சிறப்பான வகையில், இயேசுவை முழுமையாக நம்புவதாகவும், இறைமகன் என ஏற்றுக்கொள்வதாகவும் சீடர்கள் கூறுகின்றனர். சீடர்களின் இந்த மனநிலைக்கு என்ன காரணம்? இயேசுவின் சீடர்கள் இயேசுவிடத்திலே அடிக்கடி வியந்து பார்க்க வைத்தது, அவருடைய உள்ளத்தையும் ஊடுருவும் பண்பு. சீடர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள்? என்பதை இயேசு உடனடியாக அறிந்து, அதற்கேற்ற பதிலைத்தருவது சீடர்களை ஆச்சரியப்படவும், மெய்சிலிர்க்கவும் வைத்தது. ஆக, இயேசுவின் இந்த ஆற்றல்தான், இயேசுவின் மட்டில் சீடர்களின் விசுவாசத்தை அதிகப்படுத்தியது என்றால் அது மிகையாகாது. இயேசுவும் தன் சீடர்களைப்புரிந்து கொள்கிறார். இயேசுவுக்கு தன் சீடர்களின் பலவீனங்கள் தெரியும். தான் கைது செய்யப்படும்போது, தன்னைவிட்டு விட்டு ஓடிவிடுவார்கள் என்பதும் அவருக்கு நன்றாகத்தெரியும். ஆனாலும், அவர்களை அவர்களின் பலவீனத்தோடு அன்புசெய்கிறார். அவர்கள் மீது தனது முழுமையான நம்பிக்கையை வைக்கிறார்.

பலவீனங்களும், குறைபாடுகளும் மானிட சமூகத்திற்கு இயல்பானவை. நம்முடைய பலவீனங்களையும், குறைபாடுகளையும் மற்றவர்கள் புரிந்துகொண்டு, நம்மை அன்பு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிற நாம், மற்றவர்களின் பலவீனங்களைப் பெரிதாகப் பார்க்கிறோம். மற்றவர்களின் குறைபாடுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இயேசு இப்படிப்பட்ட பாரம்பரியமான பார்வையிலிருந்து, ஒரு புதிய பார்வைக்கு நம்மை அழைக்கிறார். மனிதர்களை பலவீனங்களோடு அன்பு செய்யவும், அவர்கள் மீது முழுமையான நம்பிக்கை வைக்கவும் அழைப்பு விடுக்கிறார். குறைகளோடு அன்பு செய்வது எளிதானதாகத் தோன்றலாம். ஆனால், குறைகளோடு நம் நம்பிக்கையை வைப்பது சவாலான காரியமாகும்.

இயேசுவின் சீடர்களிடம் ஏராளமான குறைகள் இருந்தது. அவர்கள் பலவீனர்களாகவே இருந்தனர். ஆனாலும் இயேசு அவர்களை அன்பு செய்தார். அவர்கள் மீது தன் முழுமையான நம்பிக்கையை வைத்து, இறையரசுப்பணியைக் கட்டியெழுப்புகின்ற பணியை அவர்களிடம் ஒப்படைத்தார். இந்த நம்பிக்கையின் அடித்தளத்தில்தான் திருச்சபை மிகப்பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது. நாமும் மற்றவர்கள் மீது நம்பிக்கையை வைப்போம். அதிகப்பலனைப்பெற்றுக்கொள்வோம்..

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

“நான் தனியாய் இருப்பதில்லை”

நாம் வாழும் நவீன நாள்களின் வாழ்வியல் சிக்கல்களில் ஒன்று தனிமை உணர்வு. நம் காலத்தைய இளைஞர், இளம்பெண்கள், ஏன் மற்றவர்களும்கூட அவ்வப்போது தனிமை உணர்வில் தவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தனிமை உணர்வு எக்காலத்துக்கும் பொருந்தும் ஒரு வாழ்வியல் சிக்கலாக இருந்தாலும்கூட, இன்றைய நாள்களில் கடந்த காலத்தைவிட தனிமை ஒரு மாபெரும் சிக்கலாக மாறிவிட்டது.

அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன: கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்கள் இன்று சிறு குடும்பமாக வாழ விரும்புகின்றனர். பல பிள்ளைகள் இருந்த குடும்பங்களில் இன்று ஒன்று அல்லது இரு குழந்தைகளே உள்ளனர். பல வேலைகளுக்கு நடுவிலும் உறவுகள் ஆழம் குறைந்துவிட்டன. இத்தகைய காரணிகளால் தனிமை உணர்வு அதிகரித்துவருவது உண்மையே.

தனிமை உணர்வைப் போக்க உளவியலாளர்கள் பல பரிந்துரைகளை முன் வைக்கின்றனர். ஆனால், மிகச் சிறந்த வழியை ஆண்டவர் இயேசு நமக்கு முன்மொழிந்துள்ளார். “””’’’நீங்கள் என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள். ஆயினும், நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்”“ என்பதுவே இயேசுவின் அனுபவம். அவர் இறைவனின் உடனிருப்பை எப்போதும் உணர்ந்தார். இறைவனோடு ஒன்றித்திருந்தார். நாமும் அவரைப் பின்பற்றி, தனிமை உணர்வை வெற்றி கொள்வோம்.

மன்றாடுவோம்: நிறைமகிழ்வின் ஊற்றான இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போல நாங்களும், தந்தை எங்களோடு எப்போதும் இருக்கிறார் என்பதை அனுபவித்து உணரவும், தனிமை உணர்வை வெல்லவும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

''இயேசு சீடர்களை நோக்கி, 'உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள்.
நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்' என்றார்'' (யோவான் 16:33)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- தந்தை வகுத்த திட்டத்தின்படியே இயேசு துன்பங்கள் அனுபவித்து, சாவுக்கு உள்ளாகி, உயிர்பெற்று எழுவார் என்னும் செய்தியை அவருடைய சீடர்கள் புரிந்துகொள்ள இயலாமல் திணறினார்கள். இயேசு அவர்களுக்கு மீண்டும் மீண்டும் தம் இறுதி நாள்கள் பற்றிக் கூறியதாக நற்செய்தி ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இயேசுவிடம் நம்பிக்கை கொள்ள நாம் பெறுகின்ற அழைப்பு நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை. மாறாக, கடவுளின் அழைப்பு நம் இதயத்தை இதமாகத் தொட்டு நம் கவனத்தை ஈர்க்கிறது. அக்குரலை அமுக்கிவிடுகின்ற பல்வேறு குரல்கள் உண்டு. ஆனால் கடவுளின் அருள்துணையோடு நாம் அவருடைய வார்த்தையை நம் இதயத்தின் ஆழத்தில் கேட்கலாம். அக்குரல் நம்மை இனிமையாக அழைப்பதை உணரலாம். அவ்வாறு நாம் கடவுளின் குரலைக் கேட்டு, அதற்குப் பதில் தர முன்வரும்போது நம் உள்ளத்தில் அச்சம் என்பதற்கே இடமில்லை. ''துணிவுடன் இருங்கள்'' (யோவா 16:33) என்று இயேசு தம் சீடரை நோக்கிக் கூறிய சொற்கள் நம் இதயத்திலும் இன்று ஒலிக்கின்றன. நாமும் அச்சத்திற்கு இடம் கொடுக்காமல் இயேசுவின் வல்லமையால் தாங்கப்பட வேண்டும். அவர் ''உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டதால்'' (யோவா 16:33) நாமும் அந்த வெற்றியில் பங்கேற்போம்.

-- ஆறுதல் தருகின்ற இச்சொற்களைக் கூறிய இயேசு தம் சீடர்கள் துன்பங்களைச் சந்திப்பார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார். ''உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு'' (யோவா16:33). இங்கே குறிக்கப்படுகின்ற துன்பம் இயேசுவை எதிர்க்கின்ற சக்திகள் நம்மைத் தாக்குவதைக் குறிக்கின்றது. இயேசுவை எதிர்த்தவர்கள் அவரே கடவுளிடமிருந்து வந்த மீட்பர் என்பதைக் காணத் தவறிவிட்டார்கள். அதுபோலவே இன்றைய உலகிலும் இயேசுவின் நற்செய்தியை எதிர்த்துநிற்போர் உண்டு. இயேசுவின் வழியாகக் கடவுள் உலகுக்கு வழங்கிய நற்செய்தியை வெறுப்போர் உண்டு. ஏன், இயேசுவின் சீடர்கள் என்று பெருமைப்படுவோர் கூட சில வேளைகளில் நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கு எதிராகச் செயல்படுவதுண்டு. துன்பங்கள் தம்மை எதிர்த்துவந்தாலும் மன உறுதியை இழந்துவிடாமல் செயல்படுவோரே இயேசுவின் உண்மையான சீடர் எனலாம். இவ்வாறு இயேசுவில் நாம் நிலையான நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, துன்பங்களைக் கண்டு நாங்கள் அஞ்சாமல் உம் துணையை நாடி வாழ்ந்திட அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

நான் தனியாய் இருப்பதில்லை.

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இதய நோய்க்கு சிகிட்சை பெற்று மருத்துவமனையிலிருந்து திருப்பலிக்காக பங்கு ஆலயத்திற்கு வந்ததும் மக்கள் பலர் கேட்டனர், "ஃபாதர் தனியாகவா வந்தீர்கள்" என்று. 'இல்லை, இயேசு என்னும் இன்னொருவரும் என்னோடு வந்தார்' என்றேன். பங்கில் ஒரு பெண். "ஃபாதர், நோயுற்று நடக்க முடியாத என் கணவர், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இரவு வந்திறங்குகிறார். எனக்கு திருநெல்வேலியே தெரியாது. இரவில் ரயில் நிலையம் எப்படி போவேன். உற்றார் உறவினர் உதவியைக் கேட்டேன். கிடைக்கவில்லை. தனியே போக பயமாக இருக்கறது" என்றாள். "போ, துணிந்து போ. நீ தனியாக போகவில்லை;. இயேசு உனக்கு முன் உன்னோடு வருவார்" என்றேன். புறப்பட்டுச் சென்றாள். திரும்பி வந்து சொன்னாள், "ஃபாதர், நீங்க சொன்னதுபோல, திருநெல்வேலி ரயில் நிலையம் சென்றேன், ரயில் வரும் இடத்தில் ஒரு இடத்தில் நின்றேன். நான் நின்ற இடத்தில், என் முன்னால் என் கணவர் நடக்க முடியாமல் இறங்கினார். என்ன ஆச்சரியம்! என் அருகில் இரயில் நிலையப் பணியாளருள் ஒருவர் மூன்று சக்கர சைக்கிள் ஒன்றை வைத்துக்கொண்டு என் அருகில் நின்றார். அதில் என்; கணவரை அமர்த்தி மிக எளிதில் வெளியே வந்து வீடு வந்து சேர்ந்தேன். உண்மையிலே நான் தனியாக இல்லை. என்னோடு என் இயேசு இருக்கிறார்" என்றாள்.

எத்தனை சந்தர்ப்பங்களில் 'ஐயோ, நான் தனியே இருக்கிறேனே; எனக்கு யாருமே இல்லையே' என்று மனமுடைந்து, நம்பிக்கை இழந்து கடவுளை நோக்கி முறையிட்டிருக்கிறோம். நாம் தனியேஇல்லை. உலகை, துன்பத்தை, மரணத்தை வென்ற இறைவன் இயேசு நம்மோடு இருக்கிறார். மகனே! மகளே! நீ தனியாக இல்லை. நான் உன்னோடு இருக்கும் உன் தெய்வம். என் பெயர் இம்மானுவேல்.இம்மானுவேல் என்றால் கடவுள்நம்மோடு. நான் உன்னை விட்டு விலகுவதில்லை. உன்னைக் கை விடுவதுமில்லை. உன் இயேசு உன்னை தனியே விட மாட்டார்.ஆகவே இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்