முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20: 17-27

அந்நாள்களில் பவுல் மிலேத்துவிலிருந்து எபேசுக்கு ஆள் அனுப்பி, திருச்சபையின் மூப்பர்களை வரவழைத்தார். அவர்கள் வந்ததும் அவர்களிடம் அவர் கூறியது: ``நான் ஆசியாவுக்கு வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரை எவ்வாறு உங்களிடம் நடந்துகொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். யூதர்களுடைய சூழ்ச்சிகளால் எனக்கு ஏற்பட்ட சோதனைகளின்போது மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்குப் பணிபுரிந்தேன். நன்மை பயக்கும் ஒன்றையும் உங்களுக்கு நான் அறிவிக்காமல் விட்டுவிடவில்லை; பொது இடங்களிலும் வீடு வீடாகவும் சென்று உங்களுக்குக் கற்றுக்கொடுத்தேன். நம் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளுமாறும், மனம்மாறி கடவுளிடம் வந்து சேருமாறும் நான் யூதரிடமும் கிரேக்கரிடமும் வற்புறுத்திக் கூறினேன். இப்போதும் தூய ஆவியாருக்குக் கட்டுப்பட்டு நான் எருசலேமுக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு என்ன நேரிடும் என்பது தெரியாது. சிறை வாழ்வும், இன்னல்களும் எனக்காகக் காத்திருக்கின்றன என்று தூய ஆவியார் ஒவ்வொரு நகரிலும் என்னை எச்சரித்து வருகிறார். என்னைப் பொறுத்த வரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை. இறையருளைப் பற்றிய நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம். இதுவரை நான் உங்களிடையே வந்து இறையாட்சியைப் பற்றிப் பறைசாற்றினேன். ஆனால் இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை என்று நான் அறிவேன். உங்களுள் எவரது அழிவுக்கும் நான் பொறுப்பாளியல்ல என்று இன்று நான் உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுளின் திட்டம் எதையும் நான் உங்களுக்கு அறிவிக்காமல் விட்டுவிடவில்லை.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 68: 9-10. 19-20

பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்.

9 கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்;
வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர்.
10 உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்;
எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். -பல்லவி

19 ஆண்டவர் போற்றி! போற்றி!
நாளும் நம்மை அவர் தாங்கிக்கொள்கின்றார்;
இறைவனே நம் மீட்பு.
20 நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்;
நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களோடு என்றும் இருக்கும்படி தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அல்லேலூயா.

யோவான் 17:1-11

பாஸ்கா காலம்-ஏழாம் வாரம் செவ்வாய்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-11


அக்காலத்தில் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ``தந்தையே, நேரம் வந்துவிட்டது. உம் மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும். ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர்மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர். உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு. நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன். தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்.

நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள். நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள். அவர்களுக்காக நான் வேண்டுகிறேன்.

உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள். என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய் நான் மாட்சி பெற்றிருக்கிறேன். இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 17: 1 - 11
மாட்சிப்படுத்துவோமா?

குழந்தைகள் கல்வி கற்று தன் பெற்றோர்களை மாட்சிப்படுத்த வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அரசியல் தொண்டர்கள் எப்படியாவது தன் தலைவரை வெற்றி பெற செய்து அரசவையில் வைத்து மாட்சிப்படுத்த வேண்டும் என்பது அவர்களின் ஏக்கம். சாதாரண அடித்தட்ட மக்கள் தங்கள் சமுதாயத்திலிருந்து ஒருவன் உயர்நிலைக்கு வந்து மாட்சியடைய வேண்டும். அப்போது தான் நமக்கு விடிவுக்காலம் என்பது அவர்களின் ஏக்கம். இவ்வாறு எல்லோருமே ஏதாவது ஒரு வழியில் மாட்சிப்படுத்த ஏங்கிக்கொண்டே திரிகின்றார்கள்.

இயேசு கடவுளை மாட்சிப்படுத்த இந்த உலகிற்கு அனுப்பப்பட்டவர். ஏனென்றால் கடவுள் இந்த உலகினை படைக்கின்றார். படைக்கப்பட்ட உலகம் பாவம் என்ற போர்வையினால் மூடப்படுகிறது. இந்த போர்வையை கிழித்தெறிய கடவுள் பல இறைவாக்கினர்களை அனுப்புகின்றார். ஆனால் தகர்க்க முடியவில்லை. இறுதியிலே தன் ஒரே மகனை அனுப்பி போர்வையை தகர்த்தெறிகின்றார். அது மட்டுமில்லாமல் மக்கள் நிலைவாழ்வை பெறுகின்ற அளவிற்கு அவர்களுக்கு கற்றும் கொடுக்கின்றார். ஆனால் தற்போது தான் மாட்சியடைய வேண்டும் என்பது இயேசுவின் ஒரு எண்ணமாக இருக்கிறது. ஏனென்றால் அவர் இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்பது தான் கடவுளின் திட்டம். இது தான் கடவுளை மாட்சிப்படுத்துவதற்கான நெறிமுறைகள். ஆனால் இறந்து உயிர்த்தெழ வேண்டும். இது தான் இயேசுவின் மாட்சி. அத்தகைய மாட்சிக்காக தான் இன்றைய வாசகத்திலே தன் தந்தையிடம் மன்றாடுகின்றார். அதனால் தான் இந்த ஜெபத்தை இயேசுவின் குருத்துவ ஜெபம் என்று கூறுவார்கள்.

நான் என் பெற்றோரை மாட்சிப்படுத்திருக்கின்றேனா? கடவுளை மாட்சிப்படுத்த முயற்சி எடுத்திருக்கிறேனா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

==========================

உன் செயல்கள் உன்னை மகிமை படுத்தட்டும்!

யோவான் 17: 1-11

நிலையான வாழ்வு (நீடித்த மகிழ்ச்சி) என்பது இறைவனோடு மனிதர்கள் ஒன்றித்திருக்கும் போது கிடைக்கக் கூடியது. உலகம் தோன்றுவதற்கு முன்பே அத்தகைய மகிழ்ச்சியை இயேசு வார்த்தை வடிவில் கடவுளாகிய தந்தையோடு இருந்து அனுபவித்தவர் (யோவா 1;1-3). எனவேதான், இயேசு வேண்டுகிற செபத்தில் “தந்தையே, உலகம் தோன்றும் முன்னே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர்” என்று சுட்டிக்காட்டுகிறார். இயேசுவுக்கும், தந்தையாகிய இறைவனுக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தது. இயேசு இவ்வுலகில் வாழும் போது, தந்தையை மகிமைப்படுத்த வேண்டும்; கடவுள் விண்ணுலகில் இயேசுவை மகிமைப்படுத்துவார் என்பதுதான் இவ்வொப்பந்தம்.

இயேசு தன் பணி வாழ்வின் மூலம் தந்தையை மகிமைப்படுத்தினார். அது கானாவூரில் தண்ணீரை திராட்சை இரசமாக (யோவா 2:11) மாற்றுவதில் இருந்து, இறந்த இலாசரை உயிர்ப்பித்தல் (யோவா 11:40) வரை தொடர்ந்தது. இறுதியாக, சிலுவையில் தன் உயிரைக் கொடுத்து ‘எல்லாம் நிறைவேறிற்று’ என்று சொல்லி முழுமையாக தன்னை ஒப்புக்கொடுத்து கடவுளை மகிமைப்படுத்தினார். தந்தையும், இயேசுவை சிலுவையில் இறந்த உடனே மத்தேயு நற்செய்தியாளர் (27: 45-54) குறிப்பிடுவது போல “அந்த நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன” போன்ற செயல்களின் மூலம் மகிமைப்படுத்தினார். இறுதியாக, உயிர்த்தெழுதல் மூலமாக இயேசுவுக்கும் மாபெரும் மகிமையைக் கொண்டு வந்தார். நாமும் நம்முடைய செயல்களின் மூலம் கடவுளை மகிமைப்படுத்தும் போது கடவுளும் நம்மை மகிமைப்படுத்துவார்; நம்மோடு பயணிப்பார் என்பது நற்செய்தி சொல்லும் செய்தியாக இருக்கிறது.

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

திருத்தூதர்பணி 20: 17 – 27
பவுலடியாரின் இறைப்பற்று

பவுலடியார் எபேசு நகரத்தைச் சேர்ந்த திருச்சபையின் மூப்பர்களை வரவழைக்கிறார். மூப்பா்கள் என்பவர்கள் ஆன்மீகத் தலைவர்கள். எந்த ஒரு விவிலியப்பகுதியை வாசித்தாலும், எங்கே? ஏன்? எப்போது? யார்? என்ன? எப்படி? என, கேள்விகளை வைத்து, நாம் பதில் காண முயலுகின்றபோது, விவிலியம் நமக்கு சொல்ல வருகிற செய்தியை, ஓரளவு புரிந்து, கடவுள் நமக்கு சொல்கிற அறிவுரையைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த பகுதி பவுலின் மூன்றாவது திருத்தூதுரைக்கும் பயணத்தின் தொடக்கம் என்று சொல்லலாம் 18: 23 – 21: 16). திருத்தூதர் பவுல், அவருடன் இருந்தவர்கள் மற்றும் திருச்சபையின் மூப்பர்கள் இதில் பங்கெடுக்கிறார்கள். இடம்: மிலேத். பவுல் எதற்காக எபேசு சென்று அவர்களை சந்திக்கவில்லை? எதற்காக அவர்களை மிலேத்துவிற்கு வரவழைக்கிறார்? 20: 16 தெளிவாகச் சொல்கிறது: பவுல் காலம் தாழ்த்த விரும்பாததால் எபேசுக்குப் போகாமலே, எருசலேமுக்குச் செல்லத் தீர்மானித்திருந்தார். முடியுமானால், பெந்தகோஸ்து நகரில் அங்கிருக்க வேண்டும் என்று விரைவாய்ச் சென்றார். இதுவரை தான் அவர்களோடு இருந்தகாலம் மட்டும், அவருடைய திட்டம் என்ன? எதற்காக அவர் சில திட்டங்களை முன்னெடுத்தார் என்பதை, விளக்கிக்கூறுகிறார்.

கடவுளின் திட்டத்தை நிறைவேற்றினேன், கடவுளின் திட்டம் எதையும் அறிவிக்காமல் விட்டுவிடவில்லை என்பதை உறுதிப்படுத்தவே, அவர்களை அழைத்திருக்கிறார். அவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கைமுறைக்கான அறிவுரையாகவும் நாம் இதனை எடுத்துக் கொள்ளலாம். ஏறக்குறைய ஒருவருக்கொருவர் பிரியாவிடை கொடுக்கிற நிகழ்ச்சியாகவே இது பார்க்கப்படுகிறது. ”இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை” என்கிற வார்த்தைகள், மூப்பர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும். இறைத்திட்டத்திற்கு ஏற்ப நடப்பதே, நான் அறிவித்த நற்செய்தி என்பதை பவுல் இங்கே வெளிப்படுத்துகிறார். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றி அவா் கவலைப்படவில்லை. மாறாக, கடவுள் முன்னிலையில் அவருடைய திட்டத்தை உறுதிப்படுத்துகிறவனாக இருக்கிறேனா? என்பது தான், அவருடைய சிந்தனையாக இருந்தது.

இன்றைக்கு நம்முடைய வாழ்வில், பல நேரங்களில் மற்றவர்களுக்காக வாழ்கிறோம். அடுத்தவர் நம்முடைய வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை, தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கை, கடவுளின் திட்டத்திற்கு ஏற்ப அமைந்திருக்கிறதா? என்பதுதான், நாம் கேட்கிற கேள்வியாக இருக்க வேண்டுமே தவிர, மற்றவர்களுக்கானதாக இருக்கக்கூடாது.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

திருப்பாடல் 68: 9 – 10, 19 – 20
”கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்”

அனைத்து உலகின் அரசர்களே! ஆண்டவரைப் போற்றுங்கள், புகழுங்கள் என்கிற வார்த்தைகளை நாம் அடிக்கடி திருப்பாடலில் பார்க்கிறோம். ஆண்டவரைப் போற்ற வேண்டும், புகழ வேண்டும் என்கிற சிந்தனைகள் எதற்காக மீண்டும், மீண்டும் தரப்படுகிறது? இந்த உலகத்தில் வாழ்கிறவர்கள் மற்றவர்களைப் புகழ்கிறார்கள். உதாரணமாக, அரசியல் தலைவர்கள் பதவிக்காக, அதிகாரத்திற்காக மற்றவர்களை முகஸ்துதி செய்கிறார்கள். தங்களது மானத்தை விற்றாலும் பரவாயில்லை, பதவியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். எதிர்பார்ப்புக்களோடு புகழக்கூடியவர்கள் அதிகம். சாதாரண பதவிகளுக்கும், பட்டங்களுக்கும் மனிதர்களைப் புகழக்கூடிய பலபேர் கடவுளைப் புகழ்வதற்கு நேரமில்லை. இந்த மனநிலையிலிருந்து விடுவிக்கப்பெற்று, கடவுளைப் புகழ வேண்டும் என்பதே ஆசிரியரின் அறைகூலாக இருக்கிறது.

கடவுளைப் போற்றுவதும் புகழ்வதும் நமக்கு மிகப்பெரிய நிம்மதியைத் தருகிறது. அது எதையோ ஒன்றை எதிர்பார்ப்பது கிடையாது. கடவுள் நமக்குச் செய்திருக்கிற எல்லா நன்மைகளையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிற ஓர் உணர்வு. கடவுள் எப்போதும் நம் மேல் அன்பு வைத்திருக்கிறார். அவர் எப்போதும் நமக்கு உதவி செய்வதற்காக காத்திருக்கிறார். அவர் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை. நம்மை எந்நாளும் காக்கிறவராக இருக்கிறார். இவ்வளவு நன்மைகளைச் செய்யும் இறைவனை நாம் புகழ வேண்டும். அவரை முழு உள்ளத்தோடு போற்ற வேண்டும். அது தான் நமக்கு வாழ்க்கையில் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருமே தவிர, மற்றவர்களைப் புகழ்ந்து பெறுகிற பட்டங்களோ, பதவிகளோ எப்போதும் நிறைவு தராது.

நமது வாழ்க்கையில் எப்போதும் கடவுளைப் போற்றுவதற்காக நாம் நேரத்தைச் செலவிட வேண்டும். கடவுள் நல்லவராக இருக்கிறார். நம் மீது நிரந்தரமான அன்பை கொண்டிருக்கிறார். அந்த கடவுளிடத்தில் நாம் எப்போதும் பாசமுள்ளவர்களாக, அவரைப்போற்றக்கூடியவர்களாக வாழ்வோம். 

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

சிலுவையும் மகிமையும்

சிலுவை எப்படி ஒருவருக்கு மகிமையை தர முடியும்? துன்பம் எப்படி ஒருவருக்கு மாட்சிமையாக இருக்க முடியும்? தோல்வி எப்படி ஒருவருக்கு மணிமகுடமாக மாற முடியும்? இந்த கேள்விகள் அனைத்துமே இயேசுவின் வாழ்வை நாம் பார்க்கிறபோது, படிக்கிறபோது ஏற்படக்கூடியவை. ஆனால் அப்படித்தான் நடந்திருக்கிறது. சிலுவை மகிமையாக இருந்திருக்கிறது. துன்பம் மாட்சியைத் தந்திருக்கிறது. தோல்வி மணிமகுடமாக மாறியிருக்கிறது. இத்தனை  கேள்விகளுக்கும் ஒரே பதில் தான். அதுதான் கீழ்ப்படிதல். கீழ்ப்படிதல் வாயிலாக நாம் சிலுவையை மகிமையாக மாற்ற முடியும். துன்பத்தை மாட்சிமையாக கொடுக்க முடியும். தோல்வியை மணிமகுடமாக மாற்ற முடியும். அதுதான் இயேசுவின் வாழ்வு நமக்கு கற்றுத்தரும் பாடமாக அமைகிறது.

கடவுளை மாட்சிமைப்படுத்துவதை நமது கீழ்ப்படிதல் வாயிலாக செய்ய முடியும்.கடவுள் மனிதர்களைப் படைத்தது தன்னை மாட்சிமைப்படுத்துவதற்காக. ஆனால், கீழ்ப்படியாமையால் மனிதன் தவறு செய்கிறான். கடவுளை புறந்தள்ளுகிறான். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு புகழ் சேர்க்கிறார்கள். எப்போது? தங்கள் பெற்றோருடைய வார்த்தைகளுக்கு பணிந்து நடக்கிறபோது. இயேசு சிலுவையை தோல்வி என்று கருதி ஒதுக்கிவிடவில்லை. மாறாக, கீழ்ப்படிதல் மூலமாக, வெற்றியாக மாற்றுகிறார். நமது வாழ்க்கையில் நாம் கடவுளுக்கு கீழ்ப்படிய வேண்டும். கடவுளின் வார்த்தைக்கு பணிந்து நடக்க வேண்டும்.

 

கடவுள் நிலையில் இருந்து நமக்கு வாழ்வு கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய நமது பெற்றோருக்கு நாம் உண்மையுள்ளவர்களாக, கீழ்ப்படிதல் உள்ளவர்களாக விளங்க வேண்டும். நமது வாழ்வில் அக்கறைகொண்டு, நம்மை நேர்வழியில் நடத்த முனையும் பெரியவர்களுக்கும் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

கீழ்ப்படிதல்

சிலுவையின் வழியாக இயேசு எப்படி கடவுளை மாட்சிபடுத்த முடியும்? என்ற கேள்வி இந்தப்பகுதியை வாசிக்கிறபோது நமக்குள்ளாக எழுவது. சிலுவைக்கும், மாட்சிமைக்கும் என்ன தொடர்பு? சிலுவையை மாட்சிமையாக மாற்றக்கூடிய வல்லமை, இரண்டையும் இணைக்கின்ற மையப்புள்ளி ஒன்றே ஒன்றுதான். அதுதான் கீழ்ப்படிதல். இயேசு கீழ்ப்படிதல் என்கிற நற்பண்பு மூலமாக சிலுவையை மாட்சிமை மிகுந்ததாக மாற்றுகிறார். தொடக்கத்தில் முதல் மனிதன் தனது கீழ்ப்படியாமையால் ஆசீர்வாதமான உலகத்தை, மாட்சிமை உள்ள உலகத்தை, சாபக்கேடாக மாற்றுகிறான். இங்கே அந்த சாபக்கேட்டிற்கு காரணமாகச்சொல்லப்படுவது, முதல் மனிதனின் கீழ்ப்படிதல். ஆனால், இயேசுவின் வாழ்க்கையில் அங்கே அடிப்படை மாற்றம் நிகழ்கிறது. தனது கீழ்ப்படிதல் மூலமாக அவமானச்சின்னம் என்று கருதப்பட்ட சிலுவையை மாட்சிமை உள்ளதாக மாற்றுகிறார்.

கீழ்ப்படிதல் என்பது உன்னதமான நற்பண்பு. நாம் அனைவரும் கடவுளுக்கு கீழ்ப்படிதல் உள்ள பிள்ளைகளாக வாழ வேண்டும் என்பதுதான் இயேசுவின் விருப்பம். அதன் வழியாக நாம் கடவுளை மாட்சிமைப்படுத்துகிறோம். நாட்டின் குடிமக்கள், நாட்டின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதன் வழியாக, அந்த நாட்டை உன்னதமான, மேன்மையான நாடாக மாற்றுகின்றனர். ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்ததற்கு ஏற்ப, தங்களையே கீழ்ப்படிதலுக்கு உள்ளாக்கி வாழ்கிற மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்க்கின்றனர். இயேசு நினைத்திருந்தால், சிலுவையின் பளுவிலிருந்து தன்னை தற்காத்துக்கொண்டிருக்க முடியும். சிலுவையின் துன்பத்திலிருந்து தப்பித்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச்செய்யவில்லை. கீழ்ப்படிந்து அதனை மேன்மைப்படுத்துகிறார்.

கடவுளுக்கும், கடவுளின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறபோது, நமக்கு நிறைவான ஆசீர்வாதம் கிடைக்கிறது. துன்பங்களும், சோதனைகளும் அதிகமாகிறபோது, நாம் இறைவனுக்கு முழுமையான கீழ்ப்படிதலுள்ளவர்களாக மாற வேண்டும். அந்த கீழ்ப்படிதல் என்னும் நற்பண்பு, நமக்கு மாட்சிமையைக் கொண்டுவரும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

சிலுவையிலே தான் மீட்பு உண்டு

இயேசுவைப் பொறுத்தவரையில் அவருக்கு வாழ்வின் உச்சகட்டம் சிலுவை. சிலுவையில் தான் மீட்பு, சிலுவை தான் முடிவில்லாத வாழ்வைப்பெற்றுத்தரப்போகிறது என்பதை அவர் முழுமையாக நம்பினார். யோவான் 12: 23 ல் வாசிக்கிற, “மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்கிற இறைவார்த்தை இதை வலியுறுத்துவதாக அமைகிறது. சிலுவைக்கும், மீட்புக்கும் உள்ள தொடர்பைப்பற்றி இயேசு தொடர்ச்சியாக பல இடங்களில் பேச வேண்டிய அவசியம் என்ன? அதனுடைய அர்த்தம் என்ன?

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோம் என்றால், வரலாற்றிலே இடம் பிடித்திருக்கிற சரித்திர நாயகர்களுக்கு இறப்புதான் இந்த அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. சரித்திரத்தில் இடம்பெற்ற மனிதர்களில் பலர் உயிர் வாழ்ந்தபோது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவும் இல்லை. புகழ் பெறவும் இல்லை. ஆனால், அவர்கள் தழுவிய மரணம் தான் அவர்களின் பெயர்களை சரித்திரத்தில் இடம்பெறச்செய்து, அவர்களுக்கு வரலாற்றில் தனி இடத்தைப்பெற்று தந்திருக்கிறது. இயேசு இறந்தபோது கூட நூற்றுவர் தலைவன் ஒருவர் ‘உண்மையிலே இவர் இறைமகன் தான்’ என்று சொன்னதும் இதை உறுதிப்படுத்துகிறது (மத்தேயு 27: 54). இயேசு சிலுவையை தன் தந்தை தனக்கு கொடுத்த பொறுப்பாக ஏற்றுக்கொண்டார். எனவேதான், அந்த சிலுவையை சுமப்பது தந்தையின் திட்டத்தை நிறைவேற்ற உதவியாக இருக்கும் என்று நம்பினார். அந்த சிலுவையைத் தாங்குவதன் வாயிலாக இந்த உலகத்திற்கு மீட்பைக்கொண்டு வரமுடியும் என்று நினைத்தார். அதற்காக, சிலுவையையும், மீட்பையும் இயேசு இணைத்துப்பேசுகிறார். தொடர்ந்து பேசுகிறார். சிலுவையின் வழியாக நிச்சயம் மீட்பு உண்டு என்பதில் இயேசு ஒருபோதும் சந்தேகப்பட்டது கிடையாது.

நம்முடைய வாழ்வில் சங்கடங்கள் வருகின்றபோது, அதன் வழியாகக்கூட கடவுள் நம்மோடு பேசலாம். அந்த துன்பத்தின் வழியாக அவர் நமக்கு ஏதாவது ஒரு செய்தியைச் சொல்ல விரும்பலாம். அதன் வழியாக நமக்கு மீட்பு கூட கிடைப்பதற்கு வழிவகை செய்யலாம். நம்முடைய வாழ்வில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், துன்பத்தை கடவுளின் சாபமாகப் பார்க்காமல், அதன் வழியாக நாம் கற்றுக்கொள்ளும் செய்தியைக் கண்டுபிடிப்போம்..

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
======================

தந்தையை மாட்சிப்படுத்துவோம்

இயேசுவின் குருத்துவ செபம் என அழைக்கப்படும் இன்றைய வாசகப் பகுதி பல செய்திகளை நமக்குத் தருகிறது. “தந்தையை மாட்சிப்படுத்துதல்”“ என்னும் ஒரு கருத்தை மட்டும் நாம் உணர்வோம்.

தமது இறைத் தந்தையைப் பெருமைப்படுத்த வேண்டும், அவரை மாட்சிப்படுத்த வேண்டும் என்பதே இயேசுவின் வாழ்வின் இலக்காக இருந்தது. எப்படியெல்லாம் தந்தையை மாட்சிப்படுத்தலாம் என இன்றைய வாசகத்தின் பகுதிகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. “நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்துமுடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்”“ என்கிறார் இயேசு.

இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் கடமைகளையும், பொறுப்புகளையும், வேலைகளயும் தந்திருக்கிறார். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தந்தை, கணவர், மகன், உடன்பிறப்பு எனக் கடமைகள் இருக்கின்றன. நம் ஒவ்வொருவருக்கும் நமது பணி, வேலை இருக்கிறது. இதுபோக, சமூகக் கடமைகளும் இருக்கின்றன. இந்தப் பணிகளையெல்லாம் நன்றாகச் செய்கிறபோது, நாம் தந்தையை மாட்சிப்படுத்துகிறோம் என்பது மிகப் பெரும் நற்செய்தி.

எதைச் செய்தாலும், மனிதருக்காகச் செய்யாமல், ஆண்டவருக்காகச் செய்யவேண்டும் என்றார் பவுலடியார். “நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல, ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என்பதை உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்“ (கொலோ 3: 23) என்னும் அவரது வாக்குகளை நினைவுகூர்வோம்.

மன்றாடுவோம்: தந்தை கொடுத்த வேலையை நன்றாகச் செய்து தந்தையைப் பெருமைப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்களது கடமைகள், வேலைகள், பணிகளை நன்கு நிறைவேற்ற எங்களுக்கு அருள் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

''இயேசு, 'தந்தையே, இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை.
அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன்' என்றார்'' (யோவான் 17:11)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- தந்தையிடம் திரும்பிச் செல்கின்ற இயேசு தாம் ''உலகில் இருக்கப்போவதில்லை'' என்கிறார். அதாவது, தம் சீடர்களோடு நடமாடிப் பழகி, அவர்களுக்குக் கடவுளின் ஆட்சி பற்றி அறிவித்த நாள்கள் முடிவுக்கு வந்துவிட்டன என இயேசு அறிவிக்கிறார். தாம் துன்பங்கள் அனுபவித்து, இறக்கப் போவதையும் அவர் சீடர்களுக்குத் தெரிவிக்கிறார். அதே நேரத்தில் இயேசு உலகை விட்டு மறைந்துபோகவில்லை. ஏனென்றால் அவர் சாவை வென்று, உயிர்பெற்றெழுந்தார். புதியதொரு முறையில் அவர் இந்த உலகில் நம்மோடு இருந்துவருகிறார். எனவே, தந்தையிடம் இயேசு சென்றார் என்றதும் அவர் நம்மை மறந்துவிட்டதாகவோ நம்மிடமிருந்து மறைந்துவிட்டதாகவோ நாம் எண்ணலாகாது. மாறாக, தந்தையிடம் சென்ற இயேசு தம் சீடர்களின் வாழ்வில் இன்னும் சிறப்பான விதத்தில் பங்கேற்கிறார்.

-- தந்தைக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு தனித்தன்மை வாய்ந்தது. தந்தை தம் மகனாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார். அந்த மகிமையில் நமக்கும் பங்கு வழங்கப்படுகிறது. இயேசு நம்மோடு உயிர்பெற்றெழுந்த ஆண்டவராக இருந்து நம்மை வழிநடத்துகிறார். எனவே நாம் தந்தையோடு உறவாட இயலுகிறது. தந்தையை நமக்கு இயேசு வெளிப்படுத்துகிறார். எனவே நாம் கடவுளின் உடனிருப்பை நம் வாழ்வில் உணர முடிகிறது. இது நமக்கு வழங்கப்படுகின்ற தூய ஆவியின் சக்தியால் நிகழ்கிறது. கடவுளிடம் சென்ற இயேசு நமக்காகப் பரிந்துபேசுகிறார் என்பது இன்னொரு ஆழமான உண்மை. நாம் கடவுளை அணுகிச் சென்று நம் தேவைகளை அவரிடம் எடுத்துரைக்கும்போது நமக்காகத் தந்தையிடம் மன்றாட இயேசு இருக்கின்றார். ஏனென்றால் இயேசு நம்மைப் போல மனிதராக வாழ்ந்ததால் மனித நிலை அவருக்கு அன்னியம் அல்ல. நம் தேவைகளை அவர் அறிவார். நமக்குக் கடவுளின்; அன்பையும் அருளையும் பெற்றுத் தருவார். ஆக, உலகில் இருக்கப்போவதில்லை எனக் கூறுகின்ற இயேசு புதிய முறையில் நம்மோடு இருக்கிறார் என்பதும் நம்மைத் தந்தையிடம் இட்டுச் செல்கிறார் என்பதும் நம் நம்பிக்கை.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகன் காட்டுகின்ற வழியில் நாங்கள் நடந்து சென்று உம்மைக் கண்டடைய அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

நமக்காக செபிக்கும் இயேசு

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நம் இறைவன் இயேசு நமக்காக செபிக்கும் இறைவன் என்பதை இங்கு பார்க்கிறோம். இயேசு நமக்கு நற்போதனை, நல்ல அறிவுரை, நல்ல ஆலோசனை வழங்கும் இறைவன் என்பதை அவரது மலைப் பொழிவிலிந்து அறிந்தோம். இந்த இயேசு நமக்கு நல்சுகம் தரும் தெய்வம் என்பதை அவர் நோயைக் குணப்படுத்திய நிகழ்ச்சிகளில் கண்டோம். பாவத்தை மன்னித்து பாவியை அரவணைத்தபோது, நம் தெய்வம் அன்பும் இரக்கமும் உள்ளவர் என்று அறிகிறோம். நமக்காக பாடுகள்பட்டு இறந்தபோது இந்த இயேசு நம்மீது வைத்த எல்லை இல்லா அன்பை அனுபவிக்கிறோம். அவ்வாறே நம் இயேசு நமக்காகச் செபிக்கும் தெய்வம்.

நாம் எல்லோரும் நிலைவாழ்வைப் பெற வேண்டும்; நம் வாழ்வு தந்தை இறைவனுக்கு மாட்சியைக் கொண்டுவர வேண்டும்; இவ்வுலகில் நாம் வாழும்போது எல்லா பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்பதற்காகச் செபிக்கிறார். நம்மில் யாரையும் இழப்பதற்கோ, யாரும் அழிந்து போவதையோ நம் இயேசு விரும்பவில்லை. ஆகவே செபிக்கிறார்.

இவ்வாறு நமக்காக பலத்த குரல் எழுப்பி இயேசு நமக்காக செபிப்பதன் மூலம்,மனிதர்கள் நாம் செபிக்க வேண்டும் என்பதைச் சொல்லுகிறார். செபமே எல்லாவற்றிலும் சக்தி வாய்ந்தது என்பதை எடுத்துரைக்கிறார். நம் செபத்தில் வலிமை என்ன? எவ்வளவு நம்பிக்கையோடு செபிக்கிறோம். இயேசுவோடு செபிப்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்