முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20: 28-38

அந்நாள்களில் பவுல் எபேசு சபையின் மூப்பர்களிடம் கூறியது: ``தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக்கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்குத் தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள். உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியும். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்பும் அளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். எனவே விழிப்பாயிருங்கள்; மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும் இடைவிடாது கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி வந்ததை நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள். இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக! அவ்வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்கும் உரிய உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தர வல்லது. எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடு இருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்கவேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன். அதோடு, பெற்றுக்கொள்வதைவிடக் கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவுகூருங்கள் என்றும் கூறினேன்.'' இவற்றைச் சொன்னபின் அவர் முழந்தாள்படியிட்டு, அவர்கள் எல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினார். பின் எல்லாரும் பவுலைக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கதறி அழுதனர். `இனிமேல் நீங்கள் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை' என்று அவர் கூறியது அவர்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது. பிறகு அவர்கள் கப்பல்வரைக்கும் சென்று அவரை வழியனுப்பிவைத்தனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 68: 28-29. 32-34. 34-35
பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்.

28 கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்;
என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்!
29 எருசலேமில் உமது கோவில் உள்ளது;
எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர். -பல்லவி

32 உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்;
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.
33 வானங்களின் மேல், தொன்மைமிகு வானங்களின் மேல், ஏறிவரும் அவரைப் புகழுங்கள்;
இதோ! அவர் தம் குரலில், தம் வலிமைமிகு குரலில், முழங்குகின்றார்.
34ய கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள். -பல்லவி

34b அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது;
அவரது வலிமை மேக மண்டலங்களில் உள்ளது.
35உ கடவுள் போற்றி! போற்றி! -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.

யோவான் 17:11-19

பாஸ்கா காலம்-ஏழாம் வாரம் புதன்


நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11b-19

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ``தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும். நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான். இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன். உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது. அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை. நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன். அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 17: 11 - 19
காத்துக் கொள்வோம்

கிளாடியேட்டர் திரைப்படத்தில் தன் மாணவனை அரங்கத்திற்குள் அனுப்புகின்ற ஆசிரியர் உனக்கு விடுதலை வேண்டுமென்றால் மக்களை வெற்றி கொள் என்று சொல்லி அனுப்புவார். மக்களை அல்லது மனிதர்களை வெற்றி கொள்தல் என்பது அவர்கள் மேல் உரிமை பாராட்டுதல். ஆனால் நாம் சொல்வது போல இது எளிமையல்ல. ஏனெனில் உளவியல் அடிப்படையில் மக்கள் மாறக்கூடியவர்கள், விருப்பும் வெறுப்பும் பாராட்டப்படுவர்கள் மற்றும் மறைபொருள்கள். ஏனெனில் அவர்களது உள்ளத்தில் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியாது. இதனால் தான் இது அரிது.

இயேசு மக்கள் மீது முழு உரிமை எடுத்துச் செயல்பட்டார். அத்தகைய உரிமையின் வெளிப்பாடு தான் இன்றைய நற்செய்தி வாசகம். ஏனென்றால் மக்களோடு நடந்தார், உணவு அருந்தினார், அவர்களோடு தங்கினார். இப்போது அவர் தன் தந்தையிடம் செல்லக்கூடிய காலம் வந்து விட்டது. அதனால் தான் தன் உரிமையின் உச்சகட்டமாகிய அந்த மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பினை தன் தந்தையிடம் ஒப்படைக்கின்றார். இது எந்த அளவிற்கு விளங்க வேண்டுமென்றால் கடவுள் தன் மகனிடம் ஒன்றாய் இருப்பது போல, மக்களும் அவரோடு ஒன்றாய் இருக்க வேண்டும். தந்தை மகன் உறவு போல செயல்பட வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம். எந்த அளவிற்கு என்று பார்க்கின்ற போது இயேசு எப்போதுமே கடவுளின் நிழலாக செயல்பட்டார். ஏனென்றால் தந்தை அனுப்பிய பணியாளர், தற்போது மக்களுக்காக தந்தையிடம் ‘அவர்கள் உலகம் சார்ந்தவர்கள் அல்ல, உம்மைச் சார்ந்தவர்கள்’ என்று கூறி பாதுகாக்க வேண்டுகின்றார். காரணம் மக்களோடு மக்களாய் செயல்பட்டார்.

நாம் மற்றவர்களை காத்துக்கொள்ள முயல்கிறோமா? (பணத்தால், பாசத்தால்). சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

==========================

ஒன்றித்திரு! மகிழ்ந்திரு!

யோவான் 17: 11-19

மூவொரு இறைவன் மூன்று ஆள்களாக இருந்தாலும், தனித்தனியான செயல்பாடுகளை கொண்டிருந்தாலும், ஒரே மனநிலையில் செயல்படுகிறார்கள்; ஒன்றாய் இருக்கிறார்கள். ‘எப்படி நாம் ஒரே மனதுடையவர்களாய் செயல்படுகிறோமோ அவ்வாறே உலக மனிதர்களும் ஒரே மனதுடையோராக செயல்பட்டால்’ இங்கே அமைதி நிலவும்; மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பதற்காகவே இயேசு எல்லா மனிதர்களுக்கும் சேர்த்து தந்தையிடம் செபிக்கிறார்.

ஒரே மனதுடையவர்கள், எல்லோரும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் இயேசு குறிப்பிடுவதை போல இந்த உலகத்தை சார்ந்தவர்களாய் இருக்க முடியாது. இரண்டு மனிதர்கள் ஒரே இடத்தில் வாழும் போதே அங்கு பிளவுகள் இருப்பதுதான் உலக நியதி. இங்கே மனிதர்கள் தனித்தனியாக, குழு குழுவாக மதத்தின் அடிப்படையில், மொழியின் பெயரால், நிலத்தின் அடிப்படையில் பிரிந்து வாழ்கிறார்கள்; சண்டையிட்டு உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். ஏன் ஊருகுள்ளையே, குடும்பத்துக்குள்ளேயே பல்வேறு பிளவுகள் இருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். யாரேனும் ஒற்றுமையை விரும்பினால், ஒன்றாக இருக்க வேண்டும் என்ற முன்னெடுப்புகளை எடுத்தால், அவர்களை இவ்வுலகம் விரும்புவதில்லை; பிளவுகளை ஏற்படுத்துவோரை தலைவராக கொண்டாடுவதுதான் இயல்பாக மாறிவிட்டது.

குறைந்தபட்சம் நம் குடும்பத்தில், உறவினர்கள் மத்தியில் உள்ள பிளவுகளை களைந்து, வாழும் சிறிது காலத்தில் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக, இயேசுவின் சீடர்களாக வாழ முற்படுவோம்!

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

திருத்தூதர்பணி 20: 28 – 38
தூய ஆவியானவரின் வழிநடத்துதல்

எபேசு நகரிலிருந்து, மிலேத்துவிற்கு மூப்பர்களை அழைத்த பவுல், அவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். அங்கிருந்து தான், எருசலேம் செல்லவிருப்பதாகவும், இனிமேல் அவர்களை காண மாட்டேன் எனவும் சொல்கிறார். பவுலின் இந்த வார்த்தைகளை இயேசுவின் வார்த்தைகளோடு நாம் இணைத்துப் பார்க்கலாம். எருசலேம் செல்வது என்பது, இயேசுவுக்கு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதாகும். எருசலேம் பயணம் எப்படி அமையப்போகிறது என்பது இயேசுவுக்கு நன்றாக தெரிந்திருந்தது. அதுதான், தன்னுடைய கடைசி பயணம் என்று அறிந்திருந்தார். அறிந்திருந்தார் என்பதைவிட, தூய ஆவியானவர் அவருக்கு உணர்த்தியிருந்தார். கிட்டத்தட்ட அதே போல ஒரு சூழ்நிலைதான், பவுலடியாரின் வாழ்விலும் நடைபெறுகிறது.

எருசலேமுக்கு செல்கிற தன்னுடைய பயணம் பாடுகளின் பயணம் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். அவர் பலவிதமான பாடுகளை தாங்க வேண்டியிருக்கிறது என்பதை உணர்ந்திருந்தார். உணர்ந்திருந்தார் என்பதை விட, தூய ஆவியானவர் அவருக்கு வெளிப்படுத்தியிருந்தார். இறைத்திட்டத்திற்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறபோது, தூய ஆவியானவர் நமக்கு நடக்கவிருக்கிற நிகழ்வுகளை உணர்த்துகிறார். நம்மை தயார்படுத்துகிறார். எப்படியிருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்கிற மனநிலையை நமக்கு வழங்குகிறார்.

நம்முடைய வாழ்வில் தூய ஆவியானவர் நம்மை இயக்குவதற்கு, நம்மில் செயல்படுவதற்கு நாம ஒத்துழைப்பு நல்க வேண்டும். இறைவனின் திட்டம் என்ன? என்பதை அறிந்து, அதற்கேற்ப நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆவியானவரின் வழிநடத்துதல் நம் வாழ்வில் இருக்குமாறு, அவருக்கு நம்மையே ஒப்புக்கொடுக்க வேண்டும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

 

வாழ்க்கைப் போராட்டம்

வாழ்க்கை என்பது ஒரு போராட்டம். இந்த போராட்டத்தில் நம்மை நிலைநிறுத்தி வெற்றிகாண்பதில் வாழ்வின் வெற்றி அடங்கியிருக்கிறது. எதற்காக வாழ்க்கை என்பது ஒரு போராட்டம்? நாம் நினைப்பது ஒன்றாக இருக்கிறது. ஆனால், நாம் செய்வது மற்றொன்றாக இருக்கிறது. ஏன்? இந்த உலகத்தில் நடக்கிற நிகழ்வுகள். நாம் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காக எதிர்ப்புக்களைச் சந்திக்கிறோம். ஆனால், இறுதியில் நாம் தனித்து விடப்படுகிறோம். இந்த உலகத்தின் பார்வையில் பிழைக்கத் தெரியாதவனாக தோன்றுகிறோம். அப்போது நமக்குள்ளாக பல கேள்விகள் தோன்றுகிறது. நாம் செல்லக்கூடிய பாதை சரி தானா? மற்றவர்கள் சொல்வது போல நாம் பிழைக்கத் தெரியாதவர்களா? இது ஒரு போராட்டம். இந்த போராட்டத்தில் நாம் எடுக்கும் முடிவு முக்கியமானது.

இந்த உலகம் தனக்கென்று ஒரு சில மதிப்பீடுகளை வழிவகுத்து இருக்கிறது. ஆனால், இந்த உலகத்தில் வாழ்கிறவர்கள், அந்த மதிப்பீடுகளை புறந்தள்ளும்விதமாக, தங்களுக்கென்று, தங்களுக்காக ஒருசிலவற்றை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். மற்றவர்களையும் அப்படி வாழ்வதற்கு தூண்டுகிறார்கள். ஆக, இதுதான் உலக மதிப்பீடுகள் என்ற தவறான மாயத்தோற்றம் உருவாக்கப்படுகிறது. இந்த மாயத்தோற்றத்தை உடைத்து, உண்மையான மதிப்பீடுகளின்படி வாழ்வது மிகப்பெரிய சவால். அதற்கு நம்முடைய ஆன்மீகம் உறுதியானதாக இருக்க வேண்டும். இந்த உலகத்தின் மாயத்தோற்றத்திற்கும், மதிப்பீடுகளுக்கும் இடையேயான போராட்டம் தான் வாழ்க்கைப் போராட்டம். அதில் வெற்றி பெற நாம் உறுதிகொள்ள வேண்டும்.

வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெறுவது எளிதான காரியமல்ல. அது ஒரு சவாலான காரியம். ஆனால், அதில் வெற்றி பெற்றவர்களை வரலாறு நினைவில் வைத்திருக்கிறது. அவர்களை உதாரணங்களாக நமக்குத் தருகிறது. நமது வாழ்வில், நமது பெயரும் வரலாற்றில் இடம்பெயரும் அளவிற்கு நாம் சிறப்பாக வாழ முற்படுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

இயேசுவின் அறிவுரை

இன்றைய நற்செய்தியில் இயேசு தனது சீடர்களுக்கு இரண்டு செய்திகளைத் தருகிறார். இந்த இரண்டு செய்திகளும், இயேசுவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. 1. மகிழ்ச்சி 2. எச்சரிக்கை. இயேசு சொன்னதின்படி நாம் நமது வாழ்வை அமைத்துக்கொண்டால், அது நமக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத்தருவதாக அமையும். அப்படிப்பட்ட வாழ்வு சவாலான, கடினமாக வாழ்வுதான் என்றாலும், இயேசு மீது நம்பிக்கை வைத்து நாம் வாழ்கிறபோது, அது நமக்கு நிறைவான மகிழ்ச்சியைத்தரும்.

இயேசுவின் வார்த்தைகளை நமது வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட முற்படுகிறபோது, எச்சரிக்கை உணர்வும் நமக்கு இருக்க வேண்டும். இயேசுவின் நமக்குக்காட்டிய வழியில் வாழ நாம் முற்படுகிறபோது, இந்த உலகத்தில் நாம் மற்றவர்களால் வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறோம். இந்த உலகத்தில் நாம் வாழ்ந்தாலும், இந்த உலக மதிப்பீடுகளுக்கு எதிராக நாம் நமது வாழ்வை அமைத்துக்கொள்வதால், இந்த உலகம் நம்மை வெறுக்கும் என்ற எச்சரிக்கை உணர்வை இயேசு நமக்குத்தருகிறார். அத்தகைய போராட்ட வாழ்விலும் கடவுளின் அருள் நம்மோடு இருப்பதால், அது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத்தரும். வாழ்வில் நிறைவைத்தரும். அதுதான் உண்மையான சாட்சிய வாழ்வு.

எனது வாழ்வை நான் எப்படி அமைத்துக்கொள்கிறேன்? இந்த உலக மதிப்பீடுகளுக்கு ஏற்ப நான் வளைந்து, நெளிந்து எனது வாழ்வை அமைத்துக்கொள்கிறேனா? அல்லது போராட்ட வாழ்விற்கு என்னையே தகுதியுள்ளவனாக மாற்றிக்கொள்கிறேனா? இயேசுவின் மதிப்பீடுகளின்படி வாழும் கிறிஸ்தவர்களாக வாழும் வரம் வேண்டுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

ஒற்றுமையோடு வாழ்வோம்

இயேசு தன்னுடைய சீடர்களுக்காக செபிக்கிற பகுதியை நாம் பார்க்கிறோம். எதற்காக செபிக்கிறார்? என்பதை விட எதற்காக செபிக்கவில்லை? என்பது இங்கே முக்கியத்துவம் மிகுந்ததாகக் காணப்படுகிறது. இயேசு தன்னுடைய சீடர்கள் துன்பங்களிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக செபிக்கவில்லை. அவர்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் செபிக்கவில்லை. மாறாக, சீடர்கள் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்பதற்காக செபிக்கிறார். ஒற்றுமைதான் பலம் என்பதை இயேசு முழுமையாக அறிந்திருந்தார். எனவேதான் மூன்றாண்டுகள் தன்னோடு அவர்களை வைத்திருந்தார். அவர்களை ஒற்றுமையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் விளைவாக எழுந்ததுதான் இது.

சீடர்கள் ஒவ்வொருவருமே வேறு, வேறான பண்புள்ளவர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இயேசுவிடத்திலே ஒவ்வொரு தேவை இருந்தது. அவர்களுக்குள்ளாக வேற்றுமை உணர்வும் மிகுந்திருந்தது. இயேசு இதனை அறியாதவரல்ல. எனவேதான், இயேசு ஒற்றுமைக்காக மன்றாடுகிறார். ஒற்றுமையின் மூலம் இந்த உலகத்தையே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும் என்பது இயேசுவுக்கு நன்றாகத்தெரியும். இன்றைய உலகம் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது ஒற்றுமையின்மை. மக்கள் ஒற்றுமையாக இருந்தால் நம்மால் பிழைப்பு நடத்த முடியாது என்பதால், சில அரசியல் தலைவர்கள் சாதி, மத, மொழி ரீதியாக மக்களைப்பிளவுபடுத்தி பிரிவினையை உண்டாக்குகின்றனர். ஒற்றுமையோடு போராட ஆரம்பிக்கிற மக்களை, அரசே பிளவுபடுத்தி போராட்டங்களை ஒடுக்குகிறது. இத்தகைய பிளவுகளை அகற்றி ஒற்றுமையோடு வாழ்வதுதான் உயர்வுக்குச் செல்லும் வழியாகும் என்பதை இயேசுவின் செபம் நமக்குக் கற்றுத்தருகிறது.

சாதி, மதம், மொழி, இனம் எனப்பிரிந்து கிடக்கும் நமது மனம், கடவுளின் பிள்ளைகள் என்ற குடையின் கீழ் ஒன்று சேர வேண்டும். நமக்குள்ளாக பிரிவினைகள் இருப்பது, இறையரசைக்கட்டி எழுப்ப தடைக்கற்களாக மாறுகிறது. ஒற்றுமையோடு வாழ இறைவனிடம் மன்றாடுவோம்..

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

தீயோனிடமிருந்து காத்தருள வேண்டுகிறேன்

இயேசுவின் குருத்துவ மன்றாட்டில் நாம் மனம் மகிழும் ஒரு பகுதியைப் பார்க்கிறோம். “தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்”“ என்று வேண்டுகிறார் இயேசு.

இயேசு ஒரு பரிந்துரையாளர். தந்தையின் வலப்புறம் வீற்றிருக்கும் அவர் நமக்காகத் தொடர்ந்து பரிந்துபேசி வருகிறார். அவரது வல்லமை மிக்க பரிந்துரைகளில் ஒன்று தீயோனிடமிருந்து நாம் காக்கப்பட வேண்டுமென்பது.

மனிதர்களுடைய பரிந்துரையே வலிமை மிக்கது என்றால், இறைமகனான இயேசுவின் பரிந்துரையின் ஆற்றலை நாம் மிகைப்படுத்த அவசியமில்லை. இயேசுவின் அனைத்து மன்றாட்டுகளுக்கும் தந்தை செவி மடுக்கிறார். எனவே, தீயோனிடமிருந்து நாம் காக்கப்பட வேண்டும் என்னும் மன்றாட்டும் நிச்சயம் கேட்கப்படும் என நம்பலாம்.

இந்த நம்பிக்கையில் நாமும் நமது அன்புக்குரியவர்களுக்காக பரிந்துரைத்து மன்றாடலாமே. தீயோனிடமிருந்து நமது அன்பர்கள் காக்கப்பட வேண்டும் என மன்றாடுவது நமது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சிறந்த இறைவேண்டல்.

மன்றாடுவோம்: எங்களுக்காகப் பரிந்து பேசும் தெய்வமே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களுடைய நண்பர்கள், அன்பர்களுக்காக உம்மை வேண்டுகிறோம். ஆண்டவரே, தீயோனிடமிருந்தும், தீமைகளிலிருந்தும் அவர்களைக் காத்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

''இயேசு, 'தூய தந்தையே,...நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல,
நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்' என்றார்'' (யோவான் 17:18)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- யோவான் நற்செய்தியில் இயேசு கடவுளை நோக்கி எழுப்பிய நீண்டதொரு மன்றாட்டு உள்ளது (யோவா 17:1-28). அதில் இயேசு கடவுளைப் போற்றுகிறார்; சிறப்பாகத் தம் சீடர்களுக்காக இறைவனை மன்றாடுகிறார். தந்தையோடு தமக்கு இருக்கின்ற ஒன்றிப்பு சீடர்கள் நடுவிலும் நிலவிட வேண்டும் என இயேசு வேண்டுகிறார் (யோவா 17:11ஆ). உலகை விட்டுப் பிரிந்து செல்கின்ற வேளையிலும் இயேசு உலகின் மீட்புக்காக வேண்டுகிறார். உலகத்தை மீட்பதற்காகவே அவர் இவ்வுலகிற்குத் தந்தையால் அனுப்பப்பட்டார். தம் பணியை நிறைவேற்றிவிட்டுத் தந்தையிடம் செல்கின்ற இயேசு அப்பணியைத் தொடர்வதற்கான பொறுப்பைத் தம் சீடர்களிடம் ஒப்படைக்கிறார். இயேசு இவ்வுலகில் இருந்து நற்செய்தியை அறிவித்ததுபோல அவருடைய சீடர்களும் நற்செய்தியைத் தொடர்ந்து அறிவிக்க வேண்டும். அப்பணியை ஆற்றும்போது அவர்களுக்குத் துணையாக இயேசுவும் அவர் வழங்குகின்ற தூய ஆவியும் இருப்பார்கள். சீடர்கள் ஆற்ற வேண்டிய பணி இயேசு ஆற்றிய பணியே என்பதை வலியுறுத்தும் விதத்தில் இயேசு, ''தந்தையே, நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்'' என்று கூறி மன்றாடுகின்றார்.

-- இந்த மன்றாட்டில் துலங்குகின்ற முக்கிய கருத்துக்கள் இரண்டு. முதலில் இயேசு தந்தையால் அனுப்பப்படுகிறார். கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கிறது என்னும் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, அவர்களை இறைவாழ்வில் பங்குகொள்ளச் செய்வதே இயேசு ஆற்றவந்த பணியின் நோக்கம். இரண்டாவது, இயேசு தம் சீடர்களை அனுப்புகிறார். இந்த இரு ''அனுப்புதல்களும்'' ஒன்றோடொன்று இணைபிரியாமல் பிணைந்துள்ளதை நாம் கருத வேண்டும். இயேசுவில் நம்பிக்கை வைத்து வாழ்கின்ற சீடர் குழு தன் சொந்தப் பெயரால் பணி செய்வதில்லை; மாறாக, தன்னை உருவாக்கிய இயேசுவின் பெயராலேயே பணி செய்கிறது. திருச்சபை வழியாக இயேசுவே அப்பணியை ஆற்றுகிறார். எனவே, நாம் ஆற்றுகின்ற நற்செய்திப் பணி வெற்றியடைவதற்கு வழிகாட்டுபவர் இயேசுவே. நாம் கடவுளின் கைகளில் அவருடைய கருவிகளாக இருந்து பணியாற்றிட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, நீர் உம் திருமகன் வழியாக எங்களுக்கு அளித்த பணியை நாங்கள் மகிழ்ச்சியோடு ஆற்றிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

உன் இறைவன் உன்னைக் காக்கும் தேவன். 'அவர்களைக் காத்தருளும்'.' அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன்' இது உன் இறைவன் இயேசுவின் செபம். நீயே அந்த அவர்கள். உன்னைக் காப்பதில் உன் இறைவனுக்கு எவ்வளவு ஆர்வம்.

"இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்" (தி.பா 34:6) "ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்."(தி.பா 34:7). "வானகத்தினின்று அவர் எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்தருள்வார்;" (தி.பா 57:3) "திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்"(தி.பா 68:5) " நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்"( தி.பா 121 :8)

உன்னைக் காக்க உன் தேவன் எடுக்கும் முயற்சிகள் எத்தனை எத்தனை. ஒன்றாய் இருக்கவேண்டும்; யாரும் அழிந்து போகக்கூடாது; எல்லோரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உன் இறைவனுக்கு இருக்கும் ஆசை, உன்னைக் கண்ணின் மணி போலக் காத்து வரும் பேரன்புக்குச் சான்று. அவரது பேரன்பில் அடைக்கலம் புகுவோம். அவர் என்றும் உன்னைக் காப்பார். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்