யோவான் 17:11-19

பாஸ்கா காலம்-ஏழாம் வாரம் ஞாயிறு

11 தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.

12 நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான்.

13 "இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன்.

14 உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது.

15 அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்.

16 நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

17 உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.

18 நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்.

19 அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.

-------------------------

 

''இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.
அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்தனர்'' (மாற்கு 16:19-20)
(இயேசுவின் விண்ணேற்புத் திருவிழா)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு சாவிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு தம் சீடர்களுக்குத் தோன்றி அவர்களோடு உரையாடியதையும் பின்னர் விண்ணகம் சென்றதையும் நற்செய்தியாளர்கள் குறித்துள்ளனர். இயேசுவின் விண்ணேற்றம் எதில் அடங்கியுள்ளது என்பதை விளக்கும்போது தூய அகுஸ்தின் ஓர் ஆழமான கருத்தைத் தெரிவிக்கிறார். அதாவது, இயேசு விண்ணகத்திலிருந்து மண்ணகம் வந்து பிறந்தபோது எப்படி விண்ணகத்தை விட்டுவிடவில்லையோ, அதுபோலவே விண்ணேற்பு அடைந்து தந்தையிடம் சென்றபோது மண்ணகத்தை விட்டுப் பிரிந்துவிடவில்லை. இயேசுவின் சாவுக்கும் உயிர்த்தெழுதலுக்கும் பிறகு அவருடைய உடனிருப்பு ஒரு புதிய முறையில் அமைந்தது. அவர் தம்மை நம்பி ஏற்போர் நடுவே உறைகின்றார். அவர்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளோடு கலந்து அவர்களை வழிநடத்துகிறார். இதை நாம் புறக்கண்களால் காண இயலாது; ஆனால் நம்பிக்கை என்னும் அகப்பார்வைக்கு இயேசுவின் உடனிருப்பு வெளிச்சம். இயேசு நம்மோடு கூட இருந்து நம்மை வழிநடத்துகிறார் என்றால் நாமும் ஒரு பணிப்பொறுப்பை அவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம். ''உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'' (மாற் 16:15) என இயேசு தம் சீடர்களுக்கு வழங்கிய கட்டளையை இன்று நடைமுறைப்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம்.

-- சீடர்கள் ''புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர்'' (மாற் 16:20). இயேசு உலகில் ஆற்றிய அதே பணியைத் தொடர்ந்து ஆற்றுவதே அவருடைய சீடர்களின் பொறுப்பு. இவ்வாறு அவர்கள் இயேசுவை உலக மக்களுக்கு அறிவித்து, அவர்மீது நம்பிக்கை கொள்ள மக்களை அழைக்கும்போது இயேசு அவர்களோடு இருந்து அவர்களை ''உறுதிப்படுத்துவார்''. ஆக, இயேசு விண்ணகம் சென்றுவிட்டாரே என்று சீடர்கள் ஏக்கத்தோடு வீடுதிரும்ப வேண்டியதில்லை. அவர்களை விட்டு விண்ணகம் சென்ற இயேசு அவர்களோடு இருக்கின்றார். இது நம் வாழ்விலும் உண்மையாகும். இன்று வாழ்கின்ற மனிதர் நடுவிலும் இயேசுவில் நம்பிக்கை கொள்கின்ற சபை நடுவிலும் இயேசுவின் உடனிருப்பு உண்டு என்பது நம் நம்பிக்கை. இந்த உறுதிப்பாடு நமக்கு இருப்பதால் நாம் தொடர்ந்து ''நற்செய்தி அறிவிப்புப் பணியில்'' ஈடுபட்டுச் செயலாற்றிட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனின் உடனிருப்பால் நாங்கள் உறுதிபெற்று வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

உன் இறைவன் உன்னைக் காக்கும் தேவன். 'அவர்களைக் காத்தருளும்'.' அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன்' இது உன் இறைவன் இயேசுவின் செபம். நீயே அந்த அவர்கள். உன்னைக் காப்பதில் உன் இறைவனுக்கு எவ்வளவு ஆர்வம்.

"இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்" (தி.பா 34:6) "ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்."(தி.பா 34:7). "வானகத்தினின்று அவர் எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்தருள்வார்;" (தி.பா 57:3) "திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்"(தி.பா 68:5) " நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்"( தி.பா 121 :8)

உன்னைக் காக்க உன் தேவன் எடுக்கும் முயற்சிகள் எத்தனை எத்தனை. ஒன்றாய் இருக்கவேண்டும்; யாரும் அழிந்து போகக்கூடாது; எல்லோரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உன் இறைவனுக்கு இருக்கும் ஆசை, உன்னைக் கண்ணின் மணி போலக் காத்து வரும் பேரன்புக்குச் சான்று. அவரது பேரன்பில் அடைக்கலம் புகுவோம். அவர் என்றும் உன்னைக் காப்பார். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்