முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22: 30; 23: 6-11

அந்நாள்களில் யூதர்கள் பவுல்மீது என்ன குற்றம் சுமத்துகிறார்கள் என்பதை உறுதியாக அறிய ஆயிரத்தவர் தலைவர் விரும்பினார். எனவே மறுநாள் தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு அவர் ஆணை பிறப்பித்துப் பவுலைச் சிறையிலிருந்து கொண்டுவந்து அவர்கள் முன் நிறுத்தினார். அவர்களுள் ஒரு பகுதியினர் சதுசேயர் என்றும், மறு பகுதியினர் பரிசேயர் என்றும் பவுல் அறிந்து, ``சகோதரரே! நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்; இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன்'' என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார். அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர். சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறிவந்தனர்; பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக்கொண்டனர். அங்குப் பெருங்கூச்சல் எழுந்தது. பரிசேயப் பிரிவினைச் சேர்ந்த மறைநூல் அறிஞருள் சிலர் எழுந்து, ``இவரிடம் தவறொன்றையும் காணோமே! வானதூதர் ஒருவரோ, ஓர் ஆவியோ இவரோடு பேசியிருக்கலாம் அல்லவா!'' என வாதாடினர். வாக்குவாதம் முற்றவே அவர்கள் பவுலைப் பிய்த்தெறிந்துவிடுவர் என ஆயிரத்தவர் தலைவர் அஞ்சிப் படைவீரரை வரச்சொல்லி அவரை அவர்கள் நடுவிலிருந்து பிடித்துக் கோட்டைக்குள் கூட்டிக்கொண்டு செல்லுமாறு ஆணை பிறப்பித்தார். மறுநாள் இரவு ஆண்டவர் அவரருகில் நின்று, ``துணிவோடிரும்; எருசலேமில் என்னைப்பற்றிச் சான்று பகர்ந்ததுபோல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்'' என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்
திபா 16: 1-2,5. 7-8. 9-10. 11
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
அல்லது: அல்லேலூயா.
1 இறைவா, என்னைக் காத்தருளும்;
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
2 நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்;
உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன்.
5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து;
அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. -பல்லவி

7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்;
இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்;
அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். -பல்லவி

9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;
என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்;
உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். -பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;
உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு;
உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 17: 21
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

யோவான் 17:20-26

பாஸ்கா காலம்-ஏழாம் வாரம் வியாழன்


நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-26

அக்காலத்தில் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ``தந்தையே, என் சீடர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும். நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன். இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளது போல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்துகொள்ளும். தந்தையே, உலகம் தோன்றும் முன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன். நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்துகொண்டார்கள். நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள்மீது இருக்கவும் உம்மைப்பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 17: 20 - 26
ஒரே சமூகமாய்

கூட்டம் கூடுவது எளிதான காரியம் ஆனால் ஒன்றுபடுவது தான் கடினம் என்று குறிப்பிடுகிறார் இரவீந்திரநாத் தாகூர் அவர்கள். மேலும் வால்டர் என்ற அறிஞர் வளமான நாட்டின் மக்கள் ஒற்றுமை உணர்வு உள்ளவர்களாகவும் நாகரீகம் பண்பாடு வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள் என்று கூறுவார். எல்லா உயிரினங்களுமே ஒரே சமூகம் என்ற உணர்வோடு தான் வாழ்கின்றன. விலங்குகளான எறும்புகள் சோ்ந்தே உணவு தேடும். காக்கைகள் தன் சுற்றத்தை அழைத்தே உணவு உண்ணும். சிங்கங்கள் கூட்டமாகவே வேட்டையாடி உணவு உண்ணும். பறவைகள் கூட்டமாகவே கடல் தாண்டும். ஆனால் மனித இனம் மட்டும் தான் ஒரே சமூகம் என்ற வார்த்தையை காற்றாய் பறக்க விட்டுவிட்டது.

ஆனால் இயேசு அமைத்த இறையாட்சி ஒற்றுமையின் இறையாட்சி. ஏனென்றால் அவர் எல்லோருக்காகவும் கடவுளிடம் மன்றாடுகின்றார். அது மட்டுமில்லாமல் எல்லா மக்களினங்களுக்கும் புதுமை செய்தார். எதன் அடிப்படையில் என்று பார்க்கும் போது அன்பின் அடிப்படையில். அன்பின் சமூகமாய் உருவாக்க வேண்டும் என்பதே இயேசுவின் இறையாட்சி கனவு. ஆனால் அதற்கான சலுகைகளை அமைத்துக் கொடுக்கின்றார். அதனால் தான் பாவியான சக்கேயு வீட்டிற்கு செல்கின்றார். ஒதுக்கப்பட்ட சமூகமாக கருதப்பட்ட பேதுருவின் மாமியார் வீட்டிற்குச் செல்கிறார். தீட்டு என சமுதாயம் கூறிய பெண்ணின் இரத்தப்போக்கை தொட்டு குணமாக்குகினார். காரணம், இயேசு ஒரே சமூகமாக உருவாக வேண்டும், உருவாக்கப்பட தான் உருவகமாக செய்து காட்டினார். அதன் விளைவாகத்தான் தன் தந்தையிடம் அனைவருக்காகவும் மன்றாடுகின்றார். அவர்கள் அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாக.

நம் எண்ணம் ஒரே இனம், ஒரு தாய் வயிற்றின் குழந்தை என்று இருக்கிறதா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

உனக்காக அல்ல; இவ்வுலகத்திற்காக...

யோவான் 17: 20 -26

இயேசு காட்டி கொடுக்கப்படுவதற்கு முன்னால் கொடுக்க கூடிய இறுதி உரையாக இன்றைய வாசகம் அமைந்திருக்கிறது. இந்த உரையில் இயேசு சீடர்களுக்கு அறிவுரை கொடுக்கவில்லை, எப்படி நற்செய்திப்பணியை செய்ய வேண்டும் என்பதை சொல்லித் தரவில்லை. மாறாக, என்ன செய்ய வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டுகிறார். கடவுளிடம் செபிக்கிறார். யாருக்காக? இவ்வுலகத்திற்காக... யோவான் நற்செய்தியாளர்”உலகம்” என்று குறிப்பிடுவது இயேசுவை நம்பாமல் அவருக்கு எதிராக இருந்தவர்களைத்தான். இயேசு செபிக்கும் போது தன்னை நம்பியவர்களுக்காக மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகத்திற்காகவும் செபிக்கிறார். எல்லோரயும் தன் பிள்ளைகளாக பார்த்தார் என்பதற்கு இந்நற்செய்திப் பகுதியே சான்றாக இருப்பதைக் காணலாம்.

கிறித்தவர்கள் இவ்வுலகத்தில் வெறுக்கப்படலாம்; பிற மதத்தினரால் துன்புறுத்தப்படலாம்; கேலி கிண்டலுக்கு கூட ஆளாகலாம். ஆனாலும் நாம் அவர்களுக்காக, நம்மை எதிரிகளாக கருதுவோர்களுக்காக செபிக்க வேண்டும். இதுதான் இயேசுவை தனித்துவமான தலைவராக நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது. இவ்வுலகத் தலைவர்களைப் போல் தங்களுக்கு எதிரானவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடாமல், எதிரிகளும், பாவிகளும் மனம் திரும்ப இறைவடனிடம் மன்றாடுவோம். நாம் நமக்காக செபிக்காமல், மற்றவர்களுக்காக செபிப்பதில் ஆர்வம் காட்டுவோம்!

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ

...............................................................................................

திருத்தூதர்பணி 22: 30, 23: 6 – 11
பவுலடியாரின் நற்செய்திப் பணி

சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ளும் திறனை பவுல் இன்றைய வாசகத்தில் வெளிப்படுத்துகிறார். ஏதேன்ஸ் நகரத்து மக்கள் பெயர் தெரியாத கடவுளை வணங்குவதை, அவர்களது அறிவு மொழியில் பாராட்டி, இறுதியாக அவர்கள் வணங்குகிற கடவுளைப் பற்றித்தான் அறிவித்துக்கொண்டிருப்பதாக, அறிவாற்றல் கொண்டு விளக்குகிறார். இந்த பகுதியிலும் தன்னுடைய அறிவாற்றலை அவர் வெளிப்படுத்துகிறார். தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு, ஆயிரத்தவர் தலைவர் ஆணைபிறப்பிக்கிறார். பவுல் சிறையிலிருந்து அழைத்துவரப்படுகிறார்.

பவுல் அங்கே கொண்டுவரப்பட்டபோது, பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் ஏராளமாக திரண்டிருப்பதைப் பார்க்கிறார். உயிர்ப்பு உண்டென அறிவித்ததால், தான் இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக அறிவிக்கிறார். சிறையில் இருப்பது என்பது, பவுலடியாருக்கு ஒன்றும் புதிதல்ல. அந்த நிலையிலும் அவர் துணிவோடு பேசுகிறார். உயிர்ப்பு பற்றிய பவுலடியாரின் பேச்சு அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. காரணம் இதுதான்? பரிசேயர்கள் உயிர்ப்பை நம்புகிறவர்கள். சதுசேயர்கள் உயிர்ப்பை நம்பாதவர்கள். இவர்கள் இருவரும் ஒருவர் மற்றவருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். வாக்குவாதம் முற்றவே, பவுலடியாரின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று எண்ணி, அவர் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்படுகிறார். தன்னுடைய அறிவாற்றல் கொண்டு, தன்னை விசாரிக்க அழைத்துவந்த இடத்திலும், நற்செய்தியை தெளிவாக உணர்த்திவிடுகிறார்.

கிடைக்கிற வாய்ப்புக்களை பயன்படுத்தி, நற்செய்தி அறிவிப்பதை தன்னுடைய உயிராகவே கருதி வாழ்ந்தவர் பவுலடியார் என்பதற்கு, இதனை விட வேறு சிறந்த எடுத்துக்காட்டு நாம் பார்த்துவிட முடியாது. அவர் இருந்த சூழ்நிலைகள் நற்செய்தி அறிவிப்பதற்கு நிச்சயம ஏற்றது என்று சொல்ல முடியாது. அவர் குறை சொல்வதற்கு பல காரணங்கள் இருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் பற்றி கவலைப்படாமல், தொடர்ந்து இறைவார்த்தையை அறிவித்த பவுலடியாரைப்போல, சூழ்நிலைகளை குறை சொல்லாமல், மகிழ்ச்சியுடன் வாழ பழகிக்கொள்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

திருப்பாடல் 16: 1 – 2, 5, 7 – 8, 9 – 10, 11
”உம்மையன்றி வேறு செல்வம் இல்லை”

உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலுமிருந்தும், பெற்றோர்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. ”உங்களது பிள்ளைகள் என்னவாக வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?” என்பது தான், கருத்துக்கணிப்பில் அவர்கள் முன் வைக்கப்பட்ட கேள்வி. ஒவ்வொரு நாட்டிலுள்ள பெற்றோரும் வேறு வேறான பதிலை வழங்கினார்கள். அமெரிக்காவில் வாழ்ந்த பெற்றோர், பெரும்பாலும் ”எங்களது பிள்ளைகள் அறிவில் சிறந்தவர்களாக உருவாக வேண்டும்” என்று சொன்னார்கள். ஜெர்மனியில் உள்ள பெற்றோர் பெரும்பாலும், ”எங்களது பிள்ளைகள் புதுமையாக சிந்திக்கிறவர்களாக மாற வேண்டும்” என்று சொன்னார்கள். இந்திய நாட்டிலுள்ள பெற்றோர்களின் பெரும்பான்மையானவர்களின் பதில், ”எங்களது பிள்ளைகள் செல்வந்தர்களாக வேண்டும்”.

இன்றைக்கு தங்களது பிள்ளைகளைப் படிக்க வைக்கிற பெற்றோர், தங்களுக்கு பணம் சேர்த்து தர வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களை படிக்க வைக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. பல இலட்சங்களை செலவழிக்கிறார்கள். அதனையே பல மடங்காக பெற ஆசைப்படுகிறார்கள். இன்றைய திருப்பாடல் வாசகம், உண்மையான செல்வம் எது? நம்முடைய வாழ்வில் நாம் எதனை நாட வேண்டும்? என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. உண்மையான செல்வம் கடவுள். அவரைத் தேடுவதையும், அவரைப் பற்றிக்கொள்வதையுமே நமது வாழ்வின் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். இந்த உலகம் நமக்கு பல தவறான மதிப்பீடுகளைக் கற்றுத்தந்து கொண்டிருக்கிறது. நாம் அந்த தவறான மதிப்பீடுகளைக் கற்றுக்கொள்ளாமல், நம்முடைய குழந்தைகளையும் அதன்படி வளர்க்காமல், கடவுளையே முழுமுதற்செல்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய, நாடக்கூடிய வரத்திற்காக மன்றாட வேண்டும். அது தான் நமக்கு நிம்மதியை, நிறைவைத் தரக்கூடிய செல்வம்.

நமது வாழ்வில் நாம் எதைத் தேடுகிறோம்? அழிந்து போகக்கூடிய செல்வத்தையா? அல்லது எந்நாளும் அழியாமல் இருக்கக்கூடிய கடவுளையா? கடவுளை நாடி, அவரைப் பற்றிக்கொள்வதற்கு மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

இயேசுவின் செபம்

இயேசு இன்றைய நற்செய்தியில் செபிக்கிறார். இயேசுவின் செபம் எப்படி அமைந்திருக்கிறது என்பதைப் பார்த்து, நாமும் அதைப்போல செபிப்பதற்கு இன்றைய பகுதி நமக்கு உதவியாக இருக்கிறது. முதலில், இயேசு தனக்காக செபிக்கிறார். தன்னுடைய நலனுக்காக, தான் கொண்டிருக்கிற கொள்கையில் உறுதியாக இருப்பதற்காக, தான் எதற்காக அனுப்பப்பட்டிருக்கிறேனோ, அது சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக செபிக்கிறார். அது எந்தவிதத்திலும் மற்றவர்களுக்கு இடறலாக அமையவில்லை. தான் நன்றாக இருந்து, மற்றவர்கள் பாதிக்கப்பட வேண்டும் என்பதாகவும் இல்லை. தனக்காக வேண்டுவதில் கூட, மற்றவர்களின் நலன் அடங்கியிருக்கிறது. இயேசுவின் செபம் அவருக்கானதாக மட்டும் இருக்கவில்லை. அது, மற்றவர்களுக்காகவும் அமைகிறது.

தன்னுடைய சீடர்களுக்காகச் செபிக்கிறார். அவர்கள் வாழ்வில், மதிப்பீடுகளோடு வாழ வேண்டும் என்பதற்காகச் செபிக்கிறார். அவர்களது வாழ்க்கையும் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதாக அமைகிறது இயேசுவின் செபம். தன்னோடு இருக்கிறவர்களும் நன்றாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அவர் நினைக்கிறார். இறுதியாக, அனைவருக்காகவும் செபிக்கிறார். தானும், தன்னுடன் உள்ளவர்களும் நன்றாக வாழ வேண்டும் என்று மட்டும் அவர் செபிக்கவில்லை. அனைவரும் நன்றாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அந்த எண்ணத்தை தன்னுடைய செபத்தில் எழுப்புகிறார்.

நமது வாழ்வில் நாம் கடவுளிடத்தில் செபிக்கிறபோது, எத்தகைய உணர்வோடு செபிக்கிறோம்? நமது செபம் நமக்கானது மட்டுமா? நம்மோடு வாழ்கிறவர்களுக்குமானது மட்டுமா? அல்லது அனைவருடைய நலன் சார்ந்ததாக இருக்கிறதா? சிந்திப்போம். இயேசுவின் செபம் கொண்டிருக்கிற, ஒட்டுமொத்த நற்பண்புகளையும் நமது செபத்தில் இணைத்துக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

பிரிவினைகளை அகற்றுவோம்

இந்த நற்செய்திப்பகுதி நமக்கெல்லாம் மிக முக்கியமான பகுதி. காரணம், இயேசு நமக்காகச் செபிக்கிறார். இயேசுவின் செபம் என்ன? நாமெல்லாம் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பதுதான். எப்படி ஒன்றாய் இருக்க வேண்டும்? நாமெல்லாம் ஒன்றாய் இருப்பது சாத்தியமா? நமக்குள்ளே பல அடிப்படை வேறுபாடுகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். புரிதலில், வாழ்க்கைமுறையில், பண்பாட்டில், வழிபாட்டு முறையில் என பல வேறுபாடுகள் நம் மத்தியில் இருக்கிறது. இத்தகைய வேறுபாடுகள் நமக்குள்ளாக பல பிரிவினைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பிரிவினைகளாக இருப்பவை எப்படி நம்மை ஒன்றுபடுத்த முடியும்?

இயேசு நம்மை அன்பால் ஒன்றுபட செபிக்கிறார். நமக்குள் இருக்கக்கூடிய வேறுபாடுகளை அவர் அறியாதவர் அல்ல. அந்த வேறுபாடுகள் ஒருவர் மற்றவர் மீதுள்ள அன்பை, மதிப்பைக் கூட்ட வேண்டுமே தவிர, குறைக்கக்கூடாது. கடவுளை நாம் அன்பு செய்தால், கடவுள் மீது நாம் நம்பிக்கை வைத்தால், கடவுளை நமது தந்தையாக ஏற்றுக்கொண்டால், ஒருபோதும் நமக்குள்ளாக இருக்கக்கூடிய பிரிவினைகள் பெரிதாகத் தோன்றாது. கடவுள் மீது நமக்கு நம்பிக்கை இல்லை என்பதுதான், நமக்குள்ளாக இருக்கக்கூடிய பிரிவினைகளைப் பெரிதாகக்காட்டுகிறது. இந்த பிரிவினைகளுக்குள்ளாக நாம் இருந்தால், கடவுள் நம் வாழ்வில் இருக்க முடியாது.

இன்றைக்கு கத்தோலிக்கத்திருச்சபையின் மிகப்பெரிய தடைக்கல்லாக இருப்பது இந்த பிரிவினைகள். நமக்குள்ளாக நாமே பிளவுபட்டு இருக்கிறோம். நமக்குள்ளாக பிரிவினைகள் இருக்கிறபோது, நம்மால் எப்படி கடவுளுக்கேற்ற ஒரு வாழ்வை வாழ முடியும். எனவே, நமக்குள்ளாக இருக்கக்கூடிய பிரிவினைகளை அகற்றுவோம். இயேசுவின் பெயரால் ஒன்றுபடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

இறைவன் தரும் மாட்சி

ஆண்டவர் இயேசு கிறிஸ்து, கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட மாட்சியை சீடர்களுக்கு அளித்ததாகக்கூறுகிறார். இங்கே ‘மாட்சி’ என்கிற வார்த்தைக்கு நற்செய்தியாளர் தருகிற விளக்கத்தைப்பார்க்கலாம். 1. மாட்சி என்கிற வார்த்தைக்கு தரப்படுகிற முதல் பொருள்: சிலுவை. இயேசு சிலுவைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, அதன் வழியாக கிடைக்கும் மாட்சிமைக்கு அதிகம் அழுத்தம் கொடுக்கிறார். எனவே கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் சிலுவையைத்தூக்குவதற்கு தயாராக இருக்க வேண்டும். சிலுவையைத்தூக்குவது மாட்சிமையைப்பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இருக்கக்கூடாது. மாறாக இயேசுவி;ன் பாடுகளில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு கொடுக்கும் அதிகமான பொறுப்பு, அவனுக்கு உள்ள மதிப்பைக்குறிப்பதாகும். அதேபோலத்தான், கிறிஸ்தவ வாழ்வும்.

2. மாட்சி என்ற வார்த்தையின் மற்றொரு பொருளாக சொல்லப்படுவது, தந்தைக்கு கீழ்ப்படிதல். தந்தையின் திருவுளத்திற்கு பணிந்து நடப்பதே மாட்சியாகும். நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக்கொள்வது நமக்கு மாட்சிமை தராது. மாறாக, கடவுள் நமக்காக வைத்திருக்கிற திட்டத்திற்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக்கொள்வதுதான் உண்மையான மாட்சிமையாகும். எந்த அளவுக்கு கடவுளின் திட்டத்திற்கு கீழ்ப்படிகிறோமோ, அந்த அளவிற்கு நாம் கடவுளால் மகிமைப்படுத்தப்படுவோம்.

இயேசுவின் சீடர்கள், இயேசு அவர்களுக்கு கொடுத்த மாட்சியை சிலுவையைத்தாங்கியும், தந்தையின் விருப்பத்தை செயல்படுத்தியும் பெற்றுக்கொண்டார்கள். இன்றைக்கு விண்ணகத்தில் நமக்கு ஆசீரைப் பெற்றுத்தரக்கூடிய அளவுக்கு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறார்கள். நாமும் மாட்சிமையைப்பெற உழைப்போம், மன்றாடுவோம்..

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

“நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்லர்”

“நான் உங்கள உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்லர்”“ என்னும் துணிவான இயேசுவின் சொற்களை இன்று நம் சிந்தையில் இருத்துவோம்.

யோவான் நற்செய்தியில் “உலகு”“ என்னும் சொல் மூன்று பொருள்களைக் கொண்டிருக்கிறது.

1. இறைவன் படைத்த உலகம் . அது நல்லது.
2. தீய நாட்டங்கள் நிறைந்த இடம். அது தீயது.
3. இறைவன் படைத்த மனிதர்கள். இறைவனால் அன்பு செய்யப்படுபவர்கள்

இந்த இடத்தில் இரண்டாவது பொருளையே அது கொண்டிருக்கிறது. இருளின் ஆற்றல்கள் நிறைந்த இந்த உலகிலிருந்து, இயேசு நம்மைப் பிரித்து எடுத்துள்ளார். எனவே, நாம் இனி உலகைச் சாராமல், இயேசுவையே சார்ந்து வாழவேண்டும். உலகு சார்ந்த இச்சைகள், எண்ணங்கள், செயல்களைக் களையவேண்டும். “உலகின்மீதும் அதிலுள்ளவைமீதும் அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது. ஏனெனில் உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை உலகிலிருந்தே வருபவை”“ (1 யோவா 2: 15-16) என்னும் இறைமொழியை மனத்தில் கொண்டு வாழ்வோம்.

மன்றாடுவோம்: எங்களைத் தேர்ந்துகொண்ட தெய்வமே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உலகிலிருந்து எங்களைத் தேர்ந்தெடுத்தவரே நாங்கள் உலகைச் சார்ந்து வாழாமல், உம்மையே சார்ந்து வாழும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

''இயேசு, 'எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே,
நீ என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!
இதனால் நீரே என்னை அனுப்பினீர் என உலகம் நம்பும்' என்றார்'' (யோவான் 17:21)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு தம் சீடர்களோடு இறுதி இரா உணவு அருந்தியபின் அவர்களுக்காகக் கடவுளை வேண்டுகிறார். அந்த வேண்டலில் காணப்படுகின்ற ஒரு முக்கிய கருத்து ''ஒன்றிப்பு'' என்பதாகும். இயேசு முதலில் தமக்கும் தம் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற ஒன்றிப்புப் பற்றிப் பேசுகிறார். அந்த ஒன்றிப்பு ஆழமானது. தந்தை என அவர் அழைத்த கடவுளிடமிருந்தே இயேசு வந்தார்; அவரால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார். தந்தையை இவ்வுலகிற்கு இயேசு வெளிப்படுத்தினார். எனவே இயேசுவைக் காண்போர் தந்தையையே காண்கின்றனர். இவ்விதத்தில் இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற ஒன்றிப்பு தனித்தன்மை வாய்ந்தது. அதே போல இயேசு தம் சீடர்களுக்கிடையேயும் ஆழ்ந்த ஒன்றிப்பு நிலவ வேண்டும் என வேண்டுகிறார். இத்தகைய ஆழ்ந்த ஒன்றிப்பு சீடர்கள் நடுவே நிலவும்போது தந்தையே இயேசுவை உலகிற்கு அனுப்பினார் என்னும் உண்மையை உலக மக்கள் ஏற்பர் (யோவா 17:21).

-- ''எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!'' என இயேசு எழுப்பிய மன்றாட்டைத் திருச்சபை இன்றும் தொடர்ந்து எழுப்புகின்றது. குறிப்பாக, பல பிரிவுகளாகச் சிதைந்து கிடக்கின்ற கிறிஸ்தவ சபைகள் எல்லாம் ஒன்றித்து வந்து, இணைந்து செயல்படும்போது இந்த உலகில் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வது எளிதாகும். இதற்கு மாறாக, இன்றைய உலகில் கிறிஸ்தவர்கள் நடுவே நிலவுகின்ற பிளவுகள் கிறிஸ்துவை அறிவிக்க ஒரு பெரிய தடையாக உள்ளன. எனவேதான் திருச்சபை ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதம் 17 முதல் 25 முடிய ''கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம்'' என்றொரு காலத்தைக் கொண்டாடுகிறது. அப்போது கிறிஸ்தவ சபைகள் ஒன்றித்து வந்து தங்களிடையே ஆழமான ஒன்றிப்பு ஏற்பட வேண்டும் என்னும் கருத்தைப் புதிப்பித்துக் கொண்டு, அந்த ஒன்றிப்புக்காக இறைவனை நோக்கி வேண்டுதல் எழுப்புகின்றன. கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சி அண்மைக் காலத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1965) கிறிஸ்தவ ஒன்றிப்பை ஒரு முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருந்தது. கிறிஸ்தவர்கள் ஒன்றித்துச் செயல்படும்போது உலக மக்களிடையே ஒற்றுமை வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என்பதில் ஐயமில்லை. அப்போது இயேசுவின் நற்செய்தி எல்லா மக்களின் வாழ்விலும் தாக்கம் கொணர்ந்து மனித இனத்தைப் புதுப்பிக்கின்ற சக்தியாக மாறும்.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் உம்மோடு உறவாடி ஒன்றித்துச் செயல்பட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

ஒன்றாய் இருப்பார்களாக!

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இயேசு ஒற்றுமைக்காகச் செபிக்கிறார். " .. ..எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! " .. ..அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! "அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு .. .. " .. ..அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இயேசுவின் இச் செபம் மக்கள் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதில் அவருக்குள்ள ஆசையையும் ஆர்வத்தையும் எண்பிக்கிறது. அதே வேளையில் இந்த ஒன்றித்து வாழும் ஒற்றுமை வாழ்வில் மனிதன் எத்தனை சிக்கல்களைச் சந்திக்கிறான்; எவை எல்லாம் மனிதனின் ஒற்றுமையைப் பிளவுபடுத்துகின்றன என்பதையும் சிந்திக்கத் தூண்டுகிறார்.

சின்னச் சின்னக் காரணங்கள் கணவன் மனைவியைப் பிரித்துவிடுகிறது. ஒரு அடி நிலம், ஒரு வரப்பு, அண்ணன் தம்பியை அன்னியனாக்கிவிடுகிறது. இரண்டு கிராம் தங்கம்,அக்காள் தங்கையை கட்சிக்காரியாக்கிவிடுகிறது. சில பொருட்கள் உறவை உடைத்து விடுகிறது.சில வெறிகள் சமூக ஒற்றுமையைக் குலைத்து விடுகிறது. சில சுய நலங்கள் நட்பில் வளரும் ஒற்றுமையைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது.

இப்படி எல்லாம் மனிதன் பிளவுபடுவான்; ஒற்றுமைளை இழப்பான் என்பதை இயேசு அறிந்து அவனுக்காகச் செபிக்கிறார். மனிதனை ஒன்றுபட்டு வாழ அழைக்கிறார். நம் குடும்பத்தின் ஒற்றுமையைச் சிதைப்பது எது? உறவில் விரிசலை உண்டாக்குவது எது? சமுதாயத்தில் பிரிவினை ஏற்படுத்துவது எது? அடையாளம் காண்போம். இயேசுவோடு செபித்து ஒன்றித்து வாழ்வோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்