திருவிவிலியம் Bible in Tamil

புனித யோவான் - திருத்தூதர், நற்செய்தியாளர் விழா

முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-4

சகோதரர் சகோதரிகளே, தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்; கையால் தொட்டு உணர்ந்தோம். வெளிப்படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம். தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த `நிலைவாழ்வு' பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம். தந்தையுடனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம். எங்களது மகிழ்ச்சி நிறைவடையுமாறு உங்களுக்கு இதை எழுதுகிறோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 97: 1-2. 5-6. 11-12

பல்லவி: நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;
பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக!
2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன;
நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். -பல்லவி

5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன.
6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன;
அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. -பல்லவி

11 நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.
12 நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்;
அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

யோவான் 20:1-8

தூய யோவான் அப்போஸ்தலர் திருவிழா

நற்செய்தி வாசகம்


+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 2-8

வாரத்தின் முதல் நாளன்று மகதலா மரியா சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ``ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!'' என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

1யோவான் 1: 1 – 4
இறைத்தந்தையின் இரக்கம்

யோவானின் நற்செய்தியில், முதல் அதிகாரம் ஒட்டுமொத்த புத்தகத்தின் சுருக்கமாக இருப்பது போல, இந்த கடிதத்தின் முதல் நான்கு இறைவார்த்தைகள், ஒட்டுமொத்த நூலின் சாராம்சமாக பார்க்கப்படுகிறது. கடவுள் தான் நிலைவாழ்வை அருள்கிறவர். அந்த நிலைவாழ்வு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக இந்த உலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நம்முடைய பாவங்களை மறைத்து விட்டு, கடவுள் முன் நிற்போமேயானால், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. அதே வேளையில், நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவருடைய மன்னிப்பிற்காக நாம் காத்திருப்போமே என்றால், நாம் மீட்கப்படுவோம். அதுதான் இங்கு நமக்கு தரப்படுகிற செய்தியாக இருக்கிறது.

கடவுள் யாரையும் நிர்கதியாக விட்டு விட வேண்டும் என நினைத்ததில்லை. இந்த உலகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் குழந்தையே. அனைவரையும் மீட்க வேண்டும் என்பதே கடவுளின் திட்டம். இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றியவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. எப்படி நிறைவேற்றினார்? நமக்காக சிலுவையில் அறையப்பட்டு, வேதனைப்பட்டு இறந்து, உயிர்த்தெழுந்து நமக்கு மீட்பைப் பெற்றுத் தந்தார். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தது உண்மையே. ஏனென்றால், அவருடைய சீடர்களுக்கு அவர் உயிர்த்த பிறகு தோன்றினார். அதையே யோவானும் அவருடைய இந்த கடிதத்தில் குறிப்பிடுகிறார், ”கண்ணால் கண்டோம், உற்று நோக்கினோம், கையால் தொட்டுணர்ந்தோம்”. ஆக, உயிர்த்த ஆண்டவரில் நாம் அனைவரும் நம்பிக்கை வைக்க இந்த பகுதி நமக்கு அழைப்புவிடுக்கிறது.

இறைவனின் இரக்கத்தைப் பெறுவது கடினமான காரியம் அல்ல. அது எளிதானது. ஆனால், அந்த எளிதான காரியத்தைச் செய்வதற்கு பலருக்கு மனம் இருப்பதில்லை. நாம் செய்ய வேண்டியது எல்லாம், நம்முடைய பாவங்களை எண்ணிப் பார்த்து மனம் வருந்த வேண்டும். இறைவனின் இரக்கத்தைப் பெறுவதற்கு நாம் தயாராக இருக்கிறோமா? எண்ணிப் பார்ப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

தூய யோவான்

இயேசுவின் சிறப்புரிமை பெற்ற மூன்று திருத்தூதர்களில் இவரும் ஒருவர். தூய யோவான் திருத்தூதர்களில் மிக இளையவர். இயேசுவின் அன்புச்சீடர் என்று மற்றவர்களால் புகழப்படக்கூடிய அளவிற்கு, இயேசுவின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்து, இயேசுவைப் பின்பற்றியவர்.

நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை மிக அருகில் நின்று அனைத்திலும் உடனிருந்தவர் தான் தூய யோவான். இயேசுகிறிஸ்து கைது செய்யப்பட்டபோது, மற்ற திருத்தூதர்கள் பயந்து ஓடியபோது, இவரும் சீமோன் பேதுருவும் மட்டும் தான், இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றார்கள். ஆனால், பேதுரு பின்னர் இயேசுவை மறுதலித்தார். யோவான் மட்டும் தான், சிலுவை அடியில் நின்று, கடைசி வரை, இயேசுவோடு உடனிருந்தார். எனவே, இயேசுவின் தாயை தன்னுடைய தாயாக பெற்றார். இயேசுவின் இடத்தை இவர் நிரப்பினார். இவருடைய வாழ்வில், “உடனிருப்பு“ என்கிற பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்.

உடனிருப்பு என்பது வெறும் மகிழ்ச்சியில் பங்கெடுப்பது மட்டுமல்ல. ஒருவரின் வாழ்வில் எல்லா உணர்வுகளிலும் முழுமையாகப் பங்கெடுப்பது. அதற்காக, எவ்வளவு இழப்புக்கள் வந்தாலும், அதனைத்தாங்கிக்கொள்வது. இறுதிவரை ஒருவரோடு உறவில் நிலைத்து நிற்பது. அத்தகைய உயர்ந்த பண்பை, இந்த திருத்தூதரிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

யோவானின் விசுவாசம்

இயேசு அன்பு செய்த சீடர்களில் மூவருள் ஒருவர் யோவான். யோவான் மீது இயேசு தனி அன்பு கொண்டிருந்தார். ஒரு நற்செய்தியையும், திருமுகத்தையும், திருவெளிப்பாட்டு நூலையும் எழுதியிருந்தாலும், யோவானைப்பற்றி அதிகமாக நற்செய்தி நூல்களில் நாம் காண முடியாது.  ஆனால், யோவானுடைய விசுவாசம் அளப்பரியது. அதற்கு எடுத்துக்காட்டு இன்றைய நற்செய்தி.

”யோவான் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக்கண்டார். ஆனால், உள்ளே நுழையவில்லை”. இந்த இறைவசனம் யோவானுடைய இறைநம்பிக்கையைப் பறைசாற்றுவதாக இருக்கிறது. அவருக்குப்பின்னால் சீமோன் பேதுரு வருகிறார். அவரும் குனிந்து பார்க்கிறார். ஆனாலும், அவர் உள்ளே செல்கிறார். இயேசுவின் துணிகள் கிடப்பதை யோவான் பார்த்ததும், அவருக்குள்ளாக பலவிதமான எண்ணங்கள் ஓட ஆரம்பிக்கிறது. துணிகள் கலைந்து காணப்படவில்லை. அப்படியே இருக்கிறது. அதைப்பார்த்தவுடன் அப்படியே உயிர்ப்பை நம்புகிறார். அதாவது, நடக்கிற நிகழ்வுகளை விசுவாசக்கண்கொண்டு யோவான் பார்க்கிறதனால், அவரால் நம்ப முடிகிறது.

நமது வாழ்வில் நடக்கும் அதிசயங்களையும், அற்புதங்களையும் பார்ப்பதற்கு நமக்கு விசுவாசம் வேண்டும். விசுவாசம் இருந்தால் மட்டுமே நம்மால், இறைபக்தியோடு வாழ முடியும். அத்தகைய விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டு யோவான். அவரைப்போல நாமும் விசுவாசக்கண்கொண்டு அனைத்தையும் பார்க்க முயலுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

''கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்;
கண்டார்; நம்பினார்'' (யோவான் 20:8)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசுவின் சாவு அவர்தம் சீடர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியாக அமைந்தது. அவர்களுடைய கனவுக்கோட்டைகள் தகர்ந்து விழுந்தன. அவர்களின் எதிர்பார்ப்புக்கள் சுக்கு நூறாயின. இயேசு மிகுந்த அதிகாரத்தோடும் வல்லமையோடும் எதிரிகளை முறியடித்து, கடவுளின் ஆட்சியை இவ்வுலகில் ஏற்படுத்துவார் என்றும் அந்த ஆட்சியில் தங்களுக்கு முக்கிய பதவிகள் தரப்படும் என்றும் அவர்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனதால் அவர்கள் உள்ளம் உடைந்த நிலையில் நம்பிக்கை இழந்தவர்களாய் இருந்தார்கள். மண்ணுலக மெசியாவை எதிர்பார்த்த சீடர்கள் இயேசுவின் உண்மையான மெசியாப் பண்பை உணர்ந்து ஏற்றிட நாள் பிடித்தது. இயேசு இவ்வுலக மன்னர்களைப் போல, ஆட்சியாளர்களைப் போல ஓர் அரசையோ ஆட்சியையோ நிறுவுவதற்கு மாறாக, கடவுளின் ஆட்சிக்குப் புதியதொரு பொருள் கொடுத்ததை அவர்கள் படிப்படியாகத்தான் உணர்ந்து ஏற்றனர். சிலுவையில் இறந்து கல்லறையில் புதைக்கப்பட்ட இயேசு கடவுளின் ஆட்சியைப் புதியதொரு முறையில் நிலை நாட்டினார்.

-- இயேசு சாவின் ஆட்சியை முறியடிக்கிறார். சாவு அவருடைய வாழ்வுக்கு முற்றுப் புள்ளியல்ல, மாறாக, அவருடைய புதிய வாழ்வுக்கு ஒரு தொடக்கம். இதை நாம் உளமார ஏற்று உள்வாங்குவதையே ''நம்பிக்கை'' என அழைக்கிறோம். மகதலா மரியா சீமோனையும் ''மற்றச் சீடரையும்'' அணுகி, கல்லறையில் இயேசுவின் உடலைக் காணவில்லை என்றதும் ''மற்றச் சீடர்'' ஒடோடிச் சென்று ''கல்லறையின் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார்'' (யோவான் 20:8). இங்குக் குறிக்கப்படுகின்ற ''மற்றச் சீடர்'' யார்? ''இயேசு தனி அன்பு கொண்டிருந்த'' இச்சீடர் யோவான் ஆவார் என்பது மரபுச் செய்தி (காண்க: யோவா 20:2). ஆயினும் நாம் ஒவ்வொருவரும் அந்த ''மற்றச் சீடரின்'' இடத்தில் நம்மை நிறுத்திப் பார்க்கலாம். அப்போது நாமும் நமக்காக வாழ்ந்து இறந்த இயேசு சாவின் ஆட்சியை முறியடித்துவிட்டார் என்பதைக் கல்லறையின் ''உள்ளே சென்று'', ''கண்டு'' ''நம்புவோம்''. இந்த நம்பிக்கை நம்மில் வளரும்போது நாம் இறையாட்சியின் மகிழ்ச்சியால் நிரப்பப்படுவோம்.

மன்றாட்டு
இறைவா, வாழ்வின் ஊற்று நீரே என நாங்கள் ஏற்றிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்