முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2:36-41

பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு யூதர்களை நோக்கிக் கூறியது: ``நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.'' அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, ``சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள். அதற்குப் பேதுரு, அவர்களிடம், ``நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது'' என்றார். மேலும் அவர் வேறு பல சான்றுகளை எடுத்துக்கூறி, ``நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்'' என்று அறிவுறுத்தினார். அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 33:4-5. 18-19, 20 மற்றும் 22

பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;
அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்;
அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக்
காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்;
அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;
அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,
உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாக! -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

யோவான் 20:11-18

பாஸ்கா காலம்-முதல் வாரம் செவ்வாய்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 11-18

அக்காலத்தில் மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், ``அம்மா, ஏன் அழுகிறீர்?'' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ``என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை'' என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவரிடம், ``ஏன் அம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?'' என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், ``ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்'' என்றார். இயேசு அவரிடம், ``மரியா'' என்றார். மரியா திரும்பிப் பார்த்து, ``ரபூனி'' என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு `போதகரே' என்பது பொருள். இயேசு அவரிடம், ``என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், `என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்' எனச் சொல்'' என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று, ``நான் ஆண்டவரைக் கண்டேன்'' என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 20: 11 - 18
எனது பற்று எதில் உள்ளது?

இந்து மத போதகரின் பற்று அர்ச்சனைத் தட்டு நோக்கியே இருக்கின்றது. நாட்டு தலைவர்களின் பற்று இந்த மண்ணை பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்த்து கொடுப்பதில் இருக்கின்றது. ஏழை மக்களின் பற்று அன்றாட வயிற்றை கழுவுவதில் இருக்கின்றது. இப்படி எல்லாருமே ஏதாவது ஒரு வழியில் எவற்றின் ஒன்றாவது மீது பற்று கொண்டு தான் வாழ்கின்றோம்.

உண்மையிலேயே நம்முடைய பற்றுதல் எவற்றின் மீது இருக்க வேண்டும் என்று மகதலா மரியா தன் செயல் வழியாக கற்றுக் கொடுக்கின்றாள். இயேசுவின் உயிர்ப்பு நிகழ்ச்சிக்கு ஒரு கதாநாயகியாக விளங்குகின்றவள் மகதலா மரியா. ஏனென்றால் இயேசு சிலுவையில் அறையப்பட்ட போதும் அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட போதும் இக்காட்சிகளை மனவருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் குழுவில் இடம் பெற்றவள் மகதலா மரியா. ஓய்வுநாள் முடியும் வரை காத்திருந்து இயேசு இறந்த மூன்றாம் நாள் விடியற்காலலை கல்லறையில் இருந்த இயேசுவுக்கு நறுமணத் தைலம் பூச ஆவலுடன் சென்ற பெண்கள் குழுவிற்று தலைமை வகித்தவரும் இந்த மரியா தான். எதற்காக மகதலா மரியா இவ்வளவு பற்றோடு செயல்பட்டாள் என்பதற்கு காரணத்தினை விவிலிய பேராசிரியர்கள் கூறுகையில் ஏழு பேய்கள் பிடித்திருந்த மகதலா மரியாள் இயேசுவின் இரக்கத்தால் விடுதலை பெற்றவள். எனவே தன் வாழ்வை அர்ப்பணித்து விட்டாள் என்கிறார்கள். இயேசுவின் ஆழ்ந்த பக்தையாக மாறுகின்றாள். அந்த பக்தை தான் இயேசுவைப் பற்றி கொள்ள வழிவகுக்கின்றது. இத்தகைய பற்றுதலின் காரணமாக தான் உயிர்த்த இயேசுவை முதன்முதலில் காணும் வாய்ப்பினைப் பெறுகின்றாள்.

எனது பற்று எதில் இருக்கிறது? அதிக சொத்து சோ்ப்பதிலா? அல்லது மரியாதை பெறுவதிலா? அல்லது இயேசுவைக் காண்பதிலா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

=====================

இருளினை அவரின் அருளால் … (யோவான் 20 : 11-18)

கிறித்தவர்களின் உண்மையான முகத்தைப் பார்க்கும் போது இயேசு கிறித்து உயிருடன் எழுந்தார் என்ற உண்மையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்கிறாhர் - கடவுள் மறுப்பாளர் பிரடெரிக் நீட்சே. இயேசுவை அதிகமாக அன்பு செய்தவர்களில் மகதலென் மரியாவுக்கு சிறப்பான இடம் உண்டு. அப்படிப்பட்டவர்க்கு எப்படி இயேசுவைக் கண்டு கொள்ள முடியவில்லை? தோட்டக்காரர் என்று எப்படிக் கூறுகின்றார்? இந்தக் கேள்விகளுக்கு இருபதாம் பிரிவின் முதல் இறைவார்த்தைப் பதிலாக அமைகின்றது. “இருள் விலகும் முன்பே”. இங்கே “இருள்” என்ற ஒற்றைப் பதத்தை நேரடியான மற்றப் பொருள் பொதிந்த பதமாகவே நான் பார்க்கிறேன். யோவான் நற்செய்தியாளரது, வார்த்தைகளின் ஆழம் அளப்பரியது என்பதை நாம் அறிவோம்.

இந்த “இருள்” தன் அன்பரை இழந்துவிட்டேன் என்ற கவலையினாலும் கண்ணீராலும் வந்த இருள். ஆண்டவர் இயேசு இறந்து விட்டார் என்ற அறியாமையினால் வந்த இருள். மூன்றாம் நாள் அவரின் உயிர்ப்பில் நம்பிக்கையில்லாமல் அவரின் சடலத்தை மட்டுமே அவநம்பிக்கையோடு காணச் சென்றவளின் இருள். கல்லறைத் திறந்திருப்பதைப் பார்த்தவுடன் வந்த திகிலால் வந்த இருள். வெற்றுக் கல்லறை சற்றென உருவாக்கிய இருள். வெள்ளைத் துணியைப் பார்த்தவளின் கொள்ளையடிக்கப்பட்டவளின் இருள். அவர் உயிர்த்தெழுந்திருக்கமாட்டார் யாரோ எடுத்துத்தான் போயிருப்பார்கள் என்ற முற்சார்பு எண்ணத்தில் வந்த இருள்.

நம் அன்றாட வாழ்விலும் அனுதினக் கவலையும் கண்ணீரும் அறியாமையும் அவநம்பிக்கையும், திகிலும் முற்சார்பு எண்ணங்களும் இயேசுவின் உயிர்ப்பினை உணராமல் நம்மை இருளுக்குள் தள்ளி விடுகிறது. உயிர்த்த ஆண்டவரின் மகிழ்ச்சியில் நாம் பங்குகொள்ள தடைக்கற்களாக நின்று தடுத்துவிடுகிறது. இவ்விருளினை அவரின் அருளினால் வெல்வோம். இந்த பாஸ்கா காலம் அவரில் மகிழ்வுற நம்மை அழைத்துச் செல்லட்டும்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 33: 4 – 5, 18 – 19, 20, 22
”அவர்கள் உயிரை சாவினின்று காக்கின்றார்”

ஆண்டவர் அவர்கள் உயிரை சாவினின்று காக்கின்றார் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகின்றார். யாருடைய உயிரை சாவினின்று காக்கின்றார்? ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போரையும், ஆண்டவரது பேரன்பிற்காக காத்திருப்போரையும் அவர் கண்ணோக்குகின்றார். ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போர் யார்? அவரது பேரன்பிற்காக காத்திருப்பவர்கள் யார்? இங்கு திருப்பாடல் ஆசிரியர் இஸ்ரயேல் மக்களை ஆண்டவர்க்கு அஞ்சி நடக்கிறவர்களாக, ஆண்டவரது பேரன்பிற்காக ஏங்கி நிற்கிறவர்களாக அறிவிக்கிறார். இது இஸ்ரயேல் மக்களின் மீட்பின் வரலாறை நினைவுபடுத்தக்கூடிய திருப்பாடல் ஆகும்.

நாடு முழுவதும் பஞ்சத்தினால் துன்புற்றபோது, எகிப்து மட்டும், யோசேப்பின் முன்மதியால் பஞ்சத்திலிருந்து தப்பியது. இஸ்ரயேல் மக்கள் தானியத்திற்காக எகிப்து வந்தபோது, யோசேப்பு வழியாக கடவுள் அவர்களுடைய பஞ்சத்தைப் போக்குகிறார். ஒருவேளை யோசேப்பு அங்கு இல்லையென்றால், இஸ்ரயேல் மக்களின் கதி, பரிதாபமான நிலையாக இருந்திருக்கும். ஆனால், ஆண்டவர் அற்புதமாக அவர்களது பஞ்சத்தைப் போக்கியதை, ஆசிரியர் நினைவுபடுத்துகிறார். இவ்வாறு இஸ்ரயேல் மக்களை சாவின் பிடியிலிருந்து விடுவிக்கிறார். ஆண்டவரது இந்த அன்புக்கு காரணமாக விளங்கியது இஸ்ரயேல் மக்கள் கடவுள் மீது வைத்திருக்கிற அன்பும், ஆற்றலுமே. ஆண்டவரை நாம் ஏற்றுக்கொள்கிறபோது, அவரது அன்பையும், அருளையும் உணர்ந்து நாம் அன்பை வெளிப்படுத்துகிறபோது, ஆண்டவர் மகிழ்ச்சியடைகிறார். நமக்கு அரண் போல இருந்து நம்மைப் பாதுகாக்கின்றார். எல்லாவிதமான தீங்குகளிலுமிருந்தும் நம்மை விடுவிக்கும் நம் அன்பு தேவனை, முழுமையாக அன்பு செய்வோம்.

கடவுளின் அன்பு எல்லாருக்குமானது. கடவுள் நம் அனைவரையும் அன்பு செய்கிறார். அந்த அன்பை உணர்ந்து, நாம் கடவுளை அன்பு செய்தற்கு அழைக்கப்படுகிறோம். தன்னுடைய மக்கள் தன்னை அன்பு செய்ய வேண்டும், தன்னிடத்தில் வர வேண்டும், தன்னிடத்தில் முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ஏங்கும் தந்தையைப் போல, இறைவனும் நம் அனைவர் மீது அன்பு கொண்டிருக்கிறார்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

நிதானமே வாழ்வில் பிரதானம்

மரியா இயேசுவின் மீது அதிக அன்பு வைத்திருந்தவர் என்பது நமக்கு நன்றாகத்தெரியும். எனவே தான், யாருக்கும் அஞ்சாமல் விடியற்காலையிலேயே தன்னந்தனி பெண்ணாக கல்லறைக்கு வந்திருக்கிறார். இப்போதும் கூட நாம் கல்லறைகளைப் பார்த்தால் பயப்படுவதுண்டு. அதிலும், சமீபத்தில் தான் இறந்த ஒருவரை அடக்கம் செய்திருக்கிறது என்றால், கேட்கவே வேண்டாம். அந்த கல்லறை அருகில் செல்லவே நாம் பயப்படுவோம். ஆனால், மரியா சாதாரண பெண்ணாக இருந்தாலும், கல்லறைக்குச் சென்றது, அவள் இயேசு மீது வைத்திருந்த ஆழ்ந்த அன்பைக் குறிக்கிறது. அவளது மனம், இயேசு இன்னும் இறக்கவில்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறது. எத்தனையோ பேருக்கு வாழ்வு கொடுத்தவர், பல புதுமைகளை நிகழ்த்தியவர், நிச்சயம் இந்த சாவிலிருந்து எழுந்து வருவார் என்று கூட அவர் நினைத்திருக்கலாம். அதுவே, அவர் அந்த அதிகாலையில் கல்லறைக்கு வருவதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

கல்லறையில் இயேசுவின் உடலைக் காணவில்லை என்றதும், அவளுக்கு நிச்சயம் கண்களில் அழுகை முட்டியிருக்கும். ஆனாலும், நிதானமாக இருக்கிறாள். அங்கே இரண்டு ஆண்களை பார்த்தாலும், பயப்படவில்லை, பதற்றம் அடையவில்லை. கோபப்படவில்லை. அவளைப் பொறுத்தமட்டில் இயேசுவைப் பார்க்க வேண்டும். இவ்வாறு ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் பொறுமையோடு, பதற்றமில்லாமல் வாழ்வை மரியா அணுகுவதற்கு கற்றுக்கொடுக்கிறார். அந்த அதிகாலை வேளையிலும், இயேசுவைக் காணவில்லையே என்ற ஆதங்கம் பல மடங்கு அவளுக்குள்ளாக இருந்தாலும், அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, நிதானமாக அந்த இக்கட்டான சூழ்நிலையைக் கையாளுவது, நிச்சயம் சிறந்த ஒரு வாழ்வியல் மதிப்பீடு.

சாதாரண பிரச்சனை என்றாலே நாம் அழுது ஆர்ப்பரிக்கிறோம். புலம்பித் தவிக்கிறோம். வாழ்வே முடிந்து விட்டது போல பரிதவிக்கிறோம். வாழ்வில் நிதானத்தைக் கடைப்பிடிப்போம். அந்த நிதானம் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். பதற்றம் நிச்சயம் பிரச்சனையை அதிகமாக்கும். வாழ்வில் எல்லாச்சூழலிலும் நிதானமாக வாழ, இறைவனை வேண்டுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

ஆன்மாவின் குரலுக்குச் செவிகொடுப்போம்

உயிர்த்த இயேசுவை முதலில் பார்த்தவர் என்ற பெருமையை உடையவர் மகதலா மரியா. மரியா இயேசுவைக்கண்டாலும் அவரால் இயேசுவை அடையாளம் காணமுடியவில்லை. அதற்கு இரண்டு காரணங்களை நாம் சொல்லலாம். 1. இயேசுவைப்பிரிந்த துக்கம் அவருடைய கண்களை மறைத்தது. மரியா எந்த அளவுக்கு இயேசு மீது அன்பு வைத்திருந்தார் என்பதற்கு, இருள் நீங்கும் முன்பே தனி ஆளாக, பெண்ணாக இருந்தாலும் துணிவோடு கல்லறை வாயிலுக்கு இயேசுவைத்தேடிவந்ததைச்சொல்லலாம். அந்த அளவுக்கு இயேசு மீது அவர் அன்பு வைத்திருந்தார். அந்த அன்புதான் இயேசுவின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத சோகத்தைக்கொடுத்தது. எனவே தான் இயேசு கண்ணெதிரே நின்றாலும் அவரால் இயேசுவை அடையாளம் காணமுடியவில்லை. வாழ்வில் நமக்கேற்படும் துன்பங்களும், கலக்கங்களும் கடவுளை அறிந்துகொள்வதற்கு தடைக்கற்களாக இருக்கிறது. 2. அவளுடைய பார்வை கல்லறையில் பதிந்திருந்ததால், உயிர்த்த இயேசுவைப்பார்க்க முடியவில்லை. அதாவது, கல்லறையைத்தாண்டி மரியாளால் சிந்திக்க முடியவில்லை. இயேசு இலாசரை உயிர்ப்பித்திருக்கிறார். நாற்றமடித்த உடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். அப்படி வல்லமை பொருந்திய இயேசுவால், அவர் சொன்னதுபோல் உயிர்த்தெழ முடியும் என்ற சிந்தனையே மரியாளிடம் இல்லை. எனவேதான், அவளின் பார்வை கல்லறையில் பதிந்திருக்கிறது. உயிர்த்த இயேசுவை விட்டு விலகி இருக்கிறது.

மரியாளின் இந்தப்பார்வையை நமது வாழ்வுக்கு ஒப்பிட்டுப்பார்க்கலாம். மனித வாழ்வு என்பது ஒரு போராட்ட வாழ்வு. உடலுக்கும், ஆன்மாவுக்கும் இடையேயான போராட்ட வாழ்வு. உடலுக்கும், ஆன்மாவுக்கும் இடையேயான போராட்டம், வாழ்வின் இறுதிமூச்சு வரை இருந்துகொண்டே இருக்கும். இந்த போராட்டத்தில் நம்மை நிலைநிறுத்திக்கொண்டு, துணிவோடு போராடுவதுதான், வாழ்வின் வெற்றியின் இரகசியம். இதைத்தான் இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது. எவ்வாறு மரியாள் கல்லறையின் மீது தனது பார்வையை பதிய வைத்திருந்ததால், உயிர்த்த இயேசு என்னும் விலைமதிப்பில்லாத செல்வத்தை, காணாமல் இருந்தாளோ, அதேபோல் உடல் சார்ந்த எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதால், ஆன்மா நமக்கு கொடுக்கும் நிலையான பேரின்பத்தைக் காணாமல் விட்டுவிடுகிறோம். இயேசுவின் வார்த்தைகள் மரியாளின் பார்வையை மாற்றி, விலைமதிப்பில்லாத செல்வத்தைப்பற்றிக் கொள்ள உதவி செய்கிறது.

நம்முடைய வாழ்வு பெரும்பாலும் ஆன்ம, ஆன்மீக வாழ்வில் அக்கறை கொள்ளாமல், இந்த உலகம் சார்ந்தவற்றில் சிந்திப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறது. இதனால் நாம் உண்மையான மகிழ்ச்சியை, பேரின்பத்தை இழந்துகொண்டிருக்கிறோம். ஆண்டவரின் வார்த்தை துணைகொண்டு, ஆன்மா விடுக்கும் அழைப்பிற்கு செவிகொடுத்து, மனமகிழ்ச்சியைப்பெறுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

இயேசுவின் உயிர்ப்பு அழுகையைப் போக்குகிறது !

இயேசுவின் உயிர்ப்பு மாந்த உணர்வுகளில் ஒன்றான துயரத்தை, அழுகையைப் போக்குகிறது என்னும் நற்செய்தியை இன்றைய வாசகத்தில் காண்கிறோம்.

இயேசுவின் இறப்பினால் பெரிதும் துயருற்ற மகதலேன் மரியா "கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்". வெண்ணாடை அணிந்த தூதர்கள் அவரிடம் " அம்மா, ஏன் அழுகிறீர்?" எனக் கேட்டு, அவருக்கு ஆறுதல் அளிக்க முன்வருகின்றனர். பின்னர், இயேசுவும் அவருக்குத் தோன்றி, "ஏன் அம்மா அழுகிறாய்?" எனக் கேட்கிறார். மரியா தமது துயரத்தை எடுத்துரைத்ததும், இயேசு அவரை நோக்கி, "மரியா" என்று சொல்ல, மரியா திரும்பிப் பார்த்து, அவரை இயேசு எனக் கண்டுணர்ந்து, "ரபூனி", "போதகரே" என்கிறார். இந்த நொடியில் அவரது துயரம், அழுகை அனைத்தும் களையப்பட்டு, பெருமகிழ்வு உண்டாகிறது. அவரை இயேசு உயிர்ப்பின் செய்தியாளராகத் தமது சீடர்களிடம் அனுப்புகிறார்.

நமது வாழ்வின் துயரங்கள், அழுகை அனைத்தையும் போக்கும் ஆற்றல் இயேசுவின் உயிர்ப்புக்கு உண்டு. "நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள், அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள். ஆனால், உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்" (யோவா 16: 20) என்று தமது இறப்புக்கு முன்னால் இயேசு வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதி அவரது உயிர்ப்பிலே நிறைவேறுகிறது.

எனவே, சாவு, நோய்கள், தனிமை, மன அழுத்தம், கடன் தொல்லைகள், குடும்ப சமாதானமின்மை... போன்றவற்றால் கண்ணீர் விட்டு, அழுது புலம்பும் அனைவரும் உயிர்ப்பின் நாயகனாம் இயேசுவைத் தேடி வரட்டும். அவர் கண்ணீரைக் களிநடமாக மாற்றுவார்.

மன்றாடுவோம்: சாவை வென்று உயிர்த்த மாட்சி மிகுந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் அழுதையையும், துயரத்தையும் போக்கி, நீர் மட்டுமே அருளுகின்ற மகிழ்ச்சியை, ஆறுதலை உமது ஆவியினால் எங்களுக்குத் தந்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

''இயேசு மரியாவிடம், 'ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?' என்று கேட்டார் (யோவான் 20:15)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அடிப்படை. கல்லறையிலிருந்து உயிர்பெற்றெழுந்த அந்த நேரத்தில் இயேசுவைக் கண்டவர் எவருமில்லை. ஆனால் உயிர்பெற்றெழுந்த இயேசு அவரில் நம்பிக்கை கொண்ட பல மனிதருக்குத் தோன்றினார். யோவான் நற்செய்தியில் இயேசு மகதலா மரியாவுக்குத் தோன்றிய நிகழ்ச்சி விரிவாகத் தரப்பட்டுள்ளது. இயேசுவின் உடலைக் கல்லறையில் காணாததால் கவலையோடு அழுதுகொண்டிருந்த மரியா ஒரு மனிதரைக் காண்கின்றார். அவர் தோட்டக்காரராக இருப்பாரோ என மரியா எண்ணுகிறார். ஆனால் உண்மையிலே அவர் உயிர்பெற்றெழுந்த இயேசுதான். இயேசு மரியாவிடம் ''ஏனம்மா அழுகிறாய்?'' எனக் கரிசனையோடு வினவுகிறார். ''யாரைத் தேடுகிறாய்?'' என இயேசு கேட்கிறார். இயேசுவைத் தேடுவதாக மரியா கூறியதும் இயேசு ''மரியா'' என்று பெயர் சொல்லி அழைக்கிறார். அக்குரலுக்குச் சொந்தக்காரர் யார் என்பதை மரியா உடனேயே கண்டுகொள்கிறார். தான் பேசிக்கொண்டிருக்கின்ற மனிதர் உண்மையிலேயே இயேசுதான் என உணர்ந்த அந்த நேரத்திலேயே மரியா ''ரபூனி'' (''போதகரே'') என இயேசுவைக் கூப்பிடுகிறார்.

-- இயேசு நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். இயேசுவை யார் என நாம் அறிந்து அவரிடத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முதல் நிபந்தனை நாம் அவர் நம்மை எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கிறார் என்னும் உண்மையை ஏற்பதுதான். இயேசுவின் அன்பு நம்மை அரவணைக்கிறது எனவும் அவருடைய அன்பின் பிணைப்பில் நாம் புதுவாழ்வு பெறுகிறோம் எனவும் நாம் ஏற்றுக்கொண்டால் அவரை நாம் ஆண்டவரே எனவும் போதகரே எனவும் அழைப்பதோடு அவருடைய போதனையை நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் கொள்வோம். இயேசுவை அனுபவித்து உணர்கின்ற மனிதர் அவருடைய அன்பின் ஆழத்தை அறிவார்கள். அப்போது நாம் தேடுகின்ற இயேசு நம் கைகளுக்கு எட்டாதவராகவோ நம் பார்வைக்கு அப்பாற்பட்டவராகவோ இருக்கமாட்டார். மாறாக, அவர் நாம் நமக்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளோமோ அதைவிடவும் நமக்கு நெருக்கமாக உள்ளார் என நாம் உணர்வோம். இயேசுவின் உயிர்த்தெழுதல் நம்மை முற்றிலுமாக உருமாற்றுகிறது. பாவம் என்னும் தீமையிலிருந்து இயேசு நம்மை விடுவித்துள்ளார் என்னும் அனுபவம் நமதாக வேண்டும். அப்போது நன்மையைத் தேடிச் செல்கின்ற மனநிலை நம்மில் உருவாகும். நாம் தேடுகின்ற இயேசு நம்மை விட்டு அகன்றுவிட்டாரோ என்னும் அச்சம் நம்மில் எழாது. மாறாக, இயேசுவின் உடனிருப்பு நம் உள்ளத்தில் உள்ளதை நாம் உணர்வோம்; அவருடைய ஆவியால் புது வாழ்வு பெறுவோம்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகன் இயேசுவைப் பின்பற்றி நாங்களும் உம் திருவுளத்தை நிறைவேற்ற அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"நான் ஆண்டவரைக் கண்டேன்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இது பலருக்கு இயற்கை. ஒன்றை ஒருவரிடம் சொல்லச் சொன்னால், சொன்ன செய்தியை மறந்துவிடுவர்.தன்னுடைய அனுபவத்தை விலாவாரியாக விவரித்த பின், புறப்படுவதற்கு முன், ஐயோ ஒன்றை மறந்துவிட்டேனே, இதைச் சொல்லச் சொன்னார் என்று விஷயத்தைச் சொல்லுவார்கள். அவர் சொன்னதை விட தான் அனுபவித்தது, பார்த்தது, கேட்டது, ருசித்தது, ரசித்தது அவ்வளவு ஆழமான அழுத்தத்தையும் தாக்கத்தையும் அது ஏற்படுத்தியிருக்கும்.

உயிர்த்த இயேசு மரியாவிடம் சீடர்களுக்குச் சொல்லச் சொன்ன செய்தி, "என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்" (யோவா20:17)என்பது. ஆனால் மரியா சொன்னதோ முதன் முதலில் "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்பது. அதன் பின்னரே உயிர்த்த இயேசு சொன்ன செய்தியைச் சொல்கிறார். மகதலா மரியா இவ்வாறு செய்ததன்மூலம் தானும் இயேசுவின் சீடன் என்பதை உறுதிசெய்கிறார். பவுலடியார், தான் ஒரு சீடர், திருத்தூதர் என்பதற்கு ஆணித்தரமான சான்றாக, 'நானும் உயிர்த்த இயேசுவைக் கண்டேன்' என்பதையே சான்றாக்குகிறார்.(வாசிக்க 1 கொரி 15:8) ஆகவே தான் ஆண்டவரைக் கண்டதில் பெருமை கொள்கிறார். தானும் ஒரு சீடர் என்பதில் பெருமைகொள்கிறார். ஆகவே தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியிலும் எந்த குறையும் வைக்காமல் சிறப்பாகச் செய்து முடிக்கிறார்.

இயேசுவின் செயல்பாட்டைத் தங்கள் வாழ்வில் கண்ட எவரும் அவருக்குச் சாட்சியம் பகராமல் பின் வாங்கமாட்டார்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் இயேசுவைக் காணாமல் இருக்க முடியாது. பல சமயங்களில் அருகில் இருக்கும் ஆண்டவனை அடையாளம் தெறியாது இருக்கிறோம். இதயக் கதவைத் திறந்து நம் வாழ்வில் அருஞ்செயல்புரியும் ஆண்டவனைக் காண்போம். வாழ்க்கை ரசிக்கும்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்