முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4:32-35

நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர். தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலன்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டு வந்து. திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 118:2-4, 13-15, 22-24
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

2 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
3 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!
4 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! -பல்லவி

13 அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.
14 ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே.
15 நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. -பல்லவி

22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
24 ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். -பல்லவி

இரண்டாம் வாசகம்
யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும்; உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ``தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்,'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


யோவான் 20:19-31

பாஸ்கா காலம்-இரண்டாம் வாரம் ஞாயிறு

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்'' என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, ``தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா'' என்றார். பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், ``ஆண்டவரைக் கண்டோம்'' என்றார்கள். தோமா அவர்களிடம், ``அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்'' என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், ``இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்'' என்றார். தோமா அவரைப் பார்த்து, ``நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!'' என்றார். இயேசு அவரிடம், ``நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்றார். வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 118: 2 – 4, 22 – 24, 25 – 27a, (1)
”ஆண்டவர் தோற்றுவித்த நாள் இதுவே”

”கடவுள் தோற்றுவித்த நாள்“ என்கிற இந்த வரிகள் பல நேரத்தில் தவறாக விளக்கம் கொடுக்கப்படுகிறது. இது புதிய நாளை குறிக்கக்கூடிய அர்த்தத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால், அது தவறு. இது கடவுள் பிற்காலத்தில் அனுப்ப இருக்கிற மீட்பரின் நாளை குறிக்கக்கூடியதாக இருக்கிறது. அதாவது, இயேசுவைக் குறிக்கும் வார்த்தையாக இது இருக்கிறது. இயேசுவில் மீட்பிற்கான  அடித்தளக்கல்லை கடவுள் நட்ட இருக்கிறார் என்பதை, இந்த வரிகள் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

பழங்காலத்தில், மிகப்பெரிய அரசுகள், வெகு எளிதாக தங்களது அதிகாரத்தை சாதாரண நாடுகள் மீது நிலைநாட்டின. இஸ்ரயேலை அவர்கள் ஒரு பொருட்டாக மதித்ததே இல்லை. ஆனால், கடவுள் அவர்கள் வழியாகத்தான் இந்த உலகத்தை மீட்டார். பாபிலோனிலிருந்து நாடுகடத்தப்பட்ட யூதர்கள், தங்களது நாட்டிற்கு வந்து, மீண்டும் கோவிலைப் புதுப்பிக்கத் தொடங்கிய நாட்களில், இந்த திருப்பாடல் எழுதப்பட்டிருக்கலாம். எனவே தான், கட்டிடத்தின் தொடர்பான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கு, இஸ்ரயேலின் அரசர்களை ”கற்களுக்கு” ஒப்பிட்டுச் சொல்லியிருக்கலாம். ஏனென்றால், இஸ்ரயேலின் அரசர்கள், இஸ்ரயேல் நாட்டை பிரதிபலித்தனர். கடவுளின் நாள் நிச்சயம் வரும். அந்த கடவுளின் நாளில், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். அந்த மகிழ்ச்சியை கடவுள் அனைவருக்கும் தருவார் என்கிற ஆழமான செய்தியை இது தருவதாக இருக்கிறது.

கடவுள் எப்போதும் நமது மகிழ்ச்சியை விரும்புகிறவராக இருக்கிறார். நாம் எவ்வளவு தான் பிரச்சனைகளுக்கு மத்தியில் வேதனைப்பட்டாலும், அதிலிருந்து நம்மை முழுமையாக விடுவிப்பதற்கு, அவர் எல்லாவித வழிகளிலும் முயற்சி எடுக்கிறார். அந்த கடவுளிடம் முழுமையான அன்பு கொண்டு, அவரது நாள் வர வேண்டுமென்று நாம் மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

உண்மையான கீழ்ப்படிதலும், அன்பும்

இயேசுவோடு கடைசி இரவு உணவு உண்ட அறையின் மேல்தளத்தில் சீடர்கள் இன்னும் இருந்தனர். அவர்கள் பயத்தோடு இருந்தனர். அவர்களின் முகத்தில் சோக ரேகையும், கலக்கமும், திகிலும் நிறைந்திருந்தன. ஏனென்றால் யூதர்களின் கோபமும், அவர்கள் மட்டில் கொண்டிருந்த எரிச்சலும் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. இயேசுவுக்கு அடுத்தபடியாக, அவர்களின் இலக்கு தாங்கள் தான் என்பதைத் தெளிவாக அறிந்திருந்தனர். எந்த நேரமும் தங்கள் உயிருக்கு ஆபத்தோ, அல்லது கைதோ அண்மையில் இருக்கிறது என்பது தெரிகிறபோது, யாராலும் கலங்காமல் இருக்க முடியாது. வழக்கமான வாழ்த்துரைக்குப் பிறகு, இயேசு அவர்களுக்கான பணியைச் சொல்கிறார்.

இயேசுவின் அந்த வார்த்தைகளில் திருச்சபை உருவாகிறது. எவ்வாறு தந்தையாகிய கடவுள் இயேசுவை பணிவாழ்வுக்கு அனுப்பினாரோ, அதேபோல் இயேசு திருச்சபைக்கு அந்த பணியைச் செய்யப் பணிக்கிறார். இயேசுவுக்கும் தந்தைக்கும் இருந்த உறவுதான், இயேசுவுக்கும் திருச்சபைக்கும் இருக்கிற உறவு. ஆனால், அந்த உறவு நிலையாக இருக்க வேண்டுமென்றால், இயேசு தனது தந்தையிடத்தில் காட்டிய கீழ்ப்படிதல் மற்றும் அன்பு திருச்சபையிலும் இருக்க வேண்டும். திருச்சபையும் இயேசுவிடத்திலே அதே கீழ்ப்படிதலையும், அன்பையும் காட்டுகிறபோதுதான், உண்மையான உறவு அங்கே இருக்கும். உண்மையான பணிவாழ்வு அங்கே இருக்கும்.

நாம் ஒவ்வொருவரும் இயேசுவிடத்திலே உண்மையான கீழ்ப்படிதலோடும், அன்போடும் இருக்க வேண்டும். அப்போதுதான் நமது பணிவாழ்வு நிறைவான வாழ்வாக, மகிழ்ச்சியான வாழ்வாக இருக்கும். இயேசு கட்டளையிட்ட பணியும் நிறைவாக இருக்கும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

உயிர்த்த இயேசு தரும் சமாதானம்

யூதர்களுக்கு அஞ்சி சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தனர். சீடர்கள் தங்கியிருந்த அறை, இயேசுவோடு கடைசி இரவு உணவு உண்ட அறையாக இருக்கலாம். அவர்கள் இருந்தது மேல் அறை. யூதர்களின் கோபம், வெறுப்பு முதலானவை சீடர்களுக்கு நன்றாகத்தெரியும். இயேசுவை ஒழித்தாயிற்று. இனி எப்படியும், அடுத்த இலக்கு தாங்கள்தான் என்பது அவர்களுக்கு நன்றாகத்தெரியும். எந்தநேரமும் தலைமைச்சங்க காவலர்கள் வந்து தங்களை கைது செய்யலாம் என்று நினைத்தனர். எனவே, மேலறையிலிருந்து அவர்களுக்கு கேட்கும் ஒவ்வொரு சத்தமும், அவர்களின் இருதயத்தை கலங்கடித்துக்கொண்டிருந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் உயிர்த்த இயேசு அவர்களுக்குத் தோன்றுகிறார்.

உயிர்த்த இயேசு அவர்களுக்கு சொல்லும் செய்தி: உங்களுக்கு அமைதி உண்டாகுக!. கலங்கிப்போயிருந்த சீடர்களின் கலக்கத்தை இயேசு அறியாதவரல்ல. அவர்களின் வேதனையை இயேசு உணராதவர் அல்ல. அவருக்கு சாவின் பயம் நன்றாகத்தெரியும். ஏனென்றால், சாவை எதிர்நோக்கியிருந்த அவரே, கெத்சமெனி தோட்டத்தில், திகிலும் மனக்கலக்கமும் அடைந்திருந்தார். ‘எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது’ என்று அவரே சொல்லியிருக்கிறார். எனவே, சீடர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்ட இயேசு, அவர்களுக்கு அந்த நேரத்தில் எது தேவையோ, அதை அறிந்து வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். கலங்கிப்போயிருக்கிற சீடர்களுக்கு அப்போதைய தேவை அமைதி. இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட சீடர்களின் பயஉணர்வுகள் அகன்று போனது. அவர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். உயிர்த்த இயேசு கலங்கிப்போயிருந்த சீடர்களுக்கு கலக்கத்தைப்போக்கி மகிழ்ச்சியைத் தருகிறார்.

வாழ்வில் கலக்கம் வரும்போது, உயிர்த்த இயேசு நமக்கு தரும் அமைதி மிகப்பெரிய பொக்கிஷம். நம்முடைய கவலைகளை, துயரங்களை அறிந்தவர், நம்மைக் கைவிடப்போவதில்லை. நம்முடைய கலக்கத்தைப்போக்கி நமக்கு மகிழ்ச்சியை, மனஅமைதியை தருவதற்காக காத்துக்கொண்டிருக்கிறவர். அந்த அமைதியை, மகிழ்ச்சியைப்பெற்றுக்கொள்ள முனைவோம். உயிர்த்த ஆண்டவரில் நம் நம்பிக்கையை வைப்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

 

பகிர்வே உயிப்பின் நம்பிக்கை வெளிப்பாடு!

உயிர்த்த இயேசு பன்னிருவருக்கும் தோன்றி, அவர்களை உறுதிப்படுத்தியதையும், அவர்களுக்குப் பாவ மன்னிப்புக்கான அதிகாரத்தை வழங்குவதையும் இன்றைய நற்செய்தி வாசகம் விளக்குகிறது. இன்றைய முதல் வாசகம் நம்பிக்கை கொண்ட தொடக்க காலத் திருச்சபையினரின் வாழ்க்கை முறையைப் பற்றிப் பார்க்கிறோம்.

தொடக்க காலத் திருச்சபை மிகவும் ஆற்றலுடன் வளர்ச்சி அடைந்தது, பெருகிப் பலுகியது. அனைவரும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்றுகளாக விளங்கினர். சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார், தங்களோடு வாழ்கின்றார் என்பதனை அனைவரும் நம்பினர். அவ்வாறு நம்புவதற்கு சீடர்களின் வாழ்வு மிகப்பெரிய ஓர் ஆற்றலாக, ஆதாரமாக விளங்கியது.

நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை முறையைத் திருத்தூதர் பணிகள் நூல் இவ்வாறு சுருங்கத் தருகிறது:

1. அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே உயிருமாக இருந்தனர். (நம்பிக்கை)

2. அவர்களது உடமைகள் அனைத்தும் பொதுவாக இருந்தன. (பிறரன்பு)

அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே உயிருமாக இருந்தது அவர்களின் இறைநம்பிக்கையைக் குறிக்கிறது. அவர்களிடத்தில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. எந்தவித பேதங்களும் இன்றி ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். இது பிறரின் கவனத்தை ஈர்த்தது.

இரண்டாவதாக, கிறித்தவர்கள் தன்னலம் துறந்து, பகிர்ந்து வாழ முன்வந்தனர். இதுவும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பகிர்வைவிட மிகச் சிறந்த சான்றைக் காண இயலாது. இதுவே நம்பிக்கை கொண்டோரின் எண்ணிக்கை பெருகியதற்குக் காரணமாக அமைந்தது.

நமது வாழ்விலும் நமது செல்வம், பொருள், திறமைகள், ஆற்றல்கள்... என்னும் கொடைகளைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள முன்வருவோம்

மன்றாடுவோம்: சாவை வென்று உயிர்த்த மாட்சி மிகுந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். தொடக்க காலத் திருச்சபையில் இருந்த அதே விசுவாசத்தை, இறைநம்பிக்கையை எங்களில் உருவாக்கும். பகிர்ந்து வாழும் தாராள உள்ளத்தை எங்களுக்குத் தந்தருளும். உமது ஆவியினால் எங்களை நிரப்பியருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

நம்பவும், வாழ்வு பெறவும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

#8220;நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி வாழ்வுபெறுவதற்காகவுமே இந்நுhலில் உள்ளவை எழுதப்பட்டன” என்று முடிகிறது இன்றைய நற்செய்தி வாசகம். உயிர்ப்பு என்பது ஒரு சவால், ஓர் அறைகூவல். அதை நம்புவதற்கு இறைவனின் சிறப்பான ஆசி தேவை.

இயேசு தோமாவின் நம்பிக்கை இன்மையைக் கடிந்துகொண்டார். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் என்று மொழிந்தார். இயேசு சாவையும், இருளின் ஆற்றல்களையும் வென்று உயிர்த்துவிட்டார் என்பதை நம்புவதற்கு அவரது சீடர்கள் அனைவருமே பெரிதும் தயங்கினர் என்பதை அறியும்போது, நாம் வியப்படையலாம். ஆனால், நாமும் அப்படித்தானே! நமது வாழ்வில் நோய்கள், துன்பங்கள், ஏமாற்றங்கள் வரும்போது, நாம் நம்பிக்கை இழக்கவில்லையா? இனி ஒன்றும் இல்லை என்று விரக்தி அடையவில்லையா? நம்மீதே நாம் கழிவிரக்கம் கொள்ளவில்லையா? இவை எல்லாம் நாமும் உயிர்ப்பை நம்பவில்லை என்பதன் அடையாளங்களே. நாம் உயிர்ப்பின் சீடர்கள் என்றால், உயிர்ப்பின் வாழ்வில், அனைத்தும் இறைவனில் இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வலிமை அடையவேண்டும். அவ்வாறு, நாம் நம்பவும், நம்பி வாழ்வடையவுமே நற்செய்தி நம்மை அழைக்கிறது. அந்த அழைப்பை ஏற்போம்.

மன்றாடுவோம்: உயிர்ப்;பின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்கள் நம்பிக்கை இன்மையை மன்னித்து, எங்களை ஏற்றுக்கொள்வதற்காக நன்றி. நாங்கள் உமது உயிர்ப்பில், உமது உடனிருப்பில், உமது பிரசன்னத்தில் நம்பிக்கை கொள்ளவும், அதனால், நிலைவாழ்வு அடையவும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருட்தந்தை குமார்ராஜா

----------------------

''இயேசு தோமாவிடம், 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய்.
காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' என்றார்'' (யோவான் 20:29)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இயேசு பலருக்குத் தோன்றினார் என நற்செய்தி நூல்களும், திருப்பணிகள் நூலும், தூய பவுலும் குறிப்பிடுகின்றனர். தாம் தேர்ந்துகொண்ட சீடர்களுக்கு இயேசு தோன்றிய நிகழ்ச்சி விரிவாகத் தரப்பட்டுள்ளது. குறிப்பாக, தூய தோமா இயேசுவைக் கண்டு அவரில் நம்பிக்கை கொண்ட நிகழ்ச்சி நம் கவனத்தை ஈர்க்கிறது. ஏனென்றால் இயேசு தோன்றியபோது தோமா அங்கே இல்லை. தோமாவிடம் பிற சீடர்கள் தாங்கள் இயேசுவைக் கண்டதாகக் கூறிய பிறகும் அவர் நம்ப மறுக்கிறார். தாமாகவே நேரடியாக இயேசுவைக் கண்டால்தான் நம்பமுடியும் என அவர் உறுதியாகக் கூறிவிட்டார். எட்டு நாள்களுக்குப் பிறகு இயேசு மீண்டும் ஒருமுறை சீடர்களுக்குத் தோன்றியபோது தோமாவும் கூட இருக்கிறார். இயேசு தோமாவை அழைக்கிறார். தம் அருகே வந்து தம்மைத் தொட்டுப் பார்க்கச் சொல்கிறார். ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்ளக் கேட்கிறார். இயேசுவை அணுகிச் சென்று, அவரைத் தொட்டுப் பார்க்கும் துணிச்சல் தோமாவுக்கு வரவில்லை. ஏன், இயேசுவின் குரலைக் கேட்டதுமே அவருடைய உள்ளம் நெகிழ்ந்துவிட்டது. தம் தலைவரும் போதகருமான இயேசுவே தம் முன்னால் நிற்கிறார் என்னும் எண்ணம் தோமாவின் இதயத்தை நிரப்பிவிட்டது. அப்போது இயேசு தோமாவைப் பார்த்து, 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' என்கிறார்.

-- இங்கே ''பேறுபெற்றோர்'' எனக் குறிப்பிடப்படுவோர் நாம்தாம். நாம் உயிர்த்தெழுந்த இயேசுவை நேரடியாக நம் கண்களால் காணவில்லை. அவருடைய குரலை நாம் நம் காதுகளால் கேட்கவில்லை. அவரை அணுகிச் சென்று தொட்டுப்பார்க்கவும் நமக்கு வாய்ப்பில்லை. ஆனால் நாம் இயேசுவை நம் ஆண்டவராக, உயிர்த்தெழுந்து நமக்கு உயிர் வழங்கும் இறைவனாக ஏற்கிறோம். தோமாவுக்குத் தோன்றிய ஐயம் நமக்கும் தோன்றலாம். ஆனால் ஐயத்தைத் தவிர்த்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்னும் இயேசுவின் அழைப்பு நம் இதயச் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தோமா இயேசுவைத் தம் ''ஆண்டவர்'' என்றும் ''கடவுள்'' என்றும் அறிக்கையிட்டார் (காண்க: யோவா 20:28). அதுபோல நாமும் இயேசுவை நம் மீட்பராக ஏற்று, அவருடைய வழியில் நடந்துசென்றிட அழைக்கப்படுகிறோம். உண்மையிலேயே நாம் ''பேறுபெற்றோர்''.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

--அருட்திரு ஜோசப் லியோன்