புனித தோமா - திருத்தூதர் விழா

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22


சகோதரர் சகோதரிகளே, இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது. நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 117: 1. 2

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்!
மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! -பல்லவி

2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது;
அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

யோவான் 20:24-29

அப்போஸ்தலர் தோமா விழா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 24-29


பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், ``ஆண்டவரைக் கண்டோம்'' என்றார்கள். தோமா அவர்களிடம், ``அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்'' என்றார். எட்டு நாள்களுக்குப் பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், ``இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்'' என்றார். தோமா அவரைப் பார்த்து, ``நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!'' என்றார். இயேசு அவரிடம், ``நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

எசாயா 52: 7 – 10
இறைவன் அருளும் மீட்பு

இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கோபக்கனலை அனுபவித்திருக்கிறார்கள். ஒரு தலைமுறையாக அனுபவித்து வருகிறார்கள். பாபிலோனில் கைதிகளாக, தங்கள் நாட்டை இழந்து, ஆலயத்தை இழந்து, புனித எருசலேம் நகரை இழந்து, விழா கொண்டாட முடியாமல், துன்பங்களுக்கு மேல் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். செய்த பாவங்களுக்கு கடவுளின் பார்வையில் நிச்சயம் தண்டனை உண்டு என்பதை இப்போது அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பாவங்களுக்கான தண்டனை பெற்றபின் வாழ்வு நிச்சயம் உண்டு என்பதையும் அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால், கடவுளிடம் பேசுவதற்கான தகுதியைக் கூட அவர்கள் இழந்துவிட்டதாகவே எண்ணினார்கள். கடவுளை வான் நோக்கி பார்க்கவும் துணிவு அற்றவர்களாக விளங்கினார்கள். அவர்கள் செய்த பாவங்கள் அப்படிப்பட்டவை. இப்படிப்பட்ட துன்பமயமான நேரத்தில், அவர்கள் எதிர்பார்க்காத வண்ணம், அவர்களுக்கு மீட்புச் செய்தியை இறைவாக்கினர் எசாயா அவர்களுக்கு வழங்குகிறார்.

சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள், கைதிகளாக அடிமைத்தனத்தை அனுபவித்த மக்கள், புதிய நாளுக்கு தயாராகும்படி, இறைவாக்கினர் அவர்களுக்கு அழைப்புவிடுக்கின்றார். தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்வதற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும், குறிப்பாக, எருசலேம் தேவாலயத்தில் கொள்ளைப்பொருட்களாக எடுத்துச் செல்லப்பட்ட புனிதப்பொருட்களோடு அவர்கள் தயாராகும்படி, அழைப்புவிடுக்கப்படுகிறது. பாபிலோனியர்கள் ஏற்கெனவே, மீட்பின் வரலாற்றில் தோற்கடிக்கப்பட்ட எகிப்தியர்களைப் போல, அசீரியர்களைப் போல தோற்கடிக்கப்படுவார்கள். எனவே, மக்கள் கடவுள் அருளவிருக்கிற மீட்பை எண்ணிப்பார்த்து, ஆயத்தமாக இருக்கும்படி, இறைவாக்கினர் அழைப்புவிடுக்கின்றார்.

இறைவன் முன்னிலையில் நாம் செய்கிற பாவங்களுக்கு நிச்சயம் நமக்கு தண்டனை உண்டு. தண்டனை என்று சொல்வதை விட, நாம் திருந்துவதற்கான வாய்ப்பு உண்டு. நாம் எப்படி திருந்த விரும்புகிறோம் என்பதை, நாம் தான் முடிவு செய்ய இருக்கிறோம். இறைவன் நாம் திருந்துவதற்கு வாய்ப்பு வழங்குகிறார். அதனைப் பயன்படுத்தி, நம்முடைய வாழ்வை நாம் மாற்றிக் கொள்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

திருப்பாடல் 117: 1, 2, மாற்கு 16: 15
“பிற இனத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்!“

கடவுள் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டும் சொந்தம் என்கிற மாயையை உடைக்கிறது இந்த திருப்பாடல். இஸ்ரயேல் மக்கள் கடவுள் தங்களுக்கு மட்டும் தான் உரியவர் என்கிற எண்ணம் கொண்டிருந்தனர். கடவுள் தங்களுக்கு மட்டும் தான் நன்மைகளைச் செய்வார், நமக்கு எதிராக இருக்கிற அனைவருமே கடவுளுக்கு எதிரானவர்கள் என்று நம்பினர். ஆனால், கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர் என்கிற புதிய சிந்தனையை, இந்த திருப்பாடல் நமக்கு தருகிறது.

கடவுள் அனைவராலும் போற்றுதற்குரியவர். ஏனென்றால், அவர் எல்லாரையும் அன்பு செய்கிறார். எல்லாருக்குமான மீட்புத்திட்டத்தை அவர் வகுத்திருக்கிறார். குறிப்பிட்ட மக்களை மட்டும் மீட்க வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் விரும்பியதில்லை. அவருடைய பார்வையில் எல்லாருமே சமமானவர்கள் தான். எல்லாருமே அவருடைய பிள்ளைகள் தான். அவர் எல்லாருக்கும் நன்மைகளைச் செய்து கொண்டிருக்கிறவர். அந்த இறைவனை நாம் குறிப்பிட்ட மக்களுக்கானவர் என்று தவறாக புரிந்து கொண்டால், அவருடைய அன்பை உணர முடியாது. அவர் எல்லாருக்குமானவர் என்கிற புரிதல் நம்மிடம் வருகிறபோது, அவரைப் புரிந்து கொள்வது எளிதானதாக மாறிவிடுகிறது.

நம்முடைய வாழ்வில் கடவுளை நாம் எப்படிப்பார்க்கிறோம்? அவரை நமக்கும் சொந்தமானவராகப் பார்க்கிறோமா? அல்லது எல்லாருக்கும் சொந்தமானவராக பார்க்கிறோமா? என்று எண்ணிப்பார்ப்போம். கடவுளை அனைவருக்குமானவராகப் பார்க்கிறபோது, நாம் அவரிடத்தில் கொண்டிருக்கிற நம்பிக்கையும், அன்பும் நிச்சயம் கூடுதலாகவே இருக்கும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

ஒன்றுபட்ட வாழ்வு

தோமா இயேசு மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார் என்பதில் நாம் சந்தேகம் கொள்ள முடியாது. அவர் மீது மட்டற்ற அன்பும் கொண்டிருந்தார். அதனால் தான், மற்ற சீடர்கள் யூதேயா செல்லத்தயங்கியபோது (யோவான் 11: 16) அவர் துணிவோடு செல்வதற்கு மற்றவர்களையும் அழைக்கிறார். இயேசுவின் இறப்பு சீடர்களுக்கெல்லாம் மிகப்பெரிய அதிர்ச்சி. அந்த இழப்பு ஈடு கட்ட முடியாதது. இயேசுவின் வாழ்க்கை இவ்வளவு குறைந்த நேரத்திற்குள் முடிந்துவிடும் என்று அவர்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. எனவே சீடர்கள் ஒவ்வொருவருமே கவலைபடிந்த ரேகையோடு இருக்கிறார்கள்.

சீடர்கள் ஒன்றுபட்டு, கவலையோடு ஒருவர் மற்றவரைத் தேற்றிக்கொண்டு இருக்கிறபோது, தோமா அவர்களோடு இல்லை. ஒன்றுபட்டு இருப்பதை தோமா விரும்பவில்லை. எனவேதான், அவர் வெளியே செல்கிறார். துன்பம் என்பது தனிமையிலே நம்மைச் சோர்வுறச்செய்யக் கூடியது. நமது விசுவாசத்தை தளர்ச்சியுறச்செய்யக் கூடியது. துன்பநேரத்தில், ஒருவர் மற்றவருக்கு உற்ற துணையாளராக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. ஒன்றுபட்டு வாழாமல், நம்மையே தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்கிறபோது, இயேசுவை சந்திக்கக்கூடிய வாய்ப்பை இழந்துவிடுகிறோம். கடவுள் அனுபவத்தை பெற்றுக்கொள்ளத் தவறிவிடுகிறோம். தோமாவின் வாழ்விலும் அதுதான் நடக்கிறது. தனிமையை விரும்பினார். இறுதியில் உயிர்த்த ஆண்டவரின் அனுபவத்தை இழந்துவிடுகிறார்.

கிறிஸ்தவ வாழ்வு என்பது தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வு அல்ல. அது மற்றவரோடு இணைந்த வாழ்வு. மற்றவர்களோடு ஒன்று சேர்ந்து வாழ்கிற வாழ்வு. துன்பமோ, கவலையோ, எதுவென்றாலும், நாம் மற்றவர்களோடு இணைந்து வாழக்கூடிய வாழ்வு. அத்தகைய வாழ்வை நாம் சிறப்பாக வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கடவுளுக்கு உரியவற்றை தேர்ந்தெடுப்போம்

மனித வாழ்வில் நாம் எதைத்தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமான ஒன்று. இன்று நாம் விழா எடுக்கும் இந்திய அப்போஸ்தலர் புனித தோமையார் நாம் எதைத்தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தம் வாழ்வின் மூலம் நமக்குக் கற்றுத்தருகிறார். தேர்ந்தெடுத்த இரண்டுவகை:

1. கடவுளுக்கு உரியவற்றை தேர்ந்தெடுத்தல்.

2. மனிதனுக்கு உரியவற்றை தேர்ந்தெடுத்தல்.

கடவுளுக்கு உரியவற்றை நாம் தேர்ந்தெடுக்கும்போது, நாம் சிலுவையைத்தூக்க தயாராக இருக்க வேண்டும். எப்படிப்பட்ட சிலுவை. உதாரணமாக, தன்னலம் துறந்து, பொது வாழ்க்கையிலே, பொதுநலத்தில் ஈடுபட்டு மக்களுக்காக உழைக்கும்போது, நமக்கு அவமானங்கள் மட்டுமே கிடைக்கும். போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாம் நம்மைத் திட்டலாம். நம்மீது, அவமானங்களை வாரி இறைக்கலாம். நமது பெரைச் சீரழிக்கலாம். நம்மீது அபாண்டமாக, பழிகளைச் சுமத்தலாம். ஆனால், அந்த சிலுவை தான் நம் வாழ்வுக்கு மீட்பைத்தர போகிறது. நம்மேல் சிலுவையைச் சுமத்தியவர்களுக்கு அழிவைத்தரப்போகிறது. ஏனென்றால், சிலுவையிலே தான் நமக்கு, மீட்பு உண்டு.

ஒருவேளை மனிதனுக்கு உரியவற்றைத் தேர்ந்தெடுத்தால், இந்த உலகத்திலே பல சொத்துக்களை சேர்க்கலாம். வசதி, வாய்ப்புகளோடு வாழலாம். ஆடம்பரமாக இருக்கலாம். போலியான மதிப்பைப் பெறலாம். நம்மைச்சுற்றி, சில ஆட்களை வைத்துக்கொள்ளலாம். ஆனால், நம்முடைய மதிப்புமிகுந்த வாழ்வை நாம் இழந்து விடுகிறோம். ‘மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில், அவருக்குக்கிடைக்கும் பயன் என்ன? அற்ப கால மகிழ்ச்சிக்காக, நான் வாழ்வை இழக்கப்போகிறேனா? தன்னலம் மறந்து வாழப்போகிறேனா?

புனித தோமையார் கடவுளுக்கு உரியவற்றை தன் வாழ்வில் தேர்ந்தெடுத்தார். அவர் தேர்ந்தெடுத்த அந்தப் பாதையினால், நாம் அனைவருமே மீட்பு பெற்றிருக்கிறோம். அதுதான், அவருக்கு ஆனந்தம் தரக்கூடிய செய்தியாக இருந்தது. ஆக, கடவுளுக்கு உரியவற்றை தேர்ந்தெடுத்து, தன்னலம் மறந்து, நாம் சிலுவையைத் தூக்க தயாராக இருக்கும்போது, அது மற்றவர்களுக்கு மீட்பைக்கொடுக்கிறது. நமக்கு விண்ணரசில் இடம் கிடைக்கிறது.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

எபே 2: 19-22
யோவா 20:24-29

தோமா என்னும் பேறுபெற்றவர்!

மேலோட்டமாகப் பார்த்தால் தோமா ஒரு சந்தேகப் பேர்வழி. நம்பிக்கைக் குறைவானவர்களின் பகராளி.

ஆனால், உண்மை அதுவல்ல. தோமா பேறுபெற்றவர். ஒருமுறை, இருமுறை அல்ல, மும்முறை பேறுபெற்றவர். எப்படி?

  1. உயிர்த்த இயேசுவின் துளையுண்ட கைகளையும், குத்துண்ட திருவிலாவையும் மிக அருகில் இருந்து பார்க்கும் பேறு பெற்றார். மற்ற எந்த திருத்தூதருக்கும் கிடைக்காத ஒரு பேறு. இந்த நிகழ்வுக்குப் பிறகு, தோமாவின் வாழ்வு நிச்சயமாக மாறிவிட்டது. இரத்தக் கறை படிந்த இயேசுவின் திருக் காயங்களை எப்போதெல்லாம் தோமா நினைவுகூர்ந்தாரோ, அப்போதெல்லாம் “எனக்காகத் துளையுண்ட கைகள், எனக்காகக் குத்துண்ட திருவிலா” என்று எண்ணி மனம் உருகியிருப்பார், நம்பிக்கையில் திடம் கொண்டிருப்பார் என்று நிச்சயம் நம்பலாம்.
  1. “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என இயேசுவை அறிக்கையிட்ட முதல் திருத்தூதர் தோமாதான். என்னே ஒரு விசுவாச அறிக்கை. இன்று வரை நாமும் இதே வரிகளைச் சொல்லித்தானே இயேசுவின்மீதுள்ள நமது விசுவாசத்தை அறிக்கையிடுகிறோம். “திருத்தூதர்களின் விசுவாச அறிக்கை”யின் தொடக்கம் இந்த விசுவாச அறிக்கையாகத்தான் இருக்கவேண்டும். அந்த வகையிலும் தோமா பேறுபெற்றவராகிறார்.
  1. இயேசு தோமாவிடம் “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். அவராலேதான் நம்மைப் போன்று இயேசுவைக் காணாமலே நம்புகின்றவர்கள் பேறுபெற்றவர்களாக மாறியிருக்கிறோம்.  எனவே, அவருக்குப் பின் வந்த அனைத்துத் தலைமுறையினரையும் பேறுபெற்றவர்களாக மாற்றிவிட்டார் புனித தோமா.

இப்போது சொல்லுங்கள், தோமா மும்முறை பேறுபெற்றவர்தானே?

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். புனித தோமாவின் விசுவாச அறிக்கையை ஏற்று அவரை ஆசிர்வதித்தீரே நன்றி. அவர் வழியாக காணாமல் நம்பும் அனைவரையும் பேறுபெற்றவர்களாக்கினீரே நன்றி. உம்மை ஆண்டவராகவும், கடவுளாகவும் ஏற்று, அறிக்கையிட்டு, அதன்படி வாழும் வரமருளும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

தோமாவின் துணிவும் விசுவாசமும்

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று நாம் திருத்துhதர் தோமையாரின் விழாவைக் கொண்டாடுகிறோம். இயேசுவோடு மூன்று ஆண்டுகள் உடன் வாழும் பேற்றினைப் பெற்றிருந்து இந்தப் புனிதரிடமிருந்து நாம் இரு பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

ஒன்று இயேசு யூதேயாவுக்குச் செல்ல முயன்றபோது அனைத்து சீடர்களும் அதற்கு எதிராகப் பேசினார்கள். அங்கிருந்த யூதர்கள் அவரைக் கல்லெறிந்த கொல்ல முயன்றதை நினைவூட்டி அங்கு செல்ல வேண்டாம் என்று கருத்து தெரிவித்தபோது, தோமையார் மட்டும் தம் உடன் சீடரிடம் நாமும் செல்வோம். அவரோடு இறப்போம் என்று துணிவுடன் கூறினார் (யோவா 11;16). அந்தத் துணிவை, ஆண்டவர் இயேசுவுக்காக இறக்கவும் முன் வந்த ஆர்வத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்.

இரண்டாவதாக, இயேசுவின் உயிர்ப்பை தோமையார் முதலில் நம்பாவிட்டாலும், உயிர்த்த இயேசு நேரில் தோன்றி ஐயம் தவிர்த்து, நம்பிக்கை கொள்ளச்சொன்னபோது, அவர் இயேசுவைப் பார்த்து நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள் என்று அறிக்கையிட்டார். நற்செய்தி நுhல்களில் நாம் பார்க்கும் முதல் விசுவாச அறிக்கை இது.

இந்த விழாவில் நாம் சிந்திக்க வேண்டியது இதுவே. இயேசுவின்மீது எனக்குள்ள பற்றுறுதி, ஆர்வம் எவ்வளவு? இயேசுவுக்காக உயிர் துறக்குமளவுக்கு தியாக சிந்தை இல்லாவிட்டாலும், ஒரு சில இழப்புகளை, இன்னல்களைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேனா? இயேசுவை என் ஆண்டவராக, இறைவனாக உதட்டாலும், வாழ்வாலும் அறிக்கை இடுகிறேனா? என் வாழ்வின் முதல் இடத்தை, நேரத்தை, ஆற்றல்களை இயேசுவுக்குக் கொடுக்கிறேனா, அல்லது செல்வத்துக்கு, உலக இன்பங்களுக்கு, தொலைக்காட்சி போன்ற களியாட்டங்களுக்கு அளிக்கிறேனா?

மன்றாடுவோம்; அன்பின்; இயேசுவே, உமது ஆர்வமிக்க திருத்துhதர் புனித தோமையாருக்காக நன்றி செலுத்துகிறோம். அவருடைய விழாவில் அவருக்கு நீர் வழங்கிய துணிவு, பற்றுறுதி, விசுவாசம் என்னும் கொடைகளை எமக்கும் அருள மன்றாடுகிறோம். உம்மையே எங்கள் ஆண்டவராகவும், இறைவனாகவும் அறிக்கையிட்டு, அந்த விசுவாசத்தை வாழ்ந்துகாட்ட அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

''இயேசு தோமாவிடம், 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய்.
காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' என்றார்'' (யோவான் 20:29)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- தோமா என்னும் திருத்தூதர் இந்தியத் திருச்சபைக்கு அடித்தளம் இட்டவர் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அத்திருத்தூதர் பற்றி யோவான் நற்செய்தி பல தகவல்களைத் தருகிறது. தோமா பற்றிய குறிப்புகள் யோவான் நற்செய்தியில் பல உண்டு (காண்க: யோவா 11:16; 14:5; 20:24-28; 21:2). தோமா வரலாற்றில் வாழ்ந்த ஒரு மனிதர். அதே நேரத்தில் யோவான் நற்செய்தியில் அவர் ஒரு சில தனிப்பட்ட குணங்களைக் கொண்ட கதாச் சித்திரமாகவும் வருகிறார். அவருடைய குணாதிசயங்களை நாம் அலசிப் பார்த்தால் எதைக் காண்கிறோம்? தோமா மிகுந்த துணிச்சல் கொண்ட ஒரு மனிதராகக் காட்டப்படுகிறார். எடுத்துக்காட்டாக, தோமா பிற சீடர்களைப் பார்;த்து, ''நாமும் செல்வோம், இயேசுவோடு இறப்போம்'' என்று உறுதியோடு கூறினார் (காண்க: யோவா: 11:6). அதே நேரத்தில், தோமா இயேசு கூறிய வார்த்தைகளைப் புரியாமல் இருந்ததையும் நற்செய்தி காட்டுகிறது (காண்க: யோவா 14:5: ''தோமா இயேசுவிடம், 'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?' என்றார்'').

-- எந்தவொரு காரியத்தையும் முழுமையாகத் தெரிந்துகொள்ளவும் அதற்கான ஆதாரங்களை அறிந்துகொள்ளவும் தோமா விரும்பியதையும் நற்செய்தி சுட்டிக் காட்டுகிறது (காண்க: யோவா: 20:24-29). நற்செய்தியாளராகிய யோவானின் தலைமையில் அமைந்திருந்த கிறிஸ்தவ சமூகத்தின் பண்புகளை நாம் தோமா என்னும் குணச்சித்திரத்தில் காண்கிறோம். அச்சமூகம் இயேசு பற்றிய நற்செய்தியைத் துணிச்சலோடு பறைசாற்றியது உண்மைதான். அதே நேரத்தில் அக்குழு இயேசுவின் நற்செய்தியை ஆழமாகப் புரிந்துகொள்ளாமல் திணறவும் செய்தது. மேலும், அச்சமூகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை எப்போதும் நிலவவில்லை. எனவே, தோமாவுக்கும் சரி, தோமாவைப் போல நம்பிக்கைக் குறைவால் பாதிக்கப்பட்டோருக்கும் சரி, இயேசுவின் வார்த்தைகள் பொருத்தமாகவே உள்ளன: ''ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்'' (யோவா 20:27). இதே வார்த்தைகள் இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்கின்ற நமக்கும் பொருந்தும். சாவிலிருந்து உயிர்த்தெழுந்து நம்மோடு இருந்து, நம் வாழ்க்கைப் பயணத்தில் வழிநடக்கின்ற இயேசுவை நாம் முழுமையாக நம்ப வேண்டும். அவர் வழியாக நிலைவாழ்வில் பங்கேற்க வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்ள எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

திருக் கூட்டத்தில் இருப்போம்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

மனிதன் குடும்பமாக வாழ இறைவனால் அழைக்கப்பட்டிருக்கிறான். அதுபோல கிறிஸ்தவன் சமூகமாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறான். அவனது விசுவாசம் பிற மனிதர்களோடு உறவை உண்டாக்குகிறது. விசுவாசத்தில், இறைவனை அனைவரும் தந்தை என அழைப்பதால் நாம் அனைவரும் சமூகமாக வாழ வேண்டும் என்பது இறைத்திட்டம். ஆகவே விசுவாசம் என்பது பரந்து விரிந்த ஒரு வாழ்க்கை முறை. அதுவே கிறிஸ்தவம். அவனே கிறிஸ்தவன்(ள்).

உயிர்த்த இயேசுவை காணாதவரை, நம்மில் விசுவாசம் இல்லை. உயிர்த்த இயேசுவை அனுபவிக்காதவரை நம்மில் விசுவாசம் இல்லை. அவ்வாரே இறை மக்கள் சமூகத்தில் இணைந்திருக்கவில்லை என்றால் உயிர்த்த இயேசுவைக் காணமுடியாது. புனித தோமையின் நிலை இதுவே. அவர் திருத்தூதர் கூட்டத்தில் இல்லாததால், உயிர்த்த இயேசுவைக் காணவில்லை; உயிர்த்த இயேசுவைக் காணாததால் இறைமக்கள் கூட்டத்திலும் திருத்தூதர் கூட்டத்திலும் இடம் பெறவில்லை.

நம் விசுவாசம் வளர, நாம் இறை மக்கள் கூட்டத்தோடு கலந்து உறவாடி வாழவேண்டும். நம்மைத் தனிமைப்படுத்தினால் உயிர்த்த இயேசுவைக் காணமுடியாது. உயிர்த்த இயேசுவைக் காணவிட்டால் நாம் கிறிஸ்தவனாக இருக்கமுடியாது. கிறிஸ்தவம் ஒரு பெரிய குடும்பம். இறைவன் நமது தந்தை. நாம் எல்லோரும் சகோதர சகோதரிகள். ஒருவர் ஒருவரைத் தாங்கி வழிநடத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இத்தகைய வாழ்வில் நாம் உயிர்த்த இயேசுவைக் காண்கிறோம். "காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்னும் அருள்நிலையைப் பெறுகிறோம். இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லீயோன்