முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 1-12

அந்நாள்களில் பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்; அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதையும் இறந்தோர் இயேசுவின்மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததையும் கண்டு எரிச்சல் அடைந்து, அவர்களைக் கைது செய்தார்கள்; ஏற்கெனவே மாலையாகி விட்டதால் மறுநாள்வரை காவலில் வைத்தார்கள். அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்ட பலரும் நம்பிக்கை கொண்டனர். இவ்வாறு நம்பிக்கை கொண்ட ஆண்களது எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். மறுநாள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் எருசலேமில் ஒன்றுகூடினார்கள். அவர்களுடன் தலைமைக் குருவான அன்னாவும், கயபா, யோவான், அலக்சாந்தர் ஆகியோரும், தலைமைக் குருவின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கூடியிருந்தார்கள். அவர்கள் திருத்தூதர்களை நடுவில் நிறுத்தி, ``நீங்கள் எந்த வல்லமையால், அல்லது எந்தப் பெயரால் இதனைச் செய்தீர்கள்?'' என்று வினவினார்கள். அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: ``மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, உடல் நலமற்றிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, `கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார்.' இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 118: 1-2,4, 22-24, 25-27
பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
4 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என
ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக. -பல்லவி

22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
24 ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். -பல்லவி

25 ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்!
26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்!
ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
27ய ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

யோவான் 21:01-14

பாஸ்கா காலம்-முதல் வாரம் வெள்ளி


நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-14

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ``நான் மீன்பிடிக்கப் போகிறேன்'' என்றார். அவர்கள் ``நாங்களும் உம்மோடு வருகிறோம்'' என்று, போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், ``பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ``இல்லை'' என்றார்கள். அவர், ``படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்'' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், ``அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்'' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், ``நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்'' என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், ``உணவருந்த வாருங்கள்'' என்றார். சீடர்களுள் எவரும், ``நீர் யார்?'' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 21: 1 - 14
மானிட பலவீனம் மானுட பயங்கரமாக

முகநூலின் தந்தை மார்க் சூசர்பொ்க் இளம் வயதிலே இந்த உலகை மாற்று பாதையில் கொணர திட்டமிடுகிறார். ஆனால் அவரின் மனப்பாட சிந்தனை குறைவு. தன் தந்தையும் அதற்கான தடைக்கல். அதனைத் தாண்டி செயல்பட்டதால் தான் இன்று முகநூல். You Can Win என்ற புத்தக ஆசிரியர் ஷிவ் கேரா இவ்வாறு கூறுவார், “பலவீனம் படுத்து உறங்க அல்ல. பறந்து செல்ல” என்றார். புருஸ்லி இவ்வாறு கூறுவார், “நான் தத்துவத்தை வாழ்வில் பாடமாக படித்திருக்கின்றேன், எனவே நாம் பலவீனத்தை என் திறமையினால் அதனை பயங்கரமாக மாற்றினேன். இன்று இவ்வளவு சாதனை என்று”.

இன்றைய நற்செய்தி வாசகத்திலே உயிர்த்த ஆண்டவரின் காட்சியால் பலவீனமாக காணப்பட்ட பேதுரு மானுடத்தின் பயங்கரமாக மாறுகின்றார். முதல் நூற்றாண்டு திருச்சபையில் இறந்த இயேசு மீண்டும் உயிர்த்து தங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்கிற உண்மையை ஏற்பதில் மக்களின் தயக்கமும் தொடர்ந்து கொண்டே இருந்தது. அத்தகைய தயக்கம் திருச்சபையை வழிநடத்திக் கொண்டிருந்த தலைவர்களையும் பாதித்தது. மூன்று ஆண்டுகள் பயற்சி பெற்ற சீடர்கள் இயேசு இறந்து விட்டார் என்பதனால் அவரையும் தாங்கள் பெற்ற பயிற்சியையும் மறந்து பழைய தொழிலுக்கு செல்கின்றார்கள். ஆனால் இயேசு அவர்களை மறக்கவில்லை. அவருடைய மறவா தன்மைத்தான் சீடத்துவ அழைப்பு புத்துயிர் பெறுகின்றது. மானிட பலவீனத்தால் தம்மை மறுதலித்தத் தடுமாறிய நிலையிலிருந்து அவரை விடுவிக்க விரும்புகிறார் இயேசு. இயேசுவை அன்பு செய்வதும் தொடர்ந்து மக்களைப் பேணிக் காப்பதும் அவருடைய தனிப்பட்ட பண்புகளாக விளங்க வேண்டும் என்பதை பேதுரு அறிய வேண்டும். குறிப்பாக மும்முறை இயேசுவை மறுதலித்த பேதுரு மும்முறை இயேசு மீது தான் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம்.

என்னுடைய பலவீனத்தை நான் பயங்கரமாக மாற்றுகிறேனா? அல்லது பலவீனத்திலே படுத்து உறங்குகிறேனா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

=====================

அக்கரையில் அவரின் அக்கறை (யோவான் 21 : 1-14)

உயிர்ப்பும், உயிர்த்த உடலும் எப்படியிருக்கும் என்ற செய்தியைத் தருவதோடு இயேசுவின் அன்பையும் அக்கறையையும் இந்நிகழ்வு இன்னும் அதிகமாக எடுத்துக் கூறுகின்றது.

திருத்தூதர்களில் சிலரைத் தவிர அனைவரும் படிப்பறிவற்ற சாதாரண மீனவர்கள். இவர்களுக்கு இன்றைய அரசியல்வாதிகள் போலவோ, மாமேதைகள் போலவோ கதை கட்டத் தெரியாது. இவர்கள் கற்பனை உலகில் வாழ்பவர்களல்ல. எதார்த்தத்தை எதார்த்தமாக எதிர்ப்பவர்கள். கண்ட காட்சிகளை உடனடியாக ஏற்றுக் கொள்ளுமளவிற்கு முட்டாள்களுமல்ல. தாங்கள் கண்டதை, தொட்டுணர்ந்ததை உலகிற்கு அறிவித்தனர். இயேசு வெறும் ஆவியன்று என்பதற்கு சான்றுதான் இந்நிகழ்ச்சி. அதேநேரத்தில் அவர் நம்மைப் போன்ற உடலைக் கொண்டிருந்ததாகவும் தெரியவில்லை. மாட்சிமை நிறைந்த உடலையே அவர் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆவி, கை நீட்டி இப்பக்கம் வலையைப் போடுங்கள் என்று சொல்லுவதில்லை. நெருப்பு மூட்டி மீன் சாப்பிடுவதில்லை. இதன் மூலம் நமக்கு அதிகமாக இல்லாவிட்டாலும் உயிர்ப்பைப் பற்றிய சில தெளிவுகள் கிடைக்கின்றன.

நமது வாழ்விற்கு இன்றைய நற்செய்தி வலுவூட்டுவதாக அமைகிறது. இயேசு நம் அன்றாட வாழ்க்கையில், பணிகளில் அக்கறை கொண்டவர். நாம் அவரை அழைக்காமலேயே இன்ப துன்பங்களில் பங்கெடுப்பவர். “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?” என்று அனுதாபத்துடன் கேட்டவர். “படகின் வலப்பக்கமாக வலையை வீசுங்கள்” என்று ஆலோசனை கூறி நமது பணிகளில் உதவி செய்பவர். பல வேளைகளில் நாம் அழைக்காத போதும் ஓடோடி வந்து உதவுபவர். அதே இயேசுதான் இன்றும் நம்முடன் இருக்கிறார். நம் ஒவ்வொருவருக்கும், நாம் அழைக்காமலேயே உதவக் காத்திருக்கின்றார்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 118: 1 – 2, 4, 22 – 24, 25 – 27a, (22)
”கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டிடத்தின் மூலைக்கல் ஆயிற்று”

ஒரு கட்டிடத்தை ஒன்றிணைக்கக்கூடியதாக இருப்பது மூலைக்கல். அந்த கட்டிடத்திற்கு அடித்தளமாக இருப்பது இந்த மூலைக்கல் தான். எசாயா 28: 16 சொல்கிறது: ”சீயோனில் நான் ஓர் அடிக்கல் நாட்டுகின்றேன். அது பரிசோதிக்கப்பட்ட கல். விலையுயர்ந்த மூலைக்கல். உறுதியான அடித்தளமாய் அமையும் கல்”. இங்கே ”மூலைக்கல்” என்கிற வார்த்தை நமக்கு தரக்கூடிய பொருள், இது ஒரு கட்டிடத்தின் முக்கியமான கல் என்பதாகும். இஸ்ரயேல் மக்கள் தான், இந்த உலகத்தின் மூலைக்கல் என்று கடவுள் சொல்கிறார். ஏனென்றால், வலிமை வாய்ந்த அரசுகள் இருந்த காலக்கட்டத்தில், இஸ்ரயேல் மக்கள் சாதாரணமானவர்களாக இருந்தனர். இந்த உலகத்தின் பார்வையில் சாதாரண கல்லாகக் கிடந்தனர். ஆனால், கடவுள் அவர்களை அடிப்படையாக வைத்துதான், மீட்பின் திட்டத்தை தயாரிக்கிறார். அவர்கள் வழியாகத்தான் மீட்பைக் கொண்டு வர முடிவு செய்கிறார். இந்த திருப்பாடல் ஓர் உருவகமாக நமக்கு தரப்பட்டுள்ளது. தாவீதின் வாழ்க்கை அனுபவத்தையும் இது ஒப்பிட்டுப் பேசுவதாக இருக்கிறது. தாவீது சாதாரண மனிதர் தான். அவருடைய அருட்பொழிவு நேரத்தில், மற்ற பிள்ளைகளையெல்லாம் பெருமையோடு சொன்ன அவருடைய தந்தை, தாவீதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ஆனால், கடவுள் அவரைத்தான் தேர்ந்தெடுத்தார். இயேசுவின் சீடர்கள் படித்தவர்களில்லை. சாதாரண பாமரரர்கள். ஆனால், அவர்கள் வழியாகத்தான் கடவுள், இந்த உலகம் முழுமைக்கும் நற்செய்தி அறிவித்தார்.

நமது வாழ்க்கையிலும், இதனை நாம் முழுவதுமாக உணரலாம். பார்வை இல்லாதவா்கள், காதுகேளாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் தான் இன்றைக்கு, அதிக அளவில் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம்மைப் பற்றி எப்போதும் தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல், கடவுள் பார்வையில் நாம் உயர்ந்த மதிப்பு பெற்றவர்கள் என்கிற எண்ணத்தை நாம் நம்முள் விதைத்துக்கொள்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

இயேசுவின் நினைவுகள்

இயேசு தனது பணிவாழ்வை தொடங்கியபோது, இதேபோல பேதுருவின் படகில் இருந்து போதித்துக் கொண்டிருந்தார். பேதுருவும் அவரோடு இருந்த சீடர்களும் இரவெல்லாம் பாடுபட்டும், மீன் ஒன்றும் அகப்படாமல் வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இயேசு அவர்களை வலைகளை சற்று ஆழத்திற்கு கொண்டு செல்ல பணிக்கிறார். அவர்களும் அவ்வாறே செய்ய, வலைகளை இழுக்க முடியாத அளவிற்கு, மீன்களால் நிரம்பியிருந்தன. இன்றைய நற்செய்தியிலும் அதே சூழல். இயேசு இறந்தபிறகு அவரைப்பற்றி ஆங்காங்கே கேள்விப்பட்டாலும், தங்களுடைய வாழ்வைப் பார்ப்பதற்காக சீடர்கள் மீண்டும் வலைகளோடு மீன்பிடிக்க கிளம்பிவிட்டார்கள்.

இயேசு வலைகளை வலதுபுறமாக வீசச்சொன்னபோது, மற்றவர்களை விட, பேதுருவுக்கு அந்த வார்த்தைகள் தனது முதல் அனுபவத்தை மீண்டும் கொடுக்க ஆரம்பித்திருந்தது. வலைகள் மீன்களால் நிரம்பியதும், அவரது எண்ணம் உறுதிபெற்றது. கரையிலிருப்பவர் நம் ஆண்டவர் தாம், என்பதில் இருந்த சந்தேகம் முழுவதுமாக தீர்ந்து போயிருந்தது. ஏற்கெனவே ஆங்காங்கே உயிர்த்த இயேசுவைப் பார்த்த செய்திகள், உயிர்த்த இயேசுவை தாங்கள் நேரடியாகப் பார்த்தது பேதுருவுக்குள் இருந்தாலும், அடுத்து அவர் என்ன செய்ய வேண்டும்? என்பது அவருக்கு தெரியவில்லை. அந்த குழப்பம் அவருக்குள்ளாக இருந்தது. அந்த குழப்பத்தோடு தான் மீண்டும் தனது பழைய வாழ்விற்கு திரும்புகிறார்.  வழக்கமாக, ஒருவருக்கு வணக்கம் சொல்வது பாலஸ்தீனத்தில் சமயச் செயல்பாடு. அதற்கு நன்றாக, சரியாக ஆடை உடுத்தியிருக்க வேண்டும். எனவே தான், இயேசுவுக்கு வணக்கம் சொல்வதற்காக, மீன்பிடிப்பதற்கு ஏற்றவாறு தனது ஆடைகளை சுருட்டி கட்டியிருந்த பேதுரு, வணக்கம் சொல்வதற்கு ஏற்றவாறு, ஆடைகளைச் சரிசெய்கிறார். பேதுரு மீன்பிடிக்க வந்திருந்தாலும், அவருடைய உள்ளத்தை நிரப்பியிருந்தது இயேசுவின் நினைவுகள் தான். எனவே தான், அவரால் உடனடியாக இயேசுவை அடையாளம் காண முடிந்தது.

நமது வாழ்விலும், நம்மோடு வாழக்கூடிய மனிதர்களில் இயேசுவைக் காண நாம் முயற்சி எடுக்க வேண்டும். இயேசுவின் நினைவுகள் நம்மை ஆக்கிரமிக்கிற போதுதான், இயேசுவை மற்றவர்களில் நாம் காண முடியும். அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வதற்கான நல்ல மனதை பெற முடியும். இயேசுவை எப்போதும் நமது நினைவுகளில் சுமந்து செல்லும் வரம் வேண்டுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

விசுவாசத்தில் வளர, வளர்த்தெடுக்க…

அறிவியல் வளர்நதிருக்கிற இந்த நவீன யுகத்தில், புதுமைகளை நம்புவது நவீன தலைமுறையால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. அப்படியே ஏதாவது நடந்தாலும், அதையும் எப்படியாவது, அறிவியல் கொண்டு விளக்குவதற்கு இந்த தலைமுறை முயற்சி செய்கிறது. உயிர்ப்பையும் தொடக்க காலத்தில் இப்படி பலகட்டங்களாக விமர்சித்தவர்கள் உண்டு. இயேசு உண்மையிலே உயிர்த்தாரா? உயிர்ப்பை நம்ப முடியுமா? அது சாத்தியமா? என்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்த கேள்விகளுக்கெல்லாம், விளக்கத்தைத் தருவதுதான் இன்றைய நற்செய்திப்பகுதி.

இன்றைய நற்செய்திப்பகுதி, இயேசு உண்மையிலே உயிர்த்தார் என்பதை வலியுறுத்திக்கூறுவதாக அமைந்திருக்கிறது. தொடக்க காலத்தில் ஆங்காங்கே உயிர்த்த இயேசுவை சீடர்கள் பார்த்ததாகக் கூறியதைப் பலவற்றுக்கு ஒப்பிட்டனர். சீடர்கள் ஏதாவது கனவு கண்டிருக்கலாம் அல்லது ஒருவிதமான பிரம்மையில் அவர்கள் இரு்ந்திருக்கலாம் அல்லது இயேசுவோடு நெருங்கி இருந்ததால், அவர்கள் பார்ப்பது எல்லாம் இயேசுவைப்போல இருக்கிறது என்று பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. இவையெல்லாம் தவறான விளக்கங்கள், உண்மையில் இயேசு உடலோடு உயிர்த்தார் என்பதற்குத்தான் இன்றைய நிகழ்ச்சி, யோவான் நற்செய்தியாளரால் எழுதப்படுகிறது. இயேசு மீன்களை சமைத்து அவர்களுக்கு உண்ணக் கொடுக்கிறார். அவர்களோடு பேசுகிறார். அவர்களில் ஒருவராக இருக்கிறார். இவ்வாறு உடலோடு இருப்பதை அவர் உறுதிப்படுத்துகிறார்.

இயேசு உயிர்த்தார், என்பது நமது விசுவாசத்தின் ஆணிவேர். அந்த விசுவாசம் தான் கிறிஸ்தவ மறை இந்த அளவுக்கு வளர்வதற்கு அடித்தளமாக இருந்திருக்கிறது. அந்த விசுவாசத்தில் நாம் ஒவ்வொருநாளும் வளா்வதற்கும், வளர்த்தெடு்ப்பதற்கும் அழைக்கப்படுகிறோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

உயிர்ப்பின் மேன்மை

யோவான் நற்செய்தியில் இன்றைய வாசகப்பகுதி பிற்சேர்க்கைப்பகுதியாக நற்செய்தியாளரால் தரப்பட்டுள்ளது. யோவான் நற்செய்தியின் 20 வது அதிகாரத்தில் நூலின் முடிவுரை எழுதி, ஆசிரியர் நற்செய்தியை முடிக்கிறார். ஆனால், மீண்டும் 21 வது அதிகாரம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ளது நமக்குத் தெளிவாகத்தெரிகிறது. 21 ம் அதிகாரத்தின் முக்கியத்துவம் என்ன? எதற்காக இந்த அதிகாரம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ளது? என்பதை நாம் பார்க்கலாம். இரண்டு காரணங்கள் பொதுவாகச்சொல்லப்படுகிறது. முதல் காரணம்: இயேசு உண்மையிலேயே உயிர்த்தார் என்பதை உறுதிப்படுத்த. இயேசுவின் உயிர்ப்பைப்பற்றி பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் மக்கள் மத்தியில் எழுந்தன. இயேசுவின் உயிர்ப்பு வெறும் காட்சி மட்டும்தான் என்றும் அது வெறும் மாயை என்பதுபோன்ற செய்திகள் பரவிக்கொண்டிருந்தன. இயேசு உண்மையிலே உடலோடு உயிர்த்தார் என்பதை உறுதிப்படுத்த, இன்றைய நற்செய்திப்பகுதியில் நற்செய்தியாளர் முயல்கிறார். இயேசுவே தீமூட்டுகிறதையும், மீன்களை சீடர்களுக்கு உண்ணக்கொடுப்பதையும் தெரிவித்து இயேசுவின் உயிர்ப்பு உண்மை என்பதை புரிய வைக்கிறார்.

இரண்டாவது காரணம்: திருச்சபையில் பேதுருவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக. பேதுருவை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தினார். மந்தையை மேய்ப்பதற்கான பொறுப்பை ஒப்படைக்கிறார். இவ்வாறாக, அப்போஸ்தலர்களுக்கு நடுவில் அவர் முதலிடம் பெறுகிறார். இயேசுவை மறுதலித்திருந்தாலும். மனம்மாற்றம் பெற்றவராக, ஆண்டவர் இயேசுவைப்பற்றிய நற்செய்தியை துணிவோடு அறிவித்தவர்களில் முதலிடமும் பேதுருவுக்குத்தான். அவரின் முக்கியத்துவத்தை வலியுறுத்த யோவான் நற்செய்தியில் வேறு பகுதிகள் இல்லை. ஆனால், அவருக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே ஆக வேண்டும். எனவே, இந்தப்பகுதி பிற்சேர்க்கையாக இணைக்கப்படுகிறது.

மேற்சொன்ன இரண்டு காரணங்களுமே நமக்குத்தருகிற செய்தி கிறிஸ்துவின் உயிர்ப்பைப்பற்றியது தான். உயிர்ப்பை ஏதோ வெறும் காட்சியாக, வெறும் மாயையாக அல்ல, அதை உண்மையான உயிர்ப்பாக நம்ப வேண்டும். கிறிஸ்து உயிர்க்கவில்லை என்றால், நம்முடைய விசுவாசம் வீணானது. உயிர்ப்புதான் கிறிஸ்துவின் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்திற்கு அடிப்படையானது. அத்தகைய விசுவாசத்தை நாம் வளர்த்தெடுப்போம், நாமும் வளர்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

இயேசுவின் உயிர்ப்பு ஏமாற்றத்தைப் போக்குகிறது !

இயேசுவின் உயிர்ப்பு ஏமாற்றத்தைப் போக்குகிறது என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம்.

சீமோன் பேதுருவும், அவரது தோழர்களும் மீன் பிடிக்கச் செல்லும்போது, இரவு முழுவதும் பாடுபட்டும், அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. விடியற்காலை நேரத்தில் உயிர்த்த இயேசு அவர்களுக்குத் தோன்றி, "பிள்ளைகளே, மீன் ஒன்றும் படவில்லையா?" என வினவுகிறார். பின்னர், அவர்களைப் படகின் வலப்பக்கத்தில் வலைவீசப் பணிக்கிறார். அவர்களும் அவ்வாறே செய்ய ஏராளமான மீன்பாடு கிடைக்கிறது.

அதைக் கண்டபின்தான் அன்புச் சீடர் பேதுருவிடம் "அவர் ஆண்டவர்தாம்" என்று உறுதிப்படுத்துகிறார்.

நமது வாழ்வின் ஏமாற்றங்களை ஆண்டவரிடம் ஒப்படைப்போம். உயிர்த்த இயேசு நம்முடன் இருந்தால், நாம் வேண்டுவதற்கும், விரும்புவதற்கும் மேலாகவே, நமக்கு இறையாசிகள் கிட்டும்.

மன்றாடுவோம்: சாவை வென்று உயிர்த்த மாட்சி மிகுந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். வாழ்வின் பல்வேறு ஏமாற்றங்களால் சோர்ந்து போயிருக்கும் உம்முடைய பிள்ளைகளின் உள்ளங்களை உமது ஆவியினால் எங்களை நிரப்பியருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

உணவருந்த வாருங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

உயிர்த்த இயேசு தம் சீடரிடம் காட்டும் பாசமும், பரிவும் நம் உள்ளத்தைத் தொடுகின்றன. அவர்கள் தம்மைக் கைவிட்டு ஓடிவிட்டதையோ, தமது உயிர்ப்பை நம்ப மறுத்ததையோ, தங்களின் பழைய வாழ்க்கைக்கே மீண்டும் திரும்ப முடிவு செய்ததையோ அவர் பொருட்படுத்தவில்லை. மாறாக, தந்தை தம் பிள்ளைகள்மேல் பரிவு காட்டுவதுபோல (திபா 103), இயேசு தம் சீடர்களுக்குப் பரிவு காட்டுகிறார். அவர்களுக்கு மீன்பாடு கிடைக்கவில்லை என்பதை அவர்களிடம் விசாரித்து அறியும்போதும், படகின் வலைப்பக்கத்தில் வலை வீசச்சொல்லி, பெரும் மீன்பாடு கிடைக்கச் செய்யும்போதும், களைப்போடும், பசியோடும் அவர்கள் கரைக்கு வரும்போது, அவர்களுக்கு உணவு தயாரித்து வைத்திருந்து, #8220;உணவருந்த வாருங்கள்” என்று அழைக்கும்போதும், உயிர்த்த இயேசுவின் பரிவை நாம் கண்கூடாகக் காண முடிகிறது.

இந்தப் பாஸ்காக் காலத்தில் உயிர்த்த இயேசுவின் பாசத்தை நாமும் அனுபவிப்போம். நமது கடந்த கால வாழ்வை, குறைகளை, பாவங்களை அவர் நினைவுகூராமல், நம்மைப் பரிவுடன் பராமரிக்கும் அவரது பேரன்பைப் போற்றி மகிழ்வோம்.

மன்றாடுவோம்: கடந்த காலக் கசப்பு அனுபவங்களை வென்ற வெற்றி வீரரான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். எனது முன்னாள் வாழ்வு, தவறுகள் அனைத்தையும் நீர் மறந்து, மன்னித்து, என்னைப் புதுப் படைப்பாக மாற்றுவதற்கும், உமது பாசம் நிறை கண்களால் என்னைப் புதுப் படைப்பாகக் காண்பதற்கும் உமக்கு நன்றி கூறுகிறேன். என் இதயத்தைப் புதிதாக மாற்றும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருட்தந்தை குமார்ராஜா

-----------------------

 

''இயேசு அவர்களிடம், 'பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?' என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், 'இல்லை' என்றார்கள். அவர், 'படகின் வலப்பக்கத்தில் வீசுங்கள்;
மீன் கிடைக்கும்' என்று அவர்களிடம் கூறினார்'' (யோவான் 21:5-6)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- தங்கள் குருவும் ஆசிரியருமாக இருந்த இயேசுவை யூத சமயத்தலைவர்களும் உரோமை அதிகாரிகளும் சேர்ந்து சிலுவையில் அறைந்து கொன்றுபோட்டதை அறிந்த இயேசுவின் சீடர்களை மிகுந்த அச்சம் மேற்கொண்டது. அவர்கள் எதிர்பார்த்த வல்லமை மிக்க மெசியாவாக இயேசு தம்மைக் காட்டிக்கொள்ளவில்லை என்பது அவர்களுக்கு ஒரு பெரிய வருத்தமாக இருந்திருக்கவேண்டும். அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக, எருசலேம் நகரை விட்டுத் தங்கள் சொந்த இடமாகிய கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார்கள். தங்கள் முன்னாளைய தொழிலாகிய மீன்பிடித்தலைத் தொடர்ந்தார்கள். இவ்வாறு தங்கள் தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது இயேசு அவர்களுக்குத் தோன்றுகிறார். இங்கேயும் சீடர்கள் இயேசுவை உடனடியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஏதோ ஒருவர் தங்களுக்கு மீன்பாடு எவ்வாறு இருந்தது எனக் கேட்டதாக அவர்கள் நினைத்தார்கள். இரவும் பகலும் வேலை செய்தும் அவர்களுக்கு ஒரு மீனும் அகப்படாத நிலையில், கரையில் நின்றுகொண்டிருந்த அன்னிய மனிதர் அவர்களுக்கு ஒரு உத்தி சொல்லிக்கொடுக்கிறார்: ''படகின் வலப்பக்கத்தில் வலைவீசுங்கள்; மீன் கிடைக்கும்'' என அவர் கூறியதை அவர்கள் கருத்தில் ஏற்று அவ்வாறே செய்கிறார்கள். யாரும் எதிர்பாராத விதத்தில் அவர்களுக்கு அதிசயமான விதத்தில் பெரும் மீன்பாடு கிடைக்கிறது. யோவான் நற்செய்தியில் ''அடையாளங்கள்'' பற்றிய குறிப்பு அடிக்கடி வருகிறது. அதுபோல இதையும் ஓர் அடையாளமாகக் காண்கிறார் ''இயேசுவின் அன்புச் சீடர்'' (காண்க: 2:11; 6:14; 9:16; 11:47; 21:7). அதாவது, இயேசு யார் என்பதை வெளிப்படுத்துகின்ற ஒரு தனிப்பட்ட பொருள்நிறைந்த அடையாளம் இங்கே குறிக்கப்படுகிறது.

-- இயேசுவை நாம் காண வேண்டும் என்றால் நமக்கு நம்பிக்கை தேவை. சாதாரண மனிதராக இயேசுவை நாம் பார்த்தால் அவருடைய போதனைகளும் சாதனைகளும் நம்மைக் கவர்ந்தாலும்கூட அவர் கடவுளின் மகனாக நம்மிடையே வந்து நமக்காகத் துன்புற்று இறந்து நமக்கு இறைவாழ்வில் பங்களித்துள்ளார் என்னும் உண்மையைக் கண்டுகொள்ள நாம் தவறிவிடுவோம். நாளெல்லாம் உழைத்து, இன்னல்களுக்கு நடுவிலேயும் வெற்றி காண இயலாமல் நாம் தவிக்கின்ற தருணங்கள் உண்டு. எவ்வளவுதான் முயன்றாலும் நம்மால் சாதிக்க இயலாத காரியங்களும் உண்டு. அவ்வேளைகளில் நாம் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும். கரையில் நின்றுகொண்டு அவர் நம்மை நோக்கி, 'படகின் வலப்பக்கத்தில் வலையை வீசுங்கள்'' என நமக்குக் கூறுகின்ற வேளைகளில் நாம் அவருடைய குரலைக் கேட்டு அதன்படி செயல்பட்டால் வெற்றி நமதாகும். ஏனென்றால் நன்மை செய்ய நாம் விழையும்போது கடவுளின் அருள்துணையோடு நாம் எதையும் சாதிக்கலாம்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனின் குரலுக்கு எப்போதும் செவிமடுக்க எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

பேதுருவும் அவரோடிருந்தவர்கள் அனைவரும் தங்கள் மீன்பிடித்தொழிலில் கைதேர்ந்தவர்கள். அனுபவமுள்ளவர்கள். அன்று அவர்கள் இரவு முழுவதும் தங்கள் அனுபவம், திறமை, உடல் வலி மை அனைத்தையும் பயன்படுத்தி உழைத்துள்ளனர். ஆனால் ஒரு பயனும் இல்லை. ஒன்றும் கிடைக்கவில்லை.உயிர்த்த இறைவன் ஆசீரோடு, ஆலோசனையுடன் அவரது வார்த்தையை நம்பி வலையை வீசுகின்றனர். கை தேர்ந்த தொழிலாளிபோல, "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்" என்று ஆசீரும் ஆலோசனையும் கொடுக்கிறார். வலையை இழுக்க முடியாத அளவு நிறைய மீன்கள் கிடைத்துள்ளன.

உங்கள் இயேசு உங்களை விட உங்கள் தொழிலில் நிபுணத்துவம் பெற்றவர். உங்களை விட அவரது அறிவியல் அறிவு, கணித அறிவு, கணணி புலமை,பெரிது. அவர் உருவாக்கி வைத்துள்ளதை இன்று கொஞ்சம் கொஞ்சம் அறிய வருகிறோம்.பெரிய அறிவியல் மேதைளும் பேதுருபோல தங்கள் அறிவின் ஆற்றாமையையும் இயலாமையையும் ஏற்றும் ஆண்டவனின்; படைப்பின் ஞானத்தைப் போற்றியும் வியந்தும் அறிக்கையிடுவதும் அறிவோம்.

ஆகவே நம் தொழிலில், உழைப்பில் நம்மைப் பெரிதும் நம்புவதைவிட இயேசுவின் ஆசீரையும் ஆலோசனையையும் அதிகமாகத் தேடுவோம். அவரது உதவியைக் கேட்டு செபித்து தினமும் அலுவலகப் பணிகளைத் தொடங்குவோம். வீட்டு வேலைகளைச் செய்வோம். களைப்பு இருக்காது; கஷ்டம் இருக்காது. இழப்பு இருக்காது.எல்லாம் நிறைவாக நிறைந்து இருக்கும். நிறைந்து வழியும். பெற்று இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்