முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 25: 13-21

அந்நாள்களில் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கியுவும் பெஸ்தைச் சந்திக்கச் செசரியா வந்தனர். அவர்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தபோது பெஸ்து பவுலுக்கு எதிரான வழக்கை அரசனிடம் எடுத்துக் கூறினார்: ``பெலிக்சு கைதியாக விட்டுச்சென்ற ஒரு மனிதர் இங்கு இருக்கிறார். நான் எருசலேமிலிருந்தபோது தலைமைக் குருக்களும், யூதரின் மூப்பர்களும் அவரைப்பற்றிய வழக்கை என்னிடம் தெரிவித்து அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். நான் அவர்களைப் பார்த்து, `குற்றம் சாட்டப்பட்டவர் எவரும் குற்றம் சாட்டியவர்க்கு முன் நின்று தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தைப்பற்றி விளக்குவதற்கான வாய்ப்பைப் பெறவேண்டும். அதற்குமுன் அவருக்குத் தீர்ப்பு அளிப்பது உரோமையரின் வழக்கமல்ல' என்று கூறினேன். எனவே அவர்கள் இங்கே வந்தபோது, சற்றும் காலம் தாழ்த்தாமல் மறு நாளிலேயே நான் நடுவர் இருக்கையில் அமர்ந்து அவரை என்னிடம் கூட்டிக்கொண்டு வருமாறு ஆணை பிறப்பித்தேன். குற்றம் சுமத்தியவர்கள் எழுந்து பேசியபோது நான் நினைத்திருந்த கொடிய குற்றம் எதுவும் அவர்மீது சுமத்தவில்லை. அவர்கள் அவருக்கு எதிராகச் சொன்னதெல்லாம் தங்கள் சமயத்திலுள்ள சில கருத்து வேறுபாடுகளாகத்தான் இருந்தன. இறந்துபோன இயேசு என்னும் ஒருவரைப்பற்றியும் அவர்கள் பேசினார்கள். இந்த இயேசு உயிரோடு இருப்பதாகப் பவுல் சாதித்தார். இக்கருத்துச்சிக்கல்களைப்பற்றிக் கேட்டதும் நான் குழம்பிப் போய், ``நீர் எருசலேமுக்கு வருகிறீரா? அங்கு இவைபற்றி விசாரிக்கப்பட விரும்புகிறீரா?'' எனக் கேட்டேன். பவுல், பேரரசரே விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும்வரை தம்மைக் காவலில் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆதலால் இவரைச் சீசரிடம் அனுப்பும்வரை காவலில் வைக்குமாறு ஆணை பிறப்பித்தேன்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 103: 1-2. 11-12. 19-20
பல்லவி: ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலை நிறுத்தியுள்ளார்.

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி

11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு
மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.
12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ;
அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். -பல்லவி

19 ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்;
அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது.
20 அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே!
ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். அல்லேலூயா.

யோவான் 21:15-19 s

பாஸ்கா காலம்-ஏழாம் வாரம் வெள்ளி

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 15-19

தம் சீடர்களுக்குத் தோன்றி, இயேசு சீமோன் பேதுருவிடம், ``யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?'' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ``ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!'' என்றார். இயேசு அவரிடம், ``என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்'' என்றார். இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், ``யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?'' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ``ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!'' என்றார். இயேசு அவரிடம், ``என் ஆடுகளை மேய்'' என்றார். மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், ``யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?'' என்று கேட்டார். `உனக்கு என்னிடம் அன்பு உண்டா?' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், ``ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?'' என்றார். இயேசு அவரிடம், ``என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்'' என்றார். பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், ``என்னைப் பின் தொடர்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 21: 15 - 19
ஃபாலோவ் மீ

இந்த சமுதாயம் சுயமாக சிந்திக்க கூடிய சமுதாயம் அல்ல. மற்றவர்களை ஃபாலோ செய்கின்ற சமுதாயம் என்பார் பெரியார். ஒரு சிலர் அதிகாரம் பின்னால் ஓடுகின்றார்கள். எங்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்று சிலர். மற்றும் சிலர் பொருட்களின் பின்னால் ஓடுகின்றார்கள். எங்கு ஆஃபர் பெற்று அள்ளலாம் என்று சிலர். இது தான் இன்றைய சூழலின் மனிதனின் ஓட்டமாக இருக்கின்றது.

ஆனால் இயேசு சற்று வித்தியாசமான முறையில் சிந்திக்க அழைக்கின்றார். எவ்வாறெனில் நாம் பார்த்த அனைவருமே வார்த்தையினால் ஒன்றுமில்லாமைக்காக ஃபாலோ செய்கின்றார்கள். ஆனால் இயேசு மட்டுமே வார்த்தையினால் அல்ல, வாழ்வினால் பின்பற்ற அழைப்பு விடுக்கின்றார். இங்கு பணமோ, அதிகாரமோ, பொருளோ இடம் பெற முடியாது. மாறாக அன்பின் பணி மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதனை எண்பித்துக் காட்டவே பேதுருவை காட்சிப் பொருளாக வைத்துச் சுட்டிக் காட்டுகின்றார். இயேசு கேட்ட மூன்று கேள்விகளுக்கும் பேதுரு ஒரே பதிலைத் தான் தருகிறார். ஆனால் இயேசுவின் வெகுமதி என்னவென்றால் பணி மட்டுமே. மூன்று பதிலுக்கும் இயேசு கொடுத்த வெகுமதி பணிவாழ்வு. அதனால் தான் திருச்சபையின் தலைவராக பேதுருவை அரியணையில் அமர்த்துகின்றார். காரணம் பணிவாழ்வின் பிறப்பிடமாக பேதுரு விளங்கினார்.

நாம் யாரை எதற்காக பின்பற்ற விரும்புகிறோம்? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

==========================

தவறுகள் பாடமாக...

யோவான் 21: 15 -19

இயேசுவை மறுதலித்ததன் விளைவாக புனித பேதுருவுக்கு குற்ற உணர்வு இருந்தது. இந்த குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது என்று எண்ணிக் கொண்டிருந்த பேதுருவுக்கு இயேசு தோன்றி அவரது பணி வாழ்வை பற்றிய தெளிவு கொடுக்கும் போது தன்னை முழுமையாக இயேசு மன்னித்து விட்டார் என்பதை அறிந்து கொண்டார். இந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் முனைப்போடும் இருந்தார். என்னை மறுதலித்தாய்; ஆனால் நீயே எனக்காக உன் கைகளை விரித்துக்கொடுப்பாய் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பேதுரு தன் தவறுகளிலிருந்து பாடம் கற்றிருந்தார்.

தொடக்க்காலத் திருச்சபையில் வேதகலாபனைகள் நடைபெற்ற போது, புனித பேதுரு மக்களிடம், “இயேசுவும் உடல் அளவில் வேதனைகளை அனுபவித்தார்; எனவே நாமும் இந்த உடல் வேதனைகளுக்காக, துன்புறுத்தலுக்காக இயேசுவின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை கைவிட்டுவிடக் கூடாது; தொடர்ந்து நம்பிக்கையோடு பயணிப்போம்” (1 பேதுரு 2:21) என்று சொல்லி உறுதியூட்டுகிறார். புனித பேதுருவும் தான் கற்ற பாடத்தின் விளைவாக, தன் நம்பிக்கையை உறுதி செய்து கொண்டு, இயேசுவுக்காக தன் உயிரையும் சிலுவையில், அதுவும் தான் நேராக இயேசுவைப் போல் சிலுவையில் அறையப்பட தகுதியற்றவன் என்று கூறி, இயேசுவின் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்காக தலகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார்.

மனிதர்களாகிய நாமும் வாழ்க்கையில் பல தவறுகள் செய்கிறோம். ஆனால் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதை விட, வலிமையான மனிதர்களாக திரும்பி வருவதை விட, சிறிது காலம் கழித்து அதே தவறுகளை செய்து, நேரத்தையும் ஆற்றலையும் வீணாக செலவு செய்து நன்மதிப்பையும் இழந்து விடுகிறோம். நாம் தவறு செய்பவர்கள் தான்; ஆனால் புனித பேதுருவைப் போல வலிமையான மனிதர்களாக, இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு பயணிப்போம்!

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ

...............................................................................................

திருத்தூதர்பணி 25: 13 – 21
உறுதியான மனம்

வாழ்க்கையின் ”குறிப்பிட்ட தருணம்“ ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையோ, ஒரு சமூகத்தின் பார்வையையோ, ஒட்டுமொத்த நாட்டின் போக்கையோ மாற்றக்கூடியதாக இருக்கும். அசோகருக்கு கலிங்கத்துபோர் அவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றியது. தூய பவுலடியாருக்கு, உயிர்த்த இயேசுவின் காட்சி, அவருடைய வாழ்வையே மாற்றியது. இந்திய சுதந்திரப்போரில் சிப்பாய்க்கலகம் இந்திய சுதந்திர வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இயேசுவின் வளர்ப்புத்தந்தை யோசேப்பின் வாழ்வில் அவர் கண்ட கனவு, மரியாளைப் பற்றிய பார்வையை மாற்றியது. இப்படி ஒரு குறிப்பிட்ட “தருணமானது“ ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்வையோ, ஒட்டுமொத்த சமூகத்தின் போக்கையோ மாற்றக்கூடியதாக இருக்கிறது. உலக வரலாற்றின் குறிப்பிட்ட முக்கிய தருணமானது, இயேசுவின் உயிர்ப்பே என்பதை ஆணித்தரமாக பவுலடியார் சொன்னது, இன்றைய வாசகத்தில் விளக்கப்படுகிறது.

பெஸ்தைச் சந்திக்க வந்த அகிரிப்பா, இரண்டாம் மார்க்கஸ் ஜீலியஸ் அகிரிப்பா ஆவார். இவர் அகிரிப்பாவின் மகனும் (12: 1 – 25), பெரிய ஏரோதுவின் கொள்ளுப்பேரனும் ஆவார். அவரோடு வந்த பெர்க்கியு, அவருடைய இளைய சகோதரி ஆவார். அலெக்சாண்டிரியாவின் சிறந்த தத்துவியலாளர் பிலோவின் உறவினரான, மார்கசுக்கு நிச்சயம் செய்யப்பட்டு, அவருடைய மாமாவான சால்சியர்களை ஆண்ட ஏரோதுவுக்கு மனைவியானாள். அவருடைய இறப்பிற்குப் பின், தன் சகோதரனிடத்தில் திரும்பி வந்தார். பெஸ்த், பவுலடியாரின் வழக்கைப் பற்றி, அகிரிப்பாவிடத்தில் கலந்து ஆலோசிக்கிறார். ”குற்றம் சாட்டப்பட்டவர் எவரும் குற்றம் சாட்டியவர்க்கு முன் நின்று, தம் மீது சுமத்தப்பட்ட குற்றத்தைப் பற்றி விளக்குவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும். அதற்கு முன் தீர்ப்பளிப்பது உரோமையரின் வழக்கமல்ல” என்பது, பெஸ்துவின் வாதமாக இருந்தது. அது அவரைப்பொறுத்தவரையில் நீதியான வாதம். அதற்கு யூதர்களின் நடுவில் பெருத்த எதிர்ப்பு இருந்தபோதிலும், அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.

ஒவ்வொருவருடைய வாழ்விலும், தங்களுக்கென்று விழுமியங்களை வைத்திருப்பார்கள். அந்த விழுமியங்கள் நம்முடைய பார்வையில் சரியானதாக இருக்கிறதா? என்பதை விட, கடவுளின் பார்வையில் சரியானதாக இருக்கிறதா? என்பது முக்கியமானது. நாம் கொண்டிருக்கிற மதிப்பீட்டை, எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், வாழ்ந்து காட்ட வேண்டியது நம்முடைய கடமையாக இருக்கிறது. அதற்கு நாம் உறுதியுள்ள மனதுடையவர்களாக வாழ்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

திருப்பாடல் 103: 1 – 2, 11 – 12, 19 – 20
”குற்றங்களை நம்மிடமிருந்து அகற்றுகிறார்”

மனிதர்கள் பலவீனர்களாக இருக்கிறார்கள். அந்த பலவீனம் தான், தான் தவறு செய்வதை ஏற்றுக்கொள்ளவும், அடுத்தவர் தவறு செய்வதைக் கண்டு மனம் புழுங்கவும் செய்கிறது. ஆனால், கடவுள் பலமுள்ளவர். அவர் எந்நாளும் நம்மை மன்னிக்கிறவராக இருக்கிறார் என்பதை, இன்றைய திருப்பாடல் வரிகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கடவுள் பலமுள்ளவராக இருப்பதனால் தான், நாம் எவ்வளவு தவறு செய்தாலும், அதனைப் பொறுத்து, நம்முடைய குற்றங்களை மன்னித்து, நமக்கு விடுதலையை வழங்குகிறவராக இருக்கிறார்.

கடவுளின் கருணையை, மன்னிக்கும் பேரன்பை உருவகம் மூலமாக ஆசிரியர் நமக்கு எடுத்துக்காட்டுகிறார். கிழக்கும், மேற்கும் திசைகளைக் குறிக்கக்கூடியதாக இருக்கிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. கிழக்கு நோக்கிச் சென்றால், நாம் மேற்குத்திசையை கற்பனை செய்து பார்க்க முடியாது. இரண்டும் வெவ்வேறு துருவங்களைச் சார்ந்தவை. இரண்டும் சேருவது முடியாத காரியம். அதேபோலத்தான் கடவுள் நம்முடைய குற்றங்களை மன்னிக்கக்கூடிய விதமும். அவர் எந்தளவுக்கு நம்முடைய குற்றங்களை மன்னிக்கிறார் என்றால், அதனை முழுவதும் மறந்துவிடும் அளவுக்கு, அடுத்த நேரத்தில் அது தெரியாத அளவிற்கு மறந்துவிடுகிறார்.

கடவுளின் அன்பையும் மன்னிப்பையும் முழுமையாகச் சுவைத்துக் கொண்டிருக்கிற நாம், எந்நாளும் அவருடைய அன்பை, முழுமையாகச் சுவைப்பதற்கு முயற்சி எடுப்போம். அவரிடத்தில் திரும்பி, திருந்தி வாழ முயற்சி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

பேதுருவின் அன்பு

”நான் உம்மை அன்பு செய்கிறேன் என்பது உமக்குத் தெரியுமே?” என்கிற பேதுருவின் வார்த்தையில் பல அர்த்தங்கள் மறைந்து கிடக்கின்றன. இயேசு ”என்னை அன்பு செய்கிறாயா?” என்ற கேள்வியை, பேதுருவிடத்தில் கேட்டபொழுது நிச்சயம் அவர் மனம் உடைந்திருப்பார். தன்னை மூன்று சீடருள் ஒருவராக வைத்திருந்தவர், தன்னை மிகவும் நம்பியவர், சோதனையில் தான் விழாதபடி செபிக்கிறேன் என்று தனக்காகச் செபித்தவரின் மனம் புண்படும்படி, அவரை மறுதலித்துவிட்டேன். அதைத்தான் இயேசு கேட்கிறார் என்று, நிச்சயம் அவர் மனம் வெதும்பியிருக்க வேண்டும். பேதுரு தான் பலவீனமானவர் என்பதை மறுக்கவில்லை. அதனை ஏற்றுக்கொள்கிறார். அதேவேளையில், தான் இயேசு மீது மிகுதியாக அன்பு வைத்திருக்கிறேன் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

எத்தனைமுறை தான் பலவீனத்தில் வீழ்ந்திருந்தாலும், இயேசுவிடத்தில் தான் வைத்திருக்கிற அன்பை, யாரும் சந்தேகம் கொள்ள முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறார். இயேசுவுக்கும் பேதுருவின் அன்பு நிச்சயமாகத் தெரியும். ஏனென்றால், இயேசு உள்ளத்தையும் ஊடுருவிப்பார்க்கும் திறன் படைத்தவர். அப்படியென்றால், இயேசு ஏன் இப்படிப்பட்ட தர்மசங்கடமான கேள்வியைக் கேட்கிறார்? பேதுருவின் குற்ற உணர்வைப் போக்குவதற்காக, அவரிடத்தில் இருக்கிற தாழ்வுமனப்பான்மையை நீக்குவதற்காக, மற்றவர்கள் முன்னிலையில், இன்னும் தான் பேதுருவைப்பற்றி கொண்டிருக்கிற பார்வை மாறவில்லை என்பதை, வெளிக்காட்டுவதற்காக.

நமக்கென்று பலவீனங்கள் இருக்கலாம். நாம் சோர்ந்து போகலாம். தவறுகள் செய்யலாம். ஆனால், நமது அடிப்படை விழுமியங்களிலிருந்து நாம் மாறக்கூடாது. நமது பலவீனத்தில் செய்யக்கூடிய செயல்பாடுகளால், நாம் கொண்டிருக்கிற நல்ல மதிப்பீடுகள் மாற்றம் பெறக்கூடாது. பேதுருவின் அன்பைப் போல, உறுதியானதாக இருக்க வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------

பேதுருவின் தலைமை

யோவான் நற்செய்தியாளர் எந்த காரணமும் இல்லாமல், இந்த நற்செய்திப்பகுதியை எழுதியிருக்க முடியாது. மற்றவர்களோடு ஒப்பீட்டுப்பேசுவது மானுட சமுதாயத்திற்கே உரிய ஒன்று. நிச்சயம், தொடக்க கால திருச்சபையில், பேதுருவின் தலைமையைப்பற்றி மக்கள் பேசியிருப்பார்கள். அறிவிலே சிறந்த யோவானோடு, நற்செய்தியை அறிவிப்பதிலே சிறந்த பவுலோடு நிச்சயம் பேதுருவையும் ஒப்பீட்டுப்பேசியிருப்பார்கள். அப்படிப்பேசுகிறபோது, பேதுரு எந்தவிதத்தில் மற்ற இரண்டுபேரோடு சிறந்தவர் என்ற கேள்வியும் எழுந்திருக்கும். அந்தச்சூழ்நிலையில், இயேசுவே அந்த தகுதியை பேதுருவுக்குத் தந்திருக்கிறார் என்பதுதான் நற்செய்தியின் நோக்கம்.

பேதுரு, நற்செய்தியாளர் யோவானைப்போல அழகிய இறையியல்படி எழுத முடியாதவராக இருக்கலாம். அல்லது கடுமையான பயணங்கள் செய்து புறவினத்தார்க்கெல்லாம் நற்செய்தி போதித்த பவுலைப்போல பயணங்கள் செய்ய முடியாதவராக இருக்கலாம். ஆனாலும், திருச்சபையில் அவருக்கென்று இருக்கக்கூடிய மதிப்பை, மாண்பை யாரும் தடுக்க முடியாது. பேதுரு பலவீனர்தான். ஆனாலும், கிறிஸ்துவின் ஆற்றலால் பலப்படுத்தப்பட்டவர். இயேசுவால் தகுதியுள்ளவராக்கப்பட்டவர். இயேசுவால் தலைமையாக நியமிக்கப்பட்டவர். அதனால், அவருக்குரிய சிறப்பு நிலையை யாராலும் தடுக்க முடியாது.

தகுதியைத் தரக்கூடியவர் கடவுள். இந்த உலகத்திலே கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதற்கோ, கடவுளின் பணியைச்செய்வதற்கோ, நம்மில் யாருக்கும் தகுதி இல்லை. ஆனால், கடவுள் அந்த தகுதியைத்தருகிறார். தகுதியைத்தரக்கூடியவர் கடவுள். அவர் மீது நாம் நம்பிக்கை வைத்து செய்யக்கூடிய காரியங்கள் நிச்சயம் வெற்றிபெறும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

சாட்சிய வாழ்வு

இயேசு மூன்றுமுறை பேதுருவைப்பார்த்து ‘என்னை அன்பு செய்கிறாயா?’ என்ற கேள்வியைக்கேட்கிறார். அதற்கு காரணம், மூன்றுமுறை மறுதலித்த பேதுருவுக்கு அவரது அன்பை உறுதிப்படுத்த இயேசு வாய்ப்பு தருகிறார் என்பதுதான். கடவுள் எப்போதுமே நமக்கு வாய்ப்பு தருகிறவராக இருக்கிறார். கடவுளுக்கு மனித பலவீனம் தெரியும். அவர் நம்முடைய நிலையை உணராதவர் அல்ல. நம்மில் ஒருவராக வாழ்ந்திருக்கிறார். நம்மோடு உறவாடியிருக்கிறார். நம்முடைய துன்பத்தில் பங்கு கொண்டிருக்கிறார். எனவே, அவர் நிச்சயம் மனிதர்களை அறிந்திருக்கிறார். அந்த வகையில் பேதுருவுக்கு வாய்ப்பு கொடுத்த இறைவன் நமக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பார்.

வாய்ப்பு என்பது செய்த தவறை திருத்திக்கொண்டு வாழ வழங்கப்படுவது. செய்த தவறுக்காக மனம்வருந்தி, இனி அந்த தவறை செய்யாமல் இருப்பதற்காகக் கொடுக்கப்படும் வெகுமதி. அப்படிப்பட்ட கொடையைப் பெற்றுக்கொண்டது தகுதி என்பதை, பெற்றுக்கொண்ட நபர் வாழ்ந்து காட்ட வேண்டும். பேதுரு உண்மையிலேயே அதை வாழ்ந்து காட்டினார். அவர் தன்னுடைய பலவீனத்தில் இயேசுவை மறுதலித்திருந்தாலும், இயேசுவை கைவிட்டிருந்தாலும் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி தனது வாழ்வைக் கையளித்தார். பெற்றுக்கொண்ட மன்னிப்புக்கேற்ற வாழ்வு வாழ்ந்தார்.

இறைவன் நம்மை மன்னிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார். நாம் தவறுகள் பல செய்தாலும், நாம் திருந்துவதற்கு பல வாய்ப்புகளை அவர் தந்துகொண்டிருக்கிறார். அந்த வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்தி, பேதுருவைப்போல சாட்சிய வாழ்வு வாழ இறைவனை வேண்டுவோம்..

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

“நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்லர்”

“நான் உங்கள உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்லர்”“ என்னும் துணிவான இயேசுவின் சொற்களை இன்று நம் சிந்தையில் இருத்துவோம்.

யோவான் நற்செய்தியில் “உலகு”“ என்னும் சொல் மூன்று பொருள்களைக் கொண்டிருக்கிறது.

1. இறைவன் படைத்த உலகம் . அது நல்லது.
2. தீய நாட்டங்கள் நிறைந்த இடம். அது தீயது.
3. இறைவன் படைத்த மனிதர்கள். இறைவனால் அன்பு செய்யப்படுபவர்கள்

இந்த இடத்தில் இரண்டாவது பொருளையே அது கொண்டிருக்கிறது. இருளின் ஆற்றல்கள் நிறைந்த இந்த உலகிலிருந்து, இயேசு நம்மைப் பிரித்து எடுத்துள்ளார். எனவே, நாம் இனி உலகைச் சாராமல், இயேசுவையே சார்ந்து வாழவேண்டும். உலகு சார்ந்த இச்சைகள், எண்ணங்கள், செயல்களைக் களையவேண்டும். “உலகின்மீதும் அதிலுள்ளவைமீதும் அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது. ஏனெனில் உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை உலகிலிருந்தே வருபவை”“ (1 யோவா 2: 15-16) என்னும் இறைமொழியை மனத்தில் கொண்டு வாழ்வோம்.

மன்றாடுவோம்: எங்களைத் தேர்ந்துகொண்ட தெய்வமே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உலகிலிருந்து எங்களைத் தேர்ந்தெடுத்தவரே நாங்கள் உலகைச் சார்ந்து வாழாமல், உம்மையே சார்ந்து வாழும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

'''இயேசு சீமோன் பேதுருவிடம், 'யோவானின் மகன் சீமோனே,
நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்டார்.
அவர் இயேசுவிடம், ''ஆம் ஆண்டவரேஇ எனக்கு உம்மிடம் அன்பு உண்டு
என உமக்குத் தெரியுமே!' என்றார்'' (யோவான் 21:15)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- முன்னொரு நாள் பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்திருந்தார் (காண்க: யோவா 18:15-18, 25-27). தம் தலைவரும் குருவுமான இயேசுவைப் படைப்பிரிவினர் கைதுசெய்து, தலைமைக் குரு முன் கொண்டுபோய் நிறுத்தி, கன்னத்தில் அறைந்து இழிவுபடுத்தியதைப் பேதுரு பார்த்தார். ஆனால் இயேசுவுக்கு ஆதரவாகப் பேச அவர் முன்வரவில்லை. தம் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அவர் பயந்தார். எனவே, ''இயேசுவை யான் அறியேன்'' என்று கூறி மறுதலித்தார். இயேசுவோ சிலுவையில் அறையப்பட்டு, உயிர்துறந்து, சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார். பேதுருவுக்கும் பிற சீடர்களுக்கும் தோன்றி அவர்ளை நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார். அவ்வாறு தோன்றிய இயேசு பேதுருவிடம் மூன்று முறை கேட்ட கேள்வி இது: ''நீ இவர்களைவிட மிகுதியாக என்னை அன்புசெய்கிறாயா?'' (யோவா 21:15). மூன்று முறை இயேசுவை மறுத்த பேதுரு இப்போது மூன்று முறை, ''ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!'' எனப் பதிலிறுக்கின்றார் (யோவா 21:15). இயேசுவைக் கைவிட்ட பேதுரு இங்கே இயேசுவை அன்புசெய்வதாக உறுதிகூறுகிறார்.

-- பாவி என்னும் நிலையிலிருந்து புனித நிலைக்குப் பேதுரு மாறி வருவதை இங்கே காண்கின்றோம். தம் தலைவராகிய இயேசுவை இனிமேல் பேதுரு எவ்விதத் தயக்கமுமின்றிப் பின்செல்வார். ஏன், இயேசுவுக்காகத் தம் உயிரையே கையளிப்பார். இதையும் இயேசு பேதுருவுக்கு அறிவிக்கிறார். பேதுருவின் பொறுப்பில் தம் ஆடுகளையும் ஆட்டுக்குட்டிகளையும் ஒப்படைக்கிறார். உண்மையிலேயே பேதுரு ஒரு ''நல்ல ஆயராக'' செயல்பட்டுத் தம் உயிரையும் பலியாக்குவார். இயேசுவை நம்பி ஏற்ற சீடர் குழுவுக்குத் தலைவராக ஏற்படுத்தப்பட்ட பேதுருவின் வாழ்க்கையில் குற்றம் குறைகள் இருந்தன. இன்றும்கூட, திருச்சபைத் தலைவர்களிடத்தில் நாம் குறைகளைக் காண முடியும். ஆயினும் இயேசு குறையுள்ள மனிதரைத் தேர்ந்துகொண்டு தம் மக்களை வழிநடத்தும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கின்றார். எனவே, திருச்சபைத் தலைவர்கள் தாழ்ச்சியுடையவர்களாக இருக்க வேண்டும். மக்களுடைய நலனுக்காகத் தியாகம் செய்ய முன்வரவேண்டும். அதே நேரத்தில் இயேசு தம் திருச்சபையை ஒருநாளும் கைவிட மாட்டார் என்னும் உறுதிப்பாடு நம்மிடம் இருக்க வேண்டும். மனிதரிடத்தில் குறையிருந்தாலும் கடவுள் வல்லமையோடு செயல்பட்டு நம்மை வழிநடத்துவார் என நாம் நம்புகிறோம்.

மன்றாட்டு
இறைவா, உம்மை அன்புசெய்து உம் திருமகன் காட்டிய வழியில் நாங்கள் நடந்துசெல்ல எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

"அன்பு செலுத்துகிறாயா?"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

வாழ்க்கையின் போக்கை மாற்றி அமைப்பது அன்பின் அனுபவங்கள். சரியான அன்பு அனுபவம் நல்ல வாழ்க்கையையும், தவறான அன்பு அனுபவம் மோசமான வாழ்க்கையையும் தருவது நம் வாழ்க்கைப் பாடம். அன்பின் அனுபவம் சில பொறுப்புக்களையும் சில கடமைகளையும் நம் மேல் சுமத்திவிடுகிறது. அன்பில் உருவாகும் கடமையிலும் பொறுப்பிலும், பெண் ஒருத்தி தன் வாழ்கை முறையை மாற்றுகிறாள். அவ்வாறே அன்பில் உண்டான கடமையிலும் பொறுப்பிலும் ஆண் ஒருவன் தன் பழைய வாழ்க்கைளை மாற்றுகிறான்.

பேதுருவும் இனி தன் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்பதை இயேசு உணர்த்துகிறார். "நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார்" விருப்பத்தி;ல் மாற்றம், செயல்பாட்டில் மாற்றம், வாழ்க்கையில் மாற்றம்.

"என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்ற மூன்று கேள்விகள், "என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்" என்ற பொருப்பு ஒப்படைப்பு இவைகள் பேதுருவில் பெரிய மன மாற்றத்தை ஏற்படுத்தி வாழ்க்கையையும் மாற்றிவிடுவதை முன்னுணர்த்துகிறார் இயேசு. நம் வாழ்விலும் இது போன்ற அன்பின் அனுபவங்கள் மாபெரும் மாற்றங்களை நம்மிலும் நம் வாழ்விலும் அடுத்தவரிலும் குடும்பத்திலும் சமுதாயத்திலும் உருவாக்கவல்லது என்பதை அறிவோம். அதை வாழ்வாக்குவோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்