முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 28: 16-20. 30-31

உரோமையில் தனி வீட்டில் தங்கியிருக்க பவுல் அனுமதி பெற்றுக்கொண்டார். ஆனால் படைவீரர் ஒருவர் அவரைக் காவல் காத்து வந்தார். மூன்று நாள்களுக்குப் பின்பு பவுல் யூத முதன்மைக் குடிமக்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்கள் வந்து கூடியபின் அவர்களை நோக்கி, ``சகோதரரே, நான் நம்முடைய மக்களுக்கு எதிராகவோ, மூதாதையரின் மரபுகளுக்கு எதிராகவோ எதுவும் செய்யவில்லை. எனினும் எருசலேமில் நான் கைதுசெய்யப்பட்டு உரோமையரிடம் ஒப்புவிக்கப்பட்டேன். அவர்கள் என்னை விசாரித்தபோது மரண தண்டனைக்குரிய குற்றம் எதுவும் என்னிடம் காணாததால் என்னை விடுதலை செய்ய விரும்பினார்கள். யூதர்கள் அதனை எதிர்த்துப் பேசியபோது நான், ``சீசரே என்னை விசாரிக்கவேண்டும்'' என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளானேன். ஆனால் என் இனத்தவர்க்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை. இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேசுவதற்காக அழைத்தேன். இஸ்ரயேல் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன்'' என்றார்.
பவுல் அங்கு இரண்டு ஆண்டுகள் முழுவதும் தாம் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்தார். தம்மிடம் வந்த அனைவரையும் வரவேற்று இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றி முழுத் துணிவோடு தடை ஏதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 11: 4. 5,7.

பல்லவி: ஆண்டவரே, நேர்மையாளர் உமது திருமுகத்தைக் காண்பார்கள்.

4 ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்;
அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது;
அவர் கண்கள் உற்று நோக்குகின்றன;
அவர் விழிகள் மானிடரைச் சோதித்தறிகின்றன. -பல்லவி

5 ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்;
வன்முறையில் நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார்.
7 ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்;
அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

யோவான் 21:20-25

பாஸ்கா காலம்-ஏழாம் வாரம் சனி

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-25

அக்காலத்தில் பேதுரு திரும்பிப் பார்த்தபோது, இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்துகொண்டு, ``ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்?'' என்று கேட்டவர். அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ``ஆண்டவரே, இவருக்கு என்ன ஆகும்?'' என்று கேட்டார். இயேசு அவரிடம், ``நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா'' என்றார். ஆகையால் அந்தச் சீடர் இறக்கமாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்கமாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ``நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன?'' என்றுதான் கூறினார். இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும். இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

யோவான் 21: 20 - 25
கரிசனையுணர்வோடு

இரண்டு வகையான கரிசனையுணர்வு நம் சமுதாயத்தில் இருக்கின்றன. ஒரு வகை கரிசனையுணர்வு சுயநலம் சார்ந்ததாக இருக்கின்றது. உதாரணத்திற்கு மதுராந்தம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 8 போ் பழியாகினர். தமிழக அரசு காவல்துறை அதிகாரிகளை பணிமாற்றம் செய்து கரிசனை காட்டுவது போன்று செயல்பட்டதை நாம் அறிவோம். இன்னொரு வகையினர் தன்னைப் போன்று மற்றவர்களும் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் உழைக்க கூடியவர்கள். உதாரணத்திற்கு சேலம் அருகில் ஒரு கிராமப்புற அதிகாரி தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் உள்ள பகுதியிலிருந்து மணல் கொள்ளை நடப்பதை எதிர்க்க முடியவில்லை, தடுக்க முடியவில்லை, அதற்கு காரணம் பெரிய அதிகாரிகளின் உடந்தை என்பதை உணர்ந்து எதற்கும் உதவாத தன்னுடைய பணியை ராஜினாமா செய்தார். இது கரிசனையுணர்வு ஏழை மக்கள் மீது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் முக்கியமான கதாநாயகராக செயல்படும் பேதுருவிடம் இரண்டாம் வகை கரிசனையுணர்வு காணப்படுகின்றது. ஏனென்றால் இயேசு உருமாறிய போது இந்த இரண்டு சீடர்களையும் (பேதுரு, யோவான்) கூட்டிக்கொண்டு சென்றார். ஆனால் அந்த நிகழ்விற்கு பிறகு யோவான் அந்த அளவிற்கு வெளிச்சமிடப்படவில்லை. காரணம் என்னவென்றால் இயேசுவுக்காக சான்றாக வாழக்கூடிய பணியினை கடவுள் இவருக்கு கொடுக்கின்றார். தன் வாழ்வில் இயேசுவுக்கு சான்றாக விளங்கினார் யோவான். அதனால் தான் திருத்தூதர்கள் கூட்டத்தில் அதிக வயது வரை வாழக்கூடிய வாய்ப்பினை கடவுள் இவருக்குக் கொடுத்தார். ஆனால் எதற்காக இவர் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால் பேதுருவின் கரிசனை இயேசுவின் கண்ணை திறக்க வைக்கிறது.

நான் மற்றவர்கள் மீது கரிசனை கொள்கிறேனா? எனது கரிசனை என்னை நோக்கியதா? அல்லது பிறரையா?

- அருட்பணி. பிரதாப்

===========================

ஒப்பீடு செய்யாதே!

யோவான் 21: 20 -25

மானிடனாக பிறப்பது மகிழ்ச்சியான நிகழ்வுதான் என்றாலும், மனிதனாக வாழ்வது கடினமான செயல்தான். மனிதருக்குள் பலவிதமான உணர்வுகள் எழும். அந்த உணர்வுகளை திறம்பட கையாள்வது அந்தந்த மனிதர்களின் ஆளுமையை வெளிப்படுத்தும். எல்லா மனிதர்களும் அன்பு செய்யப்பட வேண்டுமென்று விரும்புவார்கள்; தனக்கு விருப்பமானவர்களின் கவனம் தன் மீது இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அப்படி நடக்காத போது மனிதர்கள் மிருகமாக மாறுவதையும் பல நிகழ்வுகள் நமக்கு சொல்லித் தருகின்றன. அப்படி ஒரு நிகழ்வைத்தான் இன்றைய நற்செய்தி பகுதியில் காணமுடிகிறது. புனித பேதுருவால் தன்னை விட ஒருவர் இயேசுவிடம் நெருக்கமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனக்கு அல்லது தன்னிடம் இயேசு முழுமையான அன்பை, கவனத்தை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். “இவருக்கு என்ன ஆகும்?” என்று கேட்பதன் மூலம், புனித பேதுரு தன்னையும் புனித யோவானையும் இயேசுவோடு உள்ள அன்பில், நெருக்கத்தில் ஒப்பீடு செய்வதை காண முடிகிறது.

எப்போது மனிதர்களாகிய நாம், நம்மை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்கிறோமோ, அக்கணத்தில் மகிழ்ச்சியை இழக்கிறோம்; மனதில் அமைதியின்றி தவிக்கிறோம். நாம் நாமாக வாழ முயற்சி செய்வதே இல்லை. நம் குழந்தைகளை அவர்களின் முன்னிலையில் மற்ற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்யும் போது குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதில்லை. எனவே ஒப்பீடு செய்வதை நிறுத்தி, நம் திறமைகளை வளர்த்துக்கொண்டால், நம் குழந்தைகளை உற்சாகப்படுத்தினால், இந்த உலகமே நம்மை, நம் குழந்தைகளை உற்றுப்பார்க்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

- அருள்பணி. ஜாய்னஸ் ஜோ.லெ

...............................................................................................

திருத்தூதர்பணி 28: 16 – 20, 30 – 31
கிறிஸ்துவுக்காக சான்று பகரும் வாழ்வு

கிளாடியசின் காலத்தில் பெரும்பாலான யூதர்கள் உரோமை நகருக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்ட போதும், காலச்சூழலில் அவர்கள் உரோமை நகருக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கான சலுகைகளைப்பெற்று, மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தனர். அவர்களில் பலரை, பவுல் அழைத்துப்பேசுகிறார். தான் நிரபராதி என்பதை அவர்களுக்கு விளக்க முற்படுகிறார். தன்னைப் பற்றிய செய்தி, நிச்சயம் எல்லா யூதர்களுக்கும் சென்றிருக்கும் என்பதில் அவருக்கு சந்தேகம் ஒன்றுமில்லை. ஆனாலும், தன்னுடைய தரப்பு நியாயத்தை அவர் எடுத்துக்கூறுகிறார்.

இங்கே ஒன்றை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தன்னை நியாயப்படுத்த வேண்டும் என்பது, பவுலடியாரின் முதன்மையான நோக்கம் கிடையாது. அப்படிப்பட்ட எண்ணம் அவருக்கு துளியளவும் இல்லை. கடவுளின் பணியைச் செய்கிறேன் என்பதில், அவர் உறுதியோடு இருந்தார். அதற்காக எவருடைய எதிர்ப்பையும் சம்பாதிப்பதற்கு தயாராகவே இருந்தார். அரசராக இருந்தாலும், தனக்கு தண்டனை கொடுக்கிற நிலையில் இருந்தாலும், அதனைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால், கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதுதான், அவருடைய உள்ளத்தில் இருந்த உணர்வு. அதனைத்தான், இங்கு வித்தியாசமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். அதனை அவர் துணிவோடும் உறுதியோடும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

எப்போதுமே நம்மைப்பற்றியும், நம்முடைய திறமைகளைப் பற்றியுமே சிந்தித்துக்கொண்டிருக்கிற நமக்கு, பவுலடியாரின் வாழ்க்கை கிறிஸ்துவுக்காக வாழ வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்துவதாக அமைகிறது. தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் கிறிஸ்துவுக்காக அறிவித்த பவுலடியாரின் வாழ்வு, நமக்கும் முன்மாதிரியான வாழ்வாக மாறட்டும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

திருப்பாடல் 11: 4, 5, 7
”நேர்மையாளரையும், பொல்லாரையும் ஆண்டவர் சோதித்தறிகிறார்”

ஒருவரை நல்லவரா? கெட்டவரா? என்று அறிவதற்கு, சோதனை செய்து பார்ப்பது மனிதர்களின் குணம். மிகப்பெரிய பொறுப்பை ஒருவரிடம் கொடுக்க விரும்பும் தலைவர், யாரிடத்தில் அதனைக் கொடுக்க விரும்புகிறாரோ, அவரை பலமுறை சோதித்திருப்பார். அந்த சோதனையில் எல்லாம், அவர் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே, அவரால் மிகப்பெரிய பொறுப்பை அவரிடம் கொடுக்கலாம் என்கிற எண்ணம் வருவதாக இருக்கும். இது மனிதர்களுக்குப் பொருந்தும் ஆனால், கடவுள் ஒருவரைச் சோதித்துப்பார்த்துதான் அறிந்து கொள்ள முடியுமா? அல்லது சோதித்து தான் அறிந்து கொள்ள வேண்டுமா?

கடவுள் நேர்மையாளர்களையும், பொல்லாரையும் சோதித்து அறிகிறார் என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். கடவுளுக்கு ஒருவரை யாரென்று தெரிய, சோதித்து அறிய வேண்டியதில்லை. அப்படியென்றால், எதற்காக கடவுள் சோதித்தறிகிறார்? என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார்? கடவுள் அறிய வேண்டும் என்பதைவிட, மற்றவர்கள் ஒருவரை நேர்மையாளர் அல்லது பொல்லார் என்பதை அறிய வேண்டும் என்பதற்காக, கடவுள் அவர்களைச் சோதிக்கிறார். இதன் வழியாக, தன்னுடைய வல்லமையை நிலைநாட்டுகிறார். இங்கு கடவுளைப்பற்றிய வல்லமையைச் சொல்ல வேண்டும் என்பதுதான் திருப்பாடல் ஆசிரியரின் நோக்கம்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் நேர்மையாளர்களாக இருக்கிறோமா? பொல்லாராக வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? எப்போதுமே, கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்க்கையை வாழ, கடவுளிடம் மன்றாட, இந்த திருப்பாடல் விடுக்கும் அழைப்பினை ஏற்று, நமது வாழ்வை வாழ்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

கடவுளின் கொடை

திருத்தூதா்களில் அதிகமான வயதுவரை வாழ்ந்தவர் நற்செய்தியாளர் யோவான். கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிப்பில் யோவானுடைய பங்கு இங்கே நமக்குத்தரப்படுகிறது. திருத்தூதர்கள் அனைவருமே இயேசுவுக்கு தங்கள் இரத்தத்தால் சாட்சிகளாக மரித்தபோது, எபேசுவில் வாழ்ந்த, யோவானின் பங்கு என்ன? என்கிற கேள்வி இயல்பானது. யோவான் இயேசுவின் நற்செய்திக்கே சிறந்த சான்று என்பதுதான் அதற்கான பதில். யோவானின் வாழ்வில் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வுகளின் வாயிலாக, அவர் மக்களுக்கு சான்றுபகர்ந்த வாழ்வு வாழ்ந்தார்.

திருத்தூதர்கள் அனைவருமே இயேசுவுக்குச்சான்று பகர்ந்தார்கள். நற்செய்தியின்படி தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டார்கள். ஆனால், அவர்கள் தேர்ந்தெடுத்த வழி என்பது வேறு. ஒவ்வொருவரும் கடவுள் தங்களுக்கு கொடுத்த கொடைகளுக்கு ஏற்ப, அவரவரர் இயல்புக்கேற்ப நற்செய்தியைப் பறைசாற்றினா். இதில், யார் சிறந்தவர்? என்ற கேள்வி தவறான கேள்வி. அனைவருமே சிறந்தவர்கள்தான். அனைவருமே நற்செய்தியைப்போதித்தவர்கள்தான். தங்களது இயல்பில் அவர்கள் நிறைவாகச்செய்தார்கள்.

கடவுள் நமக்கு பல கொடைகளைத் தந்திருக்கிறார். நமது கொடைகளை மற்றவர்களோடு போட்டி போடுவதற்காக நாம் பயன்படுத்தக்கூடாது. மாறாக, நாம் கடவுளின் இறையரசை இந்த மண்ணில் கொண்டு வருவதற்காக, நற்செய்தி அறிவிப்பதற்காக அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

இறையரசைக் கட்டியெழுப்ப……

யோவான் வயதான பிறகுதான் இறந்திருக்க வேண்டும் என்பதை இந்தப்பகுதி தெளிவாக எடுத்துரைக்கிறது. இதற்கு முந்தையபகுதியில் பேதுருவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது இயேசுவின் அன்புச்சீடர் யோவானுக்கு அந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. மொத்தத்தில் தொடக்க கால திருச்சபையின் மிகப்பெரிய தூண்களாக பேதுருவும், யோவானும் விளங்கினர். இரண்டு பேருக்குமே இயேசு தனித்துவமிக்க பணிகளை வழங்கியிருந்தார். பேதுரு மந்தைகளை மேய்க்கின்ற பணியையும், யோவான் இயேசுவுக்கு சான்று பகர்கின்ற பணியையும் சிறப்பாக செய்வதற்கு அழைக்கப்பட்டார்கள். ஆனால், இந்த இரண்டு பேரும் தங்களுக்குள்ளாக ‘யார் பெரியவர்?’ என்ற மமதை இல்லாமல், கடவுளின் பணியை சிறப்பாகச் செய்தனர். இதுதான் நமக்குத்தரப்படும் இறைச்செய்தி.

இயேசுவின் பணியைச்செய்வதற்கு நமக்குள்ளாக போட்டி பொறாமை இருக்கக்கூடாது. கடவுள் அனைவருக்கும் திறமைகளைக் கொடுத்திருக்கிறார். கடவுள் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்தி, நல்லமுறையில் இறையரசைக் கட்டி எழுப்பும் பணியைச் செய்ய நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.

திருத்தூதர்கள் இயேசுவோடு வாழ்ந்துகொண்டிருந்த போது, பயிற்சி காலத்தில் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு, மற்றவர்களுக்கு இடறலான வாழ்வு வாழ்ந்தார்கள். ஆனால், உயிர்த்த இயேசுவின் அனுபவம் பெற்றபிறகு, தங்களிடையே இருந்த பிணக்குகளை மறந்து, கடவுளின் பணிக்காக முழுமையாக தங்களை அர்ப்பணித்தனர். இறைச்செய்தியை அறிவிப்பதையே தங்கள் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தனர். உயிர்த்த இயேசுவின் அனுபவம் பெற்றவர்களாக, நாமும் இறைவன் கொடுத்த திறமைகளை இறையாட்சிப் பணிக்காகப் பயன்படுத்துவோம்..

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

“நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்லர்”

“நான் உங்கள உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்லர்”“ என்னும் துணிவான இயேசுவின் சொற்களை இன்று நம் சிந்தையில் இருத்துவோம்.

யோவான் நற்செய்தியில் “உலகு”“ என்னும் சொல் மூன்று பொருள்களைக் கொண்டிருக்கிறது.

1. இறைவன் படைத்த உலகம் . அது நல்லது.
2. தீய நாட்டங்கள் நிறைந்த இடம். அது தீயது.
3. இறைவன் படைத்த மனிதர்கள். இறைவனால் அன்பு செய்யப்படுபவர்கள்

இந்த இடத்தில் இரண்டாவது பொருளையே அது கொண்டிருக்கிறது. இருளின் ஆற்றல்கள் நிறைந்த இந்த உலகிலிருந்து, இயேசு நம்மைப் பிரித்து எடுத்துள்ளார். எனவே, நாம் இனி உலகைச் சாராமல், இயேசுவையே சார்ந்து வாழவேண்டும். உலகு சார்ந்த இச்சைகள், எண்ணங்கள், செயல்களைக் களையவேண்டும். “உலகின்மீதும் அதிலுள்ளவைமீதும் அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது. ஏனெனில் உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை உலகிலிருந்தே வருபவை”“ (1 யோவா 2: 15-16) என்னும் இறைமொழியை மனத்தில் கொண்டு வாழ்வோம்.

மன்றாடுவோம்: எங்களைத் தேர்ந்துகொண்ட தெய்வமே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உலகிலிருந்து எங்களைத் தேர்ந்தெடுத்தவரே நாங்கள் உலகைச் சார்ந்து வாழாமல், உம்மையே சார்ந்து வாழும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

''இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால்,
எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்'' (யோவான் 21:25)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- யோவான் நற்செய்தி நூலின் இறுதியில் காணப்படும் சொற்றொடர் இது: இயேசு செய்த அனைத்தையும் விரிவாக எழுதப் போனால் ''உலகமே கொள்ளாது'' (யோவா 21:23). இது ஒரு மிகைக் கூற்று என்பதில் ஐயமில்லை. ஆயினும், இங்கே இரு உண்மைகள் துலங்குவதை நாம் காண்கிறோம். முதலாவது, இயேசு பற்றிய செய்திகளை நமக்குத் தருகின்ற நற்செய்தி நூல்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகத் தொகுத்து, அவர் கூறியதையும் செய்ததையும் ஒன்றும் விடாமல் பட்டியலிட்டு, எப்போது எந்நிகழ்ச்சி நடந்தது எனப் பதிவு செய்த ''வரலாற்று ஏடுகள்'' அல்ல. மாறாக, நற்செய்தி நூல்களில் நாம் காண்பது இயேசுவின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே. அவற்றையும் நற்செய்தி நூலாசிரியர்கள் இறையியல் பார்வையில் தொகுத்துள்ளனர். அதாவது, இயேசு கடவுளால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டு வந்தார்; முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக முன்னறிவிக்கப்பட்ட மெசியாவாக இயேசு வந்தார்; கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கிறது என்னும் நல்ல செய்தியை இயேசு அறிவித்தார்; அச்செய்தியை ஏற்று, மக்கள் மனம் மாறித் தம்மை ஏற்கவேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்; கடவுள் மனித இனத்தைப் பாவத்திலிருந்து மீட்கிறார் என்பதன் அடையாளமாக இயேசு மக்களுக்கு நலமளித்தார்; கடவுளின் அன்பை இவ்வாறு மக்களோடு பகிர்ந்துகொண்டார்.

-- மேலும், இயேசு கடவுளை மனிதருக்கு வெளிப்படுத்தி, மனிதர் கடவுளையும் ஒருவர் ஒருவரையும் அன்புசெய்ய வேண்டும் என்னும் கட்டளையை அளித்தார். இறுதியாக, மனிதர் மட்டில் கடவுள் காட்டுகின்ற எல்லையற்ற அன்பின் வெளிப்பாடாக இயேசு அவர்களுக்காகத் தம் உயிரையே கையளித்தார். இவ்வுலக சக்திகள் அவரை எதிர்த்து நின்று அவரைக் கொன்றுவிட்டதுபோலத் தோன்றினாலும் உண்மையிலேயே இயேசுவின் சாவு நம் வாழ்வுக்கு வழியாயிற்று. இறந்த இயேசுவைக் கடவுள் மீண்டும் உயிர்பெற்றெழச் செய்தார். உயிர்த்தெழுந்த இயேசு நம்மோடு தொடர்ந்து வாழ்ந்துவருகின்றார். இந்த இயேசுவைப் பற்றி அனைத்தையும் எழுதப்போனால் ''உலகமே கொள்ளாது'' (யோவா 21:25) என யோவான் கூறுவதில் அடங்கியுள்ள இரண்டாவது உண்மையை இங்கே காண்கிறோம். அதாவது, இயேசுவைப் பற்றி நாம் முழுமையாக அறிந்துவிட்டோம் என யாரும் கூற இயலாது. ஏனென்றால் அவரை அறிவது கடவுளை அறிவதற்கு இணையானது. ஆனால் கடவுளோ மனித அறிவைக் கடந்தவர். அவரை முழுமையாகப் புரிந்துகொள்ளும் சக்தி எல்லைக்கு உட்பட்ட மனித அறிவுக்கு இல்லை. எனவே, தோண்டத் தோண்ட ஊற்றெடுக்கின்ற நீரைப் போல நம் இதயத்தில் இயேசு பற்றிய அறிவு வளர வேண்டும்; அவர்மேல் நாம் கொண்டுள்ள நம்பிக்கை தழைக்க வேண்டும். கடந்த இரண்டாயிரம் ஆண்டுக் கால வரலாறு இயேசு பற்றிய உண்மையை உலகுக்கு அறிவித்துக்கொண்டே இருக்கிறது.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனை அறிந்து அன்புசெய்திட எங்கள் இதயங்களைப் புதுப்பித்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

இயேசு செய்தவை பலவும்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இயேசு செய்தவை பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது.- அழுத மரியாவுக்கு ஆறுதல் - கலங்கிய சீடருக்கு அமைதி - குற்ற உள்ளத்துக்கு மன்னிப்பு - சந்தேக மனத்திற்கு தெழிவு - நம்பிக்கை இழந்தோர்க்கு நம்பிக்கை - உழைப்பின் பலனைப் பெறாதோர்க்கு பலன் - உறவை இழந்தோர்க்கு அன்பு - உடல் நலம் இழந்தோர்க்கு நற்சுகம் - பார்வை இழந்தோர்க்குப் பார்வை - உயிர் அற்றோருக்கு மறு வாழ்வு - அருள் இல்லார்க்குப் புது வாழ்வு - நசுக்கப்பட்டோருக்கு புத்தெழுச்சி - தாழ்ந்தோருக்கு உயர்வு - ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை - பாதிக்கப்பட்டோருக்குப் பாதுகாப்பு - ஏழைகளுக்கு ஏற்றம் - பெண்களுக்குச் சமத்துவம் - குழந்தைகளுக்குப் பராமரிப்பு - நற்செயல் செய்வோருக்குப் பாரட்டு - தவறைச் சுட்டிக்காட்டும் துணிச்சல் - துன்பத்தில் துணிவு - சோதனையில் சாதனை - சோர்வில் நம்பிக்னை - வெற்றியில் நிறைவு - மாட்சியில் பணிவு - அருளில் முழுமை.

கடவுள் உங்களுக்குச் செய்பவற்றை எல்லாம் எழுதுங்கள். எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது. நீங்கள் கடவுளுக்காகச் செய்பவற்றையும் எழுதுங்கள். கடவுளின் மக்களுக்காகச் செய்பவற்றையும் எழுதுங்கள். புத்தகங்கள் பக்கங்கள் நிரம்பட்டும். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்