முதல் வாசகம்

நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 13: 2-7, 24-25

அந்நாள்களில் சோராவைச் சார்ந்தவரும் தாண் குலத்தவருமான ஒருவர் இருந்தார். அவர் பெயர் மனோவாகு. அவர் மனைவி மலடியாய் இருந்ததால், குழந்தை பெறவில்லை. ஆண்டவரின் தூதர் அப்பெண்ணுக்குத் தோன்றி அவரிடம், "நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தை பெற்றெடுக்கவில்லை. ஆனால், இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். இப்பொழுது கவனமாயிரு! திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே! தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். சவரக் கத்தி அவன் தலைமீது படக்கூடாது. ஏனெனில் பையன் பிறப்பிலிருந்தே கடவுளுக்கென `நாசீர்' ஆக இருப்பான். அவன் இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்'' என்றார். அப்பெண் தம் கணவரிடம் வந்து கூறியது: "கடவுளின் மனிதர் என்னிடம் வந்தார். அவரது தோற்றம் கடவுளின் தூதரின் தோற்றம் போல் பெரிதும் அச்சத்திற்குரியதாக இருந்தது. அவர் எங்கிருந்து வந்தவர் என்று நான் அவரைக் கேட்கவில்லை. அவரும் எனக்குத் தம் பெயரை அறிவிக்கவில்லை. அவர் என்னிடம். `இதோ! நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். ஆகவே நீ திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே. தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் பையன் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை, கடவுளுக்கென நாசீராக இருப்பான்' என்றார்.'' அப்பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சிம்சோன் எனப் பெயரிட்டார். பையன் வளர்ந்து பெரியவனானான். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார். சோராவுக்கும், எசுத்தாவேலுக்குமிடையே அவன் இருக்கும்போதுதான் ஆண்டவரின் ஆவி அவனைத் தூண்டத் தொடங்கியது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 71: 3-4. 5-6. 16-17
பல்லவி: நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்;
ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.
4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். -பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை.
6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். -பல்லவி

16 தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்;
உமக்கே உரிய நீதி முறைமையைப் புகழ்ந்துரைப்பேன்.
17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்;
இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஈசாயின் குலக்கொழுந்தே, மக்களுக்கு ஓர் அருஞ் சின்னமே, எமை மீட்க எழுந்தருளும். தாமதம் செய்யாதேயும். அல்லேலூயா.

லூக்கா 1:5-25

திருவருகைக் காலம் டிசம்பர் 19

நற்செய்தி வாசகம்�

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 5-25

யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள். தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார். குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது. அவர் தூபம் காட்டுகிற வேளையில், மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார். அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார். வானதூதர் அவரை நோக்கி, �செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்தமாட்டார்; தாய் வயிற்றிலிருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப் படுவார். அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார். எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்'' என்றார். செக்கரியா வானதூதரிடம், �இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே'' என்றார். அதற்கு வானதூதர் அவரிடம், �நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது'' என்றார். மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள். அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேசமுடியாமல் இருந்தார். ஆதலால் அவர் திருக்கோவிலில் ஏதோ காட்சி கண்டிருக்க வேண்டும் என அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார்; பேச்சற்றே இருந்தார். அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார். அதற்குப் பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார். �மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்'' என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

டிசம்பர் – 19
இகழ்ச்சி இன்றிலிருந்து இருக்காது...
லூக்கா 1:5-25

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

செக்கரியா – எலிசபெத்து தம்பதியினர் பிள்ளை இல்லாமல் மிகவும் இகழ்ச்சிக்குள்ளாயிருந்தனர். அக்கம் பக்கத்தார் அவர்களை அதிகம் வார்த்தைகளால் குத்தினர். அவர்கள் மனம் பாரமாக இருந்தது. அந்த பாரத்தை, அந்த இகழ்ச்சியை ஆண்டவர் நீக்குவதை இன்றைய நற்செய்தி வாசகம் நம் கண்முன் வைக்கிறது. அவர்களின் இகழ்ச்சியை நீக்கிய ஆண்டவர் நம் இகழ்ச்சியையும் நீக்குவார் என்ற ஆசீர்வாதத்தையும் வழங்குகிறது இன்றைய வழிபாடு. அதற்காக நாம் மனதில் நிறுத்த வேண்டிவைகள் இரண்டு:

1. கடவுள் மறப்பதில்லை
பல நாட்கள் கடந்திருக்கலாம். ஆனால் நாம் கேட்டது கண்டிப்பாக நடக்கும். நாட்கள் கடந்துபோய்க்கொண்டிருக்கிறதே கிடைக்குமா? என்று நினைக்க வேண்டியதில்லை. செக்கரியா – எலிசபெத்து தம்பதியனர் ஏற்கனெவே வேண்டியது, ஆனால் அவர்களுக்கு கிடைத்தது. கடவுள் மகிழ்ச்சியால் அவர்களை வழிநடத்தி விட்டார். நமக்கும் இது நடக்குமே!

2. கடவுள் அனுமதிப்பதில்லை
கடவுள் அவரின் பிள்ளைகள் இகழ்ச்சியோடு வாடி வதங்க வேண்டும் என்று ஒருபோதும் நினைப்பதில்லை. இகழ்ச்சியை நீக்கி கடவுள் மகிழ்ச்சியை கொடுக்கவே நினைக்கிறார். ஆகவே நமக்குள் இருக்கும் அவநம்பிக்கையை எடுத்துவிட்டு அவரின் கரத்தை உறுதியாக பிடிக்க நாம் பயிற்சி எடுக்க வேண்டும்.

மனதில் கேட்க…
1. என் இகழ்ச்சியின் நேரத்தில் நான் கடவுளை நம்புகிறேனா?
2. கடவுள் இன்று என் இகழ்ச்சியை போக்குவார் நான் இதை நம்புகிறேனா?

மனதில் பதிக்க…
மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார் (லூக் 1:25)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

நீதித்தலைவர்கள் 13: 2 – 7, 24 – 25
நம்பிக்கை கொண்டிருப்போம்

இந்த உலகத்தில் நடக்கிற பல்வேறு நிகழ்வுகளுக்கு நம்மால் முழுமையான காரணத்தைச் சொல்ல முடியாது. ஆனால், ஒரு சில நிகழ்வுகள் இறைத்திட்டப்படி நடக்கிறது என்பதை, நம்மால் உறுதியாகச் சொல்லக்கூடிய அளவுக்கு பல்வேறு சான்றுகளை விவிலியத்தில் நாம் பார்க்கலாம். அப்படி சொல்லப்படுகிற ஒரு சான்று, இன்றைய வாசகத்தில் நமக்கு வழங்கப்படுகிறது. அதுதான் சிம்சோனின் சான்று. சிம்சோனின் தாயார் மலடி என்கிற துர்பாக்கியத்திற்கு ஆளாகியிருக்கிறார். இந்த சமுதாயம் அவர் மீது எவ்வளவு அவதூறுகளை வாறி வீசயிருக்கும். ஏனென்றால், இப்போது இருக்கிற அறிவியல் அப்போது இல்லை. பிள்ளை இல்லாததற்கு பெண் மட்டுமே காரணம் என்கிற ஆண்வர்க்க சமுதாயம் அது. அது மட்டுமல்ல, குழந்தை பெறாதவர், இறைவனின் சாபத்திற்கு ஆளாகியிருக்கிறார் என்கிற எண்ணமும் மக்களின் மனதில் ஊன்றியிருந்த காலம். இப்படிப்பட்ட காலத்தில், நிச்சயம் குழந்தை பெற முடியாத நிலையில் இருந்த, அந்த தாய் மிகவும் மனம் நொந்த நிலையில் இருந்திருப்பாள். ஆனாலும், அவள் நம்பிக்கை உடையவளாக இருந்திருக்க வேண்டும்.

இங்கு, கடவுள் ஒரு நிகழ்வு நடப்பதற்காக, அந்த பெண்ணை தயார் செய்கிறார். நம்முடைய பார்வையில் அவர்கள் ஏளனமாகப் பார்க்கப்படுகிறார்கள். ஆனால், கடவுளின் பார்வையில் அவர்கள் விலையுயர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். எனவே தான், கடவுள் அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த உலகத்தில் போற்றுதற்குரிய வகையில் பிறந்தவர்களின் பிறப்பு, சாதாரண விதத்தில் தான் அமைந்திருக்கிறது. இயேசு சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். ஈசாக்கு பல ஆண்டுகள் கழித்து, ஆபிரகாமின் வாரிசாகப் பிறந்தார். திருமுழுக்கு யோவான் குருகுல தம்பதியர்க்கு பிறக்கிறார். ஆனால், இவர்கள் தான் சரித்திரத்தையே மாற்றியவர்கள்.

எந்த நிகழ்வு நடந்தாலும், இறைவன் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, நேர்மறையான எண்ணம் கொண்டிருக்க இந்த வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது. எந்த நேரத்திலும் நாம் மனம் துவண்டுவிடாதபடிக்கு, எப்போதும் இறைநம்பிக்கை உள்ளவர்களாக வாழ, இறைவனிடம் மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

திருப்பாடல் 71: 3 – 4, 5 – 6, 16 - 17
”நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே”

இறைவன் மீது ஒருவர் வெளிப்படுத்துகின்ற நம்பிக்கையின் வரிகள் தான் இந்த திருப்பாடல். இறைவனின் அருமை, பெருமைகளைப் பேசுவதே மகிழ்ச்சி என்கிற தொனியில், இந்த திருப்பாடல் அமைந்திருக்கிறது. இன்றைக்கு மனிதர்கள் மற்றவர்களால் புகழப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மற்றவர்களின் புகழ்ச்சிக்கு தாங்கள் தகுதியில்லாத நிலையில் இருந்தாலும், புகழ்ச்சிக்கு மயங்காதவர் யாருமில்லை. இது போன்ற தகுதியில்லாத புகழ்ச்சியும், பெருமையும் இங்கு பேசப்படவில்லை. மாறாக, புகழ்ச்சிக்கும், பெருமைக்கும் தகுதி வாய்ந்த கடவுளின் ஆற்றலை, வலிமையை இந்த திருப்பாடல் எடுத்துச் சொல்கிறது.

இறைவனின் பெருமைகள் வழியாக அடைக்கலம் தேடுகிற பாடலாகவும் இது அமைந்திருக்கிறது. ஆண்டவர் கற்பாறையும், கோட்டையுமாக இருக்கிறார். எதிரிகளின் கையிலிருந்து விடுவிக்கிறவர் ஒருவர் இருக்கிறார் என்றால், அது கடவுள் ஒருவராகத்தான் இருக்க முடியும். ஆண்டவர் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, நாம் வாழ்கிறபோது, நிச்சயம் இறைவனால் காப்பாற்றப்படுவோம். ஆண்டவரில் ஒருவர் கொண்டிருக்கிற நம்பிக்கை, அவரை எல்லாவிதமான தீய எண்ணங்களிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும் அவரை நிச்சயம் காப்பாற்றும். எனவே, இறைவன் மீது உங்களது நம்பிக்கையை வையுங்கள் என்று இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

நம்முடைய வாழ்வில் நாம் நம்புகிற ஒருவர் என்றால் அது இறைவன் ஒருவர் தான். மனித உறவுகள் உண்மையாக இருக்குமா? என்பது தெரியாது. அத்தி பூத்தாற்போலத்தான் உண்மையான உறவுகள் அமைகின்றன. ஆனால், இறைவன் எந்நாளும் நம்பிக்கைக்குரியவர். போற்றுதற்குரியவர். நம்முடைய பெருமைக்குரியவர்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

அர்ப்பணத்தின் நிறைவாக வாழ்ந்த செக்கரியா

குற்றமற்றவர்களின் வாழ்வில் எதற்காக சோதனை? ஒழுக்கத்தோடு, ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டு வாழக்கூடியவர்களுக்கு எதற்காக கடினமான தருணங்கள்? இதுபோன்ற கேள்விகள் நாம் நேர்மையாக வாழ்கிறபோது, நமது உள்ளத்தில் எழக்கூடியவை. இந்த சோதனைகள் நமக்கு மட்டும்தானா? இல்லை. நம்மைப்போன்று வாழக்கூடிய எண்ணற்ற மனிதர்களுக்கும் நடந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதர் தான் இன்றைய நற்செய்தியில் நாம் காணும் செக்கரியா.

செக்கரியா கடவுள் முன்னிலையில் குற்றமற்றவராய் வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர். ஒழுங்களுக்கு ஏற்ப தனது வாழ்வை அமைத்துக்கொண்டவர். அப்படிப்பட்டவருக்கு குழந்தை இல்லை. எத்தனை ஆண்டுகள் நம்பிக்கையோடு வாழ்ந்திருப்பார். அந்த நம்பிக்கை வீண்போய் விட்டது. இருவரும் குழந்தை பெறக்கூடிய வயதை தாண்டியிருந்தார்கள். ஆனாலும், செக்கரியா கடவுள் முன் பணி செய்வதை பாக்கியமாக எண்ணி, தொடர்ந்து அர்ப்பண உணர்வோடு தன் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார். செக்கரியாவின் பொறுமை நமக்கு வியப்பைக் கொடுத்தாலும், கடவுளின் வல்லமை வெளிப்படுதவற்கு கூட, இப்படிப்பட்ட தருணங்கள் தேவையிருக்கிறது என்பதுதான் இங்கே புலப்படுகிறது. ஆக, நமக்கு நேர்ந்திருக்கிற துன்பங்கள் ஒருவேளை கடவுளின் வல்லமை வெளிப்படக்கூட வாய்ப்பிருக்கக்கூடிய ஒரு துன்பமாக இருக்கலாம்.

செக்கரியாவன் வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரக்கூடிய செய்தி ஒன்றே ஒன்று தான். எந்த நிலையிலும் நாம் கடவுளிடம் நம்பிக்கை இழக்கக்கூடாது. எது நடந்தாலும் அவரின் பெயர் போற்றப்படக்கூடிய வகையில் நாம் நமது வாழ்வை வாழ வேண்டும். அத்தகைய வாழ்வு நமதாகட்டும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

மனஉறுதி

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், கடவுள் மீது பற்று உள்ளவர்களும் தங்களது வாழ்வில் சந்திக்கும் சோதனை, பல மடங்கு வேதனையானது. ஏனென்றால், மக்களின் கேலிப்பேச்சுக்களும், உள்ளத்தைக் காயப்படுத்தும் பேச்சுக்களும் அடிக்கடி வாழ்வில் நடக்கக்கூடியதாக இருக்கும். கடவுள், கடவுள் என்று பின்னால் சென்றானே, கடவுள் இவனுக்கு என்னதான் கொடுத்தார், என்ற எகத்தாளப் பேச்சுக்கள், மக்கள் நடுவில் அன்றாடம், நாம் பார்க்கக்கூடிய நிகழ்வு. இப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் செக்கரியா மாட்டிக்கொண்டார்.

செக்கரியாக ஒரு குரு. கடவுளுக்கும், மனிதருக்கும் இடையே பாலமாக இருக்கக்கூடியவர். மக்களின் விண்ணப்பங்களை, தான் செலுத்தும் பலி மூலமாக, இறைவனிடம் எடுத்துச்சொல்கிறவர். அப்படிப்பட்ட, குருவுக்கு மிக்ப்பெரிய குறை வாழ்வில் இருந்தது. அதுதான் குழந்தை இல்லாத குறை. நிச்சயம் பலபேருடைய ஏளனத்திற்கு அவர் ஆளாகியிருப்பார். பலிசெலுத்துகிறபோதெல்லாம், தனக்காக, தன்னுடைய மனைவிக்காக மன்றாடியிருப்பார். ஆனால், ஒன்று தெளிவாகத்தெரிகிறது. அவர் சோர்ந்து போகவில்லை. உறுதியாக இருக்கிறார். எனவே தான், இத்தனை ஆண்டுகளானாலும், உண்மையான கடவுளை விட்டு விலகிச்செல்லாமல் இருக்கிறார். தொடர்ந்து பலிசெலுத்திக்கொண்டிருக்கிறார்.

நாம் கடவுள் மீது அதிக பற்று வைத்திருக்கிறபோது, நாம் அதிக விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், துன்ப வேளைகளில், நெருக்கடி வேளைகளில் வெகுஎளிதாக நாம், சோர்ந்து போவதற்கு பல வாய்ப்புகள் இருக்கிறது. அத்தகைய தருணத்தில் செக்கரியாவைப் போல, மனஉறுதி உள்ளவர்களாக வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

அனைவரையும் அன்பு செய்வோம்

இன்றைய நற்செய்தியின் முக்கியமான நபர் செக்கரியா. செக்கரியா ஒரு குரு. அபியத்தார் குலத்தைச்சார்ந்தவர். ஆரோனின் வழியில் வந்தவர்கள் அனைவருமே குருக்கள். எனவே, ஏராளமான குருக்கள் யெருசலேமில் இருந்தனர். அவர்கள் அனைவருமே 24 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். பாஸ்கா விழா, பெந்தகோஸ்த் விழா மற்றும் கூடாரத்திருவிழாவுக்கு மட்டும் அனைத்து குருக்களும் பணி செய்ய அழைக்கப்பட்டனர். மற்ற நாட்களில் ஒவ்வொரு குழுவும் வாரத்தில் ஒருமுறை பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது.

ஏறக்குறைய 20,000 குருக்கள் அங்கே இருந்தனர். ஒவ்வொரு குழுவிலும் கிட்டத்தட்ட 1000 குருக்கள் இருந்தனர். ஒவ்வொரு குழுவுக்கும் முறை வருகிறபோது, குலுக்கல் முறையில், பீடத்தில் பணிசெய்கிறவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சில பேருக்கு வாழ்நாள் முழுவதும் பணிசெய்ய வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அந்த வகையில் செக்கரியாவுக்கு நிறைந்த மகிழ்ச்சி கிடைத்திருக்க வேண்டும். பீடத்தில் பணிசெய்ய, குலுக்கலில் அவர் பெயர் வந்திருந்தது. ஆனால, அவருடைய வாழ்க்கையில் சோகம் நிறைந்திருந்தது. அவருக்கு குழந்தை இல்லை. யூத ராபிக்கள் ஏழு வகையான மக்களை, கடவுளிடமிருந்து விலக்கப்பட்டவர்களாக அறிவித்தனர். அவர்களில் தொடக்கநிலையினர், மனைவி இல்லாத யூதர், மனைவி இருந்தும் குழந்தை இல்லாத யூதர்… என்று இந்த பட்டியல் நீள்கிறது. குழந்தை பெறாத மனைவியை விவாகரத்து மூலம் விலக்கி வைக்க, கணவனுக்கு உரிமை இருந்தது. ஆனால், செக்கரியா தனது மனைவியை முழுமையாக அன்பு செய்கிறார்.

உண்மையான அன்புக்கு செக்கரியா சிறந்த எடுத்துக்காட்டு. பணத்திற்காக, பகட்டிற்காக, அழகிற்காக பெண்களை விவாகரத்து செய்யும் பழக்கம், இருக்கிற இந்த காலச்சூழ்நிலையில், பெண்களின் நிலை அடிமைப்பட்டிருந்த அன்றே, பெண்ணை முழுமையாக, உண்மையாக அன்பு செய்த செக்கரியா உண்மையில் போற்றுதற்குரியவர்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

முன்னோடியின் பணிகள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நற்செய்தி வாசகத்தில் செக்கரியாவுக்குக் காட்சி தரும் வானதுhதர் அவருக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையான திருமுழுக்கு யோவானைப் பற்றி முன்னுரைப்பதை வாசிக்கிறோம். இந்த அறிவிப்பில் இயேசுவின் முன்னோடியான யோவானின் பண்புகளை வானதுhதர் வரிசைப்படுத்துகிறார்.

(1) அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர்.
(2) அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்.
(3) மது அருந்த மாட்டார்.
(4) துhய ஆவியால் ஆட்கொள்ளப்படுவார்.
(5) மக்களை ஆண்டவரிடம் திரும்பி வரச்செய்வார்.
(6) துணிவும் ஆற்றலும் மிக்கவராய் இருப்பார்.
(7) மக்களிடையே ஒப்புரவை உருவாக்குவார்.
(8) நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச்செய்வார்.
(9) இவ்வாறு, ஆண்டவருக்கு ஏற்புடைய மக்களை ஆயத்தம் செய்வார்.

இந்தக் கிறிஸ்து பிறப்புக் காலத்தில், இந்த வருகையின் காலத்தில், நாமும் இயேசுவின் முன்னோடிகளாக, ஆண்டவரின் வருகைக்குப் பிறரை ஆயத்தம் செய்பவர்களாக மாற்ற வேண்டாமா? எனவே, நாமும் இந்த ஒன்பது வகையான வழிகளில் மக்களை ஆயத்தம் செய்வோம். மது அருந்தாமல், தீயவற்றை நாடாமல், அதே வேளையில், துhய ஆவியின் கொடைகளை, கனிகளைப் பெற்றவர்களாய், மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குபவர்களாய் வாழ்வோமா! அப்போது நாமும் இயேசுவின் முன்னோடிகளாய் மாறுவோம்.

மன்றாடுவோம்: அன்பின் தெய்வமே இறைவா, இயேசுவைப் பிறருக்கு அறிவிக்கும முன்னோடியாக புனித திருமுழுக்கு யோவானைத் தேர்ந்தெடுத்து, அவருக்குரிய பணிகளை வரையறுத்து, அதற்கேற்ற ஞானத்தையும் ஆற்றலையும் அவருக்கு அளித்தீரே. உம்மைப் போற்றுகிறோம். நாங்களும் இயேசுவின் முன்னோடிகளாக வாழ, எங்களுக்கும் உமது ஆவியின் ஆற்றலைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

----------------------------

''செக்கரியாவும் அவர் மனைவி எலிசபெத்தும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள்...
அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில் எலிசபெத்து கருவுறு இயலாதவராய் இருந்தார்.
மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்'' (லூக்கா 1:6-7)


அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- கடவுளின் மீட்புத் திட்டத்தில் மனிதருக்கு முக்கிய பங்கு உண்டு. சில சமயங்களில் மனிதர் தம் பங்கை அளிக்கத் தயக்கம் காட்டுவார்கள். செக்கரியா என்னும் குரு அவ்வாறுதான் தயங்கினார். அவரும் அவருடைய மனைவி எலிசபெத்தும் தங்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கப் போவதில்லை என முடிவுகட்டிவிட்டனர். இருந்தாலும் ஒருவேளை கடவுள் தங்கள் மன்றாட்டைக் கேட்கமாட்டாரா என அவர்கள் நினைத்திருக்கக் கூடும். எவ்வாறாயினும், கடவுள் தம் தூதர் கபிரியேலை அனுப்பி, செக்கரியாவுக்கும் எலிசபெத்துக்கும் ஒரு மகன் பிறப்பான் என்று அறிவித்த வேளையில் செக்கரியா அச்செய்தியை நம்ப மறுக்கிறார். திருப்பீடத்தை அணுகிச் சென்று கடவுளுக்குப் பலிசெலுத்துகின்ற பேறு அவருக்கு இருந்த போதிலும், அந்நிலைக்குத் தம்மை அழைத்த கடவுளிடத்தில் செக்கரியாவுக்கு முழு நம்பிக்கை இருக்கவில்லை.
-- நம் வாழ்விலும் நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில் கடவுள் தம் அருள்செயலை விளங்கச் செய்கின்ற தருணங்கள் உண்டு. அப்போது கடவுள் நம்மைத் தேடி வருகிறார், தம்மோடு ஒத்துழைக்க நம்மை அழைக்கிறார் என்பதை நாம் உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும். செக்கரியாவைப் போல நாம் தயக்கம் காண்பிக்கின்ற நேரங்கள் உண்டு. கடவுள் இவ்வாறு அதிசயமான விதத்தில் என் வழியாகச் செயல்பட முடியுமா என நாம் ஐயப்படக் கூடும். அத்தகைய ஐயப்பாடு நம்மில் இருத்தலாகாது என்பதை செக்கரியாவின் அனுபவத்திலிருந்து நாம் அறிகிறோம். மனிதரால் சாதிக்க இயலாதது கடவுளின் வல்லமையால் நிறைவேறும் என்னும் ஆழ்ந்த நம்பிக்கை நம்மில் வெளிப்பட வேண்டும். நாம் ஒவ்வொருவரும் கடவுளின் பார்வையில் மாண்புடையவர்களே. எனவே கடவுள் நம்மை அணுகி வந்து அவரோடு இணைந்து செயல்பட நம்மை அழைக்கின்ற வேளைகளில் ''ஆம்'' என நாம் பதிலிறுக்க வேண்டும். இதில் மரியா நமக்கு முன்மாதிரியாக உள்ளார். வானதூதர் வழியாகத் தமக்கு வழங்கப்பட்ட செய்தியைச் செக்கரியா நம்ப மறுத்தார் (லூக் 1:20); ஆனால் மரியா கடவுளின் வார்த்தையை நம்பி ஏற்று, ''நான் ஆண்டவரின் அடிமை'' என்று கூறிப் பணிந்தார் (லூக் 1:38). இத்தகைய பணிவு நம்மிலும் துலங்கிட வேண்டும். தம் மீட்புத் திட்டத்தில் பங்கேற்கின்ற பேற்றினை நமக்கு வழங்குகின்ற கடவுளுக்கு நாம் நன்றியறிந்திருக்க வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் மீட்புத் திட்டத்தில் பங்கேற்று உம்மோடு ஒத்துழைக்க எங்களை அழைத்ததற்கு நன்றி!

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

'''இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை.
ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்'
உம்மால் பேசவே இயலாது' என்றார்'' (லூக்கா 1:20)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- கபிரியேல் வானதூதர் மரியாவிடம் சென்று கடவுளின் செய்தியை வழங்கியதுபோல செக்கரியாவிடமும் ஒரு செய்தி வழங்குகிறார். மரியா தமக்க வழங்கப்பட்ட செய்தியை உடனடியாக ஏற்கத் தயங்கினார். ஆனால் அவர் தயங்கவேண்டியதில்லை என வானதூதர் உறுதியளித்ததும் மரியா கடவுளின் திருவுளத்திற்கு அமைந்தார். செக்கரியாவின் அனுபவம் சிறிது வேறுபட்டிருப்பதைக் காண்கின்றோம். இங்கேயும் கடவுளின் செய்தி செக்கரியாவுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் அவர் தமக்கு வழங்கப்பட்ட செய்தி உண்மையாக இருக்க முடியாது என்று வாதாடுவதுபோலத் தெரிகியது. எனவேதான் வானதூதர் அவரைப் பார்த்து, ''என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை'' என்று இடித்துக் கூறுகின்றார். செக்கரியாவுக்கு ஒரு சிறு தண்டனையும் வழங்கப்படுகிறது. அதாவது, சிறிது காலம் அவர் பேச்சற்றவராக இருப்பார்.

-- நம் வாழ்க்கை அனுபவத்திலும் நாம் கடவுளின் வார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற நேரங்களை உணரலாம். அப்போது கடவுளை விட நாம் அதிகம் தெரிந்தவர்கள் போல நாம் நினைத்துக்கொள்வதுண்டு. ஆனால் கடவுள் நமக்குச் சில வேளைகளில் ஒரு பாடம் புகட்டத் தவறுவதில்லை. நாம் நினைப்பதே சரி என்னும் மன நிலை நம்மிடம் இருத்தல் ஆகாது. பிறர் கூறுகின்ற சொற்களிலும் நமக்கென ஒரு கருத்துப் புதைந்திருப்பதை நாம் காணத் தவறலாகாது. இவ்வாறு பிறர் நமக்கு ஒரு கருத்தை உணர்த்தும்போது கடவுளே அவர்கள் வழியாக நம்மோடு பேசுகின்ற அனுபவத்தையும் நாம் சிலவேளைகளில் பெறுகிறோம். கடவுளின் செயல்பாடு எப்போதும் நேரடியாக நிகழ்வதில்லை. சிலவேளைகளில் பிற மனிதர் வழியாகக் கடவுள் நம்மை வழிநடத்துவார். அப்போது கடவுளின் குரலுக்குச் செவிமடுக்க நாம் தவறிவிடல் ஆகாது. கடவுள் நமக்கு ஒரு பாடம் புகட்டும் வேளையிலும் நாம் நம்பிக்கை இழத்தல் ஆகாது என்பதற்கும் செக்கரியா ஓர் உதாரணமாகிறார். வயதில் முதிர்ந்த அவருக்கும் அவருடைய மனைவி எலிசபெத்துக்கும் யோவான் என்றொரு குழந்தை பிறந்த பிறகு செக்கரியா பேசும் திறனைப் பெறுகின்றார். நாமும் துன்ப நேரத்திற்குப் பிறகு மகிழ்ச்சியைப் பெறுவதும் உண்டு. அதுவும் கடவுளின் அருளே.

மன்றாட்டு
இறைவா, உம் திருவுளத்திற்கு முழுமையாக அமைந்து வாழ எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்